உடனடிச்செய்திகள்

Wednesday, April 20, 2016

புளியங்குடியில் தமிழ்த் தேசியப் பேரியக்க கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்!



புளியங்குடியில் தமிழ்த் தேசியப் பேரியக்க
கொள்கை விளக்கப் பொதுக் கூட்டம்!



தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், நெல்லை மாவட்டம் - புளியங்குடியில் 17.04.2016 அன்று மாலை, “கொள்கை விளக்கப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது
.
புளியங்குடி சாலைக்கிணறு கே.வி.கே. சாமி திடலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, அய்யாபுரம் வட்டாரப் பொறுப்பாளர் தோழர் ச. முத்துப்பாண்டியன் தலைமை தாங்கினார். பேரியக்கத்தின் புளியங்குடி நகரச் செயலாளர் தோழர் இசக்கி ஆடும் பெருமாள், இராயகிரி செயலாளர் தோழர் தா. சொக்கையாப்பாண்டியன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு, பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு. தமிழ்மணி, தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, இராயகிரி துணைச் செயலாளர் தோழர் இசக்கி, மகளிர் ஆயம் பொறுப்பாளர் தோழர் மு. துரைச்சி உள்ளிட்டோர் உரையாற்றினர்.

கூட்டத்தின் நிறைவில், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புரையாற்றினார். தமது பேச்சில், நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் அமைந்துள்ள தேர்தல் அரசியல் கட்சிகளின் கொள்கைகளற்ற கூட்டணி குறித்தும், தமிழ்நாட்டின் உரிமைச் சிக்கல்களான காவிரி உரிமை - முல்லைப் பெரியாறு அணை உரிமை - செண்பகவல்லி அணை உரிமை, மீனவர் சிக்கல், கச்சத்தீவு மீட்பு உள்ளிட்ட சிக்கல்களை தேர்தல் கட்சிகளால் தீர்க்க முடியவில்லை என்றும், தமிழ்நாட்டு அரசிற்கு இறையாண்மை அதிகாரம் இருந்தால் மட்டுமே இச்சிக்கல்களுக்குத் தீர்வு கிடைக்கும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. பாண்டியன் நன்றி கூறினார்.

  

“அம்மா அரிசியும் அல்ல மோடி அரிசியும் அல்ல” உழவர் அரிசி..! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கருத்து!

“அம்மா அரிசியும் அல்ல மோடி அரிசியும் அல்ல” உழவர் அரிசி..! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கருத்து!


தேர்தல் சந்தை களைகட்டி விட்டது. ஐந்தாண்டுக்கு ஒரு தடவை கூடும் பெரும் சந்தை என்பதால் அழுகிப் போன சரக்குகளை விற்க அதிகமாக கூச்சலிடுகின்றன அரசியல் கட்சிகள்!


அண்மையில், பாரதிய சனதாக் கட்சியைச் சேர்ந்த நடுவண் அமைச்சர் பிரகாசு சவடேகர், “தமிழ்நாட்டில் இலவச அரிசியை “அம்மா அரிசி” என்று அ.இ.அ.தி.மு.க. கூறுகிறது; அது உண்மையில் நரேந்திர மோடி அரசி - தலைமையமைச்சர் அரிசி” என்று சொன்னார்.

“தமிழ்நாடு அரசு வழங்கும் இலவச அரிசியில் ஒரு கிலோவிற்கு 32 ரூபாய் மானியம் நடுவண் அரசு வழங்குகிறது; தமிழ்நாடு அரசு கிலோவிற்கு 3 ருபாய் மட்டும்தான் வழங்குகிறது. அந்த 3 ரூபாயும் அம்மா ஸ்டிக்கர் ஒட்டவே சரியாகி விடுகிறது“ என்றார்.

சவடேகர் சொன்ன புள்ளி விவரம் சரியா தவறா என்பது ஒருபக்கம் இருக்கட்டும். உண்மையில், உழவர்கள் வயிற்றில் அடித்துதான் நெல் விலையை மிகவும் குறைவாக நிர்ணயித்து, கொள்முதல் செய்கின்றனர் ஆட்சியாளர்கள். இலாப விலை என்பதே இல்லாமல், “கட்டுப்படியான விலை” என்று ஒரு பெயர் சூட்டிக் கொண்டு, உழவர்களின் உழைப்பை சுரண்டுகிறார்கள்.

இதனால், கடனாளியாகி கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் தன்மானச் சிக்கலில் மாட்டி, உழவர்கள் பலர் தற்கொலை செய்து கொண்டார்கள். உண்மையில், “உழவர் அரிசி” என்று பெயர் சூட்டினால் அது பொருத்தமாக இருக்கும்.

நடுவண் அரசு கொடுக்கும் மானியம் என்பது, நடுவண் அரசு வேறு எங்கோ பொருள் ஈட்டி, அதிலிருந்து தருமமாகத் தமிழ்நாட்டிற்குத் தருவதன்று! பல்வேறு வகையான வரிகள் மூலம் ஓராண்டுக்கு தமிழ்நாட்டிலிருந்து 80,000 கோடி ரூபாய் எடுத்துச் செல்கிறது நடுவண் அரசு. அதில், ஒரு சிறு தொகையை திருப்பித் தரும்போது, அதற்கு “மானியம்” என்ற பெயரை காலனிய ஆதிக்க மனப்பான்மையுடன் சூட்டிக் கொள்கிறது இந்திய அரசு!

அரசியல் சந்தைப் போட்டியில் கூச்சலிடும் தமிழ்நாட்டுக் கட்சிகள், இந்த உண்மைகளை வெளிப்படுத்த முன் வருவதில்லை. இவை தங்களுக்குள் ஒன்றையொன்று குற்றம் சாட்டுவதிலேயே முனைப்பு காட்டுகின்றன. விழிப்புணர்வுள்ள தமிழ்நாட்டு இளைஞர்கள் இந்த உண்மைகளை மக்களிடம் எடுத்துச் செல்ல வேண்டும்.
  

Tuesday, April 12, 2016

மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் நுழைவுத் தேர்வை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தமிழ்நாடு அரசு மறு ஆய்வு மனு செய்ய வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!




மருத்துவ மாணவர் சேர்க்கைக்கு மீண்டும் நுழைவுத்

தேர்வை அனுமதிக்கும் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து

தமிழ்நாடு அரசு மறு ஆய்வு மனு செய்ய வேண்டும்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

மருத்துவக் கல்வி (எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ்., எம்.டி., எம்.எஸ்.) மாணவர் சேர்க்கைக்கு அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு (National Eligibility Cum Entrance Test – NEET) நடத்தும் சட்டத்தை 2013ஆம் ஆண்டு, அப்போதைய உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி அல்சமத் கபீர் தலைமையில் அமைந்த மூன்று நீதிபதிகளைக் கொண்ட உச்ச நீதிமன்ற அமர்வு தள்ளுபடி செய்தது.

ஆனால், 11.04.2016 அன்று நீதிபதி அனில் ஆர். தவே, ஏ.கே. டிக்கிரி, ஆர்.கே. அகர்வால், ஏ.கே. கோயல், ஆர். பானுமதி ஆகிய ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு 2013 தீர்ப்பை திரும்பப் பெற்றுக் கொண்டு விட்டதாகவும், மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கைக்கு அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு நடத்தத் தடையில்லை என்றும் இடைக்காலத் தீர்ப்பு வழங்கியுள்ளது.
அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வை மீண்டும் கொண்டு வருவதற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு கூறியிருக்கும் காரணம், தனியார் மருத்துவக் கல்லூரிகள் கோடிக்கணக்கில் பணம் வாங்கிக் கொண்டு, தகுதியற்ற மாணவர்களை சேர்க்கிறார்கள் என்பதாகும். இந்தச் சீரழிவைத் தடுப்பதற்கு மாநில உரிமையைப் பறிக்காமல் புதிய வழிகாட்டும் நெறிகளை உச்ச நீதிமன்றம் கூறியிருந்தால் நாம் வரவேற்கலாம்.
விரிவான முழுத் தீர்ப்பு முறையாக விவாதிக்கப்பட்டு பின்னர் வெளியிடப்படும் என்று ஐந்து நீதிபதி அமர்வு கூறியிருக்கிறது.
மருத்துவக் கல்வி மாநில அரசின் அதிகாரப்பட்டியில் இருக்கும் போது, அதற்கான மாணவர் சேர்க்கை மட்டும் நடுவண் அரசால் அனைத்திந்திய அளவில் நடத்தப்படுவது மாநில உரிமைப் பறிப்பு ஆகும்.
அடுத்து, கிராமப்புற மாணவர்களும், முதல் தலைமுறையாகக் கல்வி கற்க வரும் தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட வகுப்பு மாணவர்களும் நுழைவுத் தேர்வில் பாதிக்கப்படுவார்கள் என்பதற்காகத்தான் நுழைவுத் தேர்வு நீக்கப்பட வேண்டும் என்று தமிழ்நாட்டிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் நுழைவுத் தேர்வுக்கு எதிர்ப்புக் குரல் எழுந்தது. அதன்பிறகு, உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்குகளில், மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2 நீதிபதிகளின் பெரும்பான்மைக் கருத்து அடிப்படையில் பொது நுழைவுத் தேர்வை நீக்கி தீர்ப்பு வழங்கியது.
இப்பொழுது, ஐந்து நீதிபதிகளும் இவ்வழக்கை முழுமையாக விவாதிக்காமல் அனைத்திந்தியப் பொது நுழைவுத் தேர்வு பற்றிய தங்களின் பொதுவான கருத்தொற்றுமை அடிப்படையில், இடைக்காலத் தீர்ப்பு வழங்கி பொது நுழைவுத் தேர்வு நடத்தலாம் என்று கூறியிருப்பது உச்ச நீதிமன்றம் நீதி நெறிமுறையைப் பின்பற்றுகிறதா என்ற வினாவை எழுப்பியுள்ளது. இது, ஒரு தன்னோக்குவாத தீர்ப்பாகவே உள்ளது.
மாநில உரிமைக்கும் சமூகநீதிக்கும் எதிராகவுள்ள இத்தீர்ப்பை மறு ஆய்வு செய்ய வேண்டுமென்று தமிழ்நாடு அரசு உடனடியாக உச்ச நீதிமன்றத்தில் மனு செய்ய வேண்டும். அத்துடன், தமிழ்நாட்டில் அந்நுழைவுத் தேர்வை அனுமதிக்காமல் மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT