உடனடிச்செய்திகள்
Showing posts with label பெ. மணியரசன்!. Show all posts
Showing posts with label பெ. மணியரசன்!. Show all posts

Monday, September 13, 2021

இளையோரே எழுக! உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அழைப்பு! ஐயா பெ. மணியரசன் கட்டுரை!


இளையோரே எழுக!

உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அழைப்பு!

விவேகானந்தர் சிக்காகோவில் உரை நிகழ்த்தியதன் 128-ஆம் ஆண்டு விழாவை ஒட்டி உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி என்.வி.இரமணா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் 12.9.2021 அன்று ஆற்றிய காணொலி உரையின் சுருக்கத்தை ஆங்கில இந்து நாளிதழ் (The Hindu 13.9.2021) வெளியிட்டிருந்தது.

“இப்போது, அரசியல் மற்றும் சமூகத்தில் நிலவும் எதேச்சாதிகாரம், மதவெறி போன்ற சீரழிவுகளை எதிர்த்து இளைஞர்கள் எழுக” என்று உணர்ச்சிமிகு உரையைத் தலைமை நீதிபதி ஆற்றி இருந்தார்.

தமிழ்நாட்டிலும் மீள் எழுச்சியை உருவாக்கத் தமிழ் இளையோர்க்கும் பொருந்துவதாக இவ்வுரை இருப்பதால், இதன் தமிழாக்கம் இங்கு தரப்படுகிறது.

===================================
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
===================================

சனநாயக உரிமைகள் என்று நம்மால் ஏற்கப்படுள்ளவை, இந்திய விடுதலைப் போராட்டக் காலத்திலும், இருண்ட நெருக்கடி நிலைக் காலத்திலும் ஆயிரமாயிரம் இளையோர், ஆதிக்கப் பெரும் புள்ளிகளை எதிர்த்து வீதிகளில் போராடியதன் விளைவால் பெற்றவை! தேசத்திற்காக, சமூகத்தின் மகத்தான நன்மைகளுக்காக, அவர்களில் பலர் தங்கள் உயிரை ஈகம் (தியாகம்) செய்தார்கள். பெரும் வருவாய் தரும் பணிகளை இழந்தார்கள்.

நாட்டின் அமைதி, முன்னேற்றம் ஆகியவற்றுக்கான பயணத்தில் ஏற்படும் தடங்கல்களைக் களைய இளைஞர்களை நம்புங்கள். தங்களுக்கோ அல்லது மற்றவர்களுக்கோ இழைக்கப்படும் அநீதிகளை இளையோர் பொறுத்துக் கொள்ள மாட்டார்கள் என்று விவேகானந்தர் கூறினார். அவர்கள் தங்கள் இலட்சியங்களை விட்டுக் கொடுக்க மாட்டார்கள். அவர்கள் தன்னல மற்றவர்கள்; வீர தீரமானவர்கள்! தாங்கள் உண்மை என்று நம்பும் இலட்சியங்களுக்காக ஈகங்கள் செய்வார்கள். இப்படிப்பட்ட கள்ளம் கபடம் அற்ற மனங்கள் – தூய நெஞ்சங்கள் தாம் நமது நாட்டின் முதுகெலும்புகள்!

இளையோரே, சமூகத்தின் நடப்புகளை சவால்களை நீங்கள் அறிந்து கொள்வது கட்டாயத் தேவை! நினைவில்  நிறுத்துங்கள்; நாட்டில் ஏற்படும் எந்தப் பாதை மாற்றமும், எப்போதும் அதன் இளையோரிடம் வேர்கொள்கிறது. அவர்களின் பங்கேற்பால் நிகழ்கிறது. நீங்கள் பார்க்க விரும்பும் முழுநிறைவான தேசத்தையும் சமூகத்தையும் கட்டி எழுப்புவது உங்களுக்கான பணி!

சமத்துவக் கொள்கையுள்ள நமது அரசமைப்புச் சட்டத்தில் இணைந்துள்ள மதச் சார்பின்மைக் கொள்கை, இந்திய விடுதலைப் போராட்ட நெருப்பில் புடம் போடப்பட்டது. ஆனால் அதற்கு முன்பே இந்தியாவிற்கான மருந்துச்சீட்டு போல் மதச்சார்பின்மையைப் பேசியவர் விவேகானந்தர். மதத்தின் மெய்யான சாரம் அனைவர்க்குமான பொது நன்மை, சகிப்புத்தன்மை ஆகியவையே என்று உறுதியாக நம்பினார். மூடநம்பிக்கைகளுக்கும், கெடுபிடிகளுக்கும் அப்பாற்பட்டதாக மதம் இருக்க வேண்டும். 

இந்தியா மீள் எழுச்சி கொள்ள, இளையோரிடையே விவேகானந்தர் கோட்பாடுகள் குறித்த உணர்வுகளை ஊட்ட வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Wednesday, September 8, 2021

தமிழ் இன உணர்வுப் பாவலர் புலமைப்பித்தன் மறைவு பேரிழப்பு! பெ. மணியரசன் இரங்கல்!



தமிழ் இன உணர்வுப் பாவலர்  
புலமைப்பித்தன் மறைவு பேரிழப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!


புலவர் புலமைப்பித்தன் அவர்கள் இன்று (08.09.2021) காலமான செய்தி, பெரும் துயரமளிக்கிறது. திரைப்படப் பாடல்களில் மரபு இலக்கிய செழுமையைக் கொண்டு வந்தவர் புலமைப்பித்தன்! உண்மையான தமிழின உணர்வு நிரம்பிய நெஞ்சத்துக்கு சொந்தக்காரர். 

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்து, தமிழீழ விடுதலைப் போருக்கு தமிழ்நாட்டில் அப்போது ஆளும் கட்சியாக இருந்த அ.தி.மு.க. முழுமையாக ஆதரவு கொடுக்கப் பாடுபட்டவர். தமிழீழ தேசியத் தலைவர் மேதகு பிரபாகரன் அவர்களும், மற்ற தளபதிகளும் தமிழ்நாட்டில் தங்கியிருந்தபோது, அவர்கள் புலவர் புலமைப்பித்தன் இல்லத்திற்கு உரிமையோடு சென்று தங்குவதும் உணவருந்துவதும் வழக்கமாக இருந்தது. தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களோடு நெருக்கமான தொடர்பு வைத்து, பல உதவிகள் கிடைக்க ஏற்பாடு செய்வர் புலவர்.

இந்திய அரசின் துணையோடு சிங்களப் பேரினவாத அரசு ஈழத்தமிழர்களைக் கொத்துக் கொத்தாக இனப்படுகொலை செய்து குவித்தபோது, கொதித்தெழுந்து போர் நிறுத்தக் கோரிக்கை இயக்கங்களில் பங்கு பெற்றார். 

2009 பேரழிவுக்குப் பிறகு ஈழத்தமிழர்களுடைய துயர் துடைக்கவும் இனப்படுகொலைக் குற்றவாளிகளைப் பன்னாட்டு நீதிமன்றத்தில் ஏற்றவும் நடந்த பல்வேறு முயற்சிகள் - இயக்கங்கள் முதலியவற்றில் முதன்மையாகப் பங்கு கொண்டார் புலமைப்பித்தன். அவ்வாறான  செயல் பாடுகளில் தமிழ்த்தேசியப் பேரியக்கமும் புலவர் புலமைப்பித்தன் அவர்களும் கள நிகழ்வுகளில் கூட்டாகச் செயல்பட்டிருக்கிறோம். 

தமிழீழ மக்கள் அன்றாடம் கொன்று குவிக்கப்படுவதைத் தடுத்து நிறுத்துவதற்குப் போர் நிறுத்தம் கோரி தன்னையே எரித்துக் கொண்ட தழல் ஈகி முத்துக்குமார் சிலையை தமிழ்த்தேசியப் பேரியக்கம், தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டி - சாணூரப்பட்டியில் திறந்தபோது, அப்போதைய தமிழ்நாடு அரசு தடை செய்தது. அந்தத் தடையைக் கண்டித்து அதே நாளில் (16.5.2010) அதே ஊரில் நடந்த பொதுக்கூட்டத்தில் புலவர் புலமைப்பித்தன் அவர்கள் கலந்து கொண்டு எழுச்சிமிகு உரையாற்றினார்.  

சமகாலத்தில் தமிழ் இலக்கியத்தைத் திரைப்பாடல் வாயிலாக வளப்படுத்தியும், தமிழின உணர்ச்சி மக்களிடம் பரப்பியும் வாழ்ந்து மறைந்துள்ள ஐயா புலமைப்பித்தன் அவர்களின் மறைவு தமிழினத்திற்குப் பேரிழப்பாகும்! அவரது மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Tuesday, May 18, 2021

ஐயா துளசி ஐயா வாண்டையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! - பெ. மணியரசன் அறிக்கை!



ஐயா துளசி ஐயா வாண்டையார் 
மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் 
தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!


“கல்விக் காவலர்” துளசி ஐயா வாண்டையார் அவர்கள், நேற்று (17.05.2021) காலமான செய்தி, துயரமளிக்கிறது. தனிநபர் பண்பாடு, ஒழுக்கம், எளிமை ஆகியவற்றில் தலைசிறந்து விளங்கியவர். மற்றவர்களுக்கு எடுத்துக்காட்டாக வாழ்ந்தவர். 

கல்விக் கொள்ளை கடல் போல் சூழ்ந்துள்ள தமிழ்நாட்டில், கல்வி வள்ளல் நிறுவனத் தீவாக பூண்டி புட்பம் கல்லூரியை நடத்தி வந்தவர். பல தலைமுறையாக ஏழை எளிய ஒடுக்கப்பட்ட – பிற்படுத்தப்பட்ட மாணவர்கள் இலவசக் கல்லூரிக் கல்வியைப் பெற வாய்ப்பளித்தார்கள். 

ஐயா அவர்களின் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 


Tuesday, May 4, 2021

“தமிழ்ச்செம்மல்” இளவழகனார் மறைவு பேரிழப்பு! பெ. மணியரசன் இரங்கல்!



“தமிழ்ச்செம்மல்” 
இளவழகனார் மறைவு பேரிழப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் இரங்கல்!


“தமிழ்மண்” பதிப்பக உரிமையாளர் – “தமிழ்ச்செம்மல்” கோ. இளவழகன் அவர்கள் இன்று (04.05.2021) விடியற்காலை சென்னை மருத்துவமனையில் காலமான செய்தி, திடுக்கிடச் செய்தது. 

அண்மைக்காலமாக தமிழ் மொழி – இனம் – தாயகம் ஆகியவற்றின் உரிமைகளுக்காக அறிவுத் துறையிலும், போராட்டக் களத்திலும் களமாடி வந்த ஆளுமைகள் அடுத்தடுத்துக் காலமாவது பெரும் துயரமளிக்கிறது. 

கோ. இளவழகன் அவர்கள், மாணவப் பருவத்திலேயே இன உணர்ச்சியும் மொழி உணர்ச்சியும் கொண்டு, 1965 – இந்தி எதிர்ப்புப் போரில் கலந்து கொண்டு, சிறையில் அடைக்கப்பட்டவர். தமிழ் மொழி – இனம் ஆகியவற்றை சீரழித்த ஆரியத்தையும், சமற்கிருதத்தையும் எதிர்க்கும் உணர்வினை இளமையிலேயே பெற்றவர்.

பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்களின் “தென்மொழி” அன்பராகி, பாவாணரின் பற்றாளராகி, ஒரத்தநாட்டில் “உலகத் தமிழ்க் கழகத்தை” நிறுவியவர்களில் முகாமையானவர் கோ. இளவழகன். தேவநேயப் பாவாணர் மன்றம் தொடங்கிச் செயல்பட்டார். இறுதிவரை தனித் தமிழில் பேசுவதை, எழுதுவதை தமது பண்பாகக் கொண்டிருந்தார். 

அவர் நிறுவி நடத்திவந்த “தமிழ்மண்” பதிப்பகம், பழந்தமிழ் நூல்களையும், சமகாலத் தமிழறிஞர்களின் நூல்களையும் தொடர்ந்து வெளியிட்டு வந்தது. அவற்றில் குறிப்பிடத்தக்கவை “சங்க இலக்கியக் களஞ்சியம்” (22 தொகுப்புகள்), பாவவேந்தர் படைப்புத் தொகுப்புகள் (25 தொகுப்புகள்), நா.மு.வே. நாட்டார் தமிழ் உரைகள் (32 நூல்கள்), பாவாணர் தமிழ்க் களஞ்சியம் (53 நூல்கள்), நாவலர் சோமசுந்தர பாரதியார் நற்றமிழ் ஆய்வுகள் (10 நூல்கள்), தொல்காப்பிய பழைய உரைகள் (19 நூல்கள் - பதிப்பாசிரியர் : “இலக்கணக்கடல்” கோபாலய்யர்), அண்ணாவின் படைப்புத் தொகுப்புகள்... இவை போல் இன்னும் பல அரிய நூல்களுக்கு மறு உருவாக்கம் தந்தார். 

தமிழீழ விடுதலைப் போராட்டத்திற்குப் பேருதவியாக விளங்கியவர். தமிழீழ விடுதலைப் புலிகளை முழுக்க முழுக்க ஆதரித்து, அதனால் பல இன்னல்களையும் ஏற்றவர். தமிழ்நாட்டு உரிமைகள், தமிழ்மொழி உரிமைகள், தமிழ்வழிக் கல்வி ஆகியவற்றிற்கான செயல்பாடுகளிலும் பங்கேற்றவர். தமிழ்த்தேசிய உணர்வாளர்களுக்கு பெரும் ஊக்கமளித்தவர். 

தமிழ்த்தேசியப் பேரியக்கத்துடன் நட்பு பாராட்டி, சென்னை புத்தகக்காட்சியில் “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” விற்பனை அரங்கம் முதன்முதலாகக் கிடைக்கத் துணை நின்றார். “தமிழ்த்தேசியம் – அரசியல், அறம், அமைப்பு” என்ற தலைப்பில் நான் எழுதிய நூலை வெளியிட்டு சிறப்பித்தார். 

தென்னிந்தியப் புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர் சங்கத்தில் (பபாசி - BAPASI) பொறுப்பு வகித்து, அதன் வளர்ச்சிக்கும், ஆண்டுதோறும் சென்னை புத்தகக்காட்சி நடைபெறவும் பெருந்துணையாய் நின்றார். அரசு நூலகங்களுக்கு நூல்களைத் தாராளமாக வாங்கி, பதிப்பகங்களை ஊக்குவிக்க அமைச்சர்களுடன் பேசி பணியாற்றினார். 

இளமை முதல் இறுதிவரை தமிழ்மொழிக்கும், தமிழினத்திற்கும் உழைத்த இளவழகனார் மறைவு, பெரும் துயரம் அளிக்கிறது! தமிழ் இன உணர்வுப் போராளி இளவழகனார்க்கு வீரவணக்கம்! அவருடைய இல்லத்தார்க்கும், நண்பர்களுக்கும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Saturday, March 7, 2020

பேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல் பெ. மணியரசன் இரங்கல்!


பேராசிரியர் அன்பழகனார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!



திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொதுச்செயலாளர் பேராசிரியர் க.அன்பழகனார் அவர்கள் கடந்த நள்ளிரவில் (06.03.2020) காலமானச் செய்தி துயரமளிக்கிறது. தமிழ்த்தேசியப் பேரியகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
பேராசிரியர் அன்பழகனார் சிறந்த தமிழ்ப்பற்றாளர்; தமிழ்ப்பற்றின் காரணமாகத் தமது பெயரைத் தூய தனித் தமிழில் அன்பழகன் என்று மாற்றிக்கொண்டார்.
ஆரிய-சமற்கிருத ஆதிக்க எதிர்ப்பில் ஊற்றம் பெற்றவர். ஆரிய ஆன்மிக நூலான பகவத் கீதையைத் தமிழ்நாட்டில் ஆரியத்துவவாதிகள் பரப்பிய போது அதற்கு மாற்றாகத் திருக்குறளை முன்னிறுத்தினார். தமிழறிஞர்கள் வழிநின்று கடைசிவரை திருக்குறள் மேன்மையைப் பேசியவர் அன்பழகனார்.
தமிழை அழிக்கும் நோக்கத்தோடு தமிழில் சமற்கிருதத்தைத் கலந்து மணிப்பிரவாள நடை என்று ஆரியத்துவவாதிகளும் அவர்களின் அடிவருடித் தமிழர்களும் தமிழைச் சிதைத்த போது தனித்தமிழியக்கத்தை மறைமலை அடிகளார் 1916-இல் தொடங்கினார். சமற்கிருதத்தையும் பிறமொழிச் சொற்களையும் நீக்கி தனித்தமிழில் பேச வேண்டும் எழுத வேண்டும், பிராமணப் புரோகிதர்களையும் சமற்கிருதத்தையும் நீக்கி தமிழர்கள் தங்கள் குடும்பச் சடங்குகளையும் கோயில் சடங்குகளையும் நடத்த வேண்டும் என்பது தனித்தமிழ் இயக்கத்தின் நோக்கம்.
1921- ஆம் ஆண்டு பேராசிரியர் க.நமச்சிவாயர் அழைப்பில் பச்சையப்பன் கல்லூரியில் நடந்த தமிழறிஞர்கள் – தமிழுணர்வாளர்கள் கூட்டத்திற்கு மறைமலை அடிகளார் தலைமை தாங்கினார். ஆரியவாதிகள் தொகுத்த 60 ஆண்டுகளைக் கைவிட்டு, திருவள்ளுவர் ஆண்டைக் கடைபிடிக்கவேண்டும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தமிழர் திருநாளாகப் பொங்கலைக் கடைபிடிக்க வேண்டும் என்றும்- தை-1 ஆம் நாள் தமிழராண்டுத் தொடக்க நாள் என்றும் அக்கூட்டத்தில் தமிழறிஞர்கள் முடிவு செய்தார்கள்.
இப்பின்னணியில் தான் தமிழ் நாட்டில் படித்த இளையோரிடம் – தமிழின எழுச்சி ஏற்பட்டது. இந்திய விடுதலைப் போராட்டத்தில் இந்தித்திணிப்பை வலியுறுத்திவந்தது காங்கிரஸ் கட்சி. 1920களில் இருந்தே காங்கிரசின் இந்தித் திணிப்பை தமிழறிஞர்கள் எதிர்த்து வந்தனர். 1930களில் இந்தித் திணிப்பும் அதனால் இந்தி எதிர்ப்பும் தீவிரமடைந்தன.
இப்பின்னணியில்தான் தமிழ்நாட்டில் படித்த இளையோர் – தமிழின எழுச்சிக் கருத்துகளுடன் அரசியல் இயக்கங்களில் பங்கேற்றனர். அந்தத் தலைமுறையில் கடைசித் தலைவராக வாழ்ந்து வந்தவர் பேராசிரியர் அன்பழகனார்.
இன்றைக்குப் பழையக் காலத்தைவிடக் கூடுதலாக இந்தித் திணிப்பும் சமற்கிருதத் திணிப்பும், ஆரிய ஆதிக்கமும் அதிகாரவெறிகொண்டு தாக்குகின்றன.
பேராசிரியர் அன்பழகனார்க்கு இரங்கல் தெரிவிக்கும் அதே வேளையில் – அவரைப் போன்றவர்களுக்கு இன உணர்ச்சி, தமிழுணர்ச்சி ஊட்டிய, தமிழறிஞர்களின் இலட்சியமான தமிழ்த்தேசிய இன உணர்ச்சியை வளர்த்துக் கொள்ளுமாறு இளந்தலைமுறைத் தமிழர்களை கேட்டுக்கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


போர்க்களப் பேராசிரியர் அறிவரசனார்க்கு புகழ் வணக்கம்! பெ. மணியரசன் இரங்கல்!



போர்க்களப் பேராசிரியர் அறிவரசனார்க்கு புகழ் வணக்கம்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

பேராசிரியர் அறிவரசன் ஐயா அவர்கள் நேற்று (04.03.2020) கடையத்தில் அவர்களது இல்லத்தில் உடல்நலமின்றி காலமாகினார். என்ற செய்தி அதிர்ச்சியும் துயரமும் அளிக்கிறது. உடல் நலமின்றி படுக்கையில் இருக்கிறார்கள் என்றசெய்தி தெரிந்து, போய்ப் பார்க்க வேண்டும் என்று எண்ணிக் கொண்டிருந்தேன். ஆனால் இந்தத்துயரச் செய்தி வந்தது.
உடல் நலமின்றி இருந்த நிலையிலும், தஞ்சைப் பெருவுடையார் கோயில் குடமுழுக்கைத் தமிழ் மந்திரங்கள் ஓதி நடத்த வேண்டும் என்று எடுத்த முயற்சிக்காக என்னைத் தொலைபேசியில் அழைத்துப் பாராட்டினார்.
தமிழீழ விடுதலை ஆதரவுப் போராட்டக்களங்களில் சந்தித்துக் கொண்ட போது தான் ஐயா அறிவரசன் அவர்களுடன் எனக்கு நெருக்கமான பழக்கமும் நட்பும் ஏற்பட்டது. நேர்மையான தமிழறிஞர். தமது எழுது கோலைத் தலைவர்களுக்கு முதுகு சொறியும் குச்சியாக மாற்றாதவர். நீண்ட காலம் திராவிடச் சிந்தனையில் ஊற்றம் பெற்றவர் என்றாலும் பிற்காலத்தில் சிறந்த தமிழ்த்தேசியராகத் தம்மை மறுவார்ப்பு செய்து கொண்டவர்!
எது உண்மையோ, எது தமிழின உரிமை மீட்பிற்குத் தேவையோ அதன் பக்கம் நிற்க வேண்டும் என்று செயல்பட்ட செம்மாந்த நெஞ்சினர் அறிவரசனார்.
தமிழீழத்தில் போர் நிறுத்தம் செயல்பட்ட 2006 - 2008 காலத்தில் தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்கள் அழைப்பின் பேரில் அங்கு சென்று இரண்டாண்டுகள் தமிழாசிரியர்களுக்குப் பாடம் நடத்திப் பயிற்சி தந்தவர். அவரிடம் தமிழ் கற்ற மாணவிகளில் தமிழீழத் தலைவர் பிரபாகரன் மனைவி மதிவதனி அவர்களும் ஒருவர்.
2009- க்குப் பிறகும் பிரான்சு உள்ளிட்ட மேற்கு நாடுகளுக்குச் சென்று தமிழீழப் பிள்ளைகளுக்கும் ஆசிரியர்களுக்கும் தமிழ் கற்பித்தார். தமிழ்ப் பாடநூல்கள் யாத்துத் தந்தார்.

தமிழ்நாட்டில் நடந்த தமிழின, தமிழ் மொழி உரிமை மீட்புப் போராட்டங்களில் தொடர்ந்து கலந்து கொண்டார். தம் குடும்பத்தைத் தமிழ்த்தேசியக் குடும்பமாக உருவாக்கியவர் ஐயா அறிவரசனார்.
தமிழின இளையோர் பின்பற்றத்தக்க இலட்சிய உறுதி, போர்க்குணம், பண்பாடு முதலியவற்றை ஒருங்கே பெற்றிருந்த பேராசிரியர் ஐயா அறிவரசனார் அவர்களுக்குத் தலைதாழ்த்தி புகழ் வணக்கம் செலுத்திக் கொள்கிறேன்; இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, November 14, 2019

அம்மாவின் இறப்பும் அடைக்க முடியாத நன்றிக் கடனும் பெ. மணியரசன்



அம்மாவின் இறப்பும்
அடைக்க முடியாத நன்றிக் கடனும்

பெ. மணியரசன்
தலைவர் – தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


என் அன்னை பார்வதியம்மாள் கடந்த தி.பி. 2050 – ஐப்பசி 25 (11.11.2019) திங்கட்கிழமை மாலை 5 மணியளவில் காலமானார். அவருக்கு 92 அகவை இருக்கலாம்.
எத்தனை அகவை ஆனால் என்ன, தாயார், தந்தையார் இறப்பு என்பது எல்லோருக்கும் பேரிழப்புதான்! பற்று துறந்த பட்டினத்தடிகளே, அவரின் தாயார் காலமானபோது, “அன்னை இட்ட தீ அடி வயிற்றிலே” என்று பாடிக் கலங்கினார்.
நேரில் வந்தும், தொலைப்பேசி வழியாகவும் சமூக வலைத்தளங்கள் வழியாகவும் எனக்கும் என் குடும்பத்தார்க்கும் ஆறுதல் சொன்ன பெருமக்களுக்கு நன்றி சொல்லவே இம்மடலை எழுதுகிறேன்.
என் அன்னையார் காலமான செய்தியை உள்நாட்டிலும், உலக நாடுகளிலும் கொண்டு போய்ச் சேர்த்தவர்கள் வலைத்தளங்களைப் பயன்படுத்தும் பெரியவர்களும், நம் பிள்ளைகளும், தோழர்களுமே! என் அன்னையார் காலமான சில மணி நேரத்திலேயே வெளிநாடுகளில் வாழும் நம் தமிழர்கள் அலைப்பேசியில் அழைத்து ஆறுதல் சொல்லத் தொடங்கினார்கள்!
அரசியல் கட்சிகளின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலர் நேரில் வந்தும், தொலைப்பேசியிலும் ஆறுதல் சொன்னார்கள். அதுபோல் தமிழ்த்தேசியத் தலைவர்கள், உழவர் இயக்கங்களின் தலைவர்கள், மக்கள் இயக்கங்களின் பொறுப்பாளர்கள், சமூகச் செயல்பாட்டாளர்கள், சான்றோர்கள், ஊடகவியலாளர்கள், முக்கியப் பொறுப்பாளர்கள், எங்கள் குடும்ப உறவினர்கள், ஊர்க்காரர்கள் என ஏராளமானோர் நேரில் வந்து எங்கள் துயரத்தில் பங்கு கொண்டார்கள்.
திராவிடம் – பெரியாரியம் ஆகியவற்றில் என்னோடு முரண்பாடு கொண்டுள்ள பெருமக்கள், தோழர்கள் ஆகியோர் நேரில் வந்தும், தொலைப்பேசி வழியாகவும் எனக்கு ஆறுதல் சொன்னார்கள்.
எனக்கும், என் குடும்பத்தினருக்கும் ஒரு வேலையின்றி என் அன்னையார் இறப்பிற்குப் பின் நல்லடக்கம் வரை அனைத்துப் பணிகளையும் செய்தோர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டப் பொறுப்பாளர்களும் தோழர்களும் – எங்கள் ஊர்க்காரர்களும் ஆவர்! தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், நாம் தமிழர் கட்சித் தோழர்கள், நேரில் வந்து துயரத்தில் பங்கு கொண்டார்கள். வர இயலாத தோழர்கள் தொலைப்பேசியில் ஆறுதல் கூறினார்கள்.
இவர்கள் அத்தனை பேர்க்கும் என் நெஞ்சு நெகிழ்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அடைக்க முடியாத ஒரு கடன் நன்றிக்கடன்!
என் தந்தை பெரியசாமிக்கும், என் தாயார் பார்வதிக்கும், என்னை வளர்த்ததில் எனக்குக் கல்வி வாய்ப்பளித்ததில் முக்கியப் பங்காற்றிய என் அம்மாச்சி (அம்மாவின் தாயார்) மங்கலம் அம்மாள் அவர்கட்கும் நான் நன்றி செலுத்துவதில் கடன்பட்டவனாகவே இருக்கிறேன். என்னால் அவர்களுக்கு ஒரு நன்மையும் கிடையாது!
எங்கள் ஆச்சாம்பட்டியில் முதல் முதல் கல்லூரிக்குப் படிக்கப் போனதில் நான் இரண்டாவது ஆள். முதலில் சென்றவர் என் மாமா பெ. கோபால்! அவர் முயற்சியால்தான் திருக்காட்டுப்பள்ளி சர் சிவசாமி ஐயர் உயர்நிலைப் பள்ளியில் 8ஆம் வகுப்பில் சேர்ந்தேன்.
திருச்சி தேசியக் கல்லூரியில் 1965-66இல் புகுமுக வகுப்பு (PUC) படித்த போது, தேர்வில் முதலில் தோற்றுப் பின்னர் தேர்ச்சி பெற்றேன். தேர்ச்சி பெற்று மறு ஆண்டு அதே தேசியக் கல்லூரியிலும், பூண்டி புட்பம் கல்லூரியிலும் இளங்கலை படிப்பிற்கு விண்ணப்பம் போட்டேன். இடம் கிடைக்கவில்லை. பின்னர் ஆசிரியர் பயிற்சிப் பள்ளியில், திருவாரூர் அருகே குருக்கத்தியில் இரண்டாண்டு படித்து, அதிக மதிப்பெண்ணுடன் தேர்ச்சி பெற்றேன்.
மார்க்சியப் புரட்சி ஈர்ப்பால் மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியில் 1972 முதல் செயல்பட்டேன். புரட்சி நடக்கப் போகிறது என்ற நம்பிக்கையுடன் செயல்பட்டேன்.
இந்திராகாந்தி அம்மையார் சனநாயக உரிமைகளைப் பறித்து – எதேச்சாதிகார நெருக்கடிநிலை அறிவித்தபோது, கட்சியில் ஒரு பகுதியினர் தலைமறைவாக இருந்து புரட்சிகரக் கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்று சி.பி.எம். தலைமை முடிவு செய்தது. தலைமறைவாகப் பணியாற்றத் தேர்வு செய்யப்பட்ட தோழர்களில் நானும் ஒருவன்.
பிடி ஆணை, பிடிக்கத் துரத்தும் காவல்துறை, தப்பித்துத் தப்பித்துத் தலைமறைவு வாழ்க்கை ஓராண்டு! அப்படித் தலைமறைவாக இருந்த போதுதான் எனக்கு இன்னொரு அம்மாவாகவும் விளங்கிய என் அம்மாச்சி மங்கலம் அம்மாள் காலமானார். அம்மாச்சியின் உடலைக் கட்டி அழுவதற்கோ, இறுதிச் சடங்கில் பங்கு பெறவோ எனக்கு வாய்ப்பில்லை, நான் தலைமறைவில்! துக்க வீட்டிலும் காவல்துறையினர்! சி.பி.எம். தோழர்கள்தாம் நான் செய்ய வேண்டிய கடமைகளையும் சேர்த்துச் செய்து, பெருங்கூட்டமாகச் சென்று என் அம்மாச்சிக்கான இறுதிச் சடங்குகளைச் செய்து எரியூட்டினார்கள்!
நான் கல்லூரிப் படிப்பை நிறுத்திய நிலையில், என் தந்தையார் காலமாகி விட்டார். எனவே அவர்க்குச் செய்ய வேண்டிய கடமைகளை ஆற்ற முடியாத பருவம் அது!
வியட்நாம் விடுதலைப் புரட்சி போல், தமிழ்நாடு விடுதலைப் புரட்சி நடைபெற வேண்டும் என்ற எண்ணம்தான் சி.பி.எம். கட்சியில் செயல்பட்டபோதும் என் மனத்தில் இருந்தது. சி.பி.எம். கட்சியை விட்டு நானும் தோழர்களும் வெளியேறிய பின் புரட்சிகரத் தனிக்கட்சி அமைத்து செயல்பட்டபோது, தமிழ்த்தேசியக் கருத்தியலை சமூக அறிவியல்படி நாங்கள் வளர்த்தெடுத்தோம்.
தமிழ்த்தேசியப் புரட்சி ஆயுதப் போர் அன்று; அது மக்கள் எழுச்சி என்று வரையறுத்தோம். பணம் – பதவி – விளம்பரம் மூன்றுக்கும் ஆசைப்படாத இலட்சிய வீரர்களைக் கொண்ட பாசறையாகத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தை வளர்க்க முடிவு செய்து, அதற்கு எங்களை ஒப்படைத்துக் கொண்டோம்.
இதனால், என் தாயார், என் தம்பி ரெங்கராசு, என் தங்கை மணிமேகலை ஆகியோர்க்கு நான் ஆற்ற வேண்டிய கடமைகள் எதையும் செய்ய முடியவில்லை. நான் இளமையிலேயே வீட்டை விட்டு வெளியேறி புரட்சி அரசியலுக்கு வந்து விட்டதாலும், எங்கள் தந்தை நாங்கள் சிறுவர்களாக இருக்கும்போதே காலமானதாலும், என் தம்பி – தங்கை இருவரும் ஆறாம் வகுப்பு, ஏழாம் வகுப்பிற்கு மேல் படிக்க முடியவில்லை.
தந்தைக்கு அடுத்த நிலையில், என் குடும்பத்தினர்க்கு ஆற்ற வேண்டிய கடமைகளை என்னால் ஆற்ற முடியவில்லை.
தொண்ணூறு ஆண்டுகளுக்கு மேல் வாழ்ந்த என் தாயாருக்கு ஆற்ற வேண்டிய கடமைகளை என்னால் ஆற்ற முடியவில்லை.
என்னுடைய அம்மாச்சி குடும்பம் நில உடைமைக் குடும்பம். என் தாத்தா (அம்மாச்சியின் கணவர்) சப்பாணிமுத்து ஆச்சாம்பட்டி பட்டா மணியக்காரர் (கிராம முன்சீப்). தமிழறிஞர் உலக ஊழியன் அவர்கள் முயற்சியில் மதுரைத் தமிழ்ச் சங்கத்தில் பால பண்டிதம் படித்தார். என் தாத்தாவும் மற்ற பெரியவர்களும் எடுத்த முயற்சியால் 1937 வாக்கில் எங்கள் ஆச்சாம்பட்டியில் ஆங்கிலேயர் ஆட்சியில் ஐந்தாம் வகுப்பு வரை பள்ளிக் கூடம் தொடங்கப்பட்டது. அதில் என் தாயார் பார்வதி ஐந்தாம் வகுப்பு வரை படித்தவர்.
என் தாயார் பெயர் பார்வதி என்றாலும், அவரை பாப்பு என்று அழைப்பார்கள். என்னை பாப்பு மகன் என்று அழைப்பார்கள். “பார்ப்பு” என்ற சொல்லிலிருந்து பாப்பு உருவானது. “பார்ப்பும் பிள்ளையும் பறப்பவற்றுள் இளமை” – தொல்காப்பியம் (548). பறவைக் குஞ்சுகளை “பார்ப்பு” என்றும், “பிள்ளை” என்றும் அழைப்பது மரபு. அப்பெயர்களை செல்லமாகக் குழந்தைகளுக்கு வைத்தார்கள். “பார்ப்பு” என்பதுதான் “பாப்பா” என்றும், “பாப்பு” என்றும் ஆனது! ஆண் பிள்ளைகளுக்கும் பாப்பு என்று பெயர் வைப்பதுண்டு.
தாத்தா சப்பாணிமுத்து திருடர்கள் - சமூக விரோதிகள் மீது கடும் நடவடிக்கைகள் எடுத்ததால், அவர்கள் அவரைக் கொலை செய்தனர். இதனால் என் அம்மா படிப்பு ஐந்தாம் வகுப்புடன் தடைபட்டது.
என் தந்தைவழி நிலமும், என் தாத்தா வழி கிடைத்த நிலமும் எங்கள் குடும்பத்திற்குப் போதுமானது. ஆனால் என் படிப்பிற்காக ஒரு பகுதி நிலங்கள் விற்கப்பட்டன.
என் தாத்தா – அம்மாச்சி வழியாக எங்களுக்கு வந்த பத்து ஏக்கர் நிலத்தில்தான் என் மகன் செந்தமிழன் “செம்மை வனம்” வைத்துள்ளார். எங்கள் அம்மாச்சி வழியாகக் கிடைத்த எங்கள் ஆச்சான் வயலில்தான் பார்வதியம்மாள் இறுதி உறக்கம் கொள்கிறார்! அதுவும், அம்மாச்சியின் நினைவாக என் மகளுக்கு மங்கலம் என்று பெயர் சூட்டினேன். நான்கு வயதுக் குழந்தையில் மூளை நரம்பியல் நோய் ஏற்பட்டு, மங்கலம் இறந்துவிட்டது. குழந்தை மங்கலத்தை அடக்கம் செய்த நினைவிடத்திற்கு அருகில்தான், அவள் அப்பாயி பார்வதியம்மாள் படுத்துள்ளார்.
எவ்வளவோ தந்த என் தாயாரை நான் உரியவாறு கவனிக்கவில்லையே என்ற குற்ற உணர்வும், கவலையும் எனக்குண்டு. என் தாயாரை எந்த நாளும் நான் புறக்கணித்ததில்லை. என் பொது இலட்சியத்திற்கு என்னை ஒப்படைத்துக் கொண்டதால், என்னால் அவர்களை உரியவாறு பேணிட முடியாமற் போனது.
முதுமைக் காலத்தின் கடைசி ஆண்டுகளில் என் தங்கை மணிமேகலையும், அவர் மகள்களும்தான் என் அம்மாவை மிகச் சிறப்பாகப் பாதுகாத்தனர். என் மனைவி இலட்சுமி, தன் தாயைக் கவனித்ததைவிடப் பன்மடங்குக் கூடுதலாக தன் மாமியாரைக் கவனித்துக் கொண்டார். என் தம்பி ரெங்கராசும் அக்கறையோடு அம்மாவைக் கவனித்துக் கொண்டான்.
சி.பி.எம். கட்சியில் செயல்பட்ட போதும், இப்போது தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் செயல்படும் போதும் எனது குடும்ப வாழ்வைக் கவனித்துக் கொண்டது இவ்விரு இயக்கங்களும்தான்! என் தாயாரின் இறுதிச் சடங்குகளுக்கான அனைத்துச் செலவுகளையும் பகிர்ந்து கொண்டோர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களே!
என்னால் அடைக்க முடியாத எனது நன்றிக்கடன் என் அம்மாவுக்கு மட்டுமல்ல, எங்கள் துயரத்தில் பங்கு கொண்ட உங்கள் அனைவருக்கும்தான்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



Wednesday, October 2, 2019

தோழர் தி.மா. சரவணன் மறைவு சமகால வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பேரிழப்பு! பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!

தோழர் தி.மா. சரவணன் மறைவு

சமகால வரலாற்று ஆய்வாளர்களுக்குப் பேரிழப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 

தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!



தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் திருச்சி மாவட்ட மூத்த தோழர்களில் ஒருவரும், பத்தொன்பதாம் நூற்றாண்டிலிருந்து வெளி வந்த தமிழ் இதழ்களின் தொகுப்பாளருமான நம்முடைய அன்பிற்குரிய தோழர் தி.மா. சரவணன் அவர்கள், நேற்று (01.10.2019) திருச்சி அரசு மருத்துவமனையில் காலமானார் என்ற செய்தி பெரும் துயரமளிக்கிறது.

சிறுநீரகக் கோளாறால் மருத்துவ சிகிச்சை பெற்று வந்த தி.மா.ச. காலமானது தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கு மட்டுமின்றி, சமகாலத் தமிழர் வரலாறு கற்கக்கூடியவர்களுக்கும் எழுதுவோருக்கும் பேரிழப்பாகும்!

தமிழர் கண்ணோட்டம் இதழ், உருட்டச்சாக வந்ததிலிருந்து அண்மைக்காலம் வரை அதில் வந்த போராட்டச் செய்திகள், கட்டுரைகள், மாற்றுக் கருத்துடையோருடன் நடந்த தர்க்கங்கள் அனைத்தையும் தொடர்ந்து ஒவ்வொரு இதழிலும் எழுதி வந்தார். அந்தப் பணி, அவர் மருத்துவமனையில் சேர்ந்ததிலிருந்து நின்று விட்டது. இப்பொழுது அவர் மறைவால் நிரந்தரமாக அந்தப் பணி நின்று போன பேரிழப்பும் நமக்கிருக்கிறது.

2014இல் சென்னையில் நடைபெற்ற புத்தகச் சங்கமம் (ஏப்ரல் 18 - 27) நிகழ்வில், திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி. வீரமணி அவர்கள் தோழர் தி.மா.சரவணன் அவர்களுக்கு “புத்தகர்” விருது வழங்கி பாராட்டினார்.

மிக நல்ல பண்பாளராக, தோழமை உணர்வுமிக்கவராக அனைவரோடும் இணக்கமாகப் பழகும் பக்குவம் பெற்றவராக விளங்கிய தோழர் தி.மா.ச. அவர்களின் மறைவு தமிழுணர்வாளர்கள் அனைவருக்குமான இழப்பாகும்.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தோழர் தி.மா. சரவணன் அவர்களுக்கு வீரவணக்கத்தையும், அவர்தம் குடும்பத்தினருக்கு இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT