உடனடிச்செய்திகள்
Showing posts with label தமிழ்நாட்டு உரிமை. Show all posts
Showing posts with label தமிழ்நாட்டு உரிமை. Show all posts

Friday, February 1, 2019

பெருகிவரும் “வெளிமாநில” வாக்காளர்கள் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்தப்போகும் சீர்குலைவு! தோழர் கி. வெங்கட்ராமன்.

பெருகிவரும் “வெளிமாநில” வாக்காளர்கள் தமிழ்நாட்டு அரசியலில் ஏற்படுத்தப்போகும் சீர்குலைவு! தோழர் கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம். 
நாம் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம். தமிழ்நாட்டில் குவியும் வெளி மாநிலத்தவர்களில் கணிசமானவர்கள் இங்கேயே வாக்காளர்களாக ஆகி விடுகிறார்கள். இந்த “வெளியார் வாக்காளர்கள்” தமிழ்நாட்டு அரசியலில் மிகப்பெரிய குறுக்கீடாக அமைவார்கள் என்று நாம் தொடர்ந்து எச்சரித்து வருகிறோம்.

இப்போது வெளியாகியுள்ள புதிய வாக்காளர் பட்டியல் நாம் எச்சரித்ததைவிட மிக வேகமாக இந்த அபாயம் அதிகரித்து வருவதை எடுத்துக் காட்டுகிறது.

தமிழ்நாடு தலைமை தேர்தல் அதிகாரி சத்தியப்பிரத சாகு, நேற்று (31.01.2019) வெளியிட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் 2018க்குப் பிறகு புதிதாக சற்றொப்ப 8 இலட்சத்து 34 ஆயிரம் புதிய வாக்காளர்கள் இணைந்துள்ளனர் என்று குறிப்பிடுகிறார். 5 இலட்சத்து 63 ஆயிரம் இரட்டைப் பதிவுகளை நீக்கியதற்குப் பிறகும் இந்த உயர்வு!

நம்முன் உள்ள இந்த வாக்காளர் பட்டியலையும், தமிழ்நாட்டில் பிறமொழியாளர்கள் குறித்த 2018 சூன் மாதம் வெளியான “மொழிவழி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு - 2011” பட்டியலையும், 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் புள்ளி விவரங்களையும் இணைத்து ஒப்பிட்டுப் பார்த்தால், வெளி மாநிலத்தவர்களால் இந்த வாக்காளர் எண்ணிக்கை வீக்கம் ஏற்பட்டிருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

அதிக வாக்காளர்கள் உள்ள மாவட்டங்களாக சென்னைக்கு அடுத்துள்ள காஞ்சிபுரம், திருவள்ளூர், வேலூர் ஆகிய மாவட்டங்கள் வருகின்றன. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்புப் படி திருவள்ளுர் மாவட்ட மக்கள் தொகை 2001 கணக்கெடுப்பை ஒப்பிட 35.24 விழுக்காடும், காஞ்சிபுர மாவட்ட எண்ணிக்கை 38.9 விழுக்காடும், வேலூரின் எண்ணிக்கை 10.04 விழுக்காடும் உயர்ந்தது.

இன்னொருபுறம், இந்திப் பேசுவோர் எண்ணிக்கை 3 இலட்சத்து 93 ஆயிரம் என்றும், குசராத்தி மொழி பேசுவோர் எண்ணிக்கை 2 இலட்சத்து 75 ஆயிரம் என்றும் - மொத்தம் பிற மொழி பேசுவோர் 88 இலட்சம் பேர் என்றும் இன்னொரு புள்ளிவிவரம் கூறியது.

வெளி மாநிலத்தவர் தொகை உயர்வு திருவள்ளுர், காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களில் மீமிகை எண்ணிக்கையில் இருப்பதையும், இம்மாவட்டத் தொழில் நிறுவனங்களில் இந்திக்காரர்கள் அதிக எண்ணிக்கையில் இருப்பதைப் பார்க்கும்போதும், புதிய வாக்காளர் எண்ணிக்கையில் காஞ்சிபுரமும், திருவள்ளூரும் முதல் வரிசையில் வருவதும், அதுபோல் தொழிற்சாலைகள் அதிகமுள்ள கோவை, திருப்பூர் போன்ற பகுதிகளில் புதிய வாக்காளர் எண்ணிக்கை அதிகரித்திருப்பதும், வெளி மாநில வாக்காளர்கள் வீக்கத்தால் நிகழ்ந்திருக்கிறது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.

இவ்வாறான “வெளியார் வாக்காளர்” எண்ணிக்கை திருச்சி, மதுரை போன்ற மாவட்டங்களிலும் உயர்ந்திருக்கிறது.

அதிக வாக்காளர் உள்ளத் தொகுதியாக சோழிங்கநல்லுர் தொகுதி குறிப்பிடப்படுகிறது. சோழிங்கநல்லூர் பகுதியிலுள்ள தகவல் தொழில்நுட்ப நிறுவனங்களில் மிகை எண்ணிக்கையில் வெளியார் இருப்பதையும், இதனையும் இணைத்துப் பார்த்தாலும் இந்த “வெளியார் வாக்காளர்” ஆபத்தை உணர முடியும்.

இந்த வெளி மாநிலத்தவர்களுக்கு வாக்காளர் அட்டை - குடும்ப அட்டை வழங்கக் கூடாது என்று தலையால் அடித்துக் கொண்டு, நாம் தொடர்ந்து வலியுறுத்தினாலும் மாநில ஆட்சியாளர்கள் அதைக் கேட்பதாக இல்லை!

ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் 10,000-லிருந்து 25,000 வரையிலும் வெளி மாநிலத்து வாக்காளர்கள் அதிகரித்துவிட்டார்கள். இந்த “வெளியார் வாக்காளர்களின்” முதல் தேர்வாக பாரதிய சனதாவும், அடுத்தத் தேர்வாக காங்கிரசுக் கட்சியும்தான் இருக்கும்!

எவ்வளவுதான் தில்லிக்குக் காட்டிக் கொடுத்தாலும், அண்ணா தி.மு.க. - தி.மு.க. கட்சிகளைக்கூட இவர்கள் கருதிப் பார்க்க மாட்டார்கள்.

இந்த வெளி வாக்காளர் குறுக்கீடு நாடாளுமன்றத் தேர்தலில் மிகக்கூர்மையாக வெளிப்படும்! ஒட்டுமொத்தத் தமிழர்களின் மனநிலை தேர்தல் முடிவுகளில் வெளிப்படாமல், சீர்குலைக்கும் குறுக்கீடாக இந்த “வெளியார் வாக்காளர்கள்” அமைவார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் நீண்ட தீய விளைவுகளை அது ஏற்படுத்திவிடும்! எனவே, இப்போதாவது தமிழ்நாடு அரசு விழித்துக் கொள்ள வேண்டும்!

இறுதி வாக்காளர் பட்டியலை ஆய்ந்து, அதில் சேர்ந்துள்ள வெளி மாநில வாக்காளர்களை தமிழ்நாடு வாக்காளர் பட்டியலிலிருந்து நீக்கிவிட வேண்டும்! புதிய வாக்காளர் பட்டியலில் வெளி மாநிலத்தவர் யாரையும் சேர்க்கக் கூடாது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Thursday, April 12, 2018

காவல்துறையின் வன்மம்!

காவல்துறையின் வன்மம்!
 காவிரி உரிமை மறுக்கப்பட்டு ஒட்டுமொத்தத் தமிழ்நாடே வேதனையிலும், கொந்தளிப்பிலும் உள்ள சூழலில் சென்னையில் ஐ.பி.எல். கிரிக்கெட் போட்டிகளை நடத்துவதற்கு எதிர்ப்புத் தெரிவித்து நேற்று (11.04.2018) சென்னையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழகக் காவல்துறையினரின் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலில் பலர் காயமடைந்தனர்.

இயக்குநர் வெற்றிமாறன் காவல்துறையினரால் தாக்கப்படுவதைத் தடுக்கப் போன இடத்தில், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியமும், அவரது அமைப்பின் கரூர் மாவட்ட அமைப்பாளர் தோழர் இரமேசும் காவல்துறையினரிடம் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை கண்மூடித்தனமாக அடித்ததில், தோழர் களஞ்சியத்துக்கு கைவிரல் உடைந்துள்ளது. இதயப்பகுதி அருகிலும், நெஞ்சிலும் காவலர்களின் லட்டி அடித்து, இரத்தம் கட்டிக் கொண்டுள்ளது. தோழர் இரமேசுக்கு விலா எலும்பு உடைந்து, நுரையீரலில் காற்று புகுந்து மிகவும் ஆபத்தான சிக்கலை எதிர்கொண்டுள்ளார்.

தற்போது, சென்னை அரசுப் பொது மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் இருவரையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள், இன்று (12.04.2018) பிற்பகலில் நேரில் சென்று பார்த்து, அவர்களது உடல் நலம் குறித்து கேட்டறிந்தார்.

பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தோழர் இளவழகன் ஆகியோர் உடனிருந்தனர்.

மண்ணின் உரிமைக்காகப் போராடும் மண்ணின் மைந்தர்களுக்கு எதிராகத் தமிழ்நாடு காவல்துறையின் ஒடுக்குமுறைக்கு வன்மையான கண்டனங்கள்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: tamizhthesiyam.com 

Monday, March 5, 2018

“நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்!” சென்னையில் உலகத் தமிழ் அமைப்பு நடத்திய ஊடகச்சந்திப்பு!

“நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வேண்டும்!” சென்னையில் உலகத் தமிழ் அமைப்பு நடத்திய ஊடகச்சந்திப்பு!
நீட் - “தேசிய தகுதி-நுழைவுத் தேர்வு” (NEET) முறையில் இருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு வேண்டும் என, சென்னையில் இன்று (05.03.2018) காலை “உலகத் தமிழ் அமைப்பு” நடத்திய ஊடகவியலாளர் சந்திப்பில், தமிழ்நாட்டின் அரசியல் செயல்பாட்டாளர்கள் இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்தனர்.
“இந்திய அரசால் திணிக்கப்படும் "நீட்" தேர்வானது வருங்காலத் தமிழர் தலைமுறையினருக்கு மிகப்பெரும் அழிவுகளை விளைவிக்கும். எனவே, தமிழ்நாட்டுச் சட்டமன்றம் பிப்ரவரி, 01 2017- அன்று ஒருமனதாக நிறைவேற்றிய இரண்டு சட்ட முன்வரைவுகளுக்கும் இந்தியக் குடியரசுத் தலைவரின் ஒப்புதல் பெற இந்திய ஒன்றிய அரசுக்கு தமிழ்நாட்டு மக்களால் தேர்தெடுக்கப்பட்ட அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களும் போதிய அழுத்தம் கொடுக்க வேண்டும். மேற்குறிப்பிட்டச் சட்டமுன்வரைவுகளைச் சட்டமாக்க ஆவனச் செய்ய வேண்டும்” என இச்சந்திப்பில் வலியுறுத்தப்பட்டது.
சென்னை சேப்பாக்கம் செய்தியாளர் மன்றத்தில் நடைபெற்ற இச்செய்தியாளர் சந்திப்புக்கு, உலகத் தமிழ் அமைப்பு (வட அமெரிக்கா) தலைவர் முனைவர் வை.க. தேவ் அவர்கள் தலைமை தாங்கினார்.
சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. து. அரிபரந்தாமன், தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன், தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி. வேல்முருகன், சமூக சமத்துவத்திற்கான மருத்துவர் சங்கத் தலைவர் மருத்துவர் ஜி. ஆர். இரவீந்திரநாத், திராவிடர் கழக வழக்குரைஞர் அருள்மொழி, தமிழ்த் தேசிய விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் வே. பாரதி, தமிழ்த்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, தன்னாட்சித் தமிழகம் நெறியாளர் திரு. ஆழி செந்தில்நாதன், தமிழர் பன்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பாளர் திரு. இராச்குமார் பழனிசாமி, திராவிடர் விடுதலைக் கழக சென்னை மாவட்டச் செயலாளர் தோழர் உமாபதி, திராவிட இயக்கத் தமிழர் பேரவை வடக்கு மண்டல அமைப்பாளர் தோழர் மாறன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சிப் பொறுப்பாளர் தோழர் ஆளூர் சானவாசு, ம.தி.மு.க. செய்தித் தொடர்பாளர் திரு. அந்தரிதாஸ், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் வினோத் களிகை, தமிழ்நாடு மாணவர் முன்னணித் தோழர்கள், சட்டக் கல்லூரி மாணவர்கள் உள்ளிட்ட பலரும் பங்கேற்றனர். திரைப்பட இயக்குநர் திரு. வ. கவுதமன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
#TNagainstNEET 
#ApproveTNBillToExemptNEET 
#NoNEETforTamilNadu

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Monday, February 19, 2018

காவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையில் விடுதலை!

காவிரிப் போராட்ட வழக்கு : தருமபுரி தோழர்கள் பிணையில் விடுதலை!
தமிழினத்தின் காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள அநீதித் தீர்ப்பு, தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில், ஆங்காங்கு போராட்டங்கள் நடந்து வருகின்றன.


தீர்ப்பு வெளியான 16.02.2018 அன்று, தீர்ப்பைக் கண்டு கொதித்துப்போன தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள், தருமபுரி இந்திய அரசுத் தொலைத்தொடர்பு நிறுவனமான பி.எஸ்.என்.எல். அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

இந்நிலையில், காவிரித் தீர்ப்பு நகலை எரித்ததாகக் குற்றம்சாட்டி ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமை தாங்கிய தருமபுரி த.தே.பே. செயலாளர் தோழர் க. விசயன், தோழர் ஜெ. முருகேசன் ஆகியோரை, 16.02.2018 அன்று நள்ளிரவு வீடு தேடிச் சென்று காவல்துறையினர் கைது செய்தனர்.

நள்ளிரவு 11.30 மணியளவில் தோழர் விசயன் வீட்டுக் கதவு சாத்தப்பட்டிருந்த நிலையில், அவரைக் கைது செய்யச் சென்ற தருமபுரி பி-1- காவல் நிலைய ஆய்வாளர் திரு. இரத்தினக்குமார் வீட்டிற்குள் சுவரேறி குதித்தார். தம்மைக் காவல்துறையினர் கைது செய்ய வந்திருப்பது தெரிந்து தோழர் விசயன் வழக்கறிஞருக்குக் கைப்பேசி வழியே தகவல் சொல்வதைப் பார்த்தவுடன், இரத்தினக்குமார் கதவை வேகமாகத் தட்டிக் கூச்சலிட்டுள்ளார். அதன்பிறகே தோழர் விசயனையும், காரிமங்கலத்திலிருந்த தோழர் ஜெ. முருகேசனையும் காவல்துறையினர் கைது செய்தனர். கைது செய்யப்பட்ட தோழர்கள் இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 147, 188, 290, 293, 285 ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது.
பி-1- காவல் நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த தோழர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து விடியற்காலை 5.30 மணியளவில் நேரில் சென்று சந்தித்தார். பின்னர், தோழர்கள் இருவரையும் தருமபுரி மாவட்ட குற்றவியல் நடுவர் மன்ற நீதிபதி ஜீவா பாண்டியன் அவர்கள் முன் காவல்துறையினர் நேர் நிறுத்தியபோது, தோழர்கள் இருவரையும் சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டார். காவல்துறையினர் மீண்டும் மீண்டும் என நான்கு முறைக் கோரிய போதும் சிறைக்கு அனுப்ப மறுத்துவிட்டார்.
காவல்துறையினர் மிகவும் நெருக்கடி கொடுக்கவே, தோழர்கள் இருவருக்கும் நீதிபதி அவர்கள் அங்கேயே பிணை வழங்கியதோடு பிணை தாரர்களை திங்கள்கிழமை (19.02.2018) நேர் நிறுத்தும்வரை சிறையில் வைத்திருக்கும்படி ஆணையிட்டார். இதனையடுத்து, தோழர்கள் இருவரும் தருமபுரி கிளைச் சிறையில் அடைக்கப்பட்டனர்.
இன்று (19.02.2018), வழக்கறிஞர்கள் நீதிமன்றப் புறக்கணிப்பில் இருந்த நிலையில், தோழர் விசயனின் மனைவியும், தோழர் ஜெ. முருகேசனின் தம்பியும் நீதிபதியிடம் தாங்களே முறையிட்டு, பிணைதாரர்களையும் நேர் நிறுத்தி தோழர்களை பிணையில் விடுவதற்கான ஆணையைப் பெற்றனர். பா.ம.க. வழக்கறிஞர் வேல்முருகன் இதற்கான உதவிகளை எவ்வித எதிர்பார்ப்பும் இன்றி செய்தார்.
இதனையடுத்து, இன்று மாலை தருமபுரி கிளைச் சிறையிலிருந்து விடுதலையான தோழர்கள் விசயன் - ஜெ. முருகேசன் ஆகியோரை எழுச்சி முழக்கங்களுடன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் வரவேற்று, மலர் மாலை அணிவித்து வாழ்த்துத் தெரிவித்தனர். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, ஐயா தங்கவேலு, தோழர்கள் கோ. பிரகாசம், கனகராசு, வனமூர்த்தி, தங்கவேலு சங்கர் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.
ஒவ்வொரு முறையும் கர்நாடகத்தில் காவிரிக்கானப் போராட்டங்கள் நடக்கும் போது, தமிழ்நாட்டு முதல்வர் படத்தையும், உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் படத்தையும், தீர்ப்புகளையும், ஆணைகளையும், பொதுச் சொத்துகளையும், தமிழர்களின் நிறுவனங்களையும், தமிழர்களின் பேருந்துகளையும் கன்னட இனவெறியர்கள் எரித்துப்போராடுகின்றனர். அம்மாநிலக் காவல்துறையினர், அவர்கள் அருகில்கூட வருவதில்லை! ஆனால், தமிழ்நாட்டிலோ தமிழர் உரிமைக்காகப் போராடுவோரை நள்ளிரவில் வீடு தேடிச் சென்று தமிழகக் காவல்துறையினரே கைது செய்த செயல், தமிழின உணர்வாளர்களிடம் கடும் கண்டனத்தை எழுப்பியது. சமூக வலைத்தளங்களில் இக்கைது நடவடிக்கையைப் பலரும் கண்டித்து எழுதினர். அவர்கள் அனைவருக்கும் எமது நன்றி!
காவிரி உரிமை மீட்புக்கான நமது போராட்டம் இன்னும் வீரியமாகத் தொடரும்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, February 17, 2018

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! தமிழ்நாடு அரசுக்கு - தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வு தேவை! தமிழ்நாடு அரசுக்கு - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
உச்ச நீதிமன்றம் காவிரி வழக்கில் 16.02.2018 அன்று வழங்கிய தீர்ப்பு, தமிழ்நாட்டுக்குரிய தண்ணீரின் அளவை மேலும் குறைத்துள்ளதுடன் காவிரி உரிமையைப் பறிப்பதற்கான அடிப்படைக் கூறுகளையும் கொண்டிருக்கிறது.

உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையில், நீதிபதிகள் அமிதவராய், ஏ.எம். கான்வில்கர் ஆகிய மூன்று பேரையும் கொண்ட அமர்வு, தமிழ்நாடு – கர்நாடகம் ஆகிய இரு மாநிலங்களுக்கிடையே நடுநிலையைக் கடைபிடிக்கவில்லை!

கர்நாடகத்தின் நீர்த் தேவை அதிகமென்று பலவாறாக வர்ணிக்கும் தீர்ப்புரை, தமிழ்நாட்டின் நீர்த் தேவை பற்றி கண்டுகொள்ளவே இல்லை! எடுத்துக்காட்டாக, பெங்களூரு நகரத்தின் மூன்றில் ஒரு பகுதிதான் காவிரிப்படுகையில் வருகிறது, அந்தப் பகுதிக்கு மட்டும் காவிரி நீரை வழங்குவதே சரி என்று காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதி முடிவில் கூறியுள்ளது. ஆனால், உச்ச நீதிமன்றம் முழு பெங்களூருவுக்கும் காவிரித் தண்ணீர் தேவை என்றும், பெங்களூரு உலக நகரம் என்றும் கூறி, அதற்கான கூடுதல் தண்ணீரை தமிழ்நாட்டிற்குரிய 192 ஆ.மி.க.விலிருந்து 14.75 ஆ.மி.க.வை எடுத்து வழங்கியிருக்கிறது!

இந்த 14.75 ஆ.மி.க.வில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் கிடைக்கக் கூடிய 20 ஆ.மி.க. நிலத்தடி நீரிலிருந்து 10 ஆ.மி.க.வை எடுத்துக் கொடுக்கிறோம் என்று தீர்ப்புரை கூறுகிறது. அந்த 10 ஆ.மி.க.வையும் கர்நாடகம் தர வேண்டிய 192இல் கழித்துக் கொள்ள வேண்டுமென்றும் கூறுகிறது. அத்துடன், பெங்களூரு “உலக நகரம்” என்று கூறி, மேலும் 4.75 ஆ.மி.க. தண்ணீரை தமிழ்நாட்டிற்குக் கர்நாடகம் தர வேண்டிய நீரிலிருந்து கொடுக்கிறது.

பெங்களூரு நகரத்திற்கு கூடுதலாகத் தர வேண்டிய தண்ணீரை கர்நாடகத்துக்கு ஒதுக்கியுள்ள 270 ஆ.மி.க.விலிருந்து ஏன் எடுக்கவில்லை? பெங்களூருவைவிட தொழில் துறையிலும், மக்கள் தொகையிலும் பெரிய நகரமாகவும், பன்னாட்டுத் தொழிலகங்கள் நிறைந்த நகரமாகவும் சென்னை இருக்கிறது. தண்ணீர் பற்றாக்குறையில் தவிக்கும் சென்னை மாநகருக்குக் குடிநீரைக் கூடுதலாக ஒதுக்க உச்ச நீதிமன்றம் அக்கறைப்படாதது ஏன்?

அடுத்து, தமிழ்நாட்டில் காவிரிப்படுகையில் நிலத்தடி நீர் இருக்கிறது என்பதற்கு 1972ஆம் ஆண்டு UNDP என்ற ஐ.நா. நிறுவனம் கொடுத்த கணக்கையும், அதன் பின்னர் 1980இல் இந்திய அரசு நிறுவனம் கொடுத்த கணக்கையும் சான்றாகக் காட்டிய உச்ச நீதிமன்றம், கர்நாடகத்தில் காவிரிப்படுகையில் கிடைக்கும் நிலத்தடி நீர் பற்றி கணக்கு இல்லை என்று கைவிரிக்கிறது. இது உண்மைக்குப் புறம்பானது! பாகுபாடான அணுகுமுறை!

உண்மையில், தமிழ்நாட்டின் காவிரிப்படுகையில் 1972 – 80க்குப் பிறகு, இன்றைய நிலையில் நிலத்தடி நீர் பல பகுதிகளில் சாகுபடிக்கும் குடிநீருக்கும் பயன்படாத உப்பாகிவிட்டது. கர்நாடகம் காவிரியைத் தடுத்துவிட்ட நிலையில், தொடர்ந்து நிலத்தடி நீரை எடுத்து சாகுபடி செய்ததால் நிலத்தடி நீரின் ஆழம், பல நூறு அடிகளுக்குக் கீழே போய்க் கொண்டே இருக்கிறது.

உச்ச நீதிமன்றம் முன் வைக்கப்பட்ட வழக்கு என்பது, காவிரியில் ஓடி வரும் நீரைப் பகிர்ந்து கொள்வதற்கான (Cauvery Water Dispute) சிக்கல்தானே தவிர, காவிரிப்படுகை நிலத்தடி நீரைப் (Cauvery Ground Water Dispute) பகிர்ந்து கொள்வதற்கான சிக்கல் அல்ல!

இவ்வழக்கில், இந்திய அரசு தமிழ்நாட்டுக்கு எதிராக செய்த வஞ்சக வேலைகள் கொஞ்ச நஞ்சமல்ல! எடுத்துக்காட்டாக, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர்த் தகராறு சட்டப் பிரிவு 6A – தண்ணீர்த் தீர்ப்பாயம், தீர்ப்பளித்துவிட்டால், அதை செயல்படுத்த – அதற்குரிய தனிப் பொறியமைவை (SCHEME) நடுவண் அரசு உருவாக்க வேண்டும் என்பதில் ஆங்கிலத்தில் “May” என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. அச்சொல், “அமைக்கலாம்” என்ற பொருள் தருவதால், அதை மாற்றி “அமைக்க வேண்டும்” எனப் பொருள் தரும் ‘Shall’ போட வேண்டுமென்று உச்ச நீதிமன்ற அமர்வு கூறியபோது, நடுவண் அரசின் தலைமை வழக்கறிஞர் (Sollicitor General) இரஞ்சித்குமார், “அதைக் கட்டாயமாக்கி மாற்ற வேண்டாம், “மே” அப்படியே இருக்கட்டும், நடுவண் அரசு பார்த்துக் கொள்ளும்” என்று கூறினார். இது தீர்ப்புரையில் வந்துள்ளது.

இதிலிருந்து இந்திய அரசின் – பா.ச.க.வின் மோடி அரசின் தமிழ்நாட்டிற்கெதிரான வஞ்சக நெஞ்சம் தெரிய வருகிறது! ஆனால், உச்ச நீதிமன்ற அமர்வு, பொறியமைவு அமைப்பது கட்டாயம் என்ற வகையில் தனது தீர்ப்பில் ‘Shall’ போட்டுள்ளது.

அதே வேளை உச்ச நீதிமன்றம், இன்னொரு குழப்பத்தை வைத்துள்ளது! காவிரித் தீர்ப்பாயம் தனது இறுதித் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் காவிரி ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்று கூறியுள்ளது. அத்துடன், அதற்கான அதிகாரக் கட்டமைப்பு, தலைமை, உறுப்பினர்கள் மற்றும் அவர்களின் பணி போன்றவற்றை வரையறுத்துக் கூறியுள்ளது தீர்ப்பாயம்! எனவே, உச்ச நீதிமன்ற அமர்வு இந்த காவிரி மேலாண்மை வாரியம் மற்றும் ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைக்க வேண்டும் என்றுதான் குறிப்பாகக் கூறியிருக்க வேண்டும்!

அதைவிடுத்து, ஒரு பொறியமைவு (A SCHEME) அமைக்க வேண்டுமென்று, பொத்தாம் பொதுவில் உச்ச நீதிமன்றம் கூறியிருப்பது ஏன்? இதைப் பயன்படுத்தி, இந்திய அரசு பல் இல்லாத – அதாவது அதிகாரமில்லாத காவிரிப் பொறியமைவு ஒன்றை அமைக்கும் அபாயம் இருக்கிறது! இந்தக் குழப்பத்தை உச்ச நீதிமன்றம் உருவாக்கி இருப்பது ஏன்?

காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை, குறிப்பாக தமிழ்நாட்டிற்கோ - கர்நாடகத்திற்கோ சொந்தமில்லை, அது “இந்தியத்தேசிய சொத்து” என்று தீர்ப்புரையில் கூறியதன் மர்மம் என்ன? காவிரி ஆறு, கர்நாடகம், தமிழ்நாடு, கேரளம், புதுச்சேரி ஆகிய மாநிலங்களுக்கு உரிமையுள்ள ஆறு! இந்த உரிமை இருப்பதால்தான், தண்ணீர்ப் பகிர்வு அளவுகளில் முரண்பாடுகள் ஏற்பட்டு அதைத் தீர்த்து வைக்க நீதித்துறையை நான்கு மாநிலங்களும் நாடியுள்ளன. 
ஹெல்சிங்கி உடன்பாட்டின்படி, ஓடிவரும் ஆற்று நீரில் மரபுரிமை அடிப்படையிலான நீர் உரிமை, நாடுகளின் எல்லை கடந்து இருக்கிறது. அதன் பெயர் தண்ணீர் மரபுரிமை (Riparian Right). இந்த உரிமையை இந்த நான்கு மாநிலங்களிலிருந்தும் பறிக்கின்ற வகையில், காவிரி ஆறு யாருக்கும் சொந்தமில்லை – “தேசிய சொத்து” என்கிறது. இதன் பொருள், காவிரி – இந்திய அரசின் சொத்து என்பதாகும்! அதாவது, மாநில அதிகாரப்பட்டியில் உள்ள காவிரியை – இந்திய அரசு அதிகாரப்பட்டியலில் உச்ச நீதிமன்றம் சேர்ப்பதாகும்.

உச்ச நீதிமன்ற தீபக் மிஸ்ரா அமர்வுக்கு இந்த கருத்து இருக்கிறது என்பதற்கு அடையாளமாக தீர்ப்புரையில், திரும்பத் திரும்ப இந்திய அரசின் “தேசிய நீர்க் கொள்கை” என்ற பழைய சட்டத்தையும் புதிய வரைவையும் கூறுகிறது. “தேசிய நீர்க் கொள்கை” என்பது, ஆறுகளை மாநில அரசுகளிடமிருந்து பிடுங்கி இந்திய அரசின் கையில் வைத்துக் கொண்டு, அவற்றை பன்னாட்டு நிறுவனங்களுக்குக் குத்தகைக்கு விடுவது என்பதுதான்! உழவர்கள் பாசனத்திற்கோ, மக்கள் குடிநீருக்கோ அந்தத் தண்ணீரைப் பயன்படுத்த வேண்டுமெனில் “மீட்டர்” பொருத்தி, அந்த அளவுக்குக் கட்டணம் செலுத்தும் முறை என்பதுதான் “தேசிய நீர்க் கொள்கை”!

புதிய வரைவு நிலையில் 2012இலிருந்து இருக்கும் “தேசிய நீர்க் கொள்கை”யை உச்ச நீதிமன்ற அமர்வு, சட்டம்போல் எடுத்துக் கொண்டு அதை முதன்மைப்படுத்தி தீர்ப்புரையில் கூறுவதன் மர்மம் இதுதான்!

எந்த வகையில் பார்த்தாலும், காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அநீதியானது! மனச்சான்று அற்றது! கட்டப்பஞ்சாயத்துத் தன்மையுள்ளது! கடைசியில், பன்னாட்டு நிறுவனங்களுக்குக் காவிரியை ஒப்படைக்கும் தன்மையுள்ளது! எனவே, இந்த இழப்புகளிலிருந்து தமிழ்நாட்டின் காவிரி உரிமையை மீட்க காவிரி வழக்கை – ஏழு நீதிபதிகள் கொண்ட அரசமைப்பு அமர்வுக்கு கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் தமிழ்நாடு அரசை கேட்டுக் கொள்கிறது.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் மேல் முறையீடாக நாம் இந்தக் கருத்தை முன்வைக்கவில்லை! ஒன்றிய அரசு அதிகாரப்பட்டியல், மாநில அரசு அதிகாரப் பட்டியல், பொது அதிகாரப் பட்டியல் ஆகியவற்றுக்கு இடையிலான முரண்பாடாக உச்ச நீதிமன்றத் தீர்ப்பு வந்துவிட்டது. எனவே, இது இந்திய அரசமைப்புச் சட்டத்தின் சிக்கலாக உள்ளது. மேலும், தகுந்த சட்ட வல்லுநர்களைக் கொண்டு கலந்தாய்வு செய்து, காவிரி வழக்கை விசாரித்துத் தீர்ப்புரைக்க உச்ச நீதிமன்ற அரசமைப்பு அமர்வை (Constitutional Bench) உருவாக்கித் தருமாறு தமிழ்நாடு அரசு, இந்திய அரசு மற்றும் உச்ச நீதிமன்றம் ஆகியவற்றை உரியவாறு அணுக வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

அதேவேளை, அரசமைப்பு அமர்வு தீர்ப்பளிக்கும் வரை, உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பைச் செயல்படுத்தும் வகையில் உடனடியாக காவிரி மேலாண்மை வாரியம், ஒழுங்காற்றுக் குழு ஆகியவற்றை அமைத்திடுமாறு இந்திய அரசை தமிழ்நாடு அரசு வலியுறுத்த வேண்டும்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

அங்கும் இங்கும்!

அங்கும் இங்கும்!
காவிரி உரிமைப் போராட்டம் நடத்தியதற்காக தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது செய்யப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: tamizhthesiyam.com

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளதா? உண்மை என்ன?

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க ஆணையிடப்பட்டுள்ளதா? உண்மை என்ன?
காவிரி குறித்த உச்ச நீதிமன்றத் தீர்ப்பில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டுமென ஆணையிட்டிருப்பதாக சில விவசாய சங்கத் தலைவர்களும், சில ஊடகங்களும் பொய்யாக செய்தி வெளியிட்டு வருகின்றன.

சென்னையில் இன்று காலை நடந்த காவிரி உரிமைப் போராட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன், உண்மை என்ன என்பதை விளக்கினார்.

காவிரித் தீர்ப்பின் 457ஆவது பக்கத்திலுள்ள 403ஆவது பத்தியில், தெளிவாகக் காவிரி மேலாண்மை வாரியம் என்று குறிப்பிடாமல் - ஆறு வாரங்களுக்குள் ஒரு திட்டம் ( A SCHEME) நிறைவேற்ற வேண்டும் என்று கூறப்பட்டுள்ளதையும், அதையே, தமிழக முதல்வர் நேற்றிரவு வெளியிட்ட அறிக்கையின் பக்கம் 11இல் உறுதிப்படுத்தியுள்ளதையும் தோழர் பெ.மணியரசன் அம்பலப்படுத்தினார்.

தமிழ்நாட்டை வஞ்சித்து வரும் இந்திய அரசு, அதிகாரமில்லாத ஒரு மன்றத்தை ஏற்படுத்திவிட்டு, ஒரு போலித் திட்டத்தை முன்வைத்து தமிழ்நாட்டுக்கு நிரந்தரமாகத் காவிரித் தண்ணீர் கிடைக்காமலிருக்க முயற்சிக்கலாம் என்றும் அவர் ஐயம் வெளியிட்டார். தெரிந்தோ தெரியாமலோ தீர்ப்பை மொட்டையாக வரவேற்பது இனத்துரோகம் என்றார்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

காவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி பேரியக்கத்தோழர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது!

காவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி பேரியக்கத்  தோழர்கள் நள்ளிரவில் வீடு புகுந்து கைது!
காவிரி உரிமைக்காகப் போராடிய தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்க செயலாளர் தோழர் க. விசயன், தோழர் முருகேசன் ஆகியோரை, தமிழகக் காவல்துறையினர் நேற்று நள்ளிரவில் வீடுபுகுந்து கைது செய்து, சிறையில் அடைத்துள்ளனர்.

காவிரிச் சிக்கிலில் தமிழ்நாட்டின் உரிமையைப் பறிக்கும் வகையில் நேற்று (17.02.2018) உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ள நிலையில், தமிழ்நாட்டில் பெரும் கொந்தளிப்பு ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து, தீர்ப்பு வந்த சில மணி நேரங்களில் தருமபுரி இந்திய அரசுத் தொலைப்பேசித் தொடர்பகம் முன்பு, போராட்டத்தில் ஈடுபட்ட தருமபுரி தமிழ்த்தேசியப் பேரியக்க செயலாளர் தோழர் க. விசயன், தோழர் முருகேசன் ஆகியோர், உச்ச நீதிமன்ற நீதிபதிகள் படத்தை எரித்ததாகக் குற்றம் சாட்டி நேற்று நள்ளிரவில் தருமபுரி பி-1- காவல் நிலையக் காவலர்களால் வீடு புகுந்து கைது செய்யப்பட்டனர்.

பாரதிபுரத்திலுள்ள தோழர் விசயனின் வீட்டுக்கு நள்ளிரவில் வந்த காவல்துறையினர் அவரைக் கைது செய்ததுடன், மண்ணாடிப்பட்டிலுள்ள தோழர் முருகேசனையும் கைது செய்தனர். இருவர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 147, 188, 290, 293, 285 ஆகியவற்றின் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

தற்போது காவல் நிலையத்தில் சிறையிலுள்ள இவ்விருவரையும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ. மாரிமுத்து இன்று அதிகாலை நேரில் சந்தித்தார். இருவரையும் நீதிபதி முன் நேர்நிறுத்தி சேலம் சிறையில் அடைக்கப்பதற்கான ஏற்பாடுகளை காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

தமிழர் மீதான இனவெறியே காரணம்!

தமிழர் மீதான இனவெறியே காரணம்!
காவிரிச் சிக்கலில் தமிழினம் துரோகத்தை மட்டுமே சந்திப்பதற்குக் காரணம், தமிழர் மீதான இனவெறியே தவிர தேர்தல் கணக்கு அல்ல!

கர்நாடகத்தைவிடக் கூடுதலாக நாடாளுமன்ற உறுப்பினர்களைக் கொண்ட - மக்கள் தொகையைக் கொண்ட தமிழ்நாட்டைப் பகைத்துக் கொண்டாலும் பரவாயில்லை, ஆனால் அதைவிடக் குறைவாகவுள்ள கர்நாடகத்தைப் பகைத்துக் கொள்ளக் கூடாது என இந்திய அரசும், இந்தியக் கட்சிகளும், இந்திய ஊடகங்களும், இந்திய நீதிமன்றங்களும் கருதுவதற்கு அடிப்படைக் காரணம் - தமிழர் மீதான இனவெறியே ஆகும்!
இந்திய - கர்நாடக இனவெறியை மறைக்க வேண்டும் என்பதற்காக, தேர்தலே இதற்குக் காரணம் என்று மடைமாற்றும் பணியில் சிலர் ஈடுபட்டு வருகிறார்கள். தேர்தலே இல்லாத போது தமிழர் மீது தாக்குதல்களும், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து அடாவடித்தனத்திலும் இந்திய - கர்நாடக அரசுகள் ஈடுபட்டன; ஈடுபட்டு வருகின்றன.
இன்னொரு பக்கம், கார்ப்பரேட்டுகள்தான் காரணம் என்று மடைமாற்றம் செய்கின்றனர். சென்னையை சூழ்ந்துள்ள கார்ப்பரேட்டுகளைவிடவா பெங்களுருவில் கார்ப்பரேட்டுகள் இருக்கின்றனர்?
இக்காரணங்களையெல்லாம்விட முதன்மைக் காரணம் - தமிழர் மீதான இந்திய - கர்நாடக இனவெறிப் பகையே! அதுவே, காவிரிச் சிக்கலில் நாம் சந்திக்கும் துரோகங்களுக்கு அடிப்படைக் காரணம்!
இனியும் இதைப் புரிந்து கொள்ளாமல் தமிழர்கள் ஏமாறக் கூடாது!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

பறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்!

பறிபோன காவிரி உரிமை - கொந்தளிப்பில் தமிழினம்!


காவிரி உரிமையைப் பறிக்கும் வகையில் வந்துள்ள உச்ச நீதிமன்றத் தீர்ப்பைக் கண்டித்தும், தமிழ்நாட்டு உரிமையைப் பெற வலியுறுத்தியும், தமிழ்நாடெங்கும் தமிழர்கள் கொந்தளித்துப் போயுள்ளனர். தீர்ப்பு வந்த சில மணி நேரத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் முன்னெடுப்பில் தஞ்சை, குடந்தை, தருமபுரி, திருத்துறைப்பூண்டி, திருச்சி, ஓசூர் ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடைபெற்றன.

தஞ்சை

தஞ்சையில் தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் காலை 11.30 மணியளவில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் ஒருங்கிணைக்கப்பட்ட போராட்டத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்க மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை கண்டன முழக்கங்களை எழுப்ப, தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. ஐயனாவரம் சி. முருகேசன், இந்திய சனநாயகக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் சிமியோன் சேவியர்ராஜ், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான தோழர்களும், உழவர்களும் பங்கேற்றனர்.


தருமபுரி

தருமபுரி இந்திய அரசுத் தொலைப்பேசித் தொடர்பகம் முன்பு, நண்பகல் 12.30 மணியளவில் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. விசயன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.


குடந்தை

குடந்தை உச்சிப்பிள்ளையார் கோவில் அருகில், பகல் 1 மணியளவில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் நடைபெற்ற போராட்டத்தில் ஈடுபட்ட, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சி நிறுவனத் தலைவர் தோழர் குடந்தை அரசன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தீந்தமிழன், குடந்தை நகரச் செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன் உள்ளிட்ட தோழர்களைக் காவல்துறையினர் வலுவந்தமாக இழுத்துச் சென்று கைது செய்தனர்.


திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டியில், 16.02.2018 மாலை 4 மணியளவில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஒன்றியச் செயலாளர் தோழர் செந்தில்குமார் தலைமையில் அண்ணா சிலை அருகில், ஒன்று கூடிய தோழர்கள், அங்கிருந்து முழக்கங்கள் எழுப்பியபடி புதிய பேருந்து நிலையம் வரை ஊர்வலமாக வந்து காவிரி உரிமைப் பறிப்பைக் கண்டித்து ஆர்ப்பாட்டம் நடத்தினர். பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் சை. செயபால், கோட்டூர் செயலாளர் தோழர் தனபாலன், நகரச் செயலாளர் தோழர் இரமேசு, தமிழக உழவர் முன்னணி தோழர் கோவிந்தசாமி உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.


ஓசூர்

ஓசூர் – இராம் நகர் – அண்ணா சிலை முன்பு, மாலை 5 மணியளவில், தமிழ்த்தேசியப் பேரியக்க ஓசூர் செயலாளர் தோழர் சுப்பிரமணியன் தலைமையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டத்தில், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் தூருவாசன், பொதுக்குழு உறுப்பினர் தோழர் செம்பரிதி, தமிழக மாணவர் முன்னணி தோழர் ம.சு. தமிழ்மாறன் உள்ளிட்டோர் உரையாற்றினர். திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். காவிரித் தீர்ப்பில் தமிழ்நாட்டிற்கு அநீதியாக தண்ணீர் குறைக்கப்பட்டுள்ளதைக் கண்டிக்கும் வகையில், 177 ஆ.மி.க. என எழுதப்பட்ட தாள்களை தோழர்கள் எரிக்க முயன்றபோது, காவல்துறையினர் அதைத் தடுத்து நிறுத்தவே தள்ளுமுள்ளு ஆனது.


திருச்சி

திருச்சியில், மாலை 5.30 மணியளவில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மூ.த. கவித்துவன் தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில், தமிழக உழவர் முன்னணி திருச்சி அமைப்பாளர் திரு. நகர் ஆ. செல்லையன், பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் இனியன், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் வெள்ளமாள் உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்களும், உணர்வாளர்களும் பங்கேற்றனர்.


இதேபோல், இன்று (17.02.2018) காலை 10.30 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கத்தில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையிலும், மாலை 5 மணிக்கு, கடலூர் மாவட்டம் பெண்ணாடத்திலும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் போராட்டங்கள் நடக்கின்றன.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Friday, February 16, 2018

பறிபோகும் காவிரி உரிமை ! நாளை (17.02.2018) காலை சென்னையில் ஆர்ப்பாட்டம்!

பறிபோகும் காவிரி உரிமை ! நாளை (17.02.2018) காலை சென்னையில் ஆர்ப்பாட்டம்!
காவிரிச் சிக்கலில் தமிழ்நாட்டு உரிமை கேள்விக்கு உள்ளாகியுள்ள நிலையில், தமிழ்நாட்டு உரிமையைப் பாதுகாக்க வலியுறுத்தி, நாளை சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது.

சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டத்தில், நாளை (17.02.2018) காலை 10.30 மணிக்கு நடைபெறும் இந்த ஆர்ப்பாட்டத்தில், காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவருமான தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட தோழமை அமைப்பினர் பங்கேற்கின்றனர்.

தமிழின உணர்வாளர்களும், தமிழ் அமைப்பினரும் ஆர்ப்பாட்டத்தில் திரளாகப் பங்கேற்கும்படி அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com 

மீண்டும் பாரத மாதாவால் பலிவாங்கப்பட்ட தமிழ்நாட்டு உரிமை!

மீண்டும் பாரத மாதாவால் பலிவாங்கப்பட்ட தமிழ்நாட்டு உரிமை!
தொடர்ந்து தமிழ்நாட்டு உரிமைகளைப் பறித்து வரும் இந்திய அரசு, இந்தியத் தேசியக் கட்சிகள், இந்திய உச்ச நீதிமன்றம் ஆகியவை, இப்போது காவிரிச் சிக்கலில் மிகப்பெரும் துரோகத்தை தமிழ்நாட்டுக்கு இழைத்துள்ளது!


1934லிருந்து 1970வரை மேட்டூருக்கு வந்த ஆண்டுச் சராசரி காவிரி நீர் - 372.8 ஆ.மி.க.
1984ஆம் ஆண்டு மேட்டூர் அணை பொன் விழாவின்போது 50 ஆண்டுகளில் வந்த காவிரி நீர்.. - 363.4 ஆ.மி.க.
1990 இடைக்காலத் தீர்ப்பில் அளிக்கப்பட்ட நீர்.. - 205 ஆ.மி.க.
2007 இறுதித் தீர்ப்பில் அளிக்கப்பட்ட காவிரி நீர்.. - 192 ஆ.மி.க.
2018 மேல் முறையீட்டில் அளிக்கப்பட்ட காவிரி நீர்.. - 177 ஆ.மி.க.

இந்திய அரசு, இந்தியக் கட்சிகள், இந்திய நீதிமன்றங்கள், இந்திய ஊடகங்கள் என அனைத்தும் தமிழினத்திற்கு எதிராக இருக்கும்போது, தமிழர்கள் இன்னும் “இந்தியன்” என்று ஏமாந்து கொண்டிருக்கலாமா?


தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT