உடனடிச்செய்திகள்
Showing posts with label இந்தித் திணிப்பு. Show all posts
Showing posts with label இந்தித் திணிப்பு. Show all posts

Friday, July 18, 2014

சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது அப்பட்டமான மொழித் திணிப்பு – இன மேலாதிக்கம்! - த.தே.பொ.க. கண்டனம்!



சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாடுவது
அப்பட்டமான மொழித் திணிப்பு – இன மேலாதிக்கம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர்
தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்!
  
நடுவண் மேல் நிலைப் பள்ளிக் கல்வி வாரிய (சி.பி.எஸ்.இ) இயக்குனர் அண்மையில் இந்தியா முழுதும் உள்ள சி.பி.எஸ்.இ பள்ளிகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கையில் வரும்  ஆகஸ்ட்டு 7 முதல் 13 முடிய  சமஸ்கிருத வாரம் கொண்டாடும்படி அறிவுறுத்தி இருக்கிறார். 
இதுவரை இல்லாத வகையில் முதல் முறையாக அனுப்பப்பட்டுள்ள இந்த சுற்றறிக்கையானது ஒரு மொழி மற்றும் ஒரு வகுப்பு மேலாண்மையை வலியுறுத்துவதாகவும், தமிழையும் தமிழினத்தையும் மற்ற பிற மொழிகளையும் இரண்டாம் நிலைக்கு தள்ளும் அநீதியான முயற்சியாகவும் உள்ளது.
சமஸ்கிருத மொழியானது எல்லா மொழிகளுக்கும் தாய் என்று மிகத் தவறான ஓர் பொய்யுரையை உள்நோக்கத்தோடு மாணவர்களிடையே விதைப்பதாக இச் சுற்றறிக்கையின் முதல் வாசகமே அமைந்துள்ளது.
தமிழ் மொழியும், அதிலிருந்து பிறந்த தென்னிந்திய மொழிகளும் சமஸ்கிருதத்திற்கு தொடர்பேதும் இல்லாமல் தனித் தோற்றத்தையும் வளர்ச்சியையும் கொண்டவை என்பதை 19ஆம் நூற்றாண்டிலேயே மொழியியலாளர்கள் எல்லீசும், ராபர்ட் கார்டுவெல்லும் ஐயத்திற்கு இடமின்றி மெய்ப்பித்துவிட்டனர்.  
தலை சிறந்த மொழியியலாளர் நோம் சாம்ஸ்க்கி, அலெக்ஸ் ஒலிவியா உள்ளிட்ட  மொழியியல் அறிஞர்கள் உலகின் மூத்த முதல் மொழியாக தமிழ் மொழி இருப்பதற்கே வாய்ப்புகள் அதிகம் என தங்கள் ஆய்வு முடிவுகளில் தெளிவாக்கி இருக்கிறார்கள்.
வரலாறு நெடுகிலும் சமஸ்கிருத மொழியும், இன ஆதிக்கமும், வகுப்பு மேலாண்மையும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன.   சமஸ்கிருதத்தோடு ஆரிய இன மேலாதிக்கமும்  பிராமண வகுப்பு மேலாண்மையும் இணைந்தே செயல்பட்டிருக்கின்றன. இதனால், தமிழ் மொழிக் காப்பு போராட்டமும் சமூக சமத்துவப் போராட்டமும் இணைந்த ஒன்றாகவே வரலாறு நெடுகிலும் நடந்துவருகிறது.
இந்நிலையில்  சில ஆயிரம் பேருக்கு மட்டுமே தாய்மொழியாக உள்ள சமஸ்கிருதத்திற்குத் தனிச்சிறப்பு வாரம் நடத்தி அதன்  மேலாண்மையை வலியுறுத்தும் போட்டிகள், ஆய்வரங்கங்கள், திரைப்பட திரையிடல்கள் போன்றவற்றை நடத்துவது, தமிழர்கள் மீது ஓர் மொழி இன
ஆதிக்கத்தை திணிக்கும் செயலாக அமையும். தமிழையும் தமிழினத்தையும் இழிவு படுத்தும்  கேடான நோக்கமும் இதில் உள்ளது.
உள்துறை அமைச்சகம் வழியாக இந்தியைத் திணிப்பதும், எல்லா அமைச்சகங்களும், எல்லாத் துறை நிர்வாகங்களும் இந்தியில் அறிக்கைகள் அளிக்க வேண்டும் என வலியுறுத்துவதும் இப்போது சி.பி.எஸ்.இ பள்ளிகளில் சமஸ்கிருத வாரம் கொண்டாட முனைவதும் தமிழ் நாட்டு மக்களிடையே அச்சத்தையும், பதட்டத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

பா.ச.க அரசின்  இந்த மொழித் திணிப்பு நடவடிக்கைகளை  தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன். சமஸ்கிருத வாரம் கொண்டாடுமாறு வலியுறுத்தும் சி.பி.எஸ்.இ இயக்குனரின் சுற்றறிக்கையைத் திரும்பப் பெறுமாறு கேட்டுக் கொள்கிறேன்.

இவ்வாறு தோழர் கி.வெங்கட்ராமன் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளார். 

Saturday, June 21, 2014

இந்தித் திணிப்பை மூடிமறைக்கிறது இந்திய அரசு! - தோழர் பெ.மணியரசன் அறிக்கை!



இந்தித் திணிப்பை மூடிமறைக்கிறது இந்திய அரசு!
இந்தித் திணிப்பை எதிர்க்கும் தமிழக அரசியல் தலைவர்கள்
ஆங்கிலத் திணிப்பை ஆதரிக்கிறார்கள்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அறிக்கை!

இந்திய அரசுத் துறைகளில் பணியாற்றுவோர் சமூக வலைத்தளங்களில் ஆங்கிலத்தில் மட்டும் எழுதுவதை தடை செய்து, கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும், விரும்பினால் இந்தியுடன் ஆங்கிலத்திலும் எழுதிக் கொள்ளலாம் என்று நடுவண் உள்துறை கடந்த 27.05.2014 அன்று ஆணையிட்டிருந்தது.

அந்த இந்தித் திணிப்புக்கு எதிராக தமிழ்நாட்டில் கடும் கண்டனங்கள் எழுந்ததும், தலைமை அமைச்சர் அலுவலகம் ஒரு விளக்க அறிக்கை கொடுத்துள்ளது. அதில், இந்தி பேசாத மாநிலங்களில் பணிபுரிவோர் ஆங்கிலத்தில் எழுதிக் கொள்ளலாம் என்றும், இந்தி பேசும் மாநிலங்களில் பணிபுரிவோர் கட்டாயம் இந்தியில் எழுத வேண்டும் என்றும் கட்டளையிட்டுருப்பதாகவும், எனவே இந்தி பேசாத மாநிலங்கள் இந்நடவடிக்கையை இந்தித் திணிப்பாகக் கருத வேண்டாம் என்றும் கூறப்பட்டுள்ளது.

இந்த விளக்கம் இந்திய அரசின் இந்தித் திணிப்பு நடவடிக்கையை மூடிமறைக்கும் தந்திர விளக்கமாகும்.

இந்திய ஒன்றிய அரசு அலுவலகங்களில் கடைபிடிக்க வேண்டிய அலுவல் மொழி பற்றிய 1968ஆம் ஆண்டின் திருத்தச் சட்டம், இந்தி அல்லது ஆங்கிலத்தை அலுவல் மொழியாகப் பயன்படுத்தலாம் என்றும், தொடர்ந்து இந்தியுடன் ஆங்கிலமும் இணை ஆட்சிமொழியாக இருக்கும் என்றும் சொல்கிறது. இந்தி பேசும் மாநிலங்களில் உள்ள ஒன்றிய அலுவலகங்களில் இந்தி மட்டுமே கட்டாய அலுவல் மொழியாக இருக்கும் என்று அது கூறவில்லை. அச்சட்டத் திருத்தம் இந்தி பேசும் மாநிலங்களுக்கும் இந்தி பேசாத மாநிலங்களுக்கும் ஒன்றிய அரசின் அலுவல் மொழி இந்தியிலும் இருக்கலாம், ஆங்கிலத்திலும் இருக்கலாம் என்றுதான் கூறுகிறது.

இந்தியைத் தீவிரமாக திணிப்பதற்கான முனைப்பில் காங்கிரசு அரசும் செயல்பட்டது. இப்பொழுது பா.ச.க. அரசும் அதே திசையில் செயல்படுகிறது.

1968ஆம் ஆண்டின் திருத்தச் சட்டத்திற்கு மதிப்பளித்து 27.05.2014 அன்று வெளியிட்ட மேற்படி கட்டளைச் சுற்றறிக்கையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமை அமைச்சரை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.

மேற்கண்ட இந்தித் திணிப்பு முயற்சியை எதிர்த்து கண்டனக் குரல்கள் அரசியல் கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டில் எழுந்தது பாராட்டத்தக்கது. ஆனால், பள்ளிக் கல்வியிலிருந்து தமிழ்வழிப் பிரிவை புறந்தள்ளும் வகையில் ஆங்கிலவழிப் பிரிவுகளை திணித்துக் கொண்டிருக்கும் தமிழக முதலமைச்சர் அவர்கள் தமிழ் மொழியைக் காப்பதற்காக இந்தித் திணிப்பை எதிர்ப்பதாகவும் இந்திய அரசு அலுவல் மொழிகளில் ஒன்றாக தமிழை ஏற்க வேண்டும் என்று வலியுறுத்துவதாகவும் தலைமை அமைச்சருக்கு கடிதம் எழுதியிருப்பது நகைமுரணாக உள்ளது.

உண்மையில் தமிழ் மொழியின் மீது தமிழக முதல்வருக்கு அக்கறை இருந்தால், சட்டப்படி தமிழக அலுவல் மொழியாக உள்ள தமிழை குறைந்தது பன்னிரெண்டாம் வகுப்பு வரையிலாவது கட்டாய மொழிப் பாடமாகவும், கட்டாயப் பயிற்றுமொழியாகவும் சட்டம் இயற்ற வேண்டும்.

தமிழக முன்னாள் முதல்வர் கலைஞர் கருணாநிதி அவர்கள் இந்தித் திணிப்பைக் கண்டித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஆனால், தமிழக அரசு தமிழ்வழிக் கல்வியை புறக்கணிக்கும் வகையில் ஆங்கிலவழிப் பிரிவுகளைப் பள்ளிக் கல்வியில் திணிப்பதைக் கண்டித்து, அத்திட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி சுட்டு விரலைக் கூட அவர் அசைக்கவில்லை; அமைதி காக்கிறார். இவரைப் போல், இப்பொழுது இந்தித் திணிப்பை எதிர்க்கும் இன்னும் சில தலைவர்களும் தமிழக பள்ளிக் கல்வியில் ஆங்கிலவழிப் பிரிவுகள் திணிக்கப்படுவதை எதிர்த்துப் போராடவில்லை. இவர்களுடைய இந்தித் திணிப்பு எதிர்ப்பு, எந்த வகையில் மொழிக் கொள்கையில் தமிழ் மொழியை முதன்மைப்படுத்தும் நிலையில் உள்ளது என்பது வினாக்குறியாக உள்ளது.

எனவே, தமிழ் உணர்வாளர்கள் – தமிழ் மக்கள் வெற்று ஆரவாரமாகவும் தமிழ் மக்களைக் கவரும் ஓர் உத்தியாகவும் மட்டுமே இந்தித் திணிப்பை எதிர்க்கும் அரசியல் தலைவர்களின் போலித்தனத்தையும் இந்த நேரத்தில் ஒப்பிட்டுப் பார்த்து சரியான மொழிக் கொள்கையை வளர்த்தெடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் தொடக்கிக் கல்வி முதல் ஆராய்ச்சிக் கல்வி வரை தமிழே கட்டாய மொழிப் பாடமாகவும், பயிற்று மொழியாகவும் இருக்க வேண்டும் என்பதும், தமிழ்நாட்டின் இந்திய அரசு அலுவலகங்கள் உள்ளிட்ட  அனைத்து அலுவலகங்களிலும் உயர்நீதிமன்றம் உள்ளிட்ட அனைத்து நீதிமன்றங்களிலும் தமிழே அலுவல் மொழியாக இருக்க வேண்டும் என்பதும் மட்டுமே சரியான மொழிக் கொள்கை என்பதை தமிழ் மக்கள் ஏற்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: தஞ்சை

Monday, February 4, 2013

மதுரையில் இந்தி பெயர் பலகைகள் வைக்கமாட்டோம் என ஆட்சியர் அறிவிப்பு - த.தே.பொ.க. கோரிக்கை வெற்றி!




மதுரை மாநகரில் இந்திப் பெயர் பலகைகள் வைக்கப்பட மாட்டாது என மாவட்ட ஆட்சியர் மிஸ்ரா முகநூல் வழியாக அறிவிப்பு வெளியிட்டுள்ளார். 

மதுரை மாநகரில், இந்தி - ஆங்கிலம் - தமிழ் ஆகிய மும்மொழிகளிலும், சுற்றுலாப் பயணிகளின் வசத்திக்காக பெயர் பலகைகள் வைக்கப்படும் என மாநகராட்சி ஆணையர் திரு. ஆர்.நந்தகோபால் அவர்கள் 20.01.2013 அன்று கூறியதாக தினமணி நாளேட்டில் செய்தி வெளிவந்தது. 

சங்கம் வைத்து தமிழ் வளர்த்த மதுரை மாநகரின் வீதிகளில் இந்தி பெயர் பலகைகள் வைப்பது தமிழ் உணர்வாளர்களிடையே கடும் அதிருப்தியை ஏற்படுத்தியது. 1938லும் 1965லும் இந்தி கூடாது என உயிரீகம் செய்த ஈகியரின் நினைவு நாளான மொழிப் போர் நாள் 25.01.2013 அன்று, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மதுரையில் தமிழ் உணர்வாளர்களை ஒன்றுதிரட்டி ஆர்ப்பாட்டம் நடத்தியது. 

இது குறித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைகைம கட்சி சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன் அவர்கள் எழுதிய கடிதம் மதுரை மாநகராட்சி ஆணையர் மற்றும் மதுரை மாவட்ட ஆட்சியர் ஆகியோரது முகநூல் முகவரிக்கு அனுப்பப்பட்டது. நமது கோரிக்கைக்கு வலு சேர்க்கும் விதமாக, அக்கடிதத்திற்கு ஆதரவுத் தெரிவித்து விருப்பங்களும், கருத்துகளும் அங்கு பதியப்பட்டு வருகின்றன.

தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, தமிழர் பண்பாட்டு நடுவம் அமைப்பாளர் திரு ராஜ்குமார் பழனிசாமி, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் கா.திருமுருகன், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு.களஞ்சியம் உள்ளிட்ட தமிழின ஆதரவு அமைப்புத் தலைவர்களும், உணர்வாளர்களும் நமது கோரிக்கைக்கு வலுசேர்க்கும் விதமாக கருத்துகளை அப்பகத்தில் தெரிவித்தனர்.

இந்நிலையில், முகநூல் வழியாக பதில் அளித்த, மதுரை மாவட்ட ஆட்சியர், சுற்றுலாப் பயணிகளின் வசதிக்காகத்தான் அத்திட்டம் செயல்படுத்தப்படுவதாகவும் அதில் வேறு உள்நோக்கம் ஏதுமில்லை என்றும் பதில் அளித்தார். இந்நிலையில், இன்று மாலை இந்திப் பெயர் பலகைகள் வைக்கும் முடிவை கைவிடுவதாக அவர் முகநூல் வழியாக அவர் அறிவித்துள்ளார். 

அவரது அறிவிப்பை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மகிழ்வுடன் வரவேற்கிறது. கோரிக்கைக்காக மதுரையில் 25.01.2013 அன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட த.தே.பொ.க. தோழர்களுக்கும், முகநூல் வழியாக கருத்துப் போராட்டம் நடத்திய தமிழ் உணர்வாளர்களுக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நன்றி தெரிவித்துக் கொள்கிறது..!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT