உடனடிச்செய்திகள்

Wednesday, May 31, 2017

"காவிரி - மீத்தேன் - இந்தி - கீழடி - மாட்டுக்கறி" திருச்சியில் இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட . . . பழ. நெடுமாறன், வேல்முருகன், பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் கைது!

"காவிரி - மீத்தேன் - இந்தி - கீழடி - மாட்டுக்கறி" திருச்சியில் இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகத்தை முற்றுகையிட்ட . . . பழ. நெடுமாறன், வேல்முருகன், பெ. மணியரசன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களைச் சேர்ந்த ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர்கள் கைது!
காவிரி இறுதித் தீர்ப்பை ஒழித்துக்கட்டும் ஒற்றைத் தீர்ப்பாய சட்ட முன்வடிவைத் திரும்பப் பெற வேண்டும், தமிழ்நாட்டில் ஐட்ரோ கார்பன், பெட்ரோல், எரிவாயு, மீத்தேன் உள்ளிட்டவற்றை எடுக்கும் திட்டங்களைக் கைவிட வேண்டும், தமிழர்களை இரண்டாந்தரக் குடிமக்களாக்கும் இந்தித் திணிப்பை நிறுத்த வேண்டும், மதுரை கீழடி அகழாய்வுப் பணிகளை முடக்கக் கூடாது, மாட்டிறைச்சிகு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை முன்வைத்து, திருச்சியில், இந்திய அரசு வருமானவரித்துறை அலுவலகத்தை தமிழ்த்தேசிய அமைப்புகள் இன்று (31.05.2017) முற்றுகையிட்டன.

தமிழர் தேசிய முன்னணித் தலைவர் ஐயா. பழ. நெடுமாறன் தலைமையில் நடைபெற்ற இப்போராட்டத்தில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத் தலைவர் வழக்கறிஞர் அய்யாக்கண்ணு, அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்புக் குழு திரு. பி.ஆர். பாண்டியன், தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அய்யனாபுரம் சி. முருகேசன், திருவாரூர் மாவட்ட அமைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், காரைக்குடி அமைப்பாளர் திரு. மாறன், தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், தமிழர் முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ம. செயப்பிரகாசு நாராயணன், காவிரி ஆறு பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் முகிலன், ஓவியர் வீரசந்தனம், புலவர் இரத்தினவேலவன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் தலைவர்களும், தோழர்களும் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமையில், பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு, தலைமைச் செயற்குழு தோழர்கள் நா. வைகறை, பழ. இராசேந்திரன், திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, தமிழ்க் கலை இலக்கியப் பேரவை நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா. இராசாரகுநாதன், மகளிர் ஆயம் நடுவண் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் ம. இலட்சுமி உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.


வருமானவரித்துறை அலுவலகம் நோக்கிச் சென்ற தோழர்களைத் தடுத்து நிறுத்திய காவல்துறையினர், அனைவரையும் கைது செய்து திருமண மண்டபங்களில் அடைத்து வைத்துள்ளனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

Monday, May 29, 2017

தோழர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: பா.ச.க.வின் ஆணைப்படி அடக்குமுறை! கி. வெங்கட்ராமன் கண்டனம்!

தோழர் திருமுருகன் காந்தி மீது குண்டர் சட்டம்: பா.ச.க.வின் ஆணைப்படி அடக்குமுறை! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
கடந்த 2017 மே 21 அன்று, சென்னை கடற்கரையில் தமிழீழ இனப்படுகொலையில் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு நினைவேந்தல் நிகழ்ச்சி நடத்த ஒன்றுகூடிய மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழர் விடியல் கட்சி ஒருங்கிணைப்பாளர் தோழர் டைசன், தோழர்கள் இளமாறன், அருண் உள்ளிட்ட 17 பேர் மீது, தமிழ்நாடு காவல்துறையினர் பொய் வழக்குப் புனைந்து புழல் சிறையில் அடைத்தனர்.

இந்நிலையில், இன்று (29.05.2017) அவர்களது நீதிமன்றக் காவல் முடிவடைந்த நிலையில், தோழர்கள் திருமுருகன், டைசன், இளமாறன், அருண் ஆகிய நால்வரை காவல்துறையினர் குண்டர் சட்ட வழக்கில் மீண்டும் தளைப்படுத்தியுள்ளனர். தமிழ்நாடு அரசின் இச்செயல், தமிழின உணர்வாளர்களையும், தமிழ் மக்களையும் கடும் அதிர்ச்சிக் குள்ளாக்கியிருக்கிறது.

திருமுருகன் உள்ளிட்ட தோழர்கள் இதுவரையில் எந்தவகை வன்முறைச் செயல்களிலும் ஈடுபட்டதாக வழக்கு இல்லை. எனினும், அவர்கள் மீது குண்டர் சட்டத்தை ஏவியிருப்பது, தமிழ்நாடு அரசின் அரசியல் உள்நோக்கத்தையே வெளிப்படுத்துகிறது.

கடந்த ஏழாண்டுகளாக சென்னை கடற்கரையில் அமைதியான முறையில் நடைபெற்று வந்த தமிழீழ மக்களுக்கான நினைவேந்தல் நிகழ்வை, வன்முறைச் செயல் போல் தமிழ்நாடு அரசு சித்தரிக்க முயல்வது, இந்திய அரசின் எடுபிடியாகத் தமிழ்நாடு அரசு மாறிவிட்டதையே காட்டுகிறது. பா.ச.க. தனது ஆரியத்துவ ஆதிக்கத்தை எதிர்ப்போரை தனது எடுபிடி எடப்பாடி அரசைப் பயன்படுத்தி ஒடுக்குவது கடும் கண்டனத்திற்குரியது!

தமிழ்நாடு அரசு, உடனடியாக தோழர் திருமுருகன் உள்ளிட்ட நால்வர் மீதான குண்டர் சட்ட வழக்கை இரத்து செய்து, அவர்களை சிறையிலிருந்து விடுதலை செய்ய வேண்டும்! அமைதியான முறையில் போராடுவோர் மீது அடக்குமுறைகளை ஏவும் எதேச்சாதிகாரப் போக்கை தமிழ்நாடு அரசு நிறுத்திக் கொள்ள வேண்டும்!

இன்னணம்,
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 


இணையம்: www.tamizhdesiyam.com 

Sunday, May 28, 2017

மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்!

மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழுக் கூட்டம், சென்னையில் இன்று (28.05.2017) காலை முதல் மாலை வரை நடைபெற்றது.
கூட்டத்திற்கு, பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் தலைமை தாங்கினார். பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்னிலை வகித்தார். பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் குழ. பால்ராசு, பழ. இராசேந்திரன், நா. வைகறை, கோ. மாரிமுத்து, இரெ. இராசு, க. விடுதலைச்சுடர், க. முருகன், க. அருணபாரதி உள்ளிட்டோர் பங்கேற்றனர். முன்னதாக, பாவலர் நா. காமராசன் அவர்களின் மறைவுக்கு இரங்கல் தெரிவிக்கப்பட்டது.

கூட்டத்தில் பின்வரும் தீர்மானங்கள் ஒருமனமாக நிறைவேற்றப்பட்டன :

தீர்மானம் : 1 
--------------------
மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்கும் சட்டத்தை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும்!

இந்தியத் துணைக் கண்டத்திலுள்ள பல்வேறு தேசிய இன மக்களின் – பல்வேறு சமய மக்களின் தனித்தன்மையை அழித்து, ஒற்றை மொழி – ஒற்றைப் பண்பாடு என ஆரியமயப்படுத்தும் திட்டத்தில் நடுவண் பா.ச.க. அரசு தொடர்ந்து ஈடுபட்டு வருகின்றது. அதன் ஒருபகுதியாக, இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் சார்பில், பசு, காளை, எருமை, ஒட்டகம் உள்ளிட்ட கால்நடைகளை இறைச்சிக்காக விற்பதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. பா.ச.க. அரசின் இத்தடையை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

ஒவ்வொருவரையும் பிறப்பு அடிப்படையில் மேல் கீழாக வைத்து, ஒவ்வொருவருக்கும் ஒரு நீதி வழங்கும் வர்ணாசிரம அதர்மக் கொள்கையைப் போல், விலங்குகளிடமும் பேதம் காட்டும் முயற்சியே பா.ச.க. அரசின் இத்தடைச் சட்டமாகும்.

வள்ளுவர் முதல் வள்ளலார் வரை தமிழர் ஆன்மீக மரபில் புலால் மறுப்போர்கூட இறைச்சி உண்ணத் தடை கோரியதில்லை. ஆனால், ஆரிய ஆன்மீகம் ஒற்றைத் தன்மையைத் திணிக்கும் ஆக்கிரமிப்புத்தன்மை கொண்டது.

மேலும், இந்தியத் துணைக் கண்டத்தில் பரந்து விரிந்து வாழும் கிராமப்புற வேளாண் மக்களின் பொருளியலை இத்தடைச்சட்டம் கடுமையாக பாதிக்கும். பெருமளவில் வேளாண் பணிகளுக்கு உழுகருவி இயந்திரங்கள் பயன்பட்டு வரும் நிலையில், காளைகள் இனப்பெருக்கத்திற்கும், இறைச்சிக்காகவும் மட்டுமே பயன்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்நிலையில், இறைச்சிக்காக காளைகளை விற்கக் கூடாது என இந்திய அரசு தடை விதிப்பதன் மூலம், இறைச்சிக்காகவும் விற்கமுடியாத சுமை பொருளாகக் காளைகளை மாற்றி, அதன் வழியே காளைக் கன்றுகளை ஈன்று தராத பன்னாட்டு நிறுவனப் இறக்குமதி பசுக்களையும், சினை ஊசிகளையும் ஊக்குவிக்கப்படுகின்றன. இன்னொருபுறத்தில், பன்னாட்டு நிறுவனங்கள் மாட்டிறைச்சியை இறக்குமதி செய்து, கொள்ளை இலாபம் ஈட்டவும் வழிதிறந்துவிடப் படுகின்றது.

இந்தப் பொருளியல் காரணங்கள் மட்டுமின்றி, கால்நடைகளை தங்கள் கடவுள்களுக்கு பலியிட்டு வணங்கும் தெய்வ வழிபாடுகளை நசுக்குதல், இசுலாமியர் மற்றும் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் சமயச் சடங்குகளில் தலையிடுதல் என ஆரியமயப்படுத்தும் வேலைத்திட்டத்தையும் முன்னெடுக்கிறது இந்திய அரசு!

எனவே, பல்வேறு சமய மக்களுக்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த வேளாண் மக்களுக்கும் எதிரான இச்சட்டத்தை இந்திய அரசு உடனடியாகத் திரும்பப் பெற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோருகிறது.

தீர்மானம் : 2
--------------------
சீரமைக்கப்படும் புதிய பாடத்திட்டத்தில், மொழிப் போர் வரலாற்றை தமிழ்நாடு அரசு சேர்க்க வேண்டும்!

பத்தாம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு தேர்வுகளில் மதிப்பெண் முறையை இரத்து செய்தும், பதினோறாம் வகுப்புக்கு பொதுத்தேர்வு முறை அறிவித்தும் தமிழ்நாடு அரசின் பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வரவேற்கிறது.

மதிப்பெண் தரவரிசை முறையை வைத்து கல்வி வணிகத்தில் ஈடுபட்டு வந்த தனியார் தன்னல ஆதிக்க ஆற்றல்களுக்கு, இம்மாற்றங்கள் அதிர்ச்சியளித்துள்ளன. இலட்சக்கணக்கான மாணவர்களுக்கு மன அழுத்தத்திலிருந்து விடுதலை அளித்துள்ள இந்த மாற்றங்களை இத்தன்னல ஆற்றல்கள் எதிர்ப்பதை சுட்டிக்காட்டி, அவற்றைக் கைவிட வேண்டுமென்று சில அரசியல் கட்சிகள் கோரிக்கைகள் முன்வைப்பதை தமிழ்த்தேசியப் பேரியக்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. தமிழ்நாடு அரசு, இம்மாற்றங்களை முழுமையாக நடைமுறைப்படுத்த வேண்டும்.

தற்போது சீரமைக்கப்பட்டு வரும் புதிய பாடத்திட்டத்தில், 1938லும் 1965லும் நடைபெற்ற தமிழர்களின் வீரஞ்செறிந்த தமிழ்மொழிக் காப்பு இந்தி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டங்களையும், மறைக்கப்பட்ட தமிழறிஞர்களின் வரலாறுகளையும் சேர்க்க வேண்டும். தமிழ்நாட்டில் புதிதாக எழுந்து வரும் சூழலியல் பாதுகாப்புணர்வை அங்கீகரிக்கும் வகையில், சூழலியல் பாதுகாப்பு – சட்ட விழிப்புணர்வு ஆகியவற்றையும் பாடத்திட்டங்களில் சேர்க்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரிக்கை முன்வைக்கிறது.

தீர்மானம் : 3
--------------------
நடிகர் இரசினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தமிழ் மக்கள் அவரைப் புறக்கணிக்க வேண்டும்!

திரைப்பட நடிகர் இரசினிகாந்த், தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட்டு முதல்வராகப் போவதாகவும், அதற்காக அரசியல் கட்சி தொடங்கப் போவதாகவும் தமது இரசிகர்களிடம் பூடகமாகத் தெரிவித்துள்ளார். அதற்கேற்ப பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களின் கருத்துகளைக் கேட்டும், ஊடகவியலாளர் கருத்துகளைக் கேட்டும் வருகிறார்.

நடிகர் இரசினிகாந்த் மராட்டியத்தில் பிறந்து, கன்னட இனப்பற்றுடன் கர்நாடகாவில் வளர்ந்தவர். நாற்பது ஆண்டுகளாகவே தமிழ்நாட்டில் வாழ்வதாக அவரே கூறுகிறார். எனினும், தன்னை “பச்சைத்தமிழன்” என்று வேடம் புனைந்து கொண்டு, தமிழ்நாட்டு அரசியலில் தடம் பதிக்க முயல்கிறார்.

மராட்டியத்திலோ, கர்நாடகாவிலோ மண்ணின் மைந்தனாக இல்லாத ஒருவர், அ்மாநிலத்தின் முதல்வர் பதவியைக் கைப்பற்ற, இவ்வளவு பகட்டாக திட்டங்கள் தீட்ட முடியாது. அம்மாநில மக்கள் தங்கள் சொந்தத் தாயகத்தைக் காக்க விழிப்புணர்வோடு செயலாற்றுகிறார்கள். 

அம்மாநிலங்களில், அதிகபட்சமாக சட்டப்பேரவை உறுப்பினராகவோ, அல்லது நகரசபை உறுப்பினராகவோ வேண்டுமெனில் அயல் இனத்தார் – சிறுபான்மை மொழியின மக்களின் பிரதிநிதியாக ஒன்றிரண்டு இடங்களைப் பெற்றாலே அது பெரும் சாதனையாகும்.

காவிரி உரிமை, கச்சத்தீவு உரிமை உள்ளிட்ட தமிழர் உரிமைகள் எதற்கும் குரல் கொடுக்காத இரசினிகாந்த், ஒட்டு மொத்தத் தமிழினத்தின் பிரிதியாகத் தன்னைக் காட்டிக் கொண்டு, தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபட நினைப்பது, தமிழினத்தில் போதிய அரசியல் விழிப்புணர்வு இல்லையோ என்ற கவலையை ஏற்படுத்துகிறது. எனவே, நடிகர் இரசினிகாந்த் அரசியலில் ஈடுபட்டால், அவரை அரசியல் விழிப்புணர்வு பெற்ற தமிழ் மக்கள் முற்றிலுமாகப் புறக்கணிக்க வேண்டுமென, தமிழ்த்தேசியப் பேரியக்கம் கேட்டுக் கொள்கிறது.

இன்னணம்,
பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

இடம் : சென்னை -78.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Saturday, May 27, 2017

“வர்ணாசிரம அதர்மத்தின் நீட்சிதான் மோடி அரசின் மாட்டுக்கறித் தடைச் சட்டம்!” பெ. மணியரசன் கண்டனம்!

“வர்ணாசிரம அதர்மத்தின் நீட்சிதான் மோடி அரசின் மாட்டுக்கறித் தடைச் சட்டம்!” தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கண்டனம்!
பாரதிய சனதாக் கட்சியின் நடுவண் அரசு பசு, காளை, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை உணவுக்குப் பயன்படுத்தக் கூடாது என்றும், அவற்றை உணவுக்காக சந்தையில் விற்கக் கூடாது என்றும் தடை விதித்து ஆணையிட்டுள்ள செயல், அக்கட்சியின் ஆதிக்க சக்திகள் மனிதர்களிடம் கடைபிடித்த வர்ணாசிரம அதர்மத்தை விலங்குகளிடமும் கடைபிடிக்கின்றன என்பதைக் காட்டுகிறது.

விலங்குகள் கொடுமைத் தடை (கால்நடைச் சந்தை ஒழுங்குமுறை) சட்டம் – 2017 என்ற புதிய சட்டத்தின்படி, பசு, காளை, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை உணவுக்காக சந்தையில் விற்பதும் வாங்குவதும் தடை செய்யப்படுகிறது. ஆனால், ஆடு, கோழி போன்றவற்றை உணவுக்காக விற்பதும், வாங்குவதும் தடை செய்யப்படவில்லை.

ஆர்.எஸ்.எஸ். மற்றும் பா.ச.க. அமைப்புகளுக்கு ஆன்மிக ஒழுக்கமில்லை என்று தொடர்ந்து நாம் சொல்லி வருகிறோம்.

தமிழர் ஆன்மிகத்தில் விலங்குகளிடையே பாகுபாடு காட்டாமல், புலால் உண்ணாமை என்ற கோட்பாடு வலியுறுத்தப்பட்டுள்ளது. அதன்படி, எந்த உயிரையும் கொன்று உண்ணக் கூடாது என்று பேராசான் வள்ளுவர் தொடங்கி வள்ளலார் வரை வலியுறுத்தினார்கள். உயிரினங்களிடையே பாகுபாடு காட்டாமல், அனைத்து வகை புலாலையும் மறுக்கும் கொள்கையுடைய தமிழ் மக்கள் இன்றும் பரவலாக வாழ்கிறார்கள். ஆனால், மாட்டுக்கறி உள்ளிட்ட புலால் உண்பதை ஒட்டுமொத்தமாகத் தடை செய்யுமாறு தமிழர் சமயத் தலைமைகள் ஒருபோதும் கோரியதில்லை! தமிழர்கள் உளவியல் சனநாயகத்தன்மை சார்ந்தது.

ஆனால், மனுதர்மம் பிராமணர்கள் கொலை செய்தால்கூட, அவர்களுக்கு மரண தண்டனை வழங்கக் கூடாது என்றும், மற்றவர்களுக்கு மரண தண்டனை வழங்கலாம் என்றும் கூறியுள்ளதைப் போல், பசுவை மட்டும் கொல்லக்கூடாது மற்ற விலங்குகளைக் கொல்லலாம் என்று பா.ச.க. - ஆர்.எஸ்.எஸ். அமைப்புகள் கூறி வருகின்றன.

இந்த முரண்பாட்டை பலரும் சுட்டிக்காட்டியதால், இப்போது பசு, காளை, எருமை, ஒட்டகம் ஆகியவற்றை உணவுக்குக் கொல்லக் கூடாது என்று ஒட்டு வேலை செய்து ஆணையிட்டுள்ளார்கள். அதேவேளை, ஆடு, கோழி போன்ற உயிரிகளை கொன்று உண்ண இந்தப் புதிய ஆணை தடை விதிக்கவில்லை.

கோயில்களில் கால்நடைகளை பலி கொடுக்க தடை விதித்துள்ளது புதிய சட்டம்! கிராமப்புற மக்களின் குலதெய்வ வழிபாட்டை ஒழித்து, பிராமணமயமாக்கப்பட்ட பெருந்தெய்வ வழிபாட்டோடு மட்டும் மக்களை கட்டுப்படுத்தும் செயலாகும் இது! கிராமப்புற மண்ணின் மக்கள், முசுலீம்கள், ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் ஆகிய அனைத்து மக்களின் வாழ்வுரிமை, வழிபாட்டுரிமை அனைத்தையும் மனு தர்ம அடிப்படையில் பிராமணிய கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வரும் செயல்தான் இப்புதிய சட்டம்!

புலால் மறுப்பதும், புலால் உண்பதும் அவரவர் தனிப்பட்ட உரிமை! அதில் தலையிட்டு பசு உள்ளிட்ட சில விலங்குகளை உண்ணக் கூடாது என்று தடை செய்வது, பா.ச.க. அரசின் ஆரிய ஆதிக்க வாதத்தைத்தான் காட்டுகிறது.

இந்தத் தடைச்சட்டம் கிராமப்புற வேளாண் பொருளாதாரத்தை நசுக்கி நாசமாக்கிவிடும். கால்நடை வளர்க்கும் உழவர்களை ஓட்டாண்டிகளாக்கி விடும். வெளிநாட்டு ஏகபோக நிறுவனங்கள் மாட்டுக்கறியை டப்பாவில் அடைத்து இந்தியாவில் விற்று, கொள்ளை இலாபம் சம்பாதிக்க வழிதிறந்துவிடும்.

எனவே, எந்த வகையிலும் பா.ச.க. அரசு பிறப்பித்துள்ள “விலங்குகள் கொடுமைத் தடை (கால்நடைச் சந்தை ஒழுங்குமுறை) சட்டம் – 2017” ஏற்கத்தக்கதல்ல! இந்த சட்டத்தை முற்றிலுமாகத் திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் இந்திய அரசைக் கேட்டுக் கொள்கிறது.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com 

Friday, May 19, 2017

'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' இந்தியாவின் இந்த உளவியல்தான் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குக் காரணம்! பெ. மணியரசன்.

'சிங்களன் பங்காளி – தமிழன் பகையாளி' இந்தியாவின் இந்த உளவியல்தான் முள்ளிவாய்க்கால் பேரழிவுக்குக் காரணம்! தோழர் பெ. மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்.
எட்டாண்டுகள் கடந்து விட்டதாக எண்ணத்தில் பதிவில்லை. நேற்று நடந்தது போல் நெஞ்செங்கும் காயங்கள்! முள்ளிவாய்க்கால் – தமிழினம் முழுமைக்குமான ஈகத்திருத்தலம்; வீரச் செங்களம்! 

தமிழீழ விடுதலைப்போரில் – முள்ளிவாய்க்கால் மண்ணில், சிங்கள எதிரியின் கொத்துக் குண்டுகளுக்கும் சுடுகலன்களுக்கும் பலியான இலட்சக்கணக்கான தமிழீழத் தமிழ் மக்களுக்கும், விடுதலைப் புலி வீரர்களுக்கும் தளபதிகளுக்கும் எட்டாமாண்டு நினைவு நாளில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் வீரவணக்கம் தெரிவித்துக் கொள்கிறது! 

எட்டுக்கோடித் தமிழர்கள் தமிழ்நாட்டில் வாழ்ந்தும், ஈழத்தில் நடந்த தமிழின அழிப்புப் போரைத் தடுத்து நிறுத்த முடியவில்லை. போர் நிறுத்தம் வலியுறுத்தி, தழல் ஈகி முத்துக்குமார் தொடங்கி பதினெட்டுப் பேர் அடுத்தடுத்து தழல் ஈகம் செய்து உயிரை மாய்த்துக் கொண்ட போதும், சிங்கள அரசு நடத்திய தமிழின அழிப்புப் போரை நிறுத்த முடியவில்லை.

காரணம், இன அழிப்புப் போர் எதிர்ப்புப் போராட்டங்கள் தமிழ்நாட்டில் இன்னும் முழு வீச்சில் நடந்திருக்க வேண்டும்; இன அழிப்புப் போரில் பல்வேறு வடிவங்களில் பங்கு கொண்ட இந்திய அரசின் அலுவலகங்கள், நிறுவனங்கள் தமிழ்நாட்டில் செயல்படாதவாறு பல நாட்கள் தடுத்திருக்க வேண்டும். இது ஏன் இயலாமற் போயிற்று?

இந்திய ஆளும் வர்க்கக் கட்சிகளான காங்கிரசு, பா.ச.க. ஆகியவற்றுடன் தோழமை உறவு கொண்டு, இந்திய அரசுக்குக் கங்காணி வேலை பார்க்கும் கழகங்கள்தான், தமிழ்நாட்டில் பெரும்பான்மை மக்களின் பிரதிநிதிகள்! அவை ஒப்புக்குப் போர் நிறுத்தக் கோரிக்கை எழுப்பி, பாசாங்கு நடவடிக்கைகள் சில எடுத்தன! உண்மையான வேகத்தில், உணர்ச்சியில் வெகுமக்களை அக்கழகங்கள் போர் நிறுத்தக் களத்தில் இறக்கவில்லை!

தமிழின அழிப்புப் போரில், சிங்கள அரசுக்குத் துணையாகப் பெரும் பங்காற்றிய இந்திய அரசு, போரின் முடிவுக்குப் பின் சிங்கள இனவெறி அரசையும், ஆட்சியாளர்களையும், படைகளையும் பன்னாட்டு விசாரணை வளையத்திலிருந்து தப்பிக்க வைக்கப் பன்னாட்டு அரங்கில் தனது எல்லா வகை ஆற்றல்களையும் பயன்படுத்துகிறது. 

தனி ஈழம் அமைந்திடவோ அல்லது இனப்படுகொலைக் குற்றவாளிகளான சிங்கள அரசுத் தரப்பினரைத் தண்டிக்கவோ, ஒருக்காலும் இந்தியா ஒப்புக் கொள்ளாது என்ற உண்மையை தமிழ்நாட்டுத் தமிழர்களும், தமிழீழத் தமிழர்களும் உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ள வேண்டும். 

முள்ளிவாய்க்கால் ஈகியர்க்கு வீரவணக்கம் செலுத்தும் நேரத்தில் உள்ளதை உள்ளபடி புரிந்து கொள்ளும் நேர்மையும், கூர்மையும் மிகமிக முக்கியம்! பாசாங்குகள், பகட்டுகள், நேர்மையற்ற பக்கச் சார்புகள், அறியாமை ஆகியவை கூடாது! 

இந்திய அரசு, தமிழ்நாட்டில் தமிழினத்தை நடத்தும் பகைப் போக்கின் நீட்சிதான், இறையாண்மையுள்ள தமிழீழம் அமையாமல் தடுக்கும் சூழ்ச்சி! 

காவிரி உரிமை, முல்லைப் பெரியாறு அணை உரிமை போன்றவற்றில் உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளைச் செயல்படுத்த மறுக்கும் இந்திய ஆட்சியாளர்களின் அதே உளவியல்தான், ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் சிங்கள அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட மனித உரிமைக் குற்ற விசாரணையைச் செயல்படவிடாமல் தடுக்கிறது. அவர்களுக்குச் சிங்களன் - பங்காளி! தமிழன் – பகையாளி! 

காவிரி உரிமை, கடலில் தமிழ்நாட்டு மீனவர்களுக்குள்ள மீன்பிடி உரிமை போன்றவற்றிற்கும் தமிழ் ஈழத் தமிழர்கள் குரல் கொடுக்க வேண்டும்!

தமிழ்நாட்டுத் தமிழர்களும் தமிழீழத் தமிழர்களும் தங்களின் பொது எதிரிகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து போராட வேண்டும் என்ற உணர்வை முள்ளிவாய்க்கால் ஈகியர் நாளில் மேலும் வீறு பெறச் செய்வோம்! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam 
ஊடகம்: www.kannotam.com  
இணையம்: www.tamizhdesiyam.com  

Thursday, May 18, 2017

இரசினிகாந்த், அசீத், விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள்! - இந்தியன், திராவிடன் “இனப்பெயரை” நீக்குங்கள்! பெ. மணியரசன்

 இரசினிகாந்த், அசீத், விசால் நடிகர்களை ஓரங்கட்டுங்கள்! - இந்தியன், திராவிடன் “இனப்பெயரை” நீக்குங்கள்! தோழர் பெ. மணியரசன், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்.
தமிழ்நாட்டு அரசியலுக்குத் தலைமை தாங்க வருமாறு கன்னட நாட்டு நடிகர் இரசினிகாந்தை அழைக்கும் அளவிற்குத் தமிழ் இனத்தில் ஒரு சாரார் தரம் தாழ்ந்து தன்மானம் குறைந்து போனதற்குக் காரணமானவர்கள் யார்?

தமிழின அடையாளத்தை மறைத்து, திராவிட அயல் இன அடையாளத்தைத் தமிழர்கள் மீது திணித்த திராவிடச் சந்தர்ப்பவாதிகளும், இந்தியன் என்ற வடநாட்டு இனப்பெயரைத் தமிழர் தலையில் சுமத்திய வடநாட்டுத் தாசர்களான காங்கிரசு, கம்யூனிஸ்ட்டு, பா.ச.க. கட்சிகளைச் சேர்ந்தவர்களுமே காரணம் ஆவர்!

குறிப்பாக, ஒற்றை அதிகாரத் தலைவரை உருவாக்கிக் கொண்டு - அவரை கடவுளாக அல்லது கடவுளுக்கும் மேலானவராக சித்தரித்து, மாயாசாலம் காட்டி, மக்களின் தன்மதிப்பையும், தன்முயற்சியையும் சிதைத்து, அவதாரத் தலைவரைத் தேடும் அவலத்தை வெகுமக்கள் உளவியலில் பதித்துவிட்டன தி.மு.க. – அ.தி.மு.க. கட்சிகள்!

மற்ற மாநிலங்களில் திரைக் கதாநாயகர்களுக்கு அரசியல் தலைமை கிடைப்பதில்லை. திரைப்படத்தில் நடித்துப் பெற்ற பிரபலத்தைப் பயன்படுத்தி அரசியல் தலைமை ஏற்க முனைந்த அமிதாப்பச்சனை இந்தி வட்டார மக்கள் புறக்கணித்தனர்; ஆந்திராவில் நடிகர் சிரஞ்சீவியின் அரசியல் கடையை மூடச் செய்தனர் தெலுங்கர்கள்; ஏற்கெனவே கேரளாவில் அரசியல் கட்சி தொடங்கிய நடிகர் பிரேம் நசீர் கட்சியைக் கலைக்கச் செய்தனர் மலையாளிகள்! ஆந்திரப்பிரதேசத்தில் என்.டி. இராமாராவின் அரசியல் வாழ்வையும் அரைகுறையாக முடித்து வைத்தனர் தெலுங்கு மக்கள்!

தமிழ்நாட்டில் மட்டும் கன்னடர் இரசினிகாந்த், மலையாள அசீத், தெலுங்கர் விசால் ஆகிய அயல் இன நடிகர்கள் அரசியல் தலைவர்களாகித் தமிழர்களை ஆளத் துடிப்பதேன்? ஏமாளித் தமிழர்கள் அவர்களை அரசியலுக்கு அழைப்பதேன்?

ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய மாநிலங்களில் தமிழ்த் திரைப்படங்கள் ஓடுகின்றன. தமிழின நடிகர்களான சத்தியராசு, விசய், சூரியா போன்றோரை அம்மாநிலங்களில் அரசியலுக்குத் தலைமை தாங்க அழைக்கிறார்களா? இல்லை! அந்த மொழிப்படங்களில் தமிழர்களைக் கதாநாயகர் அளவுக்கு வளர விட்டார்களா? இல்லை! இந்த நான்கு மாநிலங்களிலும், வட மாநிலங்களிலும் தமிழர்களை அரசியல் தலைவர்களாக வளர விட்டார்களா? மாநில அளவில் தொழிற்சங்கத் தலைவர்களாகவாவது வளர விட்டார்களா? இல்லை!

தைப்புரட்சியில் “தமிழன்டா” என்ற பதாகையை ஏந்திய இலட்சோப இலட்சம் தமிழின இளையோரே, உங்களில் தகுதிமிக்கோரிடமிருந்தும், அனுபவம் - இலட்சியக் கூர்மை - நேர்மை ஆகிய பண்புகளைக் கொண்ட தமிழின மூத்தோரிடம் இருந்தும்தான் தமழர்களுக்கு புதிய தலைமைகள் உருவாக வேண்டும்.

தமிழின அடையாளத்தை மறைத்து, திராவிடன், இந்தியன் என்ற அயல் இன அடையாளங்களைத் திணிக்கும் அரசியல்வாதிகளைப் புறந்தள்ளுங்கள்! இரசினிகாந்த் போன்ற அயல் இன நடிகர்களை ஓரங்கட்டுங்கள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Wednesday, May 17, 2017

“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!

“தமிழ்த்தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நிகழ்வு!
கடலூர் மாவட்டம், பெண்ணாடம் சௌந்திரசோழபுரம் செங்கள நினைவிடத்தில் 16.05.2017 அன்று மாலை 6 அளவில “தமி்ழ்த் தேசியப் போராளி” புலவர் கு. கலியபெருமாள் அவர்களின் பத்தாம் ஆண்டு வீரவணக்க நாள் நிகழ்வு தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் தலைமையில் நடைபெற்றது.

நிகழ்ச்சியில் முன்னதாக புலவர் கலியபெருமாள், புலவர் மனைவி வாளாம்பாள், தோழர் கணேசன், சர்ச்சில், காணியப்பன் ஆகியோரின் நினைவிடத்தில் மலர் வைத்து வீரவணக்கம் செலுத்தி, வீரவணக்க முழக்கம் எழுப்பினர்.
பிறகு பெண்ணாடம் தமிழ்த் தேசியப் பேரியக்கக் கிளைச் செயலாளரும், புலவர் கலியபெருமாள் அவர்களின் தம்பியுமான தோழர் கு. மாசிலாமணி, தமிழ்த் தேச மக்கள் கட்சித் தலைவர் வழக்கறிஞர் பா. புகழேந்தி, பொதுச்செயலாளர் தோழர் தமிழ்நேயன், அமைப்புச் செயலாளர் தோழர் செந்தமிழ்குமரன், வழக்கறிஞர் இளங்கோவன், தமிழர் நீதிக் கட்சி மாவட்ட செயலாளர் தோழர் கதிர்வேல், தோழர் சௌ.ரா. கிருட்ணமூர்த்தி, மனித நேயப் பேரவை திரு. பெ.ச. பஞ்சநாதன், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி - திட்டக்குடி தொகுதி செயலாளர் திரு. க. வேந்தன், நாம் தமிழர் மகளிர் அணி தலைவி தோழர் அமுதா நம்பி, தோழர் மாறன், தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் சி.பிரகாசு, “எதிர்வினை” இதழ் ஆசிரியர் மு.பழனிவேல், “கலகம்” இயக்குநர் வ. கீரா ஆகியோர் வீரவணக்க உரை நிகழ்த்தினர்.
நிகழ்வில், புலவரின் “மக்கள் துணையோடு மரணத்தை வென்றேன்” நூலை மறுபதிப்பாக விருத்தாசலம் வழக்கறிஞர் பரமசிவம் வெளியிட முதல்படியை தோழர் மாறன், பெறுவார் என அறிவித்தவுடன் நிகழ்ச்சிக்கு வந்திருந்த 5 வயது மாறன் பெயர் கொண்ட சிறுவன் ஓடி அந்த நூலை பெற்றுக்கொண்ட காட்சி அனைவரும் மெய்சிலிர்க்க வைத்தது. பிறகு இரண்டாம் படியை தோழர் மாறன், தமிழ் பாதுகாப்பு இயக்கத் தலைவர் தோழர் க. சோழ நம்பியார், வழக்கறிஞர் புகழேந்தி, தோழர் எழிலன், தோழர் வாகை சுடர்வேந்தன், தோழர் தமிழ்சிவக்கண்ணு, தோழர் பிரபாகரன், தோழர் வெற்றித்தமிழன், தோழர் புரட்சிநம்பி, தோழர் தமிழ்குமரன் ஆகியோர் பெற்றுக்கொண்டனர்.

நிகழ்வில், தமிழ்நாடு முழுவதும் தமிழ்த் தேசிய போராளிகள், உணர்வாளர்கள் கலந்து கொண்டனர். முருகன்குடி தமிழ்த் தேசிய பேரியக்க தோழர்கள், சென்னை, காஞ்சிபுரம், சிவகங்கை மாவட்டங்களிலிருந்து தமிழ்த் தேச மக்கள் கட்சி தோழர்களும் ஊர்திகளிலிருந்து குடும்பத்தோடு கலந்து கொண்டனர். நிறைவாக தமிழ்த் தேசியப் பேரியக்க முருகன்குடி கிளைச்செயலாளர் தோழர் அரா. கனகசபை நன்றி தெரிவித்தார்.
புலவர் கலியபெருமாள் அவர்களுக்கு வீரவணக்கம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com

Tuesday, May 16, 2017

இரசினிகாந்தை அரசியலுக்கு அழைப்போரும் அதை ஆதரிப்போரும் தமிழினத்துரோகிககள் ஆவர்! பெ. மணியரசன் அறிக்கை!

இரசினிகாந்தை அரசியலுக்கு அழைப்போரும் அதை ஆதரிப்போரும் தமிழினத்துரோகிகள் ஆவர்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
இரசினிகாந்த் வழக்கம்போல் “அரசியலுக்கு வந்தாலும் வருவேன்” என்று கூறி தம் இரசிகர்களுக்குக் குச்சிமிட்டாய் கொடுத்துள்ளார்.

தமிழ்நாட்டில் அவரின் இரசிகர்கள், இரசினிகாந்த் அரசியலுக்கு வர வேண்டும் என்று பெருங்குரல் எழுப்புகிறார்கள். இப்போது விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன், பா.ச.க.வின் தமிழிசை, தி.மு.க. செயல் தலைவர் மு.க. ஸ்டாரின் ஆகியோரும் இரசினிகாந்த் அரசியலில் ஈடுபடுவதை வரவேற்பதாகக் கூறியுள்ளார்கள்.

தமிழ்நாட்டு அரசியலில் ஈடுபடவோ அல்லது தனிக்கட்சித் தொடங்கவோ இரசினிகாந்துக்கு என்ன தகுதி இருக்கிறது என்பதை அவர்கள் சொல்ல வேண்டும்; என்னென்ன தகுதிகள் இல்லை என்பதை நான் சொல்கிறேன்.

முதல் தகுதியின்மை அவர் கன்னடக்காரர் என்பது. இரண்டாவது, தகுதியின்மை தனக்கு வாழ்வளித்த தமிழர்களுக்கு நன்றி விசுவாசத்துடன் அவர் நடந்து கொள்ளாதவர் என்பது!

காவிரிச்சிக்கலை சாக்காக வைத்துக் கர்நாடகத்தில் கன்னட வெறியர்கள் தமிழர்களை இனப்படுகொலை செய்தபோது, தமிழர்களைத் தாக்கியபோது, தமிழர் வீடுகளை, வணிக நிறுவனங்களை எரித்த போது, சூறையாடிய போது, தமிழ்த்திரைப்படங்கள் ஓடாமல் தடுத்தபோது, நடுநிலையில் நின்று, அந்த அட்டூழியங்களை – வெறியாட்டங்களை இரசினிகாந்த் கண்டிக்கவில்லை.

காவிரி உரிமைக்காக இயக்குநர் பாரதிராசா தலைமையில் தமிழ்த்திரைக் கலைஞர்கள் நெய்வேலியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது, அதைச் சீர்குலைக்க சதி செய்தவர்.

அண்மையில் அநீதியாக கன்னடர்கள் தமிழர் சத்தியராசு நடித்த “பாகுபலி-2” படத்தைக் கர்நாடகத்தில் திரையிடத் தடை விதித்தார்கள். ஒன்பதாண்டுகளுக்கு முன் காவிரிச் சிக்கலில் கன்னடர் செய்த அட்டூழியங்களை சத்தியராசு கண்டித்தார் என்பதற்காக – இப்பொழுது தடை விதித்தார்கள். தமிழர் சத்தியராசு வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டபின்தான், “பாகுபலி-2” படத்தைக் கர்நாடகத்தில் அனுமதித்தனர். அச்சிக்கலில் தலையிட்டு ஒரு சமரசத் தீர்வு காண இரசினி முன்வராமல் தந்திரமாக ஒதுங்கிக் கொண்டார்.

காவிரிச் சிக்கலில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து, கன்னடர்கள் தமிழர்களைத் தாக்கி அட்டூழியம் புரியும்போது, அதைத் கண்டித்ததில்லை. சட்டப்படி தமிழ்நாட்டிற்குரிய காவிரி உரிமையைத் தடுக்காதீர்கள் என்று இரசினிகாந்த் தம் கன்னட உடன்பிறப்புகளுக்கு வேண்டுகோள் விட்டதுமில்லை.

இரசினிகாந்த் தமிழ்நாட்டு அரசியலில் செல்வாக்குப் பெற்றுவிட்டால், காவிரி உரிமையைத் தமிழர்கள் நிரந்தரமாக மறந்துவிட வேண்டியதுதான்! தமிழ்நாடு கர்நாடகத்தின் காலனியாக மாற்றப்படும்!

இரசினிகாந்த் தாய்மொழி எதுவாக இருந்தாலும் அவர் கன்னடநாட்டைச் சேர்ந்தவர். கன்னட இனப்பற்றுடன் தமிழ்நாட்டில் வாழ்பவர்! தமிழர் உரிமைகளுக்குத் துரோகம் செய்பவர்.

இரசினிகாந்தைத் தமிழ்நாட்டில் “அரசியல் வணிகம்” செய்ய அழைப்பவர்களும், அவரின் அரசியல் நுழைவை ஆதரிப்பவர்களும் தமிழர்களுக்குத் துரோகம் செய்பவர்களே!

தமிழின இளைஞர்கள் ஆண்களும் பெண்களும் எச்சரிக்கையாக விழிப்புடன் செயல்பட்டு இரசினிகாந்த் என்ற நச்சுக்கொடி தமிழ்நாட்டு அரசியலில் படராமல் தடுக்க வேண்டும்!


இன்னணம், 
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Monday, May 15, 2017

சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும்! பெ. மணியரசன் அறிக்கை!

சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சும் தமிழர்கள் கற்றுக் கொள்ள வேண்டிய பாடமும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா நேற்று (14.05.2017), கர்நாடகத்தின் சாம்ராஜ் நகரில் செய்தியாளர்களுக்கு அளித்த செவ்வியில், உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மறுத்து தமிழ்நாட்டிற்கு காவிரி நீர் திறந்துவிடாத “சாதனை”யை பெருமையுடன் கூறியுள்ளார்.

“காவிரியிலிருந்து தமிழகத்திற்கு வினாடிக்கு 2,000 கன அடி தண்ணீர் திறந்துவிட வேண்டுமென்று உச்ச நீதிமன்றம் பலமுறை ஆணையிட்டும், நான் இதுவரை திறந்துவிடவில்லை. ஏனெனில், நம்மிடம் தண்ணீரில்லை. நாட்டின் உயர்ந்த நீதிமன்றம் தீர்ப்பளித்தாலும் அதைச் செயல்படுத்தவில்லை” என்று கூறியுள்ளார்.

அத்துடன், தன்னுடைய நான்கு ஆண்டுகால ஆட்சியைக் கன்னட இனவெறி அமைப்பான சலுவாளிக் கட்சியின் தலைவர் வாட்டாள் நாகராஜ் பாராட்டியதையும் பெருமையுடன் கூறியுள்ளார்.

தமிழர்களுக்குரிய உரிமையை உச்ச நீதிமன்றம் ஆணையிட்டாலும் செயல்படுத்த மாட்டேன், கன்னட இனவெறியன் வாட்டாள் நாகராஜ் என் ஆட்சியைப் பாராட்டுகிறார் என்று ஒரே செவ்வியில் கர்நாடக முதல்வர் சித்தராமையா கூறுவதன் பொருள் என்ன?

கர்நாடக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் நிலையில், தமிழினப் பகையைக் கக்கி கன்னட இனவெறியைத் தூண்டிவிட்டால், தனக்கு கூடுதலாக வாக்குகள் கிடைக்குமென்று காங்கிரசு முதலமைச்சர் சித்தராமையா கணக்குப் போடுகிறார். கர்நாடகத்தில் கன்னடர்கள் தமிழின எதிர்ப்பு பகை உணர்ச்சியில் இருக்கிறார்கள் என்பதால் வாக்கு வேட்டையாட தமிழினப் பகையை மக்களிடம் வெளிப்படுத்துகிறார் முதலமைச்சர் சித்தராமையா!

கர்நாடகத்தில் அரசியல் கட்சிகள்தான் இனவெறியைத் தூண்டுகின்றன, மக்களிடம் கன்னட இனவெறியோ தமிழினப் பகை உணர்ச்சியோ இல்லை என்று பேசுவோர், இதிலிருந்தாவது பாடம் கற்க வேண்டும்.

கன்னட இனப்பற்றுடன் முதலமைச்சரோ மக்களோ இருந்தால் அது தவறில்லை! கன்னட இனவெறியுடன் செயல்படுவதுதான் குற்றச்செயல் என்கிறோம்.

காங்கிரசுக்காரரான கர்நாடக முதல்வர் சித்தராமையா பேசுவதுபோல், தமிழ்நாட்டு அரசியலில் கன்னட எதிர்ப்பு பேச வேண்டுமென்று நாம் எதிர்பார்க்கவில்லை. காவிரிச்சிக்கலில் இந்திய அரசு தமிழினத்திற்கு எதிராக இனப்பாகுபாடு காட்டுகிறது என்றும், கர்நாடகத்திலுள்ள காங்கிரசு – பா.ச.க. – மதச்சார்பற்ற சனதா தளம் போன்ற கட்சிகள், கன்னட இனவெறிக் கட்சிகள், தமிழினத்திற்கு எதிராகப் பகை உணர்ச்சியைத் தூண்டிவிடுகின்ற கட்சிகள் என்றும் என்றைக்காவது தமிழ்நாட்டுக் கழகங்கள் பேசியதுண்டா?

நமக்கு ஆசான் போன்றவர்களிடம் பாடம் கற்க வேண்டும். அல்லது நம்முடைய பகைவர்களிடமிருந்து பாடம் கற்க வேண்டும். தி.மு.க. – அ.இ.அ.தி.மு.க. போன்ற இரண்டுங்கெட்டான்களிடம் பாடம் கற்கக் கூடாது.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்களோ, ஆட்சிக்கு வரத் துடிக்கும் தி.மு.க. தலைமையோ தமிழினத் தற்காப்பு அரசியலை – தமிழின உரிமை மீட்பு அரசியலை முன்வைத்து இயங்குவார்கள் என்று இனியும் எதிர்பார்க்காமல், இளந்தலைமுறையினரும் பட்டறிவு மிக்க மூத்த தலைமுறையினரும் இணைந்து தகுதியான தமிழ்த்தேசிய அரசியலை முன்னெடுக்க வர வேண்டும் என்ற பாடத்தைத்தான் சித்தராமையாவின் கன்னட இனவெறிப் பேச்சிலிருந்து நாம் கற்றுக் கொள்ள வேண்டும்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com

மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே! கி. வெங்கட்ராமன் அறிக்கை!

மரபீனி மாற்றக் கடுகை அனுமதிக்காதே! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை! 
இந்திய அரசு மரபீனி மாற்றக் கடுகுப் பயிருக்கு இசைவு அளித்துள்ளது. இதுவரை இந்தியாவில் மரபீனி மாற்ற உணவுப் பயிருக்கு அனுமதி அளிக்கப்படவில்லை. மோடி அரசு முதல் முறையாக மரபீனி மாற்ற உணவுப் பயிரான கடுகுக்கு இசைவு அளித்துள்ளது. இது அடுத்தடுத்து மரபீனி மாற்ற உணவுப் பயிர்களை அனுமதிப்பதற்கான தொடக்க நடவடிக்கையாகும்!

இந்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் கீழ் இயங்கும் மரபீனி பொறியியல் இசைவுக் குழு (Genetic Engineering Approval Committee - GEAC) கடந்த 11.05.2017 நாளிட்ட அறிவிப்பின் மூலம், இந்த அனுமதியை வழங்கியிருக்கிறது.

“தாரா கலப்பினக் கடுகு” (Dhara Mustard Hybrid – DMH11) என்ற பெயரில் அழைக்கப்படும் இந்த மரபீனி மாற்றக்கடுகு, தில்லி பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணை வேந்தர் தீபக் பென்டால் குழுவினரின் தயாரிப்பு ஆகும்.

மரபீனி மாற்றக் கடுகு மற்றும் மரபீனி மாற்ற உணவுப் பயிர்கள் குறித்து உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட பொதுநல வழக்கைத் தொடர்ந்து, உச்ச நீதிமன்றம் அமர்த்திய தொழில்நுட்ப வல்லுநர்கள் குழு கடந்த 2013ஆம் ஆண்டு, மிக விரிவான ஆய்வறிக்கையை அளித்தது.

மரபீனி மாற்றப்பட்ட கடுகுக்கு எதிராக இந்தத் தொழில்நுட்ப வல்லுநர் குழு எழுப்பிய எந்த வினாவுக்கும் விடையளிக்காமலேயே மரபீனி பொறியியல் இசைவுக்குழு இந்த மரபீனி மாற்றக் கடுகுக்கு வணிக வகைப் பயன்பாட்டுக்கு இசைவு அளித்துள்ளது.

ஆய்வு வயல்களிலேயே அனுமதிக்கக் கூடாது என்று அறிவிக்கப்பட்ட இந்த DMH11 மரபீனி மாற்றக் கடுகு விதைகள், இனி சந்தைக்கு வர இருக்கின்றன. இந்த மரபீனி மாற்றக் கடுகு, சுற்றியுள்ள பிற பயிர்களுக்கும் மண்ணுக்கும் நிலத்தடி நீருக்கும் கேடு விளைவிப்பதோடு மட்டுமின்றி, இதை உண்னும் மனிதர்களுக்குக் கொடிய நரம்பியல் நோய்களை உருவாக்கும் ஆபத்தும் உள்ளது.

இந்த மரபீனி மாற்றக் கடுகு வகையினம் களைக்கொல்லி தாங்கும் (Herbicide tolerant variety) வகையினமாகும். இந்தக் கடுகு விதைகள் முறையாக முளைப்பதற்கு குளுஃபோசினேட் (Glufosinate – C5H12NO4P) என்ற உயர் கலைக்கொல்லியைப் போட வேண்டும்.

இந்த குளுஃபோசினேட் களைக்கொல்லி, தாரா கலப்பினக் கடுகைத் தவிர சுற்றியுள்ள பிற தாவரங்களை களையாகக் கருதிக் கொன்றுவிடும். 

தாரா கலப்பினக் கடுகு இப்போது பயன்பாட்டிலுள்ள கடுகைவிட நோய் தாங்குத்திறன் குறைவானது. இதனால் ஆண்டுக்கு ஆண்டு குளுஃபோசினேட் களைக்கொல்லியின் தேவை அதிகரித்துக் கொண்டே இருக்கும் என்பதை புகழ்பெற்ற வேளாண் அறிஞர் பென் புரூக் (Ben Brook) அமெரிக்காவில் மேற்கொண்ட விரிவான தனது ஆய்வில் வெளிப்படுத்தியிருக்கிறார். 

“அமெரிக்க ஐக்கிய நாடுகளில் மரபீனி மாற்றப்பட்ட பயிர்களுக்கு களைக் கொல்லியின் பயன்பாடு” என்ற தனது ஆய்வறிக்கையை 2012ஆம் ஆண்டு பென் புரூக் வெளியிட்டார். கடுகு மட்டுமின்றி, சோயா உள்ளிட்ட களைக் கொல்லி எதிர்ப்பு வகையின மரபீனி மாற்றப் பயிர்களை புதிதாக ஆய்வு செய்து, அவர் இந்த அறிக்கையை வெளியிட்டார்.

அதேபோல், இந்த மரபீனி மாற்றக் கடுகு போன்ற மரபீனி மாற்றப் பயிரினங்களில் குளுஃபோசினேட் பயன்பாடு அதிகரிப்பது “தரைக்கு வந்த சுனாமி” என்று ஹார்க்கர் மற்றும் ஆய்வுக் குழுவினர் 2012ஆம் ஆண்டு தங்களது ஆய்வறிக்கையில் வெளிப்படுத்தியுள்ளனர். (Weed Science – 2012 - 60(2), Page 143, 144).

இப்போது வேளாண்மைப் பணிகளுக்கு நிலவும் ஆள்பற்றாக்குறையைக் காரணம் காட்டி, ஆட்களை வைத்துக் களையெடுப்பு செய்யாமல் இருக்க தாரா கலப்பினக் கடுகு பயன்படும் என இதற்கு ஞாயம் சொல்லப்படுகிறது.

ஆனால், களையெடுப்பு ஆள் கூலியைவிட இந்த மரபீனி மாற்றக் கடுகு விதை விலையும், அதற்கு இடப்படும் குளுஃபோசினேட் களைக்கொல்லியின் விலையும் மிகப்பெரும் சாகுபடிச் செலவை உருவாக்கும்.

குளுஃபோசினேட் பயன்பாடு மண்ணின் வளத்தைக் கெடுப்பதோடு, நிலத்தடி நீரையும் நஞ்சாக்குகிறது. 

குளுஃபோசினேட் பயன்பாட்டின் காரணமாக அந்தக் கடுகு வயல் இருக்கும் பகுதி முழுவதிலும் தேனீக்கள் மற்றும் பட்டாம் பூச்சுகளின் இனப்பெருக்கம் கடுமையாக பாதிக்கப்படுகிறது. தேனீ, பட்டாம் பூச்சுகள் குறைவதால் இந்த வயலைச் சுற்றியுள்ள பிற வயல்களில் பிற பயிர்களின் மகரந்தச் சேர்க்கை பாதிக்கப்பட்டு, மற்ற உழவர்கள் பாதிக்கப்படுவார்கள்.

குளுஃபோசினேட்டை சுண்டெலியின் மீது செலுத்தி சோதித்த போது, அதன் நரம்பு மண்டலம் குறிப்பாக மூளை வளர்ச்சி வெகுவாக பாதிக்கப்பட்டு, இனம் கண்டறிய முடியாத நரம்பியல் நோய்கள் ஏற்பட்டதை ஆய்வுகள் எடுத்துக்காட்டுகின்றன. இந்த ஆய்வுகளை மேற்கோள் காட்டி, தொழில்நுட்ப வல்லுநர் குழு 2013இல் அளித்த அறிக்கை இந்த மரபீனி மாற்றக் கடுகுகளுக்கு கொடிய நரம்பியல் நோய்கள் வருவதற்கு வாய்ப்புண்டு என எச்சரித்தது. 

இவை எது பற்றியும் கவலைப்படாமல் மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு, தாரா கலப்பினக் கடுகுக்கு இசைவு அளித்துள்ளது கடுமையாகக் கண்டிக்கத்தக்கது!

இந்திய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் கரே இந்த அனுமதி அறிக்கையில் கையெழுத்திட்டால்தான், அது ஆணையாக வெளிவரும்.

இதற்கு முன்னர், மரபீனி பொறியியல் ஏற்பிசைவுக் குழு பி.ட்டி. கத்தரிக்கு அனுமதி வழங்கிய பின்னாலும் அன்றைய சுற்றுச்சூழல் அமைச்சர் செயராம் இரமேஷ் நாடு முழுவதும் ஏற்பட்ட எதிர்ப்பைக் கருத்தில் கொண்டு, பி.ட்டி. கத்தரிக்கு அனுமதி வழங்க மறுத்தார்.

இதை முன்னெடுத்துக்காட்டாகக் கொண்டு, தற்போதைய சுற்றுச்சூழல் அமைச்சர் அனில் மாதவ் கவே தாரா மரபீனி மாற்றக் கடுகுக்கு அனுமதி அளிக்க மறுக்க வேண்டும்.

ஏனெனில் இந்த அனுமதியை வைத்துக் கொண்டு, அரிசி - கோதுமை உள்ளிட்ட மரபீனி மாற்ற உணவுப் பயிர்கள் சந்தைப் பயன்பாட்டுக்கு வரிசையில் வந்து நிற்கும் ஆபத்து உள்ளது.

எனவே, இந்திய அரசு மரபீனி மாற்றக் கடுகைக்கு அனுமதி வழங்கக் கூடாது என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com

Wednesday, May 10, 2017

காப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம்!

காப்பியத்தலைவி கண்ணகிக்கு வீரவணக்கம்!


“தமிழுரிமைக் கூட்டமைப்பு” சார்பில், சித்திரை முழுநிலவு நாளையொட்டி - சென்னை கடற்கரையிலுள்ள - சிலப்பதிகாரக் காப்பிய நாயகி கண்ணகி சிலைக்கு இன்று (10.05.2017) மாலை வீரவணக்கம் செலுத்தப்பட்டது.

நிகழ்வுக்கு தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் தலைமை தாங்கினார். செயலாளர் தோழர் காஞ்சி அமுதன் முன்னிலை வகித்தார். 

கூட்டமைப்பின் பொருளாளர் புலவர் இரத்தினவேலவன், தமிழ்த்தேச மக்கள் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ்நேயன், திருவாளர்கள் இரா. பத்மநாபன், கலகம் வ. கீரா, அ. பத்மநாபன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழறிஞர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல். ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் க. வெற்றித்தமிழன், தோழர்கள் வி. கோவேந்தன், த. சத்தியா உள்ளிட்ட பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர்.

நிகழ்வில், தேனி மாவட்டம் கூடலூர் அருகில் மலை மீது - தமிழ்நாட்டு எல்லைக்குள் அமைந்துள்ள கண்ணகிக் கோயிலுக்கு தமிழ்நாடு அரசு சாலை வழிப் பாதை அமைக்க வேண்டும், சித்திரை முழுநிலவு அன்று மட்டுமே அக்கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கும் கேரள அரசின் அடாவடிச் செயலை மாற்றி - அக்கோயிலுக்கு எப்பொழுதும் சென்று வரும் வகையில் - கேரள அரசிடமிருந்து அக்கோயிலை முழுமையாக மீட்டெடுத்து அக்கோயிலை தமிழ்நாடு அரசே பராமரிக்க வேண்டும், கண்ணகிக் கோயிலில் எடுக்கப்பட்ட சிலையைப் பாதுகாத்து தமிழ்நாட்டிலேயே வைக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

அரசனே தவறு செய்தாலும் தயங்காது தட்டிக் கேட்டு - அநீதிக்கு எதிரான ஆவேசம் கொள்ள வேண்டுமென்ற அறக்கருத்துகளை வலியுறுத்தி எழுதப்பட்ட சிலப்பதிகாரக் காப்பியத்தலைவி கண்ணகிக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் வீரவணக்கம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: www.tamizhdesiyam.com 

கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி மருத்துவமனையை இடித்தவர்களைக் கைது செய்க! கி. வெங்கட்ராமன் அறிக்கை!

கல்பாக்கம் மருத்துவர் புகழேந்தி மருத்துவமனையை இடித்தவர்களைக் கைது செய்க! தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!
கல்பாக்கத்தில் கடந்த 25 ஆண்டுகளுக்கு மேலாக மிகமிகக் குறைந்த கட்டணத்தில் எளிய மக்களுக்கு மருத்துவ சேவை ஆற்றி வருவதோடு, கல்பாக்கம் – கூடங்குளம் அணுஉலை எதிர்ப்பு, மருத்துவ உலகில் நடைபெறும் மோசடிகள் எதிர்ப்பு என மக்களுக்கான போராட்டக் களங்களிலும் முன் நிற்பவர் மருத்துவர் வீ. புகழேந்தி அவர்கள்.

கல்பாக்கம் – சதுரங்கப்பட்டிணத்தில் வாடகைக் கட்டடத்தில் இயங்கி வந்த அவரது மருத்துவமனை, தற்போது இடித்து நொறுக்கப்பட்டுள்ளது கடும் அதிர்ச்சியளிக்கிறது.

அரசுக்கு எதிரான மக்கள் போராட்டங்களில் தொடர்ந்து செயலாற்றி வரும் மருத்துவர் புகழேந்தி அவர்களை முடக்க நினைக்கும் அரசு நிர்வாகம், அவரது மருத்துவமனை இயங்கி வந்த வீட்டின் உரிமையாளருக்குத் தொடர் நெருக்கடிகள் அளித்து வந்தது. அதன் விளைவாக, அவ்வீட்டின் உரிமையாளர் மருத்துவர் புகழேந்தியை அவ்விடத்தைவிட்டு காலி செய்யக் கூறியிருக்கிறார். இதற்கு மறுப்புத் தெரிவித்து, நீதிமன்றத்தில் புகழேந்தி வழக்குத் தொடுத்து, அந்த வழக்கு நிலுவையில் உள்ளது.

இந்நிலையில், திடீரென்று மருத்துவர் புகழேந்தியின் மருத்துவமனை எவ்வித அனுமதியுமின்றி – முன் அறிவிப்புமின்றி வீட்டின் உரிமையாளரால் இடித்து நொறுக்கப்பட்டுள்ளது கடும் கண்டனத்திற்குரியது. அவரது மருத்துவமனை இடிக்கப்பட்டதை காவல்துறையில் முறையிட்டும்கூட, காவல்துறையினர் அவசரப் புகாராக அதைப் பதிவு செய்யவோ, உதவிக்கு வரவோ இல்லாமல் நின்றது, இந்த செயலுக்கு அரசும் துணை நின்றிருக்குமோ என்ற நமது ஐயத்தை வலுவாக்குகிறது.

எனவே, தமிழ்நாடு அரசு உடனடியாகத் தலையிட்டு மருத்துவர் புகழேந்தியின் மருத்துவமனையை அனுமதியின்றி இடித்த உரிமையாளர் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். அச்சுறுத்தல் ஏதுமின்றி அவருடைய மருத்துவமனை வழக்கம்போல் இயங்கும் வகையில், அம்மருத்துவமனையை சீரமைத்துத் தர நடவடிக்கை எடுக்க வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

இன்னணம்,
கி. வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com 
இணையம்: WWW.tamizhdesiyam.com 

Monday, May 8, 2017

சென்னையில் இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது - 70 பேர் கைது!

சென்னையில் இந்தித் திணிப்பு ஆணை தீயிட்டு எரிக்கப்பட்டது - 70 பேர் கைது!
சென்னையில்-இந்திய அரசின் இந்தித்திணிப்பு ஆணையை எரித்த தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்கள் 70 பேர் காவல்துறையினரால் கைதுசெய்யப்பட்டனர்.

கடந்த மார்ச் 31 (2017) அன்று, இந்தியக் குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்சி, “அலுவல் மொழிக்கான நாடாளுமன்றக் குழு”வின் இந்தித் திணிப்புப் பரிந்துரைகளுக்கு ஏற்பிசைவு வழங்கி கையெழுத்திட்டார். இதன்படி, இந்தியா முழுவதிலும் உள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் ஒன்றாம் வகுப்பு முதல் பத்தாம் வகுப்பு வரை கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்டமாக, அந்தந்த மாநிலங்களுடன் பேசி மாநிலப் பாடத்திட்டப் பள்ளிகளிலும் இந்தியைக் கட்டாயமாக்க நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்திய அரசின் அமைச்சர்கள் நாடாளுமன்றத்திலும் வெளியில் பொது நிகழ்வுகளிலும், அவர்களுக்கு இந்தித் தெரிந்திருந்தால், இந்தியில் மட்டுமே பேச வேண்டும் என்றும் ஆணையிடப்பட்டுள்ளது. இதுபோன்ற 117 இந்தித் திணிப்புப் பரிந்துரைகளை இந்தியக் குடியரசுத் தலைவர் ஏற்றுக் கொண்டு கையெழுத்திட்டுள்ளார்.

சென்னை இந்திப் பிரச்சார சபையின் முன்பு இந்திய அரசின் இந்த இந்தித் திணிப்பு ஆணையை எரிக்கும் போராட்டத்தை, தமிழ்த்தேசியப் பேரியக்கம் அறிவித்தது. தமிழ்நாட்டிலுள்ள சி.பி.எஸ்.இ. மற்றும் கேந்திரிய வித்தியாலயா பள்ளிகளில் தமிழைக் கட்டாயப்பாடமாக அறிவிக்க வேண்டுமென்றும், தமிழை ஏற்காத இப்பள்ளிகளை தமிழ்நாடு அரசு அனுமதிக்கக் கூடாதென்றும், இந்திய நாடாளுமன்றத்தில் எவ்வித நிபந்தனையுமின்றி அமைச்சர்களும் உறுப்பினர்களும் தமிழில் பேச அனுமதிக்கப்பட வேண்டுமென்றும் கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் ஒழுங்கமைக்கப்பட்டது.

இதன்படி, இன்று (08.05.2017) காலை சென்னை தியாகராயர் நகர் நடேசன் பூங்கா முன்பு, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் தலைமையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், பல்வேறு அமைப்புகளின் தோழர்களும் தமிழறிஞர்களும் ஒன்று கூடினர்.

“இந்திய அரசே! இந்திய அரசே! திரும்பப் பெறு! திரும்பப் பெறு! இந்தித் திணிப்பு ஆணையை திரும்பப் பெறு!”, “அனுமதியோம் அனுமதியோம் தமிழ்நாட்டில் இந்தித் திணிப்பை அனுமதியோம்!” என்பன உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து எழுப்ப, இந்திப் பிரச்சார சபை நோக்கி அனைவரும் அங்கிருந்து பேரணியாகப் புறப்பட்டனர்.

பேரணியாகச் சென்ற தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர். பின்பு அங்கேயே, பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் இந்தித் திணிப்பு ஆணையை தீ வைத்து எரித்துத் தொடங்கி வைக்க, தோழர்கள் அனைவரும் ஆணையை தீயிலிட்டுப் பொசுக்கினர். காவல்துறையினர் ஓடி வந்து ஆணை மீது தண்ணீர் ஊற்றி அணைக்க முற்பட்டனர்.

இதனையடுத்து தோழர்கள் அனைவரையும் காவல்துறையினர் கைது செய்வதாக அறிவித்து, தாங்கள் கொண்டு வந்த ஊர்திகளில் ஏற்றினர்.

தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார், ஓவியர் வீரசந்தனம், பாலாறு பாதுகாப்புக் கூட்டியக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் காஞ்சி அமுதன், தமிழ்த்தேச மக்கள் கட்சி தலைமை நிலையச் செயலாளர் தோழர் தமிழ்மகன், உலகத் தமிழ்க் கழகப் புதுச்சேரி அமைப்பாளர் திரு. கோ. தமிழுலகன், புலவர் இரத்தினவேலவன், புலவர் அன்றில் பா. இறையெழிலன், இளந்தமிழகம் தோழர் இராசன்காந்தி, தமிழர் பண்பாட்டு நடுவம் ஒருங்கிணைப்பாளர் திரு. இராச்குமார் பழனிச்சாமி, பொறியாளர் பொன். ஏழுமலை உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் போராட்டத்தில் பங்கேற்றனர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பெண்ணாடம் க. முருகன், பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல். ஆறுமுகம் (சென்னை), இரா. கனகசபை (பெண்ணாடம்), க. விசயன் (தருமபுரி), வெ. இளங்கோவன் (ஈரோடு), தமிழக உழவர் முன்னணி பொதுச் செயலாளர் திரு. தூ. தூருவாசன், தமிழக இளைஞர் முன்னணி சென்னை செயலாளர் தோழர் க. வெற்றித்தமிழன், தென்சென்னை செயலாளர் தோழர் மு. கவியரசன், சென்னை நடுவண் செயலாளர் தோழர் சி. பிரகாசுபாரதி, புதுச்சேரி செயலாளர் தோழர் வேலுச்சாமி, காஞ்சிபுரம் தோழர் நடராசன், தொரவி தோழர் சிவக்குமார், தமிழக மாணவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் அருள், மகளிர் ஆயம் தோழர்கள் இந்துமதி (பெண்ணாடம்), கனிமொழி, இரம்யா (சென்னை), சத்தியா, புதுக்குரல் (ஆவடி) உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் குடும்பம் குடும்பமாகக் கைது செய்யப்பட்டனர்.


கைது செய்யப்பட்ட தோழர்கள் அனைவரும், தியாகராயர் நகர் முருகன் திருமண மண்டபத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www..tamizhdesiyam.com 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT