உடனடிச்செய்திகள்

Sunday, October 28, 2012

சென்னை சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்போம்! தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

சென்னை சட்டமன்ற முற்றுகைப் போராட்டத்தில் திரளாகப் பங்கேற்போம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

கூடங்குளம் அணுஉலைகளை எதிர்த்து, அப்பகுதி மக்கள் கடந்த 25 ஆண்டுகளாக, குறிப்பாக, கடந்த 400 நாட்களுக்கும் மேலாக அறவழியில் போராடி வருகின்றனர்.

விபத்து நேர்ந்தாலும், விபத்து ஏற்படாத சாதாரண மின் உற்பத்திக் காலங்களிலும் மக்களுக்கும், பிற உயிரினங்களுக்கும் கேடு விளைவிக்கும் பேரழிவுத் திட்டமே கூடங்குளம் அணுமின் திட்டம். உலகமே அணுஉலைத் திட்டங்களைக் கைவிட்டு வரும் போது, தமிழர்களின் உயிரைப் பற்றிக் கவலைப்படாமல் தமிழக அரசின் துணையோடு, இந்திய அரசு இத்திட்டத்தைத் திணித்து வருகின்றது.

அமைதிவழியில் போராடி வந்த மக்களின் ஞாயமான கேள்விகளுக்கு பதில் அளிக்காத இந்திய அரசு, தமிழக அரசின் துணையுடன் மக்கள் மீது கடும் ஒடுக்குமுறைகளை ஏவியுள்ளது. இவ்வடக்குமுறைகள், கூடங்குளம் பகுதியில் வாழும் எளிய மக்களை நிரந்தர அச்சுறுத்தலில் வைத்திருக்கிறது.

கடந்த 10.09.2012 அன்று அணு உலை முற்றுகைப் போராட்டம் நடத்தச் சென்ற அம்மக்கள் மீது தமிழக காவல்துறையும், இந்திய அரசின் துணை இராணுவப்படையும் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை தொலைக்காட்சிகள் வழியாக உலகமே பார்த்தது. அதைத் தொடர்ந்து, இன்று வரை காவல்துறை நடத்தி வரும் கொடுமைகள் கொஞ்ச நஞ்சமன்று. மணப்பாட்டில் காவல்துறை நடத்திய துப்பாக்கிச் சூட்டில் அந்தோனிஜான் என்ற மீனவர் சுட்டுக் கொல்லப்பட்டார். போராடும் மக்களை அச்சுறுத்தும் வகையில் தாழப்பறந்த இந்திய விமானப்படை விமானம், இடிந்தகரை திரு. சகாயம் என்பவரை அதிர்ச்சியில் ஆழ்த்திக் கொன்றது.

இதுவரை சற்றொப்ப 55,700 பேர் மீது பல்வேறு வழக்குகளைக் காவல்துறை பதிவு செய்துள்ளது. இதில் 6918 பேர் மீது தேசத் துரோக வழக்கு, அரசைக் கவிழ்க்க சதி செய்ததாக வழக்கு, அரசுக்கெதிராகப் போர் புரிவதாக வழக்கு என விதம் விதமான கொடிய வழக்குகளும் புனையப் பட்டுள்ளன. சிறுவர்கள், பெண்கள், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்ட பலரையும் கைது செய்து சிறையிலடைத்தது காவல்துறை.

இந்நிலையில், எந்த நியாயமும் இன்றி 144 தடை ஆணை அப்பகுதியில் நீட்டிக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறது. இதனால் குழந்தைகள் உள்ளூர் பள்ளிகளுக்குச் சென்று வருவது கூட இடர்ப்பாடாக இருக்கிறது.

கூடங்குளம் மக்கள் மீதான தமிழக அரசின் அடக்குமுறைகள் உடனடியாக நிறுத்தப்பட வேண்டும், 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், அப்பகுதியிலிருந்து காவல்துறையும், துணை இராணுவப்படையம் விலக்கிக் கொள்ளப்பட வேண்டும், மக்கள் மீது போடப்பட்டுள்ள பொய் வழக்குகளைத் திரும்பப் பெற வேண்டும், கூடங்குளம் அணுஉலையை இழுத்து மூட வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, நாளை மறுநாள்(29.10.2012) அன்று சென்னையிலுள்ள தமிழக சட்டமன்றத்தை முற்றுகையிடும் போராட்டத்தை, கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு மக்கள் கூட்டமைப்பு அறிவித்துள்ளது.

இப்போராட்டத்தில், அணுசக்திக்கு எதிரான அரசியல் கட்சிகள், இயக்கங்கள், மற்றும் சூழலியல் மற்றும் சனநாயக அமைப்புகள் திரளாக பங்கேற்க உள்ளார்கள்.

எனது தலைமையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் இதில் பங்கேற்கிறார்கள்.

கூடங்குளம் அணு உலைக்கெதிரான போராட்டம் ஒட்டு மொத்தத் தமிழினத்தின் போராட்டமாக தமிழ்த் தேசமெங்கும் விரிவடையட்டும்! அனைவரும் இப் போராட்டத்தில் பங்கேற்று, போராட்டத்தை வெற்றி பெறச் செய்ய வேண்டும்!

Monday, October 22, 2012

காவிரி உரிமை மீட்பு மறியல் போராட்டம்! குடந்தையில் வரி அலுவலகம் பூட்டப் பட்டது!


காவிரி உரிமை மீட்பு மறியல் போராட்டம்! குடந்தையில் வரி அலுவலகம் பூட்டப் பட்டது! அரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி இந்திய அரசு கர்நாடகத்திற்குக் கட்டளைத் தாக்கீது அனுப்பி நாள் தோறும் 2 டி.எம்.சி. தண்ணீர் வீதம் 40 நாட்களுக்கு தமிழகத்திற்குத் திறக்கச் செய்ய வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால், இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து விடச் செய்ய வேண்டும் என்ற கோரிக்கைகளை முன்வைத்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 22.10.2012 ஆகிய இன்று காவிரி பாசன மாவட்டங்களில் இந்திய அரசு அலுவலகங்கள் முன்பு மறியல் போராட்டங்கள் நடைபெற்றன. இடைவிடாது கொட்டித் தீர்த்த மழைக்கு இடையிலும் இப்போராட்டத்தில் பல்வேறு கட்சியினரும், உழவர் அமைப்பினரும் திரளாக பங்கேற்றனர். மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை காவல்துறையினர் கைது செய்தனர்.

தஞ்சை:
காவிரி உரிமை மீட்புக் குழு ஒருகிணைப்பாளர் – தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் தஞ்சையில் பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்னாள் மறியல் போராட்டம் நடைபெற்றது, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாபுரம் சி.முருகேசன், நாம் தமிழர் கட்சியின் மாநில ஒருகிணைப்பாளர் வழங்குரைஞர் நல்லதுரை, ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் திரு பாஸ்கரன், துணைத் தலைவர் திருமதி பத்மா, விடுதலை தமிழ் புலிகள் மாநில அமைப்புச் செயலாளர் திரு அருள் மாசிலாமணி, த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ.பால்ராசு, தலைமை செயற்குழு உறுப்பினர் பழ.இராசேந்திரன், தஞ்சை நகரச் செயலாளர் இரா.சு. முனியாண்டி, பூதலூர் ஒன்றியச் செயலாளர் க.காமராசு உள்ளிட்ட 52 பேர் இப்போராட்டத்தில் பங்கேற்று கைதாயினர். போரட்ட அழுத்தம் காரணமாக பி.எஸ்.என்.எல். அலுவலக வாயில் கதவுகளை காவல்துறையினரே பூட்டி விட்டனர். போராட்டத தோழர்களைக் காவல்துறையினர் தனியார் மண்டபத்தில் வைத்துள்ளனர்.

குடந்தையில் வரிஅலுவலகம் பூட்டப் பட்டது:
குடந்தையில் 22.10.2012 காலை 11 மணிக்கு வருமானவரி அலுவலகத்தை மறியல் செய்து போராட்டம் நடைபெற்றது. இப்போராட்டத்திற்கு ம.தி.மு.க. மாநிலத் தணிக்கைக் குழு உறுப்பினர் திரு.முருகன் தலைமை தாங்கினார். விடுதலைத் தமிழ்ப் புலிகள் தலைவர் குடந்தை அரசன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் விடுதலைச் சுடர், தமிழர் வாழ்வுரிமைக் கட்சி பணி. மேரி ராசு உள்ளிட்ட 60க்கும் மேற் பட்டோர் பங்கேற்றனர், காவல்துறை ஏற்படுத்திய தடைகளைத் தாண்டி முன்னேறிய தோழர்கள் குடந்தை வருமானவரி அலுவலகத்தை இழுத்துப் பூட்டினர். அப்போது காவல்துறையினருக்கும் போராட்டக்காரர்களுக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அனைவரும் கைது செய்யப்பட்டனர்.

திருவாரூர்:
தஞ்சை – திருவாரூர் – நாகை மாட்ட விவசாயிகள் சங்க கூட்டமைப்புத் தலைவர் திரு மு.சேரன் தலைமையில் 50க்கும் மேற்பட்டோர் திருவாரூர் தலைமை அஞ்சல் அலுவலகம் முன்னால் மறியல் போராட்டம் நடத்தி கைதாயினர். இதில் பாரதிய கிசான் சங்க பொறுப்பாளர் திரு இராமையா, நாம் தமிழர் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் தென்றல் சந்திரசேகரன் , விவசாயிகள் கூட்டமைப்பின் ஒன்றியத் தலைவர் திரு சுப்பையன், செயலாளர் திரு அகஸ்டின், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்க தலைவர் திரு பழனிவேல் உள்ளிட்ட விவசாயிகள் அடங்குவர்.

மன்னார்குடி:
தஞ்சை மாவட்டம் மன்னார்குடியில் தலைமை அஞ்சலகம் முன்பு கூடிய காவிரி உரிமை மீட்புக் குழுவினர் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இப்போராட்டத்திற்கு பாரதிய கிசான் சங்கத் துணைத் தலைவர் திரு எம்.சி.பழனிவேல் தலைமை தாங்கினார் . தோழர் அரங்க.குணசேகரன் (தமிழக மக்கள் புரட்சிக் கழகத் தலைவர்), திரு செந்தில் (ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர்), தோழர் ரெ.செ.பாலன் (த.தே.பொ.க) தோழர் காளிதாசு (திராவிடர் விடுதலை கழகம்), திரு வரதராசன் (த.நா.வி.ச.), திரு சத்திய நாராயணன் (விவசாயிகள் கூட்டமைப்பு), உள்ளிட 25 பேர் மறியல் போராட்டத்தில் பங்கேற்றனர். காவல் துறையினர் இவர்களைக் கைது செய்து தனியார் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி:
திருத்துறைப்பூண்டி தலைமை அஞ்சலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் ஒய்சூர் கருணை தலைமை தாங்கினார், ம.தி.மு.க. நகரச் செயலாளர் திரு கோ.வி.சேகர், த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் இரா.தனபாலன், நாம் தமிழர் கட்சி மாவட்ட்த் துணைச் செயலாளர் திரு முத்துகுமார், பாரம்பரிய நெல்லைக் காப்போம் இயக்கத் தலைவர் திரு செயராமன், இயற்கை வேளாண் உழவர் இயக்கம் தோழர் வே.இராமதாசு, த.தே.பொ.க ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழர் கா.அரசு, வழக்குரைஞர் இ.தனஞ்செயன், நகரச் செயலாளர் தோழர் கு.இரமேசு உள்ளிட்ட திரளானோர் பங்கேற்றனர்.

நாகை:
நாகப்பட்டினம் தலைமை அஞ்சலகம் முன்பு காவிரி உரிமை மீட்பு ஆர்ப்பாட்டத்தில் திரளான உழவர்கள் பங்கேற்றனர். மூன்று மாவட்ட விவசாயிகள் கூட்டமைப்பு பொறுப்பாளர் கீழ்வேளூர் தனபால் தலைமை தாங்கினார்.

(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள் : விஜய்)

Friday, October 19, 2012

காவிரி தடுக்கும் கன்னடனுக்கு நெய்வேலி மின்சாரம் தடுப்போம்! – த.தே.பொ.க. போராட்டங்கள்!தமிழ்நாட்டிற்கு உரிமையான காவிரி நீரை அடாவடித்தனமாக மறுத்துவரும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை மறுத்து, அம்மின்சாரத்தை மின்வெட்டால் தத்தளிக்கும் தமிழகத்திற்கு வழங்க வேண்டும் எனக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது.

சூளகிரி

இதன் ஒரு பகுதியாக, கிருட்டிணகிரி மாவட்டம் சூளகிரியில், கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்கின்ற பவர் கிரிட் கார்ப்பரேசன் அலுவலகத்தை முற்றுகையிடும் போராட்டம் நேற்று(18.10.2012) காலை 10 மணியளவில் நடைபெற்றது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஓசூர் நகரச் கிளைச் செயலாளர் தோழர் இரமேசு, கிளைச் செயலாளர் தோழர் சுப்பிரமணி, தமிழக இளைஞர் முன்னணி மாவட்ட அமைப்பாளர் தோழர் ஈசுவரன், கிளைச் செயலாளர் குணசேகரன், தருமபுரி நகர த.இ.மு. அமைப்பாளர் தோழர் விசயன், தமிழக உழவர் முன்னணி தோழர் தூர்வாசன் உள்ளிட்ட த.தே.பொ.க. தோழர்களும், த.இ.மு. தோழர்களும், தமிழர் தேசிய இயக்கத்தின் தோழர் முருகேசன் உள்ளிட்ட தமிழின உணர்வாளர்களும் திரளாகக் கலந்து கொண்டனர்.

கார்ப்பரேசன் அலுவலகத்தின் வாயிலுக்கு முன் முழக்கமிட்ட தோழர்கள், வாயிலை உடைத்துக் கொண்டு உள்ளே செல்வதைத் தடுத்து, தோழர்கள் 56 பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

பெண்ணாடம்

விருதாச்சலம் வட்டம், சத்தியவாடி, துனை மின்நிலையம் முன்பு 17.10.2012 அன்று இரவு 7 மணிக்கு லாந்தர் விளக்கு, தீ பந்தம் ஆகியவற்றை ஏந்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் இளைஞர் அமைப்பான தமிழக இளைஞர் முன்னணி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

ஆர்ப்பாட்டத்திற்கு தமிழக இளைஞர் முன்னணி துணைச் செயலாளர் தோழர் மணிமாறன் தலைமையேற்றார். த.இ.மு. செயலாளர் தோழர் பிராகாசு முன்னிலை வகித்தார். தோழர் சி.பி. வரவேற்புரையாற்றினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக் குழு உறுப்பினர் தோழர் முருகன், தமிழக இளைஞர் முன்னணி துணைத் தலைவர் இளையநிலாதோழர் தோழர் கணகசபை, பெரியார் செல்வன், குகன் உள்ளிட்ட தோழர்களும், அப்பகுதி மக்களும் திரளாக கலந்துக் கொண்டனர். நிறைவாக தமிழக இளைஞர் முன்னணி பொருளாளர் தோழர் ஞானபிரகாசம் நன்றி நவின்றார்.

(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Tuesday, October 16, 2012

“ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரமாட்டோம் என்னும் கர்நாடகத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில், ஒரு யூனிட் நெய்வேலி மின்சாரம்கூடத் தரக்கூடாது என்கிறோம்!” - பெ.மணியரசன் விளக்கம்!


“ஒரு சொட்டுத் தண்ணீர்கூடத் தரமாட்டோம் என்னும்
கர்நாடகத்திற்குப் பதிலடி கொடுக்கும் வகையில்,
ஒரு யூனிட் நெய்வேலி மின்சாரம்கூடத் தரக்கூடாது என்கிறோம்!”
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் விளக்கம்!

காவிரி உரிமை மறுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் செல்வதைத் தடுத்து அதைத் தமிழ்நாட்டிற்குத் திருப்பி விடுமாறு 1990களின் தொடக்கத்திலிருந்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி போராடி வருகிறது.

முதல் போராட்டம் 1991 சூலை மாதம் 17ஆம் நாள் நெய்வேலி அனல் மின்நிறுவனத் தலைமை நிர்வாகியை முற்றுகையிட்டு நடத்தப்பட்டது. தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் போராடிய தோழர்கள் தளைப்படுத்தப்பட்டுக் கடலூர் நடுவண் சிறையில் அடைக்கப்பட்டனர். 25 நாள்கள் கழித்துதான் பிணை கிடைத்தது.

அடுத்த, 2003 திசம்பர் 13-ஆம் நாள் தமிழ்த் தேசிய முன்னணி சார்பில் மேற்படிக் கோரிக்கைக்காக நடந்த முற்றுகைப் போராட்டத்தில் த.தே.பொ.க. தோழர்கள் திரளாகக் கலந்து கொண்டனர்.

அண்மையில், கடந்த ஆகத்து 10 2012 அன்று மேற்படிக் கோரிக்கைக்காக த.தே.பொ.க. சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட்டது. 223 தோழர்கள் தளைப்படுத்தப்பட்டு மாலை விடுவிக்கப்பட்டனர்.

தமிழகத் திரைப்படத் துறையினர் 2002 அக்டோபரில், காவிரியைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரம் அனுப்பக்கூடாது என்ற கோரிக்கையை வைத்து, இயக்குநர் பாரதிராஜா தலைமையில் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.

அண்மையில், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் திரு. வைகோ தலைமையில் ம.தி.மு.க.வினர் அதே கோரிக்கைக்காக நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடத்தி, ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தளைப்படுத்தப்பட்டனர்.

இவற்றுக்கிடையே விவசாயிகள் சங்கமொன்றும் நெய்வேலியில் இதே கோரிக்கையை வைத்து ஆர்ப்பாட்டம் நடத்தியது. இக்கோரிக்கை மேலும் மேலும் பலரால் பல அமைப்புகளால் முன்வைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், இந்து ஆங்கில நாளேடு நெய்வேலியிலிருந்து கர்நாடகம் செல்லும் மின்சாரம் மிகவும் குறைவுதான் என்று கூறியுள்ளது. இதை நிறுத்துவதால், கர்நாடகத்திற்குப் பெரிய பாதிப்பு வந்து விடாது என்று கூறுகிறது.

அவ்வேடு வெளியிட்டுள்ள விவரப்படி, நெய்வேலி அனல் மின்நிலையத்தில் மொத்த மின் உற்பத்தி 2,490 மெகா வாட் மின்சாரம். இதில், தமிழகத்திற்கு 1,189.2 மெகாவாட், கர்நாடகத்திற்கு 304.4 மெகாவாட், ஆந்திரப் பிரதேசத்திற்கு 264.00 மெகாவாட், கேரளத்திற்கு 211.8 மெகாவாட், புதுச்சேரிக்கு 92.6 மெகாவாட், நெய்வேலி வளாகத்திற்கு 6.18 மெகாவாட், ஒதுக்கீடு செய்யப்பட்டாதது 11.37 மெகாவாட் மின்சாரம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாம் கர்நாடகத்துக்குச் செல்லும் மின்சாரத்தை நிறுத்தக் கோருவது, கர்நாடகத்தின் தமிழின விரோதப் போராட்டங்களுக்கான பதிலடியே தவிர இதன் மூலம் மட்டுமே கர்நாடகத்தைப் பணிய வைத்துவிட முடியும் என்ற நோக்கில் அல்ல.

ஒரு சொட்டுத் தண்ணீர் கூடத் தமிழ்நாட்டிற்குத் தரமாட்டோம் என்று கூறும் கர்நாடகத்திற்கு, ஒரு யூ னிட் மின்சாரம்கூடத் தரக்கூடாது என்ற உத்தியில்தான் இப்போராட்டம் நடக்கிறது.
கர்நாடகத்திற்குகெதிரான பொருளாதாரத் தடை விதிக்க வேண்டும் என்கிறோம். அதன்படி கர்நாடகத்திலிருந்து அரிசி, மஞ்சள், புகையிலை உள்ளிட்ட விளைபொருட்கள் மற்றுமுள்ளப் பொருட்கள் தமிழ்நாட்டிற்கு வரக்கூடாது, தமிழ்நாட்டிலிருந்து எந்தப் பொருளும் கர்நாடகத்திற்குப் போகக்கூடாது என்பதாகும். அந்தப் பொருளாதாரத் தடை விதிக்கும் போராட்டத்தின் ஒரு கூறுதான் நெய்வேலி மின்சாரத்தைக் கர்நாடகத்திற்கு அனுப்பக் கூடாது என்பதும்.

மேலும் கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை நெய்வேலியில் உள்ள அதிகாரிகளை நிர்பந்தித்து நிறுத்திவிட முடியும் என்ற நம்பிக்கையில் நாம் போராடவில்லை. அம்முடிவை இந்திய அரசு எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியே இப்போராட்டத்தை நெய்வேலியில் நடத்துகிறோம்.

பெ,மணியரசன்
தலைவர்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 

நடுவண் அரசு அலுவலகங்கள் முன் மறியல் போராட்டம்!


நைல் நதி சூடானுக்கும், எகிப்திற்கும் இடையே ஓடுகிறது. சிந்து நதி இந்தியாவுக்கும், பாகிஸ்தானுக்கும் இடையே ஓடுகிறது. காவிரி ஆறு கர்நாடகத்திலிருந்து, தமிழகத்திற்கு வர முடியாதா?
நர்மதை, கிருஷ்ணா ஆறுகளுக்கு அமைக்கப்பட்ட தீர்ப்பாயங்களின் முடிவுகள், சண்டை இல்லாமல் செயல்படுகின்றன. காவிரித் தீர்ப்பாயத்தின் முடிவு மட்டும், செயல்படுத்தப் படாதது ஏன்? இந்திய அரசின் சட்டங்கள், இங்கு மட்டும் முடமாகிப் போனது ஏன்? நாம் தமிழ் மக்கள் என்பதாலா? 5 இலட்சம் ஏக்கர் குறுவை சாகுபடியை இழந்தோம். 16 இலட்சம் சம்பா சாகுபடியையும் இழக்க வேண்டுமா?
90 டி.எம்.சி. தண்ணீர் கர்நாடக அணைகளில் இருக்கும் பொழுது வெறும் 9000 கன அடி தண்ணீரைத் திறக்கச் சொன்னார் பிரதமர். அதையும் ஏற்கவில்லை கர்நாடகம், அடுத்து, காவிரிக் கண்காணிப்புக் குழு அதையும் குறைத்து, 6,800 கன அடி தண்ணீர் திறக்கச் சொன்னது. இதையும் ஏற்க மறுத்தது கர்நாடகம். கர்நாடகத்தை, என்ன செய்து விட்டது இந்திய அரசு? இனி வாதாடிப் பயன் இல்லை. போராடித்தான் காவிரி உரிமையை மீட்க வேண்டும்.
ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. வீதம் 40 நாட்களுக்குக் கர்நாடகம் தண்ணீர் திறந்து விட்டால்தான், சம்பா சாகுபடியைப் பாதுகாக்க முடியும். நாம் பிச்சை கேட்கவில்லை. சட்டப்படி நமக்குள்ள உரிமைத் தண்ணீரைக் கேட்கிறோம்.
அரசமைப்புச் சட்டவிதி 355-இன்படி கட்டளை தாக்கீது கர்நாடகத்திற்கு அனுப்பி 2 டி.எம்.சி. தண்ணீர் திறக்கச் செய்ய வேண்டும். அதையும் கர்நாடகம் மீறினால், இந்திய அரசு இராணுவத்தை அனுப்பி அணைகளைத் திறந்து விடச் செய்ய வேண்டும்.
இக்கோரிக்கையை வலியுறுத்தி அக்டோபர் 22 அன்று தஞ்சை, திருவாரூர், நாகை, கடலூர் மாவட்டங்களில் நடுவண் அரசு அலுவலகங்கள் முன் காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில் நடத்துவதென 10.10.2012 அன்று குடந்தையில் நடைபெற்ற ஒருங்கிணைப்புக் கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டது.
காவிரி நம் தாய். அதை நாம் இழக்க முடியாது! கெஞ்சிக் கேட்டால் கிடைக்காது, கிளர்ச்சி செய்யாமல் வெல்லாது! மறியல் போராட்டத்திற்கு வாருங்கள் தமிழ் மக்களே!
பெ.மணியரசன்
(ஒருங்கிணைப்பாளர், காவிரி உரிமை மீட்புக் குழு)

Thursday, October 4, 2012

காவிரி உரிமை தொடர்வண்டி மறியல், ஐந்து மாவட்டங்களில் தொடர்வண்டிகள் நிலைக் குலைந்தது


காவிரி உரிமை தொடர்வண்டி மறியல், ஐந்து மாவட்டங்களில் தொடர்வண்டிகள் நிலைக் குலைந்தது

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் இறுதித் தீர்ப்பையும் ஏற்கமறுத்து அடாவடித் தனம் செய்யும் கர்நாடகத்தை கண்டித்து, ஒரு நாளைக்கு 2 டி.எம்.சி. வீதம், 2012 அக்டோபர் 30ஆம் நாள் வரை கர்நாடகம் தண்ணீர் திறந்துவிட ஆணையிட்டு அதைச் செயல்படுத்துமாறு இந்திய அரசை வலியுறுத்தியும், காவிரிப் பாசன மாவட்டங்களில் 4.10.2012 இன்று முழுவதும், தொடர்வண்டி இயங்காமல் பெருந்திரள் மறியல் போராட்டம் நடைப்பெற்றது.

தஞ்சை:

தஞ்சை தொடர்வண்டி நிலையத்தில் காலை 9.45 மணியளவில் நாகூர்-திருச்சி தொடர்வண்டியை மறித்தனர். காவிரி உரிமை மீட்பு குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில் தமிழக விவசாய சங்கம் தலைவர் எம்.ஆர்.சிவசாமி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, ம.தி.மு.க துணைப் பொதுச் செயலாளர் துரை பாலகிருஷ்ணன், தமிழக விவசாய சங்க (சின்ன சாமி பிரிவு) ஜெகதீசன்,விடுதலைச்சிறுத்தைகள் கட்சிதஞ்சை நகரச் செயலாளர் கலைச்செழியன், தமிழர் தேசிய இயக்கம் பொன் வைத்திய நாதன், தமிழக விவசாய சங்கம் சேரன், இயற்கை வேளாண்மை இயக்கம் கே.கே.ஆர். லெனின், இந்திய கம்யூனிஸ்டு கட்சி (மா.லெ.) மாவட்டச் செயலாளர்  400க்கும் மேற்பட்டோர் திரளாகக் கலந்து கொண்டனர்.

சிதம்பரம்:
சிதம்பரம் தொடர் வண்டியத்தில் பிற்பகல், சோழன் விரைத் தொடர்வண்டியை மறியல் செய்து போராட்டம் நடத்தினர். தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் தலைமையில் நடைபெற்ற இம்மறியலில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி, ம.தி.மு.க., த.ஓ.வி, தமிழர் தேசிய இயக்கம், தமிழக உழவர் முன்னணி, கொள்ளிடம் கீழ அணை பாசன விவசயிகள் சங்கம், காட்டுமன்னார்குடி விவசாயிகள் கூட்டமைப்பு, தமிழக மாணவர் முன்னணி,ஆகிய அமைப்புகள் மற்றும் தமிழன உணர்வாளர்கள் உள்பட 200க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்திற்கு வந்து மறியல் செய்து கைதாயினர்.

ம.தி.மு.க. நகரச் செயலாளர் எல். சீனிவாசன், புவனகிரி ஒன்றியச்செயலாளர் எ.கி.எஸ்.இரவி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் கு. சிவப்பிரகாசம், தமிழக மானவர் முன்னணி யமுனாராணி, தமிழக உழவர் முன்னணி மாவட்ட தலைவர், அ.கோ. சிவராமன், ஒருங்கிணைப்பாளர் ம.கோ.தேவராசன், மாவட்டச் செயலாளர் சி. ஆறுமுகம் செயற்குழு உறுப்பினர் சரவணன் கென்னடி, மதிவாணன் , த.ஓ.வி. மாவட்ட தலைவர் தமிழரசன், தமிழர் தேசிய இயக்கம் மாவட்டச் செயலாளர் வை.ரா. பாலசுப்பிரமணியன், கொள்ளிடம் கீழ அணை பாசன சங்கத் தலைவர் கண்ணன், காட்டுமன்னார்குடி விவசாயிகள் கூட்டமைப்பு தலைவர் இரவீந்திரன் உள்ளிட்ட 200க்கும் மேற்பட்டோர் தண்டவாளத்திற்கு வந்து மறியல் செய்து கைதாயினர்.

இதற்கும் முன்னதாக சிதம்பரம் தொடர் வண்டி நிலையத்தில், தமிழக இளைஞர் முன்னணி சார்பாக காலை 7.40 பெங்களூர் செல்லும் தொடர்வண்டியை சிதம்பரத்தில் மறிக்கப்பட்டது. .

தமிழக இளைஞர் முன்னணி அமைப்பாளர் ஆ.குபேரன் தலைமையில் நடைபெற்ற மறியலில், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் சுப்பிரமணியசிவா, கலைவாணன், மணிமாறன், சுகன்ராஜ், விஜயராஜ், யாழவன் உள்ளிட்ட தோழர்களை கைது செய்து காவல்துறையினர் சிதம்பரம் காவிரி அரங்கில் வைத்துள்ளனர்.

பூதலூர்:

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக தஞ்சை மாவட்டம், பூதலூர் ஒன்றியத்தில் காலை 8.00 மணியளவில் மன்னார்குடி சென்ற தொடர்வண்டியை பூதலூரில் மறிக்கப் பட்டது 1000த்திற்கு மேற்பட்ட விவசாயிகளும், பொதுமக்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு தலைமையில் நடைபெற்ற மறியலில், நந்தகுமார் ம.தி.மு.க., நாம் தமிழர் கட்சி ஒன்றிய ஒருகிணைப்பாளர் அற்புதராசு, விடுதலை தமிழ் புலிகள் மாநில அமைப்புச் செயலாளர் அருள்.மாசிலாமணி, மக்கள் உரிமை இயக்கம் பழ.இராஜ்குமார் உள்ளிட்ட தோழர்களை கைது செய்த காவல்துறையினர் திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.


அதனைத் தொடர்ந்து, பூதலூர் தொடர்வண்டிநிலையத்தில் காலை 9.30 மணியளவில் எர்ணாகுளம் மற்றும் மானமதுரை விரைவுதொடர்வண்டியை தமிழக இளைஞர் முன்னணி,மகளிர் ஆயம்  தோழர்கள் மறிக்கப்பட்டு 30க்கும் மேற்பட்டோர் கைது.

தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றிய தலைவர் தலைமையில் நடைபெற்ற இம்மறியலில், ஒன்றிய பொருளாளர் தோழர் தட்சணாமூர்த்தி, மகளி ஆயம் தோழர்கள் ம.லெட்சுமி உள்ளிட்ட  திரளானத் தோழர்களை கைது செய்து ரம்யா திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

திருத்துறைப்பூண்டி:

திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் காலை 9.00 மணியளவில் காரைக்குடி – சென்னை மற்றும் மயிலாடுதுறை – துருத்துறைப்பூண்டி செல்லும் தொடர்வண்டி மறிக்கப்பட்டு 250க்கும் மேற்பட்டோர் கைதாயினர்.

தமிழ்நாடு விவசாய சங்கம் இராசமாணிக்கம் தலைமையில் நடைபெற்ற இம் மறியலில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றிய செயலாளர் இரா.தனபாலன், ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் க.அரசு , ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் தனஞ்செயன், நகர செயலாளர் இரமேசு, நாம் தமிழர் கட்சி மாவட்ட துணைச் செயலாளர் முத்துகுமார், ம.தி.மு.க. நகர செயலாளர் கோ.வி.சேகர், நம்மாழ்வார் இயக்கம் வி.ராமராசு, பாரம்பரிய எல்லை காப்போம் இயக்கம் செயராமன், கருணையூசூல், கலைஞாயிறு பொருப்பாளர் ஆர்.இராசேந்திரன், மறுமலர்ச்சி உழவர் இயக்கம் சோமு.இளங்கோ உள்ளிட்ட தோழர்களை கைது செய்த காவல்துறையினர் மங்களநாயகி திருமண மண்டபத்தில் வைத்துள்ளனர்.

திருவாரூர்: நீடாமங்கலம்

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக, திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலத்தில் திரு கிருஷ்ணசாமி (விவசாய சங்கத் தலைவர்), தோழர் திருநாவுக்கரசு (தாளாண்மை உழவர் இயக்கம்) ஆகியோரின் தலைமையில் நடைபெற்ற தொடர் வண்டி மறியலில் 35க்கும் மேற்பட்டோர் கைது. பல்வேறு உழவர் இயக்கங்கள்,  அரசியல் கட்சிகள் என திரளானோர் இரயில் மறியலில் கலந்து கொண்டனர்.

தஞ்சை அய்யானபுரம்:

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக தஞ்சை மாவட்டம், அய்யனாபுரத்தில் காலை 9.00 மணியளவில் தஞ்சையிலிருந்து வந்த தொடர்வண்டி மறிக்கப்பட்டு 40க்கும் மேற்பட்ட கைது.

தமிழர் தேசிய இயக்கம் அய்யனாபுரம் முருகேசன் தலைமையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்களும், தமிழக இளைஞர் முன்னணி தோழர்களும் காவல்துறையினரால் கைது செய்து திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

இதன் தொடர்ச்சியாக,காலை 10.30 மணியளவில் திருச்சியிலிருந்து வந்த தொடர்வண்டி மறிக்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட கைதாயினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக் குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி தலைமையில், தமிழக இளைஞர் முன்னணி பூதலூர் ஒன்றியச் செயலாளர் க.காமராசு, வின்னணூர்பட்டி குணசேகரன் உள்ளிட்ட திரளானத் தோழர்களை காவல் துறையினரால் கைது செய்து திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சை: சாலியமங்கலம், அம்மாப்பேட்டை,

காவிரி உரிமை மீட்புக்குழு சார்பாக தஞ்சை மாவட்டம், சாலியமங்கலம், அம்மாப்பேட்டை ஆகிய ஊர்களில் தொடர் வண்டி மறிக்கப்பட்டு 45க்கும் மேற்பட்டோர் கைதாயினர். சாலியமங்கலத்தில், தோழர் பழனிவேல் (தமிழக உழவர் முன்னணி), தலைமையில் உழவர்கள், பல்வேறு கட்சித் தோழர்கள் என 22 பேர் கைது செய்யப்பட்டனர்.

அம்மாப்பேட்டையில் திரு செங்கொடிச் செல்லவன் தலைமையில் நடைபெற்ற மறியல் போராட்டத்தில், தமிழக உழவர் முன்னணிப் பொதுச்செயலாளர் தோழர் காசிநாதன், தமிழக இளைஞர் முன்னணி தஞ்சை ந்கரச் செயலாளர் தோழர் இராமு, உள்ளிட்ட 23 தோழர்கள் கைது செய்யப்பட்டனர்

குடந்தை:

காவிரி உரிமை மீட்புக் குழு சார்பாக தஞ்சை மாவட்டம், குடந்தையில் காலை 08.20 மணியளவில் மைசூர் விரைவுவு தொடர்வண்டி மறிக்கப்பட்டு 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாயினர். விடுதலை தமிழ் புலிகள் கட்சி நிறுவனர், தலைவர் குடந்தை அரசன் தலைமையில் நடைபெற்ற மறியலில், தமிழ்நாடு குடியுரிமை பாதுகாப்பு நடுவம் பொதுச் செயலாளர் வழக்கறிஞர் த.சு.கார்த்திகேயன், தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்ட அமைப்பாளர் ம.செல்வம் உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினரால் கைது செய்து இராணிமஹால் திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.


அதனைத் தொடர்ந்து காலை 10.30 மணியளவில் திருச்சி – மயிலாடுதுறை தொடர்வண்டி மறிக்கப்பட்டு 77க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாயினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் விடுதலைசுடர் தலைமையில், ம.தி.மு.க. இரா.முருகன், காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மாவட்டச் செயலாளர் சுவாமிமலை சுந்தரவிமலநாதன், தமிழ்நாடு மக்கள் கட்சி இணைச் செயலாளர் எழிலன் உள்ளிட்ட தோழர்களை காவல்துறையினரால் கைது செய்து திருமண மண்டபத்தில் வைக்கப்பட்டுள்ளனர்.

பின்பு பிற்பகல் 12.15 மணியளவில் மயிலாடுதுறை- திருநெல்வேலி தொடர்வண்டி மறிக்கப்பட்டு 60க்கும் மேற்பட்ட தோழர்கள் கைதாயினர். நாம் தமிழர் கட்சி, இளைஞர் பாசறை பொருப்பாளர் மணிசெந்தில் தலைமையில், த.தே.பொ.க.தோழர்கள், தமிழர் வாழ்வுரிமை கட்சி தோழர்கள், விடுதலை தமிழ் புலிகள் கட்சி தோழர்கள் உள்ளிட்ட பொதுமக்களும், விவசாயிகளும் தொடர்வண்டியை மறித்து கைதயினர்.


திருச்சி:

திருச்சி தொடர்வண்டி நிலையத்தில் பிற்பகல் 12.45 மணியளவில், குருவாயூர் அதிவிரைவுத் தொடர்வண்டியை, ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் மலர் மன்னன் தலைமையில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் தமிழரசன், தோழர் கோ/மாரிமுத்து, தோழர் ஆ.ஆனந்தன், மாநகரச்செயலாளர் கவித்துவன், தமிழக இளைஞர் முன்னணி செயலாளர்கள் கண்ணன், இராசேசு குமார், ம. தளவாய் சாமி, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்க பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன் நாம் தமிழர் கட்சி மாவட்டச் செயலாளர் பிரபு, திராவிட விடுதலைக் கழகத் தோழர்கள், தந்தை பெரியார் திராவிடக் கழகத் தோழர், பெரியார் பாசறை தோழர்கள் உள்பட 400 க்கும் மேற்பட்டோர் தொடர் வண்டியை மறித்து 250 பேர் கைதாயினர். இளைஞர் முன்னணி தோழர்களுக்கும் காவல்துறையினருக்கும் தள்ளுமுள்ளு ஏற்பட்டது.


Tuesday, October 2, 2012

பின்பற்றப்பட வேண்டிய உழவர் போராளி பி. சீனிவாசராவ் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உரை!


உழவர் போராளி பி. சீனிவாசராவ் அவர்களின் 51 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 30.9.2012 மாலை, திருத்துறைப்பூண்டி வட்டம், ஆலத்தம்பாடி கடைத்தெருவில் நடைபெற்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய இந்த எழுச்சிமிகு பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் இ. தனஞ்செயன் தலைமை தாங்கினார்.

ஒன்றியச் செயலாளர் தோழர் க. தனபால், ஒன்றியச் செயற்குழு உறுப்பினர்கள், ஆசிரியர் சிவவடிவேலு, க.அரசு, ஆகியோர் உரையாற்றினர். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பி.எஸ்.ஆர் நினைவைப் போற்றி வீரவணக்க உரையாற்றினார்.

நிறைவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைவர் பி. சீனிவாசராவ் அவர்களின் பணிகளையும், ஈகத்தையும் எடுத்துக்காட்டி வீரவணக்க உரையாற்றினார்.

தோழர் கி.வெங்கட்ராமன் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“ 1906ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் தெற்கு கனரா மாவட்டத்தில் பிறந்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மையக்குழு முடிவுக்கிணங்க கீழ தஞ்சை மாவட்டத்திற்கு வந்து போர்க்குணம் மிக்க உழவர் பேரியக்கத்தைக்கட்டி எழுப்பிய மகத்தான தலைவர் பி. சீனிவாசராவ்.

புழுப்பூச்சிகளைப் போல ஒடுக்கப்பட்டிருந்த அடித்தட்டு மக்களை சாதி ஆதிக்கத் திற்கும், பண்னையார் பேயாட்சிக்கும் எதிராக கிளர்ந்தெழச் செய்து தலை நிமிர்த்தப் பாடுபட்டவர் பி.எஸ்.ஆர். அடுக்கடுக்கான அற்புதமான தலைவர்களை வார்த்தெடுத்த தலைவர்களின் தலைவர் அவர். 1942இல் இந்திய கம்யூனிட்டு கட்சி “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்க்க முடிவு செய்த போது அது தவறான முடிவு என எடுத்துக்காட்டி கட்சிக்குள் கடும்புயலை ஏற்படுத்தியவர். ஆயினும் கட்டுப்பாடுமிக்க போராளி அவர்.

அவரும், அவரைப் போன்ற தலைவர்களும் தலைமறைவு காலத்திலேயே பல்லாயிரக் கணக்கான மக்களைத் திரட்டி வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டத்திலும், சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்திலும், குத்தகை உழவர்களின் உரிமைப் போராட்டத்திலும் வெற்றிகள் பல ஈட்டினார்கள். இதனால் கீழ் தஞ்சை மாவட்டத்தில் வழுமிக்க இயக்கமாக கம்யூனிஸ்ட்டு இயக்கம் வளர்ந்தது. 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெளியில் வந்து பரப்புரை செய்ய முடியாத காலத்திலும் மக்களை சந்தித்து வாக்குகள் பெற்று கீழ் தஞ்சையில் மட்டும் 9 சட்டமன்றத் தொகுதிகளில் தனித்து வெற்றிக் கண்டது கம்யூனிஸ்ட்டு கட்சி.

அதே கட்சிதான் இன்று கருணாநிதியிடமும், செயலலிதாவிடமும் பல்லிளித்து இரண்டு சீட்டுகளை பெற்றால் போதும் என்ற நிலையில் இருக்கிறது. ஈகி பி.எஸ்.ஆரும், ஜீவாவும், இருந்த கட்சியில்தான் இன்று தளி இராமச்சந்திரங்கள் கோலோச்சுகிறார்கள்.

கம்யூனிஸ்ட்டு கட்சியே இவ்வாறு சீரழிந்து விட்டதென்றால் பிற கட்சிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இன்று காவிரி சிக்கலில், தமிழ்நாட்டு கட்சிகள் நடந்து கொள்ளும் விதமே தமிழ்நாட்டு அரசியல் எந்த அளவிற்கு சீரழிந்து சிதிலமடைந்து கிடக்கிறது என்பதற்கு சான்று.
மீண்டும் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுக் காவிரி நீரும் உரிமை என்ற அடிப்படையில் திறந்து விட மாட்டோம் என்று கர்நாடகக் கயவர்கள் கொக்கரிக்கிறார்கள். 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மாட்டோம் என வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். ஓசூர் எல்லையிலே வந்து நாள் தவறாமல் அடாவடியில் ஈடுபடுகிறார்கள். இதிலே கர்நாடகத்தில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, புதியக் கட்சி, பெரியக் கட்சி என்ற எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் உரிமை மறுக்கப்பட்ட தமிழகத்திலோ சொந்தப் பங்காளிச் சண்டைகளை அரசியல் கருத்து வேறுபாடு போல் படம் காட்டி உரிமையை மீட்க ஒன்று சேர மறுக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நிலவும் பதவி அரசியல் தமிழக உரிமைகளை காட்டி கொடுக்கும் அரசியலாக நிலை தாழ்ந்து போய் நீண்ட நாளாகி விட்டது. எனவேதான் எந்த தயக்கமும் இன்றி தமிழ்நாட்டை அடிமை கொண்டு சித்திரவதை செய்து வருகிறது டெல்லி ஏகாதிபத்தியம்.
எனவே இந்த கேடுகெட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டு அரசியலை மீட்டெடுப்பதில் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளைஞர்க முக்கியப் பங்காற்ற வேண்டும்.

 தமிழ்நாடு விடுதலை பெறுவதைத் தவிர நாம் சந்திக்கும் சிக்கல் களிலிருந்து நிரந்தரமாக விடுபட வேறு வழியே இல்லை. காவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாறு பிரச்சினை, தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலை. மீனவர் படுகொலை கூடங்குளம் சிக்கல் ஆகிய அனைத்திற்கும் காரணம் இந்திய ஏகாதிபத்தியத்திற்கு தமிழ்நாடு அடிமைப்பட்டிருப்பதுதான் எனவே தமிழ்நாடு விடுதலை என்ற இலட்சியம் நோக்கி இளைஞர்கள் எழுச்சிக் கொள்ள வேண்டும் உழவர்கள் ஒன்றுதிரள வேண்டும். என தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்த பி.எஸ்.ஆர். நாளில் அழைக்கிறது” என்று உரையாற்றினார்.

(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT