உடனடிச்செய்திகள்

Wednesday, March 2, 2011

பங்குச் சந்தை வளர்ச்சிக்காகப் போடப்பட்ட நிதிநிலை அறிக்கை - பெ.மணியரசன் கண்டனம்

பங்குச் சந்தை வளர்ச்சிக்காகப் போடப்பட்ட நிதிநிலை அறிக்கை
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

நடுவண் அரசின் நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி முன்வைத்துள்ள 2011-2012க்கான நிதி நிலை அறிக்கை பங்குச் சந்தை வளர்ச்சியை மையமாகக் கொண்டிருக்கிறதே அல்லாமல் பாடுபடும் மக்களின் வளர்ச்சியை மையமாகக் கொள்ளவில்லை.

உணவுப் பாதுகாப்புத் திட்டம் என்ற கற்பனை அமுத சுரபியைப் பற்றிக் கூறியுள்ள நிதியமைச்சர் அதற்குரிய நிதி ஒதுக்கவில்லை. ஆனால் கடந்த ஆண்டு கொடுத்த உணவு மானியத்தில் இருபத்தேழாயிரம் கோடி ரூபாயை வெட்டிக் குறைத்துள்ளார்.

உணவுப் பொருள் விலை ஏற்றத்திற்கு முக்கியக் காரணம் இணைய (ழடெiநெ)வணிகமாகும். உற்பத்தி செய்யும் உழவர்களுக்கு உரிய விலை கிடைக்காமல் அதன் பலன் நுகர்வோர்க்கும் கிடைக்காமல் இடைத்தரகர்கள் ஏப்பம் விடும் இணைய வணிகத்தைத் தடை செய்ய மறுக்கிறது இந்நிதிநிலை அறிக்கை. மிகக் குறைவான எண்ணிக்கையினர்க்கு எதிர்காலத்தில் நிறைவேற்றப்பட உள்ள உணவுக் காப்புத் திட்டம், பெருவாரியான மக்களுக்குப் பயன்படப் போவதில்லை.

உழவர்களுக்கு வட்டித் தள்ளுபடி என்று சொல்வது ஒரு மாயமான் திட்டமாகும். வேளாண்மை நன்கு விளைந்து, கட்டுப்படியான விலைக்கு விற்க முடிந்து, கடனை உரிய காலத்தில் திருப்பிச் செலுத்தும் வாய்ப்புள்ள உழவர்களுக்கு அவர்கள் செலுத்த வேண்டிய வட்டியில் 3 விழுக்காட்டைக் குறைத்துக் கொள்வதாகக் கூறியுள்ளார் பிரணாப் முகர்ஜி. உழவர்களுக்குக் கடந்த ஆண்டு கொடுத்த உரம், பு+ச்சி மருந்து போன்றவற்றிற்கான இடுபொருள் மானியத்தில் நான்காயிரம் கோடி ரூபாயை இப்பொழுது குறைத்துள்ளார்.

உழவர்களுக்கு உதவி செய்யும் நிதிநிலை அறிக்கை என்று எப்படி இதைக் கூற முடியும்?

உழவர்களுக்கு வழங்கும் கடன் தொகையை ஒரு இலட்சம் கோடி ரூபாய் உயர்த்தியுள்ளதாகக் கூறுகிறார். அக்கடனை உண்மையில் பயிர் சாகுபடி செய்கிறவர்கள்தான் வாங்குகிறார்கள் என்பதற்கான நிபந்தனை எதுவும் வைக்கவில்லை. கடந்த காலங்களில் உழவர் என்ற பெயரில், பெரும் பெரும் கம்பெனிகளே அக்கடன் திட்டத்தைப் பெரிதும் பயன்படுத்திக் கொண்டன.

உழவர்கள் விளைவிக்கும் பொருள்களுக்கு இலாபவிலை கிடைக்கும் வகையில் அரசே நூற்றுக்கு நூறு விகிதம் கொள்முதல் செய்யும் திட்டம் செயல்படுத்தப்படாமல் வேறு என்ன செய்தாலும் அது உழவர்களைப் பாதுகாக்கும் உருப்படியான முயற்சி ஆகாது. ஒவ்வொரு மாநிலமும் தனி உணவு மண்டலமாக்கப்படவேண்டும். தமிழ்நாடு தனி உணவு மண்டலமாக வேண்டும். அப்பொழுதுதான் தமிழ்நாட்டுச் சந்தை முழுக்க முழுக்கத் தமிழக உழவர்களுக்குப் பயன்படும்.

பெட்ரோலியத்திற்கு அளித்து வந்த மானியத் தொகையில் பதினைந்தாயிரம் கோடி ரூபாயை வெட்டிக் குறைத்துவிட்டார் பிரணாப். பன்னாட்டுச் சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்து கொண்டுள்ளது. எண்ணெய் உற்பத்தி நாடுகளில் சனநாயகத்திற்கான புரட்சி நடந்து கொண்டுள்ளது. எண்ணெய் வரத்தில் தடங்கல்கள் ஏற்படலாம். இவை அனைத்தையும் தெரிந்து கொண்டே பதினைந்தாயிரம் கோடி ரூபாய் மானியத் தொகையை வெட்டிக் குறைத்துள்ளார்.

நிதி அமைச்சகம் எண்ணெய்க்கு விதிக்கும் சுங்கவரி, உற்பத்திவரி, ஆகியவற்றைக் குறைத்துக் கொள்ளுமாறு பெட்ரோலிய அமைச்சகத்தை வலியுறுத்தியும், பிரணாப் முகர்ஜி மறுத்துவிட்டார். ஒரு லிட்டர் கச்சா எண்ணெய்க்கு விதிக்கும் 5 விழுக்காடு சுங்கவரி அப்படியே நீடிக்கிறது. 1 லிட்டர் டீசலுக்கும் பெட்ரோலுக்கும் விதித்துள்ள 7.5 விழுக்காடு சுங்க வரி அப்படியே தொடர்கிறது. இவை அன்றி, 1 லிட்டர் பெட்ரோலுக்கு விதித்துள்ள ரூ14.35 உற்பத்தி வரியும், ஒரு லிட்டர் டீசலுக்கு விதித்துள்ள சுமார் ரூ4.60 உற்பத்தி வரியும் குறைக்கப்படாமல் அதே நிலையில் நீடிக்கிறது. இந்த வரிகளை பிரணாப் முகர்ஜி கணிசமாகக் குறைத்திருக்க வேண்டும்.

பிரணாப் முகர்ஜி நிதி நிலை அறிக்கையில் கூறியுள்ள படி நடப்பு 2010-2011 நிதியாண்டில் பெரும் தொழில் நிறுவனங்களுக்கு அளித்துள்ள வரிச் சலுகை 88 ஆயிரம் கோடி ரூபாய். வரும் நிதியாண்டில் இது மேலும் அதிகரிக்கும். ஆனால் பெட்ரோலியத்திற்கு வரிக்குறைப்பு செய்ய மறுத்துவிட்டார்.

மிக விரைவில் பெட்ரோல், டீசல் விலையை உயர்த்த உள்ளார்கள். இதனால் எல்லா விலையும் உயர உள்ளன.

பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளை லாபம், பெருமுதலாளிகளின் வளர்ச்சி ஆகிய உலகமயக் கொள்கைதான் நடுவண் அரசின் நிதிநிலை அறிக்கைக்கு இலட்சிய இலக்காக உள்ளது.

இந்தியாவில் இலாபத்துடன் இயங்கிக் கொண்டிருக்கும் நடுவண் அரசின் பொதுத் துறை நிறுவனங்களின் பங்குகளை 40 ஆயிரம் கோடி ரூபாய்க்கு விற்க இலக்கு வரையறுத்துள்ளார் நிதியமைச்சர். மேலும் மேலும் வெளிநாட்டு நிறுவனங்களின் பிடிக்குள் பொதுத்துறை நிறுவனங்களைத் தள்ளி விடும் முயற்சி இது.

கருப்புப் பணத்தைப் பிடிக்கவோ, வெளிநாடுகளில் பதுக்கி வைக்கப்பட்டுள்ள சட்ட விரோதப் பணத்தை மீட்கவோ உரிய திட்டம் எதுவும் நிதி நிலை அறிக்கையில் கூறப்படவில்லை. ஐந்தம்சத் திட்டம் இதற்காக உருவாக்கவுள்ளதாகப் பொத்தாம்பொதுவில் கூறிக் கொள்கிறார் பிரணாப் முகர்ஜி.

இந்தியாவுக்கு வெளியே பலநாடுகளில் பலரால் சட்டவிரோதப் பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. இதில் மொரிசியஸ் நாட்டில் மட்டும் 45விழுக்காடு பணம் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது என்கிறார் பிரணாப். ஒரு சின்னஞ்சிறு நாடு மொரிசியஸ். அங்கு மொத்த சட்ட விரோதப் பணத்தில் சற்றொப்ப பாதித் தொகைப் பதுக்கி வைக்கப்பட்டுள்ளது. அத் தொகையைக் கொண்டு வர இரு நிலை வரியை நீக்கிவிட்டு இந்தியா அல்லது வெளிநாட்டில் மட்டும் விதிக்கும் ஒரு முகவரித் திட்டத்தைச் செயல்படுத்தப் போவதாக நிதியமைச்சர் கூறுகிறார். இப்படிச் செய்வதால் வெளிநாட்டில் பதுங்கியுள்ள பணம் வெளியே வரும் என்கிறார். அதாவது அந்தக் கருப்புப் பணத்தைப் பறிமுதல் செய்யும் முயற்சி எதுவும் இல்லை. சீரான வரி விதிக்கும் முயற்சிதான் இருக்கிறது. இந்த அணுகுமுறையால் உருப்படியாக எந்தப் பலனும் ஏற்படப் போவதில்லை.

அடுத்துத் தங்கத்தின் மீதான வரியைக் குறைக்க உள்ளார். இதனால் தங்கத்தின் மேலாதிக்கம் வளரவும் அதைப் பதுக்கவும் வழி திறந்து விட்டுள்ளார். இதனால் இதரப் பொருள்களின் விலை உயரும்.

மொத்தத்தில் பங்குச் சந்தை சூதாட்டம் வளரவும் விலைவாசி உயரவும் பன்னாட்டு நிறுவனங்கள் இந்தியப் பெருமுதலாளிகள் நிறுவனங்கள் கொள்ளை லாபம் ஈட்டவும் போடப்பட்டுள்ள நிதி நிலை அறிக்கை இது. இதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தால் இதைத் தடுக்க முடியும். இல்லையேல் இதைச் சுமக்க வேண்டும்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT