உடனடிச்செய்திகள்

Latest Post

Friday, November 2, 2018

தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் நியூஜெர்சியில் கருத்தரங்கு - கலந்துரையாடல்!

ஐயா பெ. மணியரசன் அவர்களுடன்.. நியூஜெர்சியில் கருத்தரங்கு - கலந்துரையாடல்!
 “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” என்ற தலைப்பில், வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வட அமெரிக்கத் தமிழர்கள் (NAT) அமைப்பு நியூஜெர்சி மாகாணத்தின் ஜெர்சி மாநகரத்தில் நடத்திய கருத்தரங்கில் “தமிழ்த்தேசிய வரலாறு - தமிழ்த்தேசியத்தின் அவசியம் மற்றும் தமிழ்த்தேசியத்திற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டியவை?” என்பது குறித்து 31.10.2018 அன்றிரவு கலந்துரையாடல் நடைபெற்றது.
ஐயா பெ. மணியரசன் உரை நிகழ்த்திய பிறகு கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்வில், திரு. இராபர்ட் அருண் ஜேம்ஸ் (Robert Arun James ) அவர்கள் எழுதிய “அவதாரம்” என்ற கவிதைத் தொகுப்பை ஐயா மணியரசன் வெளியிட, நியூஜெர்சியில் குமாரசுவாமி தமிழ்ப் பள்ளி நடத்தி வரும் திரு. இராஜா இளங்கோவன் (Raja Elangovan ) பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தமிழக இளைஞர்கள் நடத்தி வரும் தமிழ்த்தேசிய அறிவுசார் அமைப்பான Tamilri.com வெளியிட்ட பல்வேறு ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பை ஐயா மணியரசன் பெற்றுக்கொண்டார்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, October 26, 2018

“பறிபோகும் தமிழர் தாயகம்” மிசொரியில் கருத்தரங்கம்!

“பறிபோகும் தமிழர் தாயகம்” மிசொரியில் கருத்தரங்கம்!
“தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” என்ற தலைப்பில், வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
இதன் முதல் கூட்டமாக, அக்டோபர் 26 அன்று மாலை அமெரிக்க நேரடிப்படி மாலை 7 மணியளவில், மிசோரி - செயிண்ட் லூயிஸ் பால்வின் பாயிண்ட் அரங்கில் “பறிபோகும் தமிழர் தாயகம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. “வட அமெரிக்கத் தமிழர்கள்” North American Tamils இக்கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளனர். கூட்டம் குறித்த தொடர்புகளுக்கு +1.314.422.3370 என்ற எண்ணை அழைக்கவும்!
 
இந்நிகழ்வில், அமெரிக்க வாழ் தமிழின உணர்வாளர்கள் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com


Thursday, October 25, 2018

“தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” வட அமெரிக்க மண்ணில் – தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் பங்கேற்கும் தொடர் கூட்டங்கள்!

“தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” வட அமெரிக்க மண்ணில் – தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் பங்கேற்கும் தொடர் கூட்டங்கள்!
“தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” என்ற தலைப்பில், வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
வாசிங்டன், செயின்ட் லூயிஸ், மின்னாபோலிஸ், நேவார்க், சைரக்கஸ், நியூ ஜெர்சி, வட கரோலினா, அட்லாண்டா, சியாட்டில், டல்லஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் இக்கூட்டங்களை “வட அமெரிக்கத் தமிழர்கள்” North American Tamils ஒருங்கிணைத்துள்ளனர். நவம்பர் 3 அன்று நியூ ஜெர்சியில் நடைபெறும் “இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்” 41ஆவது ஆண்டு விழாவில் ஐயா பெ. மணியரசன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
 
அக்டோபர் 22 அன்று நள்ளிரவு, சென்னை மீனம்பாக்கம் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட தோழர் பெ. மணியரசன் அவர்களை, பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் ம. இலட்சுமி, க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன், சென்னை விமான நிலையப் ப்ரீபெய்டு டாக்சி ஓட்டுநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் தோழர் மா.வே. சுகுமார், தோழர்கள் வி. கோவேந்தன், மு. பொன்மணிகண்டன், இராகுல்பாபு உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Wednesday, October 10, 2018

நக்கீரன் கோபால் கைது : தண்டனைச் சட்டத்திலிருந்து 124, 124A பிரிவுகளை நீக்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

நக்கீரன் கோபால் கைது : தண்டனைச் சட்டத்திலிருந்து 124, 124A பிரிவுகளை நீக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை! 
“நக்கீரன்” இதழாசிரியர் திரு. கோபால் அவர்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் காவல்துறையில் குற்ற மனு கொடுத்து, இந்தியத் தண்டனைச் சட்டம் 124இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை சென்னை மாநகர்க் காவல்துறை தளைப்படுத்திய அடாத செயல் போல் இதற்கு முன் எந்த ஆளுநரும் இந்தியாவில் செய்ததில்லை என்று பலரும் கருத்துக் கூறியுள்ளனர்.
 
தமிழ்நாடு ஆளுநரின் அடாத செயலையும், அதைத் தலைமேல் கொண்டு களத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசின் குற்றேவல் கொடுங்கோன்மையையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
இதழியல் துறையின் உரிமைப் பறிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசின் குற்றேவல் கொடுங்கோன்மையைத் தடுத்திட உடனடியாகக் களத்தில் இறங்கி எழும்பூர் நீதிமன்றத்தில் வாதாடிய இந்து வெளியீட்டுக் குழுமத்தின் தலைவர் திரு. என். இராம் அவர்களின் சனநாயகக் காப்பு நடவடிக்கையைப் பாராட்டுகிறேன்.
 
இந்து, ஆனந்த விகடன், தினமலர், தினகரன், டெக்கான் க்ரானிக்கல், டைம்ஸ் ஆப் இந்தியா ஏடுகள் மற்றும் புதிய தலைமுறை, நியூஸ்18 தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் கண்டனக் கூட்டறிக்கை வெளியிட்டதற்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மாணவிகளைத் தவறான திசைக்கு அழைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவிக்கும் தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கும் இடையே தொடர்புகள் இருந்ததாக “நக்கீரன்” இதழ், கடந்த ஏப்ரல் மாதம் படங்களுடன் கட்டுரை வெளியிட்டது என்பதுதான் அரசுத் தரப்பில் கூறியுள்ள குற்றச்சாட்டு! இதற்குத்தான் இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) பிரிவு 124-இன் கீழ் வழக்குப் பதிந்து கோபாலை கைது செய்திருக்கிறார்கள்.
 
பிரித்தானியக் காலனி ஆட்சிக் காலத்தில், 1870ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 1898இல் திருத்தப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தில் 124 மற்றும் 124A பிரிவுகள் உருவாக்கப்பட்டன. 124 என்பது பிரித்தானியப் பேரரசி (Queen) மற்றும் பிரித்தானியாவின் இந்திய கவர்னர் ஜெனரல் ஆகியோரின் அதிகாரம் செயல்பட முடியாமல் தடுப்பவர்கள் மற்றும் அவர்களைத் தாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க உருவாக்கப்பட்ட தண்டனைப் பிரிவு. விடுதலை பெற்ற இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு இப்பிரிவில் உள்ள “பேரரசி” என்பதைக் குடியரசுத் தலைவர் என்றும், கவர்னர் ஜெனரல் என்பதை மாநில ஆளுநர் என்றும் திருத்திக் கொண்டார்கள்.
 
திருத்தப்பட்டாலும் இந்த 124இன்கீழ் யார் மீதும் இந்தியாவில் வழக்குப் போட்டதில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டு ஆளுநர் மாளிகை “பெரிய ஆராய்ச்சி” செய்து இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் போட்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் துச்சமாகத் தூக்கி எறிந்து விட்டு மாநில அரசின் அன்றாட நிர்வாக வேலைகளில் தலையிட்டு மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருவது நாடறிந்த செய்தி. இப்போது இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றிலும் குறுக்கே புகுந்து பொருந்தாத பிரிவுகளின் கீழ் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முனைத்திருப்பது, மக்களின் சனநாயக உரிமையைப் பறிப்பதில் அவர் இறங்குவதன் முன்னோட்டமாகும்.
 
பொதுவாக ஊடகங்களின் மீது வழக்குப் பதிவு செய்யும்போது அதன் ஆசிரியர் அல்லது வெளியீட்டாளர் அல்லது செய்தியாளர்கள் மீது வழக்குப்பதியப்படும். ஆனால், நக்கீரன் மீதான வழக்கில் அவ்வேடு முழுமையாக வெளிவரக் கூடாது என்ற கெடு நோக்கத்தில், அவ்வேட்டின் ஆசிரியர் தொடங்கி, துணை ஆசிரியர், செய்தியாளர்கள், உற்பத்தி மேலாளர்கள், விநியோகிஸ்தர்கள் வரை சற்றொப்ப 35 பேரின் பெயரைக் குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது! தமிழ்நாடு அரசு, இந்த வழக்கை முழுமையாகக் கைவிட வேண்டும்.
 
காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில் காலனிய ஆட்சியாளர்கள் போட்ட தண்டனைச் சட்டப்பிரிவுகள் 124, 124A போன்றவற்றை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக நீதித்துறையினரும் சட்ட வல்லுநர்களும் எழுப்பி வந்திருக்கிறார்கள். (அரசை விமர்சித்தாலே 124A - இன் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும்).
 
எனவே, இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து பிரிவுகள் 124, 124A இரண்டையும் நீக்குமாறு சனநாயக ஆற்றல்கள் இப்போது வலியுறுத்த வேண்டும்.
 
நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் மற்றும் இந்து என் இராம் ஆகியோரின் தர்க்கங்களைச் செவிமடுத்து, இவ்வழக்கில் 124 பிரிவு பொருந்தாது என்று கூறியதுடன் கோபால் அவர்களைச் சொந்தப் பிணையில் விடுதலை செய்த, எழும்பூர் 13ஆம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் அவர்களின் நீதிசார் நடவடிக்கை பாராட்டிற்குரியது!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Thursday, October 4, 2018

சுற்றுச்சூழல் காப்பாளரா மோடி? புத்தர் வேடம் மோடிக்குப் பொருந்தவில்லை! தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

சுற்றுச்சூழல் காப்பாளரா மோடி? புத்தர் வேடம் மோடிக்குப் பொருந்தவில்லை! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐ.நா. மன்றம் ஆண்டுதோறும் வழங்கும் “நிலவுலக வாகையர்” விருது (Champions of the Earth Award) இவ்வாண்டு இந்தியத் தலைமை அமைச்சா நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டேரஸ் நேற்று (03.10.2018) புதுதில்லியில் இவ்விருதினை நரேந்திர மோடிக்கு அளித்தார். அதே விழாவில், பிரான்சு குடியரசுத் தலைவர் இமானுவேல் மக்ரான் அவர்களுக்கும் “நிலவுலக வாகையர்” விருதை ஐ.நா. மன்றப் பொதுச் செயலாளர் வழங்கினார்.
 
விருதினைப் பெற்றுக் கொண்ட நரேந்திர மோடி, அவ்விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு பற்றி பேசியவை அனைத்தும் மிடாக் குடிகாரர் ஒருவர் மதுவிலக்கு பற்றி பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது!
 
இயற்கையை அன்னை என்றார்; நிலம், காடு, ஆறு – அத்தனையும் தெய்வம்; அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றார். அவற்றை சேதாரமில்லாமல், அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றார். எந்தத் தலைப்பு கொடுத்தாலும் அந்தத் தலைப்பில் வெளுத்து வாங்கும் மைக் மதன காமராசன்தான் மோடி!
 
“இயற்கை தாங்கக்கூடிய அளவில்தான் மனித நுகர்வு இருக்க வேண்டும். இல்லையேல் இயற்கை நம்மைத் தண்டித்து விடும்” என்று காந்தியடிகள் கூறிய அறிவுரையை மேற்கோள் காட்டி மோடி பேசினார்.
 
ஓ.என்.ஜி.சி. ஓநாய்களைக் கொண்டும், “வேதாந்தா” போன்ற பெருங்குழும வேட்டையாடிகளைக் கொண்டும் காவிரிப்படுகை விளை நிலங்களை – கடற்பகுதிகளை, வேதி மண்டலமாக்கி, நிலத்தடி நீரை நஞ்சாக்கி, “வளர்ச்சி” வாதம் பேசும் மோடி, இயற்கை தாங்கக் கூடிய அளவில்தான் மனித நுகர்வு இருக்க வேண்டும் என்று யாருக்கு உபதேசம் செய்கிறார்? மோடிதான் திருந்த வேண்டும்!
 
மரங்களைத் தெய்வமாக வணங்கும் மரபு நம் மரபு என்று பேசினார். தேவைப்படாத சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைக்காக பல்லாயிரக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தி, இயற்கையான காட்டை அழிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் மோடியின் பேச்சு எவ்வளவு “புனிதச் சொற்களை”ப் போர்த்திக் கொண்டுள்ளது! அந்த மரங்களையும் காட்டையும் காப்பாற்ற முன்வரும் எளிய மக்கள் மீது போர் தொடுக்குமாறு எடப்பாடி அரசை ஏவிவிட்டுள்ள மோடி போடும் புனித வேடம் “புல்லரிக்க”ச் செய்கிறது.
 
ஆறுகளும் தெய்வங்களாம்! மோடி அள்ளி வீசுகிறார் சொற்களை! கங்கையைத் தூய்மைப்படுத்துகிறதாம் மோடி அரசு! ஆனால், காவிரித்தாய் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுக்க என்னென்ன சூழ்ச்சிகளைச் செய்கிறது மோடி அரசு! உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தும் கூட அதிகாரமற்ற - ஓய்வு நேரப் பணியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது இதே மோடி அரசு!
 
வேளாண் நிலங்களுக்கு மண் நல அட்டைகள் (Soil Health Cards) 13 கோடி அளவிற்குக் கொடுத்திருப்பதாக “சாதனை”ப் பட்டியலை நீட்டுகிறார் மோடி!
 
தமிழ்நாட்டு விளை நிலங்களில் ஐட்ரோகார்பன் – நிலக்கரி எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டு விளை நிலங்களின் நெஞ்சைப் பிளந்து, கெய்ல் குழாய்களைப் புதைக்க வேண்டும்; பன்னாட்டுப் பெருங்குழும நிறுவனங்களின் ஆலைகள் அமைக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறது மோடி அரசு! வேளாண்மையை அழித்தும், ஆற்று நீரையும் ஊற்று நீரையும் உறிஞ்சி வறண்ட மண்ணாக்கியும், வளமான மண்ணை வாழ்நாள் நோயாளியாக்கியும் உள்ள மோடி அரசு, நில நல அட்டைகள் யாருக்கு வழங்கப் போகிறது?
 
இறுதியாக மோடி எக்காளமிடுகிறார் : “சுற்றுச்சூழல் தத்துவம் என்பது உலகத்தின் கட்டளை முழக்கமாக மாற வேண்டும். சுற்றுச்சூழல் தத்துவம், சுற்றுச்சூழல் மன உணர்ச்சியில் கால்பதித்திருக்க வேண்டுமே அன்றி அரசாங்க ஆணைகளைச் சார்ந்திருக்கக் கூடாது!”.
 
அடேயப்பா எத்தனை வீராவேசம்! எல்லாம் வேடம்! ஸ்டெர்லைட் ஆலையால் – சுற்றுச்சூழல் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு – நஞ்சாகி மனிதர்களுக்கு நோய்களும் இறப்புகளும் வந்தபின், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துக்குடியில் மக்கள் ஆண்டுக்கணக்கில் அறப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது 22.05.2018 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 உயிர்களைக் காவு கொண்டது மோடி – எடப்பாடி கூட்டணி! கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் சொல்லக் கூட அசூசைப்பட்டவர் மோடி! அவர் திருந்தி விட்டாரா என்ன?
 
அம்பானிகளின் – அதானிகளின் சுற்றுச்சூழல் அழிப்புகளை மூடி மறைக்கவே போதி மரப் புத்தர் போல் பேசுகிறார் மோடி!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, September 28, 2018

அருணாச்சலப்பிரதேச மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு! தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சட்டம் இல்லை?

அருணாச்சலப்பிரதேச மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு! தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சட்டம் இல்லை?
அருணாச்சலப்பிரதேச அரசு வேலை வாய்ப்புகளில் மண்ணின் மக்களுக்கே 80 சதவீதம் என அரசே ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடுகிறது!
 
தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கே தொழில் - வணிகம் - வேலை என சட்டம் இயற்றக் கோருவோம்!
“தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே!” என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கத்தோடு இணைவோம்! செயலாற்றுவோம்!
 
#வெளியார்
#தமிழ்த்தேசியம்
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

காசுமீரில் மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு! தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சட்டம் இல்லை?

காசுமீரில் மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு! தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சட்டம் இல்லை?
காசுமீருக்கு மண்ணின் மக்களுக்கு உரிமைகள் வழங்க இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியும், மாநில அரசும் சட்டங்களை இயற்றி, அத்தாயகத்தை வெளியார் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் நம் நிலை என்ன?
 
தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கே தொழில் - வணிகம் - வேலை என சட்டம் இயற்றக் கோருவோம்!
“தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே!” என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கத்தோடு இணைவோம்! செயலாற்றுவோம்!
 
#வெளியார்
#தமிழ்த்தேசியம்
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே!

தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே!பாலத்தீன மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் சிறுக சிறுக நடைபெற்ற யூதக் குடியேற்றங்கள், பாலத்தீனத் தாயகத்தை கேள்விக்கு உள்ளாக்கி, அம்மக்களை சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக்கியது.
 
மிகை எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் குடியேற்றத்திற்கு உள்ளாகியுள்ள நம் தமிழ்நாட்டுத் தாயகத்தின் எதிர்காலம் என்னாவது?
 
“தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே!” என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கத்தோடு இணைவோம்! செயலாற்றுவோம்!
 
#வெளியார்
#தமிழ்த்தேசியம்
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Tuesday, September 25, 2018

தஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந்தை நிறுத்தியது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்..!

தஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந்தை நிறுத்தியது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்..!
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைகோடி கிராமம் நண்டம்பட்டி. இந்த கிராமம் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களின் தொடக்கப் பகுதியாகும். நண்டம்பட்டியில் 150 குடும்பங்களும் அர்சுணம்பட்டியில் 75 குடும்பங்களும் வீமம்பட்டியில் 50 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
 
இந்த மூன்று ஊர் கிராம மக்களும் இளைஞர்களும் மாணவர்களும் கூலித் தொழிலாளிகளும், கட்டுமான ஆட்களும் வேலைக்கு திருச்சி, தஞ்சை செல்லும் நிலையில் நண்டம்பட்டி வழியாக இயங்கிய சிற்றுந்து (மினிபஸ்) நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
 
தஞ்சை மாவட்ட ஆட்சியரிடமும், வருவாய் வட்டாச்சியரிடமும் கோரிகை மனு கொடுத்தோம். எந்த பயனும் இல்லை! எனவே, மக்களின் அடிப்படை கோரிக்கை நிறைவேற்றிடாத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கினைக்கும் மக்கள் திரள் போராட்டம் வரும் 28.09.2018 அன்று

தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டி (சாணூரப்பட்டி) கடைவீதி - 28.09.2018 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகின்றது.
 
இப்போராட்டத்தில், ஊர் பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்க வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, September 24, 2018

கருணாஸ் கைது : அ.தி.மு.க. அரசின் வர்ணாசிரம (அ)தர்மம்! தோழர் பெ. மணியரசன்.

கருணாஸ் கைது : அ.தி.மு.க. அரசின் வர்ணாசிரம (அ)தர்மம்! தோழர் பெ. மணியரசன் - தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
கடந்த செப்டம்பர் 16 (2018) அன்று சென்னை வள்ளுவர் கோட்டத்தில் நடைபெற்ற ஓர் ஆர்ப்பாட்டத்தில் “முக்குலத்தோர் புலிப்படை” தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. கருணாஸ், வரம்பு மீறி பேசியதற்காக 20.09.2018 அன்று 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து, 23.09.2018 அன்று அவரைக் கைது செய்து வேலூர் சிறையில் அடைத்துள்ளார்கள்.
 
இவ்வழக்கில், இ.த.ச.வின் 307 - கொலை முயற்சி பிரிவை சேர்ப்பதற்கு எவ்வளவு குரூர மனம் படைத்திருக்க வேண்டும்! நல்லவேளை, எழும்பூர் நடுவர் மன்ற நீதிபதி அப்பிரிவை நீக்கிவிட்டார்.
 
ஆனால், பெண்களை இழிவுபடுத்திப் பேசிய வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் முன்பிணை வழங்க மறுத்த நிலையில் - மாதக் கணக்கில் பா.ச.க.வின் எஸ்.வி. சேகரை தமிழ்நாடு காவல்துறை தளைப்படுத்தாமல், ஒதுங்கிக் கொண்டதுடன் அவருக்கு பாதுகாப்பும் கொடுத்தது.
 
அடுத்து, பா.ச.க.வின் எச். இராசா அதே செப்டம்பர் 16 அன்று, புதுக்கோட்டை மாவட்டத்தில் பிள்ளையார் ஊர்வலத்தையொட்டி உயர் நீதிமன்றத்தை மிகக்கேவலமாக இழிவுபடுத்தியும், காவல் துறையினர் அனைவரும் பாதிரியார்களிடமும் முசுலீம்களிடமும் இலஞ்சம் வாங்குபவர்கள் என்று கேவலப்படுத்தியும் பேசியதுடன், உயர் நீதிமன்றத்தால் தடை செய்யப்பட்ட வீதி வழியே பிள்ளையார் ஊர்வலத்தை நடத்தி முடித்தார். அதன் மீது தமிழ்நாடு காவல்துறை வழக்குப்பதிவு செய்தும், இதுவரை இராசாவை தளைப்படுத்தவில்லை!
 
இந்து அறநிலையத்துறையில் பணியாற்றும் பெண்களின் கற்பு குறித்து இழிவாகப் பேசியதற்காக, அவர் மீது பல்வேறு காவல் நிலையங்களில் புகார் கொடுக்கப்பட்டு வழக்குகள் பதிவாகியிருக்கின்றன. ஆனால், எந்த வழக்கின் மீதும் இராசாவைக் கைது செய்யவில்லை. அவர் கலந்து கொள்ளும் பொது நிகழ்ச்சிகளுக்கு காவல்துறை கடுமையான பாதுகாப்பு கொடுத்து வருகிறது.
 
பிராமணர்கள் குற்றம் செய்தாலும், அவர்களுக்குத் தண்டனை வழங்கக் கூடாது என்ற மனநிலையில் பா.ச.க. நடுவண் ஆட்சியும், அதற்கு கங்காணி வேலை பார்க்கும் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியும் இருக்கின்றன என்பது வெளிப்படையாகத் தெரிகிறது.
 
“பூணூல் புனிதர்கள்” பூரித்துப் போகும் அளவுக்கு, சட்டத்தை வர்ணாசிரம தர்ம அடிப்படையில் செயல்படுத்துகிறது அ.தி.மு.க. ஆட்சி! எடப்பாடி அரசின், வர்ணாசிரம (அ)தர்மச் செயல்பாட்டை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
கருணாஸ் அத்துமீறி பேசியவற்றை நாம் ஆதரிக்கவில்லை. அதேவேளை, குற்றவியல் சட்டம் எச். இராசாவுக்குப் பொருந்தாது, “சூத்திர” வகுப்பைச் சேர்ந்த கருணாசுக்கும் அவர் உதவியாளருக்கும்தான் பொருந்தும் என்பதுபோல் தமிழ்நாடு அரசின் செயல்பாடு உள்ளது. தமிழர்கள் தங்களது தன்மானத்தையும், உரிமைகளையும் காக்க மிகவும் விழிப்புடன் செயல்பட வேண்டிய காலமிது!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Saturday, September 22, 2018

ஈகி ந. வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம்!

ஈகி ந. வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம்!

1970களில் தஞ்சை வட்டப் பகுதியில் அரசியல் தலைவராக விளங்கி, சாதி வெறிப் பிற்போக்கு சக்திகளால் படுகொலை செய்யப்பட்ட மனித உரிமைப் போராளி தோழர் ந. வெங்கடாசலம் அவர்களின் 41ஆம் ஆண்டு நினைவு நாள் நாளையொட்டி நேற்று (21.09.2018), அவரது நினைவிடத்தில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது.
 
ஈகி வெங்கடாசலம் அவர்கள், தஞ்சை வட்டப் பகுதிகளில் செல்வாக்கு மிக்க பிற்படுத்தப்பட்ட வகுப்பில் பிறந்திருந்தாலும், தீண்டாமை ஒழிப்பிற்காகவும், ஒடுக்கப்பட்ட மக்களின் உரிமைகளுக்காகவும் அவர் நடத்திய போராட்டங்கள் தனிச்சிறப்பானவை! அவர் 1977 செப்டம்பர் 21 ஆம் நாள் படுகொலை செய்யப்பட்டார்.
 
தீண்டாமை சாதி ஆதிக்க ஒழிப்பு - உழைக்கும் வர்க்கத்தின் உரிமைக்கான போராட்டம் - அரசியலில் உள்ள ஊழலை எதிர்த்துச் சமர்புரிவது - காவல்துறையின் அத்துமீறலை எதிர்த்துப் போராடுவது என நான்கு தளங்களில்போ பெரும் போராட்டங்களை முன்னெடுத்தவர் ஈகி வெங்கடாசலம் ஆவார்.
 
1970 - 71 ஆம் ஆண்டுகளில் உழவுத் தொழிலாளிகளுக்கு மிகக் குறைந்த கூலியே கொடுக்கப்பட்டது. நடவு நடும் பெண்களுக்கு மூன்று ரூபாய் கூலி, உழவு உழும் ஆண்களுக்கு 4 ரூபாய் கூலி. கூலி உயர்வு கேட்டு உழவுத் தொழிலாளர் வேலை நிறுத்தப் போராட்டம் செய்ய வழிகாட்டினார் ந.வெ. அவரது நினைவுகளைப் போற்றி, நன்றி செலுத்துவது மக்கள் கடமையாகும்!
 
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில், நேற்று (21.09.2018) தஞ்சை செங்கிப்பட்டியிலிருந்து இரு சக்கர ஊர்தியில் இராயமுண்டாம்பட்டியில் அமைந்துள்ள ஈகி ந.வெ. அவர்களின் நினைவிடம் நோக்கிப் பேரணியாகச் சென்றனர். அங்கு அவரது நினைவிடத்தில், தோழர் கி.வெ. அவர்கள் மலர் வளையம் வைத்து ஈகி வெங்கடாலசம் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினார். அதன்பின், ஈகி வெங்கடாலசம் அவர்களின் மனைவி திருமதி. லீலாவதி அவர்களை அவர்களது இல்லத்திற்குச் சென்று தோழர் கி.வெ. அவர்கள் சந்தித்து நலம் விசாரித்தார்.
 
நிகழ்வில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தென்னவன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், தோழர்கள் ரெ. கருணாநிதி, காமராசு, மணிகண்டன், ஆரோன், இரா.சு. முனியாண்டி, திருச்சி இனியன், தேவதாசு உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்று, ஈகி வெங்கடாசலம் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.
 
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT