உடனடிச்செய்திகள்

Monday, November 28, 2011

முல்லைப் பெரியாறு: கேரள அரசின் தமிழினப்பகையை கண்டிக்கிறோம் - கி.வெங்கட்ராமன்

முல்லைப் பெரியாறு:

கேரள அரசின் தமிழினப்பகையை கண்டிக்கிறோம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் கி.வெங்கட்ராமன்

 

முல்லைப் பெரியாறு அணைத் தொடர்பாக அடிப்படையற்ற அச்சத்தை கேரள மக்களிடம் பரப்பி அந்த அணையை சட்டவிரோதமாக இடிப்பதற்கு கேரள அரசு முனைகிறது. தன்னுடைய தமிழர் பகை நோக்கத்திற்கு கேரள மக்களை திரட்டிக் கொள்வதற்காக அவ்வணை இடிந்து விழும் என்ற பரப்புரையை தொடர்ச்சியாக மேற்கொண்டு வருகிறது.

 

அதன் ஒரு பகுதியாக இடுக்கி மாவட்டத்தில் கேரள அரசின் ஆதரவோடு முல்லைப் பெரியாறு அணையை உடைக்க கோரும் முழுஅடைப்பு போரட்டத்தை கேரள கட்சிகள் நடத்துகின்றன.

 

உச்சநீதிமன்றம் நியமித்த சார்பற்ற வல்லுநர் குழு அறிவியல் ஆதாரங்களின் அடிப்படையில் அணை வலுவுடன் உள்ளதாக அறிவித்து அதனை உச்சநீதிமன்றமும் ஏற்றுக்கொண்டு அணையில் 145அடி தண்ணீர் தேக்குமாறு ஒரு முறைக்கு இரு முறை தீர்ப்பளித்து விட்டது. இத்தீர்ப்பை மீறும் வகையிலும் தமிழர்களுக்கு எதிரான இனப்பகையை தீவிரப்படுத்தும் முறையிலும் இந்த கடை யடைப்புக்கு கேரள அரசு ஏற்பாடு செய்கிறது.

 

முல்லைப் பெரியாறு அணை மட்டுமின்றி இடுக்கி மாவட்டம் முழுவதும் தமிழர்களின் வரலாற்றுத் தாயகமாகும். மொழிவழி மாநில சீரமைப்பு நடக்கும் போது தவறாக இடுக்கி மாவட்டம் கேரளத்துடன் இணைக்கப்பட்டது. இன்றும் கூட இடுக்கி மாவட்டத்தின் மக்கள் தொகையில் ஏறத்தாழ 70 விழுக்காட்டினர் தமிழர்கள் ஆவர்.

 

எனவே இனப்பகையை வளர்க்கும் இடுக்கி மாவட்ட முழு அடைப்பு போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாக கண்டிக்கிறேன்.

 

கேரள அரசின் இந்த தமிழினப் பகைப்போக்குத் தொடருமேயானால் தமிழகத்தில் இயங்கும் மலையாளிகளின் நிறுவனங்களும் பெருந்தொகையாக வாழும் மலையாளிகளும் தமிழகத்தி லிருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற போரட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும், தமிழின உணர்வாளர்களும் மேற்கொள்ள வேண்டி வரும்.

 

இந்திய அரசு, பிழையாக கேரளத்துடன் இணைக்கப்பட்ட முல்லைப் பெரியாறு நீர் பிடிப்பு பகுதிகளையும் இடுக்கி மாவட்டத்தையும் தமிழகத்துடன் இணைத்து எல்லை மறுசீரமைப்பு செய்யுமாறு வலியுறுத்துகிறேன். உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக கேரள அரசு செய்யும் அடாவடிகளை நிறுத்த வலியுறுத்தி அரசமைப்பு சட்ட விதி 355ன் கீழ் அறிவுறுத்தல் ஆணை அனுப்புமாறு இந்திய அரசை வலியுறுத்தி கேட்டுக்கொள்கிறேன்.

 

கேரள அரசின் இந்த தமிழினப்பகை நடவடிக்கைக்கு எதிராக அனைத்து தமிழர்களும் ஒன்றிணைந்து நின்று முல்லைப் பெரியாறு அணை உரிமையை பாதுகாக்க முன்வருமாறு கேட்டுக் கொள்கிறேன்.

 

தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

 

இடம்: சிதம்பரம்

Tuesday, November 22, 2011

அணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம் - பெ.மணியரசன் அறிவிப்பு!

அணை-999 படம் திரையிடப்பட்டால் மறியல் போராட்டம் நடத்துவோம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் அறிவிப்பு 
 

மலையாள திரைப்பட இயக்குநர் ஷோகன் ராய் என்பவர் அணை-999 (DAM-999) என்று ஆங்கிலத்தில் ஒரு திரைப்படம் எடுத்துள்ளார். அதை தமிழிலும் மொழி மாற்றம் செய்துள்ளனர். அப்படத்தை வெளிநாடுகளில் வாழும் மலையாளிகளும், கேரள அரசும் பெரும் நிதியுதவி அளித்து எடுத்;துள்ளார்கள்.

 

முல்லைப் பெரியாறு அணை 999 ஆண்டுகளுக்கு தமிழ்நாட்டிற்கு உரியது என்று போடப்பட்டுள்;ள ஒப்பந்தத்தைக் குறிக்கும் வகையில் அணை 999(டேம்-999) என்ற தலைப்பில் அப்படம் எடுக்கப்பட்டுளளது. முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்களெல்லாம் இலட்சக்கணக்கில் மிதந்து அழிந்து, உடைமைகளும் விலங்குகளும் மனிதக் கூட்டமும ஊர்களும் அழிவதைப் போல சித்தரித்து படமெடுத்துள்ளார்கள் என்று செய்திகள் வெளிவந்துள்ளன.

 

முல்லைப் பெரியாறு அணை உடைந்து மக்கள் அடித்துச் செல்வதை போல சில ஆண்டுகளுக்கு முன் கேரள சி.பி.எம். முதல்வர் அச்சுதானந்தன் ஒரு பரப்புரை படம் எடுத்து கேரள மக்களிடையே பீதியைப் பரப்பி முல்லைப் பெரியாறு அணைக்கும் தமிழ் இனத்திற்கும் எதிரான இனப்பகையை தூண்டி விட்டார். உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் அளித்த தீர்ப்பில், வல்லுநர் குழு பார்வையிட்டு அளித்த அறிக்கையின்படி அணை வலுவாக உள்ளது எனக் கூறியுள்ளது. முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்றும் சிற்றணையில் சிறு செப்பனிடும் பணிகள் செய்த பின் முழு அளவான 152 அடி தேக்கலாம் என்றும் அத்தீர்ப்பில் கூறியுள்ளது.

 

ஆனால், இத்தீர்ப்புக்கு எதிராக இப்பொழுதுள்ள அணையை உடைக்க வேண்டும் என்பது தான் அங்குள்ள கம்யூனிஸ்ட் கட்சி, காங்கிரசு கட்சி உள்ளிட்ட மலையாள இனவெறிக் கட்சிகளின் திட்டம். அந்த நோக்கத்தை சாதிக்கும் வகையில் இப்பொழுது இந்த அணை-999 என்ற படம் எடுக்கப்பட்டுள்;ளது.

 

முல்;லைப் பெரியாறு அணை குறித்த வழக்கு உச்சநீதிமன்ற விpசாரணையில் உள்ளது. உச்சநீதிமன்ற விசாரணையில் உள்;ள ஒரு சிக்கல் பற்றி ஒருபக்கச் சார்பாக திரைப்படம் எடுத்து வெளியிடுவது நீதிமன்ற அவமதிப்பாகும். இதற்கு தணிக்கைச் சான்று கொடுத்தது மிகப்பெரிய தவறும் உள்நோக்கம் கொண்டதும் ஆகும். இரண்டாவதாக இனங்;களுக்கிடையே பகைமையை மூட்டி விடும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ள ஒரு படத்திற்கு தணிக்கைச் சான்று வழங்கியது சட்டவிரோதமாகும்.

 

இந்தப் படம் உலகத்தில் எங்கும் திரையிடப்படக் கூடாது. குறிப்பாக தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் இனக்கலவரம் மூளும் அபாயம் உள்ளது. எனவே, தமிழக அரசு இந்தப் படத்தை தமிழ்நாட்டில் திரையிடாமல் தடை செய்ய வேண்டும். அதற்கு இந்திய அரசை தமிழக அரசு வலியுறுத்த வேண்டும்.

 

வருகிற 25 நவம்பர் 2011 அன்று அணை-999 படம் தமிழ்நாட்டில் திரையிடப்பட்டால் அந்த திரையரங்குகளின் முன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம் நடத்தி படம் திரையிடா;ப்படாமல் மறியல் நடத்தும். தமிழ் இன உணர்வாளர்கள்; இப்போராட்டத்திற்கு திரளாக வர வேண்டுமெனவும் கேட்டுக் கொள்;கிறேன்.
 
தோழமையுடன்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
 
இடம்: தஞ்சை

Monday, November 21, 2011

விலைஉயர்வு: இந்திய அரசை நெருக்காமல் தமிழக மக்களை நெருக்கும் செயலலிதா அரசு - பெ.மணியரசன் கண்டனம்!

விலைஉயர்வு:

இந்திய அரசை நெருக்காமல் தமிழக மக்களை நெருக்கும் செயலலிதா அரசு!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் பெ.மணியரசன் கண்டனம்!

 

ஏற்றுக் கொள்ளாமல் மக்கள் என்ன செய்துவிடப் போகிறார்கள் என்ற எண்ணத்துடன் தமிழக அரசு தாறுமாறாகப் பேருந்துக் கட்டணங்களை உயர்த்தி இருக்கிறது.  ஒரே அடியில் பால் விலையை லிட்டருக்கு ரூ. 6.25 உயர்த்தி இருக்கிறது.  மின்சாரக் கட்டணத்தையும் 100 விழுக்காடு உயர்த்த வலியுறுத்தி இருக்கிறது. இந்தக் கட்டண உயர்வை மக்கள் வாழ்க்கையின் மீது தமிழக அரசு தொடுத்த கடும் தாக்குதல் என்றே கூற வேண்டும்.

 

பொதுத்துறை நிறுவனங்களுக்கு ஏற்பட்டுள்ள  இழப்பை ஈடுகட்ட, ஒரு  இலட்சம் கோடி ரூபாய்க்கு மேல் தமிழக அரசுக்குள்ள கடன் சுமையைச் சமாளிக்க உங்களை விட்டால் நான் வேறு யாரிடம் போய் கேட்க முடியும்" என்று முதல்வர் செயலலிதா,  "வேறு வழியே இல்லை" என்று கூறுகிறார்.

 

புதிய பேருந்துகள் வாங்குவது, உதிரி பாகங்கள் வாங்குவது போன்றவற்றில் நடைபெறும் ஊழல்களைத் தடுத்தால் போக்குவரத்துத் துறைக்கு ஏற்படும் சுமையில் பாதியை நீக்கிவிடலாம்.  நடுவண் அரசு சிறப்பு நிதியும் தரவில்லை. சிறப்புக் கடனும் தரவில்லை என்று முதல்வர் கூறுகிறார். இந்த நிலையில் நடுவண் அரசுக்குப் போக்குவரத்துக் கழகங்கள் செலுத்தும் கம்பெனி வருமான வரியைச் செலுத்தாமல் நிறுத்தி அத்தொகையை அத்துறையின் வளர்ச்சிக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம். இதுபற்றி மக்களிடம் கூறி அவர்களின் வலிமையை தமிழக முதல்வர் இம்முயற்சிக்கு ஆதரவாகத் திரட்டிக் கொள்ளலாம்.

 

தமிழகத்தில் நரிமணம், கோயில்களப்பால், அடியக்கமங்கலம், கமலாபுரம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தை அதிலிருந்து உற்பத்தி செய்யப்படும் பெட்ரோல் மற்றும் டீசலை இந்திய அரசின் வரி விதிப்பு இன்றி பன்னாட்டுச் சந்தையின் அசல் விலைக்கு தமிழக அரசுக்குத் தருமாறு நடுவண் அரசை வலியுறுத்தி பெற வேண்டும்.

 

இவ்வாறான முயற்சி எதிலும் இறங்காமல் அகப்பட்டுக் கொண்டவர்கள் தமிழக மக்கள்தான் என்ற எண்ணத்தில்,  உள்ளாட்சித் தேர்தல் முடிந்துவிட்ட நிலையில் உடனடியாக அவர்களால் என்ன செய்யமுடியும் என்ற நினைப்புடன் செயலலிதா பேருந்து கட்டணங்களை உயர்த்தியுள்ளார்.

 

பால் விலையை ஒரே நேரத்தில் லிட்டருக்கு ரூ6.25ஆக உயர்த்தி இருப்பது தனியார் பால் விநியோகத்திற்கு மறைமுகமாகத் துணை செய்ய அவர் விரும்புகிறார் என்பதையே காட்டுகிறது.

 

மின்சாரத்தைப் பொறுத்தவரை தமிழக அரசுக்கு ஏற்படும் நிதி இழப்பு பெரிதும் மின்தட இழப்பு (Line Loss) , மின் திருட்டு மற்றும் உயர் அதிகாரிகளின் ஊழல் ஆகியவற்றால் ஏற்படுகிறது. இவற்றைச் சரி செய்ய முதல்வர் முன்னுரிமை கொடுத்திருக்க வேண்டும்.

 

நெய்வேலியில் இருந்து ஒரு நாளைக்கு கர்நாடகத்திற்கு 11 கோடி யூனிட்டும், கேரளத்திற்கு 9 கோடி யூனிட்டும், ஆந்திரப் பிரதேசத்திற்கு 6 கோடி யூனிட்டும் மின்சாரம் செல்கிறது. இவை அனைத்தையும் உற்பத்தி செய்யும் மாநிலம் என்ற அடிப்படையில் அடக்கவிலைக்குத் தமிழக அரசு நடுவண் அரசிடம் கோரிப் பெறவேண்டும்.  இதற்கான கோரிக்கையைத் தமிழக முதல்வர் முன்வைக்கவே இல்லை.

 

 

செய்ய வேண்டிய இவற்றையெல்லாம் செய்யாமல், பெருவாரியாகத் தனக்கு வாக்களித்து அதிகாரப் பீடங்களில் அமர்த்திய மக்கள் மீது தாங்க முடியாத சுமைகளை ஏற்றுவது சிறிதும் நியாயமற்ற செயல் மட்டுமல்ல நன்றி கொன்ற செயலும் ஆகும்.  இந்திய அரசின் ஆளுங்கட்சியான காங்கிரசுடன் இணக்கப் போக்கை உருவாக்கிப் புதிய உறவை வளர்த்துக் கொள்வதற்காக முதல்வர் செயலலிதா இந்திய அரசிடம் மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைக்காமல் இருக்கிறார் என்று கருத வேண்டியுள்ளது.

 

சாராய வணிகம், மணல் வணிகம் அகியவற்றின் மூலம் தமிழக அரசுக்கு அமோக வருமானம் வந்து கொண்டுள்ளது.  சாராயத்தில் நிகர வருமானம் ஆண்டுக்கு 10ஆயிரம் கோடி ரூபாயாக உள்ளது.  தமிழக அரசு வழங்கும் அனைத்து இலவசங்களின் மொத்தச் செலவு ரூபாய் 7500 கோடி மட்டுமே. எனவே இலவசங்களுக்காக இக்கட்டண உயர்வு என்று கருத முடியாது.

 

கொழுத்த வருமானம் தரும் அனைத்து வரிகளையும் விதித்து வசூலித்துக் கொள்ளும் இந்திய அரசிடம் கூடுதல் நிதி கேட்டுப் போராடாமல் மக்கள் மீது கொடும் பணச்சுமைகளை ஏற்றுவது அறம் அன்று.

 

எனவே தமிழக அரசு புதிதாகச் சுமத்தியுள்ள கட்டண உயர்வுகளை கைவிட்டு நிதி நெருக்கடியைச் சமாளிக்க மேலே சொல்லப்பட்ட வழிகளைக் கையாளுமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழக முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன். 

.                                                                                                                               (பெ.மணியரசன்)

 

இடம் : தஞ்சை

நாள்  : 21.11.2011

Thursday, November 10, 2011

உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூல்கள் வெளியீட்டு விழாவில் தோழர் பெ.மணியரசன் உரை!


உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன் நூல்கள் வெளியீட்டு
விழாவில் தோழர் பெ.மணியரசன் உரை காணொளி!

உணர்ச்சிக்கவிஞர் காசி ஆனந்தன் அவர்கள் எழுதிய நறுக்குகள், பொழிச்சல், பெபுல்ஸ்(pebbles) ஆகிய நூல்களின் வெளியீட்டு விழா சென்னை தேவநேய பாவாணர் நூலக அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்வில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரையின் காணொளிப் பதிவு!



நாள்: நவம்பர் 10, 2011

Friday, November 4, 2011

அறிவு வளர்ச்சிக்கு எதிரான தமிழக முதல்வரின் மனநிலை - பெ.மணியரசன் கண்டனம்!

அண்ணா நூலகத்தை இடமாற்றுவது அறிவு வளர்ச்சிக்கு எதிரான

தமிழக முதல்வரின் மன நிலையைக் காட்டுகிறது

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்  பெ.மணியரசன் கண்டன அறிக்கை

 

உலகத் தரம் வாய்ந்த அண்ணா நூற்றாண்டு நூலகத்தை அதற்கென எழுப்பட்ட கோட்டூர்புரம் கட்டடத்திலிருந்து நுங்கம்பாக்கத்திற்கு மாற்றுவதென்று தமிழக முதல்வர் செயலலிதா எடுத்த முடிவு அரசியல் காழ்ப்புணர்ச்சிக் காரணமாக செய்யப்பட்ட முடிவு என்று குறுக்கிப் பார்த்துவிடக்கூடாது. அறிவு வளர்ச்சி, கல்வி ஆகியவற்றின் மீது அவருக்குள்ள அக்கறையின்மை, அலட்சியம் எதிர்நிலை மனப்போக்கு ஆகியவற்றின் காரணமாகவே இம்முடிவை எடுத்துள்ளார். கல்வி மற்றும் அறிவு வளர்ச்சிக்கு எதிரான செயலலிதாவின் மன நிலைக்கு நிறைய சான்றுகள் தரலாம்.

 

கடந்த மே மாதம் முதலமைச்சரான உடனேயே கல்வியாளர்களால் பாராட்டப்பெற்ற சமச்சீர்க் கல்வியை தடைசெய்தார். தமிழகத்தில் பெரும்பாலானோர் சமச்சீர்க் கல்வியை மீட்க கருத்துகள் கூறினார்கள், போராடினார்கள். பரவலான மக்கள் கருத்தை செயலலிதா மதிக்கவில்லை. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்ட பிறகு வேறு வழியின்றி வேண்டா வெறுப்பாக சமச்சீர்க் கல்வியை செயல்படுத்தி வருகிறார்.

 

இந்தியஅரசின் கீழ் செயல்படும் செம்மொழி மையம் தமிழக அரசுக்கு சொந்தமான பாலாறு இல்லத்தில் செயல்பட்டு வந்தது. அதில் பொதுப்பணித்துறை அமைச்சரை குடியேற்றி செம்மொழி மையத்தை ஒரு சிறு பகுதியில் செயல்படும் நிலைக்கு உள்ளாக்கினார்.

 

தமிழகஅரசின் கீழ் இயங்கி வந்த பாரதிதாசன் செம்மொழி ஆய்வகத்தையும் பாலாறு இல்லத்திலிருந்து வெளியேற்றி எழும்பூரில் ஒரு சிறிய இடத்திற்கு மாற்றினார். அத்துடன் பாரதிதாசன் செம்மொழி ஆய்வு மையத்திற்கு உரிய நிதி ஒதுக்காமலும், உரிய ஆய்வுத்திட்டம் வகுக்காமலும் முடக்கிவிட்டார்.

 

தஞ்சையில் இயங்கும் தமிழ்ப் பல்கலைக் கழகத்தையும் செயலலிதா விட்டு வைக்கவில்லை. எம்.ஜி.ஆர் தமிழ்ப் பல்கலைக் கழகத்தை உருவாக்கிய போது அதன் விரிவாக்கத்திற்கென ஆயிரம் ஏக்கர் நிலம் ஒதுக்கினார். ஏற்கனவே அவ்வளாகத்தில் வீடுகள் கட்டப்பட்டு தனியாருக்கு விற்பனை செய்தார்கள். இப்பொழுது தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் தமிழ்ப் பல்கலைக் கழக வளாகத்திற்குள் கட்ட அ.இ.அ.தி.மு.க. அரசு ஏற்பாடுகள் செய்து வருகிறது.

 

இவற்றையெல்லாம் தொகுத்துப்பார்த்தால் தமிழக முதல்வர் செயலலிதாவிற்கு தமிழ்மக்களின் அறிவு வளர்ச்சியிலும், கல்வி வளர்ச்சியிலும் அக்கறையில்லை என்பது மட்டுமல்ல, எதிர்நிலைக் கருத்தை கொண்டுள்ளார் எனபது தெரியவருகிறது. இலவசங்கள் வழங்கி, வாக்கு வங்கியை தக்க வைத்துக் கொள்வது என்ற அதிகார அரசியலில் மட்டுமே செயலலிதா குறியாக இருக்கிறார். மக்கள் அறிவு வளர்ச்சிப் பெறுவதும், விழிப்புணர்ச்சி அடைவதும் அவரது வாக்கு வங்கி அரசியலுக்கும் அவரின் எதேச்சாதிகார மனப்போக்கிற்கும் இடையூறு விளைவிக்கும் என்று அச்சப்படுகிறார்.

 

அறிவு வளர்ச்சிக்கும் கல்வி வளர்ச்சிக்கும் எதிரான அவரது மன நிலை, முன்னாள் முதல்வர் கருணாநிதிக்கு எதிரான அவரது பழிவாங்கும் அரசியலோடு இணைந்து போகிறது.

 

தமிழ்நாட்டிலுள்ள கல்வியாளர்களும், விழிப்புற்ற மக்களும் கல்வி மற்றும் அறிவு தாகத்தின் மீது செயலலிதா நடத்தும் தாக்குதல்களை முறியடிக்க வேண்டும். கோட்டூர்புரத்தில் இப்பொழுதுள்ள கட்டடத்திலேயே அண்ணா நூற்றாண்டு நூலகம் தொடர்ந்து செயல்படவும், தமிழக முதல்வரின் இடமாற்ற முயற்சியை தடுக்கவும் போராட வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

 
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
 
இடம்: தஞ்சை

Tuesday, November 1, 2011

தமிழினம் காக்க கோவையில் கூடுவோம்! - பெ.மணியரசன் வேண்டுகோள்!

தமிழினம் காக்க கோவையில் கூடுவோம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

 

கட்சி சார்பற்ற முறையில் தமிழர்களை இன அடிப்படையில் ஒருங்கிணைக்கும் பெரும் முயற்சியாக, "ஈழத்தமிழர் வாழ்வுரிமை மாநாடு" கோவை வ.உ.சி. பூங்காத் திடலில் 06.11.2011 மாலை 4 மணிக்கு நடக்கிறது. இம்மாநாட்டில், பல்வேறு கட்சிகளும், தமிழ்த் தேசிய அமைப்புகளும், தமிழின உரிமை அமைப்புகளும் பங்கேற்கின்றன.

 

2008 - 2009 ஆண்டுகளில் ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை சிங்கள இனவெறி அரசு, இனப்படுகொலை செய்தது. இனப்படுகொலைக் குற்றவாளிகளாகவும், போர்க்குற்றவாளிகளாகவும் உள்ள இராசபட்சே கும்பலை தளைப்படுத்தி, பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும்; போர் அழிவுக்குப் பிந்தைய காலத்தில், நடைபெற வேண்டிய துயர் துடைப்புப் பணிகள் சிங்கள வெறி அரசால் நடத்தப்படவில்லை. ஐ.நா. மற்றும் பன்னாட்டுக் கண்காணிப்பின் கீ்ழ் ஈழத்தில், துயர் துடைப்புப் பணிகளை செயல்படுத்தி எஞ்சியுள்ள தமிழ் மக்களை பாதுகாக்க வேண்டும். இராசீவ் கொலை வழக்கில் பொய்யாகக் குற்றம்சாட்டப்பட்டு, சாவுத் தண்டனை வழங்கப்பட்ட அப்பாவித் தமிழர்கள் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரை தூக்கிலிடத் துடிக்கும் இந்திய அரசின் தமிழினப் பகை முயற்சியை முறியடித்து, அம்மூவரையும் காப்பாற்ற வேண்டும்.

 

மேற்கண்ட மூன்று முகாமையான கோரிக்கைகளை முன்வைத்து கோவை மாநாடு நடைபெறுகிறது. கைக்கு எட்டியத் தொலைவில் இருந்தும் நம் இனம் இந்திய ஏகாதிபத்தியத்தின் துணையோடு இலங்கை அரசால், அழிக்கப்பட்டதை தடுக்க முடியவில்லையே என்ற குற்ற உணர்ச்சியும், ஆறாத காயமும் தமிழர்கள் நெஞ்சில் அப்படியே உள்ளன.

 

இப்பொழுது முழுவீச்சில் நாம் செயல்பட்டு, நம் இன மக்களை ஈழத்திலும், தூக்குக் கொட்டடியில் உள்ள தமிழர்களை இங்கும் பாதுகாக்க வேண்டிய கட்டாயக் கடமை நமக்கு உள்ளது. சாவுத் தண்டனையை சட்டப் புத்தகத்திலிருந்து முற்றாக நீக்க வேண்டும் என்ற மனித உரிமைக் கடமையும் நம் முன் உள்ளது.

 

எனவே, தமிழின உணர்வாளர்கள், மனித உரிமையில் அக்கறையுள்ளோர் அனைவரும் கோவையில் பெருந்திரளாகக் கூட வேண்டும். நமது கோரிக்கைகளில் உள்ள ஞாயம் அக் கோரிக்கையை ஏந்தி நிற்கும் மக்கள் கூட்டத்தின் எண்ணிக்கைக்கு ஏற்பவே மதிக்கப்படும். எனவே, மாநாட்டுக்கு வாருங்கள் தமிழர்களே!


தோழமையுடன்,

பெ.மணியரசன்,

தலைவர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: சென்னை

நாள்: 1.11.2011

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT