உடனடிச்செய்திகள்
Showing posts with label வேளாண் சட்டங்கள்!. Show all posts
Showing posts with label வேளாண் சட்டங்கள்!. Show all posts

Saturday, July 3, 2021

பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவை! - பெ. மணியரசன் அறிக்கை!



பனை மரப் பாதுகாப்புச் சட்டம் தேவை!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் அறிக்கை! 


கஜா புயலால் கூட சாய்க்க முடியாத பனை மரங்களைத் தமிழ்நாட்டில் பண வேட்டைக்காரர்கள் வெட்டிச் சாய்க்கிறார்கள். தமிழ்நாட்டில் தென் மாவட்டங்களிலும் வட மாவட்டங்களிலும் பனை அழிப்பு வணிகம் வேகமாக நடந்து கொண்டுள்ளது. திருவாரூர், நாகை மாவட்டங்களில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு உணர்வுள்ள அமைப்புகள் பண வேட்டைக் காரர்களின் பனை வேட்டையை அங்கங்கே தடுத்துப் பேராடி வருகின்றனர். 

திருத்துறைப்பூண்டி மற்றும் அதை ஒட்டிய சேகல், கீழ்வேளூர், தீவம்பாள்பட்டினம், கொருக்கை, மீனம்பநல்லூர், மாங்குடி மற்றும் வேதாரணியம் பகுதி கிராமங்கள் போன்ற பகுதிகளில் உள்ள பனை மரங்களை செங்கல் சூளைகளுக்கும், தொழிற்சாலைகளுக்கும் எரிபொருளாகப் பயன்படுத்த சரக்குந்துகளில் தொடர்ந்து ஏற்றிச் செல்கிறார்கள். 

ஒரு பனை மரத்தை 200 ரூபாய்க்கு எரிபொருளாக விற்கும் அவலம் நெஞ்சை பதைக்க வைக்கிறது. பசுமைச்சூழல் பாதுகாப்பு இயக்க ஒருங்கிணைப்பாளர் பருத்திச்சேரி ராஜாவும், அந்த அமைப்பைச் சேர்ந்தவர்களும், மற்றும் நாம் தமிழர் கட்சியைச் சேர்ந்தவர்களும் அப்பகுதிகளில் வெட்டப்பட்ட பனை மரங்களை ஏற்றிச் சென்ற சரக்குந்துகளை மறித்துக் காவல்துறையினரிடம் ஒப்படைத்து வரும் செய்திகள் நாளேடுகளிலும், செய்தி ஊடகங்களிலும் வந்து கொண்டுள்ளன. ஆனாலும் பனைவேட்டை தொடர்ந்து கொண்டுதான் உள்ளது. 

தமிழர்களை இனப்படுகொலை செய்து அழித்த இலங்கை அரசு கூடப் பனை மரங்களை வெட்டத் தடை விதித்துக் கடும் சட்டம் இயற்றியுள்ளதாகக் கூறுகிறார்கள். ஆனால், தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட சிறை அடைப்பு எதுவுமின்றி பனைவேட்டையர்கள் தப்பி விடுகிறார்கள். 

தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழகம் 2018இல் வெளியிட்ட அறிக்கை ஒன்றில், இந்தியாவில் 9 கோடிப் பனை மரங்கள் இருப்பதாகவும், அதில் 5½ கோடி மரங்கள் தமிழ்நாட்டில் இருப்பதாகவும் கூறுகிறது. ஆனால், அதில் இன்று 2½ கோடி பனை மரங்கள்தாம் இருக்கும் என்று சுற்றுச்சூழல் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ளோர் கூறுகிறார்கள். 

தமிழ்நாட்டின் அடையாளச் சின்னம் பனை மரம்! வேர் தொடங்கி பனை மட்டை இலை நுனி வரை பயன்படும் மரம் அது! நம்முடைய பழைய இலக்கியங்களைப் பதிய வைத்துப் பாதுகாத்தது பனை ஓலைகள்! ஆழத்தில் கிடக்கும் நிலத்தடி நீரை மேலே இழுத்து, மேல் மண்ணில் ஈரப்பதம் காப்பது பனை வேர்களே! 

கிளைகள் இல்லாத பனைமரம் நுங்கு, பதனீர், பனங்கற்கண்டு, பனைவெல்லம், பனம்பழம், பனங்கிழங்கு என்று எத்தனை கிளை வகை உணவுப் பொருட்களைத் தன்னுள் பொதிய வைத்துள்ளது. வீடுகட்ட மிக வலுவான மரம் பனை! 

தென்னந்தோப்பு வளர்க்கிறோம். ஆனால், பனந்தோப்பு வளர்ப்பதில்லை. பழைய மரங்கள், தானே முளைத்த மரங்கள், ஆர்வலர்கள் அங்கங்கே விதைத்த மரங்கள் என்று பனை மரங்கள் வளர்கின்றன.

அவற்றைத் தொழிற்சாலைக் கொள்ளை நோய் அழித்துவிடாமல் பாதுகாக்கும் பொறுப்பு பசுமை ஆர்வலர்களுக்கு மட்டுமல்ல, அனைத்துத் தமிழ் மக்களுக்கும் உண்டு. கூடுதலான பொறுப்பு தமிழ்நாடு அரசுக்கு இருக்கிறது, 

பனைப் பாதுகாப்புக்கென்று புதிய சட்டம் இயற்ற வேண்டும்; அதில் சிறைத் தண்டனைப் பிரிவு சேர்க்க வேண்டும். அத்துடன், பனைப் பாதுகாப்பு, பனை வளர்ப்பு விழிப்புணர்வை அரசும் பரவலாக மக்களிடையே கொண்டு செல்ல வேண்டும் என்று தமிழ்நாடு அரசைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Wednesday, January 13, 2021

வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினர்! நீதிக்கு முரண்பாடு-ஐயா பெ. மணியரசன் அறிக்கை!




வேளாண் சட்டங்களை ஆதரிப்பவர்களே
உச்ச நீதிமன்றத்தின் ஆய்வுக்குழுவினர்!
நீதிக்கு முரண்பாடு

காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர்
ஐயா பெ. மணியரசன் அறிக்கை!

 
வேளாண் சீர்திருத்தச் சட்டங்கள் என்ற பெயரில் மோடி அரசு இயற்றியுள்ள மூன்று சட்டங்களும் உழவர் ஒழிப்புச் சட்டங்கள் என்பதை உணர்ந்து கொண்ட உழவர்கள், இந்தியா முழுவதும் அவற்றை எதிர்த்துப் போராடி வருகிறார்கள். 

வடமாநிலங்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க வகையில் 50 நாட்களுக்கு மேலாக புதுதில்லியை முற்றுகையிட்டு உழவர் பெருமக்கள் வெற்றிகரமாகப் போராடி வருகிறார்கள். அவர்களை பேச்சுவார்த்தைக்கு அழைத்து சில வாக்குறுதிகள் கொடுத்து, போராட்டத்தை முடக்கி விடலாம் என்று முனைந்த மோடி அரசின் முயற்சியை உழவர் போராட்டம் முறியடித்துவிட்டது. 

உழவர் போராட்டத்தை முறியடிக்கும் அடுத்த உத்தியாக, உச்ச நீதிமன்றத்தை மோடி அரசு பயன்படுத்த முயல்வது வேதனைக்குரியது. 

உச்ச நீதிமன்றம் மூன்று சட்டங்களையும் செயல்படாமல் தற்காலிகமாக நிறுத்தி வைக்கும் ஆணையை வெளியிட்டு, அத்துடன் மூன்று சட்டங்கள் பற்றி முடிவு செய்வதற்கான நான்கு பேர் அடங்கிய ஆய்வுக்குழுவையும் அமர்த்தி இருக்கிறது. இந்த நால்வரும் ஏற்கெனவே இம்மூன்று சட்டங்களையும் ஆதரித்துக் கட்டுரைகள் எழுதியவர்கள் என்பதை சமூக வலைத்தளங்களும், செய்தி ஏடுகளும் அம்பலப்படுத்தி விட்டன. 

இந்த நால்வரில் ஒருவரான பிரமோத் குமார் ஜோஷி என்பவர், “மூன்று சட்டங்களையும் முற்றிலும் நீக்க வேண்டும் என்பது முரணான கோரிக்கை” என்று நேற்றே (12.01.2021) ஊடகங்களுக்குப் பேட்டி கொடுத்திருக்கிறார். அடுத்த உறுப்பினர் அசோக் குலாத்தி, மூன்று சட்டங்களையும் வரவேற்று, “மிகப்பெரிய துணிச்சலான நடவடிக்கைகள்; சரியான திசையில் எடுக்கப்பட்டிருக்கின்றன. இச்சட்டங்கள் உழவர்களுக்கும், நுகர்வோருக்கும் பயன்படும்” என்று ஏற்கெனவே கூறியுள்ளார். மூன்றாவது உறுப்பினரான புபீந்தர்சிங் மான், “இந்தச் சட்டங்கள் வரவேற்கத் தக்கவை. இந்திய அரசு ஏற்கெனவே முன்மொழிந்துள்ள திருத்தங்களை நிறைவேற்றி விட்டால் முழுமையான பயன் கிடைக்கும்” என்று கூறியுள்ளார். 

இவ்வாறு இந்த மூன்று சட்டங்களையும் ஏற்கெனவே ஆதரித்து வரும் நபர்களைக் கொண்ட இந்த நால்வர் குழு நடுநிலையான குழு அல்ல என்பது வெளிப்படையான உண்மை. நடுநிலையற்ற ஒரு குழுவை இந்தியாவின் தலைமை நீதிமன்றம் அமைத்திருப்பது மிகமிக வேதனை அளிக்கிறது; அதிர்ச்சயளிக்கிறது! 

இந்தக் குழுவை முற்றிலுமாகப் புறக்கணிப்போம் என்று உழவர்களின் அனைத்திந்தியப் போராட்டக் குழுத் தலைவர்கள் அறிவித்திருப்பது வரவேற்கத்தக்கது; பாராட்டத்தக்கது! மூன்று சட்டங்களையும் முற்றிலும் நீக்கிட போராட்டம் தொடரும் என்று அவர்கள் அறிவித்திருப்பதும் வரவேற்கத்தக்கது! 

தமிழ்நாட்டில் உழவர்கள் உள்ளிட்ட அனைத்துப் பகுதி மக்களும், இந்த மூன்று சட்டங்களையும் நீக்கிட வலியுறுத்தி சனநாயகப் போராட்டங்களை மேலும் மேலும் வலுப்படுத்துவதே இன்றைய தேவையாகும். உச்ச நீதிமன்றம் தனது முடிவை மறு ஆய்வு செய்து, நீதியைப் பாதுகாக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன். 

மூன்று சட்டங்களையும் நீக்கிட வலியுறுத்தி காவிரி உரிமை மீட்புக் குழு நடத்திவரும் போராட்டங்கள் தொடரும் என்பதையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002

Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com


 

Monday, January 4, 2021

வேளாண் சட்டங்கள் அல்ல உழவர் ஒழிப்புச் சட்டங்கள்! பகுதி-4 - ஐயா பெ.மணியரசன் அவர்களின் உரை!


வேளாண் சட்டங்கள் அல்ல 

உழவர் ஒழிப்புச் சட்டங்கள்! பகுதி-4 



30.12.2020 அன்று காவிரி உரிமை மீட்புக்குழு சார்பில், மன்னார்குடியில் இயற்கை வாழ்வியல் அறிஞர் ஐயா நம்மாழ்வார் அவர்களின் ஏழாம் ஆண்டு நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. அந்நிகழ்வில் ஐயா பெ.மணியரசன் அவர்களின் சிறப்புரையில் இருந்து நிறைவுப் பகுதி. 




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Wednesday, December 16, 2020

"தஞ்சை போராட்ட களம்" அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு தஞ்சையில் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறது. காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார்.

"தஞ்சை போராட்ட களம்"


அகில இந்திய விவசாய ஒருங்கிணைப்புக் குழு தஞ்சையில் மூன்றாவது நாளாக காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறது. 

இன்று காலை காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் இப்போராட்டத்தில் பங்கேற்று உரையாற்றினார். 




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, December 15, 2020

"விவசாய நிலங்களை பறிக்க மோடி தந்திரமே வேளாண் சட்டங்கள்!" “Newsglitz ஊடகத்துக்கு” ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேர்காணல்!

"விவசாய நிலங்களை பறிக்க மோடி தந்திரமே வேளாண் சட்டங்கள்!"


“Newsglitz ஊடகத்துக்கு”

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் அவர்கள் நேர்காணல்!




கண்ணோட்டம் வலையொளியில்..!!!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT