"யாருக்கும் வெட்கமில்லை எவருக்கும் நம் வாக்கில்லை" - த.தே.பொ.க பரப்புரை!
நடக்கவிருக்கும் 2011ஆம் ஆண்டு தமிழக சட்டமன்றத் தேர்தலை தமிழக மக்கள் புறக்கணிக்க வேண்டும் என வலியுறுத்தி தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பரப்புரை செய்து வருகின்றது. இந்நிலைப்பாட்டை விளக்கும் துண்டறிக்கையை த.தே.பொ.க. வெளியிட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது.
தேர்தல் சீட்டாட்டம் இந்த முறை மிகவும் கேவலமாகிவிட்டது. கூட்டணி சேரும் கட்சிகளுக்கிடையே கொடும்பாவி கொளுத்திக் கொண்டார்கள். கட்டித் தழுவிக் கொள்ளப் போனவர்கள் காரி உமிழ்ந்து கொண்டார்கள்.
சாவொன்றும் நிகழாமலே சொந்தக் கட்சிக் கொடியை இறக்கி ஒரு கூட்டத்தினர் அரைக் கம்பத்தில் பறக்கவிட்டனர். வேறொரு கூட்டத்தினர் தன் கட்சி அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தி மேசை நாற்காலிகளை உடைத்தார்கள். மற்றொரு இடத்தில் ஒரு கூட்டத்தினர் தங்களின் கட்சி உறுப்பினர் அட்டைகளை சாலையில் குவித்துக் கொளுத்தினார்கள்.
தன்கட்சித் தலைமை அறிவித்த வேட்பாளர்களை எதிர்த்து கிட்டத்தட்ட எல்லாக் கட்சியிலும் போட்டி வேட்பாளர்கள் களமிறங்கியுள்ளார்கள். எதிர்க்கட்சியினரால் வீழ்த்தப்படுவதை விட சொந்தக் கட்சிக்காரர்களால் பலர் வீழ்த்தப்பட உள்ளார்கள்.
2011 ஏப்ரல் 13இல் நடைபெற உள்ள தமிழக சட்டப்பேரவைத் தேர்தலை ஒட்டி நடைபெறும் இத்தனை அலங்கோலங்கள், அருவருப்புக் காட்சிகள் இதற்கு முன் இந்த அளவிற்கு அரங்கேறியதில்லை. இதற்குக் காரணமென்ன?
வினை விதைத்தவர்கள் வினை அறுக்கிறார்கள். தங்களின் பதவி வெறிக்காக, பண வெறிக்காக கொள்கையற்ற அரசியலை மக்களிடம் விதைதார்கள் தலைவர்கள். அவர்கள் தொலைநோக்கு இலட்சியமோ, சமகாலக் கொள்கைகளோ வைத்துக் கொள்ளவில்லை. வஞ்சகமாக மக்களை ஏமாற்றும் தந்திரம், எதிர்க்கட்சிகள் மீது பகை உணர்சியைத் தூண்டிவிடும் உத்தி, சமூக இலட்சியம் உள்ளவர்கள் போல் காட்டிக் கொள்ளும் போலித்தனம், பொய் பேசுதல், இலஞ்ச ஊழலில் ஈடுபடுதல், தனது சொந்தக் கம்பெனியாக, தனது குடும்பக் கம்பெனியாகக் கட்சியை மாற்றிக் கொள்ளுதல் முதலிய சமூக விரோதச் செயல்களில் அவர்கள் ஈடுபட்டார்கள்.
தலைவர்களைப் போலவே தந்திரமிக்க அடுத்த நிலைப் பிரமுகர்கள் உருவானார்கள்.
கூட்டணி என்பது பதவி வேட்டைக்கும் பணவேட்டைக்கும் ஒரு கட்சி இன்னொரு கட்சியைப் பயன்படுத்திக் கொள்ளும் ஏற்பாடு என்று ஆனது. அதனால் தான் அந்த உறவுக்குப் பெயர் கொள்கை உடன்பாடு அல்ல, தொகுதி உடன்பாடு! சக்திக்கேற்ற பதவி, பதவிக்கேற்ற உதவி என்று புதிய நிகரமை(சோசலிச)க் கோட்பாட்டை இவர்கள் உருவாக்கியுள்ளனர்.
மாசடைந்த தலைவர்கள் மக்களின் மனநிலையையும் மாசுபடுத்துகிறார்கள். வாக்காளர்களுக்குக் கையூட்டுக் கொடுப்பது, கையூட்டின் சட்ட வடிவமாக இலவசங்களை அறிவிப்பது, இதனால் ஏற்படும் நிதிச் சுமையை ஈடுகட்ட அரசே சாராயக் கடைகளை நடத்தி சமுதாயத்தைச் சீரழிப்பது என்று அவர்கள் எல்லா வகையிலும் மனித அறம், மனித மாண்பு, மனித ஒழுக்கம் அனைத்தையும் கெடுக்கிறார்கள். மனித பலவீனங்களைப் பயன்படுத்தி, போட்டி போட்டுக் கொண்டு இலவசங்களை அறிவிக்கும் தி.மு.க.வும், அ.இ.அ.தி.மு.க.வும் தமிழ் மக்களின் சுயமரியாதை உணர்ச்சியை சிதைத்து இலவசங்களுக்காக ஏங்குவோராக மாற்றுகின்றனர்.
வாக்கு வாங்குவதற்காக, சாதி உணர்ச்சியைத் தூண்டி விட்டார்கள் தேர்தல் கட்சித் தலைவர்கள். இப்பொழுது சாதித் தலைவர்கள் சாதி அமைப்புகளை உருவாக்கி, தேர்தல் கட்சிகளுக்குச் சவாலாக வந்து விட்டார்கள். இதனால் சாதி உணர்ச்சி முன்னெப்போதும் இல்லாத அளவுக்குத் தீவிரப்பட்டுள்ளது.
இனி சாதிகள் பகை முகாம்களாகவோ அல்லது போட்டி முகாம்களாகவோ செயல்பட்டு தமிழினத்தின் ஒற்றுமையையும், சமூக அமைதியையும் சீர்குலைக்கப் போகின்றன.
இவ்வளவுக்குப் பின் இந்தத் தேர்தலில் வாக்களிப்பதால் விலை கொடுத்து இத்தேர்தலில் பங்கெடுப்பதால் வாக்களிப்பதால் என்ன பயன் தமிழ் இனத்திற்குக் கிடைக்கப் போகிறது?.தமிழக சட்டப்பேரவைக்கு என்ன அதிகாரம் இருக்கிறது?
மின்சாரப்பற்றாக்குறையால் தமிழகம் பெரும் பாதிப்புக்குள்ளாகி உள்ளது. இதனைப் போக்க நெய்வேலியில் உற்பத்தியாகும் மின்சாரம் அனைத்தையும் தமிழகத் தேவைக்கு எடுத்துக் கொள்வோம் என்று இந்த சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற முடியுமா? முடியாது. குறைந்தது காவிரி நீர் தர மறுக்கும் கர்நாடகத்திற்குச் செல்லும் நெய்வேலி மின்சாரத்தையாவது தமிழ்நாட்டிற்குத் திருப்பிவிட, தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் இருக்கிறதா? இல்லை.
நரிமணம், கோவில்களப்பாள், கமலாபுரம், அடியக்கமங்கலம், புவனகிரி ஆகிய இடங்களில் கிடைக்கும் பெட்ரோலியத்தை உரிமையைத் தமிழக அரசு எடுத்துக் கொள்ள இந்த சட்டமன்றத்தில் சட்டம் இயற்ற முடியுமா? முடியாது.
தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசு நிறுவனங்களான தொடர்வண்டித்துறை (ரயில்வே), பி.எச்.இ.எல்., நெய்வேலி நிறுவனம், நரிமணம் பெட்ரோலிய நிறுவனம், வருமானவரித்துறை, உற்பத்திவரித்துறை, ஆயுதத் தொழிற்சாலைகள் முதலியவற்றில் 85 விழுக்காடு வேலைகளை மண்ணின் மக்களாகிய தமிழர்களுக்கு வழங்க வேண்டும் என்று இந்தச் சட்டப்பேரவை சட்டமியற்ற முடியுமா?
தமிழகத்தின் தொழில், வணிகம், வேலைவாய்ப்பு அனைத்தையும் கைப்பற்றி ஆதிக்கம் செலுத்தும் மார்வாடி-குசராத்தி சேட்டுகள், மலையாளிகள், இந்திக்காரர்கள் உள்ளிட்ட வெளிமாநிலத்தவர்களின் ஆக்கிரமிப்பைத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ சட்டமியற்றும் அதிகாரம் தமிழக சட்டப் பேரவைக்கு இருக்கிறதா? இல்லை.
மண்ணின் மக்களாகிய தமிழர்களின் எண்ணிக்கைக்குச் சமமாக வெளிமாநிலத்தவர் மக்கள் தொகை உயரும் வகையில் தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் புகுந்து வருகிறார்கள். இந்த வெளியார் வெள்ளத்தைத் தடுக்கவோ அல்லது கட்டுப்படுத்தவோ தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டா? இல்லை.
காவிரி, முல்லைப்பெரியாறு, பாலாறு, கச்சத்தீவு ஆகியவற்றின் உரிமைகளை மீட்கும் வகையில் சட்டம் இயற்றிட தமிழக சட்டப்பேரவைக்கு அதிகாரம் உண்டா? இல்லை.
வேறு என்ன அதிகாரம் இருக்கிறது?
உரிமைக்குப் போராடும் சொந்த மக்களைத் தாக்க, சிறையில் தள்ள, காவல்துறையைப் பயன்படுத்தும் அதிகாரம் தமிழக அரசுக்க இருக்கிறது.ஒரு மாநகராட்சியை விட சற்றுக் கூடுதல் அதிகாரம் தமிழக சட்டப்பேரவைக்கு இருக்கிறது. அந்தக் குறைந்த அதிகாரத்திற்குள் கோடிகோடியாய் கொள்ளையடிக்கும் வாய்ப்பு நிறைய உள்ளது. இந்தக் கொள்ளைக்குப் பழகிப்போனவர்கள், அவர்கள் எந்தக் கட்சியைச் சார்ந்தவர்களாக இருந்தாலும் தில்லி ஏகாதிபத்தியத்திற்கு விசுவாச ஊழியர்களாக மாறிவிடுவார்கள்.
தமிழகச் சட்டமன்றம் மசோதாக்களை மட்டுமே நிறைவேற்ற முடியும். மசோதா சட்டமாக வேண்டுமெனில், தில்லியின் கையாளாக உள்ள ஆளுநர் அதில் கையொப்பமிடவேண்டும். தில்லி ஏகாதிபத்தியத்திற்கு உடன்பாடில்லாத எந்த மசோதாவிலும் ஆளுநர் கையொப்பமிடமாட்டார். 234 சோதாக்கள் கைதூக்கி மசோதாக்கள் நிறைவேற்றும் மன்றம்தான் தமிழகச் சட்டமன்றம். அது சட்டமன்றம் இல்லை. மசோதா மன்றம். தமிழ்நாடு இந்திய ஏகாதிபத்தியத்தின் காலனியாக உள்ளது.
எனவே தான், தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி தேர்தலைப் புறக்கணிக்கிறது.
இறையாண்மையுள்ள தமிழ்த் தேசக் குடியரசை நிறுவுவதற்கான மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும். அதற்கு மக்களைத் திரட்ட வேண்டும் என்கிறது த.தே.பொ.க.
தமிழ்ப் பெருமக்களே,
இந்தக் கட்சிக்கு மாற்றாக அந்தக் கட்சி என்று தேர்வு செய்யாதீர்கள். இப்பொழுதுள்ள சிக்கல்களுக்குத் தீர்வென்று ஏதாவதொரு கட்சியைத் தேந்தெடுக்க முனையாதீர்கள். எல்லா தேர்தல் கட்சிகளும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே! கானல் நீர் தேடித் தேடிக் களைத்துப் போகாதீர்கள்! "யாருக்கும் வெட்கமில்லை, எவருக்கும் நம் வாக்கில்லை" என்று அறிவியுங்கள். தமிழ்த் தேசக் குடியரசு அமைப்பதை இலக்காகக் கொண்டுள்ள தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் முயற்சியில் நீங்களும் பங்கு பெறுங்கள்! வாக்களிக்க மறுங்கள்!
இவ்வாறு அத்துண்டறிக்கையில் கூறப்பட்டுள்ளது.