உடனடிச்செய்திகள்

Saturday, October 24, 2015

தமிழ்நாட்டில் சாதி - மதவெறியைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை அறிக்கை வெளியிட வேண்டும்! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை

கர்நாடகத்தில் ஒடுக்கப்பட்ட இளம் எழுத்தாளரை இந்துத்துவா வெறியர்கள் தாக்கியதற்கு கண்டனம்! தமிழ்நாட்டில் சாதி-மதவெறியைத் தூண்டுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழ்நாடு அரசு எச்சரிக்கை அறிக்கை வெளியிட வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
கர்நாடகம் காவன்கரே பகுதியில் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த உச்சங்கி பிரசாத் என்கின்ற 23 அகவையுள்ள இதழியல் படிக்கும் மாணவரை, இந்துத்துவா வெறி கும்பல் ஏமாற்றி அழைத்துச் சென்று கடுமையாகத் தாக்கியுள்ளது.

இந்த இளைஞர் ஒரு எழுத்தாளராகவும் உள்ளார். அவர் கடந்த ஆண்டு வெளியிட்ட நூலில் இந்து மதத்திலுள்ள தீண்டாமைக் கொடுமை, சாதி ஒடுக்குமுறை ஆகியவற்றைப் பற்றி எழுதி, இவற்றுக்கெல்லாம் மூலகாரணம் இந்துமதக் கொள்கைகள் என்று விமர்சித்திருந்தாராம். உச்சங்கிப் பிரசாத்தின் தாயார் உடல்நலமில்லாமல் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொய் சொல்லி, முன்பின் அறிமுகமில்லாத ஒருவர் அவரை மாணவர் விடுதியிலிருந்து அழைத்துச் சென்று, அங்கு நடுவழியில் கும்பலாக சேர்ந்து தாக்கியுள்ளனர். இனி எழுதுவதற்கு விரல்கள் இருக்கக் கூடாதென விரல்களைத் துண்டிக்கச் சென்றதாகவும், அவரது முகத்தில் குங்குமத்தை பூசி, அடித்துத் தாக்கப்பட்டதாகவும் அவர் மருத்துவமனையில் கூறினார்.

பா.ச.க. நடுவண் அரசில் ஆட்சிக்கு வந்தபின், இந்துத்வா வெறியர்கள் இசுலாமியர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களை தாக்குவது அதிகமாகியுள்ளது.

கடந்த சில மாதங்களுக்கு முன் அதே கர்நாடகத்தில், இந்து மதத்தை விமர்சித்தார் என்பதற்காக எம்.எம். கல்புர்கி என்ற முன்னாள் துணை வேந்தரை, இந்துத்துவா கும்பல் கொலை செய்தது. அரியானாவில் ஒடுக்கப்பட்ட பிரிவைச் சேர்ந்த குடும்பத்தினரை வீட்டோடு வைத்துக் கொளுத்தி, 2 குழந்தைகளைக் கொன்றுள்ளனர். அக்குழந்தைகளின் தாய் மருத்துவமனையில் உயிருக்குப் போராடிக் கொண்டுள்ளார். உ.பி.யில் மாட்டிறைச்சி சாப்பிட்டதாக வதந்தி கிளப்பி, இசுலாமியர் ஒருவரை அடித்துக் கொன்றுள்ளனர்.

ஒடுக்கப்பட்ட மக்கள், இந்துத்துவாவை விமர்சிக்கும் எழுத்தாளர்கள், இசுலாமிய மக்கள் ஆகியோர் மீது கொலைவெறித் தாக்குதலில் ஈடுபட்டுள்ள இந்துத்துவா கும்பலையும் இந்துத்துவா வெறி கொள்கையாளர்களையும் தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். அவர்கள் மீது சட்டப்படியான கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மதங்களையோ மற்றும் தத்துவங்களையோ விமர்சிக்கும் உரிமை ஒவ்வொருவருக்கும் அடிப்படை உரிமை. கருத்தை கருத்தால் எதிர்கொள்வதை விடுத்து, கொலைவெறிச் செயலில் ஈடுபடுவதென்பது ஆரியப் பார்ப்பனிய வழிப்பட்ட தொடர் செயல்களாகவே உள்ளன. இந்தக் கொலைவெறிச் செயல்களை பகிரங்கமாக இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி கண்டிக்க மறுக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பு இந்த கொலைவெறிச் செயல்களை மறைமுகமாக ஊக்கப்படுத்துகிறது. அதன் தலைவர் மோகன் பகவத், தமது விஜயதசமி உரையில் இக்கொலைச் செயல்களும் கொலைவெறித் தாக்குதல்களும் பொருட்படுத்தத் தேவையில்லாத சின்னஞ்சிறிய செயல்கள் என்று கூறியிருக்கிறார்.

இந்துத்துவா கொலைவெறிக் கும்பலின் செயல்கள் தமிழ்நாட்டிலும் தலைதூக்கத் தொடங்கியுள்ளன. தமிழ்நாட்டில் சாதி அமைப்புகளின் வழியாகத்தான் அவை செயல்படுகின்றன. திருச்செங்கோட்டில் எழுத்தாளர் பெருமாள் முருகனுக்கு உயிர் அச்சத்தை ஏற்படுத்தி, ஊரே விட்டே காலி செய்த வன்செயலில், சாதியும் இந்துத்துவாவும் இணைந்தே ஈடுபட்டன. பா.ச.க.வின் அமீத்ஷா தமிழ்நாட்டில் பிற்படுத்தப்பட்ட மற்றும் ஒடுக்கப்பட்ட சாதிகளின் நிகழ்வுகளில் பங்குகொண்டு அவற்றை இந்துத்துவா வளையத்துக்குள் கொண்டுவர திட்டமிட்டு செயல்படுகிறார்.

எனவே, இசுலாமியருக்கு எதிராக மட்டும்தான் இவர்கள் செயல்படுவார்கள் என்றில்லை. சாதியத்திற்கு எதிராக – ஆரியப் பார்ப்பனியத்திற்கு எதிராக செயல்படும் எல்லோரையும் தாக்கும் திட்டத்தில் இவர்கள் இருக்கிறார்கள். எனவே, தமிழ்நாட்டில் இந்துத்துவா மற்றும் சாதிவெறிச் செயல்களுக்கு வாய்ப்பளிக்காமல் தமிழ்நாடு அரசு முன்னெச்சரிக்கையோடு செயல்பட வேண்டிய தேவையுள்ளது.

பிரபலமான இந்துத்துவா அமைப்புகளின் பெயர்களில் இந்தக் கொலைவெறிக் கும்பல் பொதுவாக செயல்படுவதில்லை. புதிது புதிதாக தற்காலிகப் பெயர்களை சூட்டிக் கொண்டு, இந்துத்துவா அமைப்பினர் கொலைவெறித் தாக்குதல்களில் இறங்குகின்றனர். ஆனால் அவர்களைப் பாதுகாக்க, ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க அமைப்புகள் வெவ்வேறு உத்திகளுடன் முன்வருகின்றன.

எனவே, தமிழ்நாட்டில் மதவெறி மற்றும் சாதிவெறியைத் தூண்டி யார் பேசினாலும் எழுதினாலும் அவர்கள் மீது உரிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து, கைது செய்ய வேண்டும். இது குறித்த ஒரு விரிவான எச்சரிக்கை அறிக்கையை தமிழ்நாடு அரசு முதலில் வெளியிட வேண்டும். தமிழ்நாட்டில் சாதி – மத வெறிகளுக்கு இடம்கொடுக்காமல், அனைத்துப் பிரிவுத் தமிழ் மக்களும், தமிழர் அறம் காத்து, ஒருவருக்கொருவர் இணக்கத்துடன் செயல்பட வேண்டுமென்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

“மொழிப்போர் – 50 மாநாடு” மதுரையில் நடத்துகிறது தமிழ்த் தேசியப் பேரியக்கம்!


“மொழிப்போர் – 50 மாநாடு” மதுரையில் நடத்துகிறது தமிழ்த் தேசியப் பேரியக்கம்!

பேரியக்கப் பொதுக்குழுவில் தீர்மானம்!

தஞ்சை மாவட்டம் – பூதலூர் வட்டம், ஆச்சாம்பட்டி கிராமத்தில், தனியாருக்கு சொந்தமான இயற்கை வேளாண் தோட்டமான ”செம்மை வனத்தில்”, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழுக் கூட்டம், நேற்று (22.10.2015) காலை 11 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெற்றது.

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையில் நடந்த பொதுக்குழுக்கூட்டத்தில், பேரியக்கத்தின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்தும் பொதுக்குழு உறுப்பினர்கள் வந்து கலந்து கொண்டனர்.

சென்னையிலிருந்து, க. அருணபாரதி, பழ.நல். ஆறுமுகம், மதுரையைச் சேர்ந்த அ. ஆனந்தன், இரெ. இராசு, தஞ்சை மாவட்டச் செயலாளர் குழ. பால்ராசு, தஞ்சையைச் சேர்ந்த பழ. இராசேந்திரன், நா.வைகறை, ஒசூர் கோ. மாரிமுத்து, பெண்ணாடம் க. முருகன், குடந்தை க. விடுதலைச்சுடர், பூதலூர் ஒன்றியச் செயலாளர் ஆ. தேவதாசு, திருச்சி மூ.த. கவித்துவன், தூத்துக்குடி மு. தமிழ்மணி, திருநெல்வேலி க. பாண்டியன், திருத்துறைப்பூண்டி ப. சிவவடிவேலு, ஈரோடு வெ. இளங்கோவன், சிதம்பரம் ஆ. குபேரன், மதுரை மேரி, தஞ்சை ம. இலட்சுமி உள்ளிட்ட முப்பத்தைந்து பேர் கலந்து கொண்டனர்.
இப்பொதுக்குழுக் கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
1. 1965 மொழிப்போர் 50ஆம் ஆண்டு நிறைவு மாநாடு

இந்திய வல்லாதிக்கத்தின் இந்தித் திணிப்பைத் தடுத்திடவும் தமிழ் மொழி காத்திடவும் 1965 சனவரி 25-இல் மாணவர்கள் தொடங்கிய மொழிப்போர், மாபெரும் மக்கள் எழுச்சியாக – தமிழ்த் தேசியக் கிளர்ச்சியாக 50 நாள் நடந்தது. இராணுவம் வரவழைக்கப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழக மாணவர் இராசேந்திரன் தொடங்கி முந்நூறு பேர்க்கும் மேற்பட்டோர் அன்றையக் காங்கிரசு ஆட்சியாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டனர். பல்லாயிரகணக்கானோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
1964 சனவரி 25-இல் இந்தித் திணிப்பை எதிர்த்திடவும் தமிழ்மொழி காத்திடவும் நெருப்புக்குத் தீனியாகத் தன் உடம்பைத் தந்து, முதல் தழல் ஈகியானார் கீழப்பழூர் சின்னச்சாமி! சின்னச்சாமி வழியைப் பின்பற்றி 1965 மொழிப் போரில் பலர் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்தனர்.

தமிழ்நாடு அரசு செயல்பட முடியாத அளவிற்குப் போராட்டம் வலுப்பெற்ற பின், 1965 சனவரி 26க்குப் பின் இந்தி மட்டுமே இந்திய அரசு அலுவலகங்களில் அலுவல் மொழியாகிடும் என்றிருந்த நிலையை மாற்றி, அதன் பிறகும் ஆங்கிலம் தொடர்ந்து நீடிக்கும் என்று அன்றையத் தலைமை அமைச்சர் லால் பகதூர் சாஸ்திரி வானொலி உரையில் உறுதியளித்தார். அதன்பிறகே இந்தி எதிர்ப்புப் போராட்டம் தமிழ்நாட்டில் ஓய்வுக்கு வந்தது.

ஆனால் அடுத்த சில ஆண்டுகளில் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை இந்திய அரசு தீவிரப்படுத்தியது. இப்பொழுது இந்தி கல்வி மொழியாகவும், அலுவல்மொழியாகவும் தமிழ் நாட்டில் மிகப்பரவலாக அரங்கேற்றப்பட்டு வருகிறது. ஆங்கில ஆதிக்கமும் மேலோங்கி வருகிறது.

கல்வியிலும் மற்ற மற்ற துறைகளிலும் ஆங்கில, இந்தி ஆக்கிரமிப்புகள் அதிகரித்துத் தமிழை ஓரங்கட்டிவிட்டன. தமிழ்மொழி காத்திடச் செய்த ஈகங்கள், நடத்திய போராட்டங்கள் பயனற்று உள்ளன.

இந்நிலையில் 1965 மொழிப்போரின் 50ஆம் ஆண்டு நினைவுகள் – இந்தி, ஆங்கில ஆதிக்கத்தைப் புறந்தள்ளி தமிழ்நாட்டில் தமிழ்நாடு அரசு மற்றும் இந்திய அரசு அலுவலகங்களிலும், கல்வியிலும் தமிழே கல்விமொழியாகவும் அலுவல் மொழியாகவும் ஆகிட வேண்டுமென்ற போராட்டங்களுக்கு ஊக்கமளிக்கின்றன.

1938இல் நடந்த முதல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்திலும் 1965இல் நடந்த மாபெரும் மொழிப் போரிலும், உயிரீகம் செய்தவர்களுக்கு வீரவணக்கம் செலுத்தவும், கல்வி மொழியாக, ஆட்சி மொழியாக, நீதி மொழியாகத் தமிழை நிலைநாட்டிடத் திட்டங்கள் வகுக்கவும், 2016 சனவரி 24 – ஞாயிறு அன்று, மதுரையில் முழுநாள் மாநாடாக “மொழிப்போர் 50 மாநாடு” நடத்துவது என்று தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் பொதுக்குழு தீர்மானித்தது.

இந்தி - ஆங்கில ஆதிக்கம் வீழ்க!
எல்லாத்துறையிலும் தமிழே வெல்க!

2. காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட வலியுறுத்தி சென்னையில் முதல்வர் செயலலிதா தலைமையில் ஒரு இலட்சம் பேர் கலந்து கொள்ளும் அனைத்தியக்கப் பேரணி நடத்த வேண்டும்!

காவிரித் தீர்ப்பாயம் 2007 பிப்ரவரி 5ஆம் நாள் இறுதித் தீர்ப்பு வழங்கிய பின்னும், உச்ச நீதிமன்றக் கட்டளைப்படி அத்தீர்ப்பை இந்திய அரசின் அரசிதழில் 19.02.2013 அன்று வெளியிட்ட பின்னும், காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மறுக்கிறது இந்திய அரசு.

இந்திய அரசு நடுநிலை தவறி, கர்நாடகத்தின் சட்ட விரோதச் செயல்களுக்குத் துணை போகிறது. கர்நாடகம் விரும்பவில்லை என்பதற்காகவே, காவிரி மேலாண்மை வாரியம் அமைத்திட மறுக்கிறது. இந்திய அரசு.

கர்நாடக அணைகளில் போதிய தண்ணீர் இருந்தும், தமிழ்நாட்டிற்குரிய பங்கு நீரைத் திறந்துவிட மறுக்கிறது கர்நாடக அரசு! அதைத் திறந்துவிடுமாறு கர்நாடகத்திடம் வலியுறுத்த மறுக்கிறது இந்திய அரசு. நடப்புச் சாகுபடி காலத்தில் செப்டம்பர் 30ஆம் நாள் வரை, தமிழ்நாட்டிற்குத் திறந்துவிட வேண்டிய தண்ணீரில் 46 டி.எம்.சி. நீரைத் திருட்டுத்தனமாகத் தேக்கி வைத்துக் கொண்டுள்ளது கர்நாடகம். இதனால் 16 இலட்சம் ஏக்கரில் சம்பா சாகுபடி என்ன ஆகுமோ என்று பதறிப்போயுள்ளனர் உழவர்கள்.

நடுவண் அரசின் நயவஞ்சகச் செயலைக் கண்டித்தும், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வலியுறுத்தியும், அக்டோபர் வரை தமிழ்நாட்டிற்குத் திறந்தவிட்டிருக்க வேண்டிய பாக்கித் தண்ணீரைக் கர்நாடகம் திறந்துவிடக் கட்டளையிட வலியுறுத்தியும், முதலமைச்சர் செயலலிதா தலைமையில் ஒரு இலட்சம் உழவர்களும் தமிழ் மக்களும் கலந்து கொள்ளும் அனைத்துக்கட்சி மற்றும் அனைத்து உழவர் அமைப்புகளின் பேரணியைச் சென்னையில் நடத்த வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த் தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.

3. திருவைகுண்டம் மணல் கொள்ளையை அனுமதிக்கக் கூடாது

தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டத்தில் உள்ள தாமிரபரணி ஆற்றுத் தடுப்பணையில் தூர்வாரும் பணி செய்திட வலியுறுத்திப் பல்லாண்டுகளாகத் தமிழக உழவர் முன்னணியும், மற்ற உழவர் சங்கங்களும் போராடின. தமிழ்நாடு பசுமைத் தீர்ப்பாயத்தில் ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் போட்ட வழக்கில் தூர்வாரும் பணியை மேற்கொண்டிட பசுமைத் தீர்ப்பாயம் தீர்ப்பளித்தது.

தூர்வாரும் மணலைத் தனியார் மணற் கொள்ளைக்காரர்களிடம் தமிழ்நாடு அரசு ஏலம் விட்டுள்ளது. இதைப் பயன்படுத்திக் கொண்டு, அணையிலிருந்து எட்டு கிலோ மீட்டர் வரை மணல் அள்ளுகிறார்கள். இம்மணலை திருநெல்வேலி மாவட்டம் கங்கை கொண்டானில் கொண்டு போய் குவித்து இருப்பு வைக்கிறார்கள்.

எட்டு கிலோ மீட்டர் தோண்டி மணல் எடுப்பதால் மணல் படுகை நீக்கப்படுகிறது. இதனால், நிலத்தடி நீர் ஊறுவதும், ஆற்றில் கலக்கும் கழிவுநீர் வடிகட்டப்படுவதும் பாதிக்கப்பட்டுள்ளது.



எனவே, அணையிலிருந்து ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்குள் மட்டும் – எட்டடி ஆழம்வரை மட்டும் மணல் அள்ளித் தூர்வாரும் பணியைச் செய்திட ஆணையிட வேண்டும் என்று தமிழ்த் தேசியப் பேரியக்கம் தமிழ்நாட்டு அரசை வலியுறுத்துகிறது.

Friday, October 16, 2015

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அதே இடத்தில் வைத்திருக்க - தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்! - தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை அதே இடத்தில் வைத்திருக்க - தமிழ்நாடு அரசு மேல்முறையீடு செய்ய வேண்டும்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கோரிக்கை!
சென்னை கடற்கரையில் காமராசர் சாலை – இராதாகிருட்டிணன் சாலை சந்திக்கும் சதுக்கத்தில் நிறுவப்பட்டுள்ள நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலை, போக்குவரத்துக்கு இடையூறாக இருக்கிறதென்று கூறி தனிநபர் ஒருவர் தொடுத்த வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் அச்சிலையை அப்புறப்படுத்த ஆணையிட்டது.

தமிழ்நாடு அரசும் சிவாஜி சிலையை எடுத்து அடையாற்றில் புதிதாக கட்ட இருக்கும், சிவாஜி கணேசன் மணிமண்டபத்தில் அதை வைத்திட உள்ளதாக உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தது. மணி மண்டபம் கட்ட அவகாசம் தேவை என்றும், 2017க்குள் மணிமண்டபம் கட்டப்பட்டுவிடும் அதில் அப்பொழுது சிவாஜி சிலையை அகற்றி அங்கு வைத்துவிடலாம் என்றும் நேற்று (14.10.2015), சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் தலைமை வழக்குரைஞர் சோமையாஜி அவர்கள் மூலம் கூறியது.

ஆனால், அதை ஏற்றுக் கொள்ள மறுத்த உயர் நீதிமன்ற நீதிபதிகள் சதிஷ்குமார் அக்னிகோத்திரி மற்றும் கே.கே. சசிதரன் ஆகியோர் வரும் நவம்பர் 16ஆம் நாளுக்குள், சிவாஜி சிலையை அப்புறப்படுத்திவிட வேண்டுமென்று ஆணையிட்டிருக்கிறார்கள்.

உயர் நீதிமன்ற நீதிபதிகள் இவ்வாறு அவசரப்பட்டு உடனடியாக சிவாஜி கணேசன் சிலையை அப்புறப்படுத்த ஆணையிடும் போக்கில், நிதானமற்றத்தன்மை வெளிப்படுகிறது. தாங்கள் சொன்னதை உடனடியாக நிறைவேற்றவதுதான் கீழ்ப்படிதிலுள்ள அரசுக்கு அடையாளம் என்று நீதிபதிகள் கருதுவது போல் தோன்றுகிறது.

நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன் அவர்களை பிற்பகல் நீதிமன்றத்தில் நேர் நிறுத்துமாறு கட்டளையிட்டு, பிற்பகலில் அவர் வந்த போது பெரிய பெரிய கட்டிடங்களையெல்லாம் இரண்டு மணி நேரத்தில் அகற்றிவிடுகிறார்கள், உங்களால் இத்தனை மாதங்களில் சிவாஜி சிலையை அப்புறப்படுத்த முடியவில்லையா என நீதிபதிகள் கேட்டார்கள்.

இவ்வாறு, நீதிபதி அக்னி கோத்ரி கேட்கும்போது, நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கோடான கோடி தமிழ் மக்களின் நெஞ்சத்தில் குடியிருக்கும் தமிழர்களின் கலைச்சின்னம் என்பதையோ, தமிழர்களின் கடந்த கால கலைப்படைப்பின் அடையாளம் என்பதையோ அவர் சிறிதும் சட்டை செய்யவில்லை.

இரண்டு மணி நேரத்தில் ஒரு கட்டிடத்தை அப்புறப்படுத்திவிடலாம் என்று அவர் சொல்வதில், சிவாஜி கணேசன் சிலையை வெறும் கட்டுமானமாக மட்டுமே பார்க்கிறார் என்று புரிகிறது.

நேர்நின்ற நெடுஞ்சாலைத்துறை செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சிவாஜி கணேசன் சிலை உள்ள சாலை தனது நெடுஞ்சாலைத்துறை சேர்ந்தது அல்ல என்றும் தாம் அதில் நேரடியாக செயல்பட அதிகாரமில்லை என்றும் கூறிய பிறகு, அது பற்றி பதிலறிக்கை தாக்கல் செய்யுமாறு மேற்படி செயலாளருக்கு நீதிபதி அக்னி கோத்ரி கட்டளையிடுகிறார். இவ்வாறு கட்டளையிடுவது, எந்தவகை சட்டத்திற்கு உட்பட்டது? 

ஓர் அதிகாரியின், அதிகார வரம்பில்லாத ஒரு சிக்கலில், அவரை உயர் நீதிமன்றத்திற்கு அழைத்து நேர் நிற்கச் செய்து, அவர் தனக்கு அதிகாரமில்லை என்று கூறிய பிறகும், அறிக்கை தாக்கல் செய்யச் சொல்வது என்ன சட்டத்திற்குப் பொருந்தி வரும்? எந்த நீதிக்கு பொருந்தி வரும்?

ஏழரைக் கோடி தமிழ் மக்களின் இன்றியமையாத் துறைகளில் ஒன்றான நெடுஞ்சாலைத்துறைத் தலைமை அதிகாரியை, அவருக்குத் தொடர்பில்லாத பிரச்சினையில் நீதிமன்றம் வரவழைத்து அவரது நேரத்தை வீணடித்ததும் இல்லாமல், அவரிடம் அதிகார அத்துமீறலாக நீதிபதி அக்னி கோத்ரி பதிலறிக்கை கேட்டிருக்கிறார்.

தமிழ்நாடு அரசு, சிவாஜி கணேசன் சிலை சிக்கலில் உறுதியான நிலையெடுக்காமல், சிலையை அகற்ற ஒப்புக் கொண்டது சரியான நடவடிக்கையல்ல. இனியாவது, அடுத்த நவம்பர் 16-க்குள் சிலையை அகற்ற வேண்டுமென்ற நீதிபதிகளின் கட்டளையை எதிர்த்து, சென்னை உயர் நீதிமன்றத்தில் அல்லது உச்ச நீதிமன்றத்தில் மறு ஆய்வு மனுவோ அல்லது மேல் முறையீடோ செய்ய வேண்டும்.

நடிகர் திலகம் சிவாஜி கணேசன் சிலையை இப்பொழுதுள்ள இடத்திலிருந்து அப்புறப்படுத்துவது, தமிழினத்தின் பெருமைக்குரிய கலைச் சின்னத்தை இழிவுபடுத்துவதாக அமையும். உண்மையில், இப்பொழுதுள்ள இடத்தில் சிவாஜி கணேசன் சிலை இருப்பதால் போக்குவரத்து இடையூறு எதுவும் கிடையாது. 

ஒருவேளை, வாதத்திற்காக ஓரளவு இடையூறு இருக்கிறது என்று வைத்துக் கொண்டாலும், தங்கள் இனத்தின் மாபெரும் அடையாளச் சின்னத்தை தகுந்த இடத்தில் மக்கள் முன் வைத்திருப்பதற்காக அந்த இடையூறைப் பொறுத்துக் கொள்வதுதான் பொருத்தமாகும். அப்படித்தான், இந்தியா உட்பட உலகெங்கும் பழம்பெரும் கலைச் சின்னங்களை மக்களும் அரசுகளும் பாதுகாக்கின்றனர்.

எனவே, தமிழ்நாடு அரசு நடிகர் திலகம் சிவாஜி கணேசனுக்கு மணி மண்டபம் கட்டுவதை வரவேற்கிறோம். அதற்காக இப்பொழுதுள்ள இடத்திலிருந்து சிவாஜி கணேசன் சிலையை அப்புறப்படுத்த வேண்டியதில்லை என்றும் உச்ச நீதிமன்றம் வரை மேல் முறையீடு செய்து, சிவாஜி சிலை அதே இடத்தில் இருக்கும்படி தமிழ்நாடு அரசு முயல வேண்டும் என்றும் தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


Friday, October 9, 2015

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்குமொழியாக்கு! சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

உயர்நீதிமன்றத்தில் தமிழை வழக்குமொழியாக்கு! அநீதியாக சிறைவைக்கப்பட்ட வழக்கறிஞர்கள் - மாணவர்களை உடனடியாக விடுதலை செய்! 

சென்னையில் நடைபெற்ற கண்டன ஆர்ப்பாட்டம்!

சென்னை உயர் நீதிமன்றத்தில் தமிழை வழக்காடு மொழியாக அறிவிக்க வேண்டும், தமிழ்த் தெரிந்த நீதிபதிகளையே சென்னை உயர் நீதிமன்றத்தில் பணியமர்த்த வேண்டும், உரிமைப் போராட்டம் நடத்திய வழக்கறிஞர்கள் - மாணவர்களை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து, தமிழக மக்கள் முன்னணி ஒருங்கிணைப்பில், சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நேற்று (07.10.2015), மாலை சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நடைபெற்ற இவ் ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழக மக்கள் முன்னணித் தலைவர் தோழர் அரங்க. குணசேகரன் தலைமையேற்றார். உயர்நீதிமன்றத்தில் தமிழ் - போராட்டக்குழு வழக்கறிஞர் கோ. பாவேந்தன் நிகழ்வை ஒருங்கிணைத்தார். வழக்கறிஞர் அங்கயற்கண்ணி வரவேற்புரையாற்றினார்.

தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனீபா, தமிழக மக்கள் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் பொழிலன், மக்கள் வழக்கறிஞர் சங்கர சுப்பு, தமிழ்த்தேசம் ஆசிரியர் தோழர் தியாகு, த.பெ.தி.க. வடக்கு மண்டல அமைப்பாளர் தோழர் கரு. அண்ணாமலை, தி.வி.க. வழக்கறிஞர் அருண், மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சி பாவலர் தமிழேந்தி, தமிழ்நாடு முற்போக்கு வழக்கறிஞர் சங்கத் தலைவர் வழக்கறிஞர் ரசினிகாந்த், மொழியுரிமைக் கூட்டமைப்பு ஒருங்கிணைப்பாளர் தோழர் ஆழி. செந்தில்நாதன், இளந்தமிழகம் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினர் இதில் கலந்து கொண்டு, கண்டன உரையாற்றினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில், தலைவர் தோழர் பெ. மணியரசன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ. ஆனந்தன், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, த.தே.பே. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ. நல். ஆறுமுகம், சென்னை நடுவண் செயலாளர் தோழர் வி. கோவேந்தன், தென்சென்னை த.இ.மு. செயலாளர் தோழர் வெற்றித்தமிழன், தோழர்கள் பிரபாகரன், இரமேசு, கவியரசன், பாலசுப்பிரமணியன், வடிவேலன், செழியன், சக்திவேல், சத்தியா உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் இதில் பங்கேற்றனர்.




அயல்இனத்தாருக்கு வேலை - தமிழர்கள் புறக்கணிப்பு! ஐ.சி.எப். அநீதியை எதிர்த்து தொடர்கிறது போராட்டம்!



அயல்இனத்தாருக்கு வேலை - தமிழர்கள் புறக்கணிப்பு! ஐ.சி.எப். அநீதியை எதிர்த்து தொடர்கிறது போராட்டம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கம் நேரில் சென்று ஆதரவு

சென்னை அயனாவரம் இந்தியத் தொடர்வண்டி பெட்டித் தொழிற்சாலை(ICF – ஐ.சி.எப்.)யில், 1998ஆம் ஆண்டிலிருந்து வேலைப் பழகுநர் (Apprentice) முடித்த மாணவர்கள், சற்றொப்ப 5000 பேருக்கு இதுவரை பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டைத் தவிர மற்ற மண்டலங்களைச் சேர்ந்த வடநாட்டவர் உள்ளிட்ட அயல் இனத்தாருக்கு, சென்னை ஐ.சி.எப்.இல், புதிய பணிவாய்ப்புகள், வழங்கப்பட்டு வருகின்றன. தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு வருகின்றனர்.

பல்லாண்டுகளாக வேலை இல்லாததால், விரக்திக்குக் தள்ளப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களில் சற்றொப்ப 25க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துனர். இதனைக் கண்டித்தும், தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் பழகுநர் மாணவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தற்போது, கடந்த 01.10.2015 முதல், அம்மாணவர்கள் தொடர் உண்ணாப் போராட்டத்தை அறிவித்து, வெயில் – மழையைப் பொருட்படுத்தாமல் சாலையில் குடும்பத்துடன் அமர்ந்து உண்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இம்மாணவர்களின் ஞாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, அவர்களது உண்ணாப் போராட்டத்தை இந்தியத் தொடர்வண்டித்துறை முடித்து வைக்க வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு, 04.10.2015) அன்று தீர்மானம் நிறைவேற்றியது.

இதனைத் தொடர்ந்து, நேற்று(07.10.2015) ஏழாம் நாளாகப் போராட்டத்தை நடத்தி வரும் மாணவர்களுக்கு, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் நேரில் சென்று ஆதரவு வழங்கினர்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி ஆகியோர் போராட்ட மாணவர்களிடையே உரையாற்றினர்.

தமிழ்நாடு அரசு, போராட்டத்தை வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருக்காமல், ஐ.சி.எப். நிர்வாகத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி, மாணவர்களுக்கு வேலை கிடைக்கச் செய்ய வேண்டுமென தமிழக அரசை வலியுறுத்தி, பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.

தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் வி. கோவேந்தன், தமிழக இளைஞர் முன்னணி தென்சென்னை செயலாளர் தோழர் இளங்குமரன், தோழர்கள் இரமேசு, கவியரசன், உள்ளிட்ட திரளான த.தே.பே. தோழர்கள் உடன் வந்தனர்.

மண்ணின் மக்களுக்கே வேலை நடக்கும் ஐ.சி.எப். பயிற்சிப்பணி மாணவர்களின் போராட்டம் வெல்க!

Monday, October 5, 2015

இலங்கைக்குப் பாலம் அமைக்கும் திட்டம்: தமிழ்நாட்டை சிங்களமயப்படுத்த இந்திய அரசின் சதி!


இலங்கைக்குப் பாலம் அமைக்கும் திட்டம்: தமிழ்நாட்டை சிங்களமயப்படுத்த இந்திய அரசின் சதி!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுத் தீர்மானம்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழுக் கூட்டம் இன்று (04.10.2015) சென்னையில் நடைபெற்றது. பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கினார். பேரியக்கப் பொதுச்செயலாளர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். தலைமைச் செயற்குழு தோழர்கள் பழ. இராசேந்திரன், நா. வைகறை, குழ. பால்ராசு, அ. ஆனந்தன், கோ. மாரிமுத்து, க. விடுதலைச்சுடர், க. முருகன், இரெ. இராசு, க.அருணபாரதி ஆகியோர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

 இலங்கைக்குப் பாலம் அமைக்கும் திட்டம் – தமிழ்நாட்டை சிங்களமயப்படுத்த இந்திய அரசின் சதி!

கடந்த (17.06.2015) அன்று, திரிபுராத் தலைநகர் அகர்தலாவில் நிகழ்வு ஒன்றில் பேசிய இந்திய அரசின் சாலை மற்றும் போக்குவரத்துத் துறை அமைச்சர் நிதின் கட்கரி, இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையே போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்துவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது என்றும், இராமேசுவரத்தின் தனுஷ்கோடியிலிருந்து இலங்கையின் தலைமன்னார் வரையிலான 23 கிலோ மீட்டர் நீளத்திற்கு, கடலில் பாலம் அமைக்கும் திட்டத்தை செயல்படுத்தப் போவதாகவும் அறிவித்தார்.

மேலும், இத்திட்டத்திற்கு, ரூ. 22,000 கோடி செலவாகும் என ஆசிய வளர்ச்சி வங்கி கணக்கிட்டுள்ளதையும், ஆசிய வளர்ச்சி வங்கியின் துணைத் தலைவருடன் இது குறித்து ஏற்கெனவே பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு விட்டது என்றும் அவர் தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து, சாலை மட்டுமின்றி, தொடர்வண்டி பாதையும் அமைக்கவுள்ளதாகவும், இலங்கை அரசிடம் இது குறித்து பேச்சுவார்த்தை தொடங்க உள்ளதாகவும், நடுவண் அரசின் சாலை மற்றும் தொடர்வண்டிப் போக்குவரத்துத் துறை இணை அமைச்சர் பொன். இராதாகிருஷ்ணன், மாநிலங்களவையில் 03.08.2015 அன்று தெரிவித்தார். (காண்க: தி எகனாமிக் டைம்ஸ், 03.08.2015).

தெற்காசியப் பகுதியில், சீனாவின் ஆதிக்கத்தை மட்டுப்படுத்தவும், தெற்காசிய நாடுகளில் தமது மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தவும் இந்திய அரசு பல திட்டங்களை இந்நாடுகளில் செயல்படுத்தி வருகிறது. புதிய வணிக ஒப்பந்தங்களை இயற்றி வருகிறது. அதன் ஒரு பகுதியாகவே, இலங்கையை இந்திய செல்வாக்கின் கீழ் கொண்டு வர, இக் கடற் பாலம் திட்டத்தை இந்திய அரசு செயல்படுத்த முனைகிறது.

தமிழ்நாடு ஏற்கெனவே வெளியார் மயமாகி வருகின்ற நிலையில், இந்த புதிய பாலத்திட்டத்தின் வழியே, தமிழ்நாட்டிற்குள் சிங்களர்களைக் கொண்டு வந்து குவிக்கவும், ஏற்கெனவே சிங்களமயமாக்கப்பட்டு வரும் தமிழீழத் தாயகத்தில், இந்தியாவிலிருந்து பீகாரிகள், உ.பி.காரர்கள் உள்ளிட்ட அயல் இனத்தாரைக் குவிக்கவுமான சதி ஏற்பாடு இது.

தமிழீழ மக்கள் வளம்பெற வேண்டுமென இந்திய அரசு விரும்பினால், தமிழீழத்தில் குவிக்ப்பட்டுள்ள சிங்கள இராணுவத்தைத் திரும்பப் பெற்று, அங்குள்ள வேளாண் நிலங்களை தமிழீழ மக்களிடம் திரும்ப ஒப்படைத்தல், தமிழீழ மக்கள் தொழில் தொடங்குவதற்கான கட்டமைப்பு வசதி ஏற்படுத்தித் தருதல், சிங்களமயமாக்கத்தை உடனடியாக நிறுத்துதல் ஆகிய வேலைத்திட்டங்களை செயல்படுத்தினாலே போதும். ஆனால், அதையெல்லாம் செய்வதை விட்டு, “பாலம் அமைக்கிறோம்” எனச் சொல்வது, தமிழர் தாயகங்களை வெளியார் மயமாக்கி அழிக்கும் சதிச் செயலையே அம்பலப்படுத்துகிறது. எனவே, இத்திட்டத்தை முளையிலே கிள்ளி எறிய வேண்டும்.

தமிழ்த் தேசியப் பேரியக்கம், இப் புதிய பாலத் திட்டத்தை கண்டிப்பதுடன், இத்திட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென வலியுறுத்துகிறது.
-> வேலை வாய்ப்பு அளிக்காமல் புறக்கணிக்கப்பட்டு வரும், சென்னை ஐ.சி.எப். வேலைப் பழகுநர்களுக்கு (Apprentice) உடனடியாக வேலை அறிவித்து, அவர்களது தொடர் உண்ணாப்போராட்டத்தை இந்திய அரசு முடித்து வைக்க வேண்டும்!

சென்னை அயனாவரம் இந்தியத் தொடர்வண்டி பெட்டித் தொழிற்சாலை(ICF – ஐ.சி.எப்.)யில், 1998ஆம் ஆண்டிலிருந்து வேலைப் பழகுநர் (Apprentice) முடித்த மாணவர்கள், சற்றொப்ப 5000 பேருக்கு இதுவரை பணிவாய்ப்பு வழங்கப்படவில்லை. ஆனால், தமிழ்நாட்டைத் தவிர மற்ற மண்டலங்களைச் சேர்ந்த வடநாட்டவர் உள்ளிட்ட அயல் இனத்தாருக்கு, சென்னை ஐ.சி.எப்.இல், புதிய பணிவாய்ப்புகள், வழங்கப்பட்டு வருகின்றன.

பல்லாண்டுகளாக வேலை இல்லாததால், விரக்திக்குக் தள்ளப்பட்ட தமிழ்நாட்டு மாணவர்களில் சற்றொப்ப 20க்கும் மேற்பட்டவர்கள் தற்கொலை செய்து கொண்டு இறந்துனர். இதனைக் கண்டித்தும், தங்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கக் கோரியும் பழகுநர் மாணவர்கள் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகின்றனர்.

தற்போது, கடந்த 01.10.2015 முதல், அம்மாணவர்கள் தொடர் உண்ணாப் போராட்டத்தை அறிவித்து, வெயில் – மழையைப் பொருட்படுத்தாமல் சாலையில் குடும்பத்துடன் அமர்ந்து உண்ணாப் போராட்டம் நடத்தி வருகின்றனர்.



இம்மாணவர்களின் ஞாயமான கோரிக்கையை ஏற்று, அவர்களுக்கு வேலை வாய்ப்பு வழங்கி, அவர்களது உண்ணாப் போராட்டத்தை இந்தியத் தொடர்வண்டித்துறை முடித்து வைக்க வேண்டுமென தமிழ்த் தேசியப் பேரியக்கம் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT