உடனடிச்செய்திகள்

Monday, June 17, 2013

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசைக் கண்டித்து ஆர்ப்பாடடம்!

தமிழ்வழிப் பள்ளிகளை ஆங்கிலவழிப் பள்ளிகளாக மாற்றும் தமிழக அரசின் நடவடிக்கைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில் இன்று(17.06.2013) தமிழகமெங்கும் மாவட்டத் தலைநகரங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மதுரை மதுரை ஜான்சி ராணி பூங்கா அருகில், காலை 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கத்தின் ஒருங்கிணைப்பாளரும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவருமான தோழர் பெ.மணியரசன் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாநகர மாவட்டச் செயலாளர் திரு. மு.பூமிநாதன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தமிழர் தேசிய இயக்க மாநில பொருளாளர் திரு. மு.ரெ.மாணிக்கம், தோழர் பரிதி(தமிழ் தமிழர் இயக்கம்), திரு. கோ.செய்யது இப்ராகிம்(எஸ்.டி.பி.ஐ.), தோழர் கதிர்நிலவன்(தமிழ்த் தேசியக் குடியரசு இயக்கம்), திரு. வெற்றிச்செல்வன் (புரட்சிக்கவிஞர் பேரவை), தோழர் குமரசன் (த.பெ.தி.க), தோழர் முகில் அரசன்(தமிழ்ப்புலிகள்), தோழர் மணி தாபா (தமிழ்நாடு மக்கள் கட்சி), தோழர் மில்ட்டன் (தமிழ்நாடு மாணவர் இயக்கம்), திரு. பொன்மாறன்(தமிழ்க் காப்புக் கழகம்), தமிழியம் இதழாசிரியர் திரு. தமிழ்மகன், மக்கள் உரிமைப் பேரவை வழக்குரைஞர் சு.அருணாச்சலம், சமநீதி வழக்குரைஞர் சங்கம் திரு. இராசேந்திரன், அனைத்துக் கல்லூரி மாணவர் இயக்கம் திரு. முகிலன், தோழர் செல்வம் (ஆதித்தமிழர் பேரவை), மகளிர் ஆயம் அமைப்புக்குழுத் தோழர் மேரி, புரட்சிகர இளைஞர் முன்னணி தோழர் முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். சென்னை சென்னை நுங்கம்பாக்கம் வள்ளுவர் கோட்டம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் தமிழக வாழ்வுரிமைக் கட்சித் தலைவர் திரு. தி.வேல்முருகன் தலைமையேற்றார். தந்தை பெரியார் திராவிடர் கழகத் தலைவர் திரு. ஆனூர் செகதீசன் தொடக்கவுரையாற்ற, ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்யா, தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத் துணைத் தலைவர் திரு. குணங்குடி அனீபா, திராவிடர் விடுதலைக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், தமிழ்நாடு மக்கள் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் அருண்சோரி, சேவ் தமிழஸ் இயக்க் ஒருங்கிணைப்பாளர் தோழர் செந்தில், தோழர் தியாகு(த.தே.வி.இ.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி நிகழ்வைத் தொகுத்து வழங்கினார். புலவர் பா.இறையெழிலன் நன்றி கூறினார். இவ்வார்ப்பாட்டத்தில் திரளான மகளிரும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். தஞ்சை தஞ்சாவூர் பனகல் கட்டிடம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில், 10.30 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாவரம் திரு. சி.முருகேசன் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, ம.தி.மு.க. பொருளாளர் திரு. துரை.சிங்கம், தமிழக மக்கள் புரட்சிக் கழக அமைப்பாளர் திரு. அரங்க குணசேகரன், திரு. ம.இரவிச்சந்திரன்(தமிழக வாழ்வுரிமைக் கட்சி), மனித நேய மக்கள் கட்சி திரு. ஜெ.ஜெலந்தர், தாளாண்மை உழவர் இயக்கம் திரு. கோ.திருநாவுக்கரசு, முனைவர் இளமுருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். கிருட்டிணகிரி கிருட்டிணகிரி பழைய பேருந்து நிலையம் ரவுண்டானா எதிரில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து தலைமையேற்றார். தமிழக வாழ்வுரிமைக் கட்சி மாவட்டச் செயலாளர் திரு. வேலுமணி, ம.தி.மு.க. நகரச் செயலாளர் திரு. சந்திரன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஓசூர் நகரச் செயலாளர் தோழர் முருகப்பெருமாள், தந்தை பெரியார் தி.க. மாவட்ட அமைப்பாளர் தோழர் ருத்ரன், தமிழ்த் தேசக் குடியரசு இயக்கம் மாவட்டச் செயலாளர் தோழர் ஒப்புரவன். தமிழர் தேசிய இயக்கம் மாவட்டச் செயலாளர் தோழர் முருகேசன், தமிழ உழவர் முன்னணி இராயக்கோட்டைக் கிளைச் செயலாளர் தோழர் தூருவாசன் ஆகியோர் கண்டன உரையாற்றினர். திருவள்ளூர் திருவள்ளூர் தொடர்வண்டி நிலையம் அண்ணா சிலை அருகில் காலை 10 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழர் முன்னேற்றக் கழகத் தலைவர் திரு அதியமான் தலைமையேற்றார். ம.தி.மு.க. மாவட்டச் செயலாளர் திரு. டி.ஆர்.ஆர்.செங்குட்டுவன், இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டத் துணைச் செயலாளர் தோழர் கஜேந்திரன், திரு. குமரி நம்பி(சுதேசி இயக்கம்), திரு. ஆ.இராஜா திருநாவுக்கரசு (தமிழின உணர்வாளர் கூட்டமைப்பு), தோழர் மு.பெ.முத்தமிழ்மணி(தமிழர் தேசிய இயக்கம்), தமிழ்த் தேசக் குடியரசு இயக்க அமைப்புக்குழு உறுப்பினர் தோழர் சிவகாளிதாசன், தமிழக மக்கள் விடுதலை இயக்கம் திரு. வீரபாண்டியன், தமிழர் பேரரசுக் கட்சி வழக்கறிஞர் கணேசன், மனித உரிமைக்கான மக்கள் கூட்டம் தோழர் சு.ப.செம்பாண்டியன், புலவர் தமிழேந்தி(மா.பெ.பொ.க.), தமிழ்நாடு கலை இலக்கியப் பெருமன்றம் திரு. சு.நாச்சியப்பன், மனித நேய மக்கள் பாசறை திரு. நீலக்கண்டன், தமிழ்த் தேசியக் கூட்டணி வழக்கறிஞர் பா.குப்பன், தமிழ்நாடு மக்கள் கல்விக் கூட்டமைப்பு திரு. பசுமை மூர்த்தி ஆகியோர் கண்டன உரையாற்றினர். சேலம் சேலம் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் நாட்டாமை கட்டிடம் முன்பு காலை 11 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, உலகத் தமிழ்க் கழக சேலம் மாவட்டத் தலைவர் திரு. வை.நா.ஆடல் அரசு தலைமையேற்றார். திரு. ஆனந்தராஜ்(ம.தி.மு.க.), தமிழக எல்லைப் போராட்ட தியாகிகள் சிங்கம் திரு. ரெ.ரெத்தினம், உலகத் தமிழ் பண்பாட்டு இயக்கத் தலைவர் திரு. கே.சி.இளந்திரையன், உயிர்மைத் தமிழ்ச் சங்கம் திரு. சொல்லரசர், திரு காமராசு (ஆயுத எழுத்து தமிழ்ச் சங்கம்), திரு பூங்குழலி (தமிழ்நாடு மக்கள் உரிமை இயக்கம), திரு. அண்ணாதுரை (அம்பேத்கர் மக்கள் இயக்கம்), திரு. முரளி (உழைக்கும் மக்கள் முன்னணி), தோழர் தமிழியன் (புரட்கிசர மக்கள் முன்னணி), தோழர் இளமாறன்(த.ஓ.வி.இ.), திரு. சோலை இராஜா (தமிழர் முன்னேற்றக் கழகம்) ஆகியோர் கண்டன உரையாற்றினர். மார்க்சியப் பெரியாரியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் அய்யா வே.ஆனைமுத்து சிறப்புரை நிகழ்த்தினார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சேலம் அமைப்பாளர் தோழர் ச.பிந்துசாரன் நன்றியுரைத்தார். இதே போன்று, தமிழகத்தின் பல்வேறு மாவட்டத் தலைநகரங்களிலும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றுள்ளன. தர்மபுரி, விழுப்புரம், கடலூர் ஆகிய மாவட்டங்களில் 144 தடை உத்தரவைக் காரணம் காட்டி, தமிழக அரசு ஆர்ப்பாட்டம் நடத்த அனுமதி மறுத்துள்ளது.
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு)

Saturday, June 15, 2013

“கோபுரம் சாய்ந்தது” - இயக்குநர் மணிவண்ணன் அவர்களுக்கு தோழர் பெ.மணியரசன் வீரவணக்கம்!


“கோபுரம் சாய்ந்தது”
இயக்குநர் மணிவண்ணன்
அவர்களுக்கு வீரவணக்கம்!
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் 
தோழர் பெ.மணியரசன் அறிக்கை


இயக்குநர் மணிவண்ணன் அவர்கள், அன்று மாரடைப்பால் இறந்துவிட்டார் என்ற செய்தி இடிபோல் தாக்கியது. அவர் இயக்கிய முதல் படமான ‘கோபுரங்கள் சாய்வதில்லை’ மக்களின் கவனத்தை ஈர்த்தது. அதன்பிறகு, ‘பாலைவன ரோஜாக்கள்’, நூறாவது நாள், அமைதிப்படை என்று சிறந்தப் படங்கள் வழங்கி, கோபுரம் போல் உயர்ந்தார். ‘இனி ஒரு சுதந்திரம்’ மிகவும் கருத்தானப் படம்.

இயக்குநர் என்ற நிலையில் இருந்து கொண்டே பிறர் இயக்கத்தில் ஏராளமான படங்களில் நடித்தார். படங்களுக்கு நேரம் கொடுக்க முடியாமல் அவர் திணறிய ஆண்டுகளும் உண்டு.

திரைத்துறையில் எவ்வளவு உச்சத்திற்குப் போனாலும், பழக்கத்தில் பழையத் தோழராகவே இருந்தார். மார்க்சியம் - பெரியாரியம் - தமிழ்த்தேசியம் ஆகியவற்றை உள்வாங்கி, அத்திசையில்  மேடைகளில் கருத்துகள் வழங்கி வந்தார். தம் மகளுக்கு சாதி மறுப்புத் திருமணம் செய்து வைத்தார். அவரே, காதல் திருமணம் - சாதி மறுப்புத் திருமணம் செய்து கொண்டவர் தான்.

இயக்குநர் மணிவண்ணன் அவர்களுடன் எனக்கு நட்பு ஏற்பட்ட பின், இனிமையான தோழர்களாகவே பழகி வந்தோம். தமிழர் கண்ணோட்டம் இதழ் வளர்ச்சிக்குப் பேருதவி புரிந்தார். ஒருமுறை இதழ் வளர்ச்சிக்கென்று நிதி வேண்டும் என்று 15 ஆண்டுகளுக்கு முன் அவரிடம் கேட்டேன். வீட்டிற்குள் சென்றவர் பத்தாயிரம் ரூபாய் கொண்டு வந்து கொடுத்தார்.

தமிழர் கண்ணோட்டம் வளர்ச்சி நிதிக்காக முனைவர் புதுவை ராஜூ அவர்கள் இயக்கிய ‘நந்தன் கதை’ நாடகத்தை தஞ்சையில் போட்டோம். அதற்கு வந்து தலைமை தாங்கினார். போக்குவரத்து செலவுகூட வாங்கிக் கொள்ளவில்லை. அதே போல் மறுமுறை புஷ்பவனம் குப்புசாமி அவர்களின் தமிழிசை நிகழ்ச்சி தஞ்சையில் நடத்தினோம். அதற்கும் வந்து உரையாற்றி சிறப்பித்தார்.

தஞ்சையில் த.தே.பொ.க. சார்பில் பொங்கல் விழா நடத்தினோம். அதில் நடந்த பட்டிமன்றத்திற்கு, நடுவர் மணிவண்ணன்; ஓரணிக்குத் தலைவர் பேராசிரியர் சுப.வீரபாண்டியன். இன்னொரு அணிக்குத் தலைவர் பேராசிரியர் அப்துல் காதர். அந்தப் பட்டிமன்றம் எவ்வளவு சிறப்பாக இருந்தி ருக்கும் என்று ஊகித்துக் கொள்ளலாம். கூடியிருந்த பெருங்கூட்டம் ஆரவாரம் செய்தது.

தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் தீவிர அக்கறை செலுத்தியவர் தோழர் மணிவண்ணன். தமிழீழ தேசியத் தலைவர் பிரபாகரன் மீது பெரு மதிப்புக் கொண்டவர். எந்த நெருக்கடிக்காகவும் அவர் ஈழஆதரவுக் கருத்துகளை மாற்றிக் கொள்ள வில்லை.

தமிழ்த் திரைப்படத்துறையில் தமிழின உணர்வும் தமிழ்த் தேசிய உணர்வும் உள்ளவர்கள் குறைவு. அவர்களில் குறிப்பிடத்தக்கவர் மணிவண்ணன். அந்த கோபுரம் சாய்ந்துவிட்டது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பிலும், தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழ் சார்பிலும் தோழர் மணிவண்ணன் அவர்களுக்கு வீர வணக்கம் செலுத்துகிறேன்.

இங்ஙனம்,
பெ.மணியரசன்,
தலைவர்,தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி. 

இடம்: தஞ்சை
நாள்: 15.06.2013 

Wednesday, June 12, 2013

“காவிரி உரிமை மீட்க தமிழக அரசு காவிரி எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும்” - தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு!


"காவிரி உரிமை மீட்க தமிழக அரசு காவிரி எழுச்சி நாள் கடைபிடிக்க வேண்டும்"

தமிழக உழவர் முன்னணி ஆர்ப்பாட்டத்தில் திரு. கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்.

 

    ஜூன் 12-ல் மேட்டூர் அணை திறக்கும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து  தமிழகத்துக்கு உரிய காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்து தமிழக உழவர் முன்னணி சார்பில் சிதம்பரத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.  சிதம்பரம் தலைமை அஞ்சலகம் முன்பு இன்று காலை 10.30 க்கு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்ட செயலாளர் திரு, சி. ஆறுமுகம் தலைமையேற்றார்.


காவிரி நீரை மறுத்துவரும் கர்நாடக அரசுக்கு எதிராகவும்,  காவிரி நீரை பெற்றுத்தராத இந்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்ககள் எழுப்பப்பட்டது. தமிழக உழவர் முன்னணி கடலூர் மாவட்ட தலைவர் திரு அ.கோ.சிவராமன், முன்னிலை வகித்தார்.  பொறுப்பாளர்கள், திரு தங்க.கென்னடி, பொறியாளர் என்.ஜெயபாலன் , கோ.பொன்னுசாமி ஆகியோர் கண்டன உரையாற்றினார்கள்.


நிறைவாக தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் திரு, கி. வெங்கட்ராமன் ஆர்ப்பாட்டத்தினை விளக்கி பேசினார். அப்போது அவர், "தமிழகத்துக்குரிய காவிரி நீரை கர்நாடக அரசு தொடர்ந்து மறுத்து வருகிறது. உலக ஆற்று நீர் சட்டங்களையோ நீதிகளையோ, நீதிமன்ற உத்தரவுகளையோ மதிக்காத கர்நாடக அரசின் அடாவடித்தனத்துக்கு இந்திய அரசு துணை நிற்கிறது.   தமிழகத்துக்குரிய காவிரி நீரை இழந்து தமிழக உழவர்கள் கையறு நிலையில் உள்ளனர். தொடர்ந்து காவிரி நீரின்றி நிலத்தடி நீர் குறைந்து வருவதால்   காவிரி மாவட்ட மக்களின் குடிநீரும் கேள்விக்குறியாய் உள்ளது.


இந்திய அரசு நடுவர் மன்ற தீர்ப்பில் கூறியுள்ளபடி காவிரி மேலாண்மை வாரியம் அமைத்து காவிரி அணைகளின் நீர் நிர்வாகப் பொறுப்பை  அதனிடம் ஒப்படைத்து, தீர்ப்பின்படி தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்க தனது சட்டப் பொறுப்பை நிறைவேற்ற வேண்டும்.


தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா வழக்கு மன்றம் செல்வதோடு தனது கடமை முடிந்துவிட்டதாகக் கருதக் கூடாது. உடனடியாக தமிழகத்தில்  அனைத்துக் கட்சி மற்றும் உழவர் அமைப்புகளின் கூட்டத்தைக் கூட்டி ஒருமித்தக் கருத்தை உருவாக்கி, அனைத்துக் கட்சித் தலைவர்களையும் அழைத்துக் கொண்டு பிரதமரை சந்தித்து வலியுறுத்த வேண்டும்.  முதலமைச்சரே முன் முயற்சி எடுத்து   காவிரி எழுச்சி நாள் அறிவித்து உரிமைப் போராட்டத்தை நடத்த வேண்டும் "என்று பேசினார்.


ஆர்ப்பாட்டத்தில் தமிழக உழவர் முன்னணி அமைப்பு நிர்வாகிகள், உறுப்பினர்கள் உட்பட திரளானோர் கலந்து கொண்டனர்.  நிறைவாக திரு,அ.மதிவாணன் நன்றி கூறினார்.



Sunday, June 9, 2013

அரசுத் தமிழ் வழிப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றாதே என வலியுறுத்தி 17.07.2013 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்!

"தமிழக அரசே! அரசுப் பள்ளிகளை ஆங்கில வழி 
மெட்ரிகுலேசன் பள்ளிகளாக மாற்றாதே!"
தமிழகமெங்கும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில்
17.07.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசுத் தமிழ் வழிப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றாதே என்பதை வலியுறுத்தி 17.07.2013 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவித்துள்ளது. 

இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்மொழி நம் தாய்மொழி மட்டுமன்று; தமிழ்நாட்டின் ஆட்சிமொழி; தமிழகத்தின் தேசிய மொழி! தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களிலிருந்து தமிழ்மொழியை அப்புறப்படுத்துவதில், தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுடன் தமிழக அரசும் போட்டி போட முனைந்துள்ளது.

2013-2014 கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைப் புதிதாகத் தொடங்குகிறது தமிழக அரசு. கணிதம், அறிவியல், சமூகவியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் கற்பிக்க உள்ளது.

தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பானது எதிர்காலத்தில் கல்வி, ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றில் தமிழைப் பயன்பாடற்ற மொழியாக்கிவிடும்.

தமிழை இழந்த பின் தமிழ்மக்கள் தங்கள் மண்ணிலேயே அயலார்க்கும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைகளாகி, ஆட்சி உரிமையை இழந்த உதிரிக் கூட்டமாக மாறிவிடுவர்.

தாய்மொழி வழியில் கற்போர்தாம் சொந்த சிந்தனை வளர்ச்சி பெறுவர்; புதியன படைப்பர் என்று குழந்தை உளவியல் மற்றும் கல்வி உளவியல் அறிஞர்கள் உலகுதழுவிய அளவில் வரையறுத்துள்ளனர். அயல்மொழிவழி படிப்பது நெட்டுருப்போட்டு மதிப்பெண் பெறும் தன்மையைத்தான் உருவாக்கும்.

வளர்ச்சியடைந்த பிரான்சு, செர்மனி, சப்பான், ரசியா, சீனா போன்ற நாடுகளிலும் வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆங்கில வழிக் கல்வி இல்லை. அந்தந்த நாட்டின் தாய் மொழிக் கல்வியே இருக்கிறது.

தமிழ்வழிக்கல்வி மூலம் தான், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் இனம் அறிவிலும் வணிகத்திலும் செழித்திருந்தது!

அயல்மொழித் திணிப்பைத் தடுக்க - தாய்மொழியைக் காக்க, போராடி முந்நூறு பேர்க்கு மேல் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானதும், பத்துப் பேர்க்கு மேல் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்ததும் தமிழ்நாட்டில் மட்டுமே நடந்த வரலாற்றுப் புகழ்மிக்க ஈகமாகும்.

தமிழக அரசுக்கு நாம் பின் வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

1.   அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளைத் தமிழ் வழி வகுப்புகளாக மாற்ற வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி மெட்ரிக்குலேசன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிற அவலத்தைப் போக்கப் பின் வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:

அ. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் தமிழைக் கட்டாய மொழிப் பாடமாகவும் (language) கட்டாயப் பயிற்று மொழியாகவும் (Medium of Instruction) இருக்கும்படித் தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும். அரசு ஆணை(G.O.) போடுவது கூடாது.

ஆ. ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் அல்லது பிற மொழியை மொழிப் பாடமாகக் கற்பிக்க வேண்டும்.

2.   ஒன்று முதல் +2 வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் எண்பது விழுக்காடும், உயர்கல்விச் சேர்க்கையில் எண்பது விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கிடச் சட்டமியற்ற வேண்டும்.

3.   அரசுப் பள்ளிகளில் விளையாட்டுத் திடல், கழிப்பறைகள் கட்டாயம் செயல்பட வேண்டும். விளையாட்டு, இசை, ஓவியம் ஆகிய துறைகளுக்கு ஆசிரியர்கள் அமர்த்த வேண்டும்.

4.   பத்து மற்றும் +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகமாகக் காட்டி, கல்விக் கொள்ளையைத் தீவிரப்படுத்துவதற்காக தனியார் பள்ளிகளில், 9 ஆம் வகுப்பில் 10 ஆம் வகுப்புப் பாடத்தையும் +1 இல் +2 பாடத்தையும் நடத்துகிறார்கள். அறிவு வளர்ச்சிக்கு எதிரான இந்தக் கல்விச் சூதாட்டத்தைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 ஆம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடத்தை நடத்தும் தனியார் பள்ளிகளின் உரிமத்தை நீக்க வேண்டும். +1 வகுப்பிற்கும் அரசு பொதுத் தேர்வு முறையைக் கொண்டு வரவேண்டும்.

5.   கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியில் 25 விழுக்காடு வழங்கிடச் சட்டமியற்ற வேண்டும்.

6.   நடுவண் அரசு வேலைக்கான தேர்வுகள் அனைத்தையும் தமிழில் எழுத வாய்ப்பளிக்கவும், கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு வரவும் இந்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தி அவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

தமிழ்ப் பெருமக்களே!

தமிழ்வழிக் கல்வி கோருவது தமிழைப் பெருமைபடுத்துவதற்காக அல்ல; தமிழர்கள் பெருமை பெறுவதற்காக!

ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர் களுக்கும் பெண்களுக்கும் சமூக நீதி வழங்குவது தமிழ்வழிக் கல்வியே!

பல்வேறு அரசியல் மற்றும் தமிழ் அமைப்புகள் கூட்டாக உருவாக்கியதுதான் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம். மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து 28.5.2013 அன்று சென்னைப் பள்ளிக் கல்வி இயக்கக வாயிலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அடுத்த நடவடிக்கையாகத் தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகர்களில் 17.6.2013 அன்று ஆர்பாட்டம் நடத்துகிறோம்.

இனம் காக்க, மொழி காக்க, எதிர்கால வாழ்வுரிமை காக்க எழுச்சி பெறுவீர் தமிழர்களே! ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வீர்!

இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT