உடனடிச்செய்திகள்

Friday, July 31, 2020

இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பில் தோல்வியையே வெற்றியாய்க் கூறும் குழப்பவாதம்! - கி. வெங்கட்ராமன் சிறப்புக்கட்டுரை!


இட ஒதுக்கீட்டுத் தீர்ப்பில் தோல்வியையே
வெற்றியாய்க் கூறும் குழப்பவாதம்!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக்கட்டுரை!


“யாருக்கு வெற்றி என்று சேர்த்தே சொல்லிடுங்க ஜட்ஜய்யா..” என்ற கேலி வாசகம், இப்போது சமூக வலைத்தளங்களில் வலம் வந்து கொண்டுள்ளது.

மருத்துவப் படிப்பில் பிற பிற்படுத்தப்பட்டோருக் கான இட ஒதுக்கீடு குறித்த வழக்கில் அண்மையில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பு குறித்து, “வெற்றி.. வெற்றி” என்று பா.ச.க.வும் கூச்சல் போடுகிறது. வழக்குத் தொடுத்த தி.மு.க. - அ.தி.மு.க.வும் முழக்கமெழுப்பு கிறார்கள்.

உண்மையில், இது தமிழ்நாட்டு பிற்படுத்தப்பட்ட - மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூக மாணவர்களுக்கு வெற்றியா என்று ஆய்ந்தால், உண்மையைப் புரிந்து கொள்ள முடியும்.

தமிழ்நாட்டின் முதன்மைக் கட்சிகள் அனைத்தும், தமிழ்நாடு அரசும் கிட்டத்தட்ட ஒரே குரலில் இந்த வழக்கில் வாதங்களை முன்வைத்தனர்.

பா.ச.க.வின் இந்திய அரசும், இந்திய மருத்துவக் கழகமும் மாநில அரசுகள் இந்திய அரசுக்கு வழங்கும் (Surrended) மருத்துவப் படிப்பு இடங்களில் பிற பிற்படுத்தப்பட்டோருக்கு இட ஒதுக்கீடு அறவே வழங்க முடியாது என்றுதான் வாதிட்டன.

ஆயினும், இவ்வழக்கில் முக்கியமான வாதங்களை முன்வைத்த தி.மு.க.வின் நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினரும், மூத்த வழக்கறிஞருமான வில்சன் முன்வைத்த வாதங்களும் தமிழ்நாடு அரசின் சார்பில் வாதிட்ட அரசு வழக்குரைஞர் விஜய நாராயணன் வாதமும் தமிழ்நாடு வழங்கும் மருத்துவக் கல்லூரி இடங்களில் தமிழ்நாட்டிலுள்ள விழுக்காட்டிலேயே இட ஒதுக்கீடு வழங்க வேண்டும், இந்திய அரசு நடத்தும் எய்ம்ஸ், ஜிப்மர் போன்ற மருத்துவக் கல்லூரிகளில் இதரப் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு வழங்கப்படுவது போல் தமிழ்நாடு அரசின் நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள மருத்துவக் கல்லூரிகளில் மொத்தமுள்ள இடங்களி லிருந்து இந்திய அரசுக்கு வழங்கப்படும் 50 விழுக்காட்டு இடங்களிலும் தமிழ்நாட்டில் பின்பற்றப்படும் 50 விழுக்காடு இட ஒதுக்கீடே செயல்பட வேண்டும் என்றுதான் வாதங்களை முன்வைத்தனர்.

எல்லோருமே 1993ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தமிழ்நாடு இட ஒதுக்கீடு சட்டம் வழங்குகிற விழுக்காட்டு அளவை மட்டுமே வலியுறுத்தினார்கள். ஆனால், தமிழ்நாட்டிலுள்ள இதர பிற்படுத்தப்பட்ட சாதிப் பட்டியலில் உள்ளவர்களுக்கு மட்டுமே இந்த 50 விழுக்காட்டு இடங்கள் வழங்க வேண்டுமென்று யாரும் வாதிட வில்லை!

பாட்டாளி மக்கள் கட்சியோ, இந்த 50 விழுக் காட்டையும் கேட்காமல், 27 விழுக்காட்டு இட ஒதுக்கீட்டையே வலியுறுத்தியது. இவர்களும் தமிழ் நாட்டுப் பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட சாதியினருக்கு மட்டுமே தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரி களில் இட ஒதுக்கீடு வழங்க வேண்டுமென்று வாதிட வில்லை.

இந்த நிலையில், கடந்த 27.07.2020 அன்று தீர்ப்பளித்த சென்னை உயர் நீதிமன்றத் தலைமை நீதிபதி அமரேஷ் பிரதாப் சாகி மற்றும் செந்தில்குமார் இராமமூர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வு எந்த விழுக்காட்டு அளவையும் வலியுறுத்தாமல், வேறொரு முடிவைச் சொன்னது.

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு மருத்துவக் கல்லூரியில் மாநிலங்கள் சார்பாக வழங்கப்படும் இடங்களில் இட ஒதுக்கீடு வழங்க சாதாரண சட்டத் தடையோ, அரசமைப்புச் சட்டத் தடையோ இல்லை என உறுதிபடக் கூறியது. ஆனால், “நீட்” தேர்வை ஆதார மாகக் கொண்டே தனது தீர்ப்புரைக்கான விளக்கங்களை முன்வைத்தது.

இறுதியில், இந்திய அரசின் நலவாழ்வுத்துறை, இந்திய மருத்துவக் கழகம், தமிழ்நாடு அரசின் நலவாழ்வுத் துறை ஆகிய மூன்றிலிருந்தும் பேராளர்களைக் கொண்ட ஒரு ஆய்வுக்குழுவை அமர்த்தி, இந்திய அரசு மூன்று மாதங் களுக்குள் அதன் பரிந்துரைகளைப் பெற வேண்டும். அதன் அடிப்படையில், எத்தனை விழுக்காட்டு இடங்கள் மாநில அரசுகளிடமிருந்து பெறப்படும் மருத்துவக் கல்லூரி இடங்களில் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு வழங்கலாம் என்பதை முடிவு செய்து, தனிச்சட்டம் இயற்ற வேண்டுமென்று கூறியது.

“நீட்” தேர்வின் முடிவில் அடிப்படையிலேயே மாணவர்கள் தேர்வு செய்யப்படுவதால், கல்வித்தரம் குறைந்தவர்கள் மருத்துவப் படிப்பில் நுழைந்து விடுவார்கள் என்ற வாதம் அடிபடுகிறது என்றும் கூறியது.

வாதிட்டவர்களும் சரி, நீதிமன்றத் தீர்ப்பும் சரி, எவ்வளவு விழுக்காடு இதர பிற்படுத்தப்பட்டோருக்கான இட ஒதுக்கீடு என்றுதான் கூறியிருக்கிறார்களே தவிர, அந்த விழுக்காட்டு இடத்தில் தமிழ்நாட்டு மாணவர்கள் தான் வர வேண்டும் என்று கூறவே இல்லை!

தீர்ப்பில் “நீட்” தேர்வின் அடிப்படையை வலியுறுத்து வதன் விளைவாக, அனைத்திந்திய அளவில் தர வரிசை யில் வருகிறவர்கள் அவர்கள் விரும்புகிற மாநிலத்தில், விரும்புகிற கல்லூரியில் சேர்ந்து கொள்ள முடியும் என்றாகிறது. எவ்வளவு விழுக்காடு இடங்கள் வழங்க வேண்டுமென்று தனிச்சட்டம் இயற்றுமாறு கூறுவதால், 0%-க்கும், 50%-க்கும் இடையில் ஏதோவொரு விழுக் காட்டை முடிவு செய்வதற்கான வழி ஏற்படுத்தப் படுகிறது.

இந்த விழுக்காட்டினரும் தமிழ்நாட்டு மாணவர்களாக இருப்பார்கள் என்ற உறுதியில்லை! ஏனென்றால், அனைத்திந்திய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வான “நீட்”டின் மூலம் அவர்கள் வருகிறார்கள். இந்திக் காரர்களும், பிற மாநிலங்களைச் சேர்ந்தவர்களும் “இதர பிற்படுத்தப்பட்டோர்” என்ற விழுக்காட்டு அளவுக்குள் தமிழ்நாட்டு மருத்துவக் கல்லூரிகளில் சேர்வதற்கான ஏற்பாட்டைத்தான் இத்தீர்ப்பு செய்கிறது.

இதைத்தான் தி.மு.க. - அ.தி.மு.க. உள்ளிட்ட தமிழ் நாட்டுக் கட்சிகள் “வெற்றி.. வெற்றி..” என்று கூறு கிறார்கள்.

இத்தீர்ப்பை மோடி அரசு செயல்படுத்துமா என்பது ஐயம். அப்படியே செயல்படுத்தினாலும், அதில் தமிழ்நாட்டு மாணவர்களுக்கு பெரிய பயன் எதுவும் கிடைக்கப்போவதில்லை!

இதர பிற்படுத்தப்பட்டோருக்கு 50 விழுக்காட்டு இடங்களையும் வெல்லவில்லை. குறைவான விழுக்காடு கிடைத்தாலும் அது தமிழ்நாட்டு மாணவர்களுக்குக் கிடைக்குமா என்பதிலும் உறுதியில்லை. இந்திக்காரர்களுக்கும், பிற மாநிலத்தவர்களுக்கும்தான் கிடைப்பதற்கான அதிக வாய்ப்பிருக்கிறது!

ஒரு வழக்கில் தோல்வி அடைவது எதிர்பார்க்கக் கூடியதுதான். ஆனால், அதைத் தோல்வி என்று மக்கள் உணர முடியாமல், அதையே “வெற்றி” என்று கூச்சலிடுவது, இறுதியில் இழந்ததை மீட்பதற்கு விழிப்புணர்வு பெறாதவர்களாக மக்களை மழுங்கடிக்கும் செயலாகும்!

பல சிக்கல்களில் வெளிப்பட்டதுபோல், இந்த இட ஒதுக்கீட்டுச் சிக்கலிலும் தேர்தல் கட்சிகளின் வரம்புகள் தெரிந்துவிட்டன. இனி, மக்கள்தான் இந்த உண்மையை உணர்ந்து கொண்டு உரிமையை மீட்கக் களம் அமைக்க வேண்டும்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, July 30, 2020

இந்திய அரசின் “தேசியக் கல்விக் கொள்கை – 2020” ஆரியத்துவ – தனியார்மயக் கல்வியை ஊக்குவிக்கிறது! மாநில அதிகாரத்தைப் பறிக்கிறது! - கி. வெங்கட்ராமன் கண்டனம்!


இந்திய அரசின் “தேசியக் கல்விக் கொள்கை – 2020”
ஆரியத்துவ – தனியார்மயக்

கல்வியை ஊக்குவிக்கிறது!

மாநில அதிகாரத்தைப் பறிக்கிறது!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!

எந்தவொரு மாற்றுக் கருத்தையும், அது எவ்வளவு ஆரோக்கியமானதாக இருந்தாலும் கேட்டுக் கொள்வதில்லை என்ற முடிவோடுதான் நரேந்திர மோடி அரசு பல சட்ட வரைவுகளின் மீது கருத்துக் கேட்பை ஒரு சடங்காக நடத்துகிறது. கல்விக் கொள்கையிலும் இது வெளிப்பட்டிருக்கிறது.

“தேசியக் கல்விக் கொள்கை வரைவு – 2019” என்ற பெயரால், கடந்த ஆண்டு (2019) மே மாதத்தில் முனைவர் கஸ்தூரிரெங்கன் குழுவின் 484 பக்க அறிக்கையை இந்திய அரசு முன்வைத்தது. இதன் மீது, இந்தியா முழுவதிலுமிருந்து கல்வியாளர்கள் மாணவர் இயக்கங்கள், சில அரசியல் கட்சிகள், மக்கள் இயக்கங்கள் ஆகியவை மிக விரிவான மாற்றுக் கருத்துகளை முன்வைத்திருந்தனர்.

குறிப்பாக, தமிழ்நாட்டில் இந்தக் கல்விக் கொள்கை வரைவு – 2019-இன் மீது மிக விரிவான கருத்துரையாடல்கள் நடைபெற்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்புகளின் சார்பிலும், தனி நபர்களாகவும் ஏராளமான கருத்துகள் இந்திய அரசுக்கு அனுப்பப்பட்டன.

இவை எதையுமே சட்டை செய்யாமல், தாங்கள் ஏற்காததன் காரணத்தையும் விளக்காமல் அதே வரைவை 60 பக்கத்தில் இன்னும் மோசமாக வடிவமைத்து, நேற்று (29.07.2020) இந்திய அமைச்சரவை “தேசியக் கல்விக் கொள்கை – 2020 (NEP – 2020)” என்ற பெயரால் இறுதி செய்து அறிவித்துவிட்டது.

தலைமுறை தலைமுறையாக மிகப்பெரும் விளைவுகளை ஏற்படுத்தும் கல்விக் கொள்கை குறித்து, நாடாளுமன்றத்திலோ நாடாளுமன்றக் குழுக்களிலோ எந்த விவாதமும் நடத்தாமல் அரசின் கொள்கை அறிவிப்பாக அறிவித்திருப்பது, பா.ச.க. அரசு எந்தவித சனநாயகப் பண்பையும் மக்களாட்சி நிறுவனங்களையும் மதிக்கத் தயாராக இல்லை என்பதையே காட்டுகிறது.

ஆரிய – சமற்கிருத ஒற்றைப் பண்பாடு, இந்தி ஆதிக்கம், பன்னாட்டு மற்றும் இந்தியப் பெருங்குழுமங்களுக்குத் தேவையான படிப்பாளிகளை உருவாக்குவது, கல்வியை மேலும் மேலும் தனியார்மயமாக்குவது, இவற்றிற்கேற்ப இந்திய அரசின் கைகளில் கல்வித்துறை அதிகாரத்தை முழுவதுமாகக் குவித்துக் கொள்வது என்ற நோக்கத்தை நிறைவு செய்வதற்காகவே இக்கல்விக் கொள்கை உருவாக்கப்பட்டுள்ளது.

அரசமைப்புச் சட்டத்தின் பொது அதிகாரப் பட்டியலில் கல்வித்துறை இருப்பதை அப்படியே வைத்துக் கொண்டு, அரசமைப்புச் சட்டத்தில் எந்தத் திருத்தமும் செய்யாமலேயே இந்திய அரசின் கைகளுக்கு கல்வி குறித்த முழு அதிகாரத்தையும் மாற்றிக் கொள்வது என்ற சூதானத் திட்டம் இக்கல்விக் கொள்கையின் வழியாக செயல்படுத்தப்படுகிறது.

சமற்கிருதத்தைப் பள்ளிக் கல்வியிலிருந்தே திணிப்பது, மூன்றாவது மொழி என்ற பெயரால் கொல்லைப்புற வழியில் இந்தியைத் திணிப்பது, கல்வித்துறையில் தனியார்மயத்தை ஊக்குவிப்பது, பல்கலைக்கழக இணைப்பிலிருந்து கல்லூரிகளைப் பிரித்து தன்னாட்சிக் கல்லூரிகள் என்ற பெயரால் தனியார் கல்வி முதலாளிகளின் வேட்டைக்கு வழிதிறப்பது, மருத்துவக் கல்லூரிக்கு அனைத்திந்திய “நீட்” தேர்வு இருப்பதுபோல், கலை அறிவியல் பாடங்கள் உள்ளிட்ட கல்லூரி வகுப்புகள் அனைத்திற்கும் அனைத்திந்திய நுழைவுத் தேர்வு வைப்பது, அதற்கென தனியார் நிறுவனங்களின் நுழைவை உறுதி செய்யும் வகையில் “தேசியத் தேர்வு ஆணையம்” (National Testing Agency) உருவாக்குவது, கல்வி தொடர்பான மாநில அரசின் அதிகாரம் அனைத்தையும் பறிப்பது, மழலையர் வகுப்பிலிருந்து உயர்கல்வி வரை அனைத்திலும் இந்திய அரசின் முற்றதிகாரத்தை நிறுவும் வகையில் “இராஷ்ட்ரிய சிக்ஷா அபியான்” என்ற பெயரில் இந்தியக் கல்வியமைச்சர் தலைமையில் ஆணையத்தை உருவாக்குவது என அனைத்து முனைகளிலும் பிற்போக்கான கல்விக் கொள்கையை செயல்படுத்துவதற்கு பா.ச.க. ஆட்சி முனைகிறது.

“கல்வித் தொண்டர்கள்” என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். ஆட்களையும், அற நிறுவனங்கள் – அரசுப் பங்கேற்பு என்ற பெயரால் ஆர்.எஸ்.எஸ். நடத்தும் கல்வி நிறுவனங்களையும் திணிக்கும் தீய திட்டமும் “தேசியக் கல்விக் கொள்கை – 2020” மூலம் நிறைவேற்றப்பட இருக்கிறது.

எனவே, மாநில அரசின் கல்வி உரிமையைப் பறிக்கிற, சமற்கிருதம் மற்றும் இந்தியைத் திணிக்கிற, கல்வித்துறையில் தங்குதடையற்ற தனியார் கட்டணக் கொள்ளைக்கு வழி ஏற்படுத்துகிற, கல்வி உளவியலுக்கு முரணான இந்த “தேசியக் கல்விக் கொள்கை – 2020”-ஐ தமிழ்த்தேசியப் பேரியக்கம் முற்றிலும் நிராகரிக்கிறது! பிற்போக்கான இந்தக் கல்விக் கொள்கையை இந்திய அரசு திரும்பப் பெற வேண்டுமென்று வலியுறுத்துகிறது!

கல்வி அதிகாரத்தை மாநிலங்களுக்குத் திரும்ப அளித்து, கல்வியாளர்களைக் கொண்டு அந்தந்த மாநிலங்கள் தங்கள் சூழலுக்கேற்ப - கல்விக் கொள்கையை உருவாக்கிக் கொள்வதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, July 27, 2020

"1983 - கருப்பு யூலை” - ஐயா பெ.மணியரசன் உரை!


"1983 - கருப்பு யூலை”


தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் தலைவர் - ஐயா பெ.மணியரசன் உரை!

கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, July 25, 2020

பா.ச.க. பாசிசத்தி்ற்கு நீதித்துறையும் பலியா? - ஐயா பெ.மணியரசன் உரை!

பா.ச.க. பாசிசத்தி்ற்கு

 நீதித்துறையும் பலியா?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ.மணியரசன் உரை!கண்ணோட்டம் வலையொளியில்..!!!

அய்யனாருக்கு பீகாரில் கோவில் கட்டுவியா நீ?- ஆஸ்திரேலியா தமிழ் முரசு இணையத்திற்கு ஐயா பெ.மணியரசன் நேர்காணல்!

அய்யனாருக்கு பீகாரில்

 கோவில் கட்டுவியா நீ?

ஆஸ்திரேலியா தமிழ் முரசு இணையத்திற்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் 

தலைவர் ஐயா பெ.மணியரசன் நேர்காணல்!கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, July 24, 2020

சமூக ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை மோடி அரசு கைவிட வேண்டும்! - ஐயா சமூக ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை மோடி அரசு கைவிட வேண்டும்!


சமூக ஊடகங்களுக்கு எதிராக அடக்குமுறைகளை
மோடி அரசு கைவிட வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


கொரோனா முழுமுடக்கத்தைப் பயன்படுத்தி, அனைத்து சனநாயக உரிமைகளையும் பறிக்கும் மோடி ஆட்சியின் பாசிச நடவடிக்கைகளை தொடர்ந்து சுட்டிக்காட்டி வருகிறோம். இப்போது, பா.ச.க. ஆட்சி, இணையதள முடக்கத்தில் இறங்கிவிட்டது!

இந்திய அரசின் சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 2020 மார்ச்சில் முன்வைத்த “சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு அறிவிக்கை – 2020” (Environment Impact Assessment 2020 – EIA 2020) என்ற வரைவின் மீது முதலில் 2020 சூன் 30-க்குள் கருத்து சொல்ல வேண்டுமென்று அறிவித்த தில்லி அரசு, நீதிமன்றத் தலையிட்டுக்குப் பிறகு 2020 ஆகத்து 11 வரை மக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று அறிவித்தது. அதற்கான மின்னஞ்சல் முகவரியையும் வெளியிட்டிருக்கிறது.

இதன் மீது பல்வேறு சுற்றுச்சூழல் ஆர்வலர்களும், இயக்கங்களும் தங்கள் கருத்துகளை அனுப்பி வருகிறார்கள்.

சுவீடன் நாட்டின் சூழலியல் செயல்பாட்டாளர் சிறுமி கிரேட்டா துன்பெர்க்கைப் பின்பற்றி, “எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை” (Fridays for Future) என்ற அமைப்பின் பெயரில் இந்தியாவிலும் பள்ளி – கல்லூரி மாணவர்களும், இளையோரும் இணைந்து சுற்றுச்சூழல் விழிப்புணர்வு பரப்புரையில் இறங்கி வருகிறார்கள். இவர்கள் www.fridaysforfuture.in என்ற இணையத்தை நடத்தி வருகிறார்கள். இந்திய அரசு முன்வைத்துள்ள EIA – 2020 குறித்து, சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு அளிக்க வேண்டிய மனுவின் மாதிரி வடிவத்தை வெளியிட்டிருந்தனர். இந்த இணையத்தில் வெளியிட்டிருந்தனர்.

இதைப் பின்பற்றி, சூழலியல் ஆர்வலர்களும், பள்ளி – கல்லூரி மாணவர்களும் பல்லாயிரக்கணக்கில் சுற்றுச்சூழல் அமைச்சகத்திற்கு தங்கள் தங்கள் மின்னஞ்சல் முகவரியிலிருந்து மனுக்களை அனுப்பியிருக்கிறார்கள்.

ஒருபக்கம் - வரைவின் மீது கருத்து கேட்ட மோடி அரசு, மாற்றுக் கருத்துகள் ஏராளம் வந்தவுடன் ஆத்திரமடைந்தது.

சுற்றுச்சூழல் அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தில்லி காவல்துறைக்கு புகார் அளித்து, இந்த இணையதளத்தைத் தடை செய்யுமாறு வலியுறுத்தினார். அந்தப் புகார் மனுவில், ஒரே மாதிரியான வாசகங்கள் உள்ள மனுக்கள் பல்லாயிரக்கணக்கில் வந்ததை சுட்டிக்காட்டி, “பொது அமைதிக்கும், நல்லிணக்கத்திற்கும் இந்திய இறையாண்மைக்கும் எதிரான பயங்கரவாதச் செயல் இது” என்று குறிப்பிட்டிருந்தார்.

அதை அப்படியே ஏற்றுக் கொண்ட தில்லி பெருமாநகர இணையக் குற்றங்கள் சிறப்புப் பிரிவு காவல்துறை துணை ஆணையர் அங்கிலேஷ் ராய், தகவல் தொழில்நுட்பச் சட்டம் பிரிவு 66-இன் கீழும், பயங்கரவாதத்திற்கு எதிரான சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 18இன் கீழும் வழக்குப் பதிந்து, 10.07.2020 அன்று அந்த இணையதளத்தைத் தடை செய்தார்.

இது அப்பட்டமான சட்ட மீறல் – கருத்துரிமைப் பறிப்பு என எதிர்ப்பு வந்ததற்குப் பிறகு, சட்ட விரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டப் பிரிவு 18இன் கீழ் வழக்குப் பதிந்தது “ஒரு தட்டச்சுப் பிழையால்” நேர்ந்தது எனச் சொல்லி, அந்தப் பிரிவை காவல்துறை துணை ஆணையர் திரும்பப் பெற்றார்.

தகவல் தொழில்நுட்பச் சட்டம் 66-ம் வேண்டுமென்றே இதற்குப் பொருத்தப்படுகிறது. அப்பிரிவு, “கணினியைப் பயன்படுத்தி வெளியிடப்படும் எந்தத் தகவலும் அச்சமூட்டுவதாகவோ, பொய்யானதாகவோ, தொந்தரவு தரக்கூடியதாகவோ, ஆபத்தான விளைவுகளை உண்டாக்கக் கூடியதாகவோ, இழிவான பரப்புரையாகவோ அமைந்தால் அந்தத் தகவல் மூன்றாண்டு சிறைத் தண்டனை விதிக்கக்கூடிய குற்றமாகும்” எனக் கூறுகிறது.

“எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை” அமைப்பின் இளையோர் முன்வைத்துள்ள மாதிரி மனு – எந்த வகையிலும் இச்சட்டப் பிரிவின் கீழ் குற்றமாக சொல்லத்தக்கதல்ல.

“சூழலியல் தாக்க அறிவிக்கை – 2020 எல்லா வகையிலும் சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு எதிரானது. எனவே, அதனை முழுவதுமாக இந்திய அரசு திரும்பப் பெற வேண்டும். கொரோனா முடக்கக் காலத்தைப் பயன்படுத்திக் கொண்டு, எல்லா நிறுவனங்களையும், தொழில்களையும் எந்த சனநாயக விவாதத்திற்கு உட்படுத்தாதமல் தனியார்மயமாக்குவது என்ற இந்திய அரசின் முடிவிற்கு இசைய இந்த EIA – 2020 அறிவிக்கை அமைந்துள்ளது. சுற்றுச்சூழல் பாதுகாப்புச் சட்டம் – 1986இன் பிரிவு 3-க்கு முற்றிலும் எதிரானதாக இந்த EIA – 2020 அறிவிக்கை அமைந்துள்ளது” என்று இந்த இளையோர் முன்வைத்த மனு கூறுகிறது.

இது தொழில்நுட்பச் சட்டப் பிரிவு 66-இன் கீழ் குற்றச்செயலாக வரையறுக்கத்தக்கதல்ல என்பது தெளிவு!

ஆனால், மோடி அரசு சட்டத்தின் ஆட்சியைப் பற்றியெல்லாம் கிஞ்சித்தும் கவலைப்படாமல் செயல்பட்டுக் கொண்டிருப்பதால், அதன் மக்கள் பகை செயல்பாடுகளை கேள்வி கேட்டாலே “பயங்கரவாதம்”, “அச்சுறுத்தும் செயல்” என வாய்ப்பூட்டுப் போடுகிறது.

“எதிர்காலத்திற்கான வெள்ளிக்கிழமை” அமைப்பினர் தில்லி இணையக் குற்றப்பிரிவு காவல்துறையில், இக்குற்றச்சாட்டுகளுக்கு எந்த ஆதாரமும் இல்லை என எடுத்துக்காட்டிய பிறகு, வடநாட்டில் இயங்கும் பல்வேறு ஆங்கில இணைய ஊடகங்கள் எதிர்த்தற்குப் பிறகு, பன்னாட்டு அரங்கிலும் அழுத்தம் வந்ததற்குப் பிறகு – இந்தத் தடை ஆணையை முற்றிலும் விலக்கிக் கொண்டதாக துணை ஆணையர் அங்கிலேஷ் ராய் ஊடகங்களுக்குத் தெரிவித்தார். ஆனால், அந்தத் தடையாணை திரும்பப் பெற்றதாகத் தங்களுக்குத் தகவல் தெரிவிக்கப் படவில்லை என்றும், இன்னும் தங்களுடைய இணையம் முடங்கியே இருக்கிறது என்றும் அந்த இணையத்தின் வழக்கறிஞர் அப்பர் குப்தா தெரிவித்தார்.

இந்த இணையம் மட்டுமின்றி, EIA – 2020-க்கு எதிராகப் பரப்புரை செய்த “இந்தியா மூச்சு விடட்டும்” (Let India Breathe) என்ற சூழலியல் இளையோர் இணையதளமும், “இரண்டாவது புவி இல்லை” (There is No Earth B) என்ற இணையதளமும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் கீழ் இயங்கும் NIXI-ஆல் (National Internet Exchange of India) தடை செய்யப்பட்டது. அந்த இணைய முடக்கமும் நீடிக்கிறது.

சட்டத்தை அப்படியே வைத்துக் கொண்டு, நடைமுறையில் அதனை மீறவது என்பதையே பா.ச.க. ஆட்சி வழமையாகக் கொண்டுள்ளது. இந்தச் சிக்கலிலும் அதுதான் நடக்கிறது.

குடியுரிமைத் திருத்தச் சட்டத்திற்கு எதிராகப் போராடிய தில்லி பல்கலைக்கழக – ஜாமியா மிலியா பல்கலைக்கழக – சவகர்லால் நேரு பல்கலைக்கழக மாணவர்கள் மீது கொடும் தாக்குதலை நடத்திவிட்டு, அவர்கள் மீதே பயங்கரவாதத் தடுப்புப் பிரிவுகளின் கீழ் வழக்குத் தொடுத்திருப்பதும், அதிலும் இணையங்களின் வழியாக போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததையே குற்றச்செயலாக்குவதும் இதே வகை சட்டமீறல்தான்!

இந்திய அரசு சமூக ஊடகங்களின் மீதான இந்தத் தடை ஆணைகளைத் திரும்பப் பெற வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன். இந்தப் பாசிசத்தை எதிர்கொள்ள கட்சி கடந்து – மாணவர்களும் இளையோரும் மக்கள் வாழ்வின் மீது அக்கறை கொண்டோரும் எழுச்சி கொள்ள வேண்டியது அவசரத் தேவையாகும்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Thursday, July 23, 2020

பேரழிவை உண்டாக்கும் “சூழலியல் தாக்க விதிகள் - 2020”

பேரழிவை உண்டாக்கும் “சூழலியல் தாக்க விதிகள் - 2020”

கடந்த 04.05.2020 அன்று

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்

தோழர் கி. வெங்கட்ராமன் அவர்கள் வெளியிட்ட அறிக்கையின் காணொலி வடிவம்! கண்ணோட்டம் வலையொளியில்..!!!

கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தை இழிவுசெய்த நபரைக் கைது செய்யாதது ஏன்? - ஐயா பெ. மணியரசன் கண்டனம்!


கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தை
இழிவுசெய்த நபரைக் கைது செய்யாதது ஏன்?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் கண்டனம்!


தான் எழுதுவதை, பேசுவதை மற்றவர்கள் படிப்பார்கள் – பார்ப்பார்கள் என்ற குதூகலத்தில் கொச்சை மொழியைப் பயன்படுத்துவோர் சமூக ஊடகங்களில் பலதரப்பிலும் இருக்கிறார்கள். மாற்றுக் கருத்தை திறனாய்வாகச் சொல்லாமல், மற்றவர்களை தனிப்பட்ட முறையில் சாதியை – மதத்தை – இனத்தை சொல்லியும், பாலியல் சொற்களைப் பயன்படுத்தியும் வசவு செய்து இன்பம் காணுவோர் அதிகரித்து வருவது பொறுப்புள்ள மக்களுக்கு பெருங்கவலையை ஏற்படுத்துகிறது.
இவற்றைத் தடுக்க சட்டங்கள் இருக்கின்றன. இந்தச் சட்டத்தைப் பயன்படுத்துவோர் அரசியல், சாதி, மத பாகுபாடு காட்டக்கூடாது. சொந்தக் காரணங்களுக்காகப் பழிவாங்கவும் கூடாது!
கந்த சஷ்டி கவசத்தை சொல்லி முருகக் கடவுளை இழிவுபடுத்திய இளைஞர்கள் மீது நடவடிக்கை எடுத்தது சரி. ஆனால், அவர்கள் அலுவலகத்தை மூடி முத்திரையிடுவது, அவர்களுடைய வலையொளிப் பக்கத்தை முற்றிலுமாக முடக்குவது போன்றவை அதிகாரத்தை விருப்பு வெறுப்பு அடிப்படையில் மிகையாகப் பயன்படுத்தும் செயலாகும்.
அண்மையில் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைமையகத்தை கேவலமாகக் கொச்சைப்படுத்தியும், மூத்த தலைவர் ஐயா நல்லக்கண்ணு அவர்களை இழிவுபடுத்தியும் முகநூல் பதிவு வெளியிட்ட இளைஞர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி அக்கட்சியும், தோழமை அமைப்புகளும் சனநாயக உணர்வாளர்களும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறார்கள். ஆனால், இதுவரை தமிழ்நாடு காவல்துறை அந்த இளைஞரைக் கைது செய்யவில்லை. ஏன் இந்தப் பாகுபாடு? அந்த இளைஞர் பா.ச.க. தரப்பில் இருந்து கொண்டு, பா.ச.க.வை எதிர்க்கின்ற இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியை இழிவுபடுத்தியதால் தமிழ்நாடு ஆட்சியாளர்கள் அமைதி காக்கிறார்களா?
ஏற்கெனவே இவ்வாறான போக்கு வெளிப்பட்டு வருகிறது. எச். இராசா, எஸ்.வி. சேகர் போன்ற பா.ச.க. புள்ளிகள் மீது வழக்குகள் பாய்ந்தபோது அவர்களைக் கைது செய்யாமல் தமிழ்நாடு அரசு விலகி நின்றதை நாடறியும். ஆனால், எதிர்க்கட்சியினர் மீது புகார் வரும்போது, அவர்களைப் பாய்ந்து கைது செய்வது நடந்துள்ளது.
கோவை மாவட்டம் – அன்னூர் தந்தை பெரியார் திராவிடக் கழகத்தைச் சேர்ந்தவர் கந்த சஷ்டி கவசத்தை இழிவுபடுத்தியதற்குக் காவல்துறையினர் உடனே கைது செய்திருக்கிறார்கள். மறுநாள், பெரியாரை இழிவுபடுத்திய பா.ச.க.வினர் எழுதியது தொடர்பாக த.பெ.தி.க.வினர் காவல்துறையில் புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. நடவடிக்கை எடுக்காததைக் கண்டித்து, த.பெ.தி.க.வினரும், சனநாயக உணர்வாளர்களும் போராட்டம் நடத்திய பிறகுதான் பா.ச.க.வைச் சேர்ந்த அந்த நபரைக் கைது செய்துள்ளது காவல்துறை.
சட்டத்தை நடுநிலையோடு செயல்படுத்தாமல் பா.ச.க. தரப்பின் மீது குற்றச்சாட்டு எழுந்தால், தமிழ்நாடு அரசு செயலற்று இருக்கும் அல்லது அவர்களைப் பாதுகாக்கும் என்ற நிலை தொடர்ந்தால், அ.இ.அ.தி.மு.க. ஆட்சியாளர்கள் தமிழ்நாட்டை உத்திரப்பிரதேசமாக மாற்றிக் கொண்டிருக்கிறார்கள் என்று பொருள்!
எந்தத் தரப்பைச் சேர்ந்தவராக இருந்தாலும் சமூக ஊடகங்களில் தனிநபர்களைக் கொச்சையாக இழிவுபடுத்தினால் அவர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். அதேவேளை, தலைவர்களுடைய – இயக்கங்களுடைய – செயல்பாடுகள் மீதும், கருத்துகள் மீதும் திறனாய்வு (விமர்சனம்) செய்யும்போது அதன் மீது நடவடிக்கை எடுக்கக் கூடாது என்ற வரம்பு வேண்டும்.
எனவே, இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தலைமையகத்தையும், தலைவரையும் இழிவுபடுத்திய நபரை உடனடியாகக் கைது செய்ய வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/TamizhdesiyamWednesday, July 22, 2020

சிந்தனைத் தளத்தில் கோவை ஞானி என்றும் வாழ்வார்! - பெ. மணியரசன் இரங்கல்!


சிந்தனைத் தளத்தில்
கோவை ஞானி என்றும் வாழ்வார்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் இரங்கல்!

பேரன்பிற்கும் பெருமதிப்பிற்கும் உரிய சிந்தனையாளர் தோழர் கோவை ஞானி அவர்கள் காலமான செய்தி பெரும் துயரமளிக்கிறது. கொரோனா முடக்கம் தடுப்பதால், நேரில் சென்று கோவை ஞானி அவர்களுக்கு வீரவணக்கம் செலுத்த முடியவில்லை! தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கோவை மாநகரச் செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் அவர்களும், மாநகரக் குழு உறுப்பினர் தோழர் திருவள்ளுவன் அவர்களும் நேரில் சென்று கோவை ஞானி அவர்களுக்கு மலர் வணக்கம் செலுத்தியுள்ளார்கள்.

நாங்கள் தனி இயக்கம் கண்டு, தமிழ்த்தேசியத்தை முன்னெடுத்த நிலையில் 1990களின் தொடக்கத்தில் கோவை ஞானி அவர்களோடு எனக்கு நேரடித் தொடர்பு ஏற்பட்டது. அதற்குமுன் வானம்பாடி கவிஞர்களின் வரிசையில் ஞானி அவர்களை அறிந்திருந்தேன்.

சிறந்த மார்க்சியரான தோழர் ஞானி அவர்கள், வறட்டுத்தனமாக மார்க்சியத்தைப் பார்க்காமல் மண்ணுக்கேற்ற மார்க்சியமாக மலரச் செய்வதில் பெரும் சிந்தனை உழைப்பு செய்தவர். தமிழ்த்தேசியத்தை முழுமையாக ஏற்று, அது மார்க்சியத்திற்கு இசைவானது என்று பல உரைகள் நிகழ்த்தியுள்ளார்; கட்டுரைகள் எழுதியுள்ளார். அவரது அம்முயற்சியில் குறிப்பிடத்தக்க பங்களிப்பு என்பது, தமிழ்த்தேசியம் குறித்து தமிழ்நாட்டின் பல்வேறு ஆளுமைகளை அழைத்து கோவையில் அடுத்தடுத்து சொற்பொழிவாற்ற வைத்தது. பின்னர், அச்சொற்பொழிவுகளையெல்லாம் எழுத்து வடிவில் தொகுத்து, “தமிழ்த்தேசியப் பேருரைகள்” என்று ஒரு பெரும் நூலை வெளியிட்டார். அந்தச் சொற்பொழிவுகளில் ஒருநாள் என்னையும் அழைத்துப் பேச வைத்தார்.

கருத்தியல் உழைப்பிற்கான முயற்சிகளை கோவை ஞானி அவர்களிடமிருந்து இளைஞர்கள் கற்றுக் கொள்ள வேண்டும். பிற்காலத்தில், அவருடைய இரு கண்களும் பார்வையிழந்த நிலையில் அவர் அன்றாடம் படித்தறிந்த செய்திகள் ஏராளம்! ஏராளம்! அன்றைய நாளேடுகள் தொடங்கி, புதிது புதிதாக நூல்களைப் படித்தார். படித்தார் என்றால் அவர் நேரடியாகப் படிக்கவில்லை. அவர் மீது அன்பு கொண்ட இளைஞர்கள் அன்றாடம் அவருக்குப் படித்துக் காட்டும் பணியைச் செய்தார்கள்.

செய்திகளைத் தெரிந்து கொள்வதில் – அறிவைத் தேடுவதில் அவருக்கிருந்த பேரார்வம் – விடாமுயற்சி மலைப்புத்தட்ட வைக்கும். தாம் படிப்பது மட்டுமின்றி, மக்கள் படிப்பதற்கு ஏராளமான நூல்களை எழுதியுள்ளார்.

கோவை ஞானி அவர்கள் தம்முடைய திறந்த சிந்தனைகள் – நூல்கள் வழியாக தொடர்ந்து வாழ்ந்து கொண்டிருப்பார். அவர்களின் மறைவுக்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

"பா.ச.க.வுக்கு எதிராக தமிழ்நாட்டு இளைஞர்கள் அணிதிரள வேண்டும்!” “ ழகரம் ” இணைய ஊடகத்துக்கு - ஐயா கி. வெங்கட்ராமன் நேர்காணல்!

"பா.ச.க.வுக்கு எதிராக தமிழ்நாட்டு

இளைஞர்கள் அணிதிரள வேண்டும்!”“ ழகரம் ” இணைய ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் நேர்காணல்! கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Tuesday, July 21, 2020

பறம்புமலையை (பிரான்மலையை) உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை கைது செய்தது கண்டனத்திற்குரியது! பெ. மணியரசன் அறிக்கை!


பறம்புமலையை (பிரான்மலையை)
உடைப்பதற்கு எதிர்ப்புத் தெரிவித்தவர்களை
கைது செய்தது கண்டனத்திற்குரியது!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!

பாரி மன்னன் ஆண்ட பறம்புமலை எனறு தமிழறிஞர்களாலும், ஆய்வாளர்களாலும் அடையாளப்படுத்தப்பட்ட சிவகங்கை மாவட்டம் – பிரான்மலைக்குச் சேதம் உண்டாக்கக்கூடிய வகையில், தனியார் கல்குவாரி அமைத்து, மலைக்கான பாதையை உடைத்து வருகிறார்கள். அடுத்து, அவர்கள் பிரான்மலையின் பகுதிகளையும் உடைக்கக்கூடிய அபாயம் இருக்கிறது.

சங்ககாலக் கடையெழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னரின் இப்பறம்புமலை பாதுகாக்கப்பட வேண்டிய தமிழர் வரலாற்றுச் சின்னமாகும். பறம்புமலையைப் பாதுகாக்க வேண்டும், அதைச் சுற்றிலும் மலையை உடைக்கும் தனியார் வணிகத்திற்குத் தடை விதிக்க வேண்டுமென்று அப்பகுதி தமிழின உணர்வாளர்கள் தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறார்கள். ஆனால், இதுவரை தமிழ்நாடு அரசு இக்கோரிக்கைக்கு செவி சாய்க்கவில்லை. மலை உடைப்பு வேலை தொடர்கிறது.

இந்நிலையில், இன்று (21.07.2020) காலை, பறம்புமலை பாதுகாப்பு இயக்கத்தைச் சேர்ந்த பல்வேறு அமைப்புகளின் முன்னணிப் பொறுப்பாளர்களும், ஆர்வலர்களும் பிரான்மலையில் என்ன நடக்கிறது என்று கள ஆய்வு செய்யப் போனவர்களை, காவல்துறையினர் வழிமறித்துத் தளைப்படுத்தி மண்டபத்தில் அடைத்து வைத்துள்ளார்கள். அவர்களைக் கைது செய்தது கண்டனத்திற்குரிய செயலாகும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இதில் கவனம் செலுத்தி பறம்புமலைக்கு ஆபத்து உண்டாக்கும் வகையில் அங்கே நடைபெறும் தனியார் மலை உடைக்கும் வேலைகளுக்குத் தடை விதிக்க வேண்டுமென்றும், இன்று தளைப்படுத்தப்பட்டுள்ள சிறுவர் – சிறுமியர் உட்பட 65 பேரையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, July 20, 2020

வடமாநிலத் தொழிலாளர்களை மீண்டும் அழைக்கக் கூடாது! தமிழ்நாடு முதல்வருக்கு பெ. மணியரசன் கோரிக்கை!


வடமாநிலத் தொழிலாளர்களை
மீண்டும் அழைக்கக் கூடாது!

தமிழ்நாடு முதல்வருக்கு
தமிழ்த்தேசியப் பேரியக்கத்
தலைவர் பெ. மணியரசன் கோரிக்கை!


தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், கடந்த 17.07.2020 அன்று ஈரோடு சென்றிருந்தபோது, அம்மாவட்ட சிறுதொழில் உரிமையாளர் சங்கத்தின் தலைவர்கள் முதலமைச்சரிடம் ஒரு கோரிக்கை விண்ணப்பம் தந்துள்ளார்கள். அதில், ஈரோட்டில் வேலை பார்த்த 25,000 வடமாநிலத் தொழிலாளர்கள் கொரோனாவினால் சொந்த ஊர் திரும்பி விட்டார்கள். எனவே, இங்கு தொழிலாளர்கள் பற்றாக்குறை காரணமாக தொழிற்சாலைகளை இயக்க முடியவில்லை என்றும், வடமாநில அரசுகளைத் தொடர்பு கொண்டு மீண்டும் 25,000 தொழிலாளர்களை ஈரோட்டுக்குத் திருப்பி அழைத்து வர வேண்டுமென்றும் அம்மனுவில் கேட்டுக் கொண்டுள்ளார்கள்.

வடமாநிலத் தொழிலாளிகள் சொந்த ஊர் சென்றுவிட்டதால் ஏற்படும் தொழிலாளர் பற்றாக்குறையை ஈடுகட்ட தமிழ்நாடு அரசு, கடந்த 16.06.2020 அன்று “தமிழ்நாடு தனியார் துறை வேலை இணைம்” (Tamilnadu Private Job Portal) - www.tnprivatejobs.tn.gov.in என்ற இணையதளத்தைத் தொடங்கியுள்ளதாகத் தெரிவித்தது. அதில் தொழிலாளர் வேண்டுவோரும், வேலை வேண்டுவோரும் தங்களது முகவரியைப் பதிவு செய்து கொண்டால், அவர்களுடைய தேவைகளை நிறைவு செய்வோம் என்று கூறியிருந்தார்கள். அந்த இணையதளம் செயல்படுகிறதா? அதன் மூலம், தேவைப்படும் நிறுவனங்களுக்குத் தொழிலாளிகளை இதுவரை அனுப்பி வைத்திருக்கிறார்களா என்ற விவரம் தெரியவில்லை.

“தமிழ்நாடு அமைப்புசாரா தொழிலாளர் வேலை வழங்கு வாரியம்” என்ற நிறுவனத்தை உருவாக்கி, அதன் மூலமாக வேலை கோரும் திறன் பெற்ற / திறன் குறைந்த மற்றும் தொழில் பயிற்சி பெற்ற அனைவரையும் பதிவு செய்து, எந்தெந்த நிறுவனங்களுக்கு எந்தத் தகுதியில் தொழிலாளர் தேவைப்படுகிறார்களோ, அவர்களை வழங்க வேண்டும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் கடந்த 2020 ஏப்ரல் மாதத்திலிருந்து தமிழ்நாடு அரசுக்குக் கோரிக்கை வைத்து வருகிறது.

மீண்டும் வடமாநிலத் தொழிலாளிகளை அழைத்து வருவதால் பின்வரும் பாதிப்புகள் உருவாகும் ஆபத்து உள்ளது. ஒன்று, கொரோனா கொள்ளைத் தொற்று நோய் மேலும் பரவும் அபாயம். இரண்டு, மண்ணின் மக்கள் வேலையின்றித் தவிக்கும்போது வெளி மாநிலத்தவர்களை வேலைக்கு அமர்த்தும் அநீதி. மூன்று, வடமாநிலத்தவர்கள் மிகை எண்ணிக்கையில் தமிழ்நாட்டில் குவியும்போது தமிழ்நாடு தமிழர்களின் தாயகமாக – தமிழ் மொழியை ஆட்சிமொழியாகக் கொண்ட தாயகமாக நீடிக்காமல் இந்தி மாநிலமாக மாறிவிடும் ஆபத்து.

மேற்கண்ட அனைத்தையும் கவனத்தில் கொண்டு, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தமிழ்நாட்டுத் தொழில் முனைவோருக்குத் தேவையான தொழிலாளிகளை தமிழ்நாட்டிலிருந்தே வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்யுமாறும், வடமாநிங்களிலிருந்து தொழிலாளர்களை அழைக்கும் கோரிக்கையை நிராகரிக்குமாறும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன்.தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT