“ஒற்றுமை மாநாடு” நடத்த
தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாது!
அனுமதித்தால் நாங்களே தடுப்போம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் அறிக்கை!
கிருட்டிணகிரி மாவட்டம் – ஓசூர் உட்கோட்டம் சிப்காட் காவல் சரகம் பகுதியிலுள்ள அத்திப்பள்ளியில் 26.01.2021 அன்று, “தேசபிரேமிகளா சேனை” என்ற கன்னட அமைப்பும், கர்நாடகத்திலே உள்ள தமிழ் அமைப்பு ஒன்றும் இணைந்து “கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு” நடத்த இருப்பதாக அறிவிப்பு வந்துள்ளது.
கர்நாடகத்தில் தமிழர்களை இனப்படுகொலை செய்தும், தாக்கியும், தமிழர்களின் பேருந்து களையும் வணிக நிறுவனங்களையும் வீடுகளையும் எரித்தும் இனவெறியாட்டம் நடத்திக் கொண்டிருக்கும் கன்னட வெறியர்களின் மறைமுகத் தமிழர் தாயக ஆக்கிரமிப்பு மாநாடுதான் இந்த மாநாடு!
அண்மையில்தான் தாளவாடிப் பகுதியில் தமிழ்நாட்டு எல்லையில் தமிழ்நாடு அரசு வைத்திருந்த வரவேற்புப் பெயர்ப் பலகையை கன்னடவெறி அமைப்பின் தலைவர் வாட்டாள் நாகராசன் தலைமையில் கன்னட வெறியர்கள் பிடுங்கி எறிந்து, அந்தப் பெயர்ப் பலகையிலுள்ள தமிழை அழித்து, தமிழ் எழுத்துகளைக் காலில் போட்டு மிதித்து இனவெறியாட்டம் நடத்திவிட்டு, எந்த சிக்கலும் இல்லாமல் திரும்பினார்கள். இந்த வன்முறையை காணொளியாக அவர்களே வெளியிட்டார்கள்.
தமிழ்நாட்டு எல்லைக்குள் புகுந்து தமிழ் இன அடையாளப் பெயர்ப் பலகையைத் தகர்த்துச் சென்ற வாட்டாள் நாகராசன் மற்றுமுள்ள கன்னட இனவெறிக் கயவர்கள் மீது தமிழ்நாடு அரசு வழக்குப்பதிந்து அவர்களைக் கைது செய்து தமிழ்நாட்டுச் சிறையில் அடைத்திருக்க வேண்டும். ஆனால், தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்காமல் கன்னட இனவெறியர்கள் தமிழ்நாட்டிற்குள் நடத்திய வன்முறைகளை கண்டுகொள்ளாததுபோல் இருந்து, கன்னட இனவெறியர்களின் வன்முறைக்கு மறைமுகமாக ஆதரவளித்திருக்கிறது.
அந்தத் துணிச்சலில் கன்னட இனவெறி அமைப்பொன்று அங்குள்ள தமிழ் இனத்துரோக அமைப்பு ஒன்றுடன் இணைந்து, தமிழ்நாட்டிற்குள் கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு நடத்துவது – புதிய வடிவில் கன்னடர்கள் தமிழ்நாட்டில் நடத்தும் ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும்.
ஏற்கெனவே தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டம், ஒகேனக்கல், தாளவாடி பகுதி முதலியவற்றை கர்நாடகத்தோடு இணைக்க வேண்டுமென்று கன்னட அரசியல் கட்சிகளும், கன்னட இனவெறி அமைப்புகளும் ஆக்கிரமிப்புக் குரல் கொடுத்து வருகின்றன. இன்றைய கர்நாடகத்தின் பா.ச.க. முதல்வர் எடியூரப்பா, எதிர்க்கட்சித் தலைவராக இருந்தபோது அத்துமீறி காவிரியின் குறுக்கே படகில் வந்து ஒகேனக்கலில் கன்னடக்கொடியேற்றி, ஒகேனக்கல்லை கர்நாடகத்துடன் இணைக்க வேண்டுமென முழக்கமிட்டுத் திரும்பினார் என்பது நினைவு கூரத்தக்கது.
காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை உச்ச நீதிமன்ற அறிவுரையின்படி 1991 நவம்பர் மாதம், இந்திய அரசு அரசிதழில் வெளியிட்டது. அதற்கு எதிர்ப்பு தெரிவிப்பதாகச் சொல்லி, அன்றைய காங்கிரசு முதலமைச்சர் பங்காரப்பா துணையோடு கன்னட கட்சிகள் மற்றும் கன்னட வெறி அமைப்புகள் ஆகியவற்றைச் சேர்ந்தவர்கள் வன்முறை வேட்டையாடி நூற்றுக்கணக்கான தமிழர்களை இனப்படுகொலை செய்தனர். பல்லாயிரக்கணக்கான வணிக நிறுவனங்கள் சூறையாடப்பட்டன. 2 இலட்சம் தமிழர்கள் ஆண்களும் பெண்களும் குழந்தைகளும் அகதிகளாகத் தமிழ்நாடு ஓடி வந்தனர். அன்றைய முதலமைச்சர் செயலலிதா, இவர்களுக்காகத் தமிழ்நாட்டில் 2 இடங்களில் அகதி முகாம்கள் திறந்தார்.
கடந்த 2016 செப்டம்பர் 12ஆம் நாள், காவிரிச் சிக்கலை சாக்கு வைத்து, தமிழ்நாட்டைச் சேர்ந்த கே.பி.என். மற்றும் பல நிறுவனங்களின் 200க்கும் மேற்பட்ட பேருந்துகளையும், சரக்குந்து களையும் கன்னட வெறியர்கள் பெங்களூரில் ஒரே நேரத்தில் எரித்துச் சாம்பலாக்கினார்கள். எரிந்து முடியும் வரை கர்நாடகக் காவல்துறையினர் தலையிடவில்லை. தமிழ்நாட்டைச் சேர்ந்த மாணவர், சரக்குந்து ஓட்டுநர்களையெல்லாம் ஆடைகளைக் களைந்துத் தாக்கி படமெடுத்து விளம்பரம் செய்தார்கள். தமிழ்நாட்டு நடிகர்கள் நடித்த படங்கள் கர்நாடகத் திரையரங்குகளில் வெளியானால் கூட, அதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பதாகைகளைக் கிழித்து வெறியாட்டம் போடுகின்றனர். நடிகர் விசயின் “மெர்சல்” திரைப்படப் பதாகையை அவ்வாறு கிழித்தெறிந்தனர். கன்னட மொழியுடன் தமிழிலும் பெயர்ப் பலகை இருந்தால் அந்தப் பெயர்ப் பலகைகளை உடைக்கின்றனர்.
இவ்வாறு தொடர்ந்து கன்னட இனவெறியர்கள் தமிழர்களை இனப்படுகொலை செய்தும், தமிழர்களைத் தாக்கியும், தமிழ்நாட்டு எல்லையில் ஆக்கிரமிப்பு வேலைகள் செய்தும் தமிழர்களுக்கு எதிராக இனவெறியாட்டம் நடத்தியபோதிலும் தமிழ்நாட்டில் வசிக்கும் கன்னடர்களைத் தமிழர்கள் துன்புறுத்தியதில்லை. எனவே, கன்னட இனவெறியர்கள் ஒருவேளை திருந்தியிருந்தால் அவர்கள்தான் கர்நாடகத்தில் இன ஒற்றுமை மாநாடு நடத்த வேண்டுமே தவிர, தமிழ்நாட்டில் நடத்த வேண்டிய தேவையில்லை!
ஓசூர் பகுதியில் கன்னட இனவெறி அமைப்பு நடத்தத் திட்டமிட்டுள்ள கன்னடர் – தமிழர் ஒற்றுமை மாநாடு என்பது கன்னட இனவெறியர்களின் இன்னொரு வடிவ ஆக்கிரமிப்பு நடவடிக்கையாகும். இந்த மாநாட்டிற்கு அனுமதி மறுத்துத் தடுத்து நிறுத்த வேண்டும். மீறுகின்றவர்களை எல்லையிலேயே கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும்.
தமிழ்நாடு அரசு, தமிழர்களின் தற்காப்புக்கான இந்த சட்ட நடவடிக்கைகளை எடுக்கவில்லை யெனில், தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழின உணர்வாளர்களை ஒருங்கிணைத்து இம் மாநாட்டை நடத்த விடாமல் மறியல் செய்துத் தடுப்போம் எனத் தெரிவித்துக் கொள்கிறேன்.
அருள்கூர்ந்து, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் கவனம் செலுத்தி, இம்மாநாட்டைத் தடுத்து நிறுத்த வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.