சுற்றுச்சூழல் காப்பாளரா மோடி? புத்தர் வேடம் மோடிக்குப் பொருந்தவில்லை! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐ.நா. மன்றம் ஆண்டுதோறும் வழங்கும் “நிலவுலக வாகையர்” விருது (Champions of the Earth Award) இவ்வாண்டு இந்தியத் தலைமை அமைச்சா நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டேரஸ் நேற்று (03.10.2018) புதுதில்லியில் இவ்விருதினை நரேந்திர மோடிக்கு அளித்தார். அதே விழாவில், பிரான்சு குடியரசுத் தலைவர் இமானுவேல் மக்ரான் அவர்களுக்கும் “நிலவுலக வாகையர்” விருதை ஐ.நா. மன்றப் பொதுச் செயலாளர் வழங்கினார்.
விருதினைப் பெற்றுக் கொண்ட நரேந்திர மோடி, அவ்விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு பற்றி பேசியவை அனைத்தும் மிடாக் குடிகாரர் ஒருவர் மதுவிலக்கு பற்றி பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது!
இயற்கையை அன்னை என்றார்; நிலம், காடு, ஆறு – அத்தனையும் தெய்வம்; அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றார். அவற்றை சேதாரமில்லாமல், அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றார். எந்தத் தலைப்பு கொடுத்தாலும் அந்தத் தலைப்பில் வெளுத்து வாங்கும் மைக் மதன காமராசன்தான் மோடி!
“இயற்கை தாங்கக்கூடிய அளவில்தான் மனித நுகர்வு இருக்க வேண்டும். இல்லையேல் இயற்கை நம்மைத் தண்டித்து விடும்” என்று காந்தியடிகள் கூறிய அறிவுரையை மேற்கோள் காட்டி மோடி பேசினார்.
ஓ.என்.ஜி.சி. ஓநாய்களைக் கொண்டும், “வேதாந்தா” போன்ற பெருங்குழும வேட்டையாடிகளைக் கொண்டும் காவிரிப்படுகை விளை நிலங்களை – கடற்பகுதிகளை, வேதி மண்டலமாக்கி, நிலத்தடி நீரை நஞ்சாக்கி, “வளர்ச்சி” வாதம் பேசும் மோடி, இயற்கை தாங்கக் கூடிய அளவில்தான் மனித நுகர்வு இருக்க வேண்டும் என்று யாருக்கு உபதேசம் செய்கிறார்? மோடிதான் திருந்த வேண்டும்!
மரங்களைத் தெய்வமாக வணங்கும் மரபு நம் மரபு என்று பேசினார். தேவைப்படாத சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைக்காக பல்லாயிரக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தி, இயற்கையான காட்டை அழிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் மோடியின் பேச்சு எவ்வளவு “புனிதச் சொற்களை”ப் போர்த்திக் கொண்டுள்ளது! அந்த மரங்களையும் காட்டையும் காப்பாற்ற முன்வரும் எளிய மக்கள் மீது போர் தொடுக்குமாறு எடப்பாடி அரசை ஏவிவிட்டுள்ள மோடி போடும் புனித வேடம் “புல்லரிக்க”ச் செய்கிறது.
ஆறுகளும் தெய்வங்களாம்! மோடி அள்ளி வீசுகிறார் சொற்களை! கங்கையைத் தூய்மைப்படுத்துகிறதாம் மோடி அரசு! ஆனால், காவிரித்தாய் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுக்க என்னென்ன சூழ்ச்சிகளைச் செய்கிறது மோடி அரசு! உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தும் கூட அதிகாரமற்ற - ஓய்வு நேரப் பணியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது இதே மோடி அரசு!
வேளாண் நிலங்களுக்கு மண் நல அட்டைகள் (Soil Health Cards) 13 கோடி அளவிற்குக் கொடுத்திருப்பதாக “சாதனை”ப் பட்டியலை நீட்டுகிறார் மோடி!
தமிழ்நாட்டு விளை நிலங்களில் ஐட்ரோகார்பன் – நிலக்கரி எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டு விளை நிலங்களின் நெஞ்சைப் பிளந்து, கெய்ல் குழாய்களைப் புதைக்க வேண்டும்; பன்னாட்டுப் பெருங்குழும நிறுவனங்களின் ஆலைகள் அமைக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறது மோடி அரசு! வேளாண்மையை அழித்தும், ஆற்று நீரையும் ஊற்று நீரையும் உறிஞ்சி வறண்ட மண்ணாக்கியும், வளமான மண்ணை வாழ்நாள் நோயாளியாக்கியும் உள்ள மோடி அரசு, நில நல அட்டைகள் யாருக்கு வழங்கப் போகிறது?
இறுதியாக மோடி எக்காளமிடுகிறார் : “சுற்றுச்சூழல் தத்துவம் என்பது உலகத்தின் கட்டளை முழக்கமாக மாற வேண்டும். சுற்றுச்சூழல் தத்துவம், சுற்றுச்சூழல் மன உணர்ச்சியில் கால்பதித்திருக்க வேண்டுமே அன்றி அரசாங்க ஆணைகளைச் சார்ந்திருக்கக் கூடாது!”.
அடேயப்பா எத்தனை வீராவேசம்! எல்லாம் வேடம்! ஸ்டெர்லைட் ஆலையால் – சுற்றுச்சூழல் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு – நஞ்சாகி மனிதர்களுக்கு நோய்களும் இறப்புகளும் வந்தபின், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துக்குடியில் மக்கள் ஆண்டுக்கணக்கில் அறப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது 22.05.2018 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 உயிர்களைக் காவு கொண்டது மோடி – எடப்பாடி கூட்டணி! கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் சொல்லக் கூட அசூசைப்பட்டவர் மோடி! அவர் திருந்தி விட்டாரா என்ன?
அம்பானிகளின் – அதானிகளின் சுற்றுச்சூழல் அழிப்புகளை மூடி மறைக்கவே போதி மரப் புத்தர் போல் பேசுகிறார் மோடி!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்