தோழர் பே. கல்யாணசுந்தரம் (பி.கே.) அவர்கட்கு
வீரவணக்கம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!
என்னுடைய அன்புத் தோழர் செந்தலை பே. கல்யாணசுந்தரம் அவர்கள், இன்று (25.10.2026) விடியற்காலை 1 மணியளவில், இயற்கை எய்தினார் என்ற துயரச் செய்தியை அவருடைய அன்பு இளைய மகளும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான க. செம்மலர் சொன்னார். அகவை மூப்பின் காரணமாக – உடல்நலம் குறைந்து படுக்கையில் இருந்து, காலமானாலும் தோழர் கல்யாணியின் – தோழர் பி.கே.யின் இறப்பு திடீர் அதிர்ச்சியைத் தந்தது.
சி.பி.எம். கட்சியில் நான் செயல்படும்போது, திருவையாறு வட்டம் செந்தலையில், வாயில் சுருட்டு, காலில் கட் ஷூ, ஜிப்பா சட்டை, எடுப்பான மீசை, நேர் வகிடு இவற்றுடன் ஒரு மைனர் போலவே எனக்குத் தோற்றமளித்தார், கல்யாணசுந்தரம்! அவர் தந்தையார் செந்தலை ஊராட்சி மன்றத் தலைவர்; நில உடைமையாளர்; நாங்களோ சி.பி.எம். கட்சியில் உழவுத் தொழிலாளிகள் கூலி உயர்வுக் கோரிக்கை, வேலை நிறுத்தப் போராட்டங்களை நடத்திக் கொண்டிருக்கிறோம். கூலித் தொழிலாளிகள் பெரிதும் பட்டியல் வகுப்பு மக்கள்! பிற்படுத்தப்பட்ட வகுப்பு மக்கள் எதிர் பட்டியல் வகுப்பு மக்கள் போராட்டமாகக் கூலிப் போராட்டங்கள் மாறின.
அடர்த்தியான – சமூகச் செல்வாக்குமிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பு எதிர் பட்டியல் வகுப்பார் போராட்டமாக மாறிய அந்தக் கூலி உயர்வுப் போராட்டங்களை ஆதரித்துக் களத்தில் போராடும் பொதுவுடைமை யாளராக தோழர் கல்யாணசுந்தரம் வந்து சேர்ந்தார். எங்களுக்குத் தலைமை தாங்கியவர் சி.பி.எம். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் ஈகி ந. வெங்கடாசலம் அவர்கள்!
அப்போதிருந்து கடைசி மூச்சு வரை மனித சமத்துவத்திற்குப் போராடியவர் கல்யாணசுந்தரம்! சிறைக்கு அஞ்சாதவர். பொது அரசியல் வாழ்க்கையால் – தனிப்பட்ட வறுமைகளைச் சுமந்தார். தோழர் கல்யாணசுந்தரம் வாழ்க்கை இணையர் சிலப்பதிகாரம் (செம்மலர் அம்மா) பண்பின் சிகரம்! குடும்ப வறுமையை வெளியில் காட்டிக் கொள்ளாமல், தோழர்களை அன்புடன் உபசரித்து உணவு பரிமாறுவார்!
கடந்த 17.10.2026 அன்றுதான், பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, பழ. இராசேந்திரன் உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள், படுக்கையிலிருந்த தோழர் பி.கே.வை நேரில் சந்தித்து நலம் விசாரித்து விட்டு வந்தனர். அதற்குள் இப்படியொரு துயரம்! நானும் எனது உடல்நலக்குறைவுக்காக கிருட்டிணகிரி நல்லார் சித்த மருத்துவமனையில், சித்த மருத்துவ சிகிச்சைப் பெற்று வருகிறேன்.
காலமான பின்னும், தன் உடல் மருத்துவ மாணவர்கள் ஆய்வுக்குப் பயன்பட வேண்டும் எனத் தஞ்சை மருத்துவக் கல்லூரிக்கு ஒப்படைத்துள்ளார் தோழர் கல்யாணசுந்தரம்!
தன்னலமற்ற பொதுவான இலட்சிய வாழ்வுக்கு உரிய – சிறந்த எடுத்துக்காட்டாய் வாழ்ந்த தோழர் பே. கல்யாணசுந்தரம் அவர்கட்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கம்!
கருத்துகள்