உடனடிச்செய்திகள்

Monday, March 22, 2010

ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனைத் தமிழ்நாட்டை விட்டு வெளியேற்ற வேண்டும் - பெ.மணியரசன் அறிக்கை

தமிழினப் பகைவன் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் தமிழ்நாட்டை விட்டு வெளியேற வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையின் முழு வடிவம் இது.

சென்னையில் 2010 மார்ச்சு 21ஆம் நாள் நடந்த திரு. குமரி அனந்தன் 77-வது பிறந்த நாள் விழாவில் பேசிய போது, தமிழகக் காங்கிரஸ் கோ;டிகளில் ஒன்றின் தலைவரான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், “மொழி என்பது வெறும் ஓசைதான், நாம் பேசினால் தமிழ் மொழியும், இங்கிலாந்து நாட்டவர் பேசினால் ஆங்கில மொழியும் ஓசையாக வரும். இந்த ஓசையை வைத்துக் கொண்டு என்னுடைய மொழிதான் பெரியது என்று கூறினால் அதை ஏற்றுக் கொள்ள மாட்டேன். நான் தமிழுக்கு எதிரி இல்லை என்று கூறியுள்ளார்.

மொழியியல் குறித்த இந்த வரையறுப்பு பெரும் பெரும் மொழி ஆராய்ச்சியாளர்கள் அறியாத புதிய செய்தியாக உள்ளது. உலகத்தின் கவனத்தை ஈர்த்துள்ள அமெரிக்க மொழியியல் மேதை நோம்சாம்ஸ்கி கூட அறியாத கண்டுபிடிப்பு இது!

எனவே இளங்கோவன் தமது இந்தக் கண்டுபிடிப்பை திருமதி சோனியா காந்தியிடமும் பிரதமர் மன்மோகன் சிங்கிடமும் கூறவேண்டும். மொழி என்பது வெறும் ஓசை மட்டும்தான், இந்தியை மட்டும் இந்தியாவின் ஆட்சி மொழியாகத் திணிக்காதீர்கள், அரசமைப்புச் சட்ட விதி 343 ஐத் திருத்துங்கள். இந்தி என்பது வெறும் ஓசைதான், அது தேசிய மொழி அன்று என்று அவர்களிடம் வலியுறுத்த வேண்டும்.

இளங்கோவன் தமது மொழியியல் கண்டுபிடிப்பை வெளிப்படுத்த தமிழ் மொழியை எடுத்துக்காட்டாகப் பயன்படுத்தியது தவறு. அவருடைய தாய்மொழியான கன்னடத்தைத்தான் எடுத்துக்காட்டாகக் கூறி, கன்னடர்கள் ஓசையிட்டால் அது கன்னடம் என்று கூறியிருக்க வேண்டும்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் தொடர்ந்து தமிழையும், தமிழர்களையும் இழிவுபடுத்தி வருகிறார். சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்காடும் மொழியாக ஆக்கவேண்டும் என்று தி.மு.க. ஆட்சியின் சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியபோது அதை எதிர்த்தார் இளங்கோவன். தமிழ்நாட்டில் தமிழர்கள் மட்டும்தான் வாழ்கிறார்களா, தமிழை வழக்கு மொழியாக ஆக்கும்படி தீர்மானம் போட்டது தவறு என்று கூறினார்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவனின் பு+ர்வீகத் தாயகமான கர்நாடக உயர்நீதிமன்றத்திலா தமிழை வழக்கு மொழியாக்கும் படி நாம் கோருகிறோம். தமிழர்களின் தாயகமான தமிழ்நாட்டு உயர்நீதிமன்றத்தில் தானே தமிழை வழக்குமொழியாக்கும்படி கோருகிறோம்.

உலகத்தில் உயர்தனிச் செம்மொழியாக விளங்கும் தமிழைத் தற்குறித்தனமான கருத்துகள் கூறி இழிவுபடுத்திய இளங்கோவனை வன்மையாகக் கண்டிக்கிறேன்.

ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஒரு தமிழினப் பகைவர்.

தமிழுக்கு எதிராகத் தொடர்ந்து அவர் வெளியிட்டு வரும் நச்சுக் கருத்துகளைத் தடுக்கவேண்டுமெனில், தமிழ்நாட்டை விட்டு அவரை வெளியேற்றுவதைத் தவிர வேறு வழியில்லை.

இவ்வாறு தனது அறிக்கையில் அவர் கூறியுள்ளார்

Wednesday, March 3, 2010

அண்ணாமலைப் பல்கலைக்கழகக் கல்லூரியை உடனே திறக்க வேண்டும் - த.தே.பொ.க. வேண்டுகோள்!

அண்ணாமலைப் பல்கலைக்கழகம்
வடநாட்டு மாணவர்களுக்கு அடிபணியக்கூடாது!
உடனே கல்லூரியைத் திறக்க வேண்டும்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள்

சிதம்பரம், 03.03.2010.

“வடநாட்டு மாணவர்களின் அடாவடிக்காக கல்லூரியை மூடி, தமிழ்நாட்டு மாணவர்களின் படிப்பைப் பாழாக்கக்கூடாது” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக் கேட்டுக் கொண்டுள்ளது. காலவரம்பின்றி மூடப்பட்ட அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தை உடனடியாகத் திறக்க வேண்டும் என்றும், அக்கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சிதம்பரம் நகரச் செயலாளர் கு.சிவப்பிரகாசம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது:

அண்ணாமலைப் பல்கலைக்கழகம் மிகை எண்ணிக்கையில் வடநாட்டு மாணவர்களை சேர்த்து வருகிறது. இது பல்கலைக்கழகத்தின் இன சமநிலையை சீர்குலைத்து தொடர்ந்து பதட்டத்தை ஏற்படுத்தி வருகிறது.

வகுப்பறையில் வடநாட்டு மாணவர்கள் ஹிந்தியை வலியுறுத்துவதாலும், ஒருங்கிணைந்த முறையில் அடாவடியில் ஈடுபடுவதாலும் கல்லூரி ஆசிரியர்கள், தமிழ்நாட்டு மாணவர்கள் மற்றும் பொது மக்களும் எரிச்சலடைந்துள்ளனர். இவர்களின் அத்துமீறிய செயலால் மூன்று இளைஞர்கள் உயிரிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. இதை காரணமாகக் கொண்டு கல்லூரியை பல்கலை நிர்வாகம் காலவரையின்றி மூடியிருக்கிறது. இது தேவையற்றது.

வடநாட்டு மாணவர்களுக்கு அடிபணிந்து அறிவிக்கப்பட்டுள்ள விடுமுறையை பல்கலை நிர்வாகம் திரும்பப்பெற வேண்டும். வகுப்புகள் தொடர்ந்து நடத்த வேண்டும். ஒரு சில வடநாட்டு மாணவர்கள் அடாவடிக்காக தமிழ்நாட்டு மாணவர்கள் படிப்பு பாழாக்கப்படுவது முறையற்றது.

வரும் கல்வியாண்டில் 85 விழுக்காடு இடம் தமிழ்நாட்டு மாணவர்களுக்கே வழங்க வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கோருகிறது.

இவ்வாறு அவரது அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Tuesday, March 2, 2010

புலிகளை ஆதரித்துப் பேசிய வழக்கு: பெ.மணியரசன் விடுதலை!

தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக போடப்பட்டு, கடந்த 10 ஆண்டுகளாக நடந்து வந்த வழக்கிலிருந்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் விடுதலை செய்யப்பட்டார். இதற்கான உத்தரவை திருவொற்றியுர் நீதிமன்றம் நேற்று(02.03.2010) பிறப்பித்தது.

கடந்த 1999ஆம் ஆண்டு திருவொற்றியுரில் ”தென்மொழி அவையம்” சார்பில் நடந்த அரங்கக்கூட்டம் ஒன்று நடந்தது. திரு. இறைக்குருவனார் அக்கூட்டத்திற்குத் தலைமை தாங்கினார். தமிழர் தேசிய இயக்கத் தலைவர் பழ.நெடுமாறன், அப்போது அவ்வியக்கத்தின் பொதுச் செயலாளராகவிருந்த பேராசிரியர் சுப.வீரபாண்டியன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தமிழர் கழகத் தலைவர் புதுக்கோட்டை இரா.பாவாணன் உள்ளிட்டோர் அதில் கலந்து கொண்டு பேசினார்.

அக்கூட்டத்தில், இந்திய அரசால் தடை செய்யப்பட்ட தமிழீழ விடுதலைப்புலிகளை ஆதரித்துப் பேசியதாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மீது மட்டும் சட்டவிரோத செயல்பாடுகள் தடுப்புச் சட்டம் 1967 -இன் கீழ் வழக்கு ஒன்றை, திருவொற்றியுர் நகரக் காவல்துறை ஆய்வாளர் பதிவு செய்தார்.



அவ்வழக்கு திருவொற்றியுர் குற்றவியல் நீதிமன்றத்தில் கடந்த 10 ஆண்டுகளாக தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடத்தபட்டு வந்தது. திரு. பெ.மணியரசன் சார்பில் வாதாடிய மூத்த வழக்கறிஞர் செ.விசயகுமார், வழக்கறிஞர் துரை ஆகியோர் தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என்று உச்சநீதிமன்றம் அளித்துள்ள தீர்ப்பின் பிரிவுகளை தமது வாதங்களின் போது தெளிவுடன் நீதிமன்றத்திற்கு சுட்டிக் காட்டினார். அரசத் தரப்பில் எதிர் வாதாடப்பட்டது.

இந்நிலையில், இவ்வழக்கின் தீர்ப்பை மார்ச் 2 அன்று ஒத்தி வைப்பதாக, கடந்த மாதம் பிப்ரவரி 23ஆம் நாள் நீதிபதி அறிவித்திருந்தார். நேற்று இவ்வழக்கில் தீர்ப்புக் கூறப்பட்டு, திரு. பெ.மணியரசன் குற்றமற்றவர் என விடுதலை செய்யப்பட்டார்.

தடை செய்யப்பட்ட இயக்கங்களை ஆதரித்துப் பேசுவது குற்றமல்ல என்று இந்திய உச்சநீதிமன்றம் தீர்ப்பு அளித்திருந்தும், வேண்டுமென்றெ அலைக்கழிப்பதற்காக தமிழக அரசும், இந்திய அரசின் உளவுப் பிரிவும் இணைந்து இது போன்ற வழக்குகளை தமிழகமெங்கும் உள்ள பல்வேறு அமைப்பின் தலைவர்கள் மீதும், இன உணர்வாளர்கள் மீதும் தொடுப்பது வழக்கமானதாக இருந்துள்ளது.

இதன் காரணமாக, தமிழகத்தில் எவரும் அச்சமுறவில்லை. மேலும் மேலும் ஆதரித்துப் பேசுவதே நடந்து வந்துள்ளது. இருந்த போதும், இன உணர்வாளர்களை அச்சமுற வைக்க முடியாவிட்டாலும் கூட, அலைக்கழிக்கவாவது வேண்டும் என்றே ஆட்சியாளர்கள் விரும்புகின்றனர்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT