உடனடிச்செய்திகள்

Sunday, December 31, 2017

ஐயா நம்மாழ்வாருக்கு வீரவணக்கம்!

ஐயா நம்மாழ்வாருக்கு வீரவணக்கம்!

“வளமான தமிழர் மரபின் தெளிவான போராளி” - “தமிழர் மரபு வேளாண் அறிவியலாளர்” - ஐயா நம்மாழ்வாரின் நான்காம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு, கடலூர் மாவட்டம் - முருகன்குடியில் நடைபெற்றது.
 
பெண்ணாடம் வட்டம் - முருகன்குடியில், நேற்று (30.12.2017) காலை நடைபெற்ற இந்நிகழ்வில், ஐயா நம்மாழ்வார் அவர்களின் படத்திற்கு மலர் மாலை அணிவித்து வீரவணக்கம் செலுத்தப்பட்டது. செந்மிழ் இயற்கை வேளாண் நடுவம் ஐயா க. கண்ணதாசன் தலைமை தாங்கினார்.
செந்தமிழ் இயற்கை வேளாண் நடுவத்தின் பொறுப்பாளர் திரு. அரா. கனகசபை, நம்மாழ்வார் படத்திற்கு மாலை அணிவித்தார். ஆசிரியர் மு. பழனிவேல் கருத்துரை வழங்கினார். செந்தமிழ் இயற்கை வேளாண் நடுவத்தின் பொறுப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான தோழர் க. முருகன் நன்றி கூறினார்.
இயற்கை வேளாண்மையில் ஈடுபட்டு வரம் உழவர்களும், செந்தமிழ் இயற்கை வேளாண் நடுவத்தின் உறுப்பினர்களும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், திருவள்ளுவர் தமிழர் மன்ற உறுப்பினர்களும் திரளாகப் பங்கேற்றனர்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com
 


Saturday, December 30, 2017

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! "சென்னை சிறப்பு மாநாடு" 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! "சென்னை சிறப்பு மாநாடு" 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை!

#TamilnaduJobsforTamils

கல்வி கற்று வேலையில்லாமல் அலைவோரின் விகிதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். வேலை தேடி தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 90 இலட்சம்!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மாநில அரசின் 4ஆம் பிரிவுப் பணிகளுக்கு 9,351 பேர் தேவை என்றும், அதற்கான தேர்வு 11.02.2018 அன்று நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. அத்தேர்வு எழுதிப் பணியில் சேர்வதற்குப் பல இலட்சம் பேர் தமிழ்நாட்டில் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களுக்குத் தேர்வுப் பயிற்சி கொடுக்க தமிழ்நாடெங்கும் ஏராளமான தனியார் பயிற்சி மையங்கள் (Coaching Centres) செயல்பட்டுவருகின்றன. பயிற்சிக்கான கட்டணமோ அதிகம்!

ஆனால், தமிழ்நாட்டு அரசின் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு நேப்பாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்களையும், பாக்கித்தான், வங்காளதேசம், திபெத், மியான்மார் போன்ற நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள அகதிகளையும் இந்தியாவின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் தமிழ்நாடு அரசு அழைத்துள்ளது. இதற்கான அறிவிக்கை 14.11.2017 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள தமிழ்நாட்டு ஆண், பெண் இளையோர்க்கு இந்த பன்னாட்டுப் போட்டியில் எத்தனை இடம் கிடைக்கப் போகிறது?

கர்நாடகம், குசராத், மராட்டியம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநில அரசுப் பணிகள், நடுவண் அரசுப் பணிகள், தனியார் துறைப் பணிகள் ஆகியவற்றில் அந்தந்த மாநிலக் குடிமக்களுக்கு 100 விழுக்காடு, 90 விழுக்காடு என்ற அளவுகளில் ஒதுக்கீடு வழங்கி மாநில அரசுகள் விதிமுறைகள் இயற்றியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட விதிமுறைகள் இயற்றப்படவில்லை.

தமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு விண்ணப்பம் போடுவோர், தமிழ்நாடு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று 2013 வரை இருந்த விதியையும், தமிழ்நாடு அரசு நீக்கிவிட்டது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு அளவிற்கு வெளி மாநிலத்தவர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள். தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம் முதலியவற்றில், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே கோலோச்சுகிறார்கள். அவர்களை அண்டித் தொழில் செய்யும் நிலையிலேயே தமிழர்கள் இருக்கிறார்கள்! இந்திய அரசமைப்புச் சட்டப்படி தமிழர்கள் மொழிவழித் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர் வாழ்வரிமையைப் பறிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது!

தமிழ்நாடு தமிழர் தாயகமா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்காடா? சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அகதிகளா? அன்னையின் மடியிலேயே அவள் பிள்ளைகள் அனாதைகளா?

கருத்தரங்குகள் - கலை நிகழ்ச்சிகள் - செயலுக்கான தீர்மானங்கள்!

சிறப்பு மாநாட்டிற்கு வாருங்கள் தமிழர்களே!

#TamilnaduJobsforTamils

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Friday, December 29, 2017

"தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே! வெளி மாநிலத்தவருக்கு அல்ல!" பிப்ரவரி 3 அன்று சென்னையில் மாநாடு!

"தமிழ்நாட்டு வேலைகள் தமிழருக்கே! வெளி மாநிலத்தவருக்கு அல்ல!" பிப்ரவரி 3 அன்று சென்னையில் மாநாடு! சிதம்பரத்தில் நடந்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், நேற்று (28.12.2017) - சிதம்பரம் – வணிகர் சங்கக் கட்டடத்தில் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், நா. வைகறை, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், ம. இலட்சுமி அம்மாள், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

முன்னதாக, ஒக்கிப் புயலில் உயிரிழந்த மீனவர்களுக்கும், தமிழ்த்தேசியப் போராளியும் - புலவர் கலியபெருமாள் அவர்களின் மூத்த மகனுமான தோழர் வள்ளுவன் அவர்களின் மறைவுக்கும் இரங்கல் தெரிவித்து, அமைதி வணக்கம் செய்யப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :

தீர்மானம் - 1

“தமிழ்நாட்டில் தமிழருக்கே வேலை – வெளி மாநிலத்தவருக்கு அல்ல!” - தமிழ்நாடு அரசு சட்டமியற்ற வலியுறுத்தி – பிப்ரவரி 3இல் சென்னையில் மாபெரும் மாநாடு
தமிழ்நாட்டில் மிகப்பெரும் அளவில் வெளி மாநிலத்தவர் குடியேறி வருகின்றனர். நிலங்களையும், மனைகளையும் கட்டடங்களையும் வாங்கிக் குவிக்கின்றனர். வணிகத்தையும், தொழிலையும் கைப்பற்றி இருக்கின்றனர். தொகைத் தொகையாக வந்து தமிழ்நாட்டில் குடியேறும் வடநாட்டவர் மற்றும் பிற மாநிலத்தவருக்கு “ஸ்மார்டு கார்டு” திட்டம், வரைமுறையற்று உள்ளே நுழைவதற்கும், தமிழ்நாட்டில் வழங்கல் (ரேசன்) அட்டை, வாக்காளர் அட்டைப் பெற்று நிலைபெறுவதற்கும் வாய்ப்பளிக்கிறது.

நேரடியாகவும், பல்வேறு முறைகேடுகள் – மோசடிகள் வழியாகவும், தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்களில் வெளி மாநிலத்தவர்கள் பணிக்கு அமர்த்தப்பட்டு வந்தார்கள். இதுபோதாதென்று, தற்போது தமிழ்நாடு அரசுப் பணிகளிலேயே வெளி மாநிலத்தவரைப் பணியமர்த்தும் அபாயகரமான புதியப் போக்கு தீவிரம் பெற்றுள்ளது.

கடந்த 07.11.2017 அன்று வெளியான, தமிழ்நாடு அரசு பல்தொழில்நுட்பக் கல்லூரி –விரிவுரையாளர் காலிப் பணியிடங்களுக்கான தேர்வு முடிவுகளில், வெளி மாநிலத்தவர்கள் பெருமளவில் இடம்பெற்றது கண்டுபிடிக்கப்பட்டது. தமிழ்நாடு அரசுப் பணியிலேயே வெளி மாநிலத்தவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ள விவரம் வெளியாகக் கூடாது என்பதற்காக, “ஆசிரியர் தேர்வு வாரியம்” திட்டமிட்டே அவர்களின் பெயர்களை மறைத்து, வழக்கத்திற்கு மாறாக பதிவு எண்களுடன் தேர்வுப் பட்டியலை வெளியிட்டது.

வெளி மாநிலத்தவர்கள் பலரும் பொதுப்பிரிவில் வந்து இடங்களைக் கைப்பற்றியதோடு மட்டுமின்றி, தமிழ்நாட்டின் அட்டவணைப் பிரிவினர் மற்றும் பழங்குடியினர் - பிற்படுத்தப்பட்ட - பிற்படுத்தப்பட்ட (முஸ்லிம்) - மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆகியோர்க்கு உரிய பிரிவுகளின் கீழும் பல வெளி மாநிலத்தவர்கள் தேர்வாகியிருந்தனர். அதன் காரணமாக, இப்பிரிவுகளைச் சேர்ந்த தமிழ் மாணவர்களுக்குரிய இடங்கள் அயலாரால் தட்டிப் பறிக்கப்பட்டன.

இவ்வாறு தேர்வாகியுள்ள வெளி மாநிலத்தவருக்கு 23.11.2017 அன்று சான்றிதழ் சரிபார்ப்பு நடத்தவிருந்த நிலையில், அதைத் தடுத்து நிறுத்தும் போராட்டத்தைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்தது. இதனையடுத்து, சான்றிதழ் சரிபார்ப்பு இரத்து செய்யப்பட்டது. இப்போது, மோசடியாக மதிப்பெண்கள் வழங்கப்பட்டுள்ளதாகக் கூறி, அத்தேர்வு முடிவுகளை ஆசிரியர் தேர்வு வாரியமே திரும்பப் பெற்றுள்ளது.

இந்நிலையில், 14.11.2017 அன்று தமிழ்நாடு அரசுப் பணித் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.), நான்காம் பணிப்பிரிவில் - 9,351 வேலைகளுக்கான அறிவிப்பை வெளியிட்டது. அந்த அறிவிப்பில், இப்பணிகளுக்கு தமிழ்நாட்டவர் மட்டுமின்றி – வெளி மாநிலத்தவரும், நேப்பாளம், பூட்டான் போன்ற வெளிநாட்டினரும், பாக்கித்தான், திபெத், மியான்மர் நாடுகளிலிருந்து வந்த அகதிகளும் மேற்கண்ட வேலைகளுக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், அவர்களுக்கு இப்பொழுது தமிழ் தெரியாவிட்டாலும் பரவாயில்லை, இரண்டாண்டுகளுக்குள் அவர்கள் தமிழ் கற்றுக் கொண்டால் போதும் என்றும் தமிழ்நாடு அரசு சலுகை அளித்துள்ள செய்தி பெரும் அதிர்ச்சியை அளித்தது.

இதற்கு முன்னர் 2013ஆம் ஆண்டு வரை தமிழ்நாடு அரசுப் பணிகளுக்குத் தேர்வு ஆவதற்கு தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்திருக்க வேண்டும் என்ற வரம்பாவது இருந்தது. கடந்த 2016 செப்டம்பர் 1 அன்று, செயலலிதா ஆட்சியில் தமிழ்நாடு சட்டப் பேரவையில் அன்றைய நிதி அமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் தாக்கல் செய்து நிறைவேற்றிய “தமிழ்நாடு அரசுப் பணியாளர்கள் (பணி நிபந்தனைகள்) சட்டம் - 2016” என்ற புதிய சட்டத்தின் அடிப்படையில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் விதிகளில், தமிழ்நாட்டு அரசுப் பணிகளில் வெளி மாநிலத்தவர் பங்கேற்பதற்காக 07.11.2016 அன்று திருத்தங்கள் செய்யப்பட்டது.

இவற்றையெல்லாம் ஆதாரங்களுடன் கடந்த 16.11.2017 அன்று, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை வெளியிட்டு அம்பலப்படுத்தினார். இதனையடுத்து, பல கட்சிகளும் இது குறித்து அறிக்கை வெளியிட்டு தமிழ்நாடு அரசுக்குக் கண்டனம் தெரிவித்தனர். அவர்கள் அனைவருக்கும் நாம் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்!

மகாராட்டிரம், கர்நாடகம், குசராத், மேற்கு வங்கம், சத்தீஸ்கட் போன்ற பல மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை உரிமை சட்டமாக்கப்பட்டுள்ளது. அம்மாநிலங்களின் அரசுப் பணியில், தமிழ்நாட்டில் நடப்பது போல் வெளி மாநிலத்தவர்களையும், வெளி நாட்டினரையும் பணிக்கு அமர்த்த முடியாது!

எனவே, தமிழ்நாடு அரசு – அரசுப் பணிகளில் 100 விழுக்காட்டு இடங்களையும், தனியார் மற்றும் இந்திய அரசு நிறுவனங்களில் 90 விழுக்காட்டு இடங்களையும் தமிழர்களுக்கே வழங்கிட சட்டமியற்றக் கோரி, வரும் பிப்ரவரி 3 – காரி(சனி)க் கிழமை அன்று, சென்னையில் - தோழமை அரசியல் கட்சித் தலைவர்கள், திரைப்படத்துறையினர், பல்துறை வல்லுநர்களைக் கொண்டு - காலை முதல் மாலை வரை முழுநாள் மாநாட்டை நடத்துவதென்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு முடிவு செய்கிறது!

இம்மாநாட்டில், மண்ணின் மக்கள் உரிமையில் அக்கறை கொண்டோரும், தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தீர்மானம் - 2

கடலூர் - நாகை கிராமங்களை அழித்துக் கொண்டு வரப்படும் பெட்ரோ கெமிக்கல் மண்டலத் திட்டத்தை இந்திய அரசு கைவிட வேண்டும்!
கதிர்வீச்சு அபாய அணு உலைகள், காற்று மண்டலத்தையும் உயிர் வாழும் சூழலையும் நாசப்படுத்தும் அனல் மின் நிலையங்கள், நிலத்தடி நீரை உறிஞ்சி பாலைவனமாக்கும் பெட்ரோல், எரிவளி (மீத்தேன்) எடுப்பு முயற்சிகள், நியூட்ரினோ ஆய்வகம், வேளாண் நிலங்களை அழிக்கும் கெயில் குழாய்த் திட்டம் என இந்திய அரசால் தமிழ்நாட்டின் மீது தொடர்ச்சியாகத் திணிக்கப்பட்டு வரும் அழிவுத் திட்டங்களில் ஒன்றாக, கடலூர் - நாகை மாவட்டத்தில் எரிமவேதிப் பொருட்கள் முதலீட்டு மண்டலம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கடலூர் - நாகை மாவட்டங்களின் 45 கிராமங்களில் சற்றொப்ப 57,345 ஏக்கர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள இந்த முதலீட்டு மண்டலத்தில், நச்சுக்காற்றையும், மனித உயிருக்குக் கேடு விளைவிக்கும் வேதிப் பொருட்களையும் உற்பத்தி செய்யும் பெரும் தொழிற்சாலைகளை உள்ளடக்கிய புதிய நகரியம் அமைக்கப்படும் என தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது.

இந்த எரிவேதி மண்டலத் திட்டம் கடலூர், புவனகிரி, சிதம்பரம், சீர்காழி, தரங்கம்பாடி வட்டங்களில் உள்ள 45 கிராமங்களை தனியார் நிறுவன வளாகமாக மாற்றி, இலட்சக்கணக்கான குடும்பங்களை காலங்காலமாக வாழ்ந்த மண்ணிலிருந்து வெளியேற்றும்.

ஏற்கெனவே சிப்காட் தொழிற்சாலைகளால் கடும் மாசுபாடுகளாலும், நிலத்துக்குள் கடல் நீர் புகுவதும் அதிகரித்துள்ள கடலூர் - நாகை மாவட்டங்களில், இந்த புதிய முதலீட்டு மண்டலம் நிலைமையைத் தீவிரமாக்கி, மக்களை நிரந்தர நோயாளிகளாக்கி விடும்.

இந்த எரிவேதி மண்டலத் திட்டம் என்பது ஏற்கெனவே மேற்கு வங்கத்தாலும், கேரளாவாலும் தங்கள் மண்ணிலிருந்து விரட்டியடிக்கப்பட்ட திட்டமாகும். அதைத் தமிழ்நாட்டின் மீது திணிப்பது இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கையே வெளிப்படுத்துகிறது.

எனவே உடனடியாக இத்திட்டத்தைக் கைவிட வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கோருகிறது! இத்திட்டத்தை எதிர்த்து, இக்கிராம மக்களைத் திரட்டி மண்ணுரிமை காக்கும் போராட்டத்தை முன்னெடுப்பது என்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முடிவு செய்துள்ளது!

தீர்மானம் - 3

தேர்தலுக்கு வெளியே சனநாயக இயக்கம் தேவை என்பதை இரா.கி. நகர் இடைத்தேர்தல் காட்டுகிறது!
சென்னை இரா.கி. (இராதாகிருட்டிணன்) நகர் இடைத்தேர்தலில், பணம் வெற்றி பெற்றது என்று பலரும் சொல்கிறார்கள். தேர்தல் சனநாயகத்தை பணச் சூதாட்டமாகவும், பங்குச் சீரழிவாகவும் மாற்றப்பட்டிருப்பது இன்று வந்த நோயல்ல! இந்த நோயை உருவாக்கித் தொற்ற வைத்தவர்கள் தி.மு.க., அ.இஅ.தி.மு.க. தலைவர்கள்!

தன்மானம், சமூகநீதி, முற்போக்கு சிந்தனைகள் ஆகியவற்றைத் தமிழ்நாட்டில் தழைக்க வைத்தவர்கள் திராவிட இயக்கத்தார் என்று பெருமை பேசிக் கொள்கிறார்கள். இந்தியாவிலேயே மிக அதிக விலைக்கு வாக்குரிமையை விற்று வாங்கும் ஊழல் பண்டமாக மாற்றியது திராவிட அரசியல்தான்! அந்தச் சீரழிவின் அதலபாதாளம்தான் இரா.கி. நகர் தேர்தல் முடிவுகள்!

இப்பொழுது, அதை தினகரன் அறுவடை செய்திருக்கிறார். அடுத்தடுத்த தேர்தல்களில் இந்த ஊழல் பந்தையத்தில் யார் முந்தப்போகிறார்கள் என்பது இப்பொழுது சொல்ல முடியாது!

தமிழ்நாட்டில் ஒரு சட்டப்பேரவைத் தொகுதிக்கு பத்து கோடியிலிருந்து இருபது கோடி ரூபாய் வரை செலவு செய்தால்தான் போட்டியிட முடியும் என்ற நிலையை உருவாக்கிவிட்டார்கள். இந்த நிலையில், தேர்தலில் பங்கெடுப்பதன் மூலம் சமூக மாற்றத்தை, சமூக முன்னேற்றத்தைக் கொண்டு வரலாம் என்பதற்கு வாய்ப்பே இல்லை!

தமிழ்நாட்டில் பெரும் பெரும் தேர்தல் கட்சிகளுக்கு அப்பால்தான், மக்கள் தங்கள் வாழ்வுரிமைக்காகப் போராடிக் கொண்டுள்ளார்கள். கூடங்குளம் அணு உலை எதிர்ப்பு, நெடுவாசல் – கதிராமங்கலம் ஓ.என்.ஜி.சி. எதிர்ப்பு, மணல் கொள்ளைத் தடுப்பு, இனயம் துறைமுக எதிர்ப்பு உள்ளிட்ட போராட்டங்களை நடத்தி, அதில் மக்கள் முன்னேற்றமும் கண்டு வருகிறார்கள். தங்கள் வாழ்வுரிமையை சுற்றுச்சூழலை அவர்கள்தான் போராடிப் பாதுகாக்கிறார்கள் - கட்சிகள் அல்ல!

ஊழல் அரசியலை எதிர்க்கின்ற, தமிழ்நாட்டு மக்கள் உரிமைக்குக் குரல் கொடுக்கின்ற இளைஞர்களும் மக்களும் இந்தக் காலத்தில், தேர்தல் அரசியலுக்கு வெளியேதான் மக்கள் இயக்கங்களை நடத்தி – சரியான மாற்று அரசியலை வளர்க்க வேண்டிய தேவையுள்ளது. எனவே, உண்மையாகவே மக்கள் வாழ்வுரிமைக்காக செயல்பட விரும்புகின்ற இயக்கங்களும், மக்களும், தனி நபர்களும் தேர்தலுக்கு வெளியே உள்ள மாற்று சனநாயகப் பாதையில் பயணித்து செயல்படுவதுதான் இன்றைக்குள்ள வரலாற்றுத் தேவையாகும்!

தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகளை புறக்கணித்து, மாற்றாக புதிய கதாநாயகர்களை திரைத் துறையிலிருந்தோ – வெளியிலிருந்தோ தேடுவது வேறு பெயரில் தி.மு.க. – அ.தி.மு.க. ஊழல் அரசியலை – பண்பாட்டுச் சீரழிவை வளர்ப்பதாகவே முடியும்!

இரா.கி. நகரில் வாக்காளர்களுக்குப் பணம் கொடுப்பதைத் தடுக்க தேர்தல் ஆணையம் தவறி விட்டது என்று விமர்சிப்பதுமட்டும் ஊழல் தடுப்பு நடவடிக்கையாக அமையாது. மக்களின் விழிப்புணர்ச்சியை சனநாயக உணர்வை – தன்மான உணர்வை வளர்ப்பதன் மூலம்தான் இந்த ஊழல் அரசியலை ஓரங்கட்ட முடியும்.

ஊழலும் சந்தர்ப்பவாத அரசியலும் திருவிழா கொண்டாடிய போதிலும், இரா.கி. நகர் தேர்தலில் பாரதிய சனதாக் கட்சி 1,400 வாக்குகள் மட்டும்தான் வாங்க முடிந்தது என்பது ஆறுதலாக உள்ளது. தமிழ்நாட்டில் தாங்கள் மட்டுமே கொட்டமடிக்க வேண்டுமென்று தம்பட்டம் அடித்துக் கொண்டிருக்கும் ஆரியத்துவா அரசியல் அமைப்பான பா.ச.க.வை முற்றிலும் புறக்கணித்த, இரா.கி. நகர் தொகுதி மக்களைப் பாராட்டுவோம்!


எனவே, தேர்தல் அரசியலுக்கு வெளியே மக்கள் உரிமை - மக்கள் நலன் சார்ந்த சனநாயக அரசியல் இருக்கிறது என்பதை உணர்ந்து, அதை அமைப்பு வழியில் வளர்த்திட சமூக அக்கறையுள்ள அனைவரும் முன்வர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கேட்டுக் கொள்கிறது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, December 28, 2017

2017ஆம் ஆண்டின் சிறந்த பெண் ஆளுமைகளில் ஒருவராக தோழர் இலட்சுமி அம்மாள் தேர்வு செய்து “அவள் விகடன்” ஏட்டில் செய்தி..!

2017ஆம் ஆண்டின் சிறந்த பெண் ஆளுமைகளில்  ஒருவராக தோழர் இலட்சுமி அம்மாள் தேர்வு செய்து “அவள் விகடன்” ஏட்டில் செய்தி..!
தமிழ்நாட்டளவில் 2017-ஆம் ஆண்டிற்கான சிறந்த பெண் ஆளுமைகளில் ஒருவராக, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினரும், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினருமான தோழர் இலட்சுமி அம்மாள் அவர்களைத் தேர்வு செய்து, "அவள் விகடன்" ஏடு செய்தி வெளியிட்டுள்ளது. 

“எளிய மக்களின் தோழி” என்று தலைப்பிட்டு, இதுகுறித்து அவ் ஏட்டில் வந்துள்ள செய்தி வருமாறு : 

"அரசியல் என்பது ஆட்சி, அதிகாரம், பதவி என நினைப்பவர்களின் எண்ணங்களை உடைத்தெறிந்து, அது எளிய மக்களின் தேவைகளைப் பூர்த்திசெய்வது என்பதற்கான வாழும் சாட்சியே லட்சுமி அம்மா. தஞ்சாவூர் அருகே சிறிய கிராமத்தில் பிறந்து, கடுமையான வறுமையிலும் அடிப்படைக் கல்வியைப் போராடிப் பெற்றவர். தலைமறைவு காலத்தில் இருந்த இடதுசாரி கட்சித் தோழரைத் திருமணம் செய்துகொண்டவர். பெண்களை அரசியல் போராட்டங்களில் ஈடுபட செய்த இவர், இன்றும் களத்தில் நின்று போராடி முன்மாதிரியாகத் திகழ்கிறார். இவரின் தன் வரலாற்று நூலான, ‘லட்சுமி என்னும் பயணி’ பல்வேறு வரலாற்று நிகழ்வுகளுக்குச் சாட்சியம்”.

இவ்வாறு அச்செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

தோழர் இலட்சுமி அம்மாளுடன், ஆணவக் கொலை எதிர்ப்புப் போராளி தோழர் கௌசல்யா, நாடகக் கலைஞர் ஷீலா ராஜ்குமார் உள்ளிட்ட பத்து பேரின் படத்துடன் “அவள் விகடன்” ஏடு செய்தி வெளியிட்டுள்ளது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Monday, December 25, 2017

வெண்மணி ஈகியர்களுக்கு வீரவணக்கம்


வெண்மணி ஈகியர்களுக்கு வீரவணக்கம்
கீழ் வெண்மணி ஈகியருக்கு 50 - ஆம் ஆண்டு நினைவேந்தல் மற்றும் வீர வணக்க நிகழ்வு.... தலைவர் பெ. மணியரசன் அவர்கள் தலைமையில் தமிழ்த் தேசியப் பேரியக்கம் அஞ்சலி...


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, December 23, 2017

தொழிலாளர் சட்டங்களை நீக்க புதிய சட்டம்! தோழர் கி. வெங்கட்ராமன்.


தொழிலாளர் சட்டங்களை நீக்க புதிய சட்டம்! தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

நரேந்திர மோடி தலைமையிலான “சங்கக் குழு” (சங் பரிவார்) ஆட்சி, சங்கங்கள் அற்றவர்களாக தொழிலாளர்களை மாற்ற முயல்கிறது.

பிரித்தானிய ஆட்சி தொடங்கி, இன்று வரை இந்தியாவில் செயலில் உள்ள தொழிலாளர் தொடர்பான, ஏறத்தாழ 44 நடுவண் அரசு சட்டங்களை சுருக்கி 4 சட்டக் கோவையாக (Codes) முன் வைத்துள்ளது மோடி அரசு!

இது நடப்பிலுள்ள சட்டங்களின் எண்ணிக்கையைக் குறைத்து, தொகுப்பாக்குவது என்ற பெயரில் சட்டங்கள் இல்லாத தொழில் உறவை ஏற்படுத்தும் முயற்சியாகும்.

ஊதியம் தொடர்பாக நடப்பிலுள்ள ‘ஊதிய வழங்கல் சட்டம்’ (The Payment of Wages – 1936), ‘குறைந்தபட்ச ஊதியச் சட்டம்’ (The Minimum Wages Act – 1948), ‘போனஸ் வழங்கல் சட்டம்’ (The Payment of Bonus Act, 1965) ஆகியவற்றை ஒன்றாக்கி, ‘ஊதிய சட்டக் கோவை’ (The Code on Wages Bill 2017) என்ற சட்ட முன்வடிவை இந்த நாடாளுமன்ற குளிர்கால கூட்டத் தொடரில் முன் வைத்திருக்கிறார்கள்.

அதேபோல், தொழிற்சங்க சட்டம் (The Trade Union Act, 1926), நிலையாணைச் சட்டம் (Industrial Employment (Standing Orders) Act, 1946), தொழிற்தகராறு சட்டம் (The Industrial Disputes Act, 1947) ஆகியவற்றை ஒருங்கிணைத்து “தொழிலுறவு சட்டக் கோவை” (Code of Industrial Relations Bill - 2017) என்ற முன்வடிவும், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதிச் சட்டம் (Employees' Provident Funds & Miscellaneous Provisions Act, 1952), பணிக்கொடை சட்டம் (The Payment of Gratuity Act, 1972), ஈ.எஸ்.ஐ. சட்டம், பேறு கால உதவிச் சட்டம் (Maternity Benefits Act 1961), பீடித்தொழிலாளர்கள் – கட்டடத் தொழிலாளர்கள் போன்றோருக்கான தீர்வை சட்டம் போன்ற 16 சட்டங்களை ஒருங்கிணைத்து “தொழிலாளர் சமூகப் பாதுகாப்பு சட்டக் கோவை” (Labour Code on Social Security & Welfare Bill, 2017) என்ற சட்ட முன் வடிவும் வைக்கப்பட்டுள்ளன.

இதுதவிர, தொழிலகப் பாதுகாப்பு சட்டங்கள் பலவற்றைத் தொகுத்து “தொழிலகப் பாதுகாப்பு சட்டக்கோவை” (Code on Industrial Safety And Security Bill - 2017) என்ற முன் வடிவும் வைக்கப்பட்டுள்ளது.

நரேந்திர மோடி தலைமையில் பா.ச.க. ஆட்சி வந்தவுடனேயே, தொழிற்சாலை சட்டத்திலும் (The Factories Act – 1948), தொழில் பழகுநர் சட்டத்திலும் (அப்ரண்டிஸ் சட்டம்), பல்வேறு திருத்தங்கள் செய்யப்பட்டன.

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டக்கோவைகள், மேற்சொன்ன சட்டத் திருத்தங்கள் ஆகியவற்றைத் தொகுத்துப் பார்த்தால், மிகப்பெரும்பாலான தொழிலாளர்கள் சட்டப் பாதுகாப்பு அற்றவர்களாக மாற்றப்பட்டிருப்பது தெரியும்.

சங்கங்கள் அற்றவர்களாகத் தொழிலாளர்களை மாற்றுவது, கூட்டுபேரம் என்பதையே ஒழிப்பது, சமரசப் பேச்சுவார்த்தைப் பொறியமைவை தவிர்ப்பது (Avoid Adjudication), தீர்ப்பு அமைவைக் கட்டாயப்படுத்துவது (Force Arbitration) என்பதுதான் மோடி முன்வைத்துள்ள தொழிலுறவு வரைவுச் சட்டத்தின் நோக்கமாக இருக்கிறது.

தொழிலாளர் (Worker), வேலை வாங்குபவர் (Employer), ஊதியம் (Wage) ஆகிய தொழிலுறவின் அடிப்படையான கூறுகளுக்கு இச்சட்டத் தொகுப்புகள் முன்வைக்கும் வரையறுப்பை ஆய்ந்தால், சட்டத்தின் ஆட்சி அகற்றப்படுகிறது என்பது புரியும்.

ஒரு சட்டத்தில் சொல்லப்படும் வரையறுப்பு, இன்னொரு சட்டத்தில் வேறொன்றாக மாற்றப்படுகின்றது. வேலை வாங்குபவர் (Employer) என்ற வரையறுப்பு வேண்டுமென்றே குழப்பமாக முன்வைக்கப்படுகிறது. ஒப்பந்தத் தொழிலாளர்கள் தொடர்பாக முதன்மை நிர்வாகத்திற்கு உறவேதும் இல்லாத முறையில், வரையறுப்புகள் வைக்கப்படுகின்றன.

சிறுதொழில் - பெருந்தொழில், அரசுத்துறை – தனியார் துறை என்ற எந்த வேறுபாடும் இன்றி ஒப்பந்தத் தொழிலாளர் முறைதான் வளர்ந்து வரும் முறையாக இருக்கிறது. மிகப்பெரும் தொகையான தொழிலாளர்கள் ஒப்பந்தத் தொழிலாளர்களாகவே இருக்கிறார்கள்.

இவர்கள் தொடர்பான எந்தப்பொறுப்பும் முதன்மை நிர்வாகத்திற்கு (Principle Employer) இல்லாமல் ஆக்கப்படுகிறது.

இதற்கு முன்னர் ஒப்பந்தத் தொழிலாளர் ஒழுங்குமுறைச் சட்டத்தில் செய்யப்பட்ட திருத்தத்தின் வாயிலாக ஐம்பது தொழிலாளர்களுக்கு கீழுள்ள ஒப்பந்ததாரர்கள் பெரும்பாலான சட்டங்களின் பிடியிலிருந்து விடுவிக்கப்பட்டு விட்டார்கள். அதாவது, ஐம்பது தொழிலாளர்களுக்குக் கீழ் உள்ள ஒப்பந்தங்களில் பணியாற்றும் ஒப்பந்தத் தொழிலாளர்கள் (காண்டிராக்ட் தொழிலாளர்கள்) எந்தக் குறைந்தபட்ச சட்டப்பாதுகாப்பும் அற்றவர்களாக வெளியில் வீசப்படுகிறார்கள்.

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள தொழிலுறவு சட்டம், முதன்மை நிர்வாகத்திற்கும் சட்டக் கடமையிலிருந்து விலக்கு அளிக்கிறது.

“ஊதியம்” என்பது குறித்த வரையறுப்பில், முன்வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு சட்டமும் வெவ்வேறு வகையாகப் பேசுகிறது. ஊதியம் வழங்குவதையும், அதனைக் குறிப்பிட்ட காலத்திற்குள் வழங்குவதையும் உறுதி செய்வதற்காகவே ஊதிய வழங்கல் சட்டம் பிரித்தானிய ஆட்சிக்காலத்திலேயே வந்தது.

ஊதியத்தில் எந்தெந்த வகை பிடித்தங்கள் அனுமதிக்கப்படும் என்ற வரையறுப்பு அச்சட்டத்தில் இருந்தது. இப்போதைய முன் மொழிவில் தொழிலக நிர்வாகம் ஒரு தொழிலாளியின் பணியில் குறை இருப்பதாகக் கருதினால், அக்குறையினால் ஏற்பட்ட இழப்பு இன்னது என்று தானே முடிவு செய்து, அதனை தொழிலாளர் ஊதியத்திலிருந்து பிடித்தம் செய்து கொள்ளலாம் என்ற வரம்பற்ற அனுமதி வழங்கப்படுகிறது.

தொழிலாளர்கள் எளிதில் சங்கம் அமைத்து செயல்படமுடியாதபடி, கெடுபிடியான மாற்றங்கள் கொண்டு வரப்பட்டுள்ளன. ஏழு தொழிலாளர்கள் முடிவு செய்தால், ஒரு தொழிலகத்தில் சங்கம் அமைத்துப் பதிவு செய்யலாம் என்ற நிலை படிப்படியாக ஏற்கெனவே மாற்றப்பட்டுவிட்டது. இப்போதைய முன்மொழிவுப்படி, ஒரு தொழிலகத்தில் பணியாற்றும் தொழிலாளர்களில் 10 விழுக்காட்டினர் அல்லது 100 தொழிலாளர்கள் இதில் எது குறைவோ அந்த எண்ணிக்கையிலானவர்கள் விண்ணப்பித்தால்தான் சங்கம் பதிவு செய்ய முடியும். அதுமட்டுமல்ல, நூறு தொழிலாளர்களுக்கு மேல் ஒரு தொழிலகத்தில் இருந்தால் குறைந்தது 100 தொழிலாளர்களாவது சங்கம் அமைக்க ஒப்புதல் தர வேண்டும்.

இந்த நிபந்தனைக்கு உட்பட்டு சங்கம் அமைக்க முயன்றால், பதிவுக்குப் பொறுப்பேற்று விண்ணப்பிக்கும் தொழிலாளர்களோ, சங்கம் அமைக்க ஒப்புதல் தெரிவிக்கும் தொழிலாளர்களோ மிரட்டப்பட்டு, சங்கம் அமைக்கும் முயற்சியே நிலைகுலையும்! இந்தத் தடைகளைத் தாண்டி, சங்கம் அமைப்பது அரிதிலும் அரிதாகவே நிகழ முடியும்.

ஒழுங்கமைக்கப்படாத தொழில் பிரிவுகளில் (Unorganized Sector) தொழிற்சங்கங்களுக்கு அதிகம் போனால், இரண்டு பேர் மட்டுமே தொழிலாளர் அல்லாதவர் நிர்வாகியாக இருக்க முடியும். ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்களில் அதுவும் இல்லை! இந்த நிபந்தனை இனி புதிதாக அமைக்கப்படும் சங்கங்களுக்குத்தான் என்று சொல்லப்பட்டாலும், அடுத்தடுத்து நடப்பிலுள்ள சங்கங்களுக்கும் இந்த நிபந்தனை விதிக்கப்படும் ஆபத்து உள்ளது.

தொழிற்சாலை சட்டத்தில் வந்துள்ள கொடிய திருத்தங்களை கருத்தில் கொண்டால், மேற்சொன்ன தொழிற்சங்க சட்டத்திருத்தம் சங்கம் அற்றவர்களாக தொழிலாளர்களை மாற்றும் என்பது புரியும்.

மோடி அரசு ஏற்கெனவே தொழிற்சாலை சட்டத்தில் செய்த திருத்தத்தின் வழியாக, நாற்பது தொழிலாளர்களுக்குக் கீழ் உள்ள தொழிலகங்களுக்கு – தொழிற்சாலை சட்டம் பொருந்தாது என்று கூறிவிட்டது.

இயல்பாக 10 மணி நேரமும், தேவையை ஒட்டி 12 மணி நேரம் வரையிலும் பணியாற்றக் கட்டாயப்படுத்துவதற்கு ஏற்ற வகையில் இச்சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்பட்டுவிட்டன.

இதன்படி, 10 மணி நேரத்திற்கு மேல் பணியாற்றும் தொழிலாளர்கள் களைப்படைந்த நிலையில் வேறு எதையும் சிந்திக்க முடியாமல், வீட்டிற்கு செல்லும் மனநிலையிலேயே இருப்பார்கள். இவ்வாறான தொழிலாளர்கள் ஒருவருக்கொருவர் சந்தித்து சங்கம் அமைக்கும் முயற்சியில் ஈடுபடுவதே கடினமான செயலாகும்.

அதிலும், வெளியிலிருந்து முழு நேரச் செயல்பாட்டாளர் துணையின்றி அவ்வாறு அமைப்பதே இன்னும் கடினம்! அதற்குப் பிறகு, தொடர்ந்து சங்கமாக இயங்குவதும், உரிமைகளுக்கு இயக்கம் நடத்துவதும் இயலாத ஒன்று! நடைமுறையில் சங்கங்கள் அற்றவர்களாக (De Unionised) தொழிலாளர்கள் மாற்றப்படுவார்கள்.

இதனை உறுதி செய்வதுபோல், புதிய நிலையாணைச் சட்டத்தில் தொழிற்சங்கம் என்ற சொல்லே இடம்பெறாமல் பார்த்துக் கொள்ளப்பட்டுள்ளது. இச்சட்டம் பேச்சுவார்த்தை முகவர் (Negotiating Agent) என்று மட்டுமே குறிப்பிடுகிறது.

நடப்பிலுள்ள தொழிற்தகராறுச் சட்டப்படி, நூறு தொழிலாளர்களுக்கு மேலுள்ள தொழிலகங்கள், தொழிலாளர்களை ஆட்குறைப்பு செய்தாலோ (Retrenchment), தொழிலகத்தைத் தற்காலிகமாக நிறுத்தினாலோ (லே ஆப்), கதவடைப்பு செய்தாலோ (லாக் அவுட்) தொழிலாளர் துறையின் இசைவு பெற வேண்டும். இவ்வாறு முயலும் தொழிலக நிர்வாகங்கள், தொழிலாளர் அலுவலருக்கு அல்லது சமரச அதிகாரிக்கு இசைவு கேட்டு கடிதம் அனுப்ப வேண்டும். அதன் மீது தொழிலாளர் தரப்பும் பங்கேற்பும் சமரசப் பேச்சுவார்த்தை நடைபெற்று அதன் முடிவிற்கு ஏற்பவே தொழிலக நிர்வாகம் செயல்பட முடியும்.

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டத்தின்படி முன்னூறு தொழிலாளர் பணியாற்றும் தொழிலகங்கள் வரை, தொழிலாளர் துறையின் இசைவு பெறாமலேயே ஒருதலைபட்சமாக ஆட்குறைப்பு செய்யலாம். லே ஆப் விடலாம். கதவடைப்பு செய்யலாம். எந்தக் கேள்வி முறையும் கிடையாது!

இன்றைய தொழில் உற்பத்தி முறையில், வெளி உற்பத்தி (அவுட்சோர்சிங்), ஒப்பந்தம் (காண்டிராக்ட்) ஆகியவை மேலோங்கியுள்ள சூழலில் மிகப்பெரும்பாலான தொழிலகங்களில் முன்னூறு தொழிலாளர்களுக்குக் குறைவான தொழிலாளர்களே பணியாற்றுகின்றனர். இங்கெல்லாம் இனி, எந்த சட்டதிட்டமும் கிடையாது என்றாகிறது.

போனஸ் சட்டத்தில் செய்யப்பட்டுள்ள மாற்றம் குறைந்தபட்ச போனசைத் தாண்டி, யாரும் எதுவும் பெற முடியாது என்ற நிலைக்கு இட்டுச் செல்கிறது.
போனஸ் குறித்து, பேச்சுவார்த்தையோ விசாரணையோ நடப்பதென்றால் அதில் நிர்வாகம் முன்வைக்கும் தணிக்கை செய்யப்பட்ட வரவு – செலவுக் கணக்கு முக்கியமானது. அந்த வரவு செலவுக் கணக்கை, நடப்பிலுள்ள சட்டப்படி தொழிலாளர் தரப்பினரும் விசாரணை அதிகாரிகளும் திறனாய்வு செய்ய முடியும். கிடைக்கும் உபரி (Available Surplus) குறித்து தமது திறனாய்வின் அடிப்படையில் கூடுதல் நிதி இருப்பதை சுட்டிக்காட்டி, கூடுதல் போனசுக்காக வாதம் செய்ய முடியும்.

ஆனால், இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டப்படி நிர்வாகம் முன்வைக்கும் வரவு செலவுக் கணக்கை கேள்விகேட்க முடியாது. போனசை மறுப்பதற்கு இட்டுக்கட்டி, இழப்புக் கணக்குக் காட்டினாலோ இலாபத்தை மிகக்குறைவாகக் காட்டினாலோ யாரும் கேள்வி கேட்க முடியாது. கூடுதல் போனஸ் பெறுவதற்கு பேச முடியாது!

தொழிலாளர்களின் வருங்கால வைப்பு நிதி, பீடி – கட்டடத் தொழிலாளர்களுக்கான தீர்வை உள்ளிட்ட தொழிலாளர் தொடர்பான அனைத்து நிதிகளையும் நிர்வாகம் செய்வதற்கு இந்தியத் தலைமையமைச்சர் தலைமையில் நிர்வாகக் குழு ஒன்று ஏற்படுத்தப்படும் என புதிய சமூகப் பாதுகாப்புச் சட்டம் கூறுகிறது.

இந்த நிர்வாகக் குழு, இந்த நிதியத்தைக் கையாள வெவ்வேறு தனியார் முகவர்களை அமர்த்தலாம். அதேபோல், அந்நிதியத்திலிருந்து தொழிலாளர்கள் பெற வேண்டிய பணப்பயன்களை வழங்குவதற்கு தனியே நிறுவனங்களை அமர்த்தலாம்!

மோடி அரசின் “டிஜிட்டல் இந்தியா” திட்டத்தோடு இணைத்து, இச்சட்டத்தைப் புரிந்து கொண்டால், தொழிலாளர் நிதியம் அனைத்தும் தனியார்மயமாக்கப்படும் என்பது புரியும். தொழிலாளர்கள் வருங்கால வைப்புத் தொகை, பணிக்கொடை, பேறு கால உதவித் தொகை, பீடி – கட்டடத் தொழிலாளர் போன்ற ஒழுங்கமைக்கப்படாத தொழிலாளர் நல நிதியம் போன்ற எதைப் பெறுவதாக இருந்தாலும், தனியார் நிறுவனங்களை அணுகி அவர்களுக்கு சேவைக் கட்டணம் (Service charge) செலுத்தியபிறகே தங்களுக்குரிய பணத்தைப் பெற முடியும்!

இப்போதைய நிலையில், மேற்சொன்ன சட்டங்களின்படி தொழிலாளர்களுக்கு சேர வேண்டிய நிதியம் ஏறத்தாழ 37 இலட்சம் கோடியாகும். இப்பெரு நிதியத்தை இப்போது அரசு கையாண்டு வருகிறது. இத்தொகை முழுவதையும் தனியாரிடம் கொடுத்தால், அவர்கள் அதனை பங்குச் சந்தை சூதாட்டத்தில் விட்டு நிதியைப் பெருக்குவதைத் தவிர வேறு வழியில்லை! அதில், இழப்பு ஏற்பட்டால், அதற்கேற்ப தொழிலாளர்களின் பணப்பயன்களிலும் வெட்டு விழும்!

ஏற்கெனவே ஓய்வூதியத் திட்டம் தனியார்மயமாகி இருப்பதைக் கவனத்தில் கொண்டால், தொழிலாளர்களின் உழைப்பு ஊதியம் முழுவதும் பாதுகாப்பற்றதாக மாற்றப்படுவதை உணர முடியும்.

இப்போது முன்வைக்கப்பட்டுள்ள சட்டங்கள்கூட செயல்படுமா என்பதற்கு உறுதியில்லை! ஏனென்றால், தொழிலாளர் தொடர்பான ஆய்வாளர்கள் (Inspectors) என்ற பதவியே துணை செய்வோர் (Facilitator) என்ற பெயர் மாற்றம் பெறுகிறது. இதன்படி, இதுவரை தொழிற்சாலை ஆய்வாளராக அல்லது தொழிலாளர் ஆய்வாளராக அல்லது தொழில் பாதுகாப்ப ஆய்வாளராக இருந்தவர்கள் துணை செய்வோராக மாற்றப்படுகின்றனர். இவர்கள் அதிகாரமற்றவர்களாக மாற்றப்படுகிறார்கள்.

சட்டப்படி ஒரு நிறுவனம் செயல்படுகிறதா என்று ஆய்வு செய்ய முன்னறிவிப்பின்றி எந்த நிறுவனத்திற்கும் இவர்கள் செல்ல முடியாது! முன்னறிவிப்புக் கொடுத்துவிட்டு, சென்று ஆய்வு செய்தாலும் அவர்கள் காணும் விதிமீறல்கள் குறித்து எந்த சட்ட நடவடிக்கையும் மேற்கொள்ள முடியாது. தாங்கள் கண்டறியும் விதிமீறல்கள் குறித்து அதற்கென்று அமர்த்தப்பட்டுள்ள தீர்ப்பாயத்திற்கு அறிக்கை அனுப்பலாம் அவ்வளவே! சட்ட நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் தீர்ப்பாயத்திற்கு மட்டுமே உண்டு!

பெரும்பாலான சட்ட அமலாக்கத்தை தற்சான்றிதழ் (Self Certification) மூலம் அந்தந்தத் தொழிலக நிர்வாகமே செய்து கொள்ளலாம். இதற்கென்று இந்திய அரசின் கட்டுப்பாட்டில் இணையதளம் உருவாக்கப்படுகிறது. அதில், இவர்கள் அறிக்கையை பதிவேற்றம் செய்தால் போதும்!

ஏற்கெனவே, சில சட்ட மீறல்களுக்கு குற்றவியல் நடவடிக்கை மேற்கொள்ள முடியும் என்றிருந்தது. புதிய சட்டத்தின்படி நிறுவன முதலாளிகள் செய்யும் சட்டமீறல்கள் மீது குற்ற நடவடிக்கை ஏதும் மேற்கொள்ள முடியாது. குடிமையியல் (Civil) நடவடிக்கை மட்டுமே மேற்கொள்ள முடியும். சில ஆயிரம் தண்டத்தொகை செலுத்திவிட்டு, அவர்கள் விதிமீறல்களைத் தொடர முடியும்.

தொழிலுறவைப் பொறுத்து சட்டமே இல்லாத காலனிய ஆட்சிக்காலம் போல நிலைமை உருவாக்கப்படுகிறது. இக்கொடிய சட்டத்தை எதிர்த்து, தொழிலாளரிடையே போதிய விழிப்புணர்வும் இல்லை! சி.ஐ.டி.யூ., ஏ.ஐ.டி.யூ.சி., ஏ.ஐ.சி.சி.டி.யூ. போன்ற நடுவண் தொழிற்சங்கங்கள் தில்லியில் மூன்று நாள் விழிப்புப் போராட்டம் நடத்தினார்கள் என்றாலும், அந்த அமைப்புகளின் செயல்பாட்டாளர்களிடையே கூட இதுகுறித்து போதிய விழிப்புணர்வு இல்லை!

இது பெரும் கவலை அளிக்கும் சூழல் ஆகும். குறைந்தது, மாவட்ட அளவுகளிலாவது அடித்தள செயல்பாட்டாளர்களிடம் இதுகுறித்த விழிப்புணர்வுக் கலந்துரையாடல்கள் நடைபெறுவது மிக அவசரத் தேவையாகும். இம்முயற்சியில் தொழிற்சங்கங்கள் மட்டுமின்றி, ஒழுங்கமைக்கப்படாத தொழில்களின் தொழிலாளர்களிடையே செயல்படும் தன்னார்வ அமைப்புகளும், ஒருங்கிணைந்து ஈடுபட வேண்டிய தேவை உள்ளது.

மிகவும் ஆபத்தான இச்சட்ட வரைவுகள், சட்டமாக நிறைவேறாமல் தடுப்பதற்கு அனைத்துக் கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்களும் நாடாளுமன்றத்தில் ஒருங்கிணைந்து குரல் கொடுக்க வேண்டும்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, December 21, 2017

“31 கிணறுகளைக் காணோம்! வணிக ரகசியம் சொல்லும் ஓ.என்.ஜி.சி.” அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

“31 கிணறுகளைக் காணோம்!  வணிக ரகசியம் சொல்லும் ஓ.என்.ஜி.சி.” அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!


காவிரிப்படுகையில் எண்ணெய் - எரிவளி எடுத்து வரும் ஓ.என்.ஜி.சி. நிறுவனம், பல உண்மைகளை மறைத்து வருவதை, தகவல் அறியும் உரிமைச் சட்டம் வழியே தமிழ்த்தேசியப் பேரியக்கம் அம்பலப்படுத்தியுள்ளது குறித்து “சூனியர் விகடன்” Junior Vikatan (14.12.2017) ஏட்டில், செய்திக்கட்டுரை வெளியாகியுள்ளது. அதில் கூறியுள்ளதாவது :

“காவிரி டெல்டா மாவட்டங்களில் ஓ.என்.ஜி.சி. நிறுவனத்தின் எண்ணெய்க் கிணறுகளில், கைவிடப்பட்ட 31 கிணறுகள் குறித்து பதில் அளிக்க மறுத்துள்ள ஓ.என்.ஜி.சி., “அது வணிக ரகசியம்” என்று கூறியுள்ளது. மர்மமான இந்தப் பதில் தங்களுக்கு அச்சத்தை ஏற்படுத்துவதாக மக்கள் கூறுகின்றனர்.

டெல்டா மாவட்டங்களில், மத்திய அரசின் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக ஏராளமான கிணறுகளைத் தோண்டி கச்சா எண்ணெயும், இயற்கை எரிவாயுவும் எடுத்து வருகிறது. அதன் காரணமாக, தங்கள் பகுதியில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், நச்சுத்தன்மை வாய்ந்த ரசாயனக் கழிவுகளால் விவசாயம் பாழ்படுவதாகவும் மக்கள் குமுறுகிறார்கள். இந்தக் குழாய்களில் அடிக்கடி ஏற்படும் வெடிப்புகளால், கச்சா எண்ணெய் வெடிப்புகளால், கச்சா எண்ணெய் பாய்ந்து விளைநிலங்கள் மலடாகும் அவலமும் உள்ளது.

ஆனால், இந்தக் குற்றச்சாட்டுகளை ஓ.என்.ஜி.சி. அதிகாரிகள் மறுத்து வருகிறார்கள். “எங்கள் செயல்பாடுகளால் மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை. எந்த இரகசியமும் இல்லாமல். வெளிப்படைத்தன்மையோடு செயல்படுகிறோம்” என்று சொல்கிறார்கள். டெல்லியில் உள்ள ஓ.என்.ஜி.சி. தலைமை அலுவலகத்துக்குத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் சில கேள்விகள் அனுபபினார், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் அருணபாரதி. அவற்றுக்கு ஓ.என்.ஜி.சி. அளித்துள்ள பதில்கள், சர்ச்சையைக் கிளப்பக்கூடியதாக உள்ளன.

இதுகுறித்து அருணபாரதியிடம் பேசினோம். “தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி. நிறுவனம் எத்தனைக் கிணறுகளை அமைத்துள்ளது, அவற்றில் எத்தனை செயல்படுகின்றன, எத்தனைக் கிணறுகள் கைவிடப்பட்டுள்ளன என்ற விவரங்களைக் கேட்டிருந்தேன்.

அதற்கு “மொத்தக் கிணறுகள் 707. அவற்றில் 299 கிணறுகள் செயல்பாட்டில் உள்ளன. 377 கிணறுகள் கைவிடப்பட்டவை” என்று ஓ.என்.ஜி.சி. பதில் அளித்துள்ளது. 707 கிணறுகளில் 31 கிணறுகள் குறித்து எதுவும் சொல்லப்படவில்லை. அதன் மர்மம் என்னவென்று தெரியவில்லை.

“கச்சா எண்ணெயும் இயற்க எரிவாயுவும் எடுக்க, என்னென்ன வேதிப்பொருள்கள் பயன்படுத்தப்படுகின்றன” என்று கேட்டிருந்தேன். “பென்டோனைட் மற்றும் நன்னீர் பயன்படுத்தப்படுகின்றன” என்று பதில் தந்தார்கள். இதற்காக அதிகளவில் நிலத்தடி நீர் உறிஞ்சப்படுகிறது என்பது உறுதியாகிறது.

கதிராமங்கலம், நெடுவாசல் பகுதிகளில் ஓ.என்.ஜி.சி.யின் செயல்பாடுகளுக்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்தபோது, “எங்களது பணிகளுக்கு நிலத்தடி நீர் தேவையில்லை” என அதிகாரிகள் தெரிவித்தனர். ஓ.என்.ஜி.சி. கிணறுகள் செயல்படும் குத்தாலம், நரிமணம், கமலாபுரம் வெள்ளக்குடி உள்ளிட்ட பகுதிகளில் நிலத்தடி நீர் பாதிக்கப்பட்டதற்குத் தாங்கள் காரணமல்ல என்று சொல்லி வந்தார்கள். “அது உண்மையல்ல” என்பது அவர்களின் பதில் மூலமாகவே இப்போது உறுதியாகிவிட்டது.

“கைவிடப்பட்ட 377 கிணறுகள் எங்கெங்கு அமைந்துள்ளன” என்று கேட்டதற்கு, “அது வணிக இரகசியம்” என்று பதில் தந்துள்ளனர். தமிழ்நாட்டில் உள்ள ஓ.என்.ஜி.சி. கிணறுகள் வேலையிடப்பட்டு, பெயர் பலகையுடன் தான் அமைந்துள்ளன. பிறகு ஏன் ரகசியம் என அதை மூடி மறைக்கிறார்கள் என்று தெரியவில்லை. “தமிழ்நாட்டில் ஓ.என்.ஜி.சி. கிணறுகளின் கழிவுகள் எங்கு கொட்டப்படுகின்றன” என்று கேட்டிருந்தேன். அதற்கு, “கமலாபுரம், நரிமணம் ஆகிய இரண்டு இடங்களில் உள்ள கிணறுகளில் கொட்டப்படுகின்றன” என்று பதில் தந்துள்ளனர். அதைப் பார்த்து அதிர்ந்துபோனேன்.

299 கிணறுகளின் கழிவுகளும் இந்த இரண்டே இடங்களில் பூமிக்குள் செலுத்தப்பட்டால், மிகவும் மோசமான விளைவுகள் ஏற்படும். “கைவிடப்பட்ட கிணறுகள் அமைந்துள்ள நிலங்களைப் புதுப்பிக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன” என்ற கேள்விக்கு, “நிலத்தைப் புதுப்பித்து உரிமையாளர்களிடம் வழங்கிவிடுவோம்” எனப் பதில் தந்துள்ளனர்.

நரிமணத்தில் புதிய கிணறுகள் அமைப்பதற்கான கருத்துக்கேட்புக் கூட்டம் 2014இல் நாகை மாவட்டத்தில் நடந்தது. அப்போது, கைவிடப்பட்ட கிணறுகள் அமைந்துள்ள நிலங்களின் விவசாயிகள், தங்களது நிலத்தைப் புதுப்பித்துத் தருமாறு கோரினர். அதற்குப் பதில் அளித்த ஓ.என்.ஜி.சி. பொதுமேலாளர், “இந்த நிலங்களைப் புதுப்பிக்க, மத்திய அரசு வகுத்துள்ள நடைமுறைகளை மூன்று ஆண்டுகளாகக் கடைபிடித்து வருகிறோம். நாகை மாவட்டத்தில் எட்டு கிணறுகளின் நிலங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன, மீதமுள்ள நிலங்கள் விரைவில் புதுப்பிக்கப்படும்” எனத் தெரிவித்தார்.

30 ஆண்டுகளுக்கும் மேலாக இங்கு கச்சா எண்ணெயும் இயற்கை எரிவாயுவும் எடுத்துவரும் ஓ.என்.ஜி.சி., கைவிடப்பட்ட நிலங்களைப் புதுப்பிக்க 2011-ஆம் ஆண்டுதான் நெறிமுறைகளை உருவாக்கியுள்ளது. இதுவும்கூட முழுமை பெறவில்லை. காவிரிப்படுகையில் பல இடங்களில் கைவிடப்பட்ட கிணறுகள் இருக்கும் நிலங்கள் இன்றுவரை புதுப்பிக்கப்படாமல் உள்ளன. ஓ.என்.ஜி.சி.யின் செயல்பாடுகளால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது என்பது இவர்களது பதில்கள் மூலமாகவே உறுதியாகிறது” என்கிறார் அருணபாரதி.

இவ்வாறு அச்செய்திக்கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

Sunday, December 17, 2017

தமிழ்நாட்டில் தமிழில்லா தெலுங்குப் பள்ளிகள் நடத்த தெலுங்கு மாநாட்டில் கோரிக்கை : தமிழ்நாட்டில் மீண்டும் விசயநகர ஆட்சி நடத்தும் திட்டமா? தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

தமிழ்நாட்டில் தமிழில்லா தெலுங்குப் பள்ளிகள் நடத்த தெலுங்கு மாநாட்டில் கோரிக்கை : தமிழ்நாட்டில் மீண்டும் விசயநகர ஆட்சி நடத்தும் திட்டமா? தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
தெலங்கானா தலைநகர் ஐதராபாத்தில் நடந்து வரும் ஐந்து நாள், “உலகத் தெலுங்கு மாநாட்டில்” பேசியவர்கள், தமிழ்நாட்டில் தெலுங்கைப் பாட மொழியாகவும் பயிற்று மொழியாகவும் பள்ளிக் கல்வியில் வைக்க வேண்டுமென்று வலியுறுத்தி வருகிறார்கள் என்ற செய்தி ஆங்கில நாளேடுகளில் வந்துள்ளது.

உலகத் தெலுங்கு மாநாடு, 15.12.2017லிருந்து 19.12.2017 வரை ஐந்து நாள் நடக்கிறது. அம்மாநாட்டை 15.12.2017 அன்று இந்தியக் குடியரசுத் துணைத் தலைவர் வெங்கையா நாயுடு குத்துவிளக்கேற்றி தொடங்கி வைத்துள்ளார். இந்தியக் குடியரசுத் தலைவர் இராம்நாத் கோவிந்த் 19.12.2017 அன்று நிறைவு விழாவில் கலந்து கொள்கிறார். இம்மாநாட்டை, தெலங்கானா அரசு நடத்துகிறது.

இம்மாநாட்டில் பேசியவர்களில் பலர் தமிழ்நாட்டில், தமிழ்நாடு அரசு தெலுங்கை அழித்து தமிழை வளர்க்க நடவடிக்கை எடுத்துள்ளது, சட்டம் போட்டுள்ளது, அந்த சட்டத்தைக் கைவிட வேண்டும், தெலுங்கைப் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் தமிழ்நாட்டுப் பள்ளிகளில் வைக்க வேண்டும் என்றெல்லாம் பேசியுள்ளார்கள்.

ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் பல இலட்சம் தமிழர்கள் மரபு வழிப்பட்ட குடிமக்களாக நீண்டகாலமாக வாழ்ந்து வருகிறார்கள். மொழிவழி மாநிலப் பிரிவினையின்போது, ஏராளமான தமிழர் நகரங்களும் கிராமங்களும் சூழ்ச்சியாக ஆந்திரப்பிரதேசத்தில் இணைக்கப்பட்டன. இன்றைக்கும் அங்கு தமிழர்கள் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். ஆந்திரப்பிரதேசம் மற்றும் தெலங்கானாவில் சிறுபான்மை தேசிய இனமாக உள்ள தமிழர்கள் பயில தமிழைப் பாட மொழியாகவும், பயிற்று மொழியாகவும் வைத்திருக்கிறார்களா? இல்லை! தெலுங்கு மாநாட்டில் பேசியவர்கள் தங்களுடைய தாயகமான ஆந்திராவிலும், தெலங்கானாவிலும் தமிழர்கள் தமிழ் படிக்க வாய்ப்பளிக்கப்பட வேண்டும் என்று கோரிக்கை வைக்காமல், தமிழ்நாட்டில் தெலுங்கைப் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் தொடர வேண்டும் என்று ஆவேசத்தோடு பேசுவதன் பொருள் என்ன?

தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக மட்டும் இல்லை, தெலுங்கர்களின் தாயகமாகவும் இருக்கிறது என்று கருதுகிறார்கள். இது ஒரு சனநாயக மனப்பாங்கு என்று கருதினால், ஆந்திரா மற்றும் தெலங்கானாவை தெலுங்கர்களுக்கும், தமிழர்களுக்கும் உரிய மாநிலங்களாகக் கருத வேண்டும்.

மேற்படி தெலுங்கு மாநாட்டில் பேசியவர்கள் மட்டுமல்ல, ஆந்திர – தெலங்கானா அரசுகளும் தெலுங்கைப் பயிற்று மொழியாகவும், பாட மொழியாகவும் தமிழ்நாட்டில் வைக்க வேண்டுமென்று தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன என்பதையும் அம்மாநாட்டில் எடுத்துக் காட்டிப் பேசியுள்ளார்கள். தெலங்கானா அமைச்சர்களும் பேசியுள்ளார்கள்.

ஆந்திராவிலும் தெலங்கானாவிலும் உள்ள தமிழர்கள் தமிழ் வழியில் படிக்க வசதியளிக்குமாறு, அம்மாநில அரசுகளை தமிழ்நாடு அரசு வலியுறுத்தி இருக்கிறதா? நமக்குத் தெரிந்த வரை அவ்வாறான செய்தியில்லை!

தெலுங்கு வழியில் படித்திட போதிய மாணவர்கள் சேரவில்லை என்று போலிக் காரணம் கூறி, நூற்றுக்கணக்கான தெலுங்குப் பள்ளிகளை தமிழ்நாடு அரசு மூடிவிட்டதாக அம்மாநாட்டில் பேசியோர் குற்றம்சாட்டியுள்ளார்கள். தமிழ்நாட்டில் தமிழ்வழிப் பள்ளிக் கூடங்கள் ஆண்டுதோறும் நூற்றுக்கணக்கில் மூடப்பட்டு வருகின்றன. காரணம் போதிய மாணவர் எண்ணிக்கை இல்லை என்பதுதான்! பெற்றோர்கள் எதிர்கால வேலை வாய்ப்பு கருதி, தனியார் நடத்தும் ஆங்கில வழிப் பள்ளிக் கூடங்களுக்குத் தங்கள் பிள்ளைகளை அனுப்பிக் கொண்டிருக்கிறார்கள். அப்பள்ளிகள் மூடப்படுவதற்கு இதுதான் உண்மையான காரணம்!

ஆனால், தெலுங்கு மொழிப் பள்ளிக் கூடங்களை மூடி, தமிழ்வழிப் பள்ளிகளுக்குத் தெலுங்கு மாணவர்களை தமிழ்நாடு அரசு விரட்டுகிறது என்று பொய்க் குற்றச்சாட்டை தெலுங்கு மாநாட்டில் பேசுவது, அறிஞர்களுக்கு அழகா?

ஏற்கெனவே வெங்கையா நாயுடு தொடங்கி வைத்த தெலுங்கு மாநாடுகள் சென்னையில் நடந்துள்ளன. அவற்றில் தமிழ்நாட்டில் தெலுங்கைத் துணை ஆட்சி மொழியாக, கல்வி மொழியாகச் செயல்படுத்த வேண்டுமென்று தொடர்ந்து தீர்மானம் போட்டார்கள். பதவிக்காக, இனத்துரோகம் செய்யும் தமிழிசை சௌந்திரராசன், பொன். இராதாகிருட்டிணன் போன்றவர்கள் அம்மாநாடுகளில் பங்கேற்றார்கள். இப்பொழுது, தெலுங்கை வளர்ப்பதற்காக தெலங்கானாவில் மாநாடு போட்டவர்கள், தமிழ்நாட்டில் தமிழை அழிப்பதற்கான திட்டங்களைத் தீட்டுகிறார்கள்.

இந்தத் துணிச்சல் அவர்களுக்கு எப்படி வந்தது? ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் இல்லாத திராவிட அரசியல், தமிழ்நாட்டில் கோலோச்சுவதால் வந்த துணிச்சல் இது! திராவிடம் என்பதே ஒன்று தமிழின மறுப்பாக இருக்கும், அல்லது தமிழின மறைப்பாக இருக்கும். தெலுங்கு ஆண்டு பிறப்பிற்கு தமிழ்நாட்டில் விடுமுறை உண்டு! ஆந்திராவிலோ, தெலங்கானாவிலோ தமிழ் ஆண்டு பிறப்பிற்கு விடுமுறை கிடையாது!

தமிழ்நாடு முதலமைச்சர்கள் அண்ணா, எம்ஜிஆர் ஆகியோர் இறந்தபோது, ஆந்திரப்பிரதேசத்தில் விடுமுறை விடவில்லை! ஆனால், ஆந்திரப்பிரதேச முதல்வர் இராஜசேகர ரெட்டி இறந்தபோது, கலைஞர் கருணாநிதி தலைமையிலிருந்து தமிழ்நாடு அரசு விடுமுறை விட்டது. இவ்வாறெல்லாம் தமிழ்நாட்டு அரசியல் ஆந்திரப்பிரதேச தெலுங்கர்களுக்கு முன்னுரிமை கொடுத்து வந்ததால், இன்றைக்குத் தமிழ்நாட்டில் தமிழை ஒரு பாடமொழியாக (Language) பத்தாம் வகுப்பு வரை படிக்க வேண்டுமென்ற தமிழ்நாடு அரசின் சட்டத்தைத் தெலுங்கு அழிப்பு சட்டமாக தெலுங்கு மாநாட்டில் சித்தரிக்கிறார்கள்.

தமிழ்நாட்டின் எல்லையோரங்களில் உள்ள தெலுங்கு, கன்னட, மலையாள சிறுபான்மை மக்கள் தங்கள் தாய் மொழியைக் கற்க உறுதியளிக்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்தில்லை! அவர்கள் அதை ஒரு மொழிப்பாடமாகக் கற்கட்டும்! ஆனால், அவர்கள் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாக, தமிழ்நாட்டின் கல்விமொழியாக உள்ள தமிழை மொழிப்பாடமாகவும், பயிற்று மொழியாகவும் கற்க வேண்டும்.

நமது இந்த சனநாயக மொழித் திட்டத்தை ஆந்திர, கர்நாடக, கேரள அரசுகள் முறைப்படி செயல்படுத்துவதில்லை. அதைச் செயல்படுத்த வேண்டும் என்று தமிழ்நாடு ஆட்சியாளர்கள் கோருவதுமில்லை. தமிழ்நாட்டில் திராவிட ஆட்சியில், தமிழினம் அரசியல் பாதுகாப்பற்ற அனாதை இனமாகத்தான் இருக்கிறது!

நமது இந்த “அனாதை”த்தன்மையை அண்டை இனங்கள் பயன்படுத்தி, தமிழ் – தமிழர் என்ற அடையாளங்களை - மொழிவழித் தாயகத்தை சீர்குலைக்க தொடர்ந்து முயல்கின்றன. தமிழ்நாட்டில் மீண்டும் விசயநகர நாயக்க மன்னர்களின் ஆட்சியைக் கொண்டு வர, ஆந்திரப்பிரதேச – தெலங்கானா தெலுங்கர்கள் விடா முயற்சி செய்கிறார்கள் என்பதைத்தான் தெலுங்கு மாநாட்டில் பேசியோரின் தமிழ் எதிர்ப்புக் கருத்துகள் தெரிவிக்கின்றன.

எனவே, தமிழர்கள் மிகவும் சனநாயகத்தன்மையுள்ள, அதேவேளை தமிழ் – தமிழர் தற்காப்பு கவசமாக உள்ள தமிழ்த்தேசியத்தை உயர்த்திப்பிடித்து, தமிழ்நாட்டு ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டின் தமிழ் மொழியை முழு ஆட்சி மொழியாகவும், கல்வி மொழியாகவும் செயல்படுத்த வலியுறுத்த வேண்டும். அதேவேளை, தமிழர்கள் சிறுபான்மைத் தேசிய இனங்களாக காலங்காலமாக வாழ்ந்து வரும் ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தமிழை மொழிப் பாடமாகப் படிக்க முழு உறுதி பெறும் வகையில் தமிழ்நாடு அரசு செயல்படவும் வலியுறுத்த வேண்டும்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT