உடனடிச்செய்திகள்

Wednesday, December 30, 2015

தமிழுக்கான ஆராய்ச்சிப் போராளியாய், களப்போராளியாய் விளங்கிய தமிழண்ணல் அவர்களுக்கு வீரவணக்கம்! - தோழர் பெ.மணியரசன் இரங்கல் செய்தி!

தமிழுக்கான ஆராய்ச்சிப் போராளியாய், களப்போராளியாய் விளங்கிய தமிழண்ணல் அவர்களுக்கு வீரவணக்கம்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் இரங்கல் செய்தி!

மூத்த தமிழறிஞர் தமிழண்ணல் அவர்கள் 29.12.2015 அன்று இரவு மதுரையில் அவரது இல்லத்தில் காலமான செய்தி வேதனைக்குரியது. ஒட்டு மொத்தத் தமிழர்களுக்கும் இது ஒரு துன்பச் செய்தி.

மதுரைப் பல்கலைக்கழக தமிழ்த்துறைத் தலைவராக இருந்து பணி ஓய்வு பெற்ற தமிழண்ணல் அவர்கள், பல்வேறு விருதுகள் பெற்றவர். தமிழ் ஆய்வில் ஏராளமான நூல்கள் எழுதியவர். தொல்காப்பியம் குறித்த அவரது ஆய்வுரை சிறப்புமிக்கது.

ஓய்வு பெற்ற தொல்லியல் அறிஞர் நாகசாமி அவர்கள் தமிழ்மொழியை கீழ்மைப்படுத்தும் நோக்கத்தோடு, சங்க இலக்கியங்களும் சிலப்பதிகாரம் உள்ளிட்ட தமிழ் இலக்கியங்களும், சமற்கிருத நூல்களைப் பார்த்து எழுதப்பட்டவை என்று ஆராய்ச்சி என்ற பெயரில் ஓர் அவதூறு நூலை ஆங்கிலத்தில் வெளியிட்டார். அதற்குத் தக்க சான்றுகளுடன் ஒவ்வொன்றையும் மறுத்து ஆழமான ஆய்வு நூலை அய்யா தமிழண்ணல் அவர்கள் எழுதி தமிழிலும் ஆங்கிலத்திலும் வெளியிட்டார்.

பல்வேறு தமிழ் அமைப்புகளின் - தமிழ்த் தேசிய இயக்கங்களின் – தமிழறிஞர்களின் பொது அமைப்பாக விளங்கிய தமிழ்ச் சான்றோர் பேரவை, தமிழ்வழிக் கல்வியை சட்டமாக்கிட வலியுறுத்தி சாகும் வரையில் நூறு தமிழறிஞர்கள் மற்றும் தமிழுணர்வாளர்கள் சென்னையில் உண்ணாப் போராட்டம் நடத்த ஏற்பாடு செய்த போது, ஓர் இக்கட்டான நிலையில் அப்போராட்டத்திற்கு தலைமை தாங்க மன உறுதியோடு தமிழண்ணல் முன்வந்தார்; தலைமை தாங்கினார்.

ஒரு தமிழறிஞராய் - தமிழ் மொழிக்கு எதிரான கருத்துகளை முறியடிக்கும் ஆராய்ச்சிப் போராளியாய் – ஆட்சித்துறையிலும் கல்வித்துறையிலும் தமிழை அரங்கேற்றுவதற்கானக் களப் போராளியாய் செயல்பட்ட தமிழண்ணல் அவர்களின் மறைவுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வீரவணக்கத்தையும் ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

நாளை (31.12.2015) பிற்பகல் 3 மணிக்கு, மதுரையில் தமிழண்ணல் ஐயா அவர்களது இல்லத்தில் நடைபெறும் அவரது இறுதி வணக்க நிகழ்ச்சியிலும் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்களுடன் கலந்து கொள்கிறேன் என்ற செய்தியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

Monday, December 7, 2015

வெள்ளப் பேரழிவு – துயர்நீக்கப் பணிகளுக்கு உடனடியாக மக்கள் குழுக்களை அமைக்க வேண்டும்! - தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

வெள்ளப் பேரழிவு – துயர்நீக்கப் பணிகளுக்கு உடனடியாக மக்கள் குழுக்களை அமைக்க வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்!

நமது தலைமுறையும் இதற்கு முந்தியத் தலைமுறையும் கண்டிராத பெருமழையாலும், வெள்ளத்தாலும், சென்னையும் அதைச் சுற்றியுள்ள மாவட்டங்களும் கடலூர் மாவட்டமும் தாக்கப்பட்டு பேரழிவைச் சந்தித்துக் கொண்டுள்ளன. இந்த உண்மையை இந்திய மற்றும் தமிழ்நாடு அரசுகளும் உணர வேண்டும்; மக்களாகிய நாமும் உணர வேண்டும். அனைவரும் சேர்ந்து இந்தப் பேரழிவுகளை எதிர் கொண்டு மீள வேண்டும். இன்னும் தொடர்மழையும் வெள்ளப் பெருக்கும் விட்டபாடில்லை. வானிலை எச்சரிக்கைகள் அவ்வாறு இருக்கின்றன.

வழக்கமான வெள்ளச் சேதமல்ல இப்பொழுது ஏற்பட்டிருப்பது! இந்தப் பேரழிவில் துயர் துடைப்பு நடவடிக்கைகளில் மக்கள் அமைப்புகள், தன்னார்வு நிறுவனங்கள், கட்சிகள், தனி நபர்கள் ஆகியோரின் சமூக நடவடிக்கைகள் இதுவரை இல்லாத அளவுக்கு பெருமெடுப்பில் நடந்து வருவது நம்பிக்கை அளிக்கிறது.

தமிழ்நாடு அரசும் இந்திய அரசும் களத்தில் இறங்கிச் செயல்படுகின்றன.

தனித்தனியே, உதிரி உதிரியாகப் பிரம்மாண்டமான அளவில் துயர் நீக்கப் பணிகள் நடந்தாலும் அவற்றிடையே ஒருங்கிணைப்பு மிக மிகத் தேவை. தவித்துக் கொண்டிருக்கும் மக்கள் ஒருங்கிணைப்புக் குறைவின் காரணமாக பல இடங்களில் உதவிகள் கிடைக்காமல் இன்னும் துடிக்கின்றனர்.

வெள்ளந்தாக்கி ஏற்பட்டுள்ள பேரிழப்புகள் வகை வகையாகப் பல தன்மை கொண்டவை. மழை நின்ற பின் சில நாட்களில் முடிந்துவிடக் கூடிய வேலைகள் அல்ல அவை. பெருங்குளிர் மற்றும் சுகாதாரக் கேடுகளால் புதிய புதியத் தொற்று நோய்கள் பரவும் அபாயம் உள்ளது. இந்த ஆபத்தைத் தடுக்கும் நடவடிக்கைகளும் தேவை.

மேற்கண்ட துயர்நீக்கப் பணிகள் அனைத்தையும் ஒருங்கிணைத்து வகைப் பிரித்து செயல்படுத்தவும் கண்காணிக்கவும் அடுக்குமுறையில் கட்டமைப்புகள் தேவை. எனவே தமிழ்நாடு முதலமைச்சர் அனைத்துக் கட்சிகள் மற்றும் தன்னார்வு நிறுவனங்கள், ஊடகத் துறையினர், தகுதிமிக்கத் தனிநபர்கள் கொண்ட கலந்தாய்வுக் கூட்டங்கள் நடத்தி, மேலிருந்து கீழ்வரை மேற்கண்ட பிரிவினர் மற்றும் அதிகாரிகளைக் கொண்ட மக்கள் குழுக்களை அமைத்து செயல்படுத்த வேண்டும். ஒவ்வொரு குழுவும் அந்தந்த மட்டத்தில் ஓர் அதிகாரியின் தலைமையில் இயங்க வேண்டும்.

இத்திசையில் தமிழ்நாடு முதலமைச்சர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இந்திய அரசின் உடனடிக் கடமைகள்

இந்திய அரசு, தமிழ்நாட்டில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவுகளை அனைத்திந்தியப் பெரும் பேரிடராக ஏற்று அதற்குரிய நிதி உதவி மற்றும் துயர் நீக்க உதவிகளை வழங்க வேண்டும்.

பேரழிவில் சிக்கித் தவிக்கும் இந்த நேரத்தில் இந்திய அரசின் செயல்பாடுகள் மீது குறைகள் காண நாம் விரும்பவில்லை. ஆனால் சிலவற்றை சுட்டிக் காட்ட வேண்டிய அவசர அவசியம் உள்ளது.

இந்திய அரசு முதல் கட்டமாக அறிவித்த ரூ 940 கோடி நிதி உதவியில் தமிழ்நாடு அரசு 
தரவேண்டிய பழைய நிலுவைத் தொகைகளைப் பிடித்தம் செய்து கொண்டதாக செய்தி வந்துள்ளது. அது உண்மையானால் – அது மனித நேயமற்ற செயல்.

2013 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் கங்கை ஆற்றுக் கரையோரமாக ஏற்பட்ட பெரு வெள்ளத்தால் ஏற்பட்ட பேரழிவிற்கு 8346 கோடி ரூபாய் அளித்தது இந்திய அரசு. அதைவிடப் பன்மடங்கு கூடுதலாகப் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப் பேரழிவிற்கு, இதுவரை 1940 கோடி ரூபாய் தான் அறிவித்துள்ளது. குறைந்தது இருபதாயிரம் கோடி ரூபாயாவது தேவைப்படும் என்பதை இந்திய அரசு கவனத்தில் கொண்டு தொகையை உடன் அனுப்ப வேண்டும்.

நிலக்கரிக் கழகம், பி.எச்.இ.எல். போன்ற இந்திய அரசின் ஒன்பது (நவரத்னா) நிறுவனங்கள் உத்திர காண்ட் பேரழிவுக்கு நிதி உதவி செய்தன. நிலக்கரிக் கழகம் மட்டுமே 125 கோடி ரூபாய் நிதி அளித்தது. அந்நிறுவனங்கள் தமிழ்நாட்டு பேரழிவிற்கும் நிதி அளிக்க வேண்டும்.

தலைமுறை காணாத இந்த வெள்ளப் பேரழவில் துயர் நீக்கப் பணிகளில் எளிய இயக்கமாகிய தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றுப் பணியாற்றி வருகிறார்கள் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

வெள்ளப் பேரழிவில் உயிரிழந்தோர் அனைவருக்கும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

Thursday, December 3, 2015

ஏழுத்தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே! - கி. வெங்கட்ராமன் கண்டனம்!


ஏழுத்தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு  அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே! 

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!


பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட இராசீவ் காந்தி வழக்கு சிறையாளிகளுக்கு தமிழ்நாடு அரசு, விடுதலை வழங்கியது தொடர்பான வழக்கில், இன்று (திசம்பர் 2) தீர்ப்பு வழங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம், அரசமைப்புச் சட்டத்தையும் இந்தியக் கூட்டாட்சி முறைமையையும் ஒரே அடியில் கவிழ்த்துவிட்டது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஸ், ஏ.பி.சாப்ரே, யு.யு.லலித் ஆகிளோர் அடங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம், பெரும்பான்மை அடிப்படையில் அளித்துள்ள தீர்ப்பு, தண்டனைக்குறைப்பு அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு எனக் கூறியிருப்பது, நீதிமன்றமே செய்யும் அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பு ஆகும்.

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் கூறுகிறது. இங்கு அரசு என்று சொல்லப்பட்டிருப்பது, மாநிலத்தை அல்லது மாகாணத்தை(Province) குறிப்பது அல்ல.

இந்தியாவின் ஒட்டுமொத்த இறையாண்மை, இரண்டு தளங்களில் பகிரப்பட்டு அந்தந்த தளங்களில் அந்தந்த அரசு உறுப்புகள் செயல்படுகின்றன.

இதில், தண்டனைக்குறைப்பு அதிகாரம், மன்னிப்பு அதிகாரம் ஆகியவை அரசமைப்புச் சட்ட உறுப்பு 72-இன்படி இந்திய ஒன்றிய அரசுக்கும், உறுப்பு 161-இன்படி மாநில அரசுக்கும் உள்ளது.

மாரூராம் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில், நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட ஆயம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 72 மற்றும் 161 ஆகியவை சம அதிகாரம் கொண்டவை, ஒரே நேரத்தில் இணையாக செயல்படக் கூடியவை என்று தெளிவுபடுத்திவிட்டது.

அதாவது, மாநில அரசின் மன்னிப்பு அதிகாரமும் இந்திய ஒன்றிய அரசின் மன்னிப்பு அதிகாரமும் இணையானவை என்றும் சம அதிகாரம் உடையவை என்றும் ஒரே சமயத்தில் செயல்படக் கூடியவை என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.

அதற்குப் பிறகு, திரிவேணி பென் வழக்கிலும் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

ஏனெனில், உயிர் வாழும் உரிமை குறித்த மிக அடிப்படையான மனித உரிமையில் கூட்டாட்சி முறைமை தங்கு தடையின்றி செயல்பட வேண்டும் என்பதே, அரசமைப்புச் சட்டத்தின் சாரமான நிலைப்பாடாகும்.

இந்த நிலையில், தண்டனைக் குறைப்பு மற்றும் மன்னிப்பு அதிகாரத்தில், விதி 161-இன்படி உள்ள அதிகாரத்தையும் சேர்த்து, இத்தீர்ப்பு இரத்து செய்து கூட்டாட்சி முறைமைக்கே வேட்டு வைக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.

குற்றவியல் சட்ட விதி 435(1), இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பு ஒரு வழக்கை விசாரித்திருந்தால், அது தொடர்பான தண்டனைக் குறைப்பு முடிவெடுப்பதற்கு முன் மாநில அரசு ஒன்றிய அரசுடன் “கலந்தாலோனை”(Consultation) செய்ய வேண்டுமெனக் கூறுகிறது.

இந்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டப்படி, தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அவ்வழக்குகளில் ஒன்றிய அரசின், “ஒப்புதல்”(Consent or Concurrence) பெற வேண்டும் என்று விதி 435(2) கூறுகிறது.

குற்றவியல் சட்ட விதி 435(1)இல், “கலந்தாலோசனை” (Consultation) என்பதும் 435(2)இல் “ஒப்புதல்” (Consent or Concurrence) என்பதும் தெளிவாக வரையறுக்கப்பட்டு, வெவ்வேறு நிலைகளுக்குப் பொருந்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம், இராசீவ் காந்தி கொலை வழக்கில், தமிழ்நாடு அரசு “கலந்தாலோசனை” (Consultation) செய்ய வேண்மெனக் கூறப்படுவது ஒப்புதல் (Concurrence) பெறுவது தான் என விளக்கம் அளிப்பது சட்ட வளைப்பாக இருக்கிறது.

435(1)இன்படி, கலந்தாலோசனை(Consultation) என்றாலும் ஒப்புதல்தான் (Consent or Concurrence); 435(2)இன்படி, ஒப்புதல் (Consent or Concurrence) என்றாலும் ஒப்புதல்தான் என விளக்கம் அளிப்பது, வினோதமான வேதனையாக இருக்கிறது.

அதேபோல், இத்தீர்ப்பு வாழ்நாள் தண்டனை என்றால் அச்சிறையாளியின் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் சிறையிலிருப்பதைத்தான் குறிக்கும் எனக் கூறுவது, குற்றவியல் சட்ட விதி 433(A) -வை தூக்கியெறிவதாக இருக்கிறது.

மரண தண்டனை விதிக்கப்படடு, அது கருணை மனுவின் வழியாக வாழ்நாள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களுக்கு 14 ஆண்டுகள் கழித்தபிறகு, அரசமைப்பு உறுப்பு 161-இன்படி அல்லது, குற்றவியல் சட்ட விதி 435(2)இன்படி, மேலும் தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.

இவை எல்லாவற்றையும் ஒரே அடியாக குப்பைக் கூடையில் வீசி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், அரைகுறையாவாவது நிலவும் கூட்டாட்சி முறைமையையும் குலைப்பதாக உள்ளது.

அந்தவகையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த ஆயத்தின் தீர்ப்பு இதற்கு முன் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற முழு ஆயம் கேசவானந்த பாரதி வழக்கில் அளித்தத் தீர்ப்புக்கு முரணாக, அதாவது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.

எனவே, இத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாமல் - உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட முழு ஆயம் வழியாக விசாரிப்பதற்கு சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அதுவரை இராசீவ் காந்தி வழக்கில் சிறையிலுள்ள வாழ்நாள் சிறையாளிகள் 7 பேரையும் நீண்டகால விடுப்பில் (Parole) இடைக்கால விடுதலை வழங்க வேண்டும் என்றும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
கி. வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர், 
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

Saturday, November 28, 2015

“மாவீரர் ஏற்றிய வெளிச்சம் தமிழீழத்தையும் தமிழ்நாட்டையும் எழுச்சி பெறச் செய்யும்!”


“மாவீரர் ஏற்றிய வெளிச்சம் தமிழீழத்தையும் தமிழ்நாட்டையும் எழுச்சி பெறச் செய்யும்!”

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் மாவீரர் நாள் உரை!

தமிழீழ விடுதலைக்காகப் போராடி மடிந்த போராளிகளுக்கு வீரவணக்கம் செலுத்தும் நாளாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் 27 அன்று, “தமிழீழ மாவீரர் நாள்” கடைபிடிக்கப்பட்டு வருகின்றது. இந்நாளில், தமிழீழத்திலும், தமிழ்நாட்டிலும், புலம் பெயர்ந்த தமிழர்கள் வாழும் நாடுகளிலும் நினைவெழுச்சி – வீரவணக்க நிகழ்வுகள் நடைபெற்று வருகின்றன.


சென்னையில், திரு.வி.க. நகர் பேருந்து நிலையம் அருகில், ம.தி.மு.க. சார்பில், நேற்று (27.11.2015) மாலை “மாவீரர் நாள் – வீரவணக்கப் பொதுக்கூட்டம்” நடைபெற்றது. முன்னதாக, தமிழ்நாடு காவல்துறை இக்கூட்டத்திற்குத் தடை விதிக்கவே, சென்னை உயர் நீதிமன்றத்திற்குச் சென்று, கூட்டம் நடத்த ஆணை பெறப்பட்டது.

கூட்டத்தின் தொடக்கத்தில், மாவீரர் ஈகச்சுடரை ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ மற்றும் தலைவர்கள், ஏற்றிவைத்தனர். கூட்டத்திற்கு, திரு. வைகோ. தலைமை தாங்கினார்.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திரு. தொல். திருமாவளவன், புலவர் புலமைப்பித்தன், ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, ஓவியர் வீரசந்தனம், தமிழ்ப்புலிகள் தலைவர் வழக்கறிஞர் நாகை திருவள்ளுவன், தற்சார்பு உழவர் இயக்கம் திரு. கி.வே. பொன்னையன், கவிஞர் மணிவேந்தன், இயக்குநர் வ. கவுதமன் உள்ளிட்டோர் உரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன் கலந்து கொண்டு, வீரவணக்கவுரை நிகழ்த்தினார். அவர் பேசியதாவது:

“தமிழீழ விடுதலைப் போரில் இன்னுயிர் ஈந்த மாவீர்ர்களுக்கு வீரவணக்கம் செலுத்த மறுமலர்ச்சி தி.மு.க. ஏற்பாடு செய்திருக்கும் இந்த மேடையிலே நின்று, அம்மாவீர்ர்களுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பிலே எமது வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

பிரஞ்சுப் புரட்சி வீரர்களை, இரசியப் புரட்சி வீரர்களை, சீனப் புரட்சி வீரர்களை, வியட்நாம் விடுதலைப்போர் வீரர்களை உலகம் அறிந்த அளவிற்கு, தமிழினப் போராளிகளை உலகம் அறிந்து கொள்ளவில்லையே என்று பிற்காலத்தில் இருந்த வரலாற்று வறுமையை நீங்கச் செய்து, உலகிற்கு தமிழினத்தின் போராளிகளை அறிமுகப்படுத்தி – தமிழினத்திற்கே, அந்த இனத்தின் பெருமைகளை மீண்டும் அறிமுகப்படுத்திய மாவீரர்களே, உங்களுக்கு வீரவணக்கம்!

“வரலாறே இல்லாமல் ஒரு இனம் வாழ்வதைவிட, வரலாற்றைப் படைத்துவிட்டு மறித்துப் போகலாம்” என்று சொன்ன தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே. பிரபாகரன் அவர்களின் வாக்குக்கேற்ப, களம் கண்டு இன்னுயிர் ஈந்த, மாவீர்ர்களை – போராளிகளை நினைவுகூரும், மாவீர்ர் நாள் இன்றைக்குக் கடைபிடிக்கப்படுகிறது.

மறைந்த பிறகும் தீபமாய் தமிழினத்திற்கு ஒளிவீசி நிற்கும் மாவீரர்களே, உங்களுக்கு வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

தமிழீழ விடுதலைக்காக உயரீகம் செய்து மடிந்தப் போராளிகளை நினைவுகூரும் இந்த நாளுக்குக்கூட, இரங்கல் தெரிவித்துக் கூட்டம் நடத்தக்கூட, இங்கு அனுமதி மறுக்கப்படுகிறது. கடந்த சில ஆண்டுகளாக, தொடர்ந்து இதுபோல் தமிழ்நாடு அரசு அனுமதி மறுத்து வருகின்றது.

காவல்துறையினர், நவம்பர் 27 அன்று வேண்டாம், வேறொரு நாளில் கூட்டத்தை நடத்திக் கொள்ளுங்கள் எனச் சொல்லியிருக்கின்றனர். நவம்பர் 27 அன்று ஏன் கூட்டம் நடத்தக் கூடாது? அன்று கூட்டம் நடத்தினால், உங்களுக்கு என்ன “புனிதம்“ கெட்டுவிடப் போகிறது?

நல்லவேளை உயர் நீதிமன்றம் அனுமதி கொடுத்துவிட்டது. இல்லையெனில், இந்நேரம் நாம் கைதாகியிருப்போம். நான் நினைத்துப் பார்க்கிறேன்.

தமிழீழத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் போல் செயல்பட்ட, சுப. தமிழ்ச்செல்வன் அவர்கள், வான்குண்டு வீச்சில் படுகொலை செய்யப்பட்டபோது, அதனைக் கண்டித்தும், அவர் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தும் சென்னையில் அண்ணன் வைகோ, அய்யா பழ. நெடுமாறன் உள்ளிட்ட அனைவரும் சேர்ந்து ஒரு கூட்டம் நடத்தினோம்.

அன்றைக்கு முதல்வராக இருந்த தி.மு.க. தலைவர் கருணாநிதி, எங்களைக் கைது செய்து, புதிதாக அப்போது கட்டியிருந்த புழல் சிறையில் அடைத்தார். அண்ணன் வைகோ – அய்யா நெடுமாறன் ஆகியோருடன் புழல் சிறைக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தது.

இலங்கையின் குடியரசுத் தலைவரான மைத்ரி சிறீசேனாவும், முன்னாள் குடியரசுத் தலைவரான இராசபக்சேவும் ஒற்றைக் குரலில், மாவீர்ர் நாள் கடைபிடிக்கக் கூடாது என கடுமையாக எதிர்ப்புகளை வெளியிட்டு வருகின்றனர். தமிழ்நாட்டிலும் அதேநிலைதான் என்றால், என்ன பொருள்? நாம் இருப்பது இலங்கையிலா அல்லது இந்தியாவிலா?

இந்தியா தொடர்ந்து சொல்கிறது, “இலங்கை எங்களுக்கு நட்பு நாடு!”. இந்தியப் பிரதமர் மோடி சொல்கிறார். பா.ச.க. அமைச்சர்கள் சொல்கிறார்கள், “இலங்கை எங்களுக்கு நட்பு நாடு!”. நாம் சொல்கிறோம், இலங்கை உங்களுக்கு நட்பு நாடு அல்ல, சகோதர நாடு! உங்களுக்கும் அவர்களுக்கும் உள்ள உறவு அப்படித்தான் இருக்கிறது!

அப்படியெனில், நாங்கள் உங்களுக்கு யார்? நீங்கள் எங்களை பகைவர்களாக்கிக் கொண்டுள்ளீர்கள். தமிழர் பகைவர்கள் - சிங்களர் நண்பர்கள் என்பதுதான் இந்திய அரசின் தொடர்ச்சியான அணுகுமுறையாக இருந்து வருகிறது.

இந்தக் கூட்டம் நடந்தால், இந்திய அரசு கேள்வி கேட்குமோ என தமிழ்நாடு அரசு அஞ்சுகிறது. எனவே முந்திக் கொண்டு தடை போடுகிறது.

“எங்கள் மண்ணில் இன உணர்ச்சி உண்டு, விடுதலைக்காகப் போராடி மடிந்தவர்களை நாங்கள் நினைவுகூருவது இயல்புதான், இதையெல்லாம் தடுக்க முடியாது” என தில்லி அரசிடம் சொல்லும் துணிச்சல், தமிழ்நாட்டு முதலமைச்சர் செயலலிதாவுக்கு இல்லையென கருதலாமா? அல்லது மனம் இல்லையென கருதலாமா? வேறெப்படி கருதுவது?

கடந்த ஆண்டும் இப்படித்தான் நீதிமன்றம் சென்று நடத்தினோம். இந்த ஆண்டும் இப்படித்தான் இருக்கிறது. நீதிமன்றம் சென்று இந்த இரங்கல் நிகழ்வை நடத்த வேண்டிய அவலம் இருக்கிறதென்றால், இலங்கை அரசுக்கும், இந்திய அரசுக்கும் என்ன வேறுபாடு இருக்கிறது?

இந்தியாவும் இலங்கையும் சகோதர உறவு வைத்திருக்கிறது. அது ஆரிய உறவு! அதை அவர்களே சொல்லியிருக்கிறார்கள். இந்தியாவில் தமிழர்கள் தவிர்த்து – இலங்கையில் தமிழர்கள் தவிர்த்து, நாமெல்லாம் ஆரியர்கள் என சிங்களத் தூதர் ஒருவர் சொன்னார்.

நாங்களெல்லாம் மேடையில் பேசி வருவதை, நேற்று இந்திய நாடாளுமன்றத்தில் பேசிய காங்கிரசு உறுப்பினர் மல்லிகார்ஜூன கார்கே பேசியிருக்கிறார். “நீங்கள் தான் வெளியிலிருந்து வந்தவர்கள், நாங்கள் இந்த மண்ணின் மக்கள்” என அவர் பேசினார்.

இது குறித்து தொலைக்காட்சியில் விவாதம் நடந்தபோது, தில்லியிலிருந்து அந்த விவாதத்தில் கலந்துகொண்ட, மார்க்சிஸ்ட்டு கம்யூனிஸ்ட் கட்சி முன்னணித் தலைவர் தோழர் டி.கே. ரங்கராசன், “கார்கே வரலாற்றைத் தானே சொல்கிறார்” எனக் கருத்துத் தெரிவித்தார்.

இப்படி வரலாறு நம்முடைய மேடைகளிலிருந்து மட்டுமல்ல! அவர்களது மேடைகளிலிருந்தும் வெளி வருகிறது. அதற்கான அழுத்தம் எழுந்திருக்கிறது! நீண்ட நாட்களுக்கு உண்மையான வரலாற்றைப் புதைத்து வைத்திருக்க முடியாது.

வடவர்களும், இந்திய ஆட்சியும் எப்பொழுதும் தமிழர்களை பகைவர்களாகவே, அயலார்களாகவே பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் அதைப் புரிந்து கொள்ளும் உணர்ச்சிப் போக்கு மெல்ல மெல்ல வளர்ந்து கொண்டிருக்கிறது. வருங்காலத்தில் அது பேரெழுச்சியாக மாற இருக்கிறது. அதற்கான எல்லா அறிகுறிகளும் தெரிகின்றன.

அதை கோட்பாட்டுப்படி சரியாகக் கொண்டுச் செல்ல வேண்டும். மறுபடியும் குழப்பங்கள் வந்துவிடக் கூடாது என்ற எச்சரிக்கையும் பொறுப்புணர்ச்சியும் தேவை.

ஏதோ பூகோள அமைப்பில், தமிழீழம் தெற்காசியாவின் மூலையில் இருப்பதால்தான், இந்தியா தமிழீழப் போராட்டத்தை எதிர்க்கிறது என நாம் கருதிக் கொள்வது சரியல்ல! அது, இந்தியாவின் தமிழினப் பகையை மூடிமறைக்கும் கருத்தாகும்.

தமிழினம் என்பதால்தான் இந்தியா, தமிழீழத்தை மறுக்கிறது. தமிழர் போராட்டத்தை எதிர்க்கிறது. அதே, இலங்கையின் வட பகுதியில் வேறொரு இனம் இப்படியொரு போராட்டத்தை நடத்தியிருந்தால், இந்தியா ஆதரித்திருக்கும். வங்க தேச விடுதலையை இந்தியா ஆதரிக்கவில்லையா? அதுபோல.

தமிழர்களை எப்பொழுதும், இந்திய ஆளும் வர்க்கம் அது பா.ச.க.வாக இருந்தாலும் சரி, காங்கிரசாக இருந்தாலும் சரி, பகைசக்தியாகத் தான் கருதுகிறது. அதனால்தான் நம் போராட்டங்கள் எதிர்க்கப்படுகின்றன. பூகோள அரசியல் என்பதெல்லாம், நமக்கு நாமே சொல்லிக் கொள்ளும் சாக்கு போக்கு! இங்கே பூகோள அரசியல் வேலை செய்யவில்லை, இந்தியாவின் இன அரசியல்தான் வேலை செய்கிறது.

இந்துத்துவா என்பது வெறும் மதவாதமல்ல! அது ஆரிய இனவாதம். இரண்டாவது, பார்ப்பன வர்ணாசிரம தருமம். மூன்றாவதாகத்தான், இந்து மதவெறிவாதம். எனவே, இந்துத்துவாவை வெறும் மதவாதமாக சுருக்கிப் பார்க்கக் கூடாது.

இவற்றையெல்லாம் புரிந்து கொண்டால்தான், இந்தியாவுக்கும் நமக்குமான உறவு எப்படிப்பட்டது என்ற முடிவுக்கு நாம் வர முடியும்.

தமிழீழச் சிக்கலை இந்திய அரசுக்கு புரிய வைக்கலாம் என நினைத்தால், நம்மைப் போல் ஏமாளிகள் வேறு யாரும் இருக்க முடியாது. இந்திய அரசுக்குப் புரியவைக்க முடியாது, இந்திய அரசைப் பணியவைக்க வேண்டும். அதற்கான ஆற்றல் - பலம், ஏழரை கோடித் தமிழ்நாட்டு மக்களுக்குத்தான் இருக்கிறது. அதற்கான எழுச்சி இங்கிருந்துதான் உருவாக வேண்டும். தமிழின உணர்ச்சியுடன் இந்தியாவை அடையாளம் கண்டு – புரிந்து கொண்டுதான் அதை ஏற்படுத்த வேண்டும். இந்தப் பேரிழப்பிற்குப் பிறகாவது, இதை புரிந்து கொள்ள வேண்டும்.

மாவீரப் போராளிகளே, நீங்கள் ஏற்றி வைத்துள்ள வெளிச்சம் தமிழீழத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் எழுச்சியூட்டும். இந்த வெளிச்சத்திலேயே தமிழீழத்தையும் வெல்வோம்! தமிழ்நாட்டையும் எழுச்சிபெறச் செய்வோம்! மாவீரர்களே! உங்களுக்கு எமது வீரவணக்கம்!”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தென்சென்னை செயலாளர் தோழர் இளங்குமரன், சென்னை செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி தென்சென்னை செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் கவியரசன், சாமி, முழுநிலவன், நல்லசிவம், காளிராஜ், பாலசுப்பிரமணியம், மணி, வினோத் உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் நிகழ்வில் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில், திரளான தமிழின உணர்வாளர்களும் பொது மக்களும் கலந்துகொண்டு, மெழுகு திரிகள் ஏற்றி மாவீரர்களுக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

குடந்தை வட்டம் – சாமிமலை கடைவீதியில், நேற்று மாலை, மாவீர்ர் நாள் வீரவணக்க நிகழ்வு, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கக் கிளைச் செயலாளர் தோழர் முரளி தலைமையேற்றார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. அருள் உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு, மாவீரர்களுக்கு மெழுகு திரியேற்றி, வீரவணக்கம் செலுத்தினர்.

இன்று மாலை குடந்தை கும்பேசுவரர் கோயில் மேல வீதியிலுள்ள நாடார் திருமண மண்டபத்தில், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், மாவீரர் நாள் வீரவணக்கக் கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கக் குடந்தை நகரச் செயலாளர் தோழர் க. விடுதலைச்சுடர் தலைமையேற்கிறார். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை சிறப்புரையாற்றுகிறார். நிறைவில், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச. செந்தமிழன் நன்றி தெரிவிக்கிறார்.

இதுபோல், தமிழகமெங்கும் மாவீரர் நாள் நிகழ்வுகள் பல்வேறு அமைப்புகளின் சார்பில் எழுச்சியுடன் கடைபிடிக்கப்பட்டது.Friday, November 27, 2015

தமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களுக்கு இறுதி வணக்கம்!


தமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களுக்கு இறுதி வணக்கம்!சப்பானியத் தமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்கள் நேற்று (26.11.2015), தமது 82 ஆம் அகவையில் டோக்கியோவில் காலமானார் என்ற துயரச்செய்தி தமிழ் மொழி அறிஞர்களிடமும் உணர்வாளர்களிடமும் வேதனை உண்டாக்கியுள்ளது.


தமிழர்களின் வரலாற்றுப் பெருமிதங்களின் ஒரு பகுதியை உலகறியச் செய்த பெருமகனார் கராசிமா, குறிப்பாகப் பிற்காலச் சோழர்களின் வரலாற்றை சிறப்பாக ஆய்வு செய்தார்.

சோழர் கால நில உறவுகள் பற்றி செப்பேடுகள் வழி அறிந்த கராசிமா – தமிழ்நாடு வந்து கள ஆய்வில் ஈடுபட்டார்.

வளநாடு – கோட்டயம் – கூற்றம் என்ற அடுக்குமுறை நிர்வாகப் பிரிவுகளை உருவாக்கி, சோழப் பேரரசை ஆட்சி செய்த அரசர்களின் – தொகுப்பு முறை ஆட்சி (Segmentary State) பற்றி வெளிப்படுத்தியவர் கராசிமா.

உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவராக 1989 முதல் 2010 வரை செயல்பட்டார். தஞ்சாவூரில் 1995இல் நடைபெற்ற எட்டாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டை நடத்தியதில் பெரும் பங்கு வகித்தார்.

ஒன்பதாவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டைக் குறுகிய காலத்தில் நடத்தி – தமது அரசியல் விளம்பரத்தை நிறைவேற்றிக் கொள்ள அப்போதைய முதல்வர் கருணாநிதி ஆசைப்பட்டு அவசரப்பட்டபோது, ஆராய்ச்சியாளர்கள் ஆய்வுத்தாள்கள் தயாரிக்கப்போதிய காலவெளி கொடுக்காமல் அவசரம் அவசரமாக ஆராய்ச்சி மாநாடு நடத்தக் கூடாது என்று மறுத்துவிட்டார் நொபுரு கராசிமா.

ஆனால் கலைஞர் கருணாநிதி தமது திட்டப்படி – உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு என்ற பெயரில் கோவையில் 2010 இல் நடத்தினார்; அப்போது உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பொறுப்பிலிருந்து விலகிக் கொண்டார். உலகத் தமிழாராய்ச்சி நிறுவனமும் செயல்படாமல் போய்விட்டது.

இந்தியா – சப்பான் நல்லுறவுக்குப் பாடுபட்டார் என்று கராசிமாவுக்கு இந்திய அரசு “பத்ம சிறி” விருது அளித்தது. உடல்நலக் குறைவால் அவ்விருதை வாங்க அவரால் புதுதில்லி வரமுடியவில்லை. பின்னர் சப்பான் சென்றபோது அன்றையத் தலைமை அமைச்சர் மன்மோகன் சிங், பத்ம சிறி விருதை கராசிமாவிடம் நேரில் அளித்தார்.

நொபுரு கராசிமாவின் மிகச் சிறந்த தமிழர் ஆய்வுப் பணிக்கு தமிழினம் என்றென்றும் கடமைப்பட்டுள்ளது.

தமிழறிஞர் நொபுரு கராசிமா அவர்களின் மறைவுக்குத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

இடம் : சென்னை

Tuesday, November 24, 2015

தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட அமைதிவழியில் போராடிய 10 வழக்கறிஞர்களை பார்கவுன்சில் இடைநீக்கம் செய்தது சட்டவிரோதம்!


தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட அமைதிவழியில் போராடிய 10 வழக்கறிஞர்களை பார்கவுன்சில் இடைநீக்கம் செய்தது சட்டவிரோதம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டனம்!

தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில், வழக்கறிஞர் பகத்சிங் உள்ளிட்ட 10 வழக்கறிஞர்களை இடைநீக்கம் செய்து வழக்கறிஞர் பணி செய்ய விடாமல் தடுத்துள்ளது. வழக்கறிஞர் பகத்சிங் தலைமையில் 10 வழக்கறிஞர்கள் சென்னை உயர் நீதிமன்றத்தில் தலைமை வழக்கறிஞர் கூடத்தில் 14.09.2015 அன்று அலுவல் நேரத்தில் வாயில் கருப்புத் துணிகட்டிக் கொண்டு, தமிழை உயர் நீதிமன்ற வழக்கு மொழி ஆக்கிடுமாறு உச்சநீதிமன்றத்தையும் நடுவண் அரசையும் வலியுறுத்தி எழுதப்பட்ட அட்டையைக் கையிலேந்திக் கொண்டு அமைதியாக அமர்ந்திருந்து அறவழியில் கோரிக்கையை வலியுறுத்தினர்.


இதற்காக அவர்கள் 10 பேர் மீதும் வழக்குப் பதிவு செய்து இரு பெண் வழக்கறிஞர்களைத் தவிர்த்து 8 ஆண் வழக்கறிஞர்களைப் புழல் சிறையில் அடைத்தனர். 29 நாள் சிறையில் இருந்த பின் அவர்கள் பிணையில் வெளிவந்தனர்.

இன்று (24.11.2015) அந்த 10 வழக்கறிஞர்களையும் வழக்கறிஞர் தொழில் நடத்தத் தடைவிதித்துத் தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் இடைநீக்கம் செய்துள்ளது. பத்து வழக்கறிஞர்கள் மீதும் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து கொண்டு இருக்கும் போது தமிழ்நாடு - புதுச்சேரி பார் கவுன்சில் அவர்களை இடைநீக்கம் செய்திருப்பது சட்ட விரோதச் செயலாகும். ஒரு குற்றச்சாட்டுக்கு வெவ்வேறு இரு அமைப்புகள் நடவடிக்கை எடுப்பது அரசமைப்புச் சட்ட விதிக்கு முரணானது.

தமிழ்நாட்டில் உள்ள ஏழரைக்கோடி தமிழ் மக்களின் தாய் மொழியான தமிழை, அரசமைப்புச் சட்ட விதி 348(2) – இன் கீழ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குமொழி ஆக்குங்கள் என்று பத்தாண்டுக்கு மேலாக தமிழ் மக்களும் தமிழ்நாடு வழக்கறிஞர்களும் போராடி வருகிறார்கள்.

தமிழ்நாடு அரசு இதற்காக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றி ஆளுநர் வழியாக நடுவண் அரசுக்கு அனுப்பியுள்ளது. அதை ஏற்க முடியாது என்று உச்சநீதிமன்றம் நிராகரித்துவிட்டது. அரசமைப்புச் சட்ட விதியைக் கடைபிடிக்க வேண்டிய இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் அதைக் கடைபிடிக்காமல் தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட மறுத்து வருகின்றன. இச்செயல் இந்திய அரசும் உச்சநீதிமன்றமும் இந்திய அரசமைப்புச் சட்டத்தை செயல்படுத்த மறுக்கும் சட்ட விரோதச் செயலாகும்.

இந்நிலையில் இந்திய அரசமைப்புச் சட்டத்தை மதித்தும், ஏழரைக்கோடி தமிழ் மக்கள் கோரிக்கையை ஏற்றும் தமிழை உயர்நீதிமன்ற வழக்குமொழியாக்கிட வேண்டுகோள் வைத்து அறவழியில், வாயில் துணிகட்டி அமைதியாக அமர்ந்து வலியுறுத்திய வழக்கறிஞர்களை சிறையில் அடைத்து அவர்கள் மீது வழக்கு நடத்துவதுடன், வழக்கறிஞர் பணியை செய்யவிடாமல் தடை செய்திருப்பது வன்மையான கண்டனத்துக்குரியது.

தமிழ்நாடு – புதுச்சேரி பார்கவுன்சில் தனது செயல்பாட்டை மறு ஆய்வு செய்து வழக்கறிஞர் பகத்சிங் உள்ளிட்ட 10 வழக்கறிஞர் மீது விதிக்கப்பட்ட இடைக்காலத் தடையை நீக்குமாறு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.

இடம் : சென்னை

Thursday, November 12, 2015

தொழிலாளர் சனநாயகப் பேரியக்கத் தொடக்க நிகழ்வில் தோழர் கி. வெங்கட்ராமன் உரை

எண்ணூர் அசோக் லேலண்ட்டில் சனநாயகப் பேரியக்கத் தொடக்க நிகழ்வில்தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு - காணொளி

தமிழர் நாடு” - நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் தோழர் பெ. மணியரசன் உரை.

“முத்தமிழ்க்காவலர்” கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்களின் “தமிழர் நாடு” - நூல் வெளியீட்டு விழா நிகழ்வில் தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், நூலை வெளியிட்டு சிறப்புரை - காணொளி.

Friday, November 6, 2015

உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல் திடீர் மறைவு பேரதிர்ச்சியும் பெரும் துன்பமும் தருகிறது! - தோழர் பெ. மணியரசன் இரங்கல்

உலகத் தமிழ்க் கழகத் தலைவர் முனைவர் ந. அரணமுறுவல் திடீர் மறைவு பேரதிர்ச்சியும் பெரும் துன்பமும் தருகிறது! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் இரங்கல் அறிக்கை!

உலகத் தமிழ்க் கழகத்தின் தலைவரும் என்னுடைய நீண்டநாள் தோழருமான முனைவர் அரணமுறுவல் அவர்கள்இன்று (06.11.2015),நெல்லையில் திடீரென்று மாரடைப்பால் காலமான செய்தியறிந்துசொல்லொண்ணா அதிர்ச்சியும் வேதனையும் அடைகிறேன்.

அவர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பி..எல்படித்துக் கொண்டிருந்தபோதுதிருச்சி தேவர் மன்றத்தில் 1968இல் நடந்த உலகத்தமிழ்க் கழக அமைப்பு மாநாட்டிற்கு வந்திருந்தார்அங்கு அவரை சந்தித்தது முதல்தோழர் அரணமுறுவல் அவர்களும் நானும் உலகத்தமிழ்க் கழகத்தில் பணியாற்றபோதும்அதன்பிறகு கடந்த 01.11.2015 அன்றுதேவக்கோட்டையில் தமிழர் முன்னணி நடத்தியதமிழர் தாயகநாள் விழாவில் கலந்து கொண்டது வரை தொடர்ந்துகொள்கை வழி உடன்பட்டு தோழமையோடு செயல்பட்டுள்ளோம்.

கடந்த சில ஆண்டுகளாக தமிழ்வழிக் கல்வியை நிலைநாட்டிடதமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் சார்பில் நாங்கள் தொடர்ந்துபோராட்டங்களில் ஈடுபட்டும்இயங்கியும் வந்துள்ளோம்.

தோழர் அரணமுறுவல் இளமைக் காலம் தொட்டுமொழிஞாயிறு தேவநேயப் பாவாணர்பாவலரேறு பெருஞ்சித்திரனார் ஆகியோர்வழிநின்றுஉறுதியான தனித்தமிழ்ப் பற்று கொண்டுஅதனை தன் குடும்பத்திலும் பொது வெளியிலும் பரப்பிபணியாற்றி வந்ததுடன்தனித்தமிழ்நாடு கொள்கையிலும் உறுதியாக நின்றவர்அதைப்போலவேமனித சமத்துவம் தமிழர் சமத்துவம் பெண்ணுரிமை மதசார்பின்மை போன்ற கொள்கைகளிலும் உறுதியாக இருந்தவர்.

பாவாணர் பெருஞ்சித்திரனார் ஆகியோர் நிறுவிய உலகத் தமிழ்க் கழகம் இடையில் தொய்வடைந்துசெயல் முடங்கியிருந்தகாலத்தில் அதனை தூக்கி நிறுத்திசெயல் களத்திற்குக் கொண்டுவந்தோரில்தோழர் அரணமுறுவல் முதன்மையானவர்உலகத் தமிழ்க்கழகத்தின் சார்பில்தரமான ஆய்வுகளுடன்கூடியதனித்தமிழ் இதழாக “முதன்மொழியைகொண்டு வருவதிலும்அரணமுறுவல் பணிஅளப்பரியதுசெம்மொழித் தமிழாய்வு நிறுவனத்தில் அவர் ஆற்றியப் பணி மற்றவர்களாலும் மதிக்கத்தக்கதாக இருந்தது.

தமிழ் மொழிதமிழர் தாயகம்தமிழினம் ஆகியவை பல்வேறு தாக்குதலுக்கும்உரிமைப் பறிப்புகளுக்கும்உயிர் பறிப்புகளுக்கும்உள்ளாகி வரும் இவ்வேளையில்தோழர் அரணமுறுவல் இழப்பு என்பதுதமிழினத்திற்குப் பேரிழப்பாகும்பெரும் துன்பம் தருவதாகும்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில்முனைவர் அரணமுறுவல் அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறேன்அவர்மறைவுக்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்


இன்னணம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசியப் பேரியக்கம்.


இடம் : சென்னை 

குறிப்பு: நாளை (07.11.2015) காலை 11 மணியளவில், மேற்கு தாம்பரம் முடிச்சூர் பகுதியிலுள்ள அய்யா அவர்களின் இல்லத்திலிருந்து இறுதி ஊர்வலம் புறப்படுகிறது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT