உடனடிச்செய்திகள்
Showing posts with label மகளிர் ஆயம். Show all posts
Showing posts with label மகளிர் ஆயம். Show all posts

Thursday, August 22, 2019

“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக!” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு!

“கல்லாக்கோட்டை மது ஆலையை மூடுக!” பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் தமிழ்நாடு அரசிடம் நேரில் கையளிப்பு!
புதுக்கோட்டை மாவட்டம் – கல்லாக்கோட்டையில் கால்ஸ் மது ஆலையை மூடக் கோரி தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் ஆயமும், நாம் தமிழர் கட்சியும் திரட்டிய பத்தாயிரம் மக்கள் கையெழுத்திட்ட மனுக்கள் இன்று (22.08.2019) காலை, தமிழ்நாடு அரசிடம் கையளிக்கப்பட்டன.
புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை வட்டம் - கல்லாக்கோட்டையில் செயல்பட்டு வரும் கால்ஸ் மது உற்பத்தி ஆலை, கடந்த 2008ஆம் ஆண்டு வாக்கில் திறக்கப்பட்ட பின் கல்லாக்கோட்டையைச் சுற்றியுள்ள 20 கிராமங்களில் நிலத்தடி நீர் வற்றிப் போய் வேளாண்மை மிகவும் பாதிக்கப்பட்டுள்ளது. சுற்று வட்ட கிராமங்களின் மக்கள் போதிய குடிநீரின்றித் தவிக்கிறார்கள்.
ஒரு நாளைக்கு இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை ஆழ்குழாய்க் கிணறுகள் வழியாகக் கால்ஸ் நிறுவனம் உறிஞ்சுகிறது. அந்த சாராய ஆலைக்கு அருகில் 600 ஏக்கரில் இயங்கி வந்த தமிழ்நாடு அரசு வேளாண் விதைப்பண்ணை தண்ணீரில்லாமல் மூடப்பட்டு விட்டது.

கால்ஸ் ஆலை தொடங்கப்பட்டால் இவ்வாறான பாதிப்புகள் வரும் என்று கடந்த 2008இல் சனநாயக வழியில் போராடிய சுற்று வட்ட மக்கள் மீதும் பல்வேறு இயக்கங்களைச் சேர்ந்தவர்கள் மீதும் ஏராளமான வழக்குகளைப் போட்டு, சிறையிலடைத்து அப்போதைய தி.மு.க. ஆட்சியாளர்கள் அடக்குமுறையைக் கட்டவிழ்த்துவிட்டார்கள். ஒருவர் மீது நான்கு, ஐந்து வழக்குகள் போட்டுள்ளார்கள். இன்னும் அந்த வழக்குகளுக்காக அவர்கள் நீதிமன்றம் அலைந்து கொண்டுள்ளார்கள்.

இந்நிலையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” தலைமையில் கடந்த 14.05.2019 அன்று கல்லாக்கோட்டை கால்ஸ் மது ஆலையை மூட வலியுறுத்தி அவ்வாலை முன்பு மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்று இருநூறுக்கும் மேற்பட்ட பெண்களும் சுற்று வட்ட மக்களும் பங்கேற்று கைதாகினர்.

அதன்பிறபு, நாம் தமிழர் கட்சியினரும் மகளிர் ஆயத்தினரும் இணைந்து கடந்த 28.06.2019லிருந்து 05.07.2019 வரை கந்தர்வகோட்டை சுற்று வட்டாரப் பகுதியில் மக்களிடம் இக்கோரிக்கைகளுக்காக பத்தாயிரம் கையெழுத்துகள் வாங்கினர். இக்கையெழுத்துகள் கொண்ட மனு இன்று (22.08.2019) காலை சென்னை தமிழ்நாடு அரசுத் தலைமைச் செயலகத்தில் ஒப்படைக்கப்பட்டன.

இம்மனுவை, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி அம்மாள், நாம் தமிழர் கட்சி கந்தர்வக்கோட்டை செயலாளர் திரு. செல்வக்குமார், புதுக்கோட்டை நடுவண் செயலாளர் திரு. முருகானந்தம், தமிழுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் புலவர் இரத்தினவேலன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, மகளிர் ஆயம் செயற்குழு தோழர் பிருந்தா, தோழர்கள் கோ. செந்தாமரை, த. சத்தியா ஆகியோர் சென்னை தலைமைச் செயலகத்திற்கு வந்து அளித்தனர்.
முன்னதாக, தமிழ்நாடு அரசு உள்துறை செயலாளர் திரு. நிரஞ்சன் மார்டி இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்துப் பேசிய ஐயா பெ. மணியரசன் தலைமையிலான தோழர்கள், 2008இல் மது ஆலைக்கு எதிராகப் போராடிய மக்கள் மீது போடப்பட்ட வழக்குகளைக் கைவிட வேண்டுமெனக் கோரினர். அதன்பின், தமிழ்நாடு முதலமைச்சரின் தனிப்பிரிவு சிறப்பு அதிகாரி திரு. டி. பாஸ்கரபாண்டிய் இ.ஆ.ப., அவர்களை நேரில் சந்தித்து பத்தாயிரம் மக்கள் கையெழுத்துகள் வழங்கப்பட்டன.

அதன்பின்பு செய்தியாளர்களை சந்தித்த ஐயா மணியரசன் அவர்கள், “கல்லாக்கோட்டையிலுள்ள கால்ஸ் மது உற்பத்தி ஆலை நிலத்தடி நீரை உறிஞ்சிவிட்டதால், சுற்றுவட்டத்தில் 20 கிராமங்கள் நிலத்தடி நீர் வற்றி வேளாண்மை முற்றிலும் பாதிக்கப்பட்டுவிட்டது. குடிநீரும் இல்லை. எனவே, கால்ஸ் மது ஆலையை நிரந்தரமாக மூட வேண்டும். இவ்வாலையைத் தொடங்கக் கூடாது என்று 2008இல் போராடிய மக்கள் மீது போட்டுள்ள அனைத்து வழக்குகளையும் கைவிட வேண்டும். கல்லாக்கோட்டையில் நிலத்தடி நீரின்றி மூடப்பட்டுள்ள அரசு வேளாண் விதைப் பண்ணையை மீண்டும் செயல்படுத்த வேண்டும். கால்ஸ் மது ஆலையில் வேலை பார்க்கும் தொழிலாளிகளுக்கு மாற்று வேலை வழங்க வேண்டும்” ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்திப் பேசினார்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, May 14, 2019

கல்லாக்கோட்டை மதுஆலை மூடும் மகளிர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது!


கல்லாக்கோட்டை மதுஆலை மூடும் மகளிர் போராட்டத்தில் 300க்கும் மேற்பட்டோர் கைது!

கல்லாக்கோட்டையில் கால்ஸ் மதுபான ஆலையை எதிர்த்து மகளிர் ஆயம் சார்பில் மகளிர் முற்றுகை போராட்டம் எழுச்சியுடன் நடைபெற்றது.

கல்லாக்கோட்டை சாராய ஆலை முன்பு போராட்டத்தில் ஈடுபட மகளிர் ஆயம் தோழர்கள் முடிவு செய்திருந்த நிலையில் ஆலையின் முன்பு நூற்றுக்கணக்கான காவல்துறையினர் குவிக்கப்பட்டனர். கல்லாக்கோட்டை கடை வீதியில் இருந்து பேரணியாக புறப்பட்ட மகளிர் ஆயம் தோழர்களை ஆலையின் அருகே காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். காவல்துறையினர் தடுத்து நிறுத்தியபோது கொளுத்தும் வெயிலையும் பாராமல் மகளிர் ஆயம் தோழர்கள் - பெண்களும் குழந்தைகளும் முதியவர்களும் என அனைவரும் சாலையிலேயே அமர்ந்தனர். சாலையில் அமர்ந்து முழக்கங்கள் எழுப்பி இருந்தபோது காவல்துறையினர் அனைவரையும் கைது செய்வதாக அறிவித்து தாங்கள் கொண்டு வந்திருந்த வாகனத்தில் அனைவரையும் ஏற்றினர்.


போராட்டத்திற்கு மகளிர் ஆயம் தலைவர் தோழர் லட்சுமி தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் அருணா, துணைப் பொதுச் செயலாளர் தோழர் செம்மலர், துணைத் தலைவர் தோழர் மேரி உள்ளிட்ட திரளான மகளிர் ஆயம் தோழர்களும் நிர்வாகிகளும் பங்கேற்றனர் 300 பேர் கைது செய்யப்பட்டு தற்போது கந்தர்வக் கோட்டையில் உள்ள ஒரு தனியார் மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.






தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, May 12, 2019

கல்லாக்கோட்டை மதுபான ஆலை முன்பு மகளிர் முற்றுகையிடும் போராட்டம்..! புதுக்கோட்டையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு!

கல்லாக்கோட்டை மதுபான ஆலை முன்பு மகளிர் முற்றுகையிடும் போராட்டம்..! புதுக்கோட்டையில் நடந்த செய்தியாளர் சந்திப்பு! 
புதுக்கோட்டை மாவட்டம் - கந்தர்வக்கோட்டை அருகிலுள்ள கல்லாக்கோட்டையிலுள்ள “கால்ஸ் டிஸ்டிலரீஸ்” - தனியார் மதுபான ஆலையை முற்றுகையிடும் போராட்டம் வரும் செவ்வாய்க்கிழமை (மே 14) நடத்தப்படும் என புதுக்கோட்டையில் நேற்று (11.05.2019) நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், மகளிர் ஆயம் தலைவர் தோழர் ம. இலட்சுமி, துணைப் பொதுச்செயலாளர் தோழர் செம்மலர் உள்ளிட்டோர் தெரிவித்தனர்.

இச்செய்தியாளர் சந்திப்பில் மகளிர் ஆயம் சார்பில் வெளியிடப்பட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டதாவது :

"தமிழ்நாடு அரசு தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து, ஆண்டுக்கு ஆண்டு அதன் வணிகத்தைப் பெருக்கும் வகையில் அதிகாரிகளை முடுக்கிவிட்டபிறகு குடிகாரர்களின் எண்ணிக்கை அன்றாடம் அதிகரித்து வருகிறது.

மதுப்பழக்கத்திற்கு அடிமையாகாத பெண்கள், பள்ளி – கல்லூரி மாணவர்கள் எனப் பல தரப்பினரும் குடிப்பழக்கத்திற்கு ஆளாகிச் சீரழிகிறார்கள்.

மதுப்பழக்கத்தினால் இலட்சக்கணக்கான குடும்பங்கள் சின்னாபின்னமாகிச் சிதைந்து விட்டன. பல குடும்பங்களில் குடும்ப வாழ்க்கையே கொடூர வாழ்க்கையாகிவிட்டது. நோயுற்று நடைபிணமாகப் பல ஆண்கள் திரிகிறார்கள்; அற்ப ஆயுளில் சாகிறார்கள்.

பல நாடுகளில், பல மாநிலங்களில் மதுக்கடைகள் திறந்திருக்கும்போது தமிழ்நாட்டில் மட்டும் ஏன் மூட வேண்டும் என்று ஒரு வாதம் வைக்கப்படுகிறது. அந்த நாடுகளிலும் மாநிலங்களிலும் உள்ள மக்கள் அதுபற்றி முடிவு செய்யட்டும். நம் தமிழ்நாட்டிற்கு மது பொருந்தவில்லை; மக்கள் அழிகிறார்கள்; எனவே மதுக்கடைகளை முழுமையாக மூட வேண்டும் என்று மகளிர் ஆயம் கோருகிறது.

மது விற்பனையிலிருந்து கிடைக்கும் வருமானத்தைக் கொண்டுதான் மக்களுக்கு இலவசங்கள் கொடுக்கிறோம் என்கிறார்கள் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள். இதைவிட அநீதியான, ஒழுக்கக்கேடான ஒரு வாதம் வேறு இருக்க முடியுமா? கண்ணை விற்றுச் சித்திரம் வாங்கும் கதை இது!

இந்த வாதமதாவது உண்மையா? அதுவும் பொய்! கடந்த 2018ஆம் ஆண்டு மது விற்பனை வருமானம் 26,796 கோடி ரூபாய். மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, மருத்துவக் காப்பீடு, பசுமை இல்லம், மாணவர்களுக்கு மடிக்கணினி, மிதிவண்டி, நோட்டு புத்தகம், தாலிக்குத் தங்கம் உள்ளிட்ட இலவசங்களுக்கு தமிழ்நாடு அரசு செலவிட்ட தொகை 12,274 கோடி ரூபாய் மட்டுமே! ஒழுக்கம் கெடுத்து பணம் வசூலித்து, இலவசங்கள் வழங்குவது ஓட்டு வாங்குவதற்கான மக்கள் விரோத உத்தியாகும்!

இந்திய அரசு தமிழ்நாட்டிலிருந்து வரியாகவும், தொழில் நிறுவனங்களின் இலாபமாகவும் ஒவ்வொரு ஆண்டும் பல இலட்சம் கோடி ரூபாய் வசூலித்துக் கொண்டு போகிறது. அதில் பாதித் தொகையைத் தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் கேட்டுப் பெற்றால் இங்கு எல்லாத் திட்டங்களையும் நிறைவேற்றலாம். மக்கள் வாழ்வும் செழிக்கும்; பண்பாடும் வளரும்!
முழு மதுவிலக்கு

1. தமிழ்நாட்டில் டாஸ்மாக் மதுக்கடைகள் அனைத்தையும் நிரந்தரமாக மூடி, முழு மதுவிலக்கைச் செயல்படுத்த வேண்டும்.

2. தமிழ்நாட்டில் செயல்படும் மது உற்பத்தித் தொழிற்சாலைகள் அனைத்தையும் நிரந்தரமாக மூட வேண்டும்.

இவ்விரு கோரிக்கைகளுக்காக முதல் கட்டமாக, புதுக்கோட்டை மாவட்டம் கந்தர்வக்கோட்டை வட்டம் – கல்லாக்கோட்டை கால்ஸ் டிஸ்டிலரீஸ் சாராய உற்பத்தி ஆலையை மூட வலியுறுத்தி, மகளிர் ஆயம் சார்பில் அதன் தலைவர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில் 14.05.2019 செவ்வாய் காலை 10.30 மணிக்கு மேற்படி ஆலையை பெண்கள் முற்றுகையிட்டுப் போராடுவார்கள்.

இந்த கால்ஸ் டிஸ்டிலரீஸ் ஆலை நிறுவப்பட்ட பிறகு கல்லாக்கோட்டை மற்றும் அதைச் சுற்றியுள்ள குருவாண்டான் தெரு, சங்கன் விடுதி, சொக்கம்பேட்டை, சத்திரப்பட்டி, கண்ணு குடிப்பட்டி, புதுவயல், மருதன்கோன் விடுதி, கரையவிடுதி, கொத்தகப்பட்டி உள்ளிட்ட இருபது கிராமங்களில் நிலத்தடி நீர் மிகவும் கீழே போய் வேளாண்மைக்கும், குடிநீருக்கும் தண்ணீரில்லாமல் பெருந்துயரத்தில் உள்ளார்கள். குடிநீருக்கும் குடும்பப் பயன்பாட்டிற்கும் தண்ணீரை விலைக்கு வாங்கும் அவலம் உண்டாகியுள்ளது.

இதற்கெல்லாம் காரணம் அன்றாடம் சாராயம் தயாரிக்க இலட்சக்கணக்கான லிட்டர் தண்ணீரை நிலத்தடியிலிருந்து கால்ஸ் டிஸ்டிலரீஸ் ஆலை உறிஞ்சுவதுதான்.

கல்லாக்கோட்டை ஆலை உட்பட தமிழ்நாட்டில் உள்ள எல்லா சாராய உற்பத்தி ஆலைகளையும் உடனடியாக மூட வேண்டும்.

கல்லாக்கோட்டை மது ஆலையை மூட வலியுறுத்தி இப்பகுதி மக்களும் பல்வேறு இயக்கங்களும் ஏற்கெனவே கடுமையாகப் போராடியிருக்கிறார்கள் என்பதையும் சுட்டிக் காட்டுகிறோம்".

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, April 7, 2019

2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம். மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்!

2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம்.  மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” – தமிழ்நாடு சிறப்புப் பேரவைக் கூட்டம், இன்று (07.04.2019) தஞ்சை பெசண்ட் அரங்கில் தோழர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. தோழர் செம்மலர் வரவேற்றார். மகளிர் ஆயம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா மகளிர் ஆயத்தின் செயல்பாட்டு அறிக்கையை முன்வைத்துப் பேசினார். முன்னதாக, மகளிர் ஆயத்தின் மறைந்த முன்னோடிகள் சென்னை சாதிக்குல் ஜன்னா - தஞ்சை சரசுவதி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

மகளிர் ஆயத்தின் தலைவராக தோழர் ம. இலட்சுமி, துணைத் தலைவராக தோழர் பே. மேரி, பொதுச்செயலாளராக தோழர் அருணா, துணைப் பொதுச்செயலாளராக தோழர் க. செம்மலர், பொருளாளராக தோழர் பெண்ணாடம் கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 15 பெண் தோழர்களைக் கொண்ட புதிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.

சிறப்புப் பேரவையையும், புதிய பொறுப்பாளர்களையும் வாழ்த்தி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை ஆகியோர் உரையாற்றினர். நிறைவில், தோழர் இளவரசி நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம்!

தமிழ்நாடு அரசே மது விற்பனை நடத்தி தெருவெங்கும் மது ஆறாக ஓடிக் கொண்டிருப்பதற்கும், அதன் காரணமாக ஒவ்வொரு குடும்பமும் சீரழிந்து வருகின்றது என்பதற்கும் புள்ளி விவரங்கள் தேவையில்லை.

டாஸ்மாக் மதுவால் ஒவ்வொரு நாளும் குடும்ப அமைதி குலைந்து கொண்டிருக்கிறது. விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குற்றங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளது; பாலியல் வன்முறைகளுக்குப் பின்னணியில் மதுப்பழக்கம்தான் இருக்கிறது என்பதை எல்லா ஊடகங்களும், நீதிமன்றங்களும் சான்று கூறுகின்றன. மருத்துவ வல்லுனர்களும் இதைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மது அருந்துவோர் உருக்குலைந்து அகால மரணமடைகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மது விற்பனைக் குறியீடு வைத்து சாராய வணிகம் செய்வது, தமிழ்நாட்டுக்குப் பேரழிவை உண்டாக்குகிறது. “மதுவிலக்கை படிப்படியாக நிறைவேற்றுவோம்” என்றும், “டாஸ்மாக் கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து எடுப்போம்” என்றும் சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி மது விற்பனையை அதிகரிப்பதிலேயே தமிழ்நாடு அரசு குறியாக இருக்கிறது.

மகளிர் ஆயம் தொடர்ந்து பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளை இழுத்துப் பூட்ட வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு மதுத் தீமையை ஏற்றுக்கொண்டாலும் அரசாங்கத்தின் நிதி நிலையைப் பெருக்குவதற்கு இதைத் தவிர வேறு வழி இல்லை என்பது போல ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் போதும் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை நிலை வேறானது!

எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கின் மூலமாக பெற்ற விற்பனை வருமானம் 26 ஆயிரத்து 796 கோடி ரூபாய்! தமிழ்நாடு அரசு அரிசி, மடிக்கணினி. மின்விசிறி, கிரைண்டர், வேட்டி சேலை, பசுமை வீடுகள், மருத்துவ காப்பீடு, பள்ளிச்சீருடை, பேருந்து சலுகை, தங்கத்தாலி, விலையில்லா ஆடு மாடு, மாணவர்களுக்கு மிதிவண்டி நோட்டுப் புத்தகம் போன்ற அனைத்து இலவசங்கள் - விலையில்லா அறிவிப்புகளில் செலவிட்ட தொகை இதே நிதியாண்டில் 12 ஆயிரத்து 274 கோடி ரூபாய் தான்! எனவே இலவசங்களை வழங்குவதற்காகத்தான் மதுவிற்பனையை தொடர்கிறோம் என்று சொல்வதில் பொருளில்லை.

இன்னொருபுறம் அரசாங்கத்தின் வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் குறைந்திருக்கிறது. இந்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டு வந்துவிட்டது எனக் கூறுவது டாஸ்மாக் தொடர்வதற்கு பொருத்தமான காரணமில்லை! மாநில அரசின் வருவாயைப் பெருக்க மாற்று வழிகள் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலித்து செல்கிற நேர்முக மறைமுக வரிகள் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஆகும்! இதுதவிர தமிழ்நாட்டில் இருந்து ஒரு இலட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இந்திய அரசுக்கான வருமானத்தில் 30 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்துதான் செல்கிறது.

இவ்வளவு வருமானத்தை இந்திய அரசுக்கு ஈட்டித் தரும் தமிழ்நாடு, அதில் தனக்குரிய பங்கைக் கோரிப் பெற்றாலே நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், அரசை நடத்துவதற்கும் போதிய நிதி கிடைக்கும். எனவே இதை உணர்ந்து தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசு வசூலிக்கும் வரி வருவாயிலும் ஏற்றுமதி வருவாயிலும் கிடைக்கும் தொகையில் பாதியை வலியுறுத்திப் பெற வேண்டும்.

இதைச் செய்வதற்கு மாறாக டாஸ்மாக் கடைகளின் விற்பனை மூலமாகத்தான் எங்களுக்கு முதன்மையான வருமானம் வருகிறது என்று சொல்வதை சமூகத்தின் மீது அக்கறையுள்ள யாரும் ஏற்க முடியாது.

இன்னொரு காரணத்தையும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. அரசு மதுவிற்பனையை செய்யாவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கூறுகிறது. காவல்துறையும், மதுவிலக்கு அமலாக்கத் துறையும் செயலற்றுதான் இருக்கும் என்று தமிழ்நாடு அரசே கூறும் ஒப்புதல் வாக்குமூலம் இது! மது விலக்கை உறுதியாக நிறைவேற்றுவதற்கு தன்னால் முடியாது என்பதால், டாஸ்மாக்கை நடத்துகிறோம் என்று தமிழ்நாடு அரசு கூறுமானால், தங்களது செயலற்றத்தன்மைக்கு தமிழ்நாட்டு மக்களைப் பலியிடும் பொறுப்பற்ற செயலாகும் அது! எனவே, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூட வேண்டும் என மகளிர் ஆயம் தமிழ்நாடு சிறப்பு பேரவை வலியுறுத்துகிறது!

டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூட வேண்டும் என வலியுறுத்தி வரும் 2019 மே 14 அன்று டாஸ்மாக் கடைகளுக்காக மது உற்பத்தி செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் – கந்தர்வக்கோட்டை வட்டம் – கல்லாக்கோட்டையிலுள்ள KAALS டிஸ்டிலரீஸ் ஆலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென்று மகளிர் ஆயம் தமிழ்நாடு சிறப்பு பேரவை தீர்மானிக்கிறது! இம்முற்றுகைப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்புப் பெண்களும் திரளாக வந்து பங்கேற்க வேண்டும் என்று மகளிர் ஆயம் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 2

மாவட்டந்தோறும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் வேண்டும்!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களை விசாரித்து உடனடியாகத் தீர்ப்பு வழங்க மாவட்டந்தோறும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த அதிகார மட்டத்தில் இருந்தாலும், எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் – எந்த அரசியல் பின்னணி இருந்தாலும் அவர்களை உடனுக்குடன் விசாரித்து - வழக்குகளை ஓராண்டுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை இந்நீதிமன்றங்களில் கடைபிடிக்க வேண்டும்.

தீர்மானம் – 3

33% மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!

புதிதாக அமையும் நாடாளுமன்றத்தில் 33% மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

செய்தித் தொடர்பகம், 
மகளிர் ஆயம்

தொடர்புக்கு:
7373456737, 9486927540
முகநூல் : www.fb.com/MagalirAyam

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, April 17, 2018

காசுமீர் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு - மதுரையில் மகளிர் ஆயம் ஆர்ப்பாட்டம்!

காசுமீர் சிறுமி ஆசிபாவுக்கு நீதி கேட்டு - மதுரையில் மகளிர் ஆயம் ஆர்ப்பாட்டம்!

அனைவரும் வருக.!

மகளிர் ஆயம்
தொடர்புக்கு 9486686845, 9486958282, 9486107087

Thursday, November 16, 2017

இலட்சுமி என்னும் பயணி - இயக்குனர் மு. களஞ்சியம் மரியாதை

இலட்சுமி என்னும் பயணி - இயக்குனர் மு. களஞ்சியம் மரியாதை


என்ற தன் வரலாறு நூலுக்கு ஸ்பேரோவின் விருது பெற்ற மகளிர் ஆயம் ம.இலட்சுமி அம்மா அவர்களைப் பாராட்டி சால்வை அணிவிக்கிறார் இயக்குனர் மு.களஞ்சியம் மரியாதை செலுத்தினார்.
 
நாள்-13-11-2017 இடம்- தஞ்சை கலைஞர் நகர் இல்லம்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Sunday, November 12, 2017

தோழர் இலட்சுமி அம்மா தன் வரலாற்று நூலுக்கு ஸ்பேரோ (SPARROW) விருது!

தோழர் இலட்சுமி அம்மா தன் வரலாற்று நூலுக்கு ஸ்பேரோ (SPARROW) விருது!
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினருமான ம. இலட்சுமி அம்மாள் அவர்கள், தன் வாழ்க்கை குறித்து எழுதிய “இலட்சுமி எனும் பயணி” நூலை, மும்பையைத் தலைநகராகக் கொண்டு, இயங்கி வரும் - மகளிர் உரிமைக்கான “ஸ்பேரோ” (Sound and Picture Archives for Research on Women - SPARROW) அமைப்பு விருது வழங்கத் தேர்ந்தெடுத்துள்ளது!
இதுகுறித்து, இன்று (12.11.2017), தமிழ் இந்து நாளேட்டின் “பெண் இன்று” இணைப்பிதழில், “லட்சுமி என்னும் நித்தியப் போராளிக்கு விருது” என்ற தலைப்பில் செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது :
“போராட்டத்தை வாழ்க்கையாகப் பலர் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், லட்சுமி அம்மாவைப் போராட்டம்தான் தேர்ந்தெடுத்தது. 12, 13 வயதுகளிலேயே வறுமை, தந்தையின் கவனிப்பின்மையால் வேண்டாத மனிதராகி, குழந்தைத் தொழிலாளியாக பனியன் தொழிற்சாலையில் வேலைக்குச் சேர்ந்தார். அங்கே தொழிற்சங்கத்திலிருந்து தனது போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார் லட்சுமி அம்மா.
 இவரது சுயசரிதையான “லட்சுமி என்னும் பயணி”க்கு சுயசரிதை வகைமையில் ஸ்பேரோ விருது கிடைத்துள்ளது. சமூகம், அரசியல், வாழ்வாதார உரிமைகளுக்காக அடித்தளத்திலிருந்து போராடும் பெண்களின் பதிவுகள் மிக அரிதான நிலையில் லட்சுமி அம்மாவுக்குக் கிடைத்திருக்கும் இந்தக் கவுரவம் முக்கியமானது.
தொழிலாளர் உரிமைகள், சாதி எதிர்ப்பு, வர்க்கப் போராட்டங்களுக்குப் புகழ்பெற்ற தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள குக்கிராமத்தில் பிறந்த லட்சுமி, சி.ஐ.டி.யூ. அமைப்பில் குழந்தைத் தொழிற்சங்கவாதியாகத் தனது போராட்ட வாழ்க்கையைத் தொடங்கினார். அந்தத் தொடர்பிலேயே கட்சியின் முழுநேர உறுப்பினராகச் செயல்பட்ட, தற்போதைய தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ. மணியரசனை மணந்து கொண்டார்.
நெருக்கடி நிலை அமல்படுத்தப்பட்டபோது காவல்துறையினரால் தேடப்பட்ட ஒருவருடன் திருமணத்தில் இணைந்த லட்சுமிக்கு ஒரு இந்திய, தமிழ்ப் பெண்ணுக்குக் கிடைக்கும் சாதாரணக் குடும்ப மகிழ்ச்சிகூடக் கிடைக்கவில்லை என்பதை அவரது சுயசரிதை விளக்குகிறது. பிரசவம் உள்ளிட்ட முக்கியமான நிகழ்வுகள் எதிலுமே கணவர் இல்லாத சூழ்நிலையை எதிர்கொண்டவர் லட்சுமி அம்மா. குடும்பப் பொறுப்பு, குழந்தைகள் கவனிப்பு, வறுமை, தனிப்பட்ட இழப்பு ஆகியவற்றோடு தனது கணவரது அனைத்துப் போராட்டங்களிலுலும் ஈடுபட்டு வருகிறார் லட்சுமி அம்மா” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தோழர் ம. இலட்சுமி அம்மாள் அவர்களுக்குப் பாராட்டுகள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, October 26, 2017

ஸ்பாரோ இலக்கிய விருது 2017 அறிவிப்பு

ஸ்பாரோ இலக்கிய விருது 2017 அறிவிப்பு
இந்த ஆண்டின் தமிழ் மொழி விருதுகள் *லட்சுமி எனும் பயணி* எழுதிய மகளிர் ஆயம் நடுவன் குழு உறுப்பினர் தோழர் பெ. லெட்சுமி அம்மா அவர்களுக்கு விருது விழா டிசம்பரில் நடைபெறும்.

செய்தி தொடர்பகம்,
மகளிர் ஆயம்

Sunday, October 22, 2017

சற்று நேரத்திற்கு முன்...

சற்று நேரத்திற்கு முன்...
மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் இலட்சுமி அம்மா அவர்களுக்கு கைப்பேசியில் பேசிய சென்னை நுங்கம்பாக்கம் காவல்துறை உதவி ஆணையர் அவர்கள்..
 
பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்ய அனுமதிக்க மாட்டோம், எனவே போராட்டம் நடத்த வேண்டாம் என கேட்டுக் கொண்டுள்ளார்!
செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.
 
தொடர்புக்கு:
7373456737, 9486927540
 
 

Saturday, October 21, 2017

பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! தோழர் அருணா அறிக்கை!

பெண்களை இழிவுபடுத்தும் விஜய் தொலைக்காட்சி விவாதத்துக்கு மகளிர் ஆயம் கண்டனம்! மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா அறிக்கை!
விஜய் தொலைக்காட்சியில் “நீயா? நானா?” நிகழ்ச்சியில் “தமிழ்ப் பெண்கள் அழகா? கேரளப் பெண்கள் அழகா?” என்ற தலைப்பில் விவாத நிகழ்ச்சி ஒன்றை ஒளிபரப்ப உள்ளார்கள்.

தமிழகப் பெண்கள் இன்றைய அரசியல் சூழலில் பல்வேறு சிக்கல்களில் சிக்கித் தவிக்கின்றனர். மதுக்கடை சீரழிவு, இந்திய அரசு - பன்னாட்டு நிறுவனங்களின் பொருளியல் அழிவுத் திட்டங்கள், வேலையில்லாத் திண்டாட்டம், உழைப்புச் சுரண்டல் ஆகியவற்றால் கடுமையாக பாதிக்கப்பட்டு வாடுகின்றனர். “நீட்” போன்ற கல்வி உரிமைப் பறிப்புத் திட்டங்களை இந்திய அரசு செயல்படுத்தி, கல்வியில் முன்னணியில் நிற்கும் தமிழ்நாட்டு மகளிருக்கு மிகப்பெரும் துரோகம் இழைக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசின் நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளில், அண்மைக்காலமாக வெளி மாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் நிரப்பப்பட்டு, தமிழர்களின் வேலை வாய்ப்பும் பறிக்கப்படுகிறது. தமிழ்நாட்டுப் பெண் பட்டதாரிகளின் பொருளியல் தற்சார்பு பின்னோக்கித் தள்ளப்பட்டுக் கொண்டுள்ளது.

தமிழ்நாட்டுப் பெண்கள் இப்படிப் பல சிக்கல்களில் அவதியுறும் நிலையில், அதற்கெதிராக தன்னம்பிக்கையுடன் போராட வேண்டிய சூழலில், தேவைற்ற தலைப்புடன் – பெண்களுக்கு தாழ்வு மனப்பான்மை ஏற்படுத்தும் வகையிலும், பெண்களை காட்சிப் பொருளாகவே வைத்திருக்கும் நோக்குடனும் விஜய் தொலைக்காட்சி இந்நிகழ்ச்சியை ஒளிபரப்ப இருப்பது கண்டிக்கத்தக்கது!

இந்நிகழ்ச்சியில், கேரளப் பெண்களே அழகு என்று விவாதிப்பதன் மூலம் தமிழ்ப் பெண்களை இழிவுபடுத்துவது, தமிழ் இனத்தை தாழ்வுபடுத்துவது நடக்கும். மாறாக, தமிழ்ப் பெண்களே அழகு என்று இன்னொரு தரப்பு பேசினால், மலையாளப் பெண்களை இனவகையில் இழிவு படுத்துவதாக அமையும். தமிழர்களுக்கும், மலையாளிகளுக்கும் தேவையற்ற ஒரு விவாதத்தின் மூலம் மோதலை ஏற்படுத்துவதும், இன வகையில் தாழ்வு மனப்பான்மையைத் திணிப்பதும் வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

அழகு என்பது ஒவ்வொருவரின் தனித்த விருப்பம் சார்ந்தது. அதனை சில உடல் உறுப்பு அளவுகளிலும், நிறத்திலும் குறுக்கிச் சொல்வது இழிவானப் பண்பாகும்! மறுபுறம், அழகுணர்ச்சி என்பது அனைவருக்கும் பொதுவானது. அதனை பெண்களிடம் மட்டும் மையப்படுத்துவது பெண்களை உளவியல் வகையில் ஊனப்படுத்தும். தாழ்வு மனப்பான்மையை ஏற்படுத்தும்! பன்னாட்டு நிறுவனங்களின் அழகு சாதனப் பொருட்களைப் பயன்படுத்தும்படி அவர்களை மறைமுகமாக ஊக்குவித்து, அவர்களுக்கு இலாபம் ஏற்படுத்திக் கொடுக்கவே இது போன்ற நிகழ்வுகள் தொடர்ச்சியாக ஒளிபரப்பாகின்றன.

பெண்களின் மென்மையான உணர்வுகளைப் பாதிக்கும் சூட்சுமம் அறிந்து, அவர்களைப் சிக்கல்களிலிருந்து மடைமாற்றம் செய்ய விஜய் தொலைக்காட்சி நடத்தும் இந்நிகழ்ச்சியை “மகளிர் ஆயம்” வன்மையாகக் கண்டிப்பதுடன், இந்நிகழ்வை ஒளிபரப்பக் கூடாதெனக் கோருகிறது!
 
இன்னணம்,
அருணா,
ஒருங்கிணைப்பாளர்,
மகளிர் ஆயம்.
 
செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.
 
தொடர்புக்கு:
7373456737, 9486927540

Monday, October 16, 2017

தஞ்சையில் குடிநீர் வழங்காத ஊராட்சியைக் கண்டித்து மறியல்!

தஞ்சையில் குடிநீர் வழங்காத ஊராட்சியைக் கண்டித்து மறியல்!

தஞ்சாவூர் மாநகரத்தை ஒட்டியுள்ள, நீலகிரி ஊராட்சி கலைஞர் நகரில் கடந்த ஆறு மாதமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் துணையுடன் மகளிர் ஆயம் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டது. அதிகாரிகளை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது.
எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று (16.10.2017) காலை, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான தோழர் ம. இலட்சுமி அம்மா தலைமையில் அப்பகுதி மகளிர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறைனர் ஊராட்சி அலுவலரிடம் பேசி கலைஞர் நகர் இரண்டாம் தெரு மற்றும் சில பகுதிகளில் அன்றாடம் தட்டுபாடு இல்லாமல் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
போராட்டத்தில், மகளிர் ஆயம் தோழர்கள் விவேகா, கோகிலா, பானுமதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை உள்ளிட்டோரும் பொது மக்களும் பங்கேற்றனர்.

மகளிர் தோழர்களுக்கு வாழ்த்துகள்!

செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.

தொடர்புக்கு:
7373456737, 9486927540
https://www.facebook.com/makaliraayam

Wednesday, July 5, 2017

கதிராமங்கலம் காக்க - மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்!

கதிராமங்கலம் காக்க - மகளிர் ஆயத்தின் தீரமிக்கப் பணிகள்!
கதிராமங்கலத்தைக் காப்பதற்கான களப்போராட்டங்களில் ஈடுபட்டு வரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் “மகளிர் ஆயத்தின்” மகளிர் தோழர்கள், இன்று (05.07.2017) தஞ்சை மாநகரில் செய்தப் பணிகளைப் பார்த்து தஞ்சை மக்கள் திகைத்து நின்றனர்!

கதிராமங்கலத்தில் மக்களைத் தாக்கி ஓ.என்.ஜி.சி.க்கு அடியாள் வேலை பார்த்த காவல்துறையினரைக் கண்டித்தும், சிறையிலுள்ள போராளிகளை விடுதலை செய்யக் கோரியும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் அச்சிடப்பட்ட சுவரெட்டிகளை குடந்தை நகரில் நாம் ஒட்டிய நிலையில், அதைக் காவல்துறையினர் கிழித்தெறிந்தனர்.
இன்று (05.07.2017) அச்சுவரொட்டிகளை மகளிர் ஆயத்தின் தோழர்கள் தாங்களாகவேச் சென்று தஞ்சையின் முதன்மை வீதிகளில் ஒட்டினர். தள்ளாத அகவையிலும் இளைஞரைப் போல் சுறுசுறுப்போடு செயல்பட்டு வரும் மகளிர் ஆயத்தின் நடுவண் குழு உறுப்பினர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில், மகளிர் தோழர்கள் கோகிலா, சரசுவதி, உமா, தானி ஓட்டுநர் சிவா ஆகியோர் இப்பணியை மேற்கொண்டனர். நாளையும் அப்பணியில் தோழர்கள் ஈடுபடுகின்றனர்.

முன்னதாக, கடந்த 03.07.2017 அன்று திருச்சி நடுவண் சிறைக்கு சென்ற தோழர் இலட்சுமி அம்மாள், வெள்ளம்மாள் ஆகியோர் சிறையில் அடைக்கப்பட்டுள்ள பேராசிரியர் த. செயராமன், தோழர் க. விடுதலைச்சுடர் உள்ளிட்டோரை நேரில் சந்தித்துப் பேசினர்.
இதனையடுத்து நேற்று (04.07.2017), கதிராமங்கலத்திற்குச் சென்ற தோழர் இலட்சுமி அம்மாள் உள்ளிட்ட தோழர்கள், சிறையில் அடைக்கப்பட்டுள்ள கதிராமங்கலம் தோழர்களின் குடும்பத்தினரையும் உறவினர்களையும் சந்தித்து ஆறுதல் கூறினர்.

மகளிர் ஆயத்தின் பணி தொடர்கிறது!

செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.

தொடர்புக்கு: 7373456737
www.kannotam.com
முகநூல்: FB/MakalirAayam

Friday, March 10, 2017

"பெண்ணுரிமையும் மண்ணுரிமையும்" தஞ்சையில் மகளிர் நாள் கருத்தரங்கு!

"பெண்ணுரிமையும் மண்ணுரிமையும்" தஞ்சையில் மகளிர் நாள் கருத்தரங்கு!
அனைத்துலக மகளிர் நாளை முன்னிட்டு, தஞ்சையில் வரும் 11.03.2017 அன்று, மகளிர் ஆயம் சார்பில், “பெண்ணுரிமையும் மண்ணுரிமையும்” என்ற தலைப்பில் சிறப்புக் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.

போராளித் தோழர் புதுமொழி (எ) ஜன்னா அவர்களின் முதலாம் ஆண்டு நினைவு நாளான 11.03.2017 அன்று, தஞ்சை பெசண்ட் அரங்கில் மாலை 4.30 மணிக்கு - தோழர் ஜன்ன நினைவரங்கில் நடைபெறும் இக்கருத்தரங்கிற்கு மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி தலைமை தாங்குகிறார். தோழர் சே. அமுதா வரவேற்புரையாற்ற, தோழர் சி. இராசப்பிரியா தொடக்கவுரையாற்றுகிறார்.

மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா, மீத்தேன் திட்ட எதிர்ப்புக் கூட்டமைப்பு திருமதி. சித்ரா செயராமன், தோழர் செம்மலர் ஆகியோர் உரைவீச்சு நிகழ்த்துகின்றனர். பாவலர்கள் இரா.பெ. வெற்றிச்செல்வி, ந. பாவேந்தி, செ. தமிழினி ஆகியோர் பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கருத்தரங்கை நிறைவு செய்து சிறப்புரையாற்றுகிறார். தோழர் இரா. யமுனாராணி நன்றி கூறுகிறார்.

இக்கருத்தரங்கில், தமிழின உணர்வாளர்கள் திரளாகக் கலந்து கொள்ள அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.

தொடர்புக்கு:
7373456737, 9486927540
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT