உடனடிச்செய்திகள்
Showing posts with label ஆர்ப்பாட்ட அறிவிப்பு. Show all posts
Showing posts with label ஆர்ப்பாட்ட அறிவிப்பு. Show all posts

Thursday, August 7, 2014

தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள்!


இந்திய அரசின் சமற்கிருதத் திணிப்புக்கு எதிராக
தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில்
‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள்!

இந்திய அரசின் சி.பி.எஸ்.இ. பள்ளிகளில் ஆகத்து 7 முதல் 13ஆம் நாள் வரை, ‘சமற்கிருத வாரம்’ கொண்டாட வேண்டுமென நரேந்திர மோடி தலைமையிலான பா.ச.க. அரசு உத்தரவிட்டுள்ளது. ஆரிய ஆட்சி நடத்தும் பா.ச.க.வின் இந்த முடிவுக்கு எதிராக, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், தமிழகமெங்கும் ‘சமற்கிருத எதிர்ப்பு வார’ நிகழ்வுகள் கடைபிடிக்கப்படுகின்றன.

குடந்தை - பட்டீசுவரம்
தஞ்சை மாவட்டம் - குடந்தை வட்டம் - பட்டீசுவரத்தில் 07.08.2014 அன்று மாலை, கடைவீதியில் நடைபெறும் ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக் கூட்ட’த்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் தமிழ்த் தேசியன் தலைமையேற்கிறார். தோழர் ச.சுரேஷ் வரவேற்புரையாற்றுகிறார். திரு. இறைநெறி இமையவன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை திரு. பெ.பூங்குன்றன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை ஆகியோர் இதில் சிறப்புரையாற்றுகினர். தமிழக மாணவர் முன்னணித் தோழர் ம.புரட்சி நன்றியுரையாற்றுகிறார்.

சாமிமலை
தஞ்சை மாவட்டம் – குடந்தை வட்டம் – சாமிமலை, தேரடி அருகில், 08.08.2014 அன்று மாலை நடைபெறும் ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக் கூட்ட’த்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர் தோழர் ம.திருவரசன் தலைமையேற்கிறார். தோழர் த.சிவக்குமார் (த.தே.பொ.க) வரவேற்புரையாற்றுகிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, குடந்தை நகரச் செயலாளர் தோழர் விடுதலைச்சுடர், தோழர் வளவன் ஆகியோர் சிறப்புரையாற்றுகினர். தமிழக மாணவர் முன்னணித் தோழர் கு.தமிழ்ச்செல்வன் நன்றியுரையாற்றுகிறார்.

குடந்தை
தஞ்சை மாவட்டம் - குடந்தையில், காந்தி பூங்கா அருகில் 09.08.2014 அன்று மாலை நடைபெறும் ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக் கூட்ட’த்திற்கு, தமிழக இளைஞர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் ச.செந்தமிழன் தலைமையேற்கிறார். தோழர் செழியன் வரவேற்புரையாற்றுகிறார். திரு. இறைநெறி இமையவன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தோழர் வளவன், குடந்தை நகரச் செயலாளர் தோழர் க.விடுதலைச்சுடர் ஆகியோர் சிறப்புரையாற்றுகினர். தோழர் ரெ.அன்பழகன் (த.தே.பொ.க.) நன்றியுரையாற்றுகிறார்.
சென்னை
சென்னை எம்.ஜி.ஆர். நகர் முதன்மைச் சாலையில், 10.08.2014 ஞாயிறு அன்று மாலை 6 மணிக்கு, ‘சமற்கிருத எதிர்ப்புத் தெருமுனைக் கூட்டம்’ நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் உதயன் தலைமையேற்கிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றுகிறார். தமிழ் வழிபாட்டுரிமைக் குழு அமைப்பாளரும், தெய்வத்தமிழ் இதழ் ஆசிரியருமான ‘செந்தமிழ் வேள்விச் சதுரர்’ திரு. மு.பே.சத்தியவேல் முருகனார், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை, தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, த.தே.பொ.க. சென்னை செயலாளர் தோழர் வி.கோவேந்தன், தாம்பரம் செயலாளர் தோழர் இளங்குமரன் ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். சென்னை த.இ.மு. தலைவர் தோழர் செந்தில் நன்றி நவில்கிறார்.

ஓசூர்
ஓசூர் இராம் நகரில், 10.08.2014 அன்று மாலை 5 மணிக்கு நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.செம்பரிதி தலைமையேற்கிறார். த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் கோ.மாரிமுத்து, தமிழக உழவர் முன்னணி நடுவண் குழு உறுப்பினர் தோழர் தூருவாசன், தொழிலாளர் பாதுகாப்புப் பேரவை நிர்வாகி தோழர் கு.சக்திவேல் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர்.

தஞ்சை
தஞ்சையில் 11.08.2014 திங்கள் அன்று மாலை 5 மணிக்கு, இரயிலடியில் நடைபெறும் ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக் கூட்ட’த்திற்கு, த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் லெ.இராமசாமி தலைமையேற்கிறார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரையாற்றுகிறார். த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, நகரச் செயற்குழு உறுப்பினர் தோழர் இரா.சு.முனியாண்டி, நகரத் துணைச் செயலாளர் தோழர் இரா.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கருத்துரையாற்றுகின்றனர்.

முருகன்குடி
கடலூர் மாவட்டம் – திட்டக்குடி வட்டம் முருகன்குடியில், 11.08.2014 அன்று மாலை 5 மணிக்கு, பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முருகன்குடி செயலாளர் தோழர் கனகசபை தலைமையேற்கிறார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.முருகன் உள்ளிட்ட தோழர்கள் உரையாற்றகின்றனர்.

செங்கிப்பட்டி
தஞ்சை மாவட்டம் – செங்கிப்பட்டியில் சாணூரப்பட்டி முதன்மைச் சாலையில், 12.08.2014 அன்று மாலை நடைபெறும் ‘சமற்கிருத எதிர்ப்புக் கண்டனக் கூட்ட’த்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றியச் செயலாளர் தோழர் ஆ.தேவதாசு தலைமையேற்கிறார். த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநிதி, ஒன்றியக் குழு உறுப்பினர்கள் தோழர் ச.காமராசு, தோழர் தட்சிணாமூர்த்தி, தோழர் க.அருள்தாசு, தோழர் ஆ.இராசசேகர், தோழர் பொன்.இரவிச்சந்திரன், தோழர் த.செபஸ்டியார் ஆகியோர் கண்டன உரையாற்றுகின்றனர். திரு. இறைநெறி இமையவன், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். த.தே.பொ.க. கிளைச் செயலாளர் தோழர் ப.மலைத்தேவன் நன்றியுரையாற்றுகிறார்.

சிதம்பரம்
சிதம்பரம் மேல வீதி அண்ணா சிலை அருகில், 13.08.2014 அன்று மாலை 6 மணிக்கு, தமிழ்க் காப்பணி சார்பில், ‘சமற்கிருத எதிர்ப்புத் தெருமுனைக் கூட்டம்’ நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, தமிழ்க் காப்பணி ஆலோசகர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையேற்கிறார். தமிழ்க் காப்பணி துணைச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் வரவேற்புரையாற்றுகிறார். தமிழ் காப்பணி பொதுச் செயலாளர் திரு. பா.பழநி, துணைத் தலைவர் திரு. இராம.ஆதிமூலம் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். திரு. இறைநெறி இமையவன், தமிழ்க் காப்பணி தலைவர் திரு. அழ.பழநியப்பன், அயோத்திதாசப் பண்டிதர் – சுவாமி சகஜானந்தா ஆய்வு மைய நிர்வாகி திரு. அன்பாநந்தன், அக்னி சிறகுகள் சேவை அமைப்புச் செயலாளர் திரு. வே.சுப்பிரமணிய சிவா ஆகியோர் சிறப்புரையாற்றுகின்றனர். திரு. மு.சம்பந்தம் நன்றியுரையாற்றுகிறார்.

திருச்சி
      திருச்சியில் 13.08.2014 – அறிவன்(புதன்) அன்று மாலை 5.30 மணிக்கு, சத்திரம் பேருந்து நிலையம் அருகிலுள்ள இரவி சிற்றரங்கில், ‘சமற்கிருத ஆதிக்கமும் தமிழக பாதிப்புகளும்’ என்ற தலைப்பில்,  கருத்தரங்கம் நடைபெறுகின்றது. உலகத் தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனமும், தமிழ்க் கலை இலக்கியப் பேரவையும் இணைந்து ஒருங்கிணைக்கும் இந்நிகழ்விற்கு, த.க.இ.பே. நடுவண் குழு உறுப்பினர் பாவலர் நா.இராசா ரகுநாதன் தலைமயேற்கிறார். த.க.இ.பே. துணைச் செயலாளர் பொறியாளர் ச.முத்துக்குமாரசாமி வரவேற்புரையாற்றுகிறார். பொறியாளர் ப.மாதேவன், தோழர் மூ.த.கவித்துவன், பைந்தமிழ் இயக்கப் புலவர் பழ.தமிழாளன் ஆகியோர் பாவரங்கம் நிகழ்த்துகின்றனர். உலகத் தமிழ் மொழி மெய்யியல் பண்பாட்டு ஆய்வு நிறுவனத்தின் நிறுவனர் முனைவர் க.நெடுஞ்செழியன் அவர்கள், “சமற்கிருத ஆதிக்கமும் தமிழர் மெய்யியலும்” என்ற தலைப்பிலும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள், “சமற்கிருத ஆதிக்கமும் தமிழ் இனமும்” என்ற தலைப்பிலும், முனைவர் அ.அந்தோணி குரூசு அவர்கள் “சமற்கிருத ஆதிக்கமும் தமிழ் மொழியும்” என்ற தலைப்பிலும் கருத்துரையாற்றுகின்றனர். நிறைவில், தோழர் மு.தியாகராசன் நன்றியுரையாற்றுகிறார்.

இதே போல்,மதுரை, ஈரோடு, பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு இடங்களில் துண்டறிக்கை பரப்புரை உள்ளிட்ட நிகழ்வகள் நடைபெறுகின்றன.

தமிழகமெங்கும் நடைபெறும், “சமற்கிருத எதிர்ப்பு வார” நிகழ்வுகளில், அந்தந்த பகுதிகளைச் சேர்ந்த தமிழின உணர்வாளர்களும், தமிழ்த் தேசிய ஆர்வலர்களும் திரளாகக் கலந்து கொள்ள வேண்டுமென அன்புரிமையுடன் கேட்டுக் கொள்கிறோம்!

இன்னணம்,
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி,

சென்னை -78.

Sunday, June 9, 2013

அரசுத் தமிழ் வழிப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றாதே என வலியுறுத்தி 17.07.2013 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம்!

"தமிழக அரசே! அரசுப் பள்ளிகளை ஆங்கில வழி 
மெட்ரிகுலேசன் பள்ளிகளாக மாற்றாதே!"
தமிழகமெங்கும் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம் சார்பில்
17.07.2013 அன்று கண்டன ஆர்ப்பாட்டம்

தமிழக அரசுத் தமிழ் வழிப் பள்ளிகளை ஆங்கில வழிப் பள்ளிகளாக மாற்றாதே என்பதை வலியுறுத்தி 17.07.2013 அன்று தமிழகமெங்கும் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என தமிழ் வழிக் கல்விக் கூட்டியக்கம் அறிவித்துள்ளது. 

இது குறித்து அவ்வமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

தமிழ்மொழி நம் தாய்மொழி மட்டுமன்று; தமிழ்நாட்டின் ஆட்சிமொழி; தமிழகத்தின் தேசிய மொழி! தமிழ்நாட்டின் கல்விக் கூடங்களிலிருந்து தமிழ்மொழியை அப்புறப்படுத்துவதில், தனியார் கல்வி நிறுவன முதலாளிகளுடன் தமிழக அரசும் போட்டி போட முனைந்துள்ளது.

2013-2014 கல்வி ஆண்டில் தமிழகத்தில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் தொடக்கப்பள்ளி முதல் மேல்நிலைப் பள்ளி வரை ஆங்கிலத்தைப் பயிற்று மொழியாகக் கொண்ட பிரிவுகளைப் புதிதாகத் தொடங்குகிறது தமிழக அரசு. கணிதம், அறிவியல், சமூகவியல், வணிகவியல் உள்ளிட்ட அனைத்துப் பாடங்களையும் ஆங்கில வழியில் கற்பிக்க உள்ளது.

தமிழக அரசின் ஆங்கிலத் திணிப்பானது எதிர்காலத்தில் கல்வி, ஆட்சி நிர்வாகம் ஆகியவற்றில் தமிழைப் பயன்பாடற்ற மொழியாக்கிவிடும்.

தமிழை இழந்த பின் தமிழ்மக்கள் தங்கள் மண்ணிலேயே அயலார்க்கும் அயல்நாட்டு நிறுவனங்களுக்கும் அடிமைகளாகி, ஆட்சி உரிமையை இழந்த உதிரிக் கூட்டமாக மாறிவிடுவர்.

தாய்மொழி வழியில் கற்போர்தாம் சொந்த சிந்தனை வளர்ச்சி பெறுவர்; புதியன படைப்பர் என்று குழந்தை உளவியல் மற்றும் கல்வி உளவியல் அறிஞர்கள் உலகுதழுவிய அளவில் வரையறுத்துள்ளனர். அயல்மொழிவழி படிப்பது நெட்டுருப்போட்டு மதிப்பெண் பெறும் தன்மையைத்தான் உருவாக்கும்.

வளர்ச்சியடைந்த பிரான்சு, செர்மனி, சப்பான், ரசியா, சீனா போன்ற நாடுகளிலும் வளர்ச்சியடையாத ஆப்பிரிக்க நாடுகளிலும் ஆங்கில வழிக் கல்வி இல்லை. அந்தந்த நாட்டின் தாய் மொழிக் கல்வியே இருக்கிறது.

தமிழ்வழிக்கல்வி மூலம் தான், ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழ் இனம் அறிவிலும் வணிகத்திலும் செழித்திருந்தது!

அயல்மொழித் திணிப்பைத் தடுக்க - தாய்மொழியைக் காக்க, போராடி முந்நூறு பேர்க்கு மேல் துப்பாக்கிச் சூட்டிற்குப் பலியானதும், பத்துப் பேர்க்கு மேல் தீக்குளித்தும் நஞ்சுண்டும் மடிந்ததும் தமிழ்நாட்டில் மட்டுமே நடந்த வரலாற்றுப் புகழ்மிக்க ஈகமாகும்.

தமிழக அரசுக்கு நாம் பின் வரும் கோரிக்கைகளை முன் வைக்கிறோம்.

1.   அரசுப் பள்ளிகளில் ஆங்கில வகுப்புகள் தொடங்கும் திட்டத்தை முற்றிலுமாகக் கைவிட வேண்டும். ஏற்கெனவே தொடங்கப்பட்டுள்ள ஆங்கில வழி வகுப்புகளைத் தமிழ் வழி வகுப்புகளாக மாற்ற வேண்டும்.

பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளை ஆங்கில வழி மெட்ரிக்குலேசன் உள்ளிட்ட தனியார் பள்ளிகளில் சேர்ப்பதால் அரசுப் பள்ளிகளில் மாணவர் சேர்க்கை குறைகிற அவலத்தைப் போக்கப் பின் வரும் நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்:

அ. முதற்கட்டமாகத் தமிழ்நாட்டில் ஒன்றாம் வகுப்பு முதல் +2 வரை அரசு மற்றும் தனியார் பள்ளிகள் அனைத்திலும் தமிழைக் கட்டாய மொழிப் பாடமாகவும் (language) கட்டாயப் பயிற்று மொழியாகவும் (Medium of Instruction) இருக்கும்படித் தமிழக அரசு சட்டமியற்ற வேண்டும். அரசு ஆணை(G.O.) போடுவது கூடாது.

ஆ. ஆறாம் வகுப்பிலிருந்து ஆங்கிலம் அல்லது பிற மொழியை மொழிப் பாடமாகக் கற்பிக்க வேண்டும்.

2.   ஒன்று முதல் +2 வரை தமிழ்வழியில் படித்தவர்களுக்கு வேலை வாய்ப்பில் எண்பது விழுக்காடும், உயர்கல்விச் சேர்க்கையில் எண்பது விழுக்காடும் இட ஒதுக்கீடு வழங்கிடச் சட்டமியற்ற வேண்டும்.

3.   அரசுப் பள்ளிகளில் விளையாட்டுத் திடல், கழிப்பறைகள் கட்டாயம் செயல்பட வேண்டும். விளையாட்டு, இசை, ஓவியம் ஆகிய துறைகளுக்கு ஆசிரியர்கள் அமர்த்த வேண்டும்.

4.   பத்து மற்றும் +2 பொதுத் தேர்வில் தேர்ச்சி விகிதத்தை அதிகமாகக் காட்டி, கல்விக் கொள்ளையைத் தீவிரப்படுத்துவதற்காக தனியார் பள்ளிகளில், 9 ஆம் வகுப்பில் 10 ஆம் வகுப்புப் பாடத்தையும் +1 இல் +2 பாடத்தையும் நடத்துகிறார்கள். அறிவு வளர்ச்சிக்கு எதிரான இந்தக் கல்விச் சூதாட்டத்தைத் தடுக்கக் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். 9 ஆம் வகுப்பில் பத்தாம் வகுப்புப் பாடத்தை நடத்தும் தனியார் பள்ளிகளின் உரிமத்தை நீக்க வேண்டும். +1 வகுப்பிற்கும் அரசு பொதுத் தேர்வு முறையைக் கொண்டு வரவேண்டும்.

5.   கிராமப்புற மாணவர்களுக்கு உயர்கல்வியில் 25 விழுக்காடு வழங்கிடச் சட்டமியற்ற வேண்டும்.

6.   நடுவண் அரசு வேலைக்கான தேர்வுகள் அனைத்தையும் தமிழில் எழுத வாய்ப்பளிக்கவும், கல்வியை மீண்டும் மாநில அதிகாரப் பட்டியலுக்குக் கொண்டு வரவும் இந்திய அரசைத் தமிழக அரசு வலியுறுத்தி அவற்றைச் செயல்பாட்டுக்குக் கொண்டு வரவேண்டும்.

தமிழ்ப் பெருமக்களே!

தமிழ்வழிக் கல்வி கோருவது தமிழைப் பெருமைபடுத்துவதற்காக அல்ல; தமிழர்கள் பெருமை பெறுவதற்காக!

ஒடுக்கப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட, கிராமப்புற மாணவர் களுக்கும் பெண்களுக்கும் சமூக நீதி வழங்குவது தமிழ்வழிக் கல்வியே!

பல்வேறு அரசியல் மற்றும் தமிழ் அமைப்புகள் கூட்டாக உருவாக்கியதுதான் தமிழ்வழிக் கல்விக் கூட்டியக்கம். மேற்கண்ட கோரிக்கைகளை முன்வைத்து 28.5.2013 அன்று சென்னைப் பள்ளிக் கல்வி இயக்கக வாயிலில் மாபெரும் ஆர்ப்பாட்டம் நடத்தினோம். அடுத்த நடவடிக்கையாகத் தமிழகம் தழுவிய அளவில் மாவட்டத் தலைநகர்களில் 17.6.2013 அன்று ஆர்பாட்டம் நடத்துகிறோம்.

இனம் காக்க, மொழி காக்க, எதிர்கால வாழ்வுரிமை காக்க எழுச்சி பெறுவீர் தமிழர்களே! ஆர்ப்பாட்டத்திற்கு அணி திரள்வீர்!

இவ்வாறு அவ்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது. 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT