உடனடிச்செய்திகள்

Tuesday, March 28, 2017

இரவிலும் தொடர்கிறது காவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்!

இரவிலும் தொடர்கிறது காவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்!
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஒன்று திரளுவோம்! காவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்!

 காவிரித்தாய்க் காப்பு முற்றுகை அறப்போராட்டம்!
#காவிரித்தாயைக்காப்போம்#SaveMotherCauvery
காவிரித்தாயைக் காக்க..
காவிரிப்படுகையைக் காக்க..
தமிழ்நாட்டு உழவர்களைக் காக்க..
காவிரித்தாய்க்கு நீதி கேட்டு,
பிள்ளைகள் நாம் ஒன்று கூடுவோம்!
காவிரி இல்லாமல் வாழ்வில்லை!
களம் காணாமல் காவிரியில்லை!
கெஞ்சிக் கேட்டால் கிடைக்காது!
கிளர்ச்சிக்கு பயந்தால் நடக்காது!
இன்று (மார்ச்சு - 28) காலை 10 மணி முதல்
தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்
ஒன்று கூடுவோம்..! வாருங்கள்..!
#காவிரித்தாயைக்காப்போம்!
#SaveMotherCauvery

Saturday, March 25, 2017

கீழடி அகழாய்வுத் தலைவர் திரு. அமர்நாத் அவர்களின் இடமாற்றத்தைக் கைவிட்டு மீண்டும் கீழடியிலேயே பணியமர்த்துக! பெ. மணியரசன் கோரிக்கை!

கீழடி அகழாய்வுத் தலைவர் திரு. அமர்நாத் அவர்களின் இடமாற்றத்தைக் கைவிட்டு மீண்டும் கீழடியிலேயே பணியமர்த்துக! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
மூவாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழர் நாகரிகத்தின் வரலாற்றுச் சான்றாக கிடைத்திருப்பது சிவகங்கை மாவட்டம் கீழடி அகழாய்வு. இதற்கு முன் தமிழர்களின் பண்டைய நாகரிகத்தை எடுத்துக் காட்டுவதற்கு குடியிருப்புகள், இடுகாட்டுத் தாழிகள் போன்றவை கிடைத்தன. ஆனால் கீழடியில்தான் பண்டைய தமிழர்களின் தொழிற்கூடங்கள் கிடைத்துள்ளன.

இந்த அகழாய்வைத் தொடர்வதற்குத் தொடர்ந்து இந்திய அரசு முட்டுக்கட்டைகள் போட்டுக் கொண்டே வந்தது. முதல் கட்ட அகழாய்வு 2015 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இரண்டாம் கட்ட அகழாய்வு 2016 ஆம் ஆண்டு தொடர்ந்தது. ஆனால் அது முடிந்த பின் மூன்றாம் கட்ட அகழாய்வை இயல்பாகத் தொடங்காமல் இந்தியத் தொல்லியல் துறை தடுத்து வைத்திருந்தது. பல்வேறு தமிழ் அறிஞர்களும், தமிழின அமைப்புகளும் குரல் கொடுத்தபின் மூன்று மாதம் தாமதித்து மூன்றாம் கட்ட அகழ்வாய்வைத் தொடங்கியுள்ளது. அதற்கு இன்னும் நிதி ஒதுக்கவில்லை என்பதும் இங்கு குறிப்பிட வேண்டிய ஒரு செய்தி!

இந்நிலையில் கீழடி அகழாய்வுக்கு இன்னொரு சிக்கல் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த அகழாய்வில் தொடர்ச்சியாக தமிழ் ஆர்வத்துடன் ஆய்வுப்பணி செய்து வந்தவர் திரு. அமர்நாத் அவர்கள். அவர் கீழடி அகழாய்வுப் பிரிவுத் தலைவராகவும், இந்தியத் தொல்லியல் துறையின் பெங்களுர் மையக் கண்கானிப்பாளராகவும் செயல்பட்டு வந்தார். இப்பொழுது திரு. அமர்நாத் அவர்களை அசாம் தலைநகர் கவுகாத்திக்கு மாற்றியுள்ளார்கள்.

கீழடி அகழாய்வில் அக்கறை, அர்ப்பணிப்பு, திறமை ஆகியவற்றை வெளிப்படுத்தி சிறப்பாக செயல்பட்டு வந்த திரு. அமர்நாத் அவர்களின் பணியை கீழடி இழப்பது அந்த ஆராய்ச்சித் தொடர்ச்சிக்கு பாதிப்பை ஏற்படுத்தும் என்று தமிழ் உணர்வாளர்கள் ஐயுறுகிறோம்; அச்சப்படுகிறோம்.

எனவே, இந்தியத் தொல்லியல் துறை தலைமையானது திரு. அமர்நாத் அவர்களின் பணிமாற்ற ஆணையை மறு ஆய்வு செய்து கீழடியிலேயே அவரை மீண்டும் அதே பணியில் அமர்த்துமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Wednesday, March 22, 2017

கடலூரில் நச்சுவாயுத் தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி: அரசின் அலட்சியம் மட்டுமல்ல அரசே கடைபிடிக்கும் தீண்டாமை! கி. வெங்கட்ராமன் கண்டனம்!

கடலூரில் நச்சுவாயுத் தாக்கி மூன்று தொழிலாளர்கள் பலி: அரசின் அலட்சியம் மட்டுமல்ல அரசே கடைபிடிக்கும் தீண்டாமை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
கடலூரில் பாதாள சாக்கடைக் குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் ஈடுபட்ட மூன்று தொழிலாளர்கள், நச்சு வாயுத் தாக்கி பலியான செய்தி பெரும் அதிர்ச்சியளிக்கிறது.

கடலூர் மோகினி பாலம் அருகே பாதாள சாக்கடைத் திட்டக் குழாய்களை பராமரிக்கும் பணியில் நகராட்சி நிர்வாகத்தால் அனுமதிக்கப்பட்ட தனியார் நிறுவனம், அக்குழாயில் ஏற்பட்ட அடைப்பை நீக்கும் பணியில் கொடிக்கால்குப்பம் பகுதியைச் சேர்ந்த அப்புக்குட்டி என்ற ஜெயக்குமார், வேலு, புதுச்சேரி - சோரியாங்குப்பம் முருகன் ஆகிய மூன்று ஒப்பந்தத் தொழிலாளர்களை ஈடுபடுத்தியுள்ளர்.

பாதாள சாக்கடையில் இறங்கி தூய்மைப் பணியில் ஈடுபட்டபோது, நச்சு வாயுத் தாக்கி அம்மூவரும் பலியானார்கள். அவர்களது உடலை பெற்றுக் கொள்ள மறுத்து, அவர்களது உறவினர்களும், பல்வேறு அமைப்பினரும் போராட்டம் நடத்திய நிலையில்தான், மாவட்ட நிர்வாகம் அவர்களது குடும்பத்தினருக்கு இழப்பீடு அளிக்கவும், தனியார் நிறுவனத்தினர் மீது வழக்குப்பதியவும் முன்வந்துள்ளது. மேலும், குடிநீர் வடிகால் வாரிய உதவிப் பொறியாளர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் கொடுமைக்கு எதிராக நடைபெற்ற தொடர் போராட்டங்கள், நீதிமன்ற வழக்குகள் ஆகியவற்றின் விளைவாக “கையால் மலம் அள்ளுவோரை வேலைக்கு அமர்த்துதல் மற்றும் உலர் கழிவறைகள் கட்டுதல் தடுப்புச்சட்டம் - 1993” என்ற சட்டம் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்டு நான்கு ஆண்டுகள் கழித்து 1997-இல் செயலுக்கு வந்தது. இச்சட்டத்தில் உள்ள குறைபாடுகள், அவை செயலாவதில் உள்ள குளறுபடிகள், ஆகியவை குறித்து பல்வேறு வழக்குகள் தொடுக்கப்பட்டு அவற்றின் விளைவாக 2013-ஆம் ஆண்டு - மனிதக் கழிவுகளை மனிதர்கள் அள்ளுவதற்குத் தடை விதித்து சட்டம் (Prohibition of employment as Manual scavengers and their rehabilitation - 2013) இயற்றப்பட்டது.

அதன்பிறகு, 2014ஆம் ஆண்டு - கையால் மலம் அள்ளும் பணிகளை ஒழித்து இதில் ஈடுபட்டுள்ளோருக்கு மறுவாழ்வு அளிப்பது தொடர்பாக ‘தூய்மைத் தொழிலாளர்கள் சங்கம் - எதிர்- இந்திய ஒன்றிய அரசு’ (Safai Karamchari Andolan -Vs- Union of India) என்ற வழக்கில் 2014 மார்ச் 27 அன்று அன்றைய தலைமை நீதிபதி பா. சதாசிவம் தலைமையில் ரஞ்சன் கோகோய், ரமணா ஆகியோர் அடங்கிய உச்சநீதிமன்ற ஆயம் தீர்ப்பு வழங்கியது.

இவ்வாறான பணிகளில் உரிய பாதுகாப்புக் கருவிகள் இல்லாமல் ஈடுபடக்கூடாது என சட்டமும் நீதிமன்றத் தீர்ப்பும் கூறி வந்த நிலையில், கடலூரில் அந்தத் தனியார் நிறுவனம் இத்தொழிலாளர்களை விதிமுறைகளை மீறி அப்பணியில் ஈடுபடுத்தியுள்ளது.

ஆயிரம் அடிகளுக்குக் கீழ் நிலத்திற்குள் புதைந்துள்ள மீத்தேன் உள்ளிட்ட கனிம வளங்களைத் தோண்டியெடுக்க தொழில்நுட்பக் கருவிகளை வைத்துள்ள இதே அரசு, சில அடிகளில் உள்ள கழிவுகளை அகற்ற இயந்திரங்கள் இல்லாமல் தவிப்பதாக நாடகமாடி வருகின்றது. தமிழ்நாட்டில், கடந்த பத்தாண்டுகளில் மட்டும் இவ்வாறானப் பணிகளில் ஈடுபட்ட 200க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் உயிரிழந்துள்ளனர். தூய்மைப் பணியாளர்கள் மீதான அரசின் அக்கறையின்மையும், அலட்சியமுமே தொடர்ந்து இது போன்ற உயிர்ப்பலி நிகழ்வுகளுக்கு அடிப்படைக் காரணமாகும்!

இது மட்டுமல்ல, மனிதக் கழிவுகளை மனிதர்களே அப்புறப்படுத்தவும், இது போன்ற பணிகளில் ஈடுபடவும் வற்புறுத்தப்படுவது அரசே கடைபிடிக்கும் தீண்டாமை ஆகும்.

தூய்மைத் தொழிலாளர்களுக்கு உரியப் பாதுகாப்புக் கருவிகளை வழங்கிப் பாதுகாக்க முன் வராத இதே அரசுதான், இந்த அவலத்தை வெளிப்படுத்தி வந்துள்ள “கக்கூஸ்” ஆவணப்படத்தைத் திரையிட விடாமல் ஊருக்கு ஊர் தடை செய்து வருகின்றது.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாக மாநிலம் முழுவதும் ஆய்வு நடத்தி, மனிதக் கழிவுகளை அகற்றும் பணியில் தொழிலாளர்களை ஈடுபடுத்தும் மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளையும், அதில் ஈடுபடுத்தப்பட்டுள்ள தனியார் ஒப்பந்த நிறுவனங் களையும் கண்டறிந்து தண்டிக்க வேண்டும். பாதாள சாக்கடைத் தூய்மையாக்கலில் உறிஞ்சுக் கருவிகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கான பாதுகாப்புக் கருவிகளை உடனடியாக வாங்கிப் பயன்படுத்தவும், அது குறித்த விழிப்புணர்வைப் பரவலாக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

கடலூரில் பலியாகியுள்ள இம்மூன்று இளம் தொழிலாளர் குடும்பங்களுக்கு தலா 25 இலட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும், உறுதியளித்தபடி அவர்கள் குடும்பத்தில் ஒருவருக்கு தகுதிக்கேற்ப அரசுப்பணி வழங்க வேண்டும்.

இன்னணம்,
கி.வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Tuesday, March 21, 2017

திராவிட அரசியல் : தமிழர்களுக்கு இனியும் தேவையா? நக்கீரன் வார ஏட்டில் (21.03.2017). . . பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!

திராவிட அரசியல் : தமிழர்களுக்கு இனியும் தேவையா? நக்கீரன் வார ஏட்டில் (21.03.2017). . .  தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
 

இந்தியப் பேராதிக்கத்தின் அரசியல் தலைமையாகக் காங்கிரசு கட்சியைக் கருதினார் அண்ணா. காங்கிரசின் அரசியல், பொருளியல், மொழிக் கொள்கைகளையும் அதன் இனக் கொள்கைகளையும் எதிர்த்து வளர்ந்த கட்சிதான் தி.மு.க. இந்தித் திணிப்பு காங்கிரசுக் கொள்கை. 1965 மொழிப்போரில் 300 பேர்க்கும் மேற்பட்டோரை சுட்டுக் கொன்றது காங்கிரசு ஆட்சி. அந்தக் காங்கிரசுடன் 1969-ஆம் ஆண்டே கூட்டணி அமைத்தார் கலைஞர் கருணாநிதி. 1971 பொதுத்தேர்தலில் இந்திரா காங்கிரசுடன் கூட்டணி அமைத்து தி.மு.க. போட்டியிட்டது.

எம்.ஜி.ஆர். தொடங்கிய அ.தி.மு.க.வை மறைமுகமாக இந்திராகாந்தி ஆதரித்தார் என்பதன் தொடர்ச்சியாக இந்திராவின் நெருக்கடிநிலைப் பிரகடனத்தை எதிர்த்தார் கலைஞர் கருணாநிதி. 1980 சனவரியில் மக்களவைப் பொதுத்தேர்தல் வந்தது. எம்.ஜி.ஆருக்கும் இந்திராகாந்திக்கும் ஏற்பட்ட கசப்புணர்ச்சியை பயன்படுத்தி இந்திரா காங்கிரசுடன் தி.மு.க. கூட்டணி சேர்ந்தது.
 
கூட்டுத்தலைமையா? குடும்பத் தலைமையா?

அண்ணாவை விமர்சனமற்ற பெருந்தலைவராக தி.மு.க. அணிகள் ஏற்றுக்கொண்டிருந்தன. ஆனால் அண்ணா, தி.மு.க. கூட்டுத்தலைமை கொண்டது என்று கூறி வந்தார். ஆனால் கலைஞர் கருணாநிதி தி.மு.க.வின் தலைமையாகத்தம் குடும்பத்தைக் கொண்டு வந்தார். செயலலிதாவின் அ.தி.மு.க.வில் இரண்டாம் நிலைத் தலைவர்கள் இல்லாதது போலவே இன்று தி.மு.க.விலும் இரண்டாம் நிலைத் தலைவர்கள் இல்லை. ஒரு வேளை அவ்வாறு யாராவது இருந்தால் அவர் கலைஞர் குடும்பத்தைச் சேர்ந்தவராகவே இருப்பார்.

சமூக நீதியா?

சமூகநீதி என்பது வர்ண-சாதி ஆதிக்கத்தை நீக்குவதுடன் சாதிப் பிளவுகளையும் சாதி ஒடுக்கு முறைகளையும் களைவதாகும். ஆனால் எந்த மண்டலத்தில் எந்த சாதி அடர்த்தியாக இருக்கிறதோ அந்த சாதியிலிருந்து மட்டுமே தி.மு.க.வின் மாவட்ட, ஒன்றியச் செயலாளர்களாக, தேர்தல் வேட்பாளர்களாக வரமுடியும் என்ற நிலை ஏற்பட்டது. இப்போக்கு அ.தி.மு.க.விலும் தொடர்ந்தது. இச்செயல் தந்திரங்கள், ’நம் சாதியைப் பயன்படுத்தி நாம் அரசியல் பதவிகள் அடைந்தால் என்ன’’ என்ற ஆசையை... அடர்த்தியான சாதிகளில் உள்ள பிரமுகர்களுக்குத் தூண்டியது.

இன்றைக்கு சாதி அமைப்புகள் புத்துயிர் பெற்று, தமிழ்ச் சமூகத்தைச் சாதிப் பகை முகாம்களாகப் பிளவுபடுத்தியுள்ளன. பள்ளி மாணவரிலிருந்து கல்லூரி மாணவர் வரை நட்பு கூட சாதி பார்த்துதான் ஏற்படுகிறது. சாதிக்கலப்பு காதல் ஏற்பட்டால் கொலை செய்யப்படுகிறார்கள். இக்கொலைகள் அதிகரித்து வருகின்றன.

இப்பொழுது மாணவர்களிடையே, இளைஞர்களிடையே ஏற்பட்டுவரும் தமிழர் என்ற ஒற்றுமை உணர்ச்சி தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு வெளியே ஏற்பட்டதாகும். இவ்வுணர்ச்சி தமிழ்த் தேசியம் சார்ந்தது.

இந்தித் திணிப்பு எதிர்ப்பு

தமிழ்நாட்டில் தேசிய நெடுஞ்சாலைகளில் முதல்முதலாக இந்தியில் வழிக்குறிப்புகள் எழுதப்பட்டது எப்போது? தி.மு.க.வின் டி.ஆர்.பாலு நடுவண் அரசில் சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது!

தமிழ்நாட்டில் இந்தியை பாடமொழியாகக் கொண்ட மெட்ரிக்குலேசன் பள்ளிகள் பல்லாயிரக் கணக்கில் இருக்கின்றன. அவையெல்லாம் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆட்சியில் அனுமதிக்கப்பட்டவை. இப்போது நடுவண் பாடத் திட்ட (CBSE) பள்ளிகள் தாராளமாக தமிழ்நாட்டில் திறக்கப்படுகின்றன. இவற்றில் இந்தி கட்டாயப் பாடமொழியாக உள்ளது. தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பு மட்டுமின்றி சமஸ்கிருதத் திணிப்பும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
 
தமிழ்நாடு அரசு செயல்பாட்டில் நூற்றுக்கு நூறு என்ற அளவில் தமிழ் அலுவல் மொழியாக இல்லை. உயர்நீதி மன்ற மொழியாகத் தமிழைக் கொண்டுவர இந்திய அர சமைப்புச் சட்டத்தில் இடமிருந்தும் அதற்காக விடாப்பிடியான முயற்சி எதையும் தி.மு.க.வும், அ.தி.மு.க.வும் எடுக்கவில்லை.

செயலலிதா மூன்றாண்டுகளுக்கு முன் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பிலும் ஆறாம் வகுப்பிலும் ஆங்கிலப் பயிற்றுமொழிப் பிரிவுகளைத் தொடங்கினார். பன்னி ரெண்டாம் வகுப்பு வரை ஆங்கிலப் பயிற்றுமொழிப் பிரிவு கொண்டு வருவது அத்திட்டம். பள்ளிக் கல்வியிலிருந்து தமிழை வெளியேற்றும் செயலலிதாவின் இத்திட்டத்தை தி.மு.க. எதிர்க்கவில்லை.

தொழிலாளர்கள் - உழவர்கள்

பல்வேறு விதிவிலக்குகளுடன் பதினைந்து ஸ்டாண்டர்டு ஏக்கர் நில உச்சவரம்பு கொண்டு வந்தார் கலைஞர். வரவேற்கத்தக்கது; ஆனால் இதற்காகப் போராடி ஈகங்கள் பல செய்த கம்யூனிஸ்ட்டுகளும் இதற்கு காரணம் என்பதை உணர வேண்டும். ஆனால் 1970களில் சிம்சன், டி.ஐ. சைக்கிள்ஸ், நெய்வேலி அனல்மின் நிலையம் முதலியவற்றில் தங்கள் உரிமைக்காக வேலை நிறுத்தம் செய்த தொழிலாளிகள் மீது காவல்துறையை ஏவி, கடும் தாக்குதலை நடத்தியது கலைஞர் கருணாநிதி ஆட்சி. துப்பாக்கிச் சூட்டில் தொழிலாளர்கள் பலியானார்கள். உழவர்கள் நடத்திய உரிமைப் போராட்டத்தில் 1971-72 - இல் துப்பாக்கிச் சூடு நடத்தி பலரைக் கொன்றது கலைஞர் ஆட்சி; 1978-79களில் உழவர் போராட்டத்தில் பலரை சுட்டுக் கொன்றது எம்.ஜி.ஆர். ஆட்சி.

தமிழ்நாட்டு உரிமைகள்

 தி.மு.க. ஆட்சியில்தான் 1974 இல் காவிரி உரிமை பறிக்கப்பட்டது, கச்சத்தீவு இலங்கைக்குக் கொடுக்கப்பட்டது. இவ்வுரிமைகளை மீட்கும் அக்கறையும் ஆற்றலும் அற்றவை தி.மு.க.வும், அ.தி.மு.க.வும். முல்லைப்பெரியாறு அணை உரிமையில் தமிழ்நாட்டுக்கு ஆதரவாக உச்சநீதி மன்றத் தீர்ப்பு இருந்தும் அதன்படி சிற்றணையை செப்பனிட்டு மொத்தக் கொள்ளளவான 152 அடி தண்ணீர் தேக்க முடியவில்லை. இக்கழகங்களின் ஆட்சியில் பாலாற்றில் ஆந்திரம் பல தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைத் தடுத்துவிட்டது. இப்போது பவானியில் கேரளம் ஆறு தடுப்பணைகள் கட்டுகிறது.

"மாநிலத்தில் சுயாட்சி மத்தியில் கூட்டாட்சி' என்று முழங்கிய தி.மு.க. கடந்த பல ஆண்டுகளாக மாநில சுயாட்சி பற்றியே பேசுவதில்லையே ஏன்?

ஊழல்

இலஞ்ச ஊழல் என்பது தி.மு.க.-அ.தி.மு.க. ஆட்சிகளில் நிரந்தரப்படுத்தப்பட்ட நிர்வாக முறையாகவே ஆக்கப்பட்டுள்ளது. கையூட்டாகப் பெறுவது மட்டுமின்றி, அரசு திட்டச் செலவுகளில் விழுக்காட்டு அடிப்படையில் விகிதம் வாங்குதல், உற்பத்தி இடங்களிலும் வழங்கல் இடங்களிலும் பங்கு வாங்குதல் என்ற இலஞ்ச ஊழல் முறை தி.மு.க., அ.தி.மு.க. ஆட்சிகளின் புதிய கண்டுபிடிப்பு களாகும்.

ஈழ இனப்படுகொலை

கடந்த 2008-2009 ஆண்டுகளில் ஈழத்தில் நம் தமிழின மக்களை இந்திய அரசின் துணையுடன் இலங்கை அரசு கூட்டம் கூட்டமாக இனப்படு கொலை செய்தது. ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்தது இலங்கை அரசு. ஒப்புக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஒதுங்கிக்கொண்டது தி.மு.க.. ஈழத்தமிழர் இனப்படுகொலையால் தமிழ்நாட்டில் எழுச்சிபெற்ற இனஉணர்வை தேர்தல் ஆதாயமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம் என்ற நோக்கத்தில் கடைசிநேரத்தில் போர் நிறுத்தம் கோரியும் தமிழினத்தை ஆதரித்தும் பேசினார் செயலலிதா. திராவிட இயக்கம் தமிழினக் காப்பு இயக்கம் அல்ல என்பதற்கு இதுவும் சான்று.

அண்ணா பற்றி

அண்ணா மிகக்குறைந்த காலமே முதலமைச்சராக இருந்தார். அவர் ஆடம்பரமற்ற, எளிமையான, அறிவாற்றல் மிக்க தலைவர். பொதுமக்கள் கருத்துக்கு மதிப்பளிப்பவர். ஆனால் இலட்சியக் கூர்மையும் இலட்சிய உறுதியும் அற்றவர்.

சென்னை மாகாணத்தைத் "தமிழ்நாடு' என்று பெயர் மாற்றிட அண்ணா முன்மொழிந்த சட்டத் தில் தமிழில் "தமிழ்நாடு' என்றும், ஆங்கிலத்தில் "டமில் நாட்'’(Tamil Nad) என்றும் இருந்தது. டமில் நாட்’’ஆலோசனை வழங்கியர் இராஜாஜி. ம.பொ.சி தலையிட்டு Nad உடன் U சேர்க்க வைத்தார். சரியாகச் செய்திருக்க வேண்டுமெனில் ஆங்கி லத்திலும் Thamizh Nadu என்று தான் இருந்திருக்க வேண்டும். அயல் மொழிக்காரர்கள் உச்சரிக்க எளிமையாக இருக்க வேண்டும் என்பதற்காக ஓர் இனமக்கள் தங்கள் தாயகத்தின் பெயரை சிதைக்க மாட்டார்கள்.

அண்ணா நிறைவேற்றிய இரு மொழிக் கொள்கை சட்டத்தில் முதல் பகுதியில் (Part I) "தமிழ் அல்லது வேறொரு மொழியை மொழிப்பாடமாக ஏற்கவேண்டும்' என்று உள்ளது. இரண்டாம் பகுதியில்(Part II) "ஆங்கிலத்தை மட்டுமே மொழிப்பாடமாக எடுக்க முடியும்' என்று உள்ளது. மொழிப்பாடத்தில் இருந்து இந்தியை அண்ணா நீக்கியது பாராட்டுக்குரியது. ஆனால் தமிழை விருப்பப்பாடமாக ஆக்கியது பிழையானது.

ஒரு தலைவரை வைத்து தாலி கட்டியோ அல்லது மாலை மாற்றிக் கொண்டோ, திருமணம் செய்து கொள்வது சட்டப்படி செல்லும் என்ற உரிமையை, இந்து திருமணச் சட்டத்தில் திருத்தம் கொண்டு வந்து, அண்ணா நிறைவேற்றினார். அது மிகவும் பாராட்டுக்குரியது.

இன அடையாளக் குழப்பம்

தமிழர்களை "திராவிடர்' என்று அழைத்தது, இன வரலாற்றியல்படி தமிழினத்தின் தனித்தன்மையை மறுப்பதாகும்.

திராவிட இயக்கம் ஆட்சி நடத்திய ஐம்ப தாண்டுகளில் அது தன்னைத்தானே அம்பலப் படுத்திக் கொண்டது. இனி தமிழின அரசியலும், தமிழ்த்தேசிய இலட்சியமும்தான் தமிழ்நாட்டிற்குத் தேவை.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9840848594
 முகநூல்: www.fb.com/tamizhdesiyam
 ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, March 20, 2017

“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – கேரள எல்லையை ஒழுங்கு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளத்தோடு பேச வேண்டும்!” கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!

“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – கேரள எல்லையை ஒழுங்கு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளத்தோடு பேச வேண்டும்!” தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!
“செண்பகவல்லி தடுப்பணையை சீரமைக்கவும் தமிழ்நாடு – கேரள எல்லையை ஒழுங்கு செய்யவும் தமிழ்நாடு முதலமைச்சர் கேரளத்தோடு பேச வேண்டும்!” என நேற்று (19.03.2017) மாலை நெல்லை மாவட்டம் – கரிவலம்வந்தநல்லூரில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் வலியுறுத்தினர்.

சென்னை உயர் நீதிமன்ற ஆணைப்படி செண்பகவல்லி கால்வாய் தடுப்பணையை கேரள அரசு சீர் செய்திட வலியுறுத்தி, செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு சார்பில் நேற்று (19.03.2017) கரிவலம்வந்தநல்லூரில் பொதுக்கூட்டம் நடைபெற்றது.
கரிவலம்வந்த நல்லூர் வடக்கு இரத வீதித்திடலில் நடைபெற்ற இக்கூட்டத்திற்கு, செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு - கரிவலம் ஒருங்கிணைப்பாளர் திரு. ஞானராசு அவர்கள் தலைமை தாங்கினார். செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு பனையூர் - இடையன்குளம் வட்டாரப் பொறுப்பாளர் திரு. செயக்குமார், திரு. அ. கருணாநிதி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு மாவட்ட ஒருங்கிணைப்பாளர் திரு. க. பாண்டியன், செண்பகவல்லி உரிமை மீட்புக் குழு தென்மலை வட்டாரப் பொறுப்பாளர்கள் ஆசிரியர் பாப்புராஜ், திரு. காளிமுத்து (தலைவர்), திரு. வீருத்தேவர் (செயலாளர்), சிவகிரி கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. ஏ.எம். பழனிச்சாமி, சிவகரி விவசாயிகள் சங்கப் பொருளாளர் திரு. குருசாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரெ. இராசு, தமிழக உழவர் முன்னணி துணைத் தலைவர் திரு. மு. தமிழ்மணி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் கதிர்நிலவன், தோழர் பாண்டியராசன் ஆகியோர் கருத்துரையாற்றினர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணி தலைமை ஆலோசகருமான தோழர் கி.வெங்கட்ராமன் சிறப்புரையாற்றினார். அவர் பேசியதாவது :

“செண்பகவல்லி அணை - திருநெல்வேலி மாவட்டம் - வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் மற்றும் இராசபாளையம் வரையிலான கிராமங்களுக்கு வேளாண்மை மற்றும் குடிநீருக்கான பயன்பாட்டுக்காக கட்டப்பட்டது. வாசுதேவநல்லூர் பகுதியில் மட்டும் 15 குளங்களும், சிவகிரி பகுதியில் 33 குளங்களும், சங்கரன்கோவில் வட்டத்தில் நேரடி பாசனத்தின் வழியாகவும் சற்றொப்ப 11,000 ஏக்கர் நிலப்பரப்புக்கு பாசன நீரையும், குடிநீரையும் இந்த அணை வழங்கி வருகிறது.

1956ஆம் ஆண்டு - மொழிவழி மாநிலம் உருவாக்கப்பட்டதற்குப் பிறகு, 1963இல் செண்பகவல்லி தடுப்பணை உடைந்த போது, அன்றைக்கு இருந்த காமராசர் ஆட்சி தமிழ்நாடு பொதுப்பணித்துறை மூலம் உடனடியாக செண்பகவல்லி அணையை சீர் செய்தது.

ஆனால், மொழிவழி மாநில எல்லை வரையறுக்கப்பட்ட பிறகு, தமிழ்நாட்டிற்கும் கேரளாவுக்கும் இடையிலுள்ள எல்லை சரிவர ஒழுங்கு செய்யப்படாமல் இருந்ததால், கேரள அரசும் அதன் வனத்துறையும் தமிழ்நாட்டு எல்லைக்குள் ஒவ்வொரு நாளும் ஆக்கிரமித்து தனது ஆட்சிப் பகுதியை விரிவாக்கி வருகின்றன.

அதன் விளைவாகத்தான், மீண்டும் 1984இல் செண்பகவல்லி அணையில் உடைப்பு ஏற்பட்ட போது, அன்றைக்கு இருந்த எம்.ஜி.ஆர். ஆட்சிக்காலத்தில் இதே அணை கேரள அரசுக்கு சொந்தமானது என்று வாதிடப்பட்டது. தமிழ்நாடு அரசு, கேரளப் பொதுப்பணித்துறையிடம் பேசி – அணையை சீரமைக்க 10இலட்சத்து 30 ஆயிரம் ரூபாய் சீரமைப்புச் செலவு என முடிவு செய்து, அதில் பாதித்தொகையான 5 இட்சத்தை 15 ஆயிரத்தை முன்தொகையாக கேரள அரசுக்கு அளித்தது.

எட்டு ஆண்டுகளுக்குப் பிறகு கேரள அரசு, அப்பணத்தைத் திருப்பி அனுப்பி, சீரமைக்க முடியாது என்று அறிவித்ததன் காரணமாக, சிவகிரி வட்ட விவசாயிகள் சங்கத்தினர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனர். அதில் 2006இல்(03.08.2006) தீர்ப்பளித்த உயர் நீதிமன்றம், தமிழ்நாடு அரசு கேரள அரசுக்கு நிதி வழங்கி அணையை 8 வாரத்திற்குள் சீரமைக்க ஆணையிட்டது.

அந்த ஆணையை கேரள அரசு மதிக்கவே இல்லை! அந்த ஆணை கிடைத்த பிறகும் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்நாடு அரசு அசைவற்று இருக்கிறது. இதனால், கேரள அரசு மேலும் துணிச்சல் பெற்று, அடுத்தகட்ட அடாவடியில் இறங்கிவிட்டது.

சிவகரி ஜமீனுக்கும் திருவிதாங்கூர் சமஸ்தானத்திற்கும் 1733இல் செண்பகவல்லி அணை தொடர்பாக எந்த ஒப்பந்தமும் செய்யப்படவில்லை என்றும், செண்பகவல்லி தடுப்பணை என்று ஒன்று இருந்ததே இல்லை என்றும் அடாவடியாகப் பொய் கூறுகிறது கேரள அரசு!

தமிழ்நாடு – கேரள எல்லை ஒழுங்கமைக்கப்படாததன் விளைவாகவே, இது போன்ற சிக்கல்கள் புதிது புதிதாகத் தோன்றுகின்றன. எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் கேரள அரசோடு பேசி, செண்பகவல்லி தடுப்பணையை உடனடியாக சீர் செய்வதற்கும், தமிழ்நாடு – கேரள எல்லைப் பகுதியை ஒழுங்கமைப்பதற்கும் நிர்வாக நடவடிக்கைகளை உடனடியாக மேற்கொள்ள வேண்டும்.

நெல்லை மாவட்ட உழவர்கள், இப்பகுதி பொது மக்கள், படித்த இளையோர் யாருக்காகவும் காத்திராமல், இது நமது சிக்கல் – நாம் தான் மீட்க வேண்டும் என்ற உரிமை உணர்ச்சியோடு தொடர் இயக்கங்களில் பங்கேற்க வேண்டும்!

உறுதியாக நம்புங்கள்! நாம் – நம்முடைய ஒற்றுமையின் மூலம் நமது நீதியை வெல்வோம்! செண்பகவல்லி அணையை மீட்போம்!”

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
கூட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் கரிகாலன், சிவா, மகளிர் ஆயம் திரு. துரைச்சி, உள்ளிட்டோரும், அப்பகுதி உழவர்களும் பொது மக்களும் திரளாகப் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, March 17, 2017

"தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா?" பெ. மணியரசன் கண்டனம்!

"தஞ்சை பெரிய கோவிலுக்கு சமற்கிருதப் பெயரா?" தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!


தமிழ்ப்பேரரசன் இராசராசன் கட்டிய தஞ்சை பெரிய கோவிலுக்கு “பிரகதீஸ்வரர் ஆலயம்” என தமிழ்நாடு இந்து சமய அறநிலையத்துறை சமற்கிருதத்தில் பெயர் சூட்டியுள்ளதற்கு - தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

இது குறித்து, “தமிழக அரசியல்” (18.03.2017) - வார ஏட்டுக்கு தோழர் பெ. மணியரசன் அளித்துள்ள செவ்வியில் தெரிவித்துள்ளதாவது:

“இவ்வளவு நாட்களாக இல்லாமல் திடீரென பிரகதீஸ்வரர் ஆலயம் என்று சம்ஸ்கிருதப் பெயரர வைக்க என் காரணம்? தமிழ் மன்னன் கட்டிய கோயிலுக்கு ஏன் சமஸ்கிருதப் பெயரை வைக்க வேண்டும்?

பிரகதீஸ்வார் என்ற பெயர் சோழர் ஆட்சிக்கு பிறகு வந்த மராட்டியர்கள் ஆட்சியில்தான் நடைமுறைக்கு வந்துள்ளது. கோயிலில் உள்ள கல்வெட்டுகளில் எந்த இடத்திலும் பிரகதிஸ்வரர் என்ற பெயர் ஒரு இடத்தில்கூட இல்லை. சிலர் மட்டும்தான் பிரகதீஸ்வரர் ஆலயம் என்று அழைப்பார்கள்.

தமிழக மக்கள் அனைவரும் தஞ்சை பெரிய கோவில் என்றும் பெருவுடையார் ஆலயம் என்றும்தான் அழைத்து வந்தோம். அப்படி இருக்கும்போது, திடீரென சமஸ்கிருத பெயரை தாங்கிய பலகையை வைக்க வேண்டும். மத்தியில் ஆளும் பாரதிய ஜனதா அரசின் செயல்பாடா இல்லை திறமையற்ற தமிழக அரசின் வெளிப்பாடா என்பது ஒன்றும் புரியவில்லை.

அதிகாரிகளிடம் கேட்டால், அனைவரும் புரிந்து கொள்வதற்காக இப்படி மாற்றி இருக்கிறோம் என்று சொல்கிறார்கள். நான் கேட்கிறேன், காசியில் இருக்கும் விஸ்வநாதர் கோயிலுக்கு தமிழகத்தில் இருந்து பலர் செல்கிறார்கள். அதனால் காசி விஸ்வநாதரை காசி பேரருவான் கோயில் என்று மாற்றி விடுவார்களா? இல்லை! அனைவரும் புரிந்து கொள்ள தஞ்சை கோயிலில் என்ன சந்தை வியாபாரமா நடக்கிறதா?

இவையெல்லாம் இந்திய அரசின் சமற்கிருதத் திணிப்பின் ஒரு அங்கம்தான்! தமிழர்களின் புகழையும் வரலாற்றையும் மறைக்க வேண்டும் மழுங்கடிக்க வேண்டும் என்பதுதான்!

தமிழகத்தில் இருக்கும் மீனாட்சி அம்மன் கோயில் போலவும், தஞ்சை பெரிய கோவிலைப் போலவும் உயர்ந்த கோபுரம் கொண்ட கட்டிட கலையை பறைசாற்றும் உதாரணத்தை வடக்கில் ஒன்று சொல்ல முடியுமா? இது போன்ற சிறந்த தமிழர்களை - தமிழ்க் கலைகளை அழித்து நாம் என் வேண்டுமானாலும் செய்யலாம் - எதை வேண்டுமானாலும் செய்யலாம் - எதையும் யாரும் தட்டிக் கேட்க மாட்டார்கள், கேட்க ஆளுமில்லை என்ற நினைப்புதான்!

ஏற்கெனவே தமிழ் மன்னன் கட்டிய கோயிலுக்க மராத்திய வம்சத்தைச் சேர்ந்த ராஜா பான்ஸ்லேவை அறங்காவலராக நியமித்து, அவர் பலவற்றை ஆக்கிரமித்து சுருட்டி வருகிறார். அவர் நியமனத்த எதிர்த்துப் பல ஆண்டுகளாக போராடி வருகிறோம். இப்போது இது வேறு!

இந்தப் பலகை வைத்ததை கடுமையாக எதிர்த்து இந்து சமய அறநிலையத்துறை, தொல்லியல் துறை என அனைவருக்கும் எதிர்ப்பு மனு முறையாகக் கொடுத்து இருக்கிறோம். அவர்கள் வாங்கி வைத்துக் கொண்டு ஆய்வு செய்கிறொம் என்று சொல்லியிருக்கிறார்கள். இன்னும் சில நாட்கள்தான் பொறுத்து இருப்போம். அதற்கு மேல் பொறுக்க மாட்டோம். அந்தப் பலகை இருந்த இடம் தெரியாமல் போகும்!”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Wednesday, March 15, 2017

மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்!

மயிலாடுதுறை மாணவ ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்!
1965இல் - இந்தித் திணிப்பு எதிர்ப்புப் போராட்டத்தின் போது, தமிழ் மொழி காக்க தீக்குளித்த மயிலாடுதுறை மாணவத் தழல் ஈகி சாரங்கபாணி நினைவு நாளான இன்று, அவரது நினைவுத் தூணுக்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையிலான பேரியக்கத் தோழர்கள் வீரவணக்கம் செலுத்தினர்.
“தமிழன்னைக்கு எனது உயிரை துறக்கிறேன்” - இப்படி இறுதியாகக் கூறி தனது இறுதி மூச்சையடக்கியவன் மாணவ ஈகி சாரங்கபாணி. அப்போது அவனுக்கு வயது 20. மயிலாடுதுறையில் உள்ள முடிகொண்டான் ஆற்றங்கரையில் உள்ள மருதவஞ்சேரியில் 1945ஆம் ஆண்டு பிறந்தவர். மயிலாடுதுறை ஏ.வி.சி கல்லூரியில் வணிகவியல் இளங்கலை. முதலாமாண்டு படித்து வந்தவர்.

தமிழ்மொழி காக்க தன்னுடலில் மண்ணெண்ணெயை ஊற்றி உயிர் துறப்போம் என்று முடிவுக்கு வந்தான். அப்போது மற்றவர் நம்மை காப்பாற்றி விட்டால் என்ன செய்வது? என்று யோசித்தான்.

ஒரு மரத்தின் கீழ் நின்று உடல் நனையும்படி மண்ணெண்ணெயை ஊற்றினான். பிறகு தான் கொண்டு வந்திருந்த கயிற்றைக் தன்காலில் கட்டினான். கயிற்றின் மறுபகுதியை மரத்தில் கட்டினான். பிறகு தலை கீழாக தொங்கிக் கொண்டு இந்தி ஒழிக! தமிழ் வாழ்க! என்று முழக்கமிட்டு தனது உடலுக்கு தீ வைத்தான். உடல் முழுக்க எரிந்தது. சிறிது நேரத்திலேயே மரணம் அவனை முத்தமிட்டு அணைத்துக் கொண்டது.

சாரங்கபாணியின் தாயார் மண்ணில் உருண்டு என் மகனின் சாவிற்கு காரணமானவர்கள் நாசமாய் போகட்டும் என்று அழுது புலம்பினார். அதன் பிறகு நடந்த தேர்தலில் பேராயக்கட்சி தோற்று நாசமான கதை அறிவோம்.

42 ஆண்டுகள் கழித்து 2007ஆம் ஆண்டு தமிழக அரசின் சார்பில் மயிலாடுதுறை ஏ.வி.சி.கல்லூரி வளாகம் அருகில் சாரங்கபாணி நினைவுத்தூண் எழுப்பப்பட்டுள்ளது.
 
பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், மயிலாடுதுறை அமைப்பாளர் தோழர் கு. பெரியசாமி, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. தீந்தமிழன், தோழர்கள் ச. செந்தமிழன், நாடக வினோத், விக்னேசு உள்ளிட்ட பேரியக்கத் தோழர்களும் மாணவர்களும் இன்று அந் நினைவுத் தூணுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

தழல் ஈகி சாரங்கபாணிக்கு வீரவணக்கம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com

தென்பெண்ணையைத் திருப்பிவிடும் கர்நாடக அரசின் திட்டத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தல்!

தென்பெண்ணையைத் திருப்பிவிடும் கர்நாடக அரசின் திட்டத்தை இந்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தல்!
தென்பெண்ணை ஆற்றைத் தடுத்துத் திருப்பிவிட கர்நாடக அரசு தீட்டியுள்ள புதிய திட்டத்தை இந்திய அரசு தடை செய்ய வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் வலியுறுத்தியுள்ளது. இது குறித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளரும், தமிழக உழவர் முன்னணி ஆலோசகருமான தோழர் கி. வெங்கட்ராமன் கூறியிருப்பதாவது :

தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி, தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய 5 மாவட்டங்களில் உள்ள 4 இலட்சம் ஏக்கர் விளைநிலங்களை செழிப்படையச் செய்து வரும் தென்பெண்ணை ஆற்றைத் தடுக்க, கர்நாடக அரசு புதிய திட்டம் தீட்டியுள்ளது.

கர்நாடக மாநிலம் – நந்தி மலையில் உற்பத்தியாகும் தென்பெண்ணை ஆறு, கிருட்டிணகிரி மாவட்டம் கெலவரப்பள்ளி வழியாக தமிழ்நாட்டுக்குள் நுழைகிறது. இந்த தண்ணீர் கெலவரப்பள்ளி அணையில் தேக்கி வைக்கப்பட்டு, ஓசூர் பகுதியிலுள்ள 8,000 ஏக்கருக்கு மேலான விளை நிலங்களுக்கும், அங்கிருந்து கிருட்டிணகிரி அணைக்கு வரும் தென்பெண்ணை ஆற்று நீர் மூலம் கிருட்டிணகிரி, காவேரிப்பட்டணம் உள்ளிட்ட பகுதிகளில் சற்றொப்ப 10,000 ஏக்கருக்கு மேலான விளை நிலங்களுக்கும் பாசன நீராகப் பயன்பட்டு வருகிறது.

அதனைத் தொடர்ந்து தருமபுரி, திருவண்ணாமலை, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் வழியாகப் பயணித்து சற்றொப்ப 4 இலட்சம் ஏக்கர் வேளாண் நிலங்களுக்கும், பல இலட்சம் மக்களின் குடிநீருக்கும் தென்பெண்ணை ஆறு பயன்பட்டு வருகிறது.

இத்தனைக்கும், தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு திட்டமிட்டு பல இலட்சம் லிட்டர் கழிவுகளைக் கலந்து மாசுபடுத்து வருவது குறிப்பிடத்தக்கது. தற்போது, தென்பெண்ணை ஆற்றில் கலக்கும் வர்தூர் மற்றும் பெல்லாந்தூர் ஏரிகளின் நீரை ரூபாய் 400 கோடி செலவில் கர்நாடக மாநிலத்தின் மற்ற பகுதிகளின் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளின் தேவைக்காகத் திருப்பி விடும் புதிய திட்டத்தை கர்நாடக அரசு போட்டுள்ளது.

இந்த புதிய திட்டத்துக்குத் தேவையான நிதியை இங்கிலாந்து அரசிடம் கடனாகப் பெறவும், ஆற்று நீரைச் சுத்தப்படுத்தும் புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தவும் திட்டம் தீட்டப்பட்டுள்ளது. இதற்கான பணிகளை, இசுரேல் நாட்டைச் சேர்ந்த தகால் என்ற தனியார் நிறுவனம் செய்ய உள்ளதாகவும் தெரிய வருகிறது.

இவ்வாறு தென்பெண்ணை ஆற்று நீர் தடுக்கப்பட்டால், தமிழ்நாட்டின் 4 லட்சம் ஏக்கர் வேளாண்மையும், பல இலட்சம் மக்களின் குடிநீரும் வினாக்குறியாகும் ஆபத்து உள்ளது. இந்திய அரசு உடனடியாகத் தலையிட்டு, கர்நாடக அரசின் இப்புதியத் திட்டத்திற்குத் தடை விதிக்க வேண்டும். தென்பெண்ணை ஆற்றில் கர்நாடக அரசு கழிவு நீர் கலப்பதையும் தடுத்து நிறுத்த வேண்டும். தமிழ்நாடு அரசு, உடனடியாக கவனம் செலுத்தி, இத்திட்டத்தைத் தடுத்து நிறுத்த முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
               www.fb.com/uzhavarmunnani
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Sunday, March 12, 2017

மீனவத் தமிழன் பிரிட்சோ படுகொலைக்கு நீதி கேட்டு... இராமேசுவரம் நடக்கும் தொடர் போராட்டத்தில் . . .பெ. மணியரசன் பங்கேற்பு..!

மீனவத் தமிழன் பிரிட்சோ படுகொலைக்கு நீதி கேட்டு... இராமேசுவரம் நடக்கும் தொடர் போராட்டத்தில் . . .தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பங்கேற்பு..!
தமிழர்களின் கச்சத்தீவை சிங்கள இனவெறி அரசுக்குத் தாரை வார்த்ததாலும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாததாலும் இதுவரை சற்றொப்ப 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இராமேசுவரத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர், சிங்கள இனவெறிக் கடற்படையினரால் கடந்த 07.03.2017 அன்றிரவு நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இன்னொரு மீனவர் சரோன் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.

மீனவர் பிரிட்சோ படுகொலையைக் கண்டித்து, இராமேசுரம் - தங்கச்சி மடத்தில் மீனவர்களின் தொடர் போராட்டம் நடைபெற்றுக் கொண்டுள்ளது. இன்று (12.03.2017) பிற்பகல் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழா பெ. மணியரசன் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து, போராட்டப் பந்தலில் உரையாற்றினார். மீனவர் பிரிட்சோவின் குடும்பத்தினரை சந்தித்து ஆறுதல் கூறினார்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் மதுரை இரெ. இராசு, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை, பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இலெ. இராமசாமி, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, தோழர்கள் கரிகாலன், சிவா, தங்கப்பழனி, நாடக வினோத் உள்ளிட்டோர் பேரியக்கத் தோழர்களும் உடன் வந்தனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

தோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?”

தோழர் பெ. மணியரசன் எழுதிய...“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?
நூலின் தலைப்புகள்.................

இந்தியத் தேசியம்
புனைவுத் தேசியம்.....................................................

பெரியாரின் தேசிய மறுப்பும்
திராவிட ஏற்பும்..........................................................

விருப்பம்போல் தேசிய இனத்தை
மாற்றிக் கொள்ள முடியுமா?......................................

பெரியாரியர்களின்
தமிழின ஒவ்வாமை..................................................

மொழிவழித் தாயகப் போராட்டமும்
பெரியாரின் தன்முரண்பாடுகளும்............................

தமிழ்த் தேசியம் வெள்ளாளரியமா?
குருதித் தூய்மைவாதமா?..........................................

கால்டுவெல் கண்டெடுத்த
திராவிடம்...................................................................

கால்டுவெல்லுக்கு வழிகாட்டியது
மனுதர்ம சாஸ்திரம்.......

இன்றும் பார்ப்பனர்களே
திராவிடர்கள்..............................................................

ஆரியச் சான்றுகளே!
அகச்சான்று இல்லை!.............................................

வில் வலிமையைவிட
சொல் வலிமை பெரிது..............................................

பெரியார் காமராசரை - காங்கிரசை
ஆதரித்தது ஏன்?....................................................

பகுத்தறிவுவாதம் - நுகர்வுவாதம்
அறிவியல் வழிபாடு..................................................

இட ஒதுக்கீடு திராவிட இயக்கம் மட்டுமே
செய்த சாதனையா?................................................

திராவிட இயக்கத்தின் மூதாதை
நீதிக்கட்சியா?...........................................................

தமிழர் சிந்தனை மரபு..............................................

தமிழர் மறுமலர்ச்சி.................................................

திசைமாற்றிய இருவிசைகள்..................................

இதற்க்கான விடை“திராவிடம் : தமிழர் மறுமலர்ச்சியை வளர்த்ததா? வழிமாற்றியதா?” நூலில்

பன்மைவெளி வெளியீடு
பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/panmaiveli/?fref=ts
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com

Friday, March 10, 2017

"பெண்ணுரிமையும் மண்ணுரிமையும்" தஞ்சையில் மகளிர் நாள் கருத்தரங்கு!

"பெண்ணுரிமையும் மண்ணுரிமையும்" தஞ்சையில் மகளிர் நாள் கருத்தரங்கு!
அனைத்துலக மகளிர் நாளை முன்னிட்டு, தஞ்சையில் வரும் 11.03.2017 அன்று, மகளிர் ஆயம் சார்பில், “பெண்ணுரிமையும் மண்ணுரிமையும்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

போராளித் தோழர் புதுமொழி (எ) ஜன்னா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான 11.03.2017 அன்று, தஞ்சை பெசண்ட் அரங்கில் மாலை 4.30 மணிக்கு - தோழர் ஜன்ன நினைவரங்கில் நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி தலைமை தாங்குகிறார். தோழர் சே. அமுதா வரவேற்புரையாற்ற, தோழர் சி. இராசப்பிரியா தொடக்கவுரையாற்றுகிறார்.

மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு திருமதி. சித்ரா செயராமன், தோழர் செம்மலர் ஆகியோர் உரைவீச்சு நிகழ்த்துகின்றனர். பாவலர்கள் இரா.பெ. வெற்றிச்செல்வி, ந. பாவேந்தி, செ. தமிழினி ஆகியோர் பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கருத்தரங்கை நிறைவு செய்து சிறப்புரையாற்றுகிறார். தோழர் இரா. யமுனாராணி நன்றி கூறுகிறார்.

இக்கருத்தரங்கில், தமிழின உணர்வாளர்கள் திரளாகக் கலந்து கொள்ள அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.

தொடர்புக்கு:
7373456737, 9486927540
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com


Thursday, March 9, 2017

மீனவர் பிரிட்சோ படுகொலை :திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!

மீனவர் பிரிட்சோ படுகொலை :திருச்சியில் கண்டன ஆர்ப்பாட்டம்!
தமிழர்களின் கச்சத்தீவை சிங்கள இனவெறி அரசுக்குத் தாரை வார்த்ததாலும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாததாலும் இதுவரை சற்றொப்ப 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இராமேசுவரத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர், சிங்கள இனவெறிக் கடற்படையினரால் கடந்த 07.03.2017 அன்றிரவு நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இன்னொரு மீனவர் சரோன் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
மீனவர் பிரிட்சோ படுகொலையைக் கண்டித்து, நேற்று (08.03.2017) மாலை, திருச்சி திருவள்ளுவர் பேருந்து நிலையம் அருகில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்தியது.
ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் முகிலினியன் தலைமை தாங்கினார். மீனவர் துயரத்தை உருவகப்படுத்தும் வகையில் அருட்திரு. மனுவேல் அவர்கள் உணர்ச்சிமிகுப் பாடலைப் பாடி எழுச்சியூட்டினார். மீனவர் பிரட்சோ படுகொலையைக் கண்டித்தும், சிங்கள - இந்திய அரசுகளின் தமிழர் விரோதச் செயல்களைக் கண்டித்தும் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

இதனையடுத்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் திருச்சி மாநகர்ச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன் கண்டன உரையாற்றினார். மகளிர் ஆயம் தோழர் வெள்ளம்மாள், வேலுநாச்சியாரின் ஆட்சியின் போது பெண் போராளியாகச் செயல்பட்ட தற்கொடைப் போராளி குயிலியையும் இன்றைய மகளிர் நாளையும் ஒப்பிட்டு, இப்படிப்பட்ட தமிழ் இனத்திற்கு நேர்ந்துள்ள துயரங்களை வெளிப்படுத்தி உரையாற்றினார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திருச்சி அமைப்பாளர் பாவலர் நா. இராசாரகுநாதன், பைந்தமிழ் இயக்க இயக்குநர் புலவர் தமிழாளன், தமிழர் தேசிய முன்னணி துணைத் தலைவர் வழக்கறிஞர் த. பானுமதி, தமிழக விவசாயிகள் சங்கத் திருச்சி மாவட்டத் தலைவர் திரு. ம.ப. சின்னத்துரை, பொறியாளர் முத்துக்குமாரசாமி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர் மு. தியாகராசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.comWednesday, March 8, 2017

அனைவர்க்குமான இலட்சிய திசையில் பெண்ணுரிமைப் பயணம்! பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! மகளிர் நாள் - மார்ச்சு 8

அனைவர்க்குமான இலட்சிய திசையில் பெண்ணுரிமைப் பயணம்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை! மகளிர் நாள் - மார்ச்சு 8
தமிழ்நாட்டில் தமிழர் உரிமைப் போராட்டங்கள் வீறு பெற, வீறு பெற மகளிர் விழிப்புணர்ச்சியும், மகளிர் உரிமைக் களங்களும் விரிவடைந்து வருகின்றன.

தைப்புரட்சிப் போராட்டங்களில் மகளிர் பங்களிப்பு அளப்பரியது; கிட்டத்தட்ட ஆண்களுக்கு நிகராக – சரிபாதிப் பங்களிப்பு மகளிர் வழங்கினர். இப்போது நெடுவாசல் சுற்று வட்டாரத்தில் நடந்து வரும் நச்சுக் குழாய் எதிர்ப்புப் போராட்டத்திலும் மகளிர் பங்கேற்பு வியக்கத்தக்க வகையில் உள்ளது.

சிறுமிகள், மாணவிகள், இளம்பெண்கள், நடுத்தர அகவையினர், அகவை முதிர்ந்தோர், அதிகம் படித்தோர், அதிகம் படிக்காதோர் எனப் பலவகைப் பெண்களும் இப்போராட்டங்களில் பங்கேற்று வருகின்றனர்.

தமிழ்த்தேசியப் பாவலர் பாரதிதாசன் இக்காட்சிகளைப் பார்த்திருந்தால் பூரித்துப் பொங்கி, புதுப்புது மகளிர் புரட்சிப் பாக்கள் புனைந்திருப்பார்.

அவர் வாழ்ந்த காலத்தில் கல்லூரி சென்று கற்றுத் திரும்பிய மாணவிகளைக் கண்டபோது, பூரித்து அவர் எழுதிய பாடல் வரிகள் இதோ:

கலையினில் வளர்ந்தும், நாட்டுக்
 கவிதையில் ஒளிமி குந்தும்,
நிலவிடும் நிலா முகத்து
 நீலப்பூ விழி மங்கைமார்
 தலையாய கலைகள் ஆய்ந்து
 தம்வீடு போதல் கண்டேன்
 உலவிடு மடமைப் பேயின்
 உடம்பின்தோல் உரிதல் கண்டேன்!
 (அழகின் சிரிப்பு, பட்டணம், 16).

ஆண்களின் எண்ணிக்கைக்குச் சமமாகவே தமிழ்நாட்டில் பெண்கள் தொடக்கக் கல்வியிலிருந்து உயர் கல்வி வரை படிக்கிறார்கள்.

இந்தியத் துணைக் கண்டத்தில் எந்த முற்போக்குக் கருத்தையும் முதலில் முன்மொழிவது அல்லது முதலில் வரவேற்பது தமிழ்நாடே! தொழிற்சங்க உரிமை, பொதுவுடைமை, மகளிர் உரிமை, தேசிய இன விடுதலை, பகுத்தறிவு போன்ற முற்போக்குக் கருத்துகளை ஏற்பதில் பிரித்தானிய இந்தியாவில் தமிழ்நாடே முன்னணியில் நின்றது.

தமிழ் இனத்தின் சிந்தனை வளம் மிகவும் பழைமையானது! மூவாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே, ஆண்மகனைத் தலைவன் என்றும் பெண்மகளைத் தலைவி என்றும் சமநிலையில் பேசிய மொழி தமிழ்மொழி!

ஆண்டவனைக்கூட ஆண்பாதி – பெண்பாதி என்று சிந்தித்த இனம் தமிழினம்!

சங்க காலத்தில் இருந்த தமிழ்ப் பெண் புலவர்கள் எண்ணிக்கைக்கு நிகராக – பெண் பால் அறிஞர்கள் அந்தக் காலத்தில் வேறெந்த மொழியிலும் இல்லை. சங்க காலத்தில் திருமணச் சடங்கை நிறைவேற்றியவர்கள் மூத்த பெண்களே!

இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் கண்ணகி என்ற பெண்ணைக் காப்பியத் தலைவியாக்கி இளங்கோவடிகள் சிலப்பதிகாரம் படைத்தார். அடுத்து வந்த மணிமேகலைக் காப்பியத்தின் பெயரும் தலைவியும் பெண்ணே!

இப்படிப்பட்ட தமிழினத்தில் காலப்போக்கில் ஏற்பட்ட ஆணாதிக்கக் கொடுமைகள் – பெண்ணடிமைத்தனம் கொஞ்ச நஞ்சமல்ல!

பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பாதியில் தமிழ்நாட்டில் தோன்றிய அத்திப்பாக்கம் வெங்கடாசல நாயக்கர். சென்னை லௌகீக சங்கத்தினர், அயோத்தி தாசப் பண்டிதர் போன்றோர் பெண்ணுரிமைக் கருத்துகளை வலியுறுத்தினர். இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் பெண் விடுதலை எழுச்சிப் பாக்களை பாரதியார் படைத்தார்!

பெரியார் தலைமையில் இயங்கிய சுயமரியாதை இயக்கத்தின் முதல் மாநில மாநாடு செங்கல்பட்டில் 1929 பிப்ரவரி 17, 18 நாட்களில் நடந்தது. இதில் பல்வேறு முற்போக்குத் தீர்மானங்கள் போடப்பட்டன. அவற்றில் ஒன்று, பெண்களுக்குச் சம உரிமை அளிப்பது!

இம்மாநாட்டிற்குத் தலைமை தாங்கியவர் டபுள்யு.பி.ஏ. சவுந்தரபாண்டியனார்; இம்மாநாட்டில் கொடி ஏற்றி உரையாற்றியவர் சர் பி.டி. இராசன்! இம்மாநாட்டில் பல்லாயிரக்கணக்கில் தமிழர்கள் கூடி இருந்தனர்!

மறைமலை அடிகளார் தலைமை தாங்கி நடத்தி வந்த பொதுநிலைக் கழகத்தின் 20-ஆம் ஆண்டு நிறைவு மாநாடு சென்னைப் பல்லாவரத்தில் 1931 – பிப்ரவரி 2, 3, 4, 5 ஆகிய நாட்களில் நடந்தது. அதில் இயற்றப்பட்ட தீர்மானங்களில், “கோயில்களில் பொட்டுக் கட்டும் வழக்கத்தை ஒழிப்பது, பெண்களுக்கு ஆடவரைப் போல் பெற்றோர் சொத்தில் சம பங்கு அளிப்பது, குழந்தைத் திருமணத் தடைச் சட்டத்தை உடனடியாகச் செயல்படுத்துவது, சாதிக் கலப்புத் திருமணத்தை ஏற்பது, கைம்பெண் (விதவை) திருமணத்தை ஏற்பது” என்பவையும் இடம் பெற்றிருந்தன.

செங்கல்பட்டு முதல் சுயமரியாதை மாநில மாநாட்டை அடுத்து, பெரியார் பெண்ணுரிமைச் செயல்பாடுகள் பலவற்றை முன்னெடுத்து நடைமுறைப்படுத்தி வந்தார். தாலி மறுப்புத் திருமணம், கைம்பெண் மறுமணம், சாதி மறுப்புத் திருமணம் பலவற்றை நடத்திக் காட்டினார். அவர் வழியில் அண்ணாவும் செயல்பட்டார்.

இந்த முற்போக்குச் செயல்பாட்டிற்குரிய சிறந்த களமாக விளங்கியது. இதற்கு மரபு வழி முற்போக்குத் “தமிழ் மனம்” தக்க வாய்ப்பளித்தது. திராவிட மாநிலங்கள் என்று சொல்லப்படும் வேறு மாநிலங்களிலோ அல்லது இந்தியத் துணைக் கண்டத்தில் வேறு இனங்களிலோ இவ்வாறான பெண் விடுதலைச் செயல்பாடுகள் தமிழ்நாட்டைப் போல் நடைபெறவில்லை. கம்யூனிஸ்ட் கட்சி வளர்ச்சி பெற்ற மாநிலங்களில்கூட இவ்வாறு நடைபெறவில்லை!

அரசியலில் எவ்வளவோ சீரழிவுகளுக்கும், ஊழல்களுக்கும், கங்காணித்தனங்களுக்கும் கொள்கலனாகிப் போன தி.மு.க., அ.இ.அ.தி.மு.க. கட்சிகளின் ஆட்சிகள்கூட பெண்ணுரிமைக்கான புதிய சட்டங்களை இயற்றியமை, மேற்கண்ட தமிழின மரபு வழி முற்போக்கு அழுத்தங்களால்தான்!

துல்லியப்படுத்தப்பட்ட புதிய பெண் சொத்துரிமைச் சட்டத்தை தி.மு.க. ஆட்சி நிறைவேற்றியது (1989). உள்ளாட்சிப் பதவிக்கான தேர்தல்களில் ஐம்பது விழுக்காடு பெண்களுக்கு இட ஒதுக்கீடு வழங்கியது அ.இ.அ.தி.மு.க. ஆட்சி (2016).

இப்படிப்பட்ட பெண்ணுரிமைச் சிந்தனைகளையும் பெண் விடுதலைச் செயல்பாடுகளையும் மரபு வழியில் தொடர்ச்சியாகக் கொண்டுள்ள தமிழினத்தில், இன்று நிகழ்ந்து வரும் பெண் ஒடுக்குமுறை வன்செயல்களும், பெண்ணுரிமை மறுப்புக் கொடுமைகளும் அறப்பண்பாடு கொண்ட தமிழர்கள் நெஞ்சில் ஈட்டியாகக் குத்துகின்றன.

அரியலூர் மாவட்டம் சிறுகடம்பூரில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த பதினாறு அகவைச் சிறுமி நந்தினையை கொடியவர்கள் கூட்டு வல்லுறவு கொண்டு கொலை செய்து தூக்கி எறிந்தனர்.

சென்னை மவுலிவாக்கத்தில் ஏழு அகவைப் பெண் குழந்தை ஆசினி காமவெறியனால் வல்லுறவு கொண்டு கொல்லப்பட்டது.

இந்த வரிசையில் வெளியே வந்தவை சில; வெளியே வராதவை பல!

காதலிக்க மறுக்கும் பெண்ணைக் கொலை செய்வது, அப்பெண்ணின் முகத்தில் அமிலம் வீசி சிதைப்பது அல்லது அப்பெண்ணை அழிப்பது, திருமணம் செய்வதற்கு மணமகனுக்குக் கொள்ளை விலை கொடுப்பது, அந்தக் கொள்ளை விலையில் பாக்கி இருந்தால் பெண்ணை பிறந்த வீட்டுக்கு அனுப்பி விடுவது, அல்லது சமையல் எரிவளியைத் திறந்து விட்டு தீக்கு இரையாக்குவது, அப்பப்பா – எத்தனை, எத்தனை வடிவங்களில் பெண்களுக்கெதிரான வன்கொடுமைகள்!

பெண் கல்வி, ஆண் கல்வி பெருகியுள்ள காலத்தில், விழிப்புணர்ச்சி வளர்ந்துள்ள காலத்தில் பெண்களுக்கெதிரான இத்தனை வன்கொடுமைகள் ஏன்? புதுப்புது வடிவங்களில் பெண்ணடிமைத்தனம் ஏன்? அதுவும் மரபு வழியில் முற்போக்குத் “தமிழ் மனம்” படைத்தத் தமிழினத்தில் இக்கொடுமைகள் ஏன்?

தமிழ்நாட்டில் கல்வி வளர்ச்சி, வேலை வாய்ப்பு வளர்ச்சி, பொருளியல் வளர்ச்சி, நுகர்வு வளர்ச்சி, செய்தித் தொடர்பு வளர்ச்சி, உள்கட்டுமான வளர்ச்சி போன்றவை ஒப்பீட்டளவில் முன்னேற்றம் கண்டுள்ளன. ஆனால் அவற்றிற்கு இணையாக மன வளர்ச்சி ஏற்படவில்லை! மன வளர்ச்சி என்பது மேற்கண்டவற்றிற்கு இணையாக அல்ல, மேற்கண்டவற்றை மேலாண்மை செலுத்தும் அளவில் வளர வேண்டும்.

மன வளர்ச்சி என்பது பெரிதும் சமூகம் சார்ந்தது. சமூகத்தின் மன வளர்ச்சிக்கேற்பவே, சராசரித் தனி மனித மன வளர்ச்சியும் இருக்கும்.

இலட்சியங்களை நோக்கிச் சமூகம் பயணம் செய்யும் போதுதான், சமூகத்தில் உயர் பண்புகள் வளரும்; அதுவே மன வளர்ச்சி!

அண்மைக்கால எடுத்துக்காட்டு ஒன்று: தைப்புரட்சியில் சென்னைக் கடற்கரையில் இலட்சக்கணக்கிலும், மாவட்டங்களில் பல்லாயிரக்கணக்கிலும் இளம் ஆண்களும் பெண்களும் இரவும் பகலும் பல நாள் ஒரே இடத்தில் தங்கி கோரிக்கை முழக்கமிட்டனர். பெண்களுக்கு எதிரான ஒரு சிறு தீய நிகழ்வுகூட அங்கு இல்லை! அவர்களை வழி நடத்தியது இலட்சியம்!

சமூகம் முழுவதற்குமான இலட்சியம் உருவாகிட – அதற்கான அடிப்படை சமூக அலகு எது? ஒரு மொழி பேசும் மக்கள் கூட்டம்! அதன் பெயர் என்ன? இனம் அல்லது தேசிய இனம்!

உலக மானிடம் எப்படி சமூகங்களாக பிரிக்கப்பட்டுள்ளது? தேசிய இனம், தேசிய மொழி அடிப்படையில்! அந்தந்தச் சமூகத்திற்கு அந்த அடிப்படையிலேயே இறையாண்மை அதாவது சுதந்திரத் தாயகம் அமைக்கப்பட்டுள்ளது. இதில் விதிவிலக்காக சுதந்திரத் தாயகம் அமைக்கப்படாத தேசிய இனங்கள் அதற்காகப் போராடிக் கொண்டுள்ளன!

தமிழ்நாட்டில் 19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் தமிழின அடிப்படையிலான மறுமலர்ச்சி தொடங்கியது. இருபதாம் நூற்றாண்டில் இன அரசியலோடு, தமிழர் மறுமலர்ச்சி செயல்பட்டது. அக்காலத்தில்தான் பெரியார், மறைமலை அடிகளார் சீர்திருத்தக் கருத்துகள் பகுத்தறிவுத் தளத்திலும் ஆன்மிகத் தளத்தில் மக்கள் அரங்கில் செயல்பட்டன.

தமிழ் இனத்தில் தொடங்கி, ஆரிய உருவாக்கமான திராவிடக் கற்பனை இனத்திற்குப் பெரியார் சென்றாலும் அவரின் செயற்களம் தமிழினத் தாயகம்தான்! இப்பின்னணியில் தனித்தமிழ்நாடு, தனித் திராவிட நாடு கோரிக்கைகள் தமிழ்நாட்டில் மக்கள் கோரிக்கைகளாக, சமூக இலட்சியங்களாக வளர்ச்சி பெற்றன!

மகளிர் விடுதலைக்கு உழைப்போர், போராடுவோர் இந்த வரலாற்றுப் படிப்பினைகளைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

தொழிற்சாலைகளில் – தொழிலாளர் உரிமைகளுக்காகத் தொழிற்சங்கம் செயல்படுவதுபோல், தமிழ்ப் பெண்களின் உரிமைப் போராட்டத்தை, பெண்களுக்கான அரங்க நடவடிக்கையாக மட்டும் குறுக்கிவிடக் கூடாது. பெண்ணியம் பேசுவோர் இதில் கவனமாக இருக்க வேண்டும். ஒட்டு மொத்தத் தமிழர்களின் இலட்சிய இயங்கு திசையில் பிரிக்க முடியாததாகப் பெண்ணுரிமை இணைக்கப்பட வேண்டும்.

தைப்புரட்சியின் “தமிழன்டா” முழக்கத்தையும் கவனத்தில் கொள்ள வேண்டும். ஒடுக்குமுறைகளுக்கு எதிரான தமிழர் உரிமை உணர்ச்சியின் பொது முழக்கமாகவே ஆண்களும் பெண்களும் “தமிழன்டா” முழங்கினர்.

இறையாண்மையுள்ள தமிழ்த்தேசம் அமைக்கும் தமிழ்த்தேசிய இலட்சியம்தான் சமகாலத் தமிழர்களுக்கான இன்றைய சமூகப் பொது இலட்சியம்! இந்த இலட்சியத்தின் ஊடாகவே, ஆண் – பெண் சமத்துவம் உள்ளிட்ட சமூகச் சமத்துவங்கள் அனைத்தையும் முன்னெடுக்க வேண்டும். அந்த முன்னெடுப்பே மக்கள் பங்கெடுக்கும் சமூக மாற்றமாக அமையும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்


பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Tuesday, March 7, 2017

இளந்தமிழன் பிரிட்சோ படுகொலை: "இந்தியாவுக்கு இலங்கை நட்பு நாடு என்றால் இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா?" பெ. மணியரசன் வினா!

இளந்தமிழன் பிரிட்சோ படுகொலை: "இந்தியாவுக்கு இலங்கை நட்பு நாடு என்றால் இந்தியா தமிழ்நாட்டுக்கு எதிரி நாடா?"  தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் வினா!
நேற்றிரவு (06.03.2017), இராமேசுவரம் – தங்கச்சி மடத்தைச் சேர்ந்த தமிழ் மீனவர்கள் கச்சத்தீவு அருகில் மீன் பிடித்துக் கொண்டிருந்தபோது, சிங்களக் கடற்படைக் காடையர்கள் அவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியிருக்கிறார்கள். அதில், பிரிட்சோ என்ற இளைஞர் அந்த இடத்திலேயே இறந்துவிட்டார். சரோன் என்ற இளைஞர் படுகாயமுற்று மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு உள்ளார்.

சிங்களக் காடையர் நடத்திய இந்தத் தமிழினப் படுகொலை தமிழ்நாட்டுத் தமிழர்கள் மற்றும் உலகெங்கும் வாழும் தமிழர்கள் நெஞ்சில் ஈட்டி பாய்ச்சியதுபோல் கொடுந் துன்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரசு வழக்கம்போல் தனது இலங்கைத் தூதரகத்தின் வழியாக “கவலை” தெரிவித்து, கபட நாடகமாடியுள்ளது. இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரமோடி, இந்த இனக் கொலையை ஏன் கண்டிக்கவில்லை? கண்டனம் தெரிவித்தால் அவருடைய தகுதிக்கு அவமரியாதையா? அல்லது “அடிமைத் தமிழனுக்காக” தனது நட்பு நாடான இலங்கையைக் கண்டிப்பது நல்லுறவில் பாதிப்பு ஏற்படுத்தும் என்ற பாசப் பிணைப்பா?
உலகில் எங்கேனும் இந்தியாவைச் சேர்ந்தவர்கள் கொலை செய்யப்பட்டால் இந்திய வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் உடனே கண்டிக்கிறார். ஆனால், தமிழ்நாட்டு மீனவர் இலங்கை அரசால் கொலை செய்யப்பட்டால் அவர் கண்டிக்க மறுக்கிறார். தமிழர்கள் இந்தியக் குடிமக்கள் இல்லை, இந்தியாவின் அடிமைகள் என்று அவர் கருதுகிறாரா?

சிங்களக் கடற்படைக் காடையர்கள் தமிழக மீனவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடத்தும்போதும், மீனவர்களைக் கடத்திக் கொண்டுபோகும் போதும், இந்தியக் கடலோரக் காவல்படை தலையிட்டு இந்திய சட்டப்படியும், சர்வதேச சட்டப்படியும் இதுவரை ஒரு தடவைகூட அவ் வன்செயல்களைத் தடுக்கவில்லை.

தமிழ்நாட்டுக் கடல் எல்லைக்குள்ளும் பன்னாட்டுக் கடல் பரப்பிலும் தமிழக மீனவர்களை பலதடவை சிங்களக் கடற்படையினர் சுட்டுக் கொன்றிருக்கிறார்கள். ஒரு தடவை கூட அக்கொலைகாரர்களைப் பிடித்துக் கொண்டு வந்து வழக்கு நடத்த முன் வரவில்லை, இந்திய அரசு!

இந்திய அரசின் மறைமுக ஒப்புதலோடும் ஆதரவோடும்தான் சிங்களக் கடற்படையினர் தமிழக மீனவர்களை – தமிழ்நாட்டுக் கடற்பரப்பிலும் பன்னாட்டுக் கடல் பரப்பிலும் சுட்டுக் கொல்கிறார்கள். தாக்குகிறார்கள். சிறைகளில் அடைக்கிறார்கள். படகுகளைக் கடத்திக் கொண்டு போகிறார்கள். அது மட்டுமின்றி, சிங்களக் கடற்படைக்கு இந்திய அரசு தொடர்ந்து பயிற்சி கொடுத்து வருகிறது.

தமிழர்களுக்கு எதிரான தனது கொலைவெறி நடவடிக்கைகளை இந்திய அரசு கண்டிக்காது என்ற துணிச்சலில் இலங்கை அரசு தமிழ்நாட்டு மீனவர்களை தொடர்ந்து தாக்கி வருகிறது. அத்துடன், பிரிட்சோவை தனது கடற்படை கொல்லவில்லை என்று இந்தியாவை நம்பித் துணிந்தும் பொய் சொல்கிறது.

ஈழத்தமிழர்கள் ஒன்றரை இலட்சம் பேரை சிங்கள இனவெறி அரசு இனப்படுகொலை செய்த போது, அதற்குத் துணை நின்றது இந்திய அரசு! அறுநூறுக்கும் மேற்பட்ட தமிழ்நாட்டு மீனவர்களை அவர்கள் மீன் பிடித்துக் கொண்டிருந்த போது தொடர்ந்து கொலை செய்து வருவதை இந்திய அரசு தடுக்கவில்லை என்பதுடன், கண்டிக்கவுமில்லை!

நாடாளுமன்றத்தில் இதுபற்றி தமிழ்நாட்டு உறுப்பினர்கள் வினா எழுப்பினால், இலங்கை இந்தியாவின் நட்பு நாடு என்று இந்திய அரசு விடை கூறுகிறது. தமிழர்களை இனப்படுகொலை செய்யும் இலங்கை, இந்தியாவின் “நட்பு நாடு” என்றால், தமிழ்நாட்டுக்கு இந்தியா “எதிரி நாடு” என்று தன்னைத் தானே அறிவித்துக் கொள்கிறதா?
தமிழ்நாட்டுத் தமிழர்கள் இந்த உண்மையை உணர்ந்து, அதற்குரிய எதிர்வினையாற்ற சிந்தனையாலும் செயலாலும் அணியமாக வேண்டும். தமிழ்நாடு அரசு என்பது இந்தியாவின் தமிழின விரோதச் செயல்களைத் தட்டிக் கேட்காத, தடுத்து நிறுத்தாத கங்காணி அரசாகவே தி.மு.க. ஆட்சியிலும், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியிலும் தொடர்கிறது.
எனவே, இந்தத் தேர்தல் ஆதாயக் கட்சிகளுக்கு வெளியே தமிழர்கள் இனத்தற்காப்புப் போராட்டங்களை நடத்த வேண்டிய தேவையுள்ளது. சிங்களக் கடற்படைக் காடையர்களால் கொல்லப்பட்ட இளந்தமிழன் பிரிட்சோ மீது ஆணையிட்டு தமிழினத் தற்காப்பு அரசியலையும், அறப்போராட்டங்களையும் முன்னெடுப்போம்!

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com 

இராமேசுவரம் மீனவர் பிரிட்சோ படுகொலை : தருமபுரியில் மோடி – சிறீசேனா படங்கள் எரிப்பு!

இராமேசுவரம் மீனவர் பிரிட்சோ படுகொலை : தருமபுரியில் மோடி – சிறீசேனா படங்கள் எரிப்பு!
தமிழர்களின் கச்சத்தீவை சிங்கள இனவெறி அரசுக்குத் தாரை வார்த்ததாலும், தமிழ்நாட்டு மீனவர்களுக்கு பாதுகாப்பு அளிக்கப்படாததாலும் இதுவரை சற்றொப்ப 600க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள் சிங்களக் கடற்படையினரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாட்டின் கடல் எல்லைக்குள் மீன் பிடித்த இராமேசுவரத்தைச் சேர்ந்த பிரிட்சோ என்ற மீனவர், சிங்கள இனவெறிக் கடற்படையினரால் நேற்றிரவு (07.03.2017) நடுக்கடலில் சுட்டுக் கொல்லப்பட்டார். துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இன்னொரு மீனவர் தீவிர சிகிச்சை மேற்கொண்டு வருகிறார்.
மீனவர் பிரிட்சோ படுகொலையைக் கண்டித்து, இன்று (07.03.2017) காலை, தருமபுரி – இந்திய அரசுத் தொலைத்தொடர்பு அலுவலகம் அருகில், தமிழ்த்தேசியப் பேரியக்க தருமபுரி செயலாளர் தோழர் க. விசயன் தலைமையில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திரமோடி, சிங்கள அதிபர் சிறீசேனா ஆகியோரது உருவப்படங்கள் தீ வைத்துக் கொளுத்தப்பட்டன.
“கண்டிக்கின்றோம் கண்டிக்கின்றோம், மீனவர் படுகொலையைக் கண்டிக்கின்றோம்”, “இலங்கை வேண்டுமா? தமிழ்நாடு வேண்டுமா? இந்திய அரசே முடிவு செய்!”, “பாதுகாப்பு வழங்கு பாதுகாப்பு வழங்கு, தமிழக மீனவருக்குப் பாதுகாப்பு வழங்கு!” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்கள் ஆர்ப்பாட்டத்தில் எழுப்பப்பட்டன. அய்யா தங்கவேலு, முருகேசன், பாவணகுமார், அன்பழகன் உள்ளிட்ட தோழர்கள் இதில் பங்கேற்றனர்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhdesiyam.com

Monday, March 6, 2017

தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் காழ்ப்புணர்ச்சி கக்குவது ஏன்? - சிறப்புக் கட்டுரை

தமிழர்களுக்கு எதிராக ஸ்டாலின் ராஜாங்கம் காழ்ப்புணர்ச்சி கக்குவது ஏன்? சிறப்புக் கட்டுரை 

இன்றைய (06.03.2017) தமிழ் இந்து நாளேட்டில், ஸ்டாலின் ராஜாங்கம் எழுதிய, “ஷிமோகா மேயரின் அடையாளம் ‘தமிழர்’ மட்டுமல்ல” என்ற பத்தியைப் படிக்க நேர்ந்தது.

கர்நாடக மாநிலம் ஷிமோகா மாநகராட்சிக்கு மேயராக தமிழரான திரு. ஏழுமலை அவர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பதை தமிழ்நாட்டுத் தமிழர்கள் அனைவரும் பாராட்டுகிறோம். அவர் தேர்வு செய்யப்பட்டதற்காகப் பெருமை கொள்கிறோம். ஆனால், இது பற்றி தமிழ் இந்துவில் கட்டுரை எழுதியுள்ள ஸ்டாலின் ராஜாங்கம் பின்வருமாறு தமிழ்த்தேசியத்தைச் சாடுகிறார்.

“சமூகத்தின் எல்லாப் பிரச்சினைகளும் ஒற்றைத் திசையில் தமிழ்த்தேசியவாதத்திற்கான கச்சாப்பொருளாக மாற்றப்பட்டுவிடும் காலத்தில் வாழ்கிறோம். ஆனால் ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்த்தேசியம் தராத வாழ்வை நவீனத்தின் விதேச வாழ்வு மூலம் தலித்துகள் பெருமளவு பெற்றிருக்கிறார்கள் என்பதும் வரலாற்று உண்மையாக இருக்கிறது. அதன் தொடர்ச்சியில் ஏழுமலை வருகிறார். (ம.ஜ.க. – பா.ச.க. கூட்டணியை மதிப்பிட வேண்டியது தனியானது)”.

தமிழ்நாட்டில் பொதுத் தொகுதியில் பெரும்பாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பினரை முக்கியக் கட்சிகள் வேட்பாளராக நிறுத்துவதில்லை என்ற குறையைத் தமிழ்த்தேசியராகிய நாங்களும் உணர்கிறோம். அக்குறையை நீக்கும் வகையில் கருத்துப் பரிமாற்றங்கள், திறனாய்வுகள் வர வேண்டியது மிகமிகத் தேவை.

ஆனால், ஸ்டாலின் ராஜாங்கம் “ஒரு நூற்றாண்டுக்கு மேலாகத் தமிழ்நாட்டில் தமிழ்த்தேசியம் தராத வாழ்வை கர்நாடகத்தில் நவீனத்தின் விதேச வாழ்வு  வழங்கியிருக்கிறது” என்று கூறுகிறார்.

தமிழ்நாட்டில் ஒரு நூற்றாண்டு காலமாகத் தமிழ்த்தேசியம் ஆட்சியில் இருந்ததா? இன்றுதான் அது ஆட்சியில் இருக்கிறதா? இல்லை!

இந்தியத்தேசியம் – திராவிடத்தேசியம் இரண்டும்தான் இந்திய விடுதலைக்குப் பிறகு தமிழ்நாட்டில் ஆட்சியில் இருந்து வருகின்றன. அவற்றைத் திறனாய்வு செய்யாமல், ஆட்சியில் இல்லாத தமிழ்த்தேசியத்தை – அதுவும் இப்பொழுதுதான் குருத்து விட்டுக் கிளம்பும் தமிழ்த்தேசியத்தைக் குற்றம்சாட்ட மேற்படி தருணத்தை ஸ்டாலின் ராஜாங்கம் பயன்படுத்திக் கொண்டது ஏன்?

தமிழ் இனத்தின் மீது - தமிழ்த்தேசியத்தின் மீது அப்படிப்பட்ட காழ்ப்புணர்ச்சி ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு ஏற்படக் காரணம் என்ன?

ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உட்பட அனைத்துத் தமிழ் மக்களையும் உடன்பிறப்பாக – உறவு முறையாகக் கொண்டிருக்கிறது தமிழ்த்தேசியம்! தமிழினத்தில் பழங்காலத்தில் இல்லாத சாதி முறையும் – சாதி ஒடுக்குமுறையும் - தீண்டாமைக் குற்றச் செயல்களும் வளர்ந்திருப்பதை நீக்க வேண்டும் என்று தமிழ்த்தேசியம் போராடி வருகிறது. “மக்கள் அனைவரும் சமம் – தமிழர்கள் அனைவரும் சமம்” என்பதே தமிழ்த்தேசிய அறம்!

கர்நாடகத்தில் பா.ஜ.க. தலைமையிலான கூட்டணியில் மதச்சார்பற்ற சனதா தளத்தின் வேட்பாளராக திரு. ஏழுமலை அவர்கள் நின்று வெற்றி பெற்றுள்ளார். 1991 நவம்பர் - டிசம்பரில் கன்னடர்கள் நடத்திய காவிரிக் கலவரத்தில் கர்நாடகத்தில் அதிகம் பாதிக்கப்பட்ட தமிழர்கள் – ஒடுக்கப்பட்ட வகுப்புத் தமிழர்களே! அதுவும் ஷிமோகாவில் மிக மோசமாக பாதிக்கப்பட்டு, உயிர் பிழைக்க அகதிகளாகத் தமிழ்நாட்டுக்கு வந்த தமிழர்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு உடன்பிறப்புகளே கணிசமானோர்.

அந்த அச்சத்திலிருந்து அவர்கள் இன்னும் விடுபடாததால்தான், கடந்த 2016ஆம் ஆண்டு செப்டம்பரில், கர்நாடகத்தில் தமிழர்களுக்கு எதிராக கன்னட இனவெறியர்கள் வன்முறையைக் கட்டவிழ்த்துவிட்ட போது, ஷிமோகாவில் வாழும் ஒடுக்கப்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட அனைத்துத் தமிழர்களும் – “தாய்த்தமிழ் சங்கத்தின்” சார்பில் பேரணியாகச் சென்று, அம்மாவட்ட ஆட்சியரிடம் தமிழர்களுக்குப் பாதுகாப்பு வழங்கக் கோரி மனு அளித்தனர். (தமிழ் இந்து, 15.09.2016). ஷிமேகாவில் தமிழர்களுக்கு – குறிப்பாக ஒடுக்கப்பட்ட தமிழர்களுக்கு கன்னடர்கள் உயர்வு தருவதுபோல், சித்திரம் தீட்டுகிறார் ஸ்டாலின் ராஜாங்கம். உண்மை என்ன? ஷிமோகாவில் கணிசமாகத் தமிழர்கள் வாழ்கிறார்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த திரு. ஏழுமலை அவர்களுக்கு அங்கு வாழும் அனைத்து சாதித் தமிழர்களும் இன உணர்ச்சி அடிப்படையில் வாக்களித்திருக்கிறார்கள். இதையும் ஸ்டாலின் ராஜாங்கம் கவனிக்க வேண்டும்.

தமிழ்நாட்டில் எல்லாப் பிரச்சினைகளும் தமிழ்த்தேசியத்தின் கச்சாப்பொருளாக மாறுவதாக ஸ்டாலின் ராஜாங்கம் துயரப்படுகிறார். தீர்ப்பாயம் – உச்ச நீதிமன்றம் ஆகியவை தீர்ப்பு வழங்கிய பிறகும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க இந்திய அரசு மறுப்பது, தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

கச்சத்தீவு ஒருபோதும் இந்தியாவில் இருந்ததில்லை என்று உயர் நீதிமன்றத்திலும் உச்ச நீதிமன்றத்திலும் காங்கிரசு நடுவண் அரசும், பா.ச.க. நடுவண் அரசும் பதில் மனு போட்டிருப்பது தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

அறநூறுக்கும் மேற்பட்ட மீனவர்கள் சிங்களர்களால் கடலிலே சுட்டுக்கொல்லப்பட்ட போதும் - அன்றாடம் கடத்தப்படும் போதும் இந்தியக் கடலோரக் காவல்படை தலையிட்டு தடுத்து நிறுத்தாதது தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

காட்சிப்படுத்தத் தடை செய்யும் விலங்குகள் பட்டியலில் குதிரையைச் சேர்க்காமல், காளையை மட்டும் இந்திய அரசு சேர்த்தது தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

பாலாற்றிலும், பவானியிலும் சட்டவிரோதமாக அம்மாநில அரசுகள் தடுப்பணைகள் கட்டி தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுக்கும்போது, இந்திய அரசு தலையிட்டு நீதி வழங்காமல் இருப்பது, தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

கேரளத்திலிருந்து கர்நாடகம் செல்லும் இந்திய அரசின் (கெயில்) எரிவளிக் குழாய், கேரள மாநிலத்திலும் கர்நாடகத்திலும் சாலையோரங்களில் பதிக்கப்படும்போது, தமிழ்நாட்டில் மட்டும் விளை நிலங்களில் பதிக்கப்படுவது தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

வரலாறு காணாத வறட்சியால் வேளாண்மை பாதிக்கப்பட்டு, தமிழ் உழவர்கள் நஞ்சுண்டும் மாரடைப்பு நேர்ந்தும் 250 பேருக்கு மேல் உயிரிழந்த நிலையிலும், அவர்களின் குடும்பங்களுக்கு உதவித் தொகை வழங்க தமிழ்நாடு அரசுக்கு சிறப்பு நிதி வழங்காமல் இந்திய அரசு ஒதுங்கிக் கொண்டது, தமிழர்களுக்கு எதிரான இனப்பாகுபாடு இல்லையா?

வார்தா புயலின் பேரழிவை, வறட்சியின் கொடுமையை நடுவண் அரசு ஆய்வுக்குழுவினர் நேரில் பார்வையிட்டும் இன்றுவரை இந்திய அரசு நிவாரண நிதி தராமல் இருப்பது, இனப்பாகுபாடு இல்லையா? கர்நாடகத்திற்கு இரண்டு மாதங்களுக்கு முன்பே 1,700 கோடி ரூபாய் முதல் கட்ட உதவியாக வறட்சி நிவாரணம் இந்திய அரசு அளித்துவிட்டது. கர்நாடகத்தில் இருப்பது பா.ச.க.விற்கு எதிர்க்கட்சியாக உள்ள காங்கிரசின் ஆட்சி என்பதும்  கவனிக்கத்தக்கது.

இன்னும் இப்படி எத்தனையோ இனப்பாகுபாடுகளை தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு செய்து வருகிறது. ஏற்கெனவே ஒன்றரை இலட்சம் ஈழத்தமிழர்களை இன அழிப்பு செய்த சிங்களர்களின் போருக்கு இந்திய அரசு துணை நின்றது.

தமிழர்களுக்கு ஏற்பட்டு வரும் இவ்வளவு இன்னல்களைப் பற்றியெல்லாம், தமிழர்களுக்கு எதிராக இந்திய அரசு காட்டும் இனப்பாகுபாட்டு வஞ்சகத்தைப் பற்றியெல்லாம் ஸ்டாலின் ராஜாங்கத்திற்கு அக்கறை இல்லை! தமிழ்நாட்டில் அரங்கேறும் தமிழின வஞ்சகங்களுக்கு எதிராகத் தமிழின உணர்ச்சி வளர்கிறதே என்பதுதான் அவருக்கான கவலையாக இருக்கிறது. அந்தக் கவலை அவரிடம் தமிழர்களுக்கு எதிரான காழ்ப்புணர்ச்சியை  உண்டாக்கிவிட்டது.


ஏற்கெனவே தமிழ் இந்து நடுப்பக்கத்தில் தமிழ்த்தேசியத்திற்கு எதிரான கருத்துகளை வன்மமாகவும், வஞ்சகமாகவும், சுற்றி வளைத்தும் வெளியிட்டுக் கொண்டிருக்கும் சமஸ் எழுதும் பக்கத்தில், ஸ்டாலின் ராஜாங்கத்தின் தமிழர்களுக்கு எதிரான அவருடைய காழ்ப்புணர்ச்சி விமர்சனமும் வந்திருக்கிறது என்பதையும் தமிழர்கள் புரிந்து கொள்வார்கள்.

( கட்டுரையாளர் - க. அருணபாரதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்.

“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்... கி. வெங்கட்ராமன் பேச்சு!

“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சென்னையில் நடத்திய ஆர்ப்பாட்டத்தில்... தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!
“இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் ஏற்றுவோம்!” என ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.

“இந்திய அரசே! இனக்கொலை இலங்கைக்குத் துணை போவதை நிறுத்து! இலங்கையைக் கூண்டிலேற்றத் தீர்மானம் கொண்டு வா!” என்ற கோரிக்கையுடன், ஈழத்தமிழர் வாழ்வுரிமைக் கூட்டமைப்பு சார்பில், இன்று (05.03.2017) மாலை, சென்னை வள்ளுவர் கோட்டத்தில் பல்வேறு அமைப்புகள் பங்கேற்ற ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், உரிமைத் தமிழ்த்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, தந்தை பெரியார் தி.க. தென்சென்னை செயலாளர் தோழர் ச. குமரன், தமிழ்த்தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, சி.பி.எம்.எல். மக்கள் விடுதலை பொதுச் செயலாளர் தோழர் பாலன், குமுக விடுதலைத் தொழிலாளர்கள் ஒருங்கிணைப்பாளர் தோழர் சேகர், சோசலிச மையம் தோழர் செல்வி உள்ளிட்ட பல்வேறு கட்சிகளைச் சேர்ந்தோர் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்று உரையாற்றினர்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பங்கேற்று உரையாற்றினார். அவரது உரையின் எழுத்து வடிவம் :

“இந்திய அரசே! இனப்படுகொலை மேற்கொண்ட இலங்கைக்கு துணை போவதை நிறுத்து – ஐ.நா. மனித உரிமை அவையில், இலங்கையைக் குற்றவாளிக் கூண்டிலேற்றும் தீர்மானத்தைக் கொண்டு வா என்ற கோரிக்கையுடன் நடைபெறுகின்ற இந்த ஆர்ப்பாட்டத்தின் கோரிக்கையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆதரிக்கிறது.

தமிழீழ விடுதலைப் போராட்டம், தற்போது பன்னாட்டு அரங்கில் – ஐ.நா. மனித உரிமை அவையில் தீர்மானங்கள் முன்மொழிந்து நகர்த்தும்படியான சூழலில், நாம் யாரிடம் கோரிக்கை வைப்பது என்று நம்மிடையே பல கருத்துகள் இருக்கின்றன. சிங்கள அரசுக்குத் துணை நின்று - தமிழீழ இனப்படுகொலையை மேற்கொண்ட இந்திய அரசிடமே நாம் கோரிக்கை வைக்க வேண்டுமா என்றும் வினா எழுப்பப்படுகின்றது. வைப்பதில் தவறில்லை என்பதே நம் பார்வை!

ஏனெனில் இந்திய அரசிடம்தான் நமது இனத்தின் இறையாண்மை சிக்கியிருக்கிறது. பன்னாட்டு அரங்கில் நமது குரலை ஒலிக்க வேண்டியசட்டக் கடமையும் இந்தியாவுக்கே இருக்கிறது.

தமிழீழ இனப்படுகொலைக்குத் துணை நின்ற அதே இந்திய அரசின் ஏற்போடுதான், கடந்த 2015ஆம் ஆண்டு இதே ஐ.நா. மனித உரிமை அவையில் இலங்கையில் நடைபெற்ற “போர்க் குற்றங்கள்” மீது ஒரு குறைந்தபட்ச பன்னாட்டு உதவியுடனான விசாரணை வேண்டுமென்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அதைகூட இலங்கை அரசு நிறைவேற்றவில்லை என்பதை நாம் பன்னாட்டு அரங்கில் கூடுதல் வலுவோடு அம்பலப்படுத்த வேண்டும்.

இன்றைக்குத் தமிழ்நாடு, ஒவ்வொரு நாளும் பல்வேறு திட்டங்கள் வழியாக – பல்வேறு முனைகளில் இந்திய அரசின் தாக்குதல்களுக்கு உள்ளாகி வரும் நிலையில், அதற்கு நாம் முகம் கொடுத்துப் போராட வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். இருப்பினும், ஈழத்தமிழருக்கு நீதி பெறுவது நம் கடமை! வேறுவழியில்லை, நாம் போராடித்தான் ஆக வேண்டும்.

இந்த சூழலில் இலங்கை அரசு பன்னாட்டு அரங்கில் மீண்டும் மீண்டும் கால அவகாசம் கேட்டுக் கொண்டு, தமிழீழ மக்களுக்கான அரசியல் நீதியை மறுத்துக் கொண்டு – மனித உரிமை அவையில் அது ஏற்றுக் கொண்ட குறைந்தபட்ச தீர்மானங்களைக்கூட நிறைவேற்றாமல் இருப்பதை, ஐ.நா. மனித உரிமை ஆணையரே தம் அறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளார்.

இப்போது நடைபெறவுள்ள மனித உரிமை அவைக் கூட்டத் தொடரில், சிங்கள அரசு மீண்டும் இரண்டு ஆண்டுகள் வாய்தா கேட்க உள்ளது. அதற்கு இந்திய அரசு ஏற்பாடுகள் செய்து கொண்டுள்ளது.

இந்தியாவை காங்கிரசு ஆண்டாலும், பா.ச.க. ஆண்டாலும் அதன் கொள்கைகள் எதிலும் எந்த மாற்றங்களும் இல்லை. தமிழ்நாட்டில் நாம் நடத்தும் போராட்டங்கள் கொடுக்கும் அழுத்தம் காரணமாக – ஆள்வோருக்கிடையே ஏற்படும் முரண்பாடுகள் காரணமாக நாம் சில கோரிக்கைகளையும், சில முன்னேற்றங்களையும் வேண்டுமானால் பெறலாம். ஆனால், இந்திய அரசின் வெளியுறவுத்துறைக் கொள்கையை நம் போராட்டங்கள் மாற்றிவிடும் என்று நாங்கள் நம்புவதில்லை!

ஏனெனில், ஒரு அரசின் வெளிநாட்டுக் கொள்கை என்பது உள்நாட்டுக் கொள்கையின் நீட்சி! இந்திய அரசின் உள்நாட்டுக் கொள்கை என்பது தமிழினப் பகைக் கொள்கை! அது வெளியுறவுக் கொள்கையிலும் வெளிப்படுகிறது என்று நாங்கள் தொடர்ந்து கூறி வருகிறோம்.

அதுபோல, இலங்கையை எந்தக் கட்சி ஆண்டாலும் அதன் சிங்களப் பேரினவாதக் கொள்கையில் எந்த மாற்றங்களும் இல்லை! இராசபக்சே அரசும், சிறீசேனா அரசும் சிங்களப் பேரினவாதக் கொள்கையையே அடிப்படையாகக் கொண்டவை! தமிழீழ மக்களுக்கான நீதியை வழங்க சிங்கள அரசு எதையும் செய்யவில்லை.

எனவே, நாம் அறத்தின் பக்கம் நிற்கிறோம் என்ற அற வலிமையோடு ஒற்றுமையுடன் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறோம். நம் போராட்டங்கள் வீணாகப் போவதில்லை. நம் போராட்டத்திற்குக் கிடைத்த இன்னொரு ஆயுதமாக, தற்போது ஐ.நா. மனித உரிமை ஆணையர் வழங்கியுள்ள அறிக்கை கிடைத்திருக்கிறது.
2009ஆம் ஆண்டு நடைபெற்ற இனப்படுகொலைக்குப் பிறகும், தமிழீழத்தில் தமிழ் மக்களுக்கு நீதி கிடைக்கவில்லை, இலங்கை அரசின் நீதித்துறையே சிங்கள இனவாதத்தில் தோய்ந்து கிடக்கிறது என்பதையெல்லாம் அவர் தனது அறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளார். நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் கொல்லப்பட்ட வழக்கில் குற்றவாளிகள் அனைவரும் விடுதலை செய்யப்பட்டனர். ஊடகவியலாளர் லசந்த விக்கிரமசிங்கே கொல்லப்பட்ட வழக்கிலும் குற்றவாளிகள் விடுதலை செய்யப்பட வாய்ப்பான நிலை உள்ளது. தமிழ் மக்கள் அளிக்கும் சாட்சியங்கள் சீர்குலைக்கப்படுகின்றன. வழக்குகள் திசைமாற்றப்படுகின்றன. சிங்கள நீதிபதிகளே இருப்பதால், தமிழ் மக்களுக்கு இலங்கை நீதித்துறையில் நீதி கிடைக்க சாத்தியமில்லை என்ற செய்திகளையெல்லாம் இந்த அறிக்கை வெளிப்படுத்துகிறது.

ஏற்கெனவே, ஐ.நா. பொதுச் செயலாளர் பான் கீ மூன் அமர்த்திய தாருஸ் மான் குழு அறிக்கையில், இலங்கையில் கட்டமைப்பு வகையில் தமிழர்கள் ஒடுக்கப்படுவது சுட்டிக்காட்டப்பட்டது. ஐ.நா. அவை அளித்த மூவர் குழு அறிக்கையில், இலங்கையில் மனித குலத்திற்கு எதிரானக் குற்றங்கள் நிகழ்த்தப்பட்டதற்கான சான்றுகள் இருக்கின்றன என்று தெரிவிக்கப்பட்டது. தற்போது, இந்த புதிய அறிக்கையிலும் அது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

இந்த சூழலில், வெளிநாட்டு நீதிபதிகள் தலையீட்டுடன் இலங்கையில் தமிழ் மக்கள் மீது நடத்தப்பட்ட “போர்க்குற்றங்கள்” குறித்த “கலப்பு” விசாரணையும் நடைபெற வாய்ப்பில்லாத சூழல் நிலவுகிறது. அதற்கும் இலங்கை அரசு ஒத்து வரவில்லை. “கலப்பு விசாரணைப் பொறியமைவு ஏற்படுத்துவோம்” என்று சொன்ன இலங்கை அரசு, அதற்காக துரும்பையும் கிள்ளிப் போடவில்லை.

ஏகாதிபத்திய வல்லரசுகள் பின்னணியில் செயல்படும் நாடுகளின் மீது கூட, மக்கள் போராட்டங்களின் அழுத்தம் காரணமாக விசாரணைகள் நடைபெறுகின்றன. எனவே நாம் இலங்கையைக் குற்றவாளிக் கூண்டில் நிச்சயமாக ஏற்ற முடியும்! நாம் நிச்சயம் வெற்றி பெறுவோம்!

காணாமல் போனோரைக் கண்டுபிடித்துத் தர வேண்டி நடத்தப்படும் போராட்டங்கள், நில உரிமை மீட்புப் போராட்டங்கள் என தற்போது தமிழீழத்தில் – சிங்களப் பேரினவாத இராணுவத்தின் நிழலில் ஊசலாடிக் கொண்டுள்ள குறைந்தபட்ச சனநாயக வெளியைப் பயன்படுத்திக் கொண்டு, தமிழீழ மக்கள் போராட்டங்களை நடத்தி வருகின்றனர். புலம் பெயர்ந்த தமிழீழ மக்கள் அவரவர் நாடுகளில் போராட்டங்களை நடத்துகின்றனர். இவை நம் கோரிக்கைகளை பன்னாட்டுச் சமூக அரங்கில் மேலும் வலுப்படுத்த உதவுகின்றன. அதுபோல், தமிழ்நாட்டிலும் போராட்டங்கள் தொடர வேண்டும்.

தமிழீழத்தில் நடைபெற்றது இனப்படுகொலையே என ஐ.நா. மன்றம் அறிவிக்க வேண்டும் என்ற நம் முதன்மையான கோரிக்கை! அவ்வாறு அறிவித்தால் அந்த இனப்படுகொலைக்கான நீதியாக தமிழீழத்தைக் கேட்பதையும் அது உள்ளடக்கி இருக்கிறது. எனவே நம் முதன்மையான கோரிக்கையை நாம் உயர்த்திப் பிடித்துக் கொண்டு, உடனடிக் கோரிக்கைகளுக்கானப் போராட்டங்களையும் நடத்த வேண்டும்.

ஐ.நா. மனித உரிமை ஆணையரின் அறிக்கையின் அடிப்படையில் பார்த்தால், இச்சிக்கலை ஐ.நா. பொது அவைக்கு மனித உரிமை மன்றம் அனுப்பி, ஐ.நா. பாதுகாப்பு அவை வழியாக பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு அனுப்ப வகை செய்ய வேண்டும். அதைத்தான் இப்போது உடனடிக் கோரிக்கையாக வலியுறுத்துகிறோம். இக்கோரிக்கையை இந்தியா முன் வைக்க வேண்டும் என்கிறோம். இதை விரிந்த தளத்தில் கொண்டு சென்றால், நாம் நிச்சயம் வெல்வோம்! நன்றி! வணக்கம்!”

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
போராட்டத்தில், திரளான தமிழின உணர்வாளர்கள் பங்கேற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி சென்னை தலைவர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் வடிவேலன், புரட்சி, சத்தியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT