உடனடிச்செய்திகள்
Showing posts with label தஞ்சை. Show all posts
Showing posts with label தஞ்சை. Show all posts

Saturday, October 12, 2019

“மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” - 10 நாள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம்!


“மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” காவிரி உரிமை மீட்புக் குழு - 10 நாள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம்! தொடங்குமிடம் – பூம்புகார், நிறைவடையும் இடம் – மேட்டூர் அணை

இன்று (12.10.2019) காவிரி உரிமை மீட்புக் குழுக் கூட்டம், தஞ்சையில் ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் தலைமையில் நடைபெற்றது. இதில், காவிரி உரிமை மீட்புக் குழுவின் பொருளாளர் திரு. த. மணிமொழியன், விடுதலைத் தமிழ்ப்புலிகள் கட்சித் தலைவர் திரு. குடந்தை அரசன், தமிழர் தேசிய முன்னணி பொதுச்செயலாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், இந்திய சனநாயகக் கட்சி தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. சிமியோன் சேவியர்ராசு, தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவா திரு. க. செகதீசன், மனித நேய சனநாயகக் கட்சி பொறுப்பாளர் திரு. அகமது கபீர், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர் பழ. இராசேந்திரன், இந்திய யூனியன் முசுலீம் லீக் திரு. செய்னுலாபுதீன், தமிழ்த்தேசியப் பாதுகாப்புக் கழக மாநிலத் துணைச் செயலாளர் திரு. சி. குணசேகரன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் மாவட்டச் செயலாளர் திரு. ச. கலைச்செல்வம், காவிரி உரிமை மீட்புக் குழு முன்னணிச் செயல்வீரர்கள் வெள்ளாம் பெரம்பூர் திரு. து. இரமேசு, அல்லூர் திரு. கரிகாலன், திரு. தனசேகர், திரு. பார்த்திபன், திருவாரூர் திரு. சூனா செந்தில், விடுதலைத் தமிழ்ப்புலிகள் தஞ்சை மாவட்டச் செயலாளர் திரு. வெற்றிச்செல்வன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அதில் பின்வரும் தீர்மானங்கள் நிறைவேற்றப் பட்டன.

தீர்மானம் – 1 : “மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” 10 நாள் மக்கள் எழுச்சிப் பயணம்

தமிழ்நாட்டுக்கு வரும் காவிரியின் குறுக்கே கர்நாடகம் திட்டமிட்டுள்ள மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க தமிழ் மக்களிடம் எழுச்சியை உருவாக்கும் பொருட்டு - “மேக்கேத்தாட்டை தடுப்போம்! காவிரியைக் காப்போம்!” என்ற தலைப்பில், காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் வரும் 2019 நவம்பர் 11ஆம் நாள் தொடங்கி 20ஆம் நாள் வரை – பத்து நாட்கள் மக்கள் எழுச்சிப் பரப்புரைப் பயணம் நடத்துவதென காவிரி உரிமை மீட்புக் குழு தீர்மானித்துள்ளது.

காவிரி கடலில் கலக்கும் நாகை மாவட்டம் – பூம்புகாரில் தொடங்கி, பல்வேறு கிராமங்கள் மற்றும் நகரங்கள் வழியாகப் பயணித்து, சேலம் மாவட்டம் - மேட்டூர் அணையில் இப்பரப்புரைப் பயணம் நிறைவடைகிறது.

இப்பரப்புரைப் பயணத்தின்போது, வழியெங்கும் உள்ள நகரங்கள் மற்றும் கிராமங்களில் வாழும் தமிழ் மக்களும், உழவர் பெருமக்களும் காவிரி உரிமை மீட்புக் குழுவின் இந்த எழுச்சிப் பரப்புரைக்குப் பேராதரவு தந்து பங்கேற்குமாறு காவிரி உரிமை மீட்புக் குழு அன்புரிமையுடன் அழைக்கிறது!

முதல்வருக்கு வேண்டுகோள் - "மேக்கேத்தாட்டு அணையைத் தடுக்க தமிழ்நாடு அரசு மக்கள் எழுச்சியை உருவாக்க வேண்டும்!"

காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பையும் இறுதித் தீர்ப்பையும் செயல்படுத்த மறுத்ததைப் போலவே உச்ச நீதிமன்றத் தீர்ப்பையும் (16.02.2018) செயல்படுத்த மறுக்கிறது கர்நாடக அரசு. அதற்கான ஏற்பாடுதான் மேக்கேதாட்டு மிச்ச நீர் அணை!

மிச்ச நீர் என்பது கர்நாடகத்தின் கிருஷ்ணராஜ சாகர், கபினி, அர்க்காவதி அணைகள் நிரம்பி வெளியேறும் வெள்ள நீர் ஆகும். இந்த வெள்ள நீர் இப்போது நேரடியாக மேட்டூர் அணைக்கு வந்து விடுகிறது. இதைத் தடுத்து முழுமையாகக் கர்நாடகம் புதிய பாசனத்திற்கும் குடிநீர், தொழிற்சாலைத் தேவைகளுக்கும் பயன்படுத்திக் கொள்ளும் திட்டம்தான் மேக்கேதாட்டு மிச்ச நீர் திட்டம்!

கிருஷ்ணராஜ சாகர், கபினி, அர்க்காவதி அணைகளின் வெள்ள நீர் வந்து கலக்குமிடம் கர்நாடகத்தின் ராம் நகர் மாவட்டத்தின் கனகபுரம் வட்டத்தின் சங்கமம் என்ற இடமாகும். அதிலிருந்து 3 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது மேக்கேதாட்டு (ஆடு தாண்டு காவிரி). இரு பக்கமும் 1,000 அடி உயர மலைகளுக்குக் கீழே காவிரி ஓடுகிறது. அந்த இடத்திலிருந்து தமிழ்நாட்டு எல்லை 3.9 கிலோ மீட்டர்தான்!

இந்த மேக்கேதாட்டு அணையின் திட்டமிட்ட தண்ணீர் கொள்ளளவு 67.16 ஆ.மி.க. (T.M.C.) இப்போது கர்நாடகத்தில் உள்ள கிருஷ்ணராஜ சாகர், ஏமாவதி, கபினி, ஏரங்கி, அர்க்காவதி அணைகளின் மொத்தக் கொள்ளளவு நீர் 114 ஆ.மி.க. (T.M.C.). ஆனால் இவற்றிலிருந்து வெளியேறும் மிச்ச நீரைத் தேக்கும் மேக்கேதாட்டு அணையின் கொள்ளளவோ 67.16 ஆ.மி.க.!

தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரை தட்டுப்பாடில்லாமல், மாதாமாதம் திறந்துவிடத்தான் மேக்கேத் தாட்டு அணை கட்டுகிறோம் என்று கர்நாடகம் கூறுவது நூறு விழுக்காடுப் பொய்! கடந்த காலங்களில் இப்படிச் சொல்லித்தான் ஏமாவதி, ஏரங்கி, கபினி, அர்க்காவதி, சுவர்ணவதி அணைகளைக் கட்டி கர்நாடக அரசு தமிழ்நாட்டுத் தண்ணீரை அபகரித்துக் கொண்டது. மேக்கேத்தாட்டு அணை மட்டும் கட்டப்பட்டுவிட்டால், எப்படிப்பட்ட பெரிய வெள்ளமானாலும் ஒரு சொட்டுத் தண்ணீர் கூட மேட்டூருக்கு வராது.

மிகை வெள்ளத்திலிருந்து தனது அணைகளைப் பாதுகாத்துக் கொள்வதற்காக – எப்பொழுதாவது வெளியேற்றும் நீர் கூட தமிழ்நாட்டின் மேட்டூர் அணைக்குப் போய் விடக்கூடாது என்பதற்காகவே கட்டப்படும் தடுப்பு நீர்த்தேக்கம்தான் மேக்கேதாட்டு அணை!

உச்ச நீதிமன்றம் 16.2.2018 அன்று வழங்கிய தீர்ப்பு 15 ஆண்டுகளுக்குள் மாற்றப்பட முடியாது. அத்தீர்ப்பின் பிரிவு XI பின்வருமாறு கூறுகிறது :

“கீழ்ப்பாசன மாநிலங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ள தண்ணீர் வரத்தைப் பாதிக்கும் வகையில் மேல் பாசன மாநிலம் எந்த நடவடிக்கையும் எடுக்கக் கூடாது. ஆனால், தொடர்புடைய மாநிலங்கள், தங்களுக்குள் கலந்து பேசி, ஒத்த கருத்து அடிப்படையில் தண்ணீர் திறந்து விடும் முறைகளில் மாற்றம் செய்து கொள்ளலாம். இவ்வாறு மாற்றிக் கொள்ள காவிரி ஒழுங்காற்றுக் குழுவின் அனுமதி வேண்டும்”.

இதன் பொருள், புதிய நீர்த்தேக்கம் கட்டிக் கொள்ளலாம் என்பதல்ல! மாதவாரியாகத் திறந்து விட வேண்டிய தண்ணீரின் அளவை தங்களுக்குள் கலந்து பேசி ஒரு மாதத்தில் கூட்டியோ, குறைத்தோ திறந்துவிட்டு அடுத்த மாதங்களில் அதை ஈடுகட்டிச் சரி செய்து கொள்ளலாம் என்பதே இதன் பொருள்.

உச்ச நீதிமன்றத் தீர்ப்பின் விதி XVIII பின்வருமாறு கூறுகிறது :
“தீர்ப்பாயத் தீர்ப்பிற்கு முரண்பாடு இல்லாமல், ஒரு மாநிலம் தனது எல்லைக்குள் தண்ணீர்ப் பயன்பாட்டை ஒழுங்குபடுத்திக் கொள்வதற்கும், அனுபவிப்பதற்கும் உரிமை உண்டு”.

இதன் பொருள் என்ன? உச்ச நீதிமன்றம் கர்நாடகத்திற்கு ஒதுக்கியுள்ள 284.75 ஆ.மி.க. தண்ணீரை – தமிழ்நாட்டிற்கு ஒதுக்கியுள்ள 177.25 ஆ.மி.க. தண்ணீரை, அந்தந்த மாநிலமும் தனது வசதிற்கேற்ப, தேவைக்கேற்ப பயன்படுத்திக் கொள்ளலாம் என்பதுதான் இதன் பொருள். கர்நாடகம் தனக்கு ஒதுக்கப்பட்டுள்ள 284.75 ஆ.மி.க. தண்ணீரை எந்தெந்த பகுதிகளுக்குப் பயன்படுத்திக் கொள்ளலாம் என இதன்படி முடிவு செய்து கொள்ளலாம்! ஆனால், கர்நாடகம் தமிழ்நாட்டின் எல்லையோரத்தில் 67.16 ஆ.மி.க. கொள்ளளவில் புதிய நீர்த்தேக்கம் கட்டிக் கொள்ளலாம் என்பது இதன் பொருள் அல்ல.

மேக்கேதாட்டு அணைக்கு அனுமதி கோரி, இந்திய அரசின் சுற்றுச்சூழல், வனத்துறை அமைச்சகத்திற்கு அனுப்பியுள்ள மனுவில் கர்நாடக அரசு மேற்கண்ட XVIII ஆவது விதியைத் தவறாக மேற்கோள் காட்டி வாதம் செய்துள்ளது.

கர்நாடகத்திடமும், இந்திய அரசிடமும் இந்த சட்ட வாதங்களைப் பேசிப் பயனில்லை என்பதுதான் தமிழ்நாட்டின் கடந்தகாலப் பட்டறிவு! ஏமாவதி, ஏரங்கி, கபினி அணைகளைத் தமிழ்நாட்டின் ஒப்புதல் இல்லாமல் கட்டக் கூடாது என்று தமிழ்நாடு அரசு 1968லிருந்து கர்நாடக அரசுக்கும் இந்திய அரசுக்கும் எதிர்ப்புத் தெரிவித்துக் கடிதங்கள் எழுதியது; உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டது.

ஆனால் கர்நாடகம் அந்த சட்ட விரோத அணைகளைக் கட்டி முடித்திட, இந்திய அரசு கொல்லைப் புற வழியாக அனுமதித்தது. மேக்கேதாட்டு அணையும் இது போல் கட்டப்படாமல் தடுக்க வேண்டுமானால், “இந்திய ஆட்சியாளர்க்குக் கடிதம் கொடுத்தேன், உச்ச நீதிமன்றத்தில் வழக்குப் போட்டேன்” என்று முதலமைச்சர் பட்டியல் அடுக்கினால் போதாது. ஏமாந்து விடுவோம்.

“இந்திய அரசே, மேக்கேதாட்டு அணை முயற்சியைத் தடுத்திடு; தமிழ்நாட்டின் காவிரி உரிமையைப் பறிக்க, கர்நாடகத்திற்கு துணை போகாதே!” என்று வெளிப்படையாக இந்திய அரசுக்குத் தமிழ்நாடு அரசு கோரிக்கை வைத்து அரசியல் அழுத்தம் தர வேண்டும். இந்தக் கோரிக்கையைத் தமிழ்நாட்டின் மக்கள் முழக்கமாக மாற்றிட குமரி முனையிலிருந்து கும்மிடிப்பூண்டி வரையுள்ள மக்கள் “காவிரி எழுச்சி நாள்” கடைபிடிக்கத் தமிழ்நாடு அரசு ஏற்பாடு செய்ய வேண்டும். இதற்காக அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டுக் கூட்டத்தைத் தமிழ்நாடு அரசு நடத்த வேண்டும்.

கர்நாடகம் ஏமாவதி, ஏரங்கி, கபினி ஆகிய சட்டவிரோத அணைகள் கட்டிய போது, அன்றைய ஆளுங்கட்சியான தி.மு.க. அன்றைய இந்திய ஆளுங்கட்சியான இந்திரா காங்கிரசுடன் கூட்டணியில்தான் இருந்தது; தி.மு.க. ஆட்சி, இந்த அணைகள் கட்ட எதிர்ப்புத் தெரிவித்தது என்றாலும், அணை கட்ட நடுவண் அரசு அனுமதித்தது என்பதை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கவனத்தில் கொள்ள வேண்டும். பா.ச.க.வுடன் அ.இ.அ.தி.மு.க. வைத்திருக்கும் கூட்டணியின் வரம்பை உணர்ந்து கொள்ள வேண்டும்.

மேக்கேத்தாட்டு அணையைத் தடுத்து, தமிழ்நாட்டிற்குரிய காவிரி நீரைப் பெற்றிட தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மேற்கண்டவாறு செயல்பட வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 2 : 21 விழுக்காடு ஈரப்பதம் உள்ள நெல்லையும் கொள்முதல் செய்க!

காவிரிப்படுகை மாவட்டங்களில் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி பல்வேறு துன்பங்களுக்கிடையே நம் உழவர்கள் குறுவை சாகுபடி செய்திருக்கிறார்கள். அறுவடைக்குப் பின் அந்த நெல்லை விற்பதற்கு வழியில்லாமல் திண்டாடுகிறார்கள். தமிழ்நாடு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் 17 விழுக்காட்டிற்கு மேல் ஈரப்பதம் இருந்தால் வாங்க மறுக்கிறார்கள். இதனால் அங்கங்கே நெல் கொள்முதல் நிலையங்களுக்கு முன்பாக நெல் மூட்டைகள் குவிந்து கிடக்கின்றன. நெல்லுக்கு சேதாரம் ஏற்படுகிறது.

கடந்த காலங்களில் 21 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லை தமிழ்நாடு அரசு கொள்முதல் செய்திருக்கிறது. இப்பொழுதும் அதுபோல் 21 விழுக்காடு வரை ஈரப்பதம் உள்ள நெல்லைக் கொள்முதல் செய்யுமாறு தமிழ்நாடு அரசு – நேரடி கொள்முதல் நிலையங்களுக்கு வழிகாட்ட வேண்டுமென்றும், கொள்முதல் நிலையம் திறக்கப்படாத ஊர்களில் உடனடியாகத் திறக்க வேண்டுமென்றும் காவிரி உரிமை மீட்புக் குழு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களை கனிவுடன் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 3 : பயிர்க்காப்பீட்டுத் திட்டத்தில் பலன்கள் கிடைக்காமல் தவிப்பு

கடந்த 2018 – 2019 ஆம் ஆண்டுக்கான வேளாண் பயிர்க் காப்புத் திட்டத்தில், காப்பீட்டுத் தொகை கிடைக்காமல் பல்வேறு கிராமங்களில் உழவர்கள் பெருந்தொல்லைக்கு ஆளாகி உள்ளார்கள். பல கிராமங்கள் விடுபட்டுப் போயுள்ளன. ஒரே கிராமத்தில் ஒரு பகுதி விவசாயிகள் விடுபட்டுள்ளனர்.
ஒரே கிராமத்தில் இழப்பீட்டுத் தொகை நிர்ணயிப்பதிலும் வேறுபாடு கடைபிடிக்கப்பட்டு சிக்கல்கள் எழுந்துள்ளன.

தமிழ்நாடு அரசு, உடனடியாக இதில் தலையிட்டு பயிர்க் காப்பீட்டுத் திட்ட நிறுவனங்களுக்கு வழிகாட்டுதல் செய்து, எல்லா கிராமங்களுக்கும், எல்லா உழவர்களுக்கும் பயிர்க் காப்பீட்டு இழப்பீடு கிடைக்க விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழுக் கேட்டுக் கொள்கிறது.

தீர்மானம் – 4 : உழவர்களுக்கு வட்டியில்லா வேளாண் கடன்

வேளாண் விளை பொருட்களுக்கு உரிய இலாப விலை கொடுக்காமல், அடிமாட்டு விலைக்கு விற்கும் நிலையைத்தான் இந்திய அரசும், தமிழ்நாடு அரசும் வழங்கியிருக்கிறது. இதனால், உழவர்கள் தொடர்ந்து கடனாளி ஆவதும், உயிரை மாய்த்துக் கொள்வதும் நடந்து வருகிறது.

இப்பின்னணியைக் கருத்தில் கொண்டு, இந்திய அரசு வங்கிகள் உழவர்களுக்கு வட்டியில்லா வேளாண் கடன் கொடுக்க உடனடியாக ஏற்பாடு செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது. தமிழ்நாடு அரசு இந்திய அரசை வலியுறுத்தி, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகளில் வட்டியில்லா வேளாண் கடன் கிடைக்க ஏற்பாடு செய்ய வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு கேட்டுக் கொள்கிறது.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 90251 62216, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, April 7, 2019

2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம். மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்!

2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம்.  மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” – தமிழ்நாடு சிறப்புப் பேரவைக் கூட்டம், இன்று (07.04.2019) தஞ்சை பெசண்ட் அரங்கில் தோழர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. தோழர் செம்மலர் வரவேற்றார். மகளிர் ஆயம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா மகளிர் ஆயத்தின் செயல்பாட்டு அறிக்கையை முன்வைத்துப் பேசினார். முன்னதாக, மகளிர் ஆயத்தின் மறைந்த முன்னோடிகள் சென்னை சாதிக்குல் ஜன்னா - தஞ்சை சரசுவதி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

மகளிர் ஆயத்தின் தலைவராக தோழர் ம. இலட்சுமி, துணைத் தலைவராக தோழர் பே. மேரி, பொதுச்செயலாளராக தோழர் அருணா, துணைப் பொதுச்செயலாளராக தோழர் க. செம்மலர், பொருளாளராக தோழர் பெண்ணாடம் கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 15 பெண் தோழர்களைக் கொண்ட புதிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.

சிறப்புப் பேரவையையும், புதிய பொறுப்பாளர்களையும் வாழ்த்தி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை ஆகியோர் உரையாற்றினர். நிறைவில், தோழர் இளவரசி நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம்!

தமிழ்நாடு அரசே மது விற்பனை நடத்தி தெருவெங்கும் மது ஆறாக ஓடிக் கொண்டிருப்பதற்கும், அதன் காரணமாக ஒவ்வொரு குடும்பமும் சீரழிந்து வருகின்றது என்பதற்கும் புள்ளி விவரங்கள் தேவையில்லை.

டாஸ்மாக் மதுவால் ஒவ்வொரு நாளும் குடும்ப அமைதி குலைந்து கொண்டிருக்கிறது. விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குற்றங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளது; பாலியல் வன்முறைகளுக்குப் பின்னணியில் மதுப்பழக்கம்தான் இருக்கிறது என்பதை எல்லா ஊடகங்களும், நீதிமன்றங்களும் சான்று கூறுகின்றன. மருத்துவ வல்லுனர்களும் இதைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மது அருந்துவோர் உருக்குலைந்து அகால மரணமடைகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மது விற்பனைக் குறியீடு வைத்து சாராய வணிகம் செய்வது, தமிழ்நாட்டுக்குப் பேரழிவை உண்டாக்குகிறது. “மதுவிலக்கை படிப்படியாக நிறைவேற்றுவோம்” என்றும், “டாஸ்மாக் கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து எடுப்போம்” என்றும் சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி மது விற்பனையை அதிகரிப்பதிலேயே தமிழ்நாடு அரசு குறியாக இருக்கிறது.

மகளிர் ஆயம் தொடர்ந்து பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளை இழுத்துப் பூட்ட வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு மதுத் தீமையை ஏற்றுக்கொண்டாலும் அரசாங்கத்தின் நிதி நிலையைப் பெருக்குவதற்கு இதைத் தவிர வேறு வழி இல்லை என்பது போல ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் போதும் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை நிலை வேறானது!

எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கின் மூலமாக பெற்ற விற்பனை வருமானம் 26 ஆயிரத்து 796 கோடி ரூபாய்! தமிழ்நாடு அரசு அரிசி, மடிக்கணினி. மின்விசிறி, கிரைண்டர், வேட்டி சேலை, பசுமை வீடுகள், மருத்துவ காப்பீடு, பள்ளிச்சீருடை, பேருந்து சலுகை, தங்கத்தாலி, விலையில்லா ஆடு மாடு, மாணவர்களுக்கு மிதிவண்டி நோட்டுப் புத்தகம் போன்ற அனைத்து இலவசங்கள் - விலையில்லா அறிவிப்புகளில் செலவிட்ட தொகை இதே நிதியாண்டில் 12 ஆயிரத்து 274 கோடி ரூபாய் தான்! எனவே இலவசங்களை வழங்குவதற்காகத்தான் மதுவிற்பனையை தொடர்கிறோம் என்று சொல்வதில் பொருளில்லை.

இன்னொருபுறம் அரசாங்கத்தின் வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் குறைந்திருக்கிறது. இந்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டு வந்துவிட்டது எனக் கூறுவது டாஸ்மாக் தொடர்வதற்கு பொருத்தமான காரணமில்லை! மாநில அரசின் வருவாயைப் பெருக்க மாற்று வழிகள் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலித்து செல்கிற நேர்முக மறைமுக வரிகள் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஆகும்! இதுதவிர தமிழ்நாட்டில் இருந்து ஒரு இலட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இந்திய அரசுக்கான வருமானத்தில் 30 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்துதான் செல்கிறது.

இவ்வளவு வருமானத்தை இந்திய அரசுக்கு ஈட்டித் தரும் தமிழ்நாடு, அதில் தனக்குரிய பங்கைக் கோரிப் பெற்றாலே நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், அரசை நடத்துவதற்கும் போதிய நிதி கிடைக்கும். எனவே இதை உணர்ந்து தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசு வசூலிக்கும் வரி வருவாயிலும் ஏற்றுமதி வருவாயிலும் கிடைக்கும் தொகையில் பாதியை வலியுறுத்திப் பெற வேண்டும்.

இதைச் செய்வதற்கு மாறாக டாஸ்மாக் கடைகளின் விற்பனை மூலமாகத்தான் எங்களுக்கு முதன்மையான வருமானம் வருகிறது என்று சொல்வதை சமூகத்தின் மீது அக்கறையுள்ள யாரும் ஏற்க முடியாது.

இன்னொரு காரணத்தையும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. அரசு மதுவிற்பனையை செய்யாவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கூறுகிறது. காவல்துறையும், மதுவிலக்கு அமலாக்கத் துறையும் செயலற்றுதான் இருக்கும் என்று தமிழ்நாடு அரசே கூறும் ஒப்புதல் வாக்குமூலம் இது! மது விலக்கை உறுதியாக நிறைவேற்றுவதற்கு தன்னால் முடியாது என்பதால், டாஸ்மாக்கை நடத்துகிறோம் என்று தமிழ்நாடு அரசு கூறுமானால், தங்களது செயலற்றத்தன்மைக்கு தமிழ்நாட்டு மக்களைப் பலியிடும் பொறுப்பற்ற செயலாகும் அது! எனவே, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூட வேண்டும் என மகளிர் ஆயம் தமிழ்நாடு சிறப்பு பேரவை வலியுறுத்துகிறது!

டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூட வேண்டும் என வலியுறுத்தி வரும் 2019 மே 14 அன்று டாஸ்மாக் கடைகளுக்காக மது உற்பத்தி செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் – கந்தர்வக்கோட்டை வட்டம் – கல்லாக்கோட்டையிலுள்ள KAALS டிஸ்டிலரீஸ் ஆலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென்று மகளிர் ஆயம் தமிழ்நாடு சிறப்பு பேரவை தீர்மானிக்கிறது! இம்முற்றுகைப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்புப் பெண்களும் திரளாக வந்து பங்கேற்க வேண்டும் என்று மகளிர் ஆயம் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 2

மாவட்டந்தோறும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் வேண்டும்!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களை விசாரித்து உடனடியாகத் தீர்ப்பு வழங்க மாவட்டந்தோறும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த அதிகார மட்டத்தில் இருந்தாலும், எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் – எந்த அரசியல் பின்னணி இருந்தாலும் அவர்களை உடனுக்குடன் விசாரித்து - வழக்குகளை ஓராண்டுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை இந்நீதிமன்றங்களில் கடைபிடிக்க வேண்டும்.

தீர்மானம் – 3

33% மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!

புதிதாக அமையும் நாடாளுமன்றத்தில் 33% மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

செய்தித் தொடர்பகம், 
மகளிர் ஆயம்

தொடர்புக்கு:
7373456737, 9486927540
முகநூல் : www.fb.com/MagalirAyam

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, March 23, 2019

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!

பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமையைக் கண்டித்து தஞ்சையில் ஆர்ப்பாட்டம்!
பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை குற்றங்களில் தொடர்புடைய அரசியல் மற்றும் அதிகார வர்க்கத்தினர் மீது நடவடிக்கை கோரி தஞ்சையில் இன்று (23.03.2019) எழுச்சிமிகு ஆர்ப்பாட்டம்.

தஞ்சை தொடர்வண்டி நிலையம் அருகில் மாலை 6 மணியளவில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மகளிர் ஆயம் நடுவண்குழு உறுப்பினர் தோழர் ம. லெட்சுமி அம்மா தலைமை தாங்கினார்.
இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில், பெரியார் மையம் தோழர் கலா, மாணவிகள் அஞ்சுதம், இரா. வான்மதி, இரா. தேன்மொழி, மகளிர் ஆயத்தோழர்கள் சுவாமிமலை பி. இளவரசி, திருச்சி வெள்ளம்மாள், தஞ்சை வெற்றிச்செல்வி, பூதலூர் ஒன்றியப் பொறுப்பாளர் சி. இராசப்பிரியா, தஞ்சை நகரத் தோழர்கள் அமுதா, இராணி உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர்.

தஞ்சை மகளிர் ஆயம் தோழர் செம்மலர் சிறப்புரையாற்றினார். இறுதியாக மகளிர் ஆயப் பொறுப்பாளர் அ.சுந்தரி நன்றியுரையாற்றினார். திரளான பெண்களும் ஆண்களும் பங்கேற்றனர்.

செய்தித் தொடர்பகம், 
மகளிர் ஆயம்

தொடர்புக்கு: 
7373456737, 9486927540

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, September 25, 2018

தஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந்தை நிறுத்தியது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்..!

தஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந்தை நிறுத்தியது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்..!
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைகோடி கிராமம் நண்டம்பட்டி. இந்த கிராமம் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களின் தொடக்கப் பகுதியாகும். நண்டம்பட்டியில் 150 குடும்பங்களும் அர்சுணம்பட்டியில் 75 குடும்பங்களும் வீமம்பட்டியில் 50 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
 
இந்த மூன்று ஊர் கிராம மக்களும் இளைஞர்களும் மாணவர்களும் கூலித் தொழிலாளிகளும், கட்டுமான ஆட்களும் வேலைக்கு திருச்சி, தஞ்சை செல்லும் நிலையில் நண்டம்பட்டி வழியாக இயங்கிய சிற்றுந்து (மினிபஸ்) நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
 
தஞ்சை மாவட்ட ஆட்சியரிடமும், வருவாய் வட்டாச்சியரிடமும் கோரிகை மனு கொடுத்தோம். எந்த பயனும் இல்லை! எனவே, மக்களின் அடிப்படை கோரிக்கை நிறைவேற்றிடாத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கினைக்கும் மக்கள் திரள் போராட்டம் வரும் 28.09.2018 அன்று

தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டி (சாணூரப்பட்டி) கடைவீதி - 28.09.2018 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகின்றது.
 
இப்போராட்டத்தில், ஊர் பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்க வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Thursday, May 10, 2018

இந்தப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி… தஞ்சை விமானப்படைத்தளம் முற்றுகை! தோழர் பெ. மணியரசன் அழைப்பு!

இந்தப் போராட்டங்கள் வெற்றியை நோக்கி… தஞ்சை விமானப்படைத்தளம் முற்றுகை! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் அழைப்பு! 
இன ஒதுக்கல் கொள்கை உள்ள நாட்டைத் தவிர, வேறு எந்த நாட்டிலாவது காவிரி உரிமையில் தமிழர்களுக்கு இழைக்கப்படும் அநீதிபோல் இனப்பாகுபாடு காட்டி அநீதி இழைக்கப்பட்டதுண்டா?

இந்தியாவிலிருந்து சிந்து, சீலம், செனாப் ஆறுகள் ஒப்பந்தப்படி பாக்கித்தானுக்கு ஓடும்; கங்கை வங்காளதேசத்துக்கு ஓடும். இந்தியாவுக்குள்ளேயே நர்மதை, கோதாவரி, கிருஷ்ணா போன்ற ஆறுகள் தீர்ப்பாயத் தீர்ப்பின்படி அண்டை அயல் மாநிலங்களுக்கு ஓடும்! ஆனால், தீர்ப்பாயம் தீர்ப்புக் கொடுத்தாலும், உச்ச நீதிமன்றம் தீர்ப்புக் கொடுத்தாலும் காவிரி மட்டும் கர்நாடகத்திலிருந்து தமிழ்நாட்டிற்கு ஓடி வராதா?

இந்த இனப்பாகுபாடு மற்றும் இன ஒதுக்கல் அநீதிக்கு யார் யார் பொறுப்பு?
முதல் குற்றவாளி – கர்நாடகம்; இரண்டாவது குற்றவாளி இந்திய அரசு; மூன்றாவது பொறுப்பாளி உச்ச நீதிமன்றம்!

நான்காவது பொறுப்பாளி நாம்தான்! நாம் என்றால் நமக்கு வாய்த்த அரசியல் தலைமைகள்! சட்டப்படியான காவிரி உரிமையைக் கூட காப்பாற்ற முடியாத தலைமைகள்! அந்த அரசியல் தலைமைகளை சுமந்து கொண்டிருக்கும் நாம்! 

தமிழ்நாட்டின் மக்கள் தொகை எட்டு கோடி! பிரிட்டன், பிரான்சு நாடுகளின் மக்கள் தொகையை விட அதிகம்! இருந்தும், நமக்கான தேசிய இன அங்கீகாரத்தை இந்திய அரசு தரவில்லை! இனச்சமத்துவம்கூட வழங்கவில்லை! 

இந்திய அரசில் காங்கிரசு இருந்தாலும், பா.ச.க. இருந்தாலும் காவிரியில் தமிழ்நாட்டுக்குத் தொடர்ந்து துரோகம் இழைத்து வந்துள்ளன. 1956ஆம் ஆண்டின் ஆற்று நீர்ப் பகிர்வுச் சட்டப்படியும், இந்திய அரசமைப்புச் சட்டப்படியும் தமிழ்நாட்டுக்குக் கிடைக்க வேண்டிய நீதியைக் கிடைக்காமல் காங்கிரசும், பா.ச.க.வும் தடுத்து வந்துள்ளன. 

இப்போதும் அதே நிலைதான்! இந்திய ஆட்சியில் பா.ச.க.! கர்நாடக ஆட்சியில் காங்கிரசு!

பா.ச.க. – காங்கிரசு தலைமைகளின் தமிழர் எதிர்ப்பு அரசியலுக்கு இப்போது உச்ச நீதிமன்றமும் ஒத்தூதுகிறது. அதிலும் தீபக் மிஸ்ரா ஆயம் இந்திய அரசமைப்புச் சட்டத்தை இச்சிக்கலில் புறந்தள்ளி அநீதி இழைத்துள்ளது. 

தமிழ்நாட்டுக் காவிரி உரிமையைப் பலியிடத் திட்டமிடும் மோடி அரசுக்கு முழுவதும் துணைபோகறது உச்ச நீதிமன்றம்!

தமிழ்நாடு தழுவிய அளவில் காவிரி உரிமைப் போராட்டம் எழுச்சி பெற்றுள்ள இன்றைய நிலையில், இறுதி வெற்றி கிடைக்கும் வரை இப்போராட்டத்தைத் தொடர வேண்டும். காவிரி உரிமை மீட்புக் குழு பல போராட்டங்களை நடத்தி வருகிறது. 

அதன் அடுத்த போராட்டம் – 12.05.2018 – காரி (சனி)க்கிழமை காலை 10 மணிக்கு, தஞ்சை விமானப் படைத்தளத்தை முற்றுகையிடும் போராட்டம்!

1. இந்திய அரசே, காவிரித் தீர்ப்பாயம் கூறியுள்ள கட்டமைப்பும் அதிகாரமும் கொண்ட காவிரி மேலாண்மை வாரியத்தை உடனே அமைத்திடு! 

2. காவிரி டெல்டாவில் இராணுவத்தை அனுப்பாதே – காவிரியை அனுப்பு! 

3. அதிகாரமில்லாத செயல்திட்டம் அமைத்தால் எதிர்த்துப் போராடுவோம்! 

4. உச்ச நீதிமன்றமே, கட்டப்பஞ்சாயத்து செய்யாதே! சட்டக் கடமையை நடுநிலையோடு செயல்படுத்து! காலம் கடத்தாதே! 

5. தமிழ்நாடு அரசே, தீபக் மிஸ்ரா ஆயத் தீர்ப்பினால் தமிழ்நாடு இழந்துள்ள காவிரி உரிமைகளை மீட்க – காவிரி வழக்கிற்கு உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் அமைத்திட சட்டப்போராட்டம் நடத்து! இனத்துரோகம் செய்யாமல் தமிழ்நாட்டு மக்கள் பக்கம் நில்! 

தமிழர்களே, 12.05.2018 – காரி (சனி)க் கிழமை காலை 10 மணிக்கு தஞ்சை மேலவஸ்தாசாவடியில் கூடி விமானப்படைத்தளம் நோக்கி பெருந்திரளாய் அணிவகுப்போம்!

வாருங்கள் வாருங்கள்!

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 98419 49462, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery

Wednesday, December 13, 2017

மீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! - தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!

மீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும்! - தஞ்சையில் தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஆர்ப்பாட்டம்!
தமிழ்நாட்டின் குமரி மாவட்டத்தில் ஒக்கிப் புயல் ஏற்படுத்தியுள்ள பாதிப்புகளை கணக்கில் கொண்டு - அதனை இந்திய அரசு தேசியப் பேரிடராக அறிவிக்க வேண்டும், காணாமல் போன மீனவர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சிகளைத் தீவிரப்படுத்த வேண்டும், காணாமல் போன மீனவர்கள் குறித்த முழுமையானக் கணக்கெடுப்பை வெளியிட வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கிணைப்பில் தமிழ்நாடெங்கும் ஆங்காங்கு கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடந்து வருகின்றன.
இதன் ஒரு பகுதியாக, நேற்று (12.12.2017) மாலை, தஞ்சையில் தொடர்வண்டி நிலையம் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு தமிழ்த்தேசியப் பேரியக்க மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி தலைமை தாங்கினார். தமிழர் தேசிய முன்னணி பொதுச் செயலாளர் திரு. அயனாவரம் சி. முருகேசன், பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ. இராசேந்திரன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தென்னவன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.
பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை நிறைவுரையாற்றினார். பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. விடுதலைச்சுடர், மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, பொதுக்குழு தோழர்கள் இரா.சு. முனியாண்டி, முருகையன் உள்ளிட்ட பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பங்கேற்றனர்.
இன்று (13.12.2017) மாலை சென்னையிலும், மதுரையிலும், நாளை (14.12.2017) ஓசூரிலும், 16.12.2017 அன்று புதுச்சேரியிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன.

இந்திய அரசே! மீனவர் துயரை தேசியப் பேரிடராக அறிவி!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, December 2, 2017

தஞ்சையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனாய்வுக் கூட்டம்!

தஞ்சையில் தமிழர் கண்ணோட்டம் படிப்பு வட்டம் - திறனாய்வுக் கூட்டம்!
தமிழ்த்தேசியத்தின் போர் வாளாக வெளி வந்து கொண்டுள்ள மாதமிருமுறை இதழான “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” - இதழின் படிப்பு வட்டம் சார்பில், தஞ்சையில் 08.12.2017 அன்று திறனாய்வுக் கூட்டம் நடைபெறுகின்றது.
தஞ்சை பெசண்ட் அரங்கில், 08.12.2017 வெள்ளி மாலை 5.30 மணியளவில் நடைபெறும் இக்கூட்டத்திற்கு, தமிழர் கண்ணோட்டத்தின் நீண்டநாள் வாசகரும், மூத்த வழக்கறிஞருமான தஞ்சை அ. இராமமூர்த்தி தலைமை தாங்குகிறார். திரு. பெ. பூங்குன்றன் வரவேற்கிறார்.
முனைவர் கி. அரங்கன், கவிஞர் இலக்குமிகுமாரன் ஞானதிரவியம், பேராசிரியர் வி. பாரி, தோழர் க. செம்மலர் ஆகியோர் திறனாய்வுரை நிகழ்த்துகின்றனர்.
தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழாசிரியர் தோழர் கி. வெங்கட்ராமன், ஆசிரியர் குழு உறுப்பினர் பாவலர் கவிபாஸ்கர் ஆகியோர் விளக்கவுரையாற்றுகின்றனர். நிறைவில், திரு. கு. அப்பணமுத்து நன்றி கூறுகிறார்.
நிகழ்வல், தமிழர் கண்ணோட்டம் வாசகர்களும், தமிழின உணர்வாளர்களும் பங்கேற்க வேண்டுமென அன்புரிமையுடன் அழைப்பு விடுக்கிறோம்!
=====================================
முகநூல் : fb.com/tkannottam
=====================================
ஆசிரியர் : பெ. மணியரசன்
இணையாசிரியர் : கி. வெங்கட்ராமன்
=====================================
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இணையத்தில் படிக்க - www.kannotam.com
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
இதழை தங்கள் இல்லத்திற்கே வரவழைத்துப்
படிக்க - உறுப்புக் கட்டணம் செலுத்திடுவீர் !

கட்டண விவரம் : தனி இதழ் - ரூ. 15 /-
ஆண்டு கட்டணம் - ரூ. 350 /-
மாதம் இருமுறை என 24 இதழ்கள் 
ஓர் ஆண்டுக்குக் கிடைக்கும்.

மூன்றாண்டு கட்டணம் - ரூ. 1000 /-
மாதம் இருமுறை என 72இதழ்கள்
மூன்றாண்டுகளுக்குக் கிடைக்கும்.

ஐந்தாண்டு கட்டணம் - ரூ. 1600 /-
மாதம் இருமுறை என 120 இதழ்கள்
ஐந்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.

பத்தாண்டு கட்டணம் - ரூ. 3000 /-
மாதம் இருமுறை என 240 இதழ்கள்
பத்தாண்டுகளுக்குக் கிடைக்கும்.
>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>>
கண்ணோட்டம் இணைய இதழான www.kannotam.com தளத்தில், உறுப்புக் கட்டணத்தைச் செலுத்தலாம்! இதழ்களை மின் நூல் வடிவிலும் படிக்கலாம்!

தமிழர்கள் அனைவரது இல்லங்களிலும் - அலுவலகங்களிலும் தமிழ்த்தேசியக் கருத்துகளைப் பரப்பும் போர் வாளாக “தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம்” இதழை இடம்பெறச் செய்யுங்கள்!
நமக்கான ஊடகத்தை நாமே வலுப்படுத்தி கொண்டு செல்வோம்! தமிழர்களின் குரலை உலகிற்குச் சொல்வோம்! பார்க்க: www.KANNOTAM.com
=====================================
கண்ணோட்டம் இணைய இதழ்
=====================================
ஊடகம்:www.kannotam.com
முகநூல் : fb.com/tkannottam



பேச: 7667077075, 98408 48594

Monday, October 16, 2017

தஞ்சையில் குடிநீர் வழங்காத ஊராட்சியைக் கண்டித்து மறியல்!

தஞ்சையில் குடிநீர் வழங்காத ஊராட்சியைக் கண்டித்து மறியல்!

தஞ்சாவூர் மாநகரத்தை ஒட்டியுள்ள, நீலகிரி ஊராட்சி கலைஞர் நகரில் கடந்த ஆறு மாதமாக குடிநீர் வராததால் பொதுமக்கள் துணையுடன் மகளிர் ஆயம் சார்பில் ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பலமுறை மனு அளிக்கப்பட்டது. அதிகாரிகளை நேரில் சந்தித்தும் வலியுறுத்தப்பட்டது.
எனினும், இதுவரை உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இந்நிலையில், இன்று (16.10.2017) காலை, மகளிர் ஆயம் நடுவண் குழு உறுப்பினரும் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினருமான தோழர் ம. இலட்சுமி அம்மா தலைமையில் அப்பகுதி மகளிர் ஒன்று திரண்டு சாலை மறியல் போராட்டம் நடத்தினர்.

இதனையடுத்து, அங்கு வந்த காவல்துறைனர் ஊராட்சி அலுவலரிடம் பேசி கலைஞர் நகர் இரண்டாம் தெரு மற்றும் சில பகுதிகளில் அன்றாடம் தட்டுபாடு இல்லாமல் தண்ணீர் திறந்து விட ஏற்பாடு செய்வதாக உறுதி அளித்தனர். அதை தொடர்ந்து சாலை மறியல் கைவிடப்பட்டது.
போராட்டத்தில், மகளிர் ஆயம் தோழர்கள் விவேகா, கோகிலா, பானுமதி, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை உள்ளிட்டோரும் பொது மக்களும் பங்கேற்றனர்.

மகளிர் தோழர்களுக்கு வாழ்த்துகள்!

செய்தித் தொடர்பகம்,
மகளிர் ஆயம்.

தொடர்புக்கு:
7373456737, 9486927540
https://www.facebook.com/makaliraayam

Sunday, July 30, 2017

தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற “தமிழர் மீட்சிப் பெருங்கூடல்” தமிழ்த்தேசியப் பரப்புரையின் தொடக்க விழா!

தஞ்சையில் எழுச்சியுடன் நடைபெற்ற “தமிழர் மீட்சிப் பெருங்கூடல்” தமிழ்த்தேசியப் பரப்புரையின் தொடக்க விழா!
 
 



 தமிழர்களின் மரபார்ந்த கலை நிகழ்வுகள் – உரிமைகளை மீட்க உந்து விசையளிக்கும் பாவரங்கம் – தமிழர் மரபு வேளாண்மையை இன்றைக்கும் சிறப்பாக மேற்கொண்டு வருவோருக்கு பாராட்டு – வடமொழிப் பெயர் நீக்கி தமிழ்ப் பெயர் சூட்டல் – தமிழர் மீட்சிக்கான உரைவீச்சு என பல்வேறு வடிவ நிகழ்வுகளோடு, தஞ்சையில் தமிழ்த்தேசியப் புத்தெழுச்சியுடன் நேற்று (29.07.2017) மாலை “தமிழர் மீட்சிப் பெருங்கூடல்” சிறப்புடன் நடைபெற்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், நேற்று மாலை தஞ்சை – ஆபிரகாம் பண்டிதர் சாலையில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, பேரியக்கத் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ. பால்ராசு தலைமை தாங்கினார். தஞ்சை வீரசோழன் தப்பாட்டக் குழுவினரின் எழுச்சிமிகுப் பறையிசையும் நடனமும் காண்போரின் கண்களைக் கவர்ந்து கட்டிப்போட்டது. தப்பாட்டக் கலைஞர்களுக்கு மேடையில் துண்டணிவித்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பாராட்டினார்.

அதனைத் தொடர்ந்து, பேரியக்கத் தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி வரவேற்புரையாற்றி உரையரங்கத்தைத் தொடங்கி வைத்தார். தமிழ்க் கலை இலக்கியப் பேரவை பொதுச் செயலாளர் தோழர் நா. வைகறை நிகழ்வுகளை ஒருங்கிணைத்தார்.

தமிழ்த்தேசியக் கருத்துகளை தமக்கே உரிய கலை இலக்கிய நடையில் பாக்களாக வடித்து, பாவலர்கள் கவிபாஸ்கர், நா. இராசாரகுநாதன், செம்பரிதி, முழுநிலவன் ஆகியோர் சிறப்பான பாவீச்சு நல்கி, திரண்டிருந்த கூட்டத்தினரை உற்சாகப்படுத்தினர்.

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் விடியல் (அ. ஆனந்தன்), தமிழர் பெருங்கூடலில் தொடங்கி இனி தமிழ்நாடெங்கும் நடைபெறவுள்ள தமிழ்த்தேசியப் பரப்புரையை அறிவிக்கும் முதன்மைத் தீர்மானத்தை முன்மொழிந்து பேசினார். பலத்த கையொலியுடன் தீர்மானம் நிறைவேறியது.

இதனையடுத்து நடைபெற்ற எழுச்சிமிகு உரையரங்கில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து, மகளிர் ஆயம் தமிழக ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா, நடுவண் குழு உறுப்பினர் தோழர் ம. இலட்சுமி, தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா ஆகியோர், தமிழர்களின் உரிமை உரிமை மீட்பு – தமிழ்த்தேசியக் கோட்பாடின் வரலாறு – மதுக்கடை ஒழிப்பு – நீட் தேர்வு என பல்வேறு தலைப்புகளில் சிறப்பான உரைவீச்சை நிகழ்த்தினர்.

இதனையடுத்து, தமிழர்களின் மரபான இயற்கை வேளாண்மையை இன்றைக்கும் சிறப்பாக மேற்கொண்டு வருவோரைப் பாராட்டும் நிகழ்வு நடைபெற்றது. தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. முருகன் (பெண்ணாடம்), திரு. கண்ணதாசன் (முருகன்குடி), திரு. சு. பழனிவேலு (சூழியக்கோட்டை), திரு. கார்த்திகேயன் (காஞ்சிபுரம்)   ஆகியோருக்கு மேடையில் துண்டவிணித்தும், புத்தகங்கள் வழங்கியும் சிறப்பு செய்யப்பட்டனர்.

அதனைத் தொடர்ந்து, தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முன்னணி செயல்பாட்டாளர்கள்  பலரின் பெயரை தமிழில் சூட்டும் நிகழ்வு நடந்தது. பேரியக்கத்தின் பொருளாளர் தோழர் அ. ஆனந்தனுக்கு “விடியல்” என்றும், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோழர் தெட்சிணாமூர்த்திக்கு, “தென்னவன்” என்றும், பொதுக்குழு உறுப்பினர் தோழர் தினேசுக்கு “தீந்தமிழன்” என்றும், ஈரோடு தோழர் பிரகாசுக்கு “அருள்ஒளி” என்றும், செங்கிப்பட்டி தோழர் செயராஜூக்கு “வெற்றித்தமிழன்” என்றும் தமிழ்ப்பெயர்கள் சூட்டப்பட்டன.

நிறைவில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் சிறப்புமிகு நிறைவுரையாற்றினார். தமிழினத்தின் உரிமைகளை மீட்பது மட்டும் தமிழ்த்தேசியம் அல்ல, தமிழர்களின் மரபான அறத்தையும், வீரத்தையும், பண்புகளையும் மீட்பதும் – சாதி அழுக்கும் மனக்கேடுகளும் நீக்கப்பட்ட புதிய தமிழனை – தமிழச்சியை மறுவார்ப்பு செய்வதும் தமிழ்த்தேசியம்தான் என்பதே அவரது உரையின் சாரமாக இருந்தது.

புதிய எதிர்பார்ப்புகளுடன், தமிழ்த்தேசிய எழுச்சியுடன், தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலிருந்து தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களும், தமிழின உணர்வாளர்களும்  பல்லாயிரக்கணக்கான இந்நிகழ்வில் பங்கேற்றனர்.

தமிழக விவசாயிகள் சங்கத் தஞ்சை மாவட்டத் தலைவர் திரு. த. மணிமொழியன், தமிழர் தேசிய முன்னணி திருவாரூர் அமைப்பாளர் மருத்துவர் இலரா. பாரதிச்செல்வன், உழவர் சங்கத் தலைவர் திரு. சித்திரக்குடி பழனிராஜன், உலகத் தமிழ்க் கழக புதுச்சேரி பொறுப்பாளர் ஐயா கோ. தமிழுலகன் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்களும், தமிழின உணர்வாளர்களும் நிகழ்வுக்கு வந்திருந்தனர்.


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் பழ. இராசேந்திரன், மதுரை இரெ. இராசு, சென்னை அருணபாரதி, தமிழக இளைஞர் முன்னணி துணைப் பொதுச் செயலாளர் தோழர் சிதம்பரம் ஆ. குபேரன், பொதுக்குழு உறுப்பினர்கள் குடந்தை தீந்தமிழன், திருச்செந்தூர் மு. தமிழ்மணி, முன்னணிச் செயல்பாட்டாளர்கள் புதுச்சேரி இரா. வேல்சாமி, சிதம்பரம் பா. பிரபாகரன், தருமபுரி க. விசயன், புளியங்குடி க. பாண்டியன், தொரவி சிவக்குமார் உள்ளிட்ட தமிழ்நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து பேரியக்கத் தோழர்கள் ஊர்திகளில் வந்து பங்கேற்றனர்.


நிகழ்வில் பங்கேற்றவர்கள், புதிய விடியலுக்கான தமிழ்த்தேசியப் புத்தெழுச்சியுடன் விடைபெற்றனர். தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முகநூல் பக்கத்தில் முழுமையாக நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்ட பெருங்கூடல் நிகழ்வுகளை (பார்க்க: https://www.facebook.com/tamizhdesiyam/videos/738537519665094) பல்லாயிரக்கணக்கானோர் பார்த்தனர். தஞ்சையில் தொடங்கப்பட்ட தமிழர் மீட்சி – தமிழ்த்தேசியப் பரப்புரை நிகழ்வு, தமிழ்நாடெங்கும் இனி நடைபெறவுள்ளதும் குறிப்பிடத்தக்கது!  
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Friday, July 28, 2017

தஞ்சையில் - நாளை (29.07.2017)...தமிழர் மீட்சிப் பெருங்கூடல்..! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..! தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலை தி.பி. 2048 ஆடி 13 - காரி(சனி)க்கிழமை 29.07.2017 மாலை 6.30 மணி

தஞ்சையில் - நாளை (29.07.2017)...தமிழர் மீட்சிப் பெருங்கூடல்..! அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..! தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலை தி.பி. 2048 ஆடி 13 - காரி(சனி)க்கிழமை 29.07.2017 மாலை 6.30 மணி
இந்தியாவில் கங்கைக்கரை வரையிலும், தென்கிழக்கு ஆசிய நாடுகளில் கம்பூச்சியா வரையிலும் உள்ள பல நாடுகளுக்குத் தலைநகராக விளங்கிய தஞ்சை மாநகரில் கூடுகிறோம்!

ஆயிரமாண்டுகளுக்கு முன் தமிழ்ப் பேரரசர்கள் இராசராசன், இராசேந்திரச்சோழன் ஆண்ட காலம் அது!

இன்று ஒரு மாநிலமாய், இந்தியப் பேரரசின் ஒரு பிராந்தியமாய் சுருங்கிக் கிடக்கிறோம்!

ஓ.என்.ஜி.சி. உள்ளிட்ட வடக்கிந்தியக் கம்பெனிகளுக்கும் பன்னாட்டுக் கார்ப்பரேட் நிறுவனங்களுக்கும் வேட்டைக்காடாகத் தமிழ்மண் மாற்றப்பட்டுள்ளது!

உழவர்களின் உற்பத்திப் பொருட்களுக்கு இலாப விலை மறுத்து, அவர்களை ஓட்டாண்டிகளாக்கி, அவர்களை தற்கொலைக்குத் தூண்டுகின்றனர், இந்திய மற்றும் தமிழக ஆட்சியாளர்கள்!

காலங்காலமாய் ஓடி வந்த காவிரி, பாலாறு, தென்பெண்ணை எங்கே? அவற்றைக் களவாடியவர்கள் யார்? கச்சத்தீவும் கடல் உரிமையும் பறிபோனது யாரால்?

தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் வெளி மாநில மாணவர்களை அதிகமாகச் சேர்த்திடத்தான் “நீட்” தேர்வு! மாநில அரசின் வணிக வரி உரிமையைப் பறிக்கத்தான் ஜி.எஸ்.டி. வரி!

தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசுத் தொழிலங்களில், அலுவலகங்களில் வெளி மாநிலத்தவர்களே அதிகமாகச் சேர்க்கப்படுகிறார்கள். தகுதியிருந்தும் தமிழர்களாய்ப் பிறந்ததால், மண்ணின் மக்ககளுக்கு வேலை மறுக்கப்படுகிறது!

அன்றாடம் தமிழ்நாட்டில் புகும் அயல் மாநிலத்தார் வெள்ளம், தமிழரைச் சிறுபான்மையாக்கிடும் அபாயம் எழுந்துள்ளது!

ஆங்கில ஆதிக்கத்துடன் சமற்கிருதத் திணிப்பும் இந்தித் திணிப்பும் பா.ச.க. அரசால் தீவிரப்படுத்தப்படுகின்றன! நம் தமிழ் மொழியின் கதி என்ன?

இந்த உரிமைப் பறிப்புகளைத் தடுத்து நிறுத்திடவோ, இழந்தவற்றை மீட்டிடவோ ஆற்றலற்றவையாய், அக்கறையற்றவையாய் அ.தி.மு.க., தி.மு.க. கட்சிகள்!

அவற்றைப் போலவே மற்றும் பல கட்சிகள்!

தமிழர்களே! நம் எதிர்காலம் என்னாவது? நம் தாயகம் நமக்கு மிஞ்சுமா? தஞ்சைக்கு வாருங்கள்! புதிய முடிவுகளைத் தீர்மானிப்போம்!

இழந்த உரிமைகளை மீட்போம்! சிறந்த தமிழர் மரபுகளை மீட்போம்!

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, July 22, 2017

தமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். ஆபிரகாம் பண்டிதர் சாலை. காரி(சனி)க்கிழமை 29.07.2017 மாலை 6.30 மணி. அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!

Wednesday, July 12, 2017

தமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். ஆபிரகாம் பண்டிதர் சாலை. காரி(சனி)க்கிழமை 29.07.2017 மாலை 6.30 மணி. அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!

தமிழர் இனமுழக்கம் - தஞ்சையில் பெருங்கூடல். அழைக்கிறது தமிழ்த்தேசியப் பேரியக்கம்..!
தமிழ்ச்சமூகம் இன்று முட்டுச் சந்தில் நிற்கவில்லைமுன்னேறிச் சென்று கொண்டுள்ளது. காவிய நாயகர்களின்” வருகைக்காக அது காத்திருக்கவில்லைமக்களே போராட்டங்களை முன்னெடுக்கிறார்கள்!

தமிழ்நாட்டு ஆறுகளின் கதி என்ன?

வணிக வேட்டைக்கு வந்து ஆட்சி பிடித்த ஆங்கிலேயேர்கள் 1924இல் அருமையான காவிரி ஒப்பந்தம் போட்டுமேட்டூர் அணை 1934இல் திறந்தார்கள். ஆனால் வெள்ளையரை வெளியேற்றி உருவான இந்திய ஆட்சி காவிரி உரிமையைப் பறித்து விட்டது. உச்ச நீதிமன்றம் கட்டளையிட்டும் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மறுத்து விட்டது மோடி அரசுகன்னடர் இன வெறிக்குத் துணை போகிறது.

வெள்ளையராட்சி 1895இல் முல்லைப் பெரியாறு அணை கட்டிக் கொடுத்தது. இந்தியத்தேசியம் பேசும் கேரளாவின் காங்கிரசுக் கட்சியும் மார்க்சியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியும் அந்த அணையை உடைக்க நேரம் பார்த்துக் கொண்டுள்ளன. அவை அங்கு ஆளும் கட்சிகள்! முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளது என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பைத் துச்சமாகத் தூக்கி எறிகின்றன கேரளாவின் இந்தியத்தேசியக் கட்சிகள்! அதில் உள்ள சிற்றணையை மேலும் வலுப்படுத்தத் தமிழ்நாடு அரசு கட்டுமானப் பொருள்கள் கொண்டு செல்ல அனுமதிக்கவில்லை கேரள அரசு!

பாலாற்றில் தமிழ்நாட்டிற்குள்ள வரலாற்று வழி உரிமையை நிலைநாட்டி 1892இல் வெள்ளையர் அரசு ஒப்பந்தம் போட்டது. வெள்ளையர் வெளியேறியவுடன் ஏராளமான அணைகளைப் பாலாற்றில் கட்டிஆந்திரப்பிரதேசம் தமிழ்நாட்டிற்குரிய தண்ணீரைக் களவாடிக் கொண்டது.

அதேபோல் தென்பெண்ணை ஆற்றில் கர்நாடகம் அணைகள் கட்டித் தமிழ்நாட்டிற்குத் தண்ணீர் வராமல் தடுத்து விட்டது.

கேரளம் பவானி ஆற்றில் புதிதாக ஆறு தடுப்பணைகள் கட்டிக் கொண்டுள்ளது. சிறுவாணியிலும் புதிதாகத் தடுப்பணை கட்டுகிறது.

இந்திய ஆட்சியாளர்கள் தமிழர்களுக்கெதிராக இனப்பாகுபாடு காட்டுவதால்தான் அண்டை இனங்கள் தமிழ்நாட்டின் சட்டப்படியான ஆற்றுநீர் உரிமைகளைப் பறித்துக் கொண்டன!

கடல் உரிமைப் பறிப்பு

இந்திய அரசு 1974இல் தன்னிச்சையாக சிங்கள அரசுக்குத் தமிழ்நாட்டுக் கச்சத்தீவைக் கொடுத்தது. அதை வைத்து தமிழர்களின் கடல் உரிமையை இலங்கை அரசு பறித்துவிட்டது. எல்லை தாண்டி வந்ததாக 600க்கும் மேற்பட்ட தமிழ் மீனவர்களை சுட்டுக் கொன்றது சிங்களப்படை!

ஆயிரக்கணக்கான தமிழ் மீனவர்கள் நிரந்தரமாக ஊனப்படுத்தப்பட்டுதுன்பத்தில் உழல்கிறார்கள். சின்னஞ்சிறு இலங்கைக்கு இத்தனை துணிச்சல் கொடுத்தது யார்இந்தியா! தமிழ் மீனவர்களைத் தாக்கியசுட்டுக் கொன்ற - படகுகளைக் கடத்திய சிங்களப் படையாட்கள் மீது ஒரு வழக்கு கூட இந்தியா போடவில்லை.

மலையாள மீனவர் இருவரை அரபிக்கடலில் சுட்டுக் கொன்ற இத்தாலியின் கப்பற்படையினரை சிறைப்பிடித்து வழக்கு நடத்தியது இந்தியா! தமிழர்களுக்கு எதிராக மட்டும் இந்திய அரசு இனப்பாகுபாடு காட்டுவதேன்?

தமிழர்கள் செய்த குற்றமென்ன?

வெள்ளையரை வெளியேற்றும் விடுதலைப் போரில் தமிழர்கள் பங்கேற்கவில்லையாதடியடிபடவில்லையாசிறைப் படவில்லையாசெக்கிழுக்கவில்லையாசெத்து மடியவில்லையாமூவண்ணக் கொடி காக்க உயிர் விடவில்லையாவிடுதலைக்கு முன்னும் பின்னும் தமிழ்நாட்டில் காங்கிரசு ஆட்சி அமைக்க வாக்களிக்கவில்லையாஇந்திய ஆட்சியாளர்களுக்கு தமிழர்கள் மீது இவ்வளவு வன்மம் ஏன்இத்துணை இனப்பாகுபாடு ஏன்?

தி.மு.க.அ.இ.அ.தி.மு.க. சாதித்ததென்ன?

ஐம்பதாண்டுகளாகத் தமிழ்நாட்டை தி.மு.க.அ.தி.மு.க. கட்சிகள் ஆண்டுவரும் காலங்களில்தான் மேற்கண்ட உரிமைப் பறிப்புகளும் உயிர்ப்பறிப்புகளும் அரங்கேறின. தமிழ்நாட்டின் உரிமைகளைக் காக்கும் ஆற்றலும் இன்றிஅக்கறையும் இன்றி பதவி மோகம்பணமோகம் ஆகியவற்றில் மட்டுமே அக்கழகங்கள் கவனம் செலுத்தின.

இந்திய ஆளுங்கட்சிகளான காங்கிரசுபா.ச.க. ஆகியவற்றுடன் மாறி மாறி கூட்டணி சேர்ந்து தமிழ்நாட்டின் உரிமைகளைஉயிர்களைக் காவு கொடுக்கும் கங்காணி வேலை செய்தன.

இனியும் இக்கழகங்கள் என்ன செய்யப் போகின்றனஏற்கெனவே செய்து வந்த இனத்துரோக வேலைகளைத்தான் செய்யப் போகின்றன!

இந்தி - சமற்கிருதத் திணிப்பு 

இந்திய அரசின் இந்தித் திணிப்பை எதிர்த்து, 1965இல் மாணவர்கள் மாபெரும் மக்கள் போராட்டம் நடத்தினர். தமிழ்நாட்டிலும் நடுவண் அரசிலும் அப்போது இருந்த காங்கிரசு ஆட்சிகள் 300 தமிழர்களை சுட்டுக் கொன்றன.

இப்போது பா.ச.க. ஆட்சி இந்தியுடன் சமற்கிருதத்தையும் சேர்த்து வேகமாகத் திணிக்கிறது. ஆரியம் ஆள்கிறது என்பதைப் பறைசாற்றவே சமற்கிருதத்தையும் அதன் ஒரு பிரிவான இந்தியையும் திணிக்கிறார்கள்.

தி.மு.க.அ.இ.அ.தி.மு.க. ஆட்சிகளும் அக்கட்சிகளும் ஒப்புக்கு மட்டுமே இந்தியை எதிர்க்கின்றன.

தி.மு.க.வின் டி.ஆர். பாலு நடுவண் சாலைப் போக்குவரத்து அமைச்சராக இருந்த போதுதான்தமிழ்நாட்டுத் தேசிய நெடுஞ்சாலைகளில் இந்தியில் வழிக்குறிப்புகள் எழுதப்பட்டன.

அ.இ.அ.தி.மு.க. ஆட்சியில் தான் பள்ளிக்கல்வியில் அரசு பள்ளிகளில் முதல் 10ஆம் வகுப்பு வரை ஆங்கிலப் பயிற்று மொழிப் பிரிவுகள் தொடங்கப்பட்டன.

தமிழ் அழிப்பில் கழக ஆட்சிகள் பங்கு கணிசமானது!

வேளாண்மையையும் குடிநீரையும் அழிக்கும் எண்ணெய் - எரிவளி

பெட்ரோலிய - எரிவளி ஆழ்குழாய்க் கிணறுகள் இறக்கப்பட்ட ஊர்களில் எல்லாம் நிலத்தடி நீர் பாழ்பட்டுபாசனத்திற்கும் குடிநீருக்கும் பயன்படாமல் போய்விட்டது. எனவே இவற்றையும் ஐட்ரோ கார்பனையும் எதிர்த்து மக்கள் போராடுகிறார்கள். ஆனால்புதிதாக 110 ஆழ்குழாய்க் கிணறுகள் எண்ணெய் மற்றும் எரிவளிக்காக இறக்கப் போவதாக ஓ.என்.ஜி.சி. அறிவித்துள்ளது.

வெளியார் ஆக்கிரமிப்பு 

தமிழ்நாட்டுத் தொழில் வணிகம் அனைத்திலும் வெளி மாநிலத்தவர் ஆதிக்கம் மேலோங்கி வருகிறது. தமிழ்நாட்டின் தேவைக்கு அதிகமாகப் பன்னாட்டுப் பெருங்குழும நிறுவனங்கள்தமிழ்நாட்டில் அனுமதிக்கப்பட்டுள்ளன.

இவற்றில் வெளி மாநிலத்தவர்களே மிகை எண்ணிக்கையில் வேலை பார்க்கிறார்கள். தமிழ்நாட்டில் உள்ள நடுவண் அரசுத் தொழிலகங்கள் - அலுவலகங்கள் அனைத்திலும் வெளிமாநிலத்தவர்களே மிகை எண்ணிக்கையில் வேலையில் சேர்க்கப்படுகின்றனர்.

மற்றுமொரு கட்சியாமாற்று அரசியலா?

தமிழர் தாயகம்தமிழ்த்தேசிய இனம்தமிழ் மொழி ஆகியவற்றின் உரிமைகளை முதன்மைப்படுத்தும் மாற்று அரசியலே இன்றையத் தேவை!

பழைய தி.மு.க.அ.தி.மு.க.வோ அல்லது அவற்றின் பாணியில் புதிய கட்சிகளோ தேவை இல்லை!

பா.ச.க.வின் இந்துத்துவா

பா.ச.க.வின் இந்துத்துவாவின் உண்மைப் பெயர் ஆரியத்துவா தான்! சொந்த இனத்திலும் அயல் இனங்களிலும் உள்ள சாதாரண இந்து மத மக்களை ஏமாற்றி ஈர்த்துக் கொள்ளவே ஆரியத்துவாவாதிகள் இந்துத்துவா” என்ற பெயரைப் பயன்படுத்துகின்றனர். தமிழில் அர்ச்சனை செய்யவோபிராமணரல்லாத தமிழர்கள் அர்ச்சகர்கள் ஆகிடவோ ஆர்.எஸ்.எஸ். ஒப்புக் கொள்ளவில்லை.

தமிழ்நாட்டில் பா.ச.க.வின் ஆரியத்துவா பாசிசத்தை எதிர்கொள்வதற்குரிய சரியான அரசியல் சிந்தாந்தம் தமிழ்த்தேசியமே!

உலகின் மூத்த குடிகளாகவும்முதல் இனமாகவும் உள்ள தமிழர்கள் ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் வாழ்ந்தவர்கள். இரண்டாயிரத்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன் இமயமலையில் தமிழ்க்கொடி ஏற்றி ஆண்டவர்கள் தமிழ் வேந்தர்கள்! அறிவியல் - அறம் - வீரம் மூன்றும் தமிழர் மரபின் மூன்று தூண்கள்! மனிதர்கள் அனைவரும் சமம் - தமிழர்கள் அனைவரும் சமம் என்பது தமிழர் அறத்தின் சாரம்!

இந்த மாண்புகள் எல்லாம் இப்பொழுது சிதைந்து கிடக்கின்றன. இவற்றை மீட்போம்!

தமிழர் இனமுழக்கம்

வேளாண் தமிழர் வாழ்வுரிமை காப்போம்தமிழ்நாட்டுத் தொழில் வணிகத்தில் தமிழர் மேலாதிக்கம் பெறப் போராடுவோம்! நடுவண் அரசு தொழிலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்குப் பெறுவோம்தமிழர் கடல் தமிழர்க்கு உரிமையாக்குவோம்எல்லா நிலையிலும் தமிழே ஆள வைப்போம்! பா.ச.க.வின் பாசிசம் தடுப்போம்!

தமிழ்த்தேசியச் சுடர் ஏந்துவோம்! தமிழ்த்தேசியத்தின் முகம் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

தலைமைச் செயலகம்,தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com



போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT