உடனடிச்செய்திகள்
Showing posts with label அழைப்பு. Show all posts
Showing posts with label அழைப்பு. Show all posts

Saturday, September 14, 2019

தமிழீழ மக்கள் உரிமைகளுக்காக செப் 16 அன்று சென்னையில் நடைபெறும் “எழுக தமிழ்” - தமிழர் ஒன்றுகூடல்..!

தமிழீழ மக்கள் உரிமைகளுக்காக செப் 16 அன்று சென்னையில் நடைபெறும் “எழுக தமிழ்” - தமிழர் ஒன்றுகூடல்..!

தமிழீழத்தில் நடைபெற்று வரும் சிங்களமயமாக்கலை உடனே நிறுத்த வேண்டும், சர்வதேசப் போர்க்குற்ற விசாரணை நடத்த வேண்டும், தமிழ் அரசியல் கைதிகள் அனைவரையும் விடுதலை செய்ய வேண்டும், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்கள் தொடர்பில் உடனடி விசாரணை நடத்த வேண்டும், வடக்கு - கிழக்கில் சிங்கள இராணுவமயமாக்கலை நிறுத்த வேண்டும், இடம்பெயர்ந்த அனைவரையும் அவர்களது பாரம்பரிய இடங்களில் மீள்குடியமர்த்த வேண்டும் ஆகிய கோரிக்கைகளை முன்வைத்து - தமிழீழத் தாயகத்தில் வரும் 2019 செப்டம்பர் 16 அன்று “எழுக தமிழ்” பேரணி நடைபெறவுள்ளது. அதேநாளில், வட அமெரிக்காவிலுள்ள ஐ.நா. தலைமையகத்தின் முன்பும், உலகின் பல்வேறு நாடுகளில் வாழும் புலம்பெயர்ந்த தமிழீழ மக்களும் “எழுக தமிழ்” பேரணிக்கு ஆதரவாகப் போராட்டங்களை முன்னெடுக்கவுள்ளனர்.

இதனையொட்டி, வரும் திங்களன்று (16.09.2019) காலை 10 மணியளவில் சென்னை - வள்ளுவர் கோட்டத்தில், “தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை” ஒருங்கிணைப்பில், பல்வேறு அமைப்பினர் ஒன்றுகூடும் நிகழ்வு நடைபெறுகின்றது.

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தலைமைச் செயற்குழு உறுப்பினர் பாவலர் முழுநிலவன் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றுகிறார்.

நிகழ்வில், தமிழின உணர்வாளர்களும் ஆர்வலர்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, September 25, 2018

தஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந்தை நிறுத்தியது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்..!

தஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந்தை நிறுத்தியது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்..!
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைகோடி கிராமம் நண்டம்பட்டி. இந்த கிராமம் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களின் தொடக்கப் பகுதியாகும். நண்டம்பட்டியில் 150 குடும்பங்களும் அர்சுணம்பட்டியில் 75 குடும்பங்களும் வீமம்பட்டியில் 50 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
 
இந்த மூன்று ஊர் கிராம மக்களும் இளைஞர்களும் மாணவர்களும் கூலித் தொழிலாளிகளும், கட்டுமான ஆட்களும் வேலைக்கு திருச்சி, தஞ்சை செல்லும் நிலையில் நண்டம்பட்டி வழியாக இயங்கிய சிற்றுந்து (மினிபஸ்) நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
 
தஞ்சை மாவட்ட ஆட்சியரிடமும், வருவாய் வட்டாச்சியரிடமும் கோரிகை மனு கொடுத்தோம். எந்த பயனும் இல்லை! எனவே, மக்களின் அடிப்படை கோரிக்கை நிறைவேற்றிடாத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கினைக்கும் மக்கள் திரள் போராட்டம் வரும் 28.09.2018 அன்று

தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டி (சாணூரப்பட்டி) கடைவீதி - 28.09.2018 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகின்றது.
 
இப்போராட்டத்தில், ஊர் பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்க வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Thursday, June 14, 2018

மக்கள் போராட்டமும் சனநாயகமும் கருத்தரங்கம்

மக்கள் போராட்டமும் சனநாயகமும் கருத்தரங்கம்
நாள் : 16.06.2018 – காரி (சனி) மாலை 6 மணி, இடம் : சிகரம் அரங்கம், வடபழனி, சென்னை 51, குமரன் காலனி முதன்மைச் சாலை, வடபழனி பேருந்து நிலையம் பின்புறம்.

மேனாள் தமிழ்த்துறைப் பேராசிரியர், சென்னை மாநிலக் கல்லூரிப் பேராசிரியர் பி .யோகீசுவரன் அவர்கள் தலைமையில் நடைபெறுகிறது. சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி திரு. து. அரிபரந்தாமன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் திரு. கி. வெங்கட்ராமன், ஊடகவியலாளர் திரு. பா. ஏகலைவன் ஆகியோர் சிறப்பரையாற்றுகிறார்கள்.

அனைவரையும் வரவேற்கிறோம்
தொடர்புக்கு : 95001 72406, 98408 48594.

Saturday, January 6, 2018

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! பிப்ரவரி 3 - சென்னையில் சிறப்பு மாநாடு! 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! பிப்ரவரி 3 - சென்னையில் சிறப்பு மாநாடு! 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை!
 


 
#TamilnaduJobsforTamils
 
”தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல!” என்ற தலைப்பில் வரும் 2018 பிப்ரவரி 3 அன்று, சென்னையில் சிறப்பு மாநாட்டை நடத்துகிறது - தமிழ்த்தேசியப் பேரியக்கம்!
சென்னை சேப்பாகம் சிவனந்தா சாலையிலுள்ள அண்ணா அரங்கில் காலை 9.30 மணி முதல் மாலை 6 மணி வரை கருத்தரங்குகள் - கலை நிகழ்ச்சிகள் நடக்கின்றன. செயலுக்கான தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகின்றன.
 
கண்காட்சி

காலை 9.30 மணிக்கு பெண்ணாடம் இளநிலா கலைக் குழுவினரின் பறையாட்டம் - எழுச்சிப் பாடல்களுடன் தொடங்கும் மாநாட்டின் முதல் நிகழ்வாக, “தமிழ்நாட்டில் வெளி மாநிலத்தவர்” என்ற தலைப்பில் நடக்கும் ஒளிப்படக் கண்காட்சியை தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த. பச்சையப்பனார் திறந்து வைக்கிறார். தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் க. வெற்றித்தமிழன் நிகழ்வுக்குத் தலைமை தாங்குகிறார். பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், மாநாட்டு வரவேற்புரையாற்றுகிறார்.
 
கருத்தரங்கம் - 1

சென்னை உயர் நீதிமன்ற மேனாள் நீதிபதி து. அரிபரந்தாமன், மாநாட்டுத் தொடக்கவுரையாற்ற, அதனைத் தொடர்ந்து “வேலை வாய்ப்பில் தமிழர் உரிமை” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. கருத்தரங்கிற்கு, தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் வழக்கறிஞர் கோ. மாரிமுத்து தலைமையேற்கிறார்.
 
“தமிழ்நாடு அரசுத் துறையில்..” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி, “இந்தியத் தொழில்துறையில்..” என்ற தலைப்பில், தமிழர் எழுச்சி இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் ப. வேலுமணி, “இந்திய அரசு அலுவலகங்களில்..” என்ற தலைப்பில், மேனாள் இந்திய வருவாய்ப் பணி அதிகாரி திரு. ஏ. அழகிய நம்பி, “மாற்றுத்திறனாளிகள் உரிமை..” என்ற தலைப்பில், திசம்பர் 3 இயக்க ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் தீபக்நாதன் ஆகியோர் உரையாற்றுகின்றனர்.
 
சட்ட வரைவு

மாநாட்டின் முகாமையான நிகழ்வாக, “தமிழர் வேலை உறுதிச் சட்டம்” என்ற சட்டத்தின் வரைவை, தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் முன்வைத்து உரையாற்றுகிறார். அதனைத் தொடர்ந்து உணவு இடைவேளையும், பிற்பகல் 2 மணியளவில் கலை நிகழ்ச்சியும் நடக்கிறது.
 
ஆய்வறிக்கை வெளியீடு

பிற்பகல் 3 மணியளவில், “மண்ணின் மக்கள் வேலை உறுதிச் சட்டம்: மற்ற மாநிலங்களிலும் தமிழ்நாட்டிலும்” என்ற தலைப்பிலான ஆய்வறிக்கையை எல்லை மீட்புப் போராட்ட ஈகியும், சென்னை மாநிலக் கல்லூரி மேனாள் தமிழ்ப் பேராசிரியருமான பேரா. பி. யோகீசுவரன் வெளியிடுகிறார். புலவர் இரத்தினவேலவன், திருவாளர்கள் ச. யோகநாதன், வெ. சேனாபதி, பிரடெரிக் ஏங்கல்ஸ், தாரை. மு. திருஞானசம்பந்தம், சோயல் பாண்டியன், அர. மகேசுகுமார், நா. நெடுஞ்செழியன், இரா. இரஜினிகாந்த், ம. இலட்சுமி அம்மாள் ஆகியோர் அறிக்கையைப் பெற்றுக் கொள்கின்றனர்.
 
பாவரங்கம்

பிற்பகல் 3.30 மணிக்கு நடைபெறும் பாவரங்கில், “அவரவர் நாட்டில் அவரவர் வாழ்க!” என்ற தலைப்பில் பாவலர் கவிபாஸ்கர், “போர்க்குரல் எழுப்பு!” என்ற தலைப்பில் பாவலர் செம்பரிதி, “எரிதழல் எந்தி வா!” என்ற தலைப்பில் பாவலர் முழுநிலவன் ஆகியோர் பாவீச்சு நிகழ்த்துகின்றனர்.
 
கருத்தரங்கம் - 2

பிற்பகல் 4 மணிக்கு, “தமிழ்நாட்டுத் தொழில் - வணிகத்தில் அயலார்” என்ற தலைப்பில், த.தே.பே. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா. வைகறை தலைமையில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது.
 
தமிழ்நாடு மூத்த பொறியாளர்கள் சங்கப் பொதுச் செயலாளர் பொறிஞர் அ. வீரப்பன் -“கட்டுமானத்துறையில்” என்ற தலைப்பிலும், தமிழ்நாடு உணவு தானிய மொத்த வணிகர் சங்கத் தலைவர் திரு. சா. சந்திரேசன் - “தொழில் வணிகத்தில்” என்ற தலைப்பிலும், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம் - “திரைத்துறையில்..” என்ற தலைப்பிலும், தமிழின உணர்வாளர் இயக்குநர் வ. கௌதமன் - “அரசியலில்..” என்ற தலைப்பிலும், தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்பிரமணிய சிவா “கல்வியில்” என்ற தலைப்பிலும் கருத்துறையாற்றுகின்றனர்.
 
தீர்மானங்கள்

இதனைத் தொடர்ந்து, மாநாட்டுத் தீர்மானங்களை பேரியக்கச் செயல்பாட்டாளர்கள் பழ. இராசேந்திரன், க. முருகன், க. விடுதலைச்சுடர், மூ.த. கவித்துவன், மு. தமிழ்மணி, இலெ. இராமசாமி, க. பாண்டியன், பி. தென்னவன், க. விசயன், ஏந்தல் ஆகியோர் முன்மொழிக்கின்றனர்.
 
வாழ்த்தரங்கம்

நிறைவாக நடைபெறும் வாழ்த்தரங்கில், தமிழக வாழ்வுரிமைக் கட்சி நிறுவனத் தலைவர் திரு. தி. வேல்முருகன், மனித நேய சனநாயகக் கட்சித் தலைவரும், சட்டப்பேரவை உறுப்பினருமான திரு. மு. தமிமுன் அன்சாரி, மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா ஆகியோர் வாழ்த்துரை வழங்குகின்றனர்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், மாநாட்டு நிறைவுரையாற்றுகிறார். தோழர் பழ.நல். ஆறுமுகம் நன்றி கூறுகிறார். பாவலர் நா. இராசாரகுநாதன், ப. சிவவடிவேலு, இரா. இளங்குமரன், இரா. வேல்சாமி, வெ. இளங்கோவன், விளவை இராசேந்திரன் ஆகியோர் நிகழ்ச்சிகளை ஒருங்கிணைக்கின்றனர்.
 
தமிழ்நாடு தமிழர் தாயகமா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்காடா? சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அகதிகளா? அன்னையின் மடியிலேயே அவள் பிள்ளைகள் அனாதைகளா?
 
சிறப்பு மாநாட்டிற்கு வாருங்கள் தமிழர்களே!
 
#TamilnaduJobsforTamils
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Saturday, December 30, 2017

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! "சென்னை சிறப்பு மாநாடு" 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை

தமிழ்நாட்டு வேலைகள் தமிழர்களுக்கே! வெளி மாநிலத்தவர்களுக்கு அல்ல! "சென்னை சிறப்பு மாநாடு" 2049 தை 21 - 03.02.2018 காரி (சனி) காலை 9.30 - மாலை 6.00 மணி வரை!

#TamilnaduJobsforTamils

கல்வி கற்று வேலையில்லாமல் அலைவோரின் விகிதம் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் அதிகம். வேலை தேடி தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ளோர் எண்ணிக்கை 90 இலட்சம்!

தமிழ்நாடு அரசு தேர்வாணையம் மாநில அரசின் 4ஆம் பிரிவுப் பணிகளுக்கு 9,351 பேர் தேவை என்றும், அதற்கான தேர்வு 11.02.2018 அன்று நடைபெறும் என்றும் அறிவித்துள்ளது. அத்தேர்வு எழுதிப் பணியில் சேர்வதற்குப் பல இலட்சம் பேர் தமிழ்நாட்டில் விண்ணப்பித்துள்ளார்கள். இவர்களுக்குத் தேர்வுப் பயிற்சி கொடுக்க தமிழ்நாடெங்கும் ஏராளமான தனியார் பயிற்சி மையங்கள் (Coaching Centres) செயல்பட்டுவருகின்றன. பயிற்சிக்கான கட்டணமோ அதிகம்!

ஆனால், தமிழ்நாட்டு அரசின் இந்தப் பணிகளுக்கு விண்ணப்பிக்குமாறு நேப்பாளம், பூட்டான் நாடுகளைச் சேர்ந்தவர்களையும், பாக்கித்தான், வங்காளதேசம், திபெத், மியான்மார் போன்ற நாடுகளிலிருந்து இந்தியா வந்துள்ள அகதிகளையும் இந்தியாவின் எல்லா மாநிலங்களைச் சேர்ந்தவர்களையும் தமிழ்நாடு அரசு அழைத்துள்ளது. இதற்கான அறிவிக்கை 14.11.2017 அன்று தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது. தகுதியுள்ள தமிழ்நாட்டு ஆண், பெண் இளையோர்க்கு இந்த பன்னாட்டுப் போட்டியில் எத்தனை இடம் கிடைக்கப் போகிறது?

கர்நாடகம், குசராத், மராட்டியம், மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் மாநில அரசுப் பணிகள், நடுவண் அரசுப் பணிகள், தனியார் துறைப் பணிகள் ஆகியவற்றில் அந்தந்த மாநிலக் குடிமக்களுக்கு 100 விழுக்காடு, 90 விழுக்காடு என்ற அளவுகளில் ஒதுக்கீடு வழங்கி மாநில அரசுகள் விதிமுறைகள் இயற்றியுள்ளன. ஆனால், தமிழ்நாட்டில் அப்படிப்பட்ட விதிமுறைகள் இயற்றப்படவில்லை.

தமிழ்நாட்டில் மாநில அரசுப் பணிகளுக்கு விண்ணப்பம் போடுவோர், தமிழ்நாடு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்துள்ள எண்ணைக் குறிப்பிட வேண்டும் என்று 2013 வரை இருந்த விதியையும், தமிழ்நாடு அரசு நீக்கிவிட்டது. ஏற்கெனவே தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் 80 விழுக்காடு அளவிற்கு வெளி மாநிலத்தவர்களையே வேலைக்குச் சேர்க்கிறார்கள். தமிழர்கள் புறக்கணிக்கப்படுகிறார்கள். தமிழ்நாட்டில் திரும்பிய பக்கமெல்லாம் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே ஆக்கிரமித்துள்ளார்கள்.

தமிழ்நாட்டுத் தொழில், வணிகம் முதலியவற்றில், வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களே கோலோச்சுகிறார்கள். அவர்களை அண்டித் தொழில் செய்யும் நிலையிலேயே தமிழர்கள் இருக்கிறார்கள்! இந்திய அரசமைப்புச் சட்டப்படி தமிழர்கள் மொழிவழித் தாயகமாகத் தமிழ்நாடு அமைக்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தமிழர் வாழ்வரிமையைப் பறிக்க யாரையும் அனுமதிக்கக்கூடாது!

தமிழ்நாடு தமிழர் தாயகமா? வெளி மாநிலத்தவர் வேட்டைக்காடா? சொந்த மண்ணிலேயே தமிழர்கள் அகதிகளா? அன்னையின் மடியிலேயே அவள் பிள்ளைகள் அனாதைகளா?

கருத்தரங்குகள் - கலை நிகழ்ச்சிகள் - செயலுக்கான தீர்மானங்கள்!

சிறப்பு மாநாட்டிற்கு வாருங்கள் தமிழர்களே!

#TamilnaduJobsforTamils

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com 

Monday, December 11, 2017

“மீனவர் பிணங்கள் கடலில் மிதக்குது ஆணவ அரசு அசைய மறுக்குது!” இந்திய அரசே இதைவிடப் பேரிடர் எது? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!

“மீனவர் பிணங்கள் கடலில் மிதக்குது ஆணவ அரசு அசைய மறுக்குது!” இந்திய அரசே இதைவிடப் பேரிடர் எது?  தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்!
தமிழ்நாட்டைத் தாக்கிய ஒக்கிப் புயல், குமரி மாவட்டத்தை சுக்குநூறாக்கியுள்ளது. இந்திய அரசின் முறையான முன்னறிவிப்பு இல்லாததன் காரணமாக புயலில் சிக்கிக் கொண்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட தமிழக மீனவர்கள், இன்னமும் வீடுவந்து சேராத அவல நிலையில், நம் மீனவ மக்கள் வீதிக்கு வந்து ஞாயம் கேட்கத் தொடங்கியுள்ளனர். 

அடுத்த நாட்டை மிரட்டும் ஏவுகணைகள் விட்டு அறிவியல் தொழில்நுட்பங்களில் சிறந்து விளங்குவதாகப் பிதற்றிக் கொள்ளும் இந்திய அரசு, 36 மணி நேரத்திற்கு முன்பாகவே புயல் சீற்றங்களைக் கணிக்கும் தொழில்நுட்பங்களை வைத்திருக்கும் இந்திய அரசு, மிகப்பெரும் புயல் தமிழ்நாட்டைத் தாக்கப்போகிறது என குறைந்தபட்ச முன்னறிவிப்பைகூட செய்யாதது ஏன்? 

சிங்களக் கடற்படையும், இந்தியக் கடற்படையும் நேரடியாகவே நம் மீனவர்களைத் தாக்கி, மீன்பிடித் தொழிலைவிட்டே அவர்களை விரட்டியது போதாதென்று, புயலில் சிக்க வைத்து அவர்களை மீன்பிடித் தொழிலைவிட்டு விரட்டும் முயற்சி நடக்கிறதோ என்று ஐயப்படுகிறோம்! 

இன்னமும் நடுக்கடலில் நம் மீனவர்களின் உடல்கள் ஆங்காங்கே மிதப்பதாக செய்திகள் வரும் நிலையில், அவர்களின் உடலைக் கூட மீட்டுத் தராமல் இந்திய – தமிழ்நாடு அரசுகள் வேடிக்கைப் பார்ப்பது ஏன்? தமிழ்நாட்டு மீனவர்களின் உயிர் அவ்வளவு அலட்சியமானதா? 

இந்திய அரசே, இதைவிடப் பேரிடர் எது? உடனடியாக, ஒக்கிப் புயல் பாதிப்பை தேசியப் பேரிடராக அறிவித்திடு! காணாமல் போனோரை உடனடியாக மீட்க வேண்டும் – கணக்கு வேண்டும்!

தமிழ்நாட்டு ஆட்சியாளர்களே, மீனவ மக்களின் துயரில் பங்கெடுப்பதைவிட, இடைத்தேர்தல் முக்கியமாகிப் போய்விட்டதா? உடனடியாக, துயர் துடைப்புப் பணிகளைத் தீவிரப்படுத்து! கேரளாவைப் போல், உயிரிழந்த மீனவர் குடும்பங்களுக்கு 20 இலட்சம் ரூபாய் துயர் துடைப்பு நிதி வழங்கு! 

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழ்நாடெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறுகின்றன. நாளை (12.12.2017) மாலை 5 மணிக்கு தஞ்சை – தொடர்வண்டி நிலையம் அருகிலும், 13.12.2017 மாலை 4 மணிக்கு சென்னை வள்ளுவர் கோட்டத்திலும், மாலை 4 மணிக்கு மதுரை செல்லூர் அறுபதடிச் சாலையிலும் ஆர்ப்பாட்டங்கள் நடக்கின்றன. 

இந்த ஆர்ப்பாட்டங்களில், தமிழின உணர்வாளர்களும், சனநாயக ஆற்றல்களும் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்! 

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Thursday, September 28, 2017

“மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு” நடுவண் அரசு அலுவலகங்களில் ஒருவாரம் காத்திருப்புப் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம்

“மண்ணின் மக்களுக்கு வேலை வழங்கு” நடுவண் அரசு அலுவலகங்களில் ஒருவாரம் காத்திருப்புப் போராட்டம்! தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
தமிழ்நாட்டில் செயல்படும் இந்திய அரசு நிறுவனங்களான பி.எச்.இ.எல், நெய்வேலி அனல் மின் நிலையம், ஆவடி, திருச்சி, அரவங்காடு ஆகிய பகுதிகளில் உள்ள ஆயுதத் தொழிற்சாலைகள், நரிமணம், பனங்குடி, வெள்ளக்குடி, குத்தாலம், எண்ணூர் முதலிய இடங்களில் உள்ள பெட்ரோலியம் மற்றும் எரிவளி ஆலைகள், துறைமுகங்கள், வானூர்தி நிலையங்கள், தொடர்வண்டித்துறை, அஞ்சல் துறை, தொலைப்பேசித்துறை, அரசுடைமையாக்கப்பட்ட வங்கிகள், வருமான வரி, உற்பத்தி வரி, சுங்க வரி அலுவலகங்கள் உள்ளிட்ட அனைத்திலும் திட்டமிட்டுத் தமிழர்கள் புறக்கணிக்கப்பட்டு, எண்பது விழுக்காடு அயல் மாநிலங்களைச் சேர்ந்தவர்களை வேலைக்குச் சேர்க்கிறார்கள்.
இதுதவிர, தமிழ்நாட்டில் வசிப்போர் என்று போலிச் சான்றிதழ் பெற்று அயல் மாநிலத்தவர் பலர் தமிழ்நாடு அரசின் அலுவலகங்கள், தொழிற்சாலைகள் மற்றும் உயர்கல்வி நிலையங்களில் வேலையிலும் கல்வியிலும் சேர்க்கிறார்கள். இதற்கான அண்மைக்கால எடுத்துக்காட்டு “நீட்” தேர்வின் மூலம் தமிழ்நாட்டு ஒதுக்கீட்டில் அயல் மாநில மாணவர்கள் பலர் தமிழ்நாடு அரசு மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கப்பட்டிருக்கிறார்கள்.
எட்டுக்கோடி மக்கள் தொகை கொண்ட தமிழ்நாட்டில் படித்து வேலையில்லாமல் துன்புறுவோர் ஏராளம்! தமிழ்நாட்டு வேலை வாய்ப்பு அலுவலகங்களில் வேலை கோரி பதிவு செய்துள்ள மண்ணின் மகன்கள், மண்ணின் மகள்கள் எண்ணிக்கை ஒரு கோடி! இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் மிக அதிகமாகப் பொறியியல் கல்லூரிகள் இருக்கின்றன. அவற்றில் படித்து பட்டம் பெற்ற இலட்சக்கணக்கான இளைஞர்கள் வேலையில்லாமல் - மன உளைச்சல்களுக்கும் மன அழுத்தத்திற்கும் உள்ளாகித் தவிக்கிறார்கள். அவர்களில் பலர் தொழிலகங்களின் வாயில் காப்போர்களாக வேலை பார்க்கிறார்கள். அவ்வேலையிலும் வெளி மாநிலத்தவர் ஆக்கிரமிப்பு மிக அதிகமாகிப் போட்டி கடுமையாக உள்ளது.
இந்தியாவில் மொழிவழித் தாயகங்கள் அரசமைப்புச் சட்டப்படி உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஏற்பாடு தமிழ்நாடு தமிழர்களின் தேசிய இனத் தாயகம் என்ற சட்ட ஏற்பாகும். தமிழ்நாட்டின் கல்வி, வேலை வாய்ப்பு முதலியவை மண்ணின் மக்களாகியத் தமிழர்களுக்குப் பயன்பட வேண்டும் என்ற நோக்கில்தான் மொழிவழி ஆட்சி மாநிலமாகத் தமிழ்நாடு 1956 நவம்பர் 1-இல் வடிவமைக்கப்பட்டது.
இந்திய அரசமைப்புச் சட்டத்தின் இந்த நோக்கத்திற்கு எதிராக, இந்திய அரசு “அனைத்திந்தியத் தேர்வு”  என்பதைப் பயன்படுத்திக் கொண்டு தமிழ்நாட்டில் நடுவண் அரசுத் தொழிலகங்கள், அலுவலகங்கள், ஐ.ஐ.டி. போன்ற உயர்கல்வி நிலையங்கள் அனைத்திலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்களையே எண்பது விழுக்காடு அளவிற்குச் சேர்த்து வருகிறது.
அண்மையில் தமிழ்நாட்டு அஞ்சலகப் பணிகளுக்காக அனைத்திந்தியத் தேர்வெழுதியோரில் அரியானா மாநிலத்தவர் 25க்கு 25 என்ற அளவில் தமிழ்ப் பாடத்தில் மதிப்பெண் வாங்கிய மோசடி அம்பலமானது. ஆவடி எச்.வி.எப் - ஆயுதத் தொழிற்சாலையில் வடநாட்டவர்கள் போலிச் சான்றிதழ் கொடுத்து வேலையில் சேர்ந்தது கண்டுபிடிக்கப்பட்டது. தொடக்க காலத்தில் பி.எச்.இ.எல்., நெய்வேலி, ஆவடித் தொழிலகங்களுக்கு தமிழ்நாடு வேலைவாய்ப்பு அலுவலகங்கள் வழியாகத்தான் தமிழர்கள் பணியில் சேர்க்கப்பட்டார்கள்.
மண்ணின் மக்களின் வேலை உரிமையைப் பாதுகாப்பதற்காக 1980களில் கர்நாடகக் காங்கிரசு ஆட்சி சரோஜினி மகிசி ஆணையம் அமைத்து பரிந்துரை பெற்றது. அப்பரிந்துரையின்படி மாநில அரசுத் தொழிலகங்களில் 100க்கு 100 கன்னடர்களுக்கே வேலை தர வேண்டும். இந்திய அரசு நிறுவனங்களில் ஊழியர்கள் 90 விழுக்காடும், உயர் அதிகாரிகள் 80 விழுக்காடு - 70 விழுக்காடு என்றும் படிநிலையில் கன்னடர்களுக்கு வேலை வழங்க வேண்டும். தனியார் துறையிரும் கன்னடர்களுக்கே முன்னுரிமை தர வேண்டும் என அப்பரிந்துரை கூறுகிறது. கர்நாடகத்தில் காங்கிரசு, பா.ச.க. ஆட்சிகளால் அப்பரிந்துரை செயல்படுத்தப்படுகிறது.
இந்திய அரசு, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு உடனடியாக வழங்க வேண்டும் - 10 விழுக்காட்டுக்கு மேல் இவ் அலுவலகங்களில் உள்ள வெளியாரை வெளியேற்ற வேண்டும்!
தமிழ்நாடு அரசு, கர்நாடகத்தில் இருப்பது போல் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு - மாநில அரசு, நடுவண் அரசு, தனியார் துறை ஆகியவற்றில் வேலை ஒதுக்கீடு வழங்கி சட்டமியற்ற வேண்டும்!
மேற்கண்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 2017 அக்டோபர் 25 முதல் 31 வரை ஒருவார காலம் நடுவண் அரசு தொழிலகங்கள் மற்றும் அலுவலகங்கள் முன் - தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் காத்திருப்புப் போராட்டம் நடத்தவுள்ளோம்!
மண்ணின் மக்கள் வாழ்வுரிமைக்காக நடைபெறும் இக்காத்திருப்புப் போராட்டத்தில் கட்சி மற்றும் இயக்க வேறுபாடின்றி அனைத்துத் தமிழ் மக்களும் கலந்து கொள்ளுமாறு அனைவரையும் அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT