உடனடிச்செய்திகள்

Saturday, January 26, 2008

காவல்துறையினர் கொடுத்த பொய்ச் செய்திக்கு மறுப்பு

கோயம்பேட்டில் த.தே.பொ.க. தோழர்கள் மீது
காட்டுமிராண்டித் தனமாகத் தடியடி நடத்தியதை
மூடிமறைக்க காவல்துறையினர் கொடுத்த
பொய்ச் செய்திக்கு மறுப்பு
பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை
நேற்று(25-01-2008) மொழிப்போர் தியாகிகள் நாள் என்பதால், ஏற்கெனவே அறிவித்தபடி காலை 10 மணிக்கு தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள், அரசுப் பேருந்துகளில் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள 'அல்ட்ரா டீலக்ஸ்', 'எஸ்.இ.டி.சி' போன்ற எழுத்துக்களை சென்னை கோயம்பேட்டில் கருப்பு மைபூசி அழித்தார்கள். அப்போது அங்கு வந்த காவல்துறையினர் எந்த எச்சரிக்கையும் கொடுக்காமல் கண்மூடித்தனமாக தோழர்களை தடியால் அடித்து காயப்படுத்தினார்கள். இதில் 16 தோழர்கள் காயம்பட்டார்கள். அவர்களில் 9 பேருக்கு மிகக் கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளது. ஒரு தோழருக்கு இடது முன்கை எலும்பு முறிந்துவிட்டது. இவர்களில் 6 பேர் கீழ்ப்பாக்கம் அரசினர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுள்ளார்கள்.

காவல்துறையினரின் காட்டுமிராண்டித் தனமான தடியடியில் பாதிக்கப்பட்ட சென்னை க.பாலகுமரன் கோயம்பேட்டில் சட்டவிரோதமாக நடந்து கொண்டு, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்திய காவல்துறையினர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி சென்னை மாநகரக் காவல்துறை ஆணையர் அவர்களுக்கு புகார் மனு கொடுத்துள்ளார். அதன் நகல் இத்துடன் இணைக்கப்பட்டுள்ளது.

பேருந்துகளில் ஆங்கில எழுத்துக்களை அழித்த த.தே.பொ.க தோழர்களை பொதுமக்களும் பேருந்து ஊழியர்களும் தாக்கியதாக சென்னை மாநகரக் காவல்துறை அதிகாரிகள் சிலர் தவறான செய்தி கொடுத்து, காவல்துறை தாக்கியதை மூடி மறைத்துள்ளார்கள். காவல்துறை கொடுத்த அச்செய்தி உண்மையல்ல.

எனவே தாங்கள் ஆங்கில எழுத்துக்களை அழித்த த.தே.பொ.க. தோழர்களைத் தடியடி நடத்தி தாக்கிப் படுகாயப்படுத்தி எலும்பு முறிவையும் ஏற்படுத்தியவர்கள் காவல்துறையினரே என்ற உண்மைச் செய்தியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.




Friday, January 25, 2008

காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்

சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்துகளில் தமிழைப் புறக்கணித்து ஆங்கிலத்தில் எழுதியுள்ள எழுத்துக்களை தார்பூசி அழித்த தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் மீது காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமானத் தாக்குதல்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை



இன்று(25-01-2008), 1965 இந்தித் திணிப்பு எதிர்ப்பு போராட்ட நாள் என்ற வகையில், தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி தமிழ் மொழி காப்பதற்காக தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பு போக்கை கண்டிக்க அடையாளப் பூர்வமாக சென்னை கோயம்பேடு பேருந்து நிலையத்தில் தமிழக அரசின் பேருந்துகளில் எழுதியுள்ள ஆங்கில எழுத்துக்களை அழிக்கும் போராட்டத்தை நடத்தியது.









இப்;போராட்டத்திற்கு தமிழ்த்தேசப் பொவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.பத்மநாபன் தலைமை தாங்கினார். தமிழ் மொழியாக்கம் கூட இல்லாமல் ‘அல்ட்ரா டீலக்ஸ்’ என்றும் ‘எஸ்.இ.டி.சி’ என்றும் ஆங்கிலத்தில் எழுதப்பட்டுள்ள எழுத்துக்களை தோழர்கள் தார்பூசி அழித்தார்கள். அப்போது காவல்துறையினர் அங்கு வந்து தலைமை தாங்கிய தோழர் அ.பத்மநாபன், போராட்டத்தில் கலந்து கொண்ட தோழர்கள் வெற்றித்தமிழன், தனசேகர், சங்கர், மாரிமுத்து, நெய்வேலி பாலு, பெண்ணாடம் க.முருகன், பழனிவேல், பிந்துசாரன், க.காமராசு, செந்தில் ஆகியோரையும் மற்றவர்களையும் கடுமையாக தடியால் அடித்து துன்புறுத்தி இழிவாகப் பேசி அவமானப்படுத்தியுள்ளனர். குறிப்பாக காவல்துறையைச் சேர்ந்த தேன்தமிழ்வாணன் என்பவரும் அடையாளம் தெரிந்த இன்னொருவரும் கடுமையாக தடியால் அடித்துள்ளனர். இப்பொழுது (25-01-2008 பகல் 11.30 மணி) கைது செய்யப்பட்ட 16 பேரையும் கோயம்பேடு சந்தை பகுதியில் ஒரு கட்டடத்திற்குள் அடைத்து பூட்டி வைத்துள்ளார்கள். கைது செய்யப்பட்டவர்களின் உறவினர்களும், நண்பர்களும் பார்க்கப் போனதற்கு காவல்துறையினர் பார்க்க அனுமதிக்கவில்லை.






காவல்துறைக்கு முன்கூட்டியே அறிவித்துவிட்டு பல்லாயிரக்கணக்கில் துண்டறிக்கை, சுவரொட்டி, பதாகை மூலம் விளம்பரபடுத்திவிட்டு பத்திரிக்கைகளுக்கும் அறிக்கை கொடுத்து விட்டு நடந்த இப்போராட்டத்தில் காவல்துறையினர் காட்டுமிராண்டித்தனமாக நடந்து கொண்டது கடும் கண்டனத்திற்குரியது.




சட்டவிரோதமாகவும் சனநாயக விரோதமாகவும் நடந்து கொண்டு தாக்குதல் நடத்திய காவல்துறையினர் மீது தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

Thursday, January 10, 2008

இந்தி மற்றும் ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து போராட்டம்

இந்திய அரசின் இந்தித் திணிப்பையும்
தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பையும்
எதிர்த்து
மொழிப்போர் நாளில்
தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி போராட்டம்

நாள் : 25-01-07, வெள்ளி காலை 10 மணிக்கு

இந்தித் திணிப்பை எதிர்த்து

இடம் : தஞ்சைத் தலைமை அஞ்சலகம்
தலைமை : தோழர் பழ.இராசேந்திரன்,
தஞ்சை மாவட்ட செயலாளர், த.தே.பொ.க

ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து

இடம் : சென்னை கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம்
தலைமை : தோழர் அ.பத்மநாபன்,
தலைமைச் செயற்குழு, த.தே.பொ.க

          ஆறரைக் கோடி மக்கள் வாழும் தமிழ்நாட்டில் தமிழகத்தின் ஆட்சிமொழியாகிய தமிழை இந்திய அரசு வட்டார மொழி என்று கொச்சைப்படுத்துகிறது. தமிழைப் புறந்தள்ளி இந்தியை தேசிய மொழி என்று கூறி இங்கு திணிக்கிறது. தமிழ்நாட்டில் செயல்படும் அஞ்சல்துறை, தொடர்வண்டித் துறை, வங்கிகள், ஈட்டுறுதி (இன்சூரன்ஸ்) அலுவலகங்கள் மற்றுமுள்ள தில்லி அரசின் நிறுவனங்கள் அனைத்திலும் தமிழக மக்கள் பயன்படுத்தத் தமிழ்; மொழியை அலுவல் மொழியாக வைக்காமல், இந்தியையும் ஆங்கிலத்தையும் அலுவல் மொழியாக வைத்துள்ளது இந்திய அரசு. தமிழர்கள் தங்களைத் தாங்களே ஆண்டு கொள்ளவில்லை இன்னும் அயலார் ஆட்சியின் கீழ் தான் நீடிக்கிறார்கள் என்று உணர்த்துவதாக இந்நிலை உள்ளது.

            தமிழில் தந்தி கொடுக்க சில நகரங்களில் வசதி செய்வதாக சொன்னார்கள். தொடக்கத்திலிருந்தே அதைச் சரியாக செயல்படுத்தவில்லை. எந்திரம் பழுது என்றார்கள் அலுவலர்கள்;; தமிழில் கொடுத்தால் தந்தி தாமதமாகத்தான் போகும் என்றார்கள். இவ்வாறாகத் தமிழில் தந்தி கொடுப்பதை ஒழித்தார்கள்.

             உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்கு மொழியாகக் கொண்டுவர, இந்திய அரசு ஆணையிடக் கோரி அரசமைப்புச் சட்ட விதி 348(2)-இன் கீழ் தமிழக அரசு தில்லிக்கு முறையான கடிதம் அனுப்பியது. அவ்வாறு தமிழை வழக்கு மொழி ஆக்க முடியாது என்று மறுத்து நடுவண் அமைச்சரவை தமிழக அரசின் கடிதத்தைத் திருப்பி அனுப்பிவிட்டது.
 ஆனால் மத்தியப்பிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் உயர்நீதிமன்ற வழக்கு மொழியாக இந்தி ஏற்கப்பட்டுள்ளது.
 
                இப்பொழுது சென்னை உயர்நீதிமன்றம் உள்பட அனைத்து உயர்நீதி மன்றங்களும் இந்தியில் தீர்ப்புரை வழங்கிட ஆணையிடுவதற்குரிய முயற்சியில் இந்திய அரசு இறங்கியுள்ளது. இதற்காக நாடாளுமன்றக் குழுவின் பரிந்துரை பெற்றுள்ளது.
 இந்திய அரசு நிறுவனங்கள், இந்திய அரசின் திட்டங்கள் அனைத்தும் இந்தியில் தான் பெயர் சூட்டப் பெறுகின்றன. தொலைத்தொடர்புத் துறைக்கு பாரத் சஞ்சார் நிகம் லிமிடெட் (பி.எஸ்.என்.எல்) என்றும், "அனைவருக்கும் கல்வி" என்ற திட்டத்திற்கு சர்வ சிட்சா அபியான்(எஸ்.எஸ்.ஏ) என்றும் பெயர் சூட்டியுள்ளார்கள்.

 இந்தி படித்தால் வடநாட்டில் வேலை கிடைக்கும் என்றார்கள். இந்தி படித்த தமிழர்களுக்கு வடநாட்டில் வேலை கிடைக்கவில்லை. மாறாக, இந்திக்காரர்கள் தாம் தமிழ்நாட்டில் உள்ள தொடர்வண்டித்துறை, பி.எச்.இ.எல், பெட்ரோலியத்துறை போன்ற இந்திய அரசுத் துறைகளில் ஏராளமாக வேலையில் சேர்க்கப்பட்டுள்ளார்கள். அத்துடன், தனியார் தொழில் துறை, வணிகம், தெருவோர விற்பனை போன்றவற்றிலும் இங்கு இந்திக்காரர்கள் ஆக்கிரமித்து வருகிறார்கள். தமிழர்களுக்கு வடநாட்டில் வேலை கிடைக்காதது மட்டுமல்ல, வடநாட்டார் ஆதிக்கத்தால் தமிழ்நாட்டு வேலை வாய்ப்புகளும் பறிபோகின்றன. 

எனவே தீவிரப்படுத்தப்பட்டுள்ள இந்தித் திணிப்பை எதிர்ப்பதற்கு அடையாளமாக தஞ்சைத் தலைமை அஞ்சலகம், தொலைத் தொடர்பு அலுவலகம் ஆகியவற்றில் 25-1-2008 அன்று கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.
 
ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து

 மேற்கண்ட இந்தித்திணிப்பையும், இந்திக்காரர் ஆக்கிரமிப்பையும் எதிர்க்க மறுக்கும் தமிழக அரசு தனது அதிகாரத்துக்குட்பட்ட நிறுவனங்களில் ஆங்கிலத்தைத் திணித்துத் தமிழைப் புறந்தள்ளுகிறது. தமிழக அரசு கொண்டு வரும் திட்டங்களுக்கு முதலில் ஆங்கிலத்தில் பெயர் சூட்டுகிறார்கள். அதன் பிறகு தமிழிலும் பெயர் வைக்கிறார்கள். இதனால் அலுவலர்கள் மட்டத்தில் அத்திட்டம் ஆங்கிலப் பெயராலேயே அழைக்கப்படுகின்றது. திட்டங்களுக்கு ஆங்கிலத்தில் பெயர் சூட்டுவதை அடியோடு நிறுத்த வேண்டும்.

 தமிழக அரசு நடத்தும் போக்குவரத்துக் கழகங்களின் பேருந்துகளில், நிறுவனப் பெயரை ஆங்கிலத்திலேயே எழுதுகின்றனர். விரைவுப் பேருந்துகளில் எஸ்.இ.டி.சி என்றும், மற்ற பேருந்துகளில் டி.என்.எஸ்.டி.சி என்றும் எழுதியுள்ளார்கள். அதே போல் "அல்ட்ரா டீலக்ஸ்", "பாயிண்ட் டு பாயிண்ட்" என்று ஆங்கிலத்திலேயே எழுதியுள்ளார்கள். இப்பொழுது கணிப்பொறிகள் மூலம் நடத்துனர்கள் கொடுக்கும் பயணச்சீட்டுகள் ஆங்கிலத்திலேயே இருக்கின்றன.

தமிழ் ஆட்சிமொழிச் சட்டத்தில், விதிவிலக்கு என்ற பெயரில் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதற்கு விரிவாக உரிமை வழங்கப்பட்டுள்ளது. அதைத் திருத்தி தமிழ்நாட்டு அரசுத் துறைகளில் தமிழ் மட்டுமே அலுவல் மொழி என்ற நிலையை உருவாக்க வேண்டும்.
தமிழக அரசின் இரு மொழிக் கொள்கை ஆங்கிலத்திற்கே மேலாண்மை தருகிறது. இதனால் அன்றாடம் நம் தமிழ்மொழியை ஆங்கிலம் ஒடுக்கி உருக்குலைத்து வருகிறது.
ஆங்கிலத்தை ஒரு மொழிப்பாடமாகக் கற்பதை நாம் ஆதரிக்கிறோம். ஆனால் பயிற்றுமொழியாக (Medium), தமிழ் மட்டுமே இருக்க வேண்டும். தமிழ்நாட்டில் தமிழக அரசுத்துறை மற்றும் இந்திய அரசுத்துறை ஆகியவற்றில் எந்த விதிவிலக்கும் இல்லாமல் தமிழ் மட்டுமே அலுவல் மொழியாக செயல்பட வேண்டும். இது தான்  ஒருமொழிக் கொள்கை.
இந்தி, ஆங்கிலம், தமிழ் மூன்றையும் கல்விமொழியாகவும் அலுவல் மொழியாகவும் வைக்கக் கூறுகிறது காங்கிரசு, பா.ச.க. கட்சிகளின் மும்மொழிக் கொள்கை. ஆங்கிலம், தமிழ் இரண்டையும் கல்விமொழியாகவும், அலுவல்மொழியாகவும் வைக்கக் கூறுகிறது கழகங்களின் இருமொழிக்கொள்கை. இந்த இருமொழிக் கொள்கை இப்பொழுது இந்தித்திணிப்பை தனது மவுனத்தின் மூலம் ஏற்றுக் கொள்கிறது.
 
மும்மொழிக் கொள்கை மோசடிக் கொள்கை
இருமொழிக் கொள்கை ஏமாற்றுக் கொள்கை
ஒருமொழிக் கொள்கையே உரிமைக் கொள்கை

மொழிப் போர் நாளான 25-1-2007 அன்று தமிழக அரசின்  ஆங்கிலத் திணிப்பை எதிர்த்து, சென்னை கோயம்பேட்டில் அரசுப் பேருந்துகளில் எழுதப்பட்டுள்ள ஆங்கில எழுத்துகளைத் தார்பூசி அழிக்கும் போராட்டம் நடைபெறும்.

தஞ்சை, சென்னை கோயம்பேடு ஆகிய இடங்களில் நடைபெறும் இப்போராட்டங்களில் திரளாகக் கலந்து கொள்ளுமாறு தமிழ் உணர்வாளர்கள் அனைவரையும் அழைக்கிறோம். எந்த இடத்தில் எந்தெந்தப் பகுதித் த.தே.பொ.க. தோழர்கள் கலந்து கொள்வது என்று முறைப்படுத்தப்பட்டுள்ளது.  மற்ற தமிழ் உணர்வாளர்கள் அவரவர் வாய்ப்புப்படி தஞ்சை அல்லது கோயம்பேட்டில் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

1938ல் தந்தை பெரியார், மறைமலை அடிகளார், நாவலர் சோமசுந்தர பாரதியார் போன்ற தலைவர்கள், சான்றோர்கள் தலைமையில் தமிழ் காக்கும் மொழிப் போர் தொடங்கியது. இப்போராட்டத்தில் நடராசன், தாளமுத்து ஆகியோர்  சிறைக்கொட்டடியில் மரணத்தைத் தழுவினர். 1965-இல் இந்தித் திணிப்பை எதிர்த்த போராட்டத்தில் அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் மார்பில் துப்பாக்கிக் குண்டேந்தி முதல் களபலி யானார். மாபெரும் தமிழ்த் தேசிய எழுச்சியாக நடந்த அம்மொழிப் போரில் முந்நு}றுக்கும் மேற்பட்ட மாணவர்களும் மற்றவர்களும் காங்கிரசு ஆட்சியால் சுட்டுக் கொல்லப்பட்டனர். கீழப்பழூர் சின்னச்சாமி தொடங்கி, தன் உடலையே தமிழ் உணர்ச்சியின் தழல் சுடராய் எரியவிட்டு மடிந்தோர் பலர். நஞ்சுண்டு மடிந்து நம் தமிழ் உணர்வூட்டியோர் பலர்.
 
அந்த மான மறவர்களுக்கு வீரவணக்கம் செலுத்துவோம்.
ஆதிக்க இந்தியையும் ஆங்கிலத் திணிப்பையும் முறியடிப்போம்.
போராடப் புறப்படுவீர்!

தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி,
20-7, முத்துரங்கம் சாலை, தியாகராய நகர், சென்னை-17.
தொடர்புக்கு  9445295002, 9841949462

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT