உடனடிச்செய்திகள்
Showing posts with label கார்ட்டூன் பாலா. Show all posts
Showing posts with label கார்ட்டூன் பாலா. Show all posts

Tuesday, November 7, 2017

தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் மனு

தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது! இதில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பங்கேற்றார்.
 
கார்டூன் பாலா கைது - வழக்கறிஞர் செம்மணி கால் உடைப்பு - பேராசிரியர் செயராமன் நூல் மீது வழக்கு - தோழர் முகிலன் கைது என தமிழ்நாட்டில் தொடர்ந்து நடந்து வரும் சனநாயக மறுப்பு நிகழ்வுகளைக் குறிப்பிடு, தமிழ்நாடு காவல்துறை தலைவரிடம் இன்று காலை தமிழக வாழ்வுரிமைக் கூட்டமைப்பின் சார்பில் மனு அளிக்கப்பட்டது.
 
கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் திரு. தி. வேல்முருகன் நிகழ்வை ஒருங்கிணைத்தார்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் நேரில் சென்று மனுவின் விவரங்களை டி.ஜி.பி.யிடம் விளக்கினர்.




தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Monday, November 6, 2017

கார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. காவல்துறை மீண்டும் கைது செய்ய முயற்சி! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

கார்ட்டூன் பாலாவை நீதிமன்றம் பிணையில் விடுவித்தது. காவல்துறை மீண்டும் கைது செய்ய முயற்சி! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
கந்துவட்டிக்காரர்களின் கொடுமை தாங்காமல் நெல்லை மாவட்ட ஆட்சியரிடம் பலமுறை மனு கொடுத்தும், அவர் நடவடிக்கை எடுக்காத நிலையில் இசக்கிமுத்து தன் மனைவி, இரண்டு பிள்ளைகளோடு சேர்ந்து, அதே மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தீ வைத்துக் கொண்டு எரிந்து மாண்டு போனார்கள். இச்செய்தி மனிதநேயமுள்ள கார்ட்டூன் பாலா நெஞ்சில், நெருப்பாய்த் தகித்தது. ஆட்சியாளர்களைக் கண்டிக்கும் வகையில், கருத்துப்படம் வரைந்து முகநூலில் வெளியிட்டார்.
 
இதற்காக, சென்னையில் வீட்டிலிருந்த பாலாவை நேற்று (05.11.2017), அவர் உடன் வர ஒப்புதல் தெரிவித்தும் - இழிவுபடுத்தும் நோக்கத்தில் சீருடை அணியாத காவல்துறையினர் ஆளுக்கொரு பக்கம் பிடித்து இழுத்துச் சென்று காவல் வண்டியில் ஏற்றிப் கொண்டு நெல்லை சென்றனர். இச்செய்தி தீ பரவியதைப் போல், மனித நேயமுள்ள சனநாயக உரிமை உணர்வுள்ள அனைவர் நெஞ்சங்களிலும் தாக்கத்தை ஏற்படுத்தியது. சமூக வலைத்தளங்களில் பலரும் கண்டனங்களை வெளியிட்டு வருகின்றனர்.
 
இன்று (06.11.2017) காலை, சென்னையிலுள்ள கார்ட்டூன் பாலாவின் இல்லத்திற்கு நானும், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, தோழர்கள் தமிழ்ச்செல்வன், இளவழகன் உள்ளிட்டோர் நேரில் சென்று, பாலாவின் கைது நிகழ்வின்போது நடந்தவற்றை அவரது மனைவியிடம் கேட்டறிந்து அவருக்கு ஆறுதல் கூறினோம்.
 
ஒருவரைக் கைது செய்யும்போது காவல்துறையினர் எப்படியெல்லாம் நடந்து கொள்ள வேண்டும் என உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ள விதிமுறைகள் அப்பட்டமாக மீறப்பட்டுள்ளன. என்ன ஏது என்று கேட்டறிவதற்குள், கார்ட்டூன் பாலாவை – அவரது மனைவி – குழந்தைகள் முன்பு, சட்டையைப் பிடித்து தரதரவென இழுத்துச் சென்ற சீருடை அணியாத காவல் துறையினரின் செயல், மிகக் கொடியதும், கண்டனத்திற்குரியதும் ஆகும்!
 
இந்நிலையில், திருநெல்வேலியில் இன்று (06.11.2017) முற்பகல், பாலாவை நீதிமன்றத்தில் நேர் நிறுத்த அழைத்து வந்தபோது, திருநெல்வேலி மற்றும் மதுரையைச் சேர்ந்த வழக்கறிஞர்களும், மனித உரிமை ஆர்வலர்களும், தமிழ்த்தேசியர்களும் ஏராளமாகத் திரண்டிருந்தனர். நீதி மன்றத்தில் வழக்கறிஞர்கள் குழுமி, சட்டப்படி வாதம் செய்து பாலா மீது போட்ட இரண்டு பிரிவுகளும் பிணையில் விடக் கூடிய பிரிவுகள்தான் என்பதை எடுத்துக் காட்டி வாதாடினர். அதன்பிறகு, இருவர் தாக்கல் செய்த பிணை மனுவை ஏற்று பாலாவை நீதிபதி விடுவித்தார்.
 
திருநெல்வேலியில் பாலாவுக்கு ஆதரவாகவும், சட்டப்படி அவரை விடுவிக்கவும் திரண்டிருந்த வழக்கறிஞர்கள் அனைவருக்கும், உணர்வாளர்கள் அனைவருக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
அதேவேளை, காவல்துறையினர் சட்டத்தை மதிக்காமல், நீதித்துறையை மதிக்காமல், வன்மத்தோடு மீண்டும் ஏதோவொரு போலிக் குற்றச்சாட்டில் பாலாவைக் கைது செய்ய முயன்று கொண்டிருக்கிறார்கள் என்று செய்தி வந்திருக்கிறது. அவ்வாறு காவல்துறை முயல்வது, சட்ட விரோதம் மட்டுமல்ல, சனநாயக மாண்புகளுக்கும் எதிரானது! காவல்துறையின் இந்த முயற்சி கண்டனத்திற்குரியது!
 
சட்டத்தையும் நீதிமன்றத்தையும் மதித்து, அவர்கள் பாலாவை மீண்டும் கைது செய்யும் முயற்சியைக் கைவிட வேண்டும் என்றும், பாலாவின் வீட்டிலிருந்து எடுத்துச் சென்ற கணிப்பொறி, ஹார்டுடிஸ்க், கைப்பேசி ஆகியவற்றை எந்த வகைச் சேதமும் இல்லாமல் அவரிடம் திருப்பி ஒப்படைக்க வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Sunday, November 5, 2017

கார்ட்டூன் பாலாவை விடுதலை செய்க! வழக்கறிஞர் செம்மணி காலை ஒடித்த காவல்துறையினரை இடைநீக்கம் செய்க! தோழர் பெ. மணியரசன் கண்டனம்!

கார்ட்டூன் பாலாவை விடுதலை செய்க! வழக்கறிஞர் செம்மணி காலை ஒடித்த காவல்துறையினரை இடைநீக்கம் செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
கருத்துப்படச் சிந்தனையாளர் கார்ட்டூன் பாலா அவர்களை இன்று (05.11.2017) பகல் ஒன்றரை மணிக்கு சென்னையில் உள்ள அவரது இல்லத்தில் வைத்,து திருநெல்வேலி காவல்துறையின் நான்கு பேர் வலுவந்தமாக இழுத்துச் சென்று காவல் வண்டியில் ஏற்றியுள்ளார்கள். பாலாவின் கணிப்பொறி, ஹார்டிஸ்க் உள்ளிட்ட கருவிகளையும், அவர் கைப்பேசியையும், மேற்படி காவல்துறையினர் பறித்துக் கொண்டுள்ளார்கள்.

ஊடகத்துறையினர் இதுபற்றி காவல்துறையில் விசாரித்தபோது, அண்மையில் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்திற்குள், கந்துவட்டிக் கடன் தொல்லை தாங்காமல், கணவன், மனைவி, அவர்களது இரு குழந்தைகள் ஆக நான்கு பேரும் தீ வைத்து எரித்துக் கொண்டு, இறந்த செய்தி தொடர்பாகக் கருத்துப்படம் போட்டதற்காக, திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் தெரிவித்த புகாரில், கார்ட்டூன் பாலாவைக் கைது செய்து, திருநெல்வேலிக்கு அழைத்துச் செல்கிறார்கள் என்று கூறி இருக்கிறார்கள்.

திருநெல்வேலி மாவட்ட ஆட்சித்தலைவர் தாமாகச் செயல்பட்டிருக்க வாய்ப்பில்லை. தமிழ்நாடு அரசுதான் இந்நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும். கார்ட்டூன் பாலா மீது மிகக் கடுமையான - கருத்துரிமைப் பறிப்புத் தகவல் தொழில்நுட்பச் சட்டப் பிரிவு – 67, ஒருவருடைய நன்மதிப்பைக் கெடுப்பது தொடர்பான இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவு 501 ஆகியவற்றின்கீழ் வழக்குப் போட்டுள்ளார்கள்.

அரியவகைக் கருத்துப்படங்கள், ஆவணங்கள் ஆகியவற்றைச் சேமித்து வைத்துள்ள பாலாவின் ஹார்டிஸ்க் மற்றும் கணிப்பொறி ஆகியவற்றை எப்படிச் சின்னாபின்னப்படுத்தப் போகிறார்களோ தெரியவில்லை.

எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தலைமையில் இப்போதுள்ள தமிழ்நாடு அரசு, மேல் தோற்றத்திற்கு தாராளத் தன்மையுள்ள – தொள தொளப்பான – உறுதியற்ற அரசு போல் காட்சி அளிக்கிறது. அரசியல் கணிப்பில் அது உண்மையாகக் கூட இருக்கலாம். ஆனால் கருத்துரிமைப் பறிப்பில் மிகவும் கடுமையாக எதேச்சாதிகாரத்துடன் நடந்து கொள்கிறது.

நெல்லை மாவட்டக் காவல்துறை, சில நாட்களுக்கு முன் மிகக்கொடிய வன்முறை வெறியாட்டம் ஒன்றை நடத்தியுள்ளது. கூடங்குளம் வழக்குகளில் உதயகுமார் உள்ளிட்டோர்க்காக சட்டப்பணி ஆற்றி வரும் வழக்கறிஞர் செம்மணி என்ற இராசரத்தினத்தை வள்ளியூர் மாறன்குளத்திலுள்ள அவரது இல்லத்திலிருந்து, 03.11.2017 நள்ளிரவு கடத்திக் கொண்டு வந்த காவல்துறையினர் காவல் நிலையம் ஒன்றில் வைத்து, அடித்து நொறுக்கி சித்திரவதை செய்து அவர் காலை ஒடித்துள்ளார்கள்.

வழக்கறிஞர்கள் 04.11.2017 அன்று ஆர்ப்பாட்டம் நடத்தி, நீதிபதி ஆணை பெற்று பின்னர் செம்மணியை மீட்டு நெல்லை அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளார்கள். வழக்கறிஞர் செம்மணி மீது எந்தப் புகாரும் இல்லை; வழக்கும் இல்லை! தமிழ்நாடு அரசின் கருத்துரிமைப் பறிப்பு, எதேச்சாதிகார ஒடுக்குமுறை ஆகியவற்றால் ஊக்கம் பெற்ற காவல்துறையினர் நெல்லையில் காவல் நிலையத்தில் வைத்து ஒரு வழக்கறிஞரை அடித்து நொறுக்கி காலை முறித்துள்ளனர்.

தமிழ்நாடு அரசின் கருத்துரிமைப் பறிப்பு, ஒடுக்குமுறை ஆகியவற்றையும் காவல்துறையினரின் வன்முறைகளையும், தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

வழக்கறிஞர் செம்மணியைத் தாக்கியக் காவல்துறையினரை உடனடியாக இடைநீக்கம் செய்து அவர்கள் மீது வழக்குப் பதிய வேண்டும்.

கார்ட்டூன் பாலா மீது போடப்பட்ட பழிவாங்கும் வழக்கை உடனடியாகக் கைவிட்டு, அவரை விடுதலை செய்ய வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் தமிழ்நாடு முதல்வரைக் கேட்டுக் கொள்கிறேன்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: WWW.tamizhthesiyam.com
 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT