உடனடிச்செய்திகள்

Sunday, April 29, 2012

தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக மே நாளைக் கடைபிடிப்போம் - தமிழகமெங்கும் த.தே.பொ.க. மே நாள் நிகழ்வுகள்!

தமிழ்த் தேசிய எழுச்சி நாளாக மே நாளைக் கடைபிடிப்போம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் மே நாள் வாழ்த்துச் செய்தி!

ஆண்டைகள் பூட்டிய அடிமை விலங்குகளை உடைத்தெறிந்த உழைக்கும் மக்களை மீண்டும் அடிமைப்படுத்த புதிய முறையில் சட்டதிட்டங்களை இயற்றிக் கொண்டார்கள் ஆளும் வர்க்கத்தினர். அந்தப் புதிய அடிமைத் தளைகளை அறுத்தெறிய 19ஆம் நூற்றாண்டில் பாய்ந்தெழுந்த பாட்டாளி வர்க்கத்தின் எழுச்சி நாள் மே நாள். அதன் பிறகு மே நாள் என்பது ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களின் நாளாக மட்டுமின்றி ஒடுக்கபட்ட தேசிய இனங்களின் எழுச்சி நாளாகவும் ஆகிவிட்டது. இந்த மே நாளில் தமிழ்த் தேசிய எழுச்சிக்கும் விடுதலைக்கும் சூளுரைப்போம்!

 தமிழகமெங்கும் த.தே.பொ.க. சார்பில் மே நாள் கொடியேற்று விழாக்கள்!

உழைக்கும் மக்களுக்கு 8 மணி நேர வேலை உள்ளிட்ட பல்வேறு உரிமைகளைப் பெற்றுத்தந்த போர்க்குணமிக்க மே நாள் போராட்டங்களை நினைவு கூறும் வகையிலும், தமிழ்த் தேச விடுதலைக்கு தமிழ்த் தேசப் பாட்டாளிகள் உறுதியேற்க வேண்டுமென வலியுறுத்தியும்  தமிழகமெங்கும் மே-1ல் கொடியேற்றி மேநாளை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஆண்டுதோறும் கொண்டாடி வருகின்றது.


சென்னை

சென்னை த.தே.பொ.க. தலைமை அலுவலகம் அமைந்துள்ள தியாகராயர் நகர் முத்துரங்கம் சாலையில், காலை 9 மணியளவில் மே நாள் கொடியேற்று விழா நடைபெறுகிறது. த.தே.பொ.க. தலைவைர் தோழர் பெ.மணியரசன் கட்சியின் கொடியேற்றி மே நாள் உரை நிகழ்த்துகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழா பழ.நல்.ஆறுமுகம், தாம்பரம் கிளைச் செயலாளர் தோழா தமிழ்க்கனல் உள்ளிட்டோர் உரையாற்றுக்கின்றனர்.

 

திருத்துறைப்பூண்டி

திருத்துறைப்பூண்டி நீதிமன்றம் அருகில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் காலை 9 மணியளவில் நடைபெறும் நிகழ்வில், த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு த.தே.பொ.க. கொடியேற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார். நிகழ்வுக்கு, திருத்துறைப்பூண்டி த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் அ.தனபால் தலைமையேற்கிறார்.


வேதாரணியம்

வேதாரணியம் வட்டம் கடினல்வயலில் விம்கோ உப்புத் தொழிலாளர் சங்கம் சார்பில் மே தின கொடியேற்று விழா நடைபெறுகின்றது. சங்கச் செயலாளர் தோழர் இரெ.தியாகராசன் நிகழ்வுக்குத் தலைமையேற்கிறார். பன்னாள் கிராமத்திலிருந்து தொடங்கும் தொழிலாளர்கள் பேரணி சற்றொப்ப 5 கிலோ மீட்டர் நடந்து கடினல்வயல் விம்கோ  உப்புத் தொழிற்சாலை வாயில் நிறைவடைகிறது. அங்கு நடைபெறும் நிகழ்வில், த.தே.பொ.க. பொதுச் செயலாளரும், தொழிலாளர் சங்கத் தலைவருமான தோழர் கி.வெங்கட்ராமன்  தொழிற்சங்கக் கொடியை ஏற்றி வைத்து உரை நிகழ்த்துகிறார்.


தஞ்சை நகரம்

தஞ்சை த.தே.பொ.க. கட்சி அலுவலகத்தில் காலை 9 மணிக்கு தொடங்கும் மே நாள் கொடியேற்று நிகழ்வைத் தொடர்ந்து, மருத்துவக் கல்லூரி, கலைஞர் நகர், முனியாண்டவர் காலனி, பூக்கார லாயம், கோரிக்குளம், ரெங்கநாதபுரம், இந்திரா நகர், அண்ணா நகர் 7ஆம் தெரு, முதல் தெரு, வடக்குவாசல், தஞ்சை பழைய பேருந்து நிலையம் பழக்கடை உள்ளிட்ட இடங்களில் தொடர்ச்சியாக கொடியேற்ற விழாக்கள் நடைபெறுகின்ற. த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர் நா.வைகறை, தோழர் பழ.இராசேந்திரன், நகரச் செயலாளர் தோழர் இரா.சு.முனியாண்டி, நகரத் துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன், தமிழக இளைஞர் முன்னணி மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் ரெ.சிவராசு ஆகியோர் கொடியேற்றி வைக்கின்றனர்.


தஞ்சை ஒன்றியம்

தஞ்சை ஒன்றியம் வல்லம் கடைவீதி அண்ணா சிலை அருகில் மே நாள் கொடியேற்றுவிழா மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் பி.முருகையன் தலைமையில் நடைபெறும். தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் கொடியேற்றி மே நாள் உரைநிகழ்த்துகிறார்.

 

பூதலூர் ஒன்றியம்

தஞ்சை வட்டம் பூதலூர் இரயிலடியில் காலை 8 மணியளில் நடைபெறும், மே நாள் கொடியேற்று நிகழ்வுக்கு த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு தலைமையேற்கிறார். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு தோழர் ரெ.கருணாநிதி த.இ.மு. செயலாளர் தோழர் கே.செந்தில்குமார் உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.அதனைத் தொடர்ந்து ஒன்றியத்தில் 30க்கும் மேற்ப் பட்ட கிராமங்களில் தொடச்சியாக மாலைவரை கட்சிக் கொடியும், தமிழக இளைஞர் முன்னணி கொடியும் ஏற்றப் பட்டு மே நாள் தெருமுனைக் கூட்டங்கள் நடைப் பெறும்.

 

செங்கிப்பட்டியில் மாலை 6 மணியளவில் நடைபெறும் சாணுரப்பட்டி தானிஓட்டுனர் சங்க மே நாள் கொடியேற்று நிகழ்விற்கு, சங்கச் செயலாளரும் த.இ.மு. பொறுப்பாளருமான தோழர் தட்சிணாமூர்த்தி தலைமையேற்கிறார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிர் த.பானுமதி கொடியேற்றி வைத்து, பின்னர் அங்கு த.தே.பொ.க. நடத்தும் பொதுக்கூட்டத்தில் சிறப்புரையாற்றுகிறார். நிகழ்வில், த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் கருப்பசாமி, தோழர் இரமேசு, தோழர் கு.சுப்ரமணியன் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

 

மதுரை

மதுரை மாவட்டம் செல்லூர் - தாகூர் நகரில் காலை 9 மணியளவில் நடைபெறும் மே நாள் கொடியேற்ற நிகழ்வுக்கு, த.தே.பொ.க. செயலாளர் தோழர் இராசு தலைமையேற்கிறார். சித்திரை வீதி தானி ஓட்டுநர் சங்கச் செயலாளர் தோழர் இராசேந்திரன் த.தே.பொ.க. கொடியேற்றி வைக்கிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம், மகளிர் ஆயம் பொறுப்பாளர்கள் தோழர் மேரி,தோழர் இளமதி, தோழர் செரபினா உள்ளிட்டோர் இதில் பங்கேற்கின்றனர்.

 

கோவை

கோவை பேரூர் சாலையிலுள்ள செட்டி வீதி அருகில், காலை 10 மணியளவில் நடைபெறும் மே நாள் கொடியேற்று விழாவிற்கு தலைமையேற்கும், தமிழக இளைஞர் முன்னணி  பெரியக்கடை வீதி கிளைச் செயலாளர் தோழர் இரா.கண்ணன், த.தே.பொ.க. கொடியேற்றி வைக்கிறார். காலை 11.30 மணியளவில் எல்.ஐ.சி. குடியிருப்பு பகுதியில் நடைபெறும் மே தினக் கொடியேற்று நிகழ்விற்கு, செல்வபுரம் த.இ.மு. கிளைச் செயலாளர் தோழர் பிறை.சுரேசு தலைமை தாங்கி, த.இ.மு. கொடியேற்றி வைக்கிறார். த.இ.மு. மாநகரச் செயலாளர் தோழர் பா.சங்கர் மற்றும் கட்சிப் பொறுப்பாளர்கள் மே நாள் உரை நிகழ்த்துவார்கள்.

 

சிதம்பரம்

சிதம்பரம் காசுக்கடைத் தெருவில் காலை 8.30 மணியளவில் நடக்கும் கொடியேற்று விழாவிற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் கொடியேற்றி வைக்கிறார். தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் ஆ.குபேரன் தலைமை தாங்குகிறார்.


ஈரோடு

கருங்கல்பாளையம் பச்சியம்மன கோயில் வீதியில் காலை 9 மணியளவில் நடைபெறும் மே நாள் கொடியேறறு விழா நிகழ்விற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் குமரேசன் தலைமையேற்கிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் இராசையா கருத்துரை வழங்குகிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெ.இளங்கோவன் கொடியேற்றி வைக்கிறார்.

 

பெண்ணாடம்

கடலூர் மாவட்டம் பெண்ணாடம் மற்றும் முருகங்குடி பகுதிகளில் நடைப் பெறும் மே நாள் கொடியேற்று விழாவில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் தலைமையில் கட்சியின் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் குழ.பால்ராசு த.தே.பொ.க கொடியேற்றி மே நாள் சிறப்புரையாற்றுகிறார்.

 

ஓசூர்

ஓசூர் கடைவீதி கட்சிக் கொடியை ஏற்றிவைத்து தலைமை செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து உரையாற்றுகிறார். கட்சியின் பொதுக் குழு உறுப்பினர் தோழர் நடவரசு தலைமையேற்கிறார்.

 

குடந்தை

குடந்தை, சுவாமிமலை ஆகிய ஊர்களில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் விடுதலைச்சுடர் த.தே.பொ.க கொடியையும், பாபநாசத்தில் தமிழக இளைஞர் முன்னணி கொடியையும் ஏற்றிவைக்கிறார்.

 

திருச்சி

துவாக்குடியில் நடைபெறும் மே நாள் கொடியேற்று விழாவிற்கு செயலாளர் தோழர் கவித்துவன் தலைமைதாங்க வழக்கறிஞர் தோழர் த.பானுமதி த.தே.பொ.க கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார்.

 

திருச்செந்தூர்

தூத்துக்குடி மாவட்டம் குரும்பூர் கடைத் தெருவில் தோழர் உச்சிராசு தலைமையிலும், திருச்செந்தூர் தேரடி அருகில் தோழர் தமிழ்த்தேசியன் தலைமையிலும் நடைபெறும் மே நாள் விழாக்களில் கட்சியின் பொதுக்குழு உறுப்பினர் தோழர் மு.தமிழ்மணி த.தே.பொ.க கொடியேற்றி உரை நிகழ்த்துகிறார்.

 

இம் மே நாள் விழாக்களில் த.தே.பொ.க. தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்று சிறப்பிக்குமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கேட்டுக் கொள்கிறது. 


தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, தலைமைச் செயலகம், சென்னை-17.


Friday, April 27, 2012

செங்கல்பட்டு - பூந்தமல்லி தமிழீழ அகதிகள் முகாம்களை முடக்கக்கோரி கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய கண்டன உரை..!

செங்கல்பட்டு - பூந்தமல்லி தமிழீழ அகதிகள் முகாம்களை முடக்கக்கோரி, தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் 26-4-2012 அன்று சென்னையில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய கண்டன உரை..!

Tuesday, April 24, 2012

டி.கே.ரெங்கராசனுக்கு இவ்வாண்டு லங்கா ரத்னா விருது கிடைக்குமா? - பெ.மணியரசன் கேள்வி!

டி.கே.ரெங்கராசனுக்கு இவ்வாண்டு லங்கா ரத்னா விருது கிடைக்குமா?

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் கேள்வி!

 

இந்திய அரசால் இலங்கைக்கு அனுப்பப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் குழுவில் சென்று வந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் டி.கே.ரெங்கராசன், சென்னையில் தனியே ஒரு செய்தியாளர் கூட்டம் நடத்தி 22.04.2012 அன்று செவ்வி கொடுத்துள்ளார். அதில், "இலங்கையில் உள்ள தமிழர் அமைப்புகள், தமிழர் அரசியல் தலைவர்கள், தமிழ்ப் பொதுமக்கள் யாரும் தனிஈழத்தை விரும்பவில்லை. ஒன்றுபட்ட இலங்கைக்குள் சமஉரிமையுடன் கூடிய அரசியல் தீர்வையே விரும்புகின்றனர்" என்று கூறியுள்ளார்.

 

சிங்கள இனவெறி அரசு நடத்திய இன அழிப்புப் போரில் இலட்சக்கணக்கான தமிழர்கள் கொல்லப்பட்டனர். அதன் பிறகு, தமிழர்களின் ஊர்களில் சிங்களர் குடியேற்றப்பட்டு, தமிழர்களின் வீடுகள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இயல்பான குடிவாழ்க்கை வாழ முடியாமல் இராணுவத்தினர் தமிழர்கள் பகுதியெங்கும் நிரப்ப்ப்பட்டுள்ளனர். இராணுவத்தின் அனுமதியின்றி, திருமணச் சடங்குகள், இறப்புச் சடங்குகள் கூட நடத்த முடியாத கெடுபிடிகள் தொடர்கின்றன. மறுவாழ்விற்கான துயர் துடைப்புப் பணிகள் எதுவும் நடைபெறவில்லை. இலங்கை அரசு அமைத்த கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணையம் அளித்த மனித உரிமை மீறல் குற்றம் புரிந்தோர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சிங்கள இனவெறியாட்டம் தொடர்கிறது.

 

இந்த அவலங்கள் மீது நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை அரசை வலியுறுத்தாமல், தனி ஈழத்தைத் தமிழர்களே கோரவில்லை என்பதைக் கண்டறிந்ததாகக் கூறி, தமிழ்நாட்டுத் தமிழர்களையும், உலக சமுதாயத்தையும் குழப்புவதே இந்திய நாடாளுமன்றக் குழுவின் முதன்மையான நோக்கமாக இருந்திருக்கிறது.

 

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் அமெரிக்கத் தீர்மானத்தைத் திருத்தத்துடன் ஆதரித்து வாக்களித்ததற்காக, இலங்கை இனவெறியன் இராசபட்சேயிடம் மன்னிப்புக் கேட்காதது மட்டும்தான் பாக்கி. மற்ற எல்லா விளக்கங்களையும் பணிந்து சொல்லிக் கொண்டுள்ளது இந்தியா. பிரதமர் மன்மோகன் சிங் விளக்கமளித்து இராசபட்சேக்கு மடல் எழுதினார்.

 

இவை எல்லாம் போதாதென்று ஒரு நல்லெண்ணத் தூதுக்குழுவாக, சுஷ்மா சுவராஜ் தலைமையில் நாடாளுமன்றக் குழுவை இந்தியா இலங்கைக்கு அனுப்பி வைத்தது. அந்தக் குழுவும் இந்திய அரசின் விருப்பத்தை அது எதிர்ப்பார்த்ததைத் தாண்டி நிறைவேற்றியுள்ளது.

 

ஈழத்தமிழர்கள் யாரும் தனிநாடு கோரவில்லை என்று கூறினார்கள் என்பது உண்மையெனில், ஐ.நா. மன்றத்தின் மேற்பார்வையில் ஒரு கருத்து வாக்கெடுப்பு நடத்துமாறு, சுஷ்மா சுவராஜ் கோரியிருக்கலாம். டி.கே.ரெங்கராசனும், சுதர்சன நாச்சியப்பனும் கோரியிருக்கலாம்.

 

இன அழிப்பு செய்த இராணுவத்தின், 24 மணி நேர தீவிரக் கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ள மக்கள் தங்கள் கருத்தைப் பகிரங்கமாக கூறும் நிலை ஈழத்தில் இல்லை. பரிவாரங்கள் இல்லாமல் தனித்தனியே மக்களைச் சந்தித்துக் கேட்டிருந்தால் அவர்கள் தங்கள் உள்ளக் கிடக்கையைச் சொல்லியிருப்பார்கள்.

 

தமிழ் ஈழ விடுதலைக்காகப் புலிப்படையில் சேர்ந்து 40 ஆயிரம் புலிகள் உயிரீகம் செய்துள்ளார்கள். மக்களின் கோரிக்கையாக, தனித் தமிழீழம் இல்லையென்றால், வீட்டுக்கொருவர், இருவர் என்று கிட்டத்தட்ட எல்லா வீடுகளிலிருந்தும் புலிப்படையில் சேர்ந்திருப்பார்களா? தமிழீழத் தேசியத் தலைவராகப் பிரபாகரன் அவர்களை மக்கள் ஏற்றுக் கொண்டிருப்பார்களா? முள்ளிவாய்க்கால் வரை அவருடன் இலட்சக்கணக்கான தமிழர்கள் வந்திருப்பார்களா? முள்வேலி முகாம்களுக்குள் அடைக்கப்பட்ட போது அங்கும் புலிக்கொடி ஏற்றியிருப்பார்களா?

 

தமிழ்நாட்டிலிருந்து பலர் தமிழ் ஈழப்பகுதிகளுக்குப் போய் வந்து கொண்டுதான் இருக்கிறார்கள். அவர்கள் எந்தப் பரிவாரங்களும் இல்லாமல் தனித்தனியே தமிழர்களைச் சந்தித்து வருகிறார்கள். அப்போது, ஈழத்தமிழர்கள் சொன்னது "இனி மேலும் சிங்களன்களோடு வாழ முடியாது. நாட்டு விடுதலை ஒன்று தான் ஒரே தீர்வு" என்பது தான்.

 

ஈழத்தில் பகிரங்கமாக விடுதலைக் கருத்தைக் கூறமுடியாத நெருக்கடி இருப்பதால், புலம் பெயர்ந்த நாடுகளில் தான், ஈழவிடுதலை இலட்சிணம் இப்பொழுது முன்னெடுக்கப்படுகிறது. ஏனெனில், அந்நாடுகளில்தான் ஈழத்தமிழர்கள் சுதந்திரமாகக் கருத்துக் கூறும் நிலை உள்ளது.

 

ஈழத்தில் இருக்கும் இராணுவ நெருக்கடியைப் பயன்படுத்திக் கொண்டு, டி.கே.ரெங்கராசன், தமிழ் ஈழத்தைத் தமிழர்கள் விரும்பவில்லை என்று கூறுகிறார். இது இராணுவம் கருத்துரிமையைப் பறித்ததற்குச் சமமான கருத்துரிமைப் பறிப்பாகும். இதற்காக இவ்வாண்டிற்குரிய லங்கா ரத்னா விருது டி.கே.ரெங்கராசனுக்குக் கிடைத்தாலும் கிடைக்கலாம்.

 

ஒன்றுபட்ட இலங்கைக்குள் சம உரிமையுடன் வாழவிரும்புகிறார்கள் என்று கூறும் ரெங்கராசன் அந்த சமஉரிமையைப் பெற்றுத்தர அவரது கட்சி என்ன செய்கிறது? அதற்காக இந்தியா என்ன செய்கிறது?

 

சமஉரிமை என்ற கானல் நீரைக்காட்டி, ஈழத்தமிழர்களின் விடுதலை தாகத்தைத் தணிக்கச் சொல்லி மடைமாற்றுவதே இந்தியாவின் தந்திரம்! சி.பி.எம். கட்சியின் தந்திரமும் அதுவே. ஈழத்தமிழர்கள் ஏமாறமாட்டார்கள். தமிழகத் தமிழர்கள் குழம்ப வேண்டாம்.


தோழமையுள்ள,

பெ.மணியரசன்

தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம் சென்னை 

நாள் 25.04.2012


Monday, April 16, 2012

கூடங்குளம் அணுஉலைச் சிக்கலில் தொடரும் சி.பி.எம்.மின் பித்தலாட்டம் - த.தே.பொ.க. அறிக்கை!

கூடங்குளம் அணுஉலை:

தொடரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பித்தலாட்டம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

 


கூடங்குளம் அணுஉலைத் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி நடத்துகிற பித்தலாட்ட நாடகம் தொழில்முறைப் பொய்யர்களைக் கூடப்பின்னுக்குத் தள்ளி விடும்.

 

அண்மையில், கோழிக்கோட்டில் நடந்த மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 20ஆவது அனைத்திந்திய மாநாட்டில் தொடக்க உரையாற்றிய அக்கட்சியின் பொதுச் செயலாளர் பிரகாஷ் காரத் கூடங்குளம் அணுஉலைத் திறப்பதை தாங்கள் ஆதரிப்பதற்கான 'விசித்திரமான' காரணத்தை  முன்வைத்தார்.

 

"செய்தாப்பூர் அணுஉலை என்பது தனியார் நிறுவனத்தின் அணுஉலை என்பதாலும், அமெரிக்க அணு ஆயுதத் திட்டத்தோடு இந்தியாவை இணைக்கும் என்பதாலும் செய்தாப்பூர் அணஉலையை சிபி.எம். எதிர்த்த்து. ஆனால் கூடங்குளம் அணுஉலைத் திட்டம் அப்படியானதல்ல. இது சோசலிச சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம். எனவேதான் கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை நாம் ஆதரித்தோம்" என்று அவர் பேசியுள்ளார்.

 

அணுஉலையிலும் அதில் வெளியிடும் அணுக்கதிரியக்கத்திலும் தத்துவ வேறுபாடு எதுவுமில்லை. கம்யூனிஸ்ட்டுகளின் அணுஉலை அணுக்கதிரியக்கத்தை வெளிப்படுத்தாது, முதலாளிய அணுஉலை தான் கதிரியக்கத்தை வெளிப்படுத்தும் என நம்புவதற்கு அறிவியல் அடிப்படை எதுவுமில்லை. யார் நிறுவினாலும் அணுஉலை அணுஉலை தான். தீமை விளைவிப்பவை தான்.

 

மேலும், பிரகாஷ் காரத் சொல்லுவது போல் இப்போது கூடங்குளத்தில் நிறுவப்படும் அணுஉலை கம்யூனிஸ்ட் சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலானது அல்ல. 1988இல் சோவியத் ஒன்றியத்துடன் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தம் அந்நாடு சிதறுண்டதுடன் காலாவதியானது. எனவே, பொதுவுடைமையைக் கைவிட்டு முதலாளியத்திற்குத் திரும்பிய இரசிய நாட்டுடன் 2001ஆம் ஆண்டில் செய்து கொள்ளப்பட்ட ஒப்பந்தமே கூடங்குளம் அணுஉலை ஒப்பந்தமாகும்.

 

அதை செயல்படுத்தும் இப்போதைய இரசியக் குடியரசுத் தலைவர் புடின், இரசியக் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளர் கென்னடி குயனைவ் அவர்களை தோற்கடித்து பதவிக்கு வந்தவராவார். அவருடைய ஆட்சி தான் கூடங்குளம் அணுஉலையை செயல்படுத்தப் போகிறது. எனவே, பிரகாஷ் காரத் குறிப்பிடுவதைப் போல் கூடங்குளம் அணுஉலையோடு கம்யூனிஸ்ட் கட்சி ஒட்டிக் கொண்டிருக்கவில்லை.

 

கூடங்குளம் அணுஉலையை ஆதரிப்பதற்கு அப்பட்டமான பொய்யையும், அறிவியலுக்குப் புறம்பான செய்திகளையும் துணைக் கொள்கிறார் பிரகாஷ் காரத்.

 

காரத்துக்கு முன்னால் சி.பி.எம். கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் ஜி.இராமகிருஷ்ணன் தங்கள் கூடங்குளம் அணுஉலை ஆதரவுக்கு வேறொரு காரணத்தைச் சொன்னார். அக்கட்சியின் தமிழக மாநில மாநாடு நாகப்பட்டினத்தில் நடந்த போது, சிறப்புரையாற்றிய ஜி.இராமகிருஷ்ணன், "கூடங்குளத்தில் நிறுவப்பட்டுள்ள வி.வி.இ.ஆர். 1000 என்ற இரசிய அணுஉலை செய்தாப்பூரில் நிறுவப்பட இருந்த பிரஞ்சு அணுஉலையை விட உயர்த் தொழில்நுட்பத்தில் இயங்குவது. அதில் சிறப்பான பாதுகாப்பு ஏற்பாடுகள் உள்ளன. எனவே தான் செய்தாப்பூர் அணுஉலையை எதிர்க்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கூடங்குளம் அணுஉலையை ஆதரிக்கிறது" என்று கூறினார்.

 

வி.வி.இ.ஆர். 1000 தொழில்நுட்பம், 13 உடனடியாக சரி செய்யவேண்டிய முக்கியமான பாதுகாப்புக் கோளாறுகளை உள்ளடக்கியது என இரசிய நாட்டு அணுஉலை அறிவியலாளர்களே அறிவித்துள்ளனர். அந்நாட்டுப் பிரதமரிடம் கடந்த 2011 சூன் மாதம் அளித்த அறிக்கையில் வி.வி.இ.ஆர். 1000 அணுஉலை அது இயங்கத் தொடங்கிய 2ஆவது ஆண்டிலிருந்தே பாதுகாப்புக் கோளாறுகளில் சிக்கிக் கொள்ளும். அதில் உள்ள கட்டுப்பாட்டுக் கம்பி(Control Rod) இயங்குவதில் சிக்கல் ஏற்பட வாய்ப்புள்ளது. அவ்வாறு நேர்ந்தால் அணுஉலையில் அளவுக்கு அதிகமான வெப்பம் உயர்ந்து சிறுக் கீறல் முதல் பெரு வெடிப்பு வரை நிகழ் வாய்ப்புண்டு என்று தெரிவித்துள்ளனர்.

 

அது மட்டுமின்றி வி.வி.இ.ஆர். 1000 அணுஉலையில் மையக்கலனில் உள்ள பற்றவைப்புகள் (Welding) பலவீனமானது என்றும் தொடர்ச்சியான அணுத்துகள்களின் மோதல்களின் விளைவாக அவை இற்றுப்போக வாய்ப்புண்டு என்றும் எச்சரித்துள்ளனர்.

 

உண்மை இவ்வாறிருக்க, வி.வி.இ.ஆர். 1000 அணுஉலை பாதுகாப்பானது என்பதற்கு திரு. ஜி.இராமகிருஷ்ணன் அவர்களுக்கு எங்கிருந்து அறிவியல் சான்று கிடைத்த்தோ தெரியவில்லை. தங்கள் கூடங்குளம் அணுஉலை ஆதரவை ஞயாயப்படுத்த எந்தப் பொய்யையும் சொல்வதற்கு இவர்கள் அணியமாக இருக்கிறார்கள்.

 

கோழிக்கோடு மாநாட்டின் தீர்மானங்களை விளக்கி செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் சித்தாராம் யெச்சூரி, தங்கள் முடிவுக்கு வேறொரு காரணத்தைச் சொன்னார். "கைகா அணுஉலையைப் போல கூடங்குளம் அணுஉலை ஏற்கெனவே இயக்கத்தில் இருப்பது. அதிலிருந்து ஏற்கெனவே மின்சாரம் உற்பத்தியாகி வருகிறது. ஆனால்,  செய்தாப்பூர் அணுஉலை இனிமேல் தான் நிறுவப்பட வேண்டும். எனவே தான் கூடங்குளம் அணுஉலையை நாங்கள் ஆதரிக்கிறோம்" என்றார்.

 

கூடங்குளம் அணுஉலையில் இனிமேல் தான் எரிபொருள் நிரப்ப வேண்டும். அதன் பிறகு தான் மின்சார உற்பத்தி நடக்கும் என நாள்தோறும் அரசு அறிவித்துக் கொண்டுள்ள நிலையில், எல்லா செய்தித்தாள்களிலும் அச்செய்தி வந்து கொண்டிருக்கும் போது, இந்த அடிப்படைத் தகவல் கூட தெரியாமல் சீத்தாராம் யெச்சூரி பேசுவதாக நம்பமுடியவில்லை. ஆளுக்கொரு கருத்தைச் சொல்லி தங்கள் முடிவை ஞாயப்படுத்த, மக்களைக் குழப்ப அக்கட்சியின் தலைவர்கள் முனைகிறார்கள். அதில் ஒன்று தான் யெச்சூரியின் கூற்று.

 

கேரள முன்னாள் முதலமைச்சர் அச்சுதானந்தன் இதற்கெல்லாம் ஒருபடி மேலே போய்விட்டார். கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து போராடி வரும் மக்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் இடிந்தகரைக்கே வருவதாக அறிவித்தார். அக்கட்சித் தலைமை கட்டளையிட்டதன் அடிப்படையில் கடைசி நேரத்தில் அப்பயணத்தைத் தவிர்த்துக் கொண்டார்.

 

இவ்வாறு, கூடங்குளம் அணுஉலைத் தொடர்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செய்யும் பித்தலாட்டம் அளவிட முடியாமல் சென்று கொண்டிருக்கிறது. 


தோழமையுடன்,

கி.வெங்கட்ராமன்

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்: சிதம்பரம்,

நாள்: 16.04.2012



Saturday, April 14, 2012

உச்சநீதிமன்றத் தீர்ப்பின்படி தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீட்டை விலக்கின்றி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும் - த.தே.பொ.க. வலியுறுத்தல்!

ஒடுக்கப்பட்ட சமூக மாணவர்களுக்கு தனியார் பள்ளி இடஒதுக்கீட்டை

விலக்கின்றி தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அறிக்கை!

 

கல்வி உரிமை சட்டத்தின் அடிப்படையில் அனைத்து தன்நிதி தனியார் பள்ளிகளிலும், தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மற்றும் ஏழை மாணவர்களுக்கு 25 விழுக்காடு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் தனது 12.04.2012 நாளது தீர்ப்பின் மூலம் உறுதிசெய்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.


ஆயினும், இத்தீர்ப்பு இச்சட்டப்பிரிவிலிருந்து சிறுபான்மையினர் நடத்தும் தன்நிதி பள்ளிகளுக்கு விலக்களித்திருப்பது சமூகநீதியின்பாற்பட்டதல்ல. இது மறுஆய்வுக்கு உட் படுத்தப்பட வேண்டும். சிறுபான்மையினர் நடத்தும் தன்நிதி பள்ளிகள் உள்ளிட்டு அனைத்துத் தனியார் பள்ளிகளுக்கும் விலக்கின்றி இச்சட்டம் செயலுக்கு வரவேண்டும். 


தமிழ்நாட்டைப் பொறுத்த அளவில், சென்ற கல்வி ஆண்டிலேயே இச்சட்டச் செயலாக்கம் குறித்து பள்ளிகளுக்கு ஆணைகள் பிறப்பிக்கப்பட்டுள்ளன. இத்தீர்ப்பின் அடிப்படையில், அனைத்து ஒடுக்கப்பட்ட மாணவர்களுக்கும் 25 விழுக்காடு இடஒதுக்கீடு கிடைப்பதை தமிழக அரசு உன்னிப்பாக கவனித்து உறுதிப்படுத்த வேண்டும். 


இதனை செயல்படுத்தும் போது, நடைமுறையில் இதனை பயனற்றதாக்கும் சூழ்ச்சியில் தன்நிதிப் பள்ளி நிர்வாகங்கள் இறங்கக் கூடும். எடுத்துக்காட்டாக, இடஒதுக்கீட்டு மாணவர்களை தனி வகுப்புப் பிரிவாக(செக்ஷன்) பிரித்து வைத்து, பிற மாணவர்களுடன் இணைய விடாமலும் அவ்வகுப்புப் பிரிவுகளை ஏனொதானோவென்று நடத்திப் புறக்கணிப்பதிலும், அந்நிர்வாகங்கள் ஈடுபடக் கூடும். இவ்வாறு நிகழாமல் இச்சட்டம் முறையாகச் செயல்பட தமிழக அரசின் பள்ளிக்கல்வித் துறை உரிய கவனம் செலுத்த வேண்டும். 


வரும் கல்வியாண்டில் இதை செயல்படுத்துவதிலிருந்து தவிர்ப்பதற்காக பல தனியார் கல்வி நிறுவனங்கள் முன்கூட்டியே மாணவர் சேர்க்கையை முடித்து விட்டதாக அறிகிறோம். அவ்வாறான பள்ளிகளில், விலக்கின்றி வரும் கல்வியாண்டே இச்சட்டம் முழுமையாக செயலாவதை பள்ளிக் கல்வித்துறை உறுதி செய்ய வேண்டும். 


தனியார் பள்ளிகளின் இடஒதுக்கீட்டில் சேர்க்கப்படும் மாணவர்களுக்கு விலையில்லாப் பேருந்துப் பருவச் சீட்டு(இலவச பஸ் பாஸ்) தமிழக அரசு வழங்க வேண்டும். இவ்வாறு செய்தால் தான் இச்சட்டத்தின் பயன் தொடர்புடையவர்களுக்கு சென்று சேரும். இதனை தமிழக அரசு செயல்படுத்த வேண்டும்.


 தங்கள் உண்மையுள்ள,

கி.வெங்கட்ராமன்,

பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


இடம்: சென்னை



Friday, April 6, 2012

தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டம் குறித்து தோழர் பெ.மணியரசன்


தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டம் குறித்து தோழர் பெ.மணியரசன்

தமிழீழ விடுதலையின் அடுத்த கட்டம் குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் முழக்கம் இணைய இதழுக்கு வழங்கிள காணொளி செவ்வி..!




நாள்: ஏப்ரல் 5, 2012

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT