உடனடிச்செய்திகள்

Tuesday, February 23, 2016

“ஏழுதமிழர் விடுதலை - உச்சநீதிமன்ற மறுப்பு தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூல் வெளியீடு ! பிப்ரவரி 28 அன்று சென்னையில் நடக்கிறது!


“ஏழுதமிழர் விடுதலை - உச்சநீதிமன்ற மறுப்பு தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூல் வெளியீடு !
பிப்ரவரி 28 அன்று சென்னையில் நடக்கிறது! 

தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப்படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்புபடுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்களின் விடுதலை குறித்தும், அதற்கு மறுப்புத் தெரிவித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பு குறித்தும், தமிழ்நாடு அரசின் அதிகாரங்கள் குறித்தும் சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் வெளியீட்டு விழா மற்றும் கருத்தரங்கம், பிப்ரவரி 28 (28.02.2016) அன்று, சென்னையில் நடைபெறுகின்றது. 

28.02.2016 அன்று மாலை 5.30 மணியளவில், சென்னை கே.கே. நகர் அண்ணா சாலையிலுள்ள சாலை மகா மகால் அரங்கத்தில் நடைபெறும் இந்நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் துணைப் பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி தலைமை ஏற்கிறார். திரு. செ. அருட்செல்வன் அண்ணல் தங்கோ, வடசென்னை த.தே.பே. செயலாளர் தோழர் பா.க. செந்தில்குமார் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். 

தமிழ்த் தேசியப் பேரியக்க சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன் வரவேற்புரையாற்றுகிறார். பாவலர்கள் முழுநிலவன், பிரகாசு பாரதி ஆகியோர், “தூக்கைத் தூக்கிலிடுவோம்” என்ற தலைப்பில் பாவீச்சு நிகழ்த்துகின்றனர். 

தமிழ்நாடு திரைப்பட இயக்குநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் இயக்குநர் திரு. ஆர்.கே. செல்வமணி, நூலை வெளியிட இயக்குநர் வெற்றிமாறன் முதற்படி பெற்றுக் கொள்கிறார். 

மரண தண்டனைக்கு எதிரான மக்கள் இயக்க ஒருங்கிணைப்பாளர் திரு. செல்வராஜ், இயக்குநர் வெற்றிவெல் சந்திரசேகர், தொழில் முனைவோர் திரு. தாரை. மு. திருஞானசம்பந்தம், தமிழின உணர்வாளர் புலவர் இரத்தினவேலவர், தொழிலாளர் சனநாயகப் பேரியக்கச் செயலாளர் திரு. நெடுமாறன், ஊடகவியலாளர் திரு. கார்டூனிஸ்ட் பாலா ஆகியோர் சிறப்புப் படி பெறுகின்றனர். 

தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் கருத்துரையாற்றுகிறார். சென்னை உயர் நீதிமன்ற வழங்கறிஞர் திரு. அஜய் கோஷ், பேரறிவாளன் தாயார் திருவாட்டி அற்புதம் அம்மையார் ஆகியோர் நூல் திறனாய்வுரையாற்றுகின்றனர். 

நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்புரை நிகழ்த்துகிறார்.

தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர், நிகழ்வை நெறிப்படுத்துகிறார். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன் நன்றி நவில்கிறார். 

இந்நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 

===================================== 
தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 
===================================== 
பேச: 7667077075, 9047162164 
=====================================
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
=====================================
ஊடகம்: www.kannotam.com 
===================================== 
இணையம்: tamizhdesiyam.com 
=====================================

Monday, February 22, 2016

பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒரு வாரம் நடத்துகிறது தர்மபுரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தீர்மானம்!பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம்  தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒரு வாரம் நடத்துகிறது தர்மபுரியில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் தீர்மானம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் ஏழாவது பொதுக்குழுவின் ஐந்தாவது கூட்டம், 2016 பிப்ரவரி 20 - 21 ஆகிய இரு நாட்கள் தர்மபுரியில் நடைபெற்றது. தர்மபுரி ரோட்டரி அரங்கில், பிப்ரவரி 20 அன்று காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேரியக்கக் கொடியை ஏற்றி வைத்து, பொதுக்குழுவுக்குத் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் தர்மபுரி செயலாளர் தோழர் விசயன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர்கள் கோ. மாரிமுத்து, அ. ஆனந்தன், குழ. பால்ராசு, ரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் செம்பரிதி, கவித்துவன், இராசாரகுநாதன், ஈரோடு இராசையா, புளியங்குடி க. பாண்டியன், திருச்செந்தூர் தமிழ்மணி, சிதம்பரம் எல்லாளன், பெண்ணாடம் கனகசபை, மதுரை மேரி, கோவை இராசேந்திரன், குடந்தை தீந்தமிழன், தஞ்சை லெ. இராமசாமி, புதுக்குடி காமராசு, திருத்துறைப்பூண்டி சிவவடிவேலு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

அண்மையில் காலமான ஜப்பானியத் தமிழறிஞர் நொபுரு கராசிமா, தமிழறிஞர் தமிழண்ணல், ஐயா. தேவாரம் மு. தனராசு, முனைவர் கரு.அழ. குணசேகரன், பேரியக்க மூத்த உறுப்பினர் தோழர் காதாட்டிப்பட்டி கணேசன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர் தாயார் திருவாட்டி வைரத்தம்மாள் ஆகியோர் மறைவுக்கு, கூட்டத்தின் தொடக்கத்தில் இரங்கல் தெரிவித்து, அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் - 1
============
பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஒரு வாரம் நடத்துகிறது
ஆர்.எஸ்.எஸ்ஸூம் அதன் அரசியல் பிரிவான பாரதிய சனதா கட்சியும் தங்களின் அரசியலுக்கு இதுவரை முதன்மைப்படுத்தி வந்த “இந்துத்துவா” முழக்கத்தை இப்போது பின்னுக்குத் தள்ளி “இந்தியத் தேசியம்” என்ற முழக்கத்தை முதன்மைப்படுத்துகின்றன.

இந்துத்துவா முழக்கத்தை முன்வைத்து, உ.பி. முசாபர் நகரில் முசுலிம் குடும்பங்களைத் தாக்கி அகதிகளாக வெளியேற்றினார்கள். மராட்டியத்தில் தபோல்கர், பன்சாரே, கர்நாடகத்தில் கல்புர்கி போன்ற மதச்சார்பற்ற பகுத்தறிவுச் சிந்தனையாளர்களைக் கொலை செய்தனர். உ.பி. தாத்ரியில் மாட்டுக்கறி சாப்பிட்டார்கள் என்பதாகச் சொல்லி ஒரு முசுலிம் பெரியவரைக் கொன்றார்கள். அக்குடும்பத்தினரையே தாக்கினார்கள்.

இப்படிப்பட்ட இந்துத்துவா வெறியாட்டப் படுகொலைகள் மற்றும் கலவரங்களுக்குப் பிறகு, பா.ச.க.வின் செல்வாக்கு வளர்வதற்கு மாறாக சரிந்து வருவதை தில்லி, பீகார் சட்டப் பேரவைத் தேர்தல் தோல்விகள் மூலம் உணர்ந்து கொண்ட ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமை, இந்துத்துவா முழக்கத்தை சற்றுப் பின்னுக்குத் தள்ளி இந்தியத் தேசியம் - “தேசப்பற்று” என்ற முழக்கங்களை முன்னுக்கு வைத்து வருகிறது.

அப்சல் குரு நினைவேந்தல் நிகழ்வைப் பயன்படுத்திக் கலகம் விளைவித்து, மாற்றுக் கருத்துகளை ஒடுக்கி, இந்தியாவில் தங்களின் ஒற்றை மேலாதிக்கத்தை நிலைநாட்ட ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. தலைமைகள் திட்டமிட்டுள்ளன.
அதன்படி அப்சல் குரு நினைவேந்தல் நிகழ்வில் இந்தியாவுக்கு எதிராகவும் பாகிஸ்தானுக்கு ஆதரவாகவும், காஷ்மீர் விடுதலை கோரியும் முழக்கங்கள் எழுப்பப்பட்டுள்ளன. யார் எழுப்பினர் என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை. ஆனால் அதற்காக சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர் சங்கத் தலைவர் கண்ணையா குமார் மீது தேசத்துரோகம் (124A) மற்றும் அரசியல் சதிக்குற்றம் (120B) ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்து, திகார் சிறையில் அடைத்துள்ளனர். கண்ணையா குமார், தாம் இம்முழக்கங்களை எழுப்பவில்லை என்று மறுக்கிறார். தில்லி காவல்துறை ஆணையர் பாசி கூட கண்ணையா இம்முழக்கங்களை எழுப்பினார் என்பதற்குச் சான்றுகள் இல்லை என்கிறார்.

அப்சல் குரு நினைவேந்தல் நிகழ்ந்த அன்றே, ஏ.பி.வி.பி. மாணவர்கள் நடுவண் அமைச்சரிடம் புகார் தெரிவித்தனர். உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் இதில், பாகிஸ்தான் உள்ளிட்ட சர்வதே சதி இருக்கிறது என்றார். கடும் நடவடிக்கைத் தேவை என்றார்.

ஆர்.எஸ்.எஸ். ஏற்பாடு செய்து அனுப்பிய ஆட்களே மேற்கண்ட முழக்கங்களை எழுப்பினர் என்று ஜே.என்.யு. மாணவர்களும் பேராசிரியர்களும் கூறுகிறார்கள்.

அடுத்து ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. கலகக்காரர்கள் நீதிமன்றத்தைக் கலவரக் களமாக மாற்றினர். வழக்கறிஞர்கள் - வழக்கறிஞர் சீருடையில் இருந்தோர் என ஒரு கும்பல், 15.02.2016 அன்று பாட்டியாலா நீதிமன்றத்துக்குக் காவல்துறையினரால் கண்ணையா குமார் அழைத்து வரப்பட்டபோது அவரைத் தாக்கினர். அதனை உச்ச நீதிமன்றம் கண்டித்தது. மறுபடி 17.02.2016 அன்று பாட்டியாலா நீதிமன்றம் அழைத்துவரப்பட்டபோது முற்பகலில் நீதிமன்றத்திற்குள் வைத்து கண்ணையாவைத் தாக்கினர். உச்ச நீதிமன்றம் உடனடியாக இந்தியாவின் மிகுபுகழ் பெற்ற வழக்கறிஞர்கள் குழுவை அனுப்பி கண்காணிக்கச் சொன்னது. அதன்பின்னர் - பிற்பகலில் பாட்டியாலா நீதிமன்றத்திற்குள் நேர் நிறுத்தப்பட்டபோது ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. குற்றக் கும்பல் கண்ணையா குமாரை மீண்டும் அடித்து நொறுக்கியது.
இந்த வன்முறை வெறியாட்டம் அனைத்தையும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. பேச்சாளர்கள் ஊடகங்களில் இந்தியத்தேசியம் - தேசப்பற்று என்ற சொற்களை உச்சரித்து ஞாயப்படுத்துகின்றனர். ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமைகள் இந்த வன்முறைகளைக் கண்டிக்கவில்லை.

மேற்கண்ட நடப்புகளை எல்லாம் தொகுத்துப் பார்க்கும்போது, நடுவண் அரசதிகாரத்தைப் பயன்படுத்தி அடுத்த மக்களவைத் தேர்தலுக்குள் இந்தியா முழுவதிலும் இந்தியத் தேசியம் - இந்துத்துவா முழக்கங்களை போதை போல் உருவாக்கிக் கிளப்பி மக்களிடையே அதனடிப்படையில் வன்முறைக் கலகங்களைக் கட்டவிழ்த்துவிட்டு, பெரும்பகுதி மக்களைத் தம்பக்கம் திருப்பிக் கொள்வது என்றும் அவ்வாறு பெரும்பகுதி மக்களைத் தம்பக்கம் திரட்டிக் கொள்ள முடியவில்லை என்றால் ஓயாத கலவரங்களை நடத்தி மக்களவைத் தேர்தல் நடத்தாமல் தள்ளி வைப்பது என்றும் ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமை திட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது.

அவர்கள் முன்வைக்கும் இந்துத்துவா - இந்து மக்களிடையே நிலவும் வர்ணாசிரம மேலாதிக்கத்தை - பார்ப்பனிய ஆதிக்கத்தை நீக்கி இந்து மக்கள் அனைவரையும் சம உரிமை படைத்த சகோதரர்களாக மாற்றும் நோக்கம் கொண்டதல்ல. மாறாக வர்ணாசிரம மேலாதிக்கத்தை இக்காலத்திற்கேற்ப புதுப்பித்துக் கொள்வதாகும். மக்களின் பேச்சு மொழியாக இல்லாத சமற்கிருதத்தைத் திணிப்பதிலிருந்தும் - நடுவண் அரசே சமற்கிருத வாரம் கடைபிடித்து, அதைப் பரப்புவதிலிருந்தும் அவர்களின் உள்நோக்கத்தை நாம் புரிந்து கொள்ளலாம்.

இந்துக் கோயில்கள் அனைத்திலும் இந்து மதத்தைச் சேர்ந்த அனைத்து சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற உரிமையை ஒடுக்கப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இந்து மக்களுக்கு மீட்டுத்தர ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. அதிகார பீடங்கள் முன்வரவில்லை. முன்வரப் போவதில்லை.

தமிழ்நாட்டில் உள்ள இந்துக் கோயில்களில் தேவாரம், திருவாசகம், ஆழ்வார் பாசுரங்கள் போன்ற தமிழ் மந்திரங்களைச் சொல்லியும் பாடியும் அர்ச்சனை செய்யலாம் என்ற தமிழ் மொழி உரிமைக்கு ஆர்.எஸ்.எஸ். - பா.ச.க. தலைமைகள் முன்முயற்சி எடுக்கப் போவதில்லை. மாறாக அவ்வாறான தமிழர் முயற்சிகளைத் தடுக்கவே அவை முன்வரும்.
ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. தலைமைகள் இப்போது முன்னுக்குத் தள்ளியுள்ள இந்தியத் தேசியம் - தேசபக்தி என்பவை சாரத்தில் அவர்களின் இந்துத்துவா முழக்கத்தின் அரசியல் வடிவங்களே! இந்துத்துவா மதவாதம் இல்லையெனில் இந்தியத்தேசியம் என்பதற்கான வேறு எந்தப் போலிக் காரணமும் இல்லை!

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியா ஒரு தேசம் - இந்தியன் என்ற தேசிய இனம் - இந்தியத் தேசியம் என்பனவற்றை ஏற்கவில்லை. இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 1 - “இந்தியா என்பது அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் கூறுகிறது. இந்தியா ஒரு தேசம் என்று எந்த இடத்திலும அது கூறவில்லை. அடுத்து, இந்தியக் குடியுரிமை பற்றி அது பேசுகிறதே தவிர, “இந்தியன்” என்ற தேசிய இனம் பற்றி பேசவில்லை! இந்தியன் என்றொரு தேசிய இனம்(Nationality) இருப்பதாக அது கூறவும் இல்லை.

இந்திய அரசமைப்புச் சட்டத்தை வழிபடுவதாகத் தலைமை அமைச்சர் நரேந்திர மோடி கூறிக் கொள்கிறார். இந்திய அரசமைப்புச் சட்டம் கூறாத இந்தியத் தேசியத்தை ஒரு வெறி முழக்கமாக அவர் தலைமை உருவாக்குவது ஏன்?
“இந்தியத் தேசியம் - தேசபக்தி” என்பதை ஒரு போதைபோல் ஏற்றி, வெறி உண்டாக்குவோர், தமிழர் - தமிழ்மொழி, தெலுங்கர், கன்னடர், மலையாளி, மராத்தி, வங்காளி, பஞ்சாபி, காஷ்மீரி, அசாமி போன்ற பல்வேறு தேசிய இனங்களின் இருப்பையும் வரலாற்றையும் அழிக்கிறார்கள் என்ற உண்மையை உணர வேண்டும்.

ஆர்.எஸ்.எஸ் - பா.ச.க. தலைமையோ அல்லது வேறு எந்தத் தலைமையோ இந்தியத் தேசிய வெறியைக் கிளப்பக் கிளப்ப, மேலே குறிப்பிட்ட - பல்வேறு தேசிய இனங்களின் மக்கள் - தங்கள் இன மொழி அடையாளங்களையும் வரலாற்றுப் பெருமிதங்களையும் தக்க வைத்துக் கொள்ள வீதிக்கு வருவார்கள்!

இந்தியத்தேசியம் தமிழ்நாட்டிற்கு என்ன செய்தது? தமிழினப் பாதுகாப்பிற்கு என்ன செய்தது? காவிரி உரிமையைப் பாதுகாத்ததா? கடல் உரிமையை பாதுகாத்ததா? கச்சத்தீவை பாதுகாத்ததா? முல்லைப் பெரியாறு அணை உரிமைச் சிக்கலைத் தீர்த்து வைத்ததா? பாலாற்று உரிமையைப் பாதுகாத்ததா? அண்டை நாட்டில் இலட்சக்கணக்கானத் தமிழர்கள் இனப்படுகொலை செய்யப்பட்ட போது தடுத்து நிறுத்தியதா? அந்த இனப்படுகொலையில் பங்கு கொண்டது.
கர்நாடகத்தில் கன்னட வெறியர்களால் தமிழர்கள் படுகொலை செய்யப்பட்ட போது - தாக்கப்பட்ட போது (1991), கேரளத்தில் தமிழர்கள் தாக்கப்பட்ட போது (2011), இந்தியா தலையிட்டு தடுத்து நிறுத்தியதா? பேருந்தில் பயணம் செய்த 20 தமிழர்களை இழுத்துக் கொண்டுபோய் ஆந்திராவில் கட்டிவைத்து சுட்டுக் கொன்ற போது, ஆந்திராவின் மீது இந்திய அரசு என்ன நடவடிக்கை எடுத்தது?

தமிழ்நாட்டு பெட்ரோலியத்தை எரிவளியை நிலக்கரியை எடுத்து காலி செய்து, தனது கருவூலத்தை நிரப்பிக் கொள்கிறது இந்திய அரசு! வெள்ளைக்காரன் போட்ட வரிகளைவிட, ஆயிரம் மடங்கு கூடுதல் வரிகளைப் போட்டு, ஆண்டுக்கு 80,000 கோடிக்கு மேல் தமிழ்நாட்டு வரிப்பணத்தை அள்ளிக் கொண்டு போகிறது இந்திய அரசு!

என்ன ஞாயத்திற்காக தமிழர்கள், வர்ணாசிரம இந்துத்துவா தேசியமான இந்தியத் தேசியத்தை ஏற்க வேண்டும்?

உலகில் முதலில் தோன்றிய செம்மொழியான தமிழ் நம் மொழி! முதலில் தோன்றிய நாகரிக இனம் தமிழினம்! அரப்பா - மொகஞ்சோதாரோ நாகரிகம் தமிழர் நாகரிகம்! இந்தியா முழுவதும் வாழ்ந்த தமிழினம் இப்போது தமிழ்நாட்டிற்குள் என்று சுருங்கிப் போய் உள்ளது. தமிழ்நாட்டிற்குள்ளும் வந்து தமிழ் மொழியை - தமிழர் இன அடையாளங்களை அழித்திட, இந்துத்துவா என்ற பெயரிலும், இந்தியத் தேசியம் என்ற பெயரிலும் வரும் அதிகாரக் கருத்தியலைத் தடுத்து தமிழினம் காப்போம்.

தமிழ் மக்களிடம் இச்செய்திகளை எடுத்துச் சொல்ல, 2016 - பிப்ரவரி 25லிருந்து மார்ச் 2ஆம் நாள் வரை, ஒரு வாரம் பா.ச.க. பாசிச எதிர்ப்புப் பரப்புரை இயக்கம் நடத்துவதென தர்மபுரியில் இன்று (21.02.2016) கூடியுள்ள இப்பொதுக்குழு ஒருமனதாக முடிவு செய்கிறது.

தீர்மானம் - 2
============
கெயில் குழாய்களை விளை நிலங்கள் வழியாக எடுத்துச் செல்லும் திட்டத்தைக் கைவிடுக!

இந்திய எரிவளி ஆணையம் (கெயில்) கொச்சியிலிருந்து பெங்களூருவுக்கு குழாய்கள் வழியாக எரிவளி (எரிவாயு) எடுத்துச் செல்லும் திட்டத்தின் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் வேளாண் விளை நிலங்களில் குழாய் பதிக்க முனைந்துள்ளது.

இத்திட்டம் கோவை, திருப்பூர், ஈரோடு, நாமக்கல், சேலம், தர்மபுரி, கிருட்டிணகிரி ஆகிய ஏழு மாவட்ட உழவர்களின் வாழ்வாதாரத்தைப் பறிக்கும் ஒன்றாகும். கொச்சியிலிருந்து கோவை வரை கேரளத்தில் இத்திட்டத்திற்கான கெயில் குழாய்கள் சுமார் 510 கிலோ மீட்டர் தொலைவுக்கு, நெடுஞ்சாலை ஓரங்கள், தொடர்வண்டிப் பாதை ஓரங்கள் வழியாக அமைக்கப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்கள் வழியாக இக்குழாய்களை எடுத்துச் செல்ல வேண்டும் என இந்திய அரசின் கெயில் நிறுவனம் பிடிவாதம் பிடிப்பது இந்திய அரசின் தமிழினப்பகைப் போக்கையே எடுத்துக்காட்டுகிறது.
இது குறித்த வழக்கில், கடந்த 01.02.2016இல் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு உழவர்களின் வாழ்வுரிமையை மட்டுமின்றி, மாநில அரசின் அதிகாரத்தைப் பறிப்பதாகவும் அமைந்துவிட்டது.

இந்திய அரசமைப்புச் சட்டம் அரசாங்க அதிகாரங்களை நடுவண் அரசுப் பட்டியல், மாநில அரசுப் பட்டியல், பொதுப் பட்டியல் என வகைப் பிரித்து வழங்கியிருக்கிறது. இதில் விளை நிலம் தொடர்பான அதிகாரம் முழுவதும் மாநில அதிகாரப் பட்டியலில் மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. மாநில அதிகாரப் பட்டியல் பிரிவு எண் 18இல், விளை நிலங்கள் குறித்த அனைத்து அதிகாரங்களும் மாநில அரசுக்கே வழங்கப்பட்டிருக்கிறது. வேளாண் நில உடைமையை வேறு பயன்பாட்டுக்கு மாற்றுவதற்கான அதிகாரம் மாநில அரசுக்கே உண்டு என அரசமைப்புச் சட்டம் உறுதி செய்கிறது.

இந்நிலையில், கெயில் நிறுவனக் கோரிக்கையை ஏற்றும், தமிழ்நாடு அரசு இத்திட்டத்திற்குப் போட்டத் தடையை நீக்கியும் உச்ச நீதிமன்றம் ஆணையிட்டிருப்பது அதிர்ச்சியளிக்கிறது. இத்தீர்ப்பைத் தொடர்ந்து தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியப் பிரதமருக்கு எழுதியுள்ள கடிதத்தில், விளை நிலங்கள் வழியாக குழாய் பதிக்கும் திட்டத்தை நெடுஞ்சாலை ஓரமாக எடுத்துச் செல்லும் வகையில் மாற்றியமைக்க வலியுறுத்தியுள்ளார்.

இதனை ஏற்று, ஏழு மாவட்டங்களின் விளை நிலங்கள் வழியாக கெயில் குழாய் எடுத்துச் செல்லும் திட்டத்தை கைவிட்டு, நெடுஞ்சாலை ஓரத்தில் குழாய்களை எடுத்துச் செல்லும் வகையில் மாற்றி அமைக்குமாறு கெயில் நிறுவனத்திற்கு இந்திய அரசு ஆணையிட வேண்டும் என்றும், ஏற்கெனவே விளை நிலங்களில் புதைக்கப்பட்டுள்ள கெயில் குழாய்களை அப்புறப்படுத்த வேண்டும் எனவும், தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு நடுவண் அரசை வலியுறுத்துகிறது.

உழவர்களின் கோரிக்கையை மதிக்காமல், கெயில் நிறுவனம் வேளாண் விளை நிலங்களில் குழாய்கள் பறிக்க முயன்றால், அதைத் தடுத்து நிறுத்த உழவர்களைத் திரட்டி போராட்டம் நடத்துவோம் என தமிழ்த் தேசியப் பேரியக்கம் எச்சரிக்கிறது.

தீர்மானம் - 3
============
சனவரி 25-ஐ தமிழ் மொழி நாளாக கடைபிடிக்க வலியுறுத்தி பரப்புரை இயக்கம் 1965ஆம் ஆண்டு, இந்தித் திணிப்பை எதிர்த்து தமிழ்நாட்டில் நடைபெற்ற மிகப்பெரும் தமிழ்த் தேசிய எழுச்சியான இந்தி எதிர்ப்புப் போராட்டத்தின் 50ஆம் ஆண்டு நிறைவையொட்டி, கடந்த 2016 சனவரி 24ஆம் நாள் மதுரையில், “மொழிப்போர்-50” மாநாட்டைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் நடத்தியது.

எழுச்சியோடு நடைபெற்ற அம்மாநாட்டில், மொழிப்போர் ஈகியர் நினைவைப் போற்றி சனவரி 25 அன்று நடத்தப்படும் வீரவணக்க நாளை தமிழ் மொழி நாள் என அறிவித்து கடைபிடிக்குமாறு வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஒவ்வொரு ஆண்டும் சனவரி 25 தொடங்கி ஒரு வாரம் முழுவதும், தமிழ் மொழி வாரமாக தமிழ்நாடு அரசு கடைபிடிக்க வேண்டும். ஆட்சி மொழியாக, கல்வி மொழியாக, நீதிமொழியாக தமிழ்மொழியை பயன்படுத்துவது குறித்து அவ்வாரம் முழுவதும் தொடர் பணிகளை தமிழ்நாடு அரசு மேற்கொள்ள வேண்டும்.

சனவரி 25ஐ தமிழ் மொழி நாளாக கடைபிடிக்க வேண்டும், மொழிப் போராட்ட வரலாற்றை பாடத்திட்டத்தில் சேர்க்க வேண்டும், மொழிப்போர் ஈகியருக்கு நினைவுச் சின்னங்கள் எழுப்புவதுடன் அவர்தம் குடும்பத்தினருக்கு வழங்கப்படும் உதவித்தொகையை உயர்த்த வேண்டும், தமிழைத் தமிழ்நாட்டின் முழு ஆட்சிமொழி ஆக்க வேண்டும், தமிழ் வளர்ச்சித் துறைக்குக் குற்ற நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் வழங்க வேண்டும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு அலுவலகங்கள் மற்றும் நிறுவனங்களில் தமிழே அலுவல் மொழியாக வேண்டும், இந்திய ஒன்றிய அரசில் தமிழ் அலுவல் மொழியாக வேண்டும், தமிழ்நாட்டில் தமிழே பயிற்று மொழியாக இருக்க வேண்டும், தமிழ்மொழியை அழிக்கும் முயற்சியாக ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகளை தமிழக அரசு பள்ளிகளில் தொடங்கியதைக் கைவிட வேண்டும், உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்கு மொழியாக வேண்டும், போராடிய வழக்கறிஞர்கள் மீதான நடவடிக்கையைக் கைவிட வேண்டும் ஆகிய 6 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

இத்தீர்மானங்களை விளக்கி, 2016 சூன் 15லிருந்து 21ஆம் நாள் வரை, தமிழ்நாடெங்கும் பரப்புரை இயக்கங்கள் நடத்துவதென இப்பொதுக்குழு தீர்மானிக்கிறது.

நாள் : 21.02.2016
இடம்: தர்மபுரி 
===================================== 
அறிக்கை வெளியீடு
===================================== 
தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 
===================================== 


நாள் : 21.02.2016
இடம்: தர்மபுரி 
===================================== 
அறிக்கை வெளியீடு
===================================== 
தலைமைச் செயலகம், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம் 
===================================== 
போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT