உடனடிச்செய்திகள்

Monday, November 24, 2014

சென்னை பாரிமுனையில் மார்வாடிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வழக்கறிஞர்களின் சாலைமறியல் போராட்டம்!


சென்னை பாரிமுனையில் மார்வாடிகளின் சட்டவிரோத ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக வழக்கறிஞர்களின் சாலைமறியல் போராட்டம்!

சென்னையில் விதிமுறைகளை மீறி எழுப்பப்பட்டுள்ளக் கட்டடங்கள் குறித்து ஆய்வு செய்து 3 மாதத்தில் அறிக்கை தாக்கல் செய்ய சி.எம்.டி.ஏ.வுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதன்படி, கடந்த அக்டோபர் 27ஆம் தேதி முதல் 14,600 கட்டடங்களில் சி.எம்.டி.ஏ, மாநகராட்சி அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டனர். அப்போது, 98 சதவீத கட்டடங்கள் விதிமுறைகளை மீறிக் கட்டப்பட்டுள்ளன எனக் கண்டறிந்தனர். இந்த அறிக்கை உயர்நீதிமன்றத்திலும் தாக்கல் செய்யப்பட்டது. 

சென்னையின் இதரப் பகுதிகளில் அங்கீகரிக்கப்பட்ட வரைபடத்தின் அளவுகளிலிருந்து சிறிது விலகி கட்டிடம் கட்டப்பட்டாலும் கடுமையான நடவடிக்கை எடுக்கின்ற அரசு நிர்வாகம், ஜார்ஜ் டவுன் பகுதியில் உள்ள 98% கட்டிடங்கள் விதிமுறைகளை மீறி கட்டப்பட்ட போது என்ன செய்து கொண்டிருந்தது என்ற கேள்விக்கு விடையில்லை. இது போதாதென்று, தற்போது அப்பகுதியில் கட்டப்பட்டு வருகின்ற கட்டிடங்களும் விதிமுறைகளை மீறி கட்டப்பட்டு வருகின்றன. இவற்றில் மிகப்பெரும்பாலானவை வடநாட்டு மார்வாடிகளுக்கு சொந்தமானதாகும். 

ஜார்ஜ் டவுன் பகுதியில் அமைந்துள்ள லிங்கச் செட்டி தெரு, தம்பு செடி தெரு போன்ற தெருக்கள் ஒரு வழிபாதையாக அறிவிக்கப்பட்டிருந்தாலும் நடைமுறையில் ஒருவழிப் பாதை முறை கடைபிடிக்கப்படுவதில்லை. மேலும் சென்னையின் இதரபகுதிகளில் பகல் நேரங்களில் தடை செய்யப்பட்டுள்ள கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் ஜார்ஜ் டவுன் பகுதிக்கு மட்டும் தாராளமாக வந்து செல்கின்றன. வழக்கறிஞர்கள் மற்றும் பொதுமக்களின் நடமாட்டம் மிகுந்த இந்தப் பகுதியில் இவர்கள் சரக்குகளை கையாள்வது சாலைகளில் நடந்துச் செல்வோரின் உயிருக்கு அச்சுறுத்தலாய் விளங்குகிறது. 

இவை எல்லாவற்றிற்கும் மேலாக உயர்நீதிமன்ற உத்தரவுக்கு சவால் விடும் வகையில் பல வட இந்தியர்களும், வணிக நிறுவனங்களும் அவர்களின் கட்டிடத்திற்கு முன்பு உள்ள சாலையின் பெரும்பகுதியை தங்களின் வாகனம் நிறுத்துமிடமாக அறிவித்து (Parking Area) பொது மக்களின் நடமாட்டத்தையே பெருமளவில் கட்டுப்படுத்தி வருகின்றனர்.
இத்தகைய சட்ட விரோதமான செயல்கள் குறித்து நடவடிக்கை எடுக்க வேண்டிய அரசு அதிகாரிகள் குறிப்பாக போக்குவரத்து காவல்துறையினர் மெளனமாக இருப்பதற்கு அவர்களுக்கு கிடைத்து வருகின்ற மாதாந்திர கையூட்டு தான் காரணம் என்பது அனைவரும் அறிந்த ரகசியமாகும்.

இவ்வாறு அதிகாரிகள் கையூட்டு பெறுவதினாலும், அவர்களுடைய கையாளாகாத்தனத்தினாலும் பாதிக்கப்படுவது பொது மக்களும், வழக்கறிஞர்களும் தான். இனிமேலும் இத்தகைய இழிவான காரியங்களை அனுமதிப்போமேயானால் நாமும் குற்றவாளிகளாக கருதப்படுவோம் என்ற வகையில், சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் இந்த அநீதிகளுக்கு எதிராக, இன்று வீதியில் களமிறங்கினர். 

ஜார்ஜ் டவுன் பகுதியில் நடைபெறும் சட்டவிரோத செயல்களை முடிவுக்கு கொண்டு வரும் வகையில் உரிய நடவடிக்கை எடுக்க, அரசு அதிகாரிகளை, போக்குவரத்து காவல்துறையை வலியுறுத்தும் வகையில் இன்று (24.11.2014) திங்கள் கிழமை காலை 11 மணி அளவில், வீதி வீதியாகச் சென்று அத்துமீறல்களை நேரடியாகத் தட்டிக் கேட்டனர். இதன் இறுதியில், சாலை மறியல் போராட்டமும் நடைபெற்றது. 

இதன் போது, உயர்நீதிமன்ற வளாகத்திலிருந்து வழக்கறிஞர் சேசுபாலன் தலைமையில் உயர்நீதிமன்ற வழக்கறிஞர்களும் தமிழ் உணர்வாளர்களும் பேரணியாக, ஆர்மேனியன் தெரு, லிங்குச் செட்டி தெரு, தம்புச்செட்டி தெரு ஆகிய தெருக்களின் வழியாக சென்று அங்கு போக்குவரத்துக்கு இடையூராக இருந்த மார்வாடிகளின் வாகனங்களை முழக்கங்கள் எழுப்பி அப்புறப்படுத்தினர். 

இதன் இறுதியில், உயர்நீதிமன்ற முதன்மைச் சாலையில் அமர்ந்து சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. உடனடியாக அங்கு வந்த, காவல்துறை அதிகாரிகள் ஒரு வாரத்திற்குலள் இச்சிக்கல்களில் நடவடிக்கை எடுப்பதாக வாக்குறுதி அளித்ததின் பேரில் போராட்டம் தற்காலிகமாக விலக்கிக் கொள்ளப்பட்டது. 

இப்போராட்டத்தில் வழக்கறிஞர்கள் பாவேந்தன், ரசினி உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட வழக்கறிஞர்கள் கலந்துக்கொண்டனர். தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தாம்பரம் கிளைச் செயலாளர் தோழர் இளங்குமரன், சென்னை நடுவண் கிளைச் செயலாளர் தோழர் வி.கோவேந்தன், தோழர் நல்லன் உள்ளிட்ட தோழர்கள் கலந்துக் கொண்டனர்.






Friday, November 21, 2014

“மீனவர்களே தமிழர்களாக ஒன்றிணையுங்கள்!” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!


“மீனவர்களே தமிழர்களாக ஒன்றிணையுங்கள்!” இராமநாதபுரம் மீனவர் கருத்தரங்கில்...தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர்
தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!


‘உலக மீன் வள நாள்’ இன்று (21.11.2014) கடைபிடிக்கப்படுவதையொட்டி, இராமநாதபுரத்தில், இராமநாதபுர மாவட்ட மீன்பிடித் தொழிலாளர் சங்கம்(RFTU) மற்றும் இந்திய சமூக செயற்பாட்டு பேரவை (INSAF) ஆகிய அமைப்புகளின் சார்பில், இன்றைய நாள் ‘மீனவர் நாளாக’கடைபிடிக்கப்பட்டு, கருத்தரங்கம் நடைபெற்றது.

இராமநாதபுரம் வலம்புரி மகாலில் காலை 11 மணியளவில் நடைபெற்ற இக்கருத்தரங்கிற்கு, சங்கத்தின் தலைவர் திரு. பாலுச்சாமி தலைமையேற்றார். செயலாளர் திரு. ஜோசப் வரவேற்புரையாற்றினார். துணைத் தலைவர். திருவாட்டி அன்னம்மாள்,தேசிய மீனவர் சம்மேளனத் தலைவர் திரு.இளங்கோவன், இந்திய தேசிய சமூக செயல்பாட்டு மன்றஒருங்கிணைப்பாளர் திரு. மத்தியாஸ் உள்ளிட்டோர் உரை நிகழ்த்தினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:

‘இன்று ‘உலக மீன் வள நாள்’ இங்கு ‘மீனவர்’ நாளாக கடைபிடிக்கப்படுகிறது. இதே நாளில் தான், இலங்கையில் தூக்குத் தண்டனைப் பெற்று விடுதலையாகியுள்ள இராமேசுவரம் தங்கச்சி மடத்தைச் சேர்ந்த 5 மீனவத் தோழர்கள் விடுதலையாகி, தமிழகம் வந்திருக்கின்றனர். அவர்களை நாம் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறோம்!

இந்த ஐந்து மீனவர் விடுதலை எப்படி நடைபெற்றது என்பதை நாம் இந்த தருணத்தில் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

வெறும் அரசின் தயவோடு இந்த மீனவர் விடுதலை என்பது சாத்தியமாகவில்லை.

அக்டோபர் 30ஆம் நாள், இராமேசுவர மீனவர்களக்கு இலங்கை நீதிமன்றம் தூக்குத் தண்டனை விதித்த செய்தி வந்தவுடன், உடனடியாகக் கொந்தளிப்பு ஏற்பட்டு, இராமேசுவரத்தில் போராட்டம் வெடித்தது. போர்க்குணமிக்க அந்தப் போராட்டத்தின் போது, இந்திய அரசின் தொடர்வண்டி இருப்புப் பாதைகள் பெயர்க்கப்பட்டன. பல கிலோ மீட்டர் மனிதத் தலைகளே தெரியுமளவிற்கு மிகப்பெரும் சாலை மறியல்கள் இராமேசுவரத்தில் நடைபெற்றன.

தண்டனை விதிக்கப்பட்ட மீனவர்களின் முகங்கள் – ஊர் பேர் என எதுவும் தெரியாத நிலையிலும் கூட, அவர்கள் தமிழர்கள் என்பதை உறவாகஉணர்ந்து கொண்டு, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் போராட்டங்கள் நடைபெற்றன. தமிழர் என்ற இணைப்பின் கீழ்தான் இது சாத்தியமானது.

இதே போல் நாம் ஒருங்கிணைந்து போராடியதன் விளைவாகவே, அரசுக்கு ஐந்து மீனவர்களை மீட்க வேண்டுமென்ற அழுத்தம் ஏற்பட்டது என்பது,மிகையானக் கூற்று அல்ல! ஒவ்வொரு சிக்கலிலும், இவ்வாறான ஒருங்கிணைந்த போராட்ட வழிமுறைத் தேவை! அதுவே நம்மை பாதுகாக்கும்!

2013ஆம் ஆண்டு, கடற்கரை மேலாண்மைச் சட்டம் - புதிய சட்ட விதிகளைக் கொண்டு திருத்தப்பட்டுள்ளது. ஆட்சியாளர்கள் வேளாண்மையிலிருந்து எப்படி உழவர்களை வெளியேற்றுகிறார்களோ, அது போல பன்னாட்டு நிறுவனங்களின் கொள்ளைகளுக்காக கடலோரத்திலிருந்து – கடலிலிருந்து மீனவர்களை வெளியேற்றும் திட்டத்திற்குத்தான் அச்சட்டம் பயன்படப் போகிறது.

இச்சட்டம் நடைமுறைக்கு வந்தால், 200 மீட்டர் முதல் 500 மீட்டர்வரை ஆழம் உள்ள கடல் பகுதிகளில், மீனவர்களுக்கு மீன்பிடி உரிமையில்லை என அறிவிக்கப்படும். அந்த பகுதிகளில் பன்னாட்டு – வடநாட்டு நிறுவனங்கள் மீன் பிடித்துக்  கொள்ள அனுமதிக்கப்படும். அது போல,மீனவர் கடலிலிருந்து 500மீட்டருக்குள் குடியிருக்கக் கூடாது என்றும் சொல்வார்கள். இச்சட்டத்தை நாம் அனைவரும் ஒருங்கிணைந்துப் போராடி முறியடிக்க வேண்டும்.

மன்னார் வளைகுடாவை ஒட்டியுள்ள 25 தீவுகளிலும்,  அதைச்சுற்றியுள்ள 560 சதுர கிலோ மீட்டர் பகுதிகளிலும், நம்மீனவப் பெண்கள் காலங்காலமாக கடல் பாசி எடுத்து வரும் தொழிலைச் செய்து வந்தனர். ‘இந்திய விடுதலை’க்குப் பிறகு, அந்த உரிமை நம் மீனவப் பெண்களுக்கு மறுக்கப்பட்டது. வனத்துறையினர், நம் மீனவர்களை தடுக்கின்றனர். எனவே, இந்த உரிமையை மீட்க நாம் போராட வேண்டியத் தேவையுள்ளது.
  
அதே போல, நம் மீனவர்கள் காலங்காலமாகப் புழங்கி வந்த கச்சத்தீவு, இலங்கைக்கு இந்திய அரசால் தாரை வார்க்கப்பட்டுள்ளது. அதை மீட்பதற்கும் நாம் போராட வேண்டும். கச்சத்தீவை ஒட்டியுள்ள கடல் பரப்பை, இருதரப்பினரும் மீன்பிடிக்கும் வகையிலானபொதுவான கடற்பரப்பாக அறிவித்து, இச்சிக்கலைத் தீர்க்க முடியும்.

இது போன்ற பல உரிமைகளை மீட்க, நாம் அனைவரும் ஒருங்கிணைய வேண்டியத் தேவையுள்ளது. மீனவர்கள் மட்டுமே ஒன்றுகூட, தொழிற்சங்கங்கள் அமைத்து, இந்த உரிமைகளை மீட்டுவிட முடியாது. நாம் அனைவரும், இணைய வேண்டிய புள்ளியில் இணைந்து, இந்த உரிமைகளை மீட்கலாம். அந்த ஒருங்கிணைப்பு, தமிழர் என்ற புள்ளியில்தான் இருக்கிறது. எமது தமிழ்த் தேசியப் பேரியக்கம், அதனை அமைப்பு வழியில் செய்து வருகின்றது“

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் பேசினார்.

கூட்டத்தின் நிறைவில், சங்கப் பொருளாளர் திருவாட்டி மீனா நன்றியுரையாற்றினார். நிகழ்வில், திரளான ஆண்கள் – பெண்கள் என நூற்றுக்கணக்கான மீனவத் தொழிலாளர்கள் பங்கேற்றனர். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.இராசு உள்ளிட்ட த.தே.பே. தோழர்கள் கலந்து கொண்டனர்.





Monday, November 17, 2014

இராயக்கோட்டையில் எழுச்சிமிகுப் போராட்டம் - கோரிக்கைக்கு அரசு நிர்வாகம் பணிந்தது!










எழுச்சிமிக்க மக்கள் போராட்டம்! பணிந்தது அரசு நிர்வாகம்!
தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும்
இராயக்கோட்டை மக்கள் போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி! 



இராயக்கோட்டையில் நடைபெற்ற மக்கள் போராட்டத்திற்கு முதல் கட்ட வெற்றி கிடைத்துள்ளதாக, தமிழக உழவர் முன்னணி வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து, தமிழக உழவர் முன்னணி வெளியிட்ட செய்தி குறிப்பு;

கிருட்டிணகிரி மாவட்டம் - இராயக்கோட்டையில், வறட்சியைப் போக்கி வேளாண்மையை செழுமைப்படுத்தும் வகையில், தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் மூலம் நீர் கொண்டு வரும் 'தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை' நிறைவேற்றக் கோரி பல்லாண்டு காலமாக, அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். 

இக்கோரிக்கையை, தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையிலான தமிழக உழவர் முன்னணியும், அப்பகுதி மக்களையும், உழவர்களையும் ஒருங்கிணைத்து உருவாக்கப்பட்ட 'தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் இயக்கமும்' முன்னெடுத்துச் சென்றன.

இவ்வமைப்புகளின் தொடர்ச்சியான போராட்டங்கள் காரணமாக, 2010ஆம் ஆண்டு இத்திட்டம் குறித்து அரசு ஆய்வு செய்தது. 2012-2013ஆம் நிதி ஆண்டில், இத்திட்டம் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, 2014ஆம் ஆண்டு எப்ரலில் இந்தத் திட்டத்துக்கு ரூ.22.20 கோடி செலவாகும் என மதிப்பீடும் செய்யப்பட்டது. ஆனாலும், இத்திட்டத்திற்கானப் பணிகள் நடக்கவில்லை.

எனவே, இந்த நிதியாண்டிலேயே இப்பணிகளை நடத்த வேண்டுமெனக் கோரி, இன்று (17.11.2014) இராயக்கோட்டையில் சாலை மறியல் மற்றும் கடையடைப்புப் போராட்டத்திற்கு, தமிழக உழவர் முன்னணி - தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு சார்பில் அழைப்பு விடுக்கப்பட்டது. இவ்வழைப்பை ஏற்று, வணிகர் சங்கங்களும், காய்கறிக் கடை உரிமையாளர்கள் உள்ளிட்ட பலதரப்பட்ட வணிகர்களும் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்தனர். 

இன்று, காலை முதல் இராயக்கோட்டை பகுதியில் முழுமையான கடையடைப்பு நடைபெற்று வந்த நிலையில், இராயக்கோட்டை முதன்மைச் சாலையில், தமிழக உழவர் முன்னணித் தலைமை ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் சாலை மறியல் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தில், ஆயிரக்கணக்கான உழவர்களும், வணிகர்களும், பொது மக்களும் கலந்து கொண்டு எழுச்சியுடன் முழக்கங்கள் எழுப்பினர். 

தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் மு.வேலாயுதம், தமிழக உழவர் முன்னணி - தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு பகுதி நிர்வாகிகள், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் என நூற்றுக்கணக்கானோர் இதில் கலந்து கொண்டனர். 

இதனைத் தொடர்ந்து, பேரணி நடைபெறும் இடத்திற்கு வந்த காவல்துறையினரும் அரசு அதிகாரிகளும் போராட்டக்குழுவினருடன் பேச்சு வார்த்தைக்கு அழைப்பு விடுத்தனர். 

இராயக்கோட்டை காவல் நிலையத்தில், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் முன்னிலையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது. அரசுத் தரப்பில், தேன்கனிக்கோட்டை வட்டம் - வட்டாட்சியர், கிருட்டிணகிரி பொதுப்பணித்துறை திட்ட வடிவமைப்பு உப கோட்டம் உதவி செயற்பொறியாளர்  திருமதி. வனஜா, தேன்கனிக்கோட்டை துணை வட்டாட்சியர், இராயக்கோட்டை வருவாய் ஆய்வாளர், கிராம நிர்வாக அலுவலர் ஆகியோர் கலந்து கொண்டனர். 

போராட்டக் குழு சார்பில், தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன், தென்பெண்ணை கிளைவாய்க்கால் கோரும் உழவர் அமைப்பு ஆலோசகர் தோழர் கோ.மாரிமுத்து, இராயக்கோட்டை தமிழக உழவர் முன்னணிக் கிளைச் செயலாளர் தோழர் தூருவாசன், முகளுர் கிளைச் செயலாளர் தோழர் முகுந்தன், அளேசீபம் கிளைச் செயலாளர் தோழர் அனுமந்தப்பா, கொப்பக்கரை கிளைச் செயலாளர் தோழர் இராசேந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். 

பேச்சுவார்த்தையின் நிறைவில், திட்டத்தை இந்த நிதியாண்டிலேயே நிறைவேற்றுவதற்கான உடனடிப் பணிகளில் ஈடுபட அரசுத் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. 

இராயக்கோட்டை மக்கள் போராட்டம் வெல்லட்டும்!

Tuesday, November 4, 2014

தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து மதுரையில் ஆர்ப்பாட்டம்!




அப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து மதுரையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டம்!


தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.

இந்த அநீதியைக் கண்டித்து, தமிழகமெங்கும் பல்வேறு அமைப்புகளின் சார்பில் கண்டன போராட்டங்கள் நடைபெற்று வருகின்றன.

இதன் ஒரு பகுதியாக, நவம்பர் 1 - காரி (சனி) அன்று மாலை, மதுரையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்க மதுரை மாநகரச் செயலாளர் தோழர் ரெ.இராசு தலைமையேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய முன்னணி பொறுப்பாளர் தோழர் வெ.ந.கணேசன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கார்த்திக், தோழர் பிலால்(எஸ்.டி.பி.ஐ.), தோழர் ரபிக் (இளந்தமிழகம்), தோழர் பேரறிவாளன் (தமிழ்ப்புலிகள்), தோழர் மணிபாவா (தமிழ்நாடு மக்கள் கட்சி), மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, திரு. ஐ.ஜெயராமன் (புரட்சிக்கவிஞர் பேரவை), தோழர் கரிகாலன் (தமிழ்த் தேசியப் பேரியக்கம்), மதுரை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் அகவன், புனித தேவக்குமார் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

Sunday, November 2, 2014

தமிழினப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோவிலுக்கு மராத்திய பான்ஸ்லே பரம்பரை அறங்காவலரா? பான்ஸ்லேயை வெளியேற்றக் கோரி தஞ்சையில் எழுச்சிமிகுப் பேரணி!


தமிழினப் பேரரசன் இராசராசன் எழுப்பிய 
தஞ்சைப் பெரிய கோவிலுக்கு
மராத்திய பான்ஸ்லே பரம்பரை அறங்காவலரா?


பான்ஸ்லேயை வெளியேற்றக் கோரி

தஞ்சையில் எழுச்சிமிகுப் பேரணி!














தமிழ்ப் பேரரசன் இராசராசன் எழுப்பிய தஞ்சைப் பெரிய கோயில் சோழப் பேரரசர்கள் எழுப்பிய இதர கோயில்கள் உள்ளிட்ட 88 கோயில்களை கொண்ட அரண்மனைத் தேவஸ்தானத்தின் பரம்பரை அறங்காவலராக தஞ்சை மண்டலத்தை ஒரு காலத்தில் ஆக்கிரமித்த மராத்திய இனத்தை சேர்ந்த பாபாஜி பான்ஸ்லே என்பவர் இருக்கிறார். இன்றைக்கும் அவர் மேற்கண்ட கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக இருப்பது இந்து அறநிலைய சட்டத்திற்கும் முரணானது, வரலாற்று உண்மைகளுக்கும் எதிரானது, தமிழர் தன்மானத்திற்கும் பாதகமானது.

பாபாஜி பான்ஸ்லே சோழர் பரம்பரையைச் சேர்ந்தவரும் அல்லர். தமிழர் பரம்பரையைச் சேர்ந்தவரும் அல்லர். தஞ்சையை ஆண்ட மாராத்திய அரசர்களின் சட்டப்பூர்வ வாரிசும் அல்லர். ஒருவர் சொந்தமாக கோயிலைக் கட்டி அதற்கு தன் சொத்துக்களை எழுதி வைத்து அதனுடைய அன்றாட வழிப்பாட்டு செலவுகளுக்கு பணம் கொடுத்து பராமரித்து வந்தால்தான் அவர் ஒரு கோயிலின் பரம்பரை அறங்காவலராக இருக்க முடியும் என்பது இந்து அறநிலையச் சட்டம் விதிக்கும் நிபந்தனையாகும்.

எனவே மேற்கண்ட மூன்று கூறுகளுக்கும் பொருந்தாத மாராத்திய பாபாஜி பான்ஸ்லேயை தஞ்சை பெரிய கோயில் உள்ளிட்ட 88 கோயில்களுக்கு பரம்பரை அறங்காவலராக வைத்திருப்பது சட்ட விரோதமாகும். தமிழக அரசு இதில் தலையிட்டு பாபாஜி பான்ஸ்லேயை பரம்பரை அறங்காவலர் பொறுப்பிலிருந்து நீக்கி மேற்படி தஞ்சைப் பெரிய கோயில் உள்ளிட்ட கோயில்களை தமிழக அறநிலையத்துறையில் சேர்க்க வேண்டும்.

இக்கோரிக்கையை முன்வைத்து, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களை ஒருங்கிணைப்பாளராகக் கொண்டு, பல்வேறு அமைப்புகளையும் உள்ளடக்கி கடந்த 2005ஆம் ஆண்டு 'தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு' என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, தொடர்ந்து பல்வேறு போராட்டங்கள் நடைபெற்று வந்தன.

இதன் தொடர்ச்சியாக, தமிழ்ப் பேரரசன் இராசராசன் சதய விழா நடைபெறும் இன்று (02.11.2014), “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு” சார்பில், எழுச்சிமிகுப் பேரணி நடைபெற்றது.

தஞ்சை பழைய பேருந்து நிலையம் பெரியார் சிலை அருகிலிருந்து புறப்பட்ட இப்பேரணிக்கு, “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு” தலைவர் திரு. அயனாவரம் சி. முருகேசன் தலைமையேற்றார். செயலாளர் திரு. வெண். வீரமுருகு. வீரசிங்கம் முன்னிலை வகித்தார். பேரணியின் நிறைவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவரும், “தஞ்சைப் பெரிய கோயில் உரிமை மீட்புக்குழு” ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ.மணியரசன் இராசராசன் சிலைக்கு மாலை அணிவித்து நிறைவுரையாற்றினார்.

பேரணியில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, தலைமைச் செயற்கழு உறுப்பினர்கள் தோழர் பழ.இராசேந்திரன், தோழர் நா.வைகறை, தோழர் விடுதலைச்சுடர், தஞ்சை நகரச் செயலாளர் தோழர் லெ.இராமசாமி, நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு.முனியாண்டி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழின், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் அ.தேவதாசு, மாவட்டச் செயற்குழு தோழா ரெ.கருணாநிதி, மகளிர் ஆயம் தோழர் ம.இலட்சுமி, தோழர் அமுதா உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இதில் கலந்து கொண்டனர்.


Saturday, November 1, 2014

அப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து சிங்களத் தூதரகம் முற்றுகை!




அப்பாவி தமிழக மீனவர்களை தூக்கிலிடத் துடிக்கும் சிங்கள இனவெறி அரசைக் கண்டித்து சிங்களத் தூதரகம் முற்றுகை!
 
தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட 300க்கும் மேற்பட்டோர் கைது.
 
தமிழகத்திற்குரிய கடல் பகுதியில் மீன் பிடித்துக் கொண்டிருந்த தங்கச்சி மடம் மீனவர்களான எமர்சன், வில்சன், அகஸ்டன், லாங்லெட், பிரசாந்த் ஆகிய ஐந்து பேரையும் 2011ஆம் ஆண்டு சிங்களக் கடற்படையினர் சட்டவிரோதமாக கடத்திக் கொண்டு போய் அந்த ஐந்து தமிழர் மீது போதைப் பொருள் கடத்தியதாக பொய் வழக்குப் போட்டு சிறையில் அடைத்து வைத்திருந்தனர். இப்பொழுது அவர்களது உயர் நீதிமன்றம் இந்த ஐந்து பேருக்கும் தூக்கு தண்டனை விதித்திருக்கிறது.


இந்த அநீதியைக் கண்டித்து, இன்று (31.10.2014) வெள்ளிக்கிழமை - காலை 10 மணிக்கு, பல்வேறு கட்சி - இயக்கங்கள் உறுப்பு வகிக்கும் தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில் சிங்களத் தூரகத்தை அகற்றக் கோரி முற்றுகைப் போராட்டம் நடைபெற்றது.
போராட்டத்தை தமிழக வாழ்வுரிமை கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் பண்ரூட்டி திரு. தி. வேல்முருகன் அவர்கள் ஒங்கிணைத்தார்.

புரட்சி பாரதம் கட்சி தலைவர் திரு. ஜெகன்மூர்த்தி, தமிழ்த் தேசியப் பேரியக்க தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழக பொதுச் செயலாளர் தோழர் விடுதலை ராசேந்திரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத் தோழர் தியாகு, தமிழர் முன்னேற்றப்படைத் தலைவர் தமிழினி கி.வீரலட்சுமி, தந்தைப் பெரியார் திராவிடர் கழக மண்டல அமைப்பாளர் தோழர் கரு.அண்ணாமலை, மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி உள்ளிட்ட பல்வேறு கட்சி, இயக்கங்களைச் சேர்ந்த தலைவர்கள், தோழர்கள் 300க்கும் மேற்பட்டவர்கள் கைதாயினர்.

கொடுங்கோலன் இராசபட்சேயின் உருவபொம்மை தீயிட்டு கொளுத்தப்பட்டது.

”விடுதலை செய், விடுதலை செய் அப்பாவி மீனவர்களை உடனடியாக விடுதலை செய்”, ”மோடி அரசே, இலங்கையுடன் கூடிக் குலவாதே” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

தமிழ்த் தேசிய பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் உள்ளிட்ட திரளான தமிழ்த் தேசியப் பேரியக்க தோழர்கள் கலந்து கொண்டு கைதாகியுள்ளனர்.

கைதாகியுள்ள தோழர்கள் தற்போது நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் திருமண மண்டபம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.





தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் - தமிழர் தாயக நாள் உரைவீச்சு!


1956ஆம் ஆண்டு நவம்பர் 1 அன்று, தமிழ்நாடு மொழிவழி மாநிலமாக உருவாக்கப்பட்ட நாள்.
இந்நாளையொட்டி 'தமிழர் தாயக நாள்' என்ற தலைப்பில்,

தோழர் பெ.மணியரசன்

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர்
கண்ணோட்டம் இணைய இதழுக்கு வழங்கிய சிறப்பு செவ்வி!

தமிழர் தாயக நாள் உரைவீச்சு!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT