உடனடிச்செய்திகள்

Friday, August 31, 2012

பத்தாண்டுகள் முடித்த இஸ்லாமியர் உள்ளிட்ட அரசியல் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்க தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர் கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்


பத்தாண்டுகள் முடித்த இஸ்லாமியர் உள்ளிட்ட
அரசியல் சிறைவாசிகள் அனைவரையும் விடுதலை செய்க
தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி பொதுச்செயலாளர்
கி.வெங்கட்ராமன் வலியுறுத்தல்


மிழ்நாட்டில் ஒருசார் நெருக்கடி நிலை (selective emergency) செயலில் உள்ளது தமிழ்த் தேசியர்கள், தமிழீழ ஆதரவாளர்கள், தாராளமய வளர்ச்சி முறைக்கு எதிராகப் போராடுபவர்கள், இஸ்லாமியர்கள் ஆகியோரின் அடிப்படை சனநாயக உரிமைகளை தமிழக அரசின் இந்த ஒரு சார் நெருக்கடி நிலை தட்டிப்பறிக்கிறது தமிழக அரசு. இவர்களை குற்றப்பரம்பரையினர் போல் நடத்துகிறது. அரசமைப்புச் சட்டம் வழங்கும் சனநாயக உரிமைகள் அனைத்தும் இவர்களுக்கு கேள்விக்குறி யாக்கப்பட்டுள்ளது.

இந்திராகாந்தி அம்மையார் பிரதமராக இருந்தபோது 1975 இல் பிறப்பித்த நெருக்கடி நிலை அனைத்து எதிர்க்கட்சிகளையும், பெரும்பாலான ஊடகங்களையும் கடுமையாகப் பாதித்ததால் அதன் கொடுமை மக்கள் அனைவருக்கும் தெரிந்து வலுவான எதிர்ப்புக் கிளம்பியது. அதன் விளைவாக நெருக்கடி நிலை திரும்பப் பெறப்பட்டது. அதனைப் பிறப்பித்த இந்திரகாந்தி ஆட்சியே தூக்கியெறியப்பட்டது.

ஆனால் இப்போது தமிழ்நாட்டில் நிலவும் நெருக்கடி நிலை சட்டப்படி அறிவிக்கப்படாததும் அடிப்படை மக்களுக்காக தேர்தல் அரசியலுக்கு வெளியே  போராடும் பகுதியினரை மட்டும் குறிவைத்துள்ளதுமான ஒரு சார் நெருக்கடி நிலையாகும்.

இதில் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள ஒரு பகுதியினர் இஸ்லாமியர் ஆவர். 1998 கோவை குண்டு வெடிப்பு தொடர்பாக கைது செய்யப்பட்ட 166 இஸ்லாமியர்கள் அனைவரும் விசாரணை சிறைவாசிகளாகவே 4 ஆண்டுகளிலிருந்து 9 ஆண்டுகள் வரை கொடுஞ்சிறையில் வாழ்க்கையை கழித்தனர்.  குற்றவியல் சட்டப்படி இவர்களுக்கு வழங்கப்பட்டிருக்க வேண்டிய பிணைக்கூட மறுக்கப்பட்டது.


இவ்வாறு கொடுஞ்சிறையில் 9 ஆண்டுகள் வரை இருந்தவர்களில் 71 பேர் குற்றமற்றவர்கள் என உறுதி செய்யப்பட்டு நீதிமன்றத்தால் விடுதலை செய்யப்பட்டார்கள். அதாவது எந்த குற்றமும் செய்யாமல் இஸ்லாமியராக பிறந்த காரணத்திற்காகவே விசாரணை என்ற பெயரில் 9 ஆண்டு சிறைவாசத்தில் இருந்துள்ளனர். ஈடுகட்ட முடியாத இந்த சிறைவாசக் காலத்திற்கு எந்த வகை இழப்பீடும் அவர்களுக்கு வழங்கப்படவில்லை.

தண்டனை பெற்று 13 ஆண்டுகளாக சிறையில் உள்ள பிறருக்கும் இடைக் காலப் பிணைவிடுமுறை (பரோல்) கூட வழங்கப்படவில்லை. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதே கேலிக்குள்ளாக்கப்பட்டு விட்டது.

இஸ்லாமியர் என்றாலே தீவரவாதிகள், இந்தியாவிற்கு எதிரானவர்கள், பாகிஸ்தான் கைக்கூலிகள் என்ற படிமம் ஊடகங்களாலும் திரைப்படங்களாலும் கட்டமைக்கப்பட்டுள்ளதால் அதில் மூழ்கியுள்ள பெரும்பாலான மக்களுக்கு இது உறுத்தலாக படவில்லை. எனவே கேள்விமுறையற்று இந்த சனநாயக மீறல் தொடர்கிறது.

அண்ணா பிறந்த நாளையொட்டி அவ்வபோது நீண்ட நாள் சிறைவாசிகளுக்கு முன் விடுதலை வழங்கப்பட்டு வருகிறது. சென்ற ஆண்டு அண்ணா பிறந்த நாளில் 8 ஆண்டு தண்டனை முடித்த சிறைவாசிகள் கூட விடுதலை ஆயினர். ஆனால் அப்போதும் இஸ்லாமிய சிறையாளி களுக்கும், இராசீவ்காந்தி கொலைவழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்றவர்களுக்கும் அவ்வாய்ப்பு மறுக்கப்பட்டது.

இந்த ஒருதலைச் சார்பு  நடவடிக்கை கடும் கண்டனத்திற்குரியது. இனியும்  இந்த அநீதித் தொடரக்கூடாது.

எனவே வரும் செப்டம்பர் 17 அண்ணா பிறந்தநாளையொட்டி 10ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வாடும் இஸ்லாமிய சிறைவாசிகள், இராசிவ்காந்தி கொலைவழக்கில் வாழ்நாள் தண்டனை பெற்றுள்ள சிறைவாசிகள் உள்ளிட்ட அனைத்து அரசியல் சிறைவாசிகளையும் தமிழக அரசு முன் விடுதலை  செய்ய வேண்டும். என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.
                                                                     
இடம்: சென்னை
 
                                                                           கி.வெங்கட்ராமன்

 பொதுச்செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

                                                               



Tuesday, August 21, 2012

சிதம்பரத்தில் தமிழக உழவர் முன்னணி மறியல்200க்கும் மேற்பட்ட உழவர்கள் கைது!


காவிரி நடுவர் மன்ற இடைக்காலத் தீர்ப்பீன்படி கர்நாடகத்திலிருந்து மாதந்தோறூம் நீரைப்பெற தமிழக அரசு தவறியதால் ஏற்பட்ட குறுவை சாகுபடி இழப்புக்கு ஏக்கருக்கு ரூ12,000/- இழப்பீடு கோரி தமிழக உழவர் முன்னணி சிதம்பரம் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு 21.08.2012 காலை 11.30 மணி அளவில் மறியல் போராட்டம் நடத்தினர், உழவர் முன்னணியின் கடலூர் மாவட்டச் செயலாளர் திரு.சி.ஆறுமுகம் தலைமையில் இம்மறியல் போராட்டத்தில் கலந்துக்கொண்ட 200க்கும் மேற்பட்ட உழவர்கள் கைது செய்யப்பட்டனர்.

காவிரி தடுக்கும் கர்நாடகத்திற்கு

பொருளாதார தடை விதித்தும்

இந்திய அரசுக்கு எதிராக

வரி கொடாமை நடத்தியும்

காவிரி நீரைப் பெற்றுத் தராத

தமிழக அரசே! ஜெயா அரசே!

குறுவை காய்ந்து போனதற்கு

நீயே பொறுப்பு! நீயே பொறுப்பு

குறுவை சாகுபடி இழப்புக்கு

ஏக்கருக்கு 12ஆயிரம்

இழப்பீடு உடனே வழங்கு!

தானே புயல் காப்பீட்டு தொகையை

கடனுக்காக பிடித்தம் செய்யாதே

உழவர்களை வஞ்சிக்காதே!

பயீர்க்காப்பீட்டு தொகையினை

முழுமையாக உடனே வழங்கு!

தானே புயலால் பாதித்த

பயீர் கடன் முழுவதையும்

தள்ளுபடி செய்! தள்ளுபடி செய்!

என்ற முழக்கங்களோடு சிதம்பரம் பெரியார் சிலை அருகிலிருந்து தமிழக உழவ்ர் முன்னணியின் எழுச்சி பேரணி புறப்பட்டது.

மாவட்டச் செயலாளர் திரு.சி.ஆறுமுகம் தலைமையில் நடைபெற்ற இப்பேரணியில் மாவட்டத் தலைவர் திரு.அ.கோ.சிவராமன்,மா.கோ.தேவராசன் மற்றும் பொறியாளர் செயபாலன், சரவணன், மதிவாணன், கென்னடி , இராசேந்திரன், நாராயணசாமி, ஆசிரியர் கோவிந்தராசன், பாலன், பொன்னுசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் பங்கேற்றனர்.

பேரணியின் முடிவில் கோட்டாச்சியர் அலுவலகம் முன்பு தரையில் அமர்ந்து மறியல் செய்த உழவர் 200க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.




(செய்தி : த.தே.பொ.க.செய்தி பிரிவு,படங்கள் : அரவிந்தன்)

Monday, August 20, 2012

இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம் வெளியீட்டு விழா தொகுப்பு.


காஞ்சிபுரம் மக்கள் மன்றம் அமைப்பைச் சேர்ந்த 21 வயதான செங்கொடி, கடந்த ஆண்டு ஆகஸ்ட் 28ம் தேதி காஞ்சிபுரம் வட்டாட்சியர் அலுவலகத்தில் தீக்குளித்தார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்கு தண்டனை அறிவிக்கப்பட்ட பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோரை விடுதலை செய்ய வேண்டும் என்று முழக்கமிட்டபடி அவர் இறந்து போனார்.

செங்கொடியின் இறுதி ஊர்வலத்தில் எழுந்த எழுச்சியைக் கண்டு அஞ்சிய தமிழக அரசு, பேரறிவாளன்,முருகன்,சாந்தன் ஆகியோரின் மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டும் என்று சட்டப் பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அதே நாளில் (2011, ஆக.,30) சென்னை உயர்நீதிமன்றம் பேரறிவாளன் உள்ளிட்ட மூன்று பேரின் தூக்கு தண்டனைக்கு இடைக்கால தடை விதித்தது.

செங்கொடியின் மரணத்தைத் தொடர்ந்து நடந்த இந்த நிகழ்வுகளை பின்புலமாகக் கொண்டு மரண தண்டனைக்கு எதிரான ஆவணப்படமாக வே.வெற்றிவேல் சந்திரசேகர் ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’யை உருவாக்கி உள்ளார்.

இந்த ஆவணப்படத்தின் வெளியீட்டு விழா ஆகஸ்ட் 19ம் தேதி ஞாயிற்றுக் கிழமை சென்னை கீழ்ப்பாக்கம் டெய்லர்ஸ் சாலையில் உள்ள டான் போஸ்கோ அரங்கில் நடந்தது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் தலைமை வகிக்க, நடிகர் சத்யராஜ், இயக்குநர் ம.செந்தமிழன், மே 17 இயக்க ஒருங்கிணைப்பாளர் திருமுருகன் காந்தி மற்றும் பேரறிவாளன் தாய் அற்புதம்மாள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

படத்தின் குறுந்தகட்டை நடிகர் சத்யராஜ் வெளியிட, அற்புதம்மாள் பெற்றுக் கொண்டார். அதன்பின்பு, ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ ஆவணப்படம் திரையிடப்பட்டது. சுமார் 57 நிமிடங்கள் ஓடக்கூடிய அந்தப் படத்தை நூற்றுக்கணக்கான பார்வையாளர்களுடன் அமர்ந்து சிறப்பு விருந்தினர்களும் பார்த்தனர். 

இறுதி நிகழ்வாக, ஆவணப்படத்தைப் பற்றி பேசுகையில். 

பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள், “ராஜிவ் காந்தி மரணத்தால் யார் பலனடைந்தார்கள் என்பதை கவனிக்க வேண்டும். பல உண்மைகளை மூடி மறைக்கவே பேரறிவாளன் உள்ளிட்ட அப்பாவிகளை இந்திய அரசு கைது செய்திருக்கிறது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும். இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்படம்  மூலம் செங்கொடி பற்றிய அரிய தகவல்களைத் தெரிந்து கொள்ள முடிந்தது. இனி யாரும் எதற்காகவும் தற்கொலை முயற்சியை மேற்கொள்ளக் கூடாது என்பதை இந்தப் படத்தில் அழுத்தமாக சொல்லி இருக்கிறார்கள்” என்று முடித்துக் கொண்டார்.

திருமுருகன் காந்தி, “தமிழர்களுக்கான ஊடகங்கள் இங்கே இல்லாத நிலையில் இதுபோன்ற தரமான ஆவணப்படங்களை மக்களிடம் கொண்டு சேர்ப்பது அவசர, அவசியம்” என்றார்.

இயக்குநர். ம.செந்தமிழன், “இதுபோன்ற ஆவணப்பட முயற்சிகளை ஊக்குவிக்க வேண்டும். வெறுமே பார்த்து விட்டு செல்லாமல், முடிந்தவரை இந்த ஆவணப்பட குறுந்தகடுகளை வாங்கி விழாக்களில், நிகழ்ச்சிகளில் நண்பர்கள் மற்றும் உறவினர்களுக்குப் பரிசளிக்க வேண்டும். இதுபோன்ற ஆவணப்படங்கள் வணிகரீதியில் வெற்றி பெறவேண்டும்” என்று கேட்டுக் கொண்டார்.

“இப்படிக்கு தோழர் செங்கொடி ஆவணப்பட இயக்குநர் வே.வெற்றிவேல் சந்திரசேகரை அவர் குமுதம் ரிப்போர்ட்டரில் செய்தியாளராக இருந்த போதே அறிவேன். ஈழத்தமிழர்க்கு ஆதரவாக பேசிய வழக்கில் நான் கைது செய்யப்பட இருந்த சில நிமிடங்களுக்கு முன் என்னை பேட்டி கண்டார். அந்தப் பேட்டியின் போது நான் தெரிவித்த நுட்பமான கருத்துகளை மிகக் கவனமாகவும், தைரியமாகவும் பத்திரிகையில் பதிவு செய்திருந்தார்.

அதே அக்கறையோடு இந்தப் படத்தையும் இயக்கியிருக்கிறார். இந்தி எதிர்ப்பு போராட்டங்களில் உயிர்நீத்த தோழர்களுக்கு தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகள் எதுவும் செய்யாத நிலையில், செங்கொடி போன்ற நம் இனத்தின் நாயகி பற்றிய இந்தப் பதிவு நல்ல தொடக்கம்!” என்று பேசினார் பெ.மணியரசன்.

இறுதியாக பேசிய சத்யராஜ், “சினிமாத் துறையைச் சேர்ந்த நான் இந்தப் படத்தின் தொழில்நுட்ப நேர்த்தியை மறந்துவிட்டு, படத்தின் உள்ளடகத்தில் மூழ்கிப் போனேன். அந்தளவுக்கு இந்தப் படத்தில் அரிய தகவல்களைச் சொல்லியிருக்கிறார்கள். குறிப்பாக, செங்கொடி இருளர் சமூகத்தைச் சேர்ந்த பெண் என்பதையொட்டி, இருளர் சமூகம் என்றைக்கும் அனுபவித்து வரும் வேதனைகளைப் பதிவு செய்த விதத்தில் இந்தப் படத்தை முக்கியமான வரலாற்றுப் பதிவாகக் கருத வேண்டியிருக்கிறது” என்றார்.

விழா முடிவில் பெ.மணியரசனும், சத்யராஜும் இப்படிக்கு தோழர் ஆவணப்படத்தை மக்களிடம் கொண்டு சேர்க்கும் விதமாக தலா நூறு குறுந்தகடுக்கான தொகையை (தலா ரூ.10 ஆயிரம்) படக்குழுவினரிடம் வழங்கினார்கள்.

நிறைவாக ஏற்புரையில் ஆவணப்படத்தின் இயக்குநர் வே.வெற்றிவேல் சந்திரசேகர் “சுதந்திர இந்திய வரலாற்றில் சமூக நோக்கத்துக்காக தற்கொலை செய்து கொண்ட முதல் பெண் செங்கொடி. இதுவே அந்தப் பெண்ணைப் பற்றிய ஆவணப்படத்தை எடுக்க என்னைத் தூண்டியது” என்றார். ஆர்.ஜே. இன்பா நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். நியாஷ் அகமது நன்றி நவின்றார். இறுதியாக படத்தில் பணிபுரிந்த தொழில்நுட்ப கலைஞர்களுக்கு சிறப்பு செய்யப்பட்டது. அரங்கம் நிரம்பிய தமிழின உணர்வாளர்கள் குறுந்தகடுகள் வாங்கிச்சென்றனர். இந்த ஆவணப்படம் தொடர்பான மேலும் விவரங்களுக்கு 99941 55339 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.













செங்கொடியின் முதலாம் ஆண்டு நினைவு நிகழ்வையோட்டி பிரஞ்சு தமிழ்ப்பெண்கள் அமைப்பு  வருகிற 25.08.2012 அன்று மாலை 3.30 மணியளவில் ரொக்கன்ரோ (தொடர்வண்டி நிலையம் அருகில்) மணித உரிமை சதுக்கத்தில் “இப்படிக்கு தோழர் செங்கொடி” ஆவணப்படம் வெளியீட்டு படுகிறது.

Thursday, August 16, 2012

அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டம் ஓராண்டு நிறைவிற்கு தோழர் பெ.மணியரசன் வாழ்த்து!

அணுசக்திக்கெதிரான மக்கள் இயக்கத்தின் போராட்டம் ஓராண்டு நிறைவிற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது குறித்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மனித குல கொலைக்களமாக உள்ள கூடங்குளம் அணு உலைகளை தொடங்கக் கூடாது என்று வலியுறுத்தி அணுசக்திகெதிரான மக்கள் இயக்கம் போராட்டம் தொடங்கி நேற்றுடன் ஓராண்டு நிறைவு பெற்று இன்று (16.8.2012) மறு ஆண்டு பிறக்கிறது.

இன்றும் போராட்டம் தொடர்கிறது. இன்றைய நாள் இடிந்தகரை போராளிகளுக்கு போராட்டப்புத்தாண்டு நாளாகும். இந்நாளில் கூடங்குளம் அணு உலையை மூட வலியுறுத்தி கடந்த ஓராண்டாக இடிந்தகரையை தலைமைக் களமாக்கி போராடிக் கொண்டியிருக்கும் மக்கள் அனைவருக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி  சார்பில் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

கூடங்குளம் அணு உலைக்கெதிராகவும் கல்பாக்கம் உள்ளிட்ட அனைத்து அணு உலைகளை  மூட வலியுறுத்தியும் கடந்த ஓராண்டாக நடந்து வரும் தொடர் போராட்டத்தில் தமிழ்த் தேசப்பொதுவுடைமைக் கட்சி தன்னையும் இணைத்துக் கொண்டு இயன்றவரை போராட்டங்களில் பங்கெடுத்துள்ளது. இத்தொடர் போராட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி இனியும்உறுதியாக பங்கேற்கும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

உலகச் சாதனையாக நடைபெறும் இப்போராட்டத்தை தலைமை தாங்கி நட்த்திச் செல்லும் தோழர்கள் உதயகுமார் புஷ்பராயன் உள்ளிட்ட அனைவருக்கும் பங்கெடுத்துக் கொண்டிருக்கும் பல்லாயிரக்கணக்கான மக்களுக்கும் பாராட்டுகள். இப்போராட்டம் தமிழ்மக்களுக்கு புதிய விழிப்புணர்ச்சியை உண்டாக்கியிருக்கிறது.

இந்தியத் துணைக்கண்டம் முழுமைக்கும் ஒரு வெளிச்சத்தைக் காட்டியிருக்கிறது. வருங்காலத்தில் கூடங்குளம் அணு உலை மூடுவதற்கான பெரும் புயல் உருவாவதற்கான அடித்தளத்தைப் போட்டுள்ளது.

அணு உலைக்கு எதிராக மட்டுமின்றி மற்ற மற்ற உரிமைகளுக்காக ஞாயங்களுக்காக போராடுவோர்க்கு ஓர் உந்து விசையும் போராட்ட வடிவமும் வழங்கியிருக்கிறது. இடிந்தகரைப் போராட்டம். கூடங்குளம் அணு உலை இழுத்து மூடப்படும் காலம் வரும்  வெற்றி பெரும் வரை போராடுவோம். போராட்டக்களத்தை விரிவு படுத்து வோம்!

போராளிகளுக்கு மீண்டும் வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறேன்


                                                                  தோழமையுள்ள 
                                                                    பெ.மணியரசன்            
                                                                           

 தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி



 இடம்: சென்னை

Wednesday, August 15, 2012

ஆகத்து 19 – “இப்படிக்கு தோழர் செங்கொடி” ஆவணப்படம் வெளியீட்டு விழா!


ஆகத்து 19 – “இப்படிக்கு தோழர் செங்கொடி” ஆவணப்படம் வெளியீட்டு விழா!

தமிழ் உணர்வாளர்களால் பெரிதும் எதிர்பார்க்கப்படும் ‘இப்படிக்கு தோழர் செங்கொடி’ ஆவணப்படம், வரும் ஆகத்து 19 அன்று வெளியிடப்படுகின்றது.

இராசீவ் காந்தி கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட, பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனையை இரத்து செய்ய வேண்டும் எனக்கோரி, தீக்குளித்து ஈகியான காஞ்சிபுரம் தோழர் செங்கொடியின் வாழ்க்கை வரலாறு “இப்படிக்கு தோழர் செங்கொடி” என்ற பெயரில் ஆவணப்படமாக உருவாக்கப்பட்டுள்ளது.

தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் இதழில் “பொன்னுசாமி” என்ற புனை பெயரில் எழுதி வரும் திரு. வெற்றிவேல் சந்திரசேகர் இந்த ஆவணப்படத்தை இயக்கியுள்ளார். இவர், இயக்குநர் “பாலை“ ம.செந்தமிழனிடம் துணை இயக்குநராக பணியாற்றுகிறார். திரு. மு.நியாஸ் அகமது ஒளிப்பதிவாளராகவும், கவிஞர் கவிபாஸ்கர் பாடலாசிரியராகவும், திரு. ரிச்சர்ட் படத்தொகுப்பாளராகவும் பணியாற்றியுள்ளனர். உணர்வாளர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ஏஸ் சினிமாஸ்(ACE CINEMAS)என்ற நிறுவனம் படத்தை தயாரித்துள்ளது.

இப்படத்தின் வெளியீட்டு விழா, வரும் ஆகத்து 19 அன்று சென்னையில் நடைபெறுகின்றது. சென்னை கீழ்ப்பாகத்தில் அமைந்துள்ள சிகா வளாகத்திலுள்ள டான் போஸ்கோ அரங்கில், மாலை 5 மணிக்கு நடைபெறும் விழாவிற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமையேற்கிறார். திரைப்பட நடிகர் திரு. சத்யராஜ் படத்தை வெளியிட, பேரறிவாளின் தாயார் அற்புதம் அம்மையார் முதற்படி பெற்றுக் கொள்கிறார். திரைப்பட இயக்குனர் “பாலை” ம.செந்தமிழன், மே பதினேழு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் ஆகியோர் கருத்துரை வழங்குகின்றனர்.

நிறைவில், படத்தின் இயக்குனர் திரு. வெற்றிவேல் சந்திரசேகர் ஏற்புரை வழங்குகிறார். படத்தின் ஒளிப்பதிவாளர் திரு. மு.நியாஸ் அகமது நன்றி நவில்கிறார். RJ இன்பா நிகழ்வை தொகுத்து வழங்குகிறார். விழாவின் போது, படம் திரையிடப்படும்.

ஈகி செங்கொடியின் ஈகத்தை, தமிழ்த் தேசிய உணர்வாளர்களும், சனநாயக சக்திகளும் அவரவர்களது பகுதிகளிலும், இல்லங்களிலும் பரப்புரை செய்ய வேண்டும். அதற்கு இந்த ஆவணப்படத்தை நாம் கருவியாகக் கருதி, ஆதரிக்க வேண்டும். இப்படத்தின் வெளியீட்டு விழாவில், பெருந்திரளான உணர்வாளர்கள் கலந்து கொள்ள வேண்டும்.



(செய்தி: த.தே.பொ.க., செய்திப் பிரிவு, இணைப்பு: வெளியீட்டு விழா அழைப்பிதழ்)

Friday, August 10, 2012

நெய்வேலி அனல்மின் நிலையத் தலைமையகம் முற்றுகை த.தே.பொ.க தோழர்கள் 300க்கும் மேற்பட்டோர் கைது


காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்லக் கூடாது
நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமையகம் முன்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி முற்றுகைப் போராட்டம்!
300 க்கும் மேற்பட்டோர் கைது


காவிரி  நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழகத்திலிருந்து மின்சாரம் செல்லக் கூடாதென வலியுறுத்தி நெய்வேலி அனல் மின்நிலையத் தலைமையகத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தோழர்கள் முற்றுகையிட்டனர். 300க்கும் மேற் பட்டோர் கைது.

10.8.2012. இன்று காலை 10 மணி அளவில் நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமைகத்தை நோக்கி  பெருந்திரளானத் தோழர்கள்  “அனுமதியோம்! அனுமதியோம்! காவிரியைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு நெய்வேலி மின்சாரத்தை அனுமதியோம் ! என உணர்ச்சிப் முழக்கமிட்டவாறு , தமிழ்த் தேசப் பொதுவு டைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் பெரும் பேரணியாக புறப்பட்டுச் சென்றனர்.

ஆவேச முழக்கத்தோடு தலைமை நிறுவனத்தை முற்றுகையிடும் நிலையில், காவல் துறையினர்  இடைமறித்தனர்.  காவல்துறையினருடன் த.தே.பொ.க தோழர்கள் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். இருந்தும் பல தோழர்கள் உணர்ச்சி முழக்கமெழுப்பி  தலைமையகத்தை நோக்கி முன்னேறிச்  சென்றனர். பிறகு காவல்துறையினர் தலைமை நிலைய வாயிலில்  300க்கும் மேற்பட்ட தோழர்களை கைது செய்தனர்.

பெண்கள், இளைஞர்கள் என பெருந்திரளாகக் கூடிய இந்த முற்றுகையில் த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள், தோழர்கள் குழ.பால்ராசு, ஓசூர் மாரிமுத்து, பழ.இராசேந்திரன், பா.தமிழரசன், க.அருணபாரதி, ஆ.ஆனந்தன், தமிழக இளைஞர்முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, த.தே.பொ.க பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர்கள் மா.கோ.தேவராசன், மு.தமிழ்மணி, ஈரோடு இளங்கோவன், இராசுமுனியாண்டி (தஞ்சை நகரச்செயலாளர், த.தே.பொ.க), பெண்ணாடம் முருகன், ஓசூர் நடவரசன், க.ரா. முத்துச்சாமி (திருப்பூர் இயற்கை வாழ்வகம்) இராசையா உள்ளிட்ட திரளான தோழர்கள் கைதாயினர்.


             (செய்தி த.தே.பொ.க செய்திப் பிரிவு, படங்கள் அரவிந்தன்)

Thursday, August 9, 2012

“காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்ல அனுமதிக்க மாட்டோம்” பெ.மணியரசன் பேட்டி


“காவிரி நீரைத் தடுக்கும் கர்நாடகத்திற்கு தமிழக மின்சாரம் செல்ல அனுமதிக்க மாட்டோம்” என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், ஆகத்து 10 நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமை நிறுவன முற்றுகைப் போராட்டம் குறித்தான செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார். 

காவிரி நீர் மறுக்கும் கர்நாடகாவுக்கு நெய்வேலி மின்சாரத்தை தடுப்போம் என வலியுறுத்தி, நெய்வேலி அனல் மின் நிலையத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டத்தை ஆகத்து 10 அன்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்தவுள்ளது. இப்போராட்டம் குறித்து விளக்குவதற்காக 08.08.2012 அன்று காலை 11 மணியளவில், சென்னை சேப்பாக்கம் பத்திரிக்கையாளர் மன்றத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட, செய்தியாளர் சந்திப்பு நிகழ்வில் பேசிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “கர்நாடகத்தில் காவிரி ஆற்றைச் சேர்ந்த கிருஷ்ணராஜ அணையின் மொத்த உயரம்  120-அடி. இன்றைய நிலவரப்படி அதில் 119-அடி தண்ணீர் உள்ளது. கபினி அணையின் மொத்தக் கொள்ளளவு 16.6 டி.எம்.சி. அதில் இன்றைய நிலவரப்படி 15 டி.எம்.சி. தண்ணீர் உள்ளது. ஹேமாவதி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 2922-அடி. அதில் இன்று 2890 அடி தண்ணீர் உள்ளது. ஏரங்கி அணையின் மொத்த உயரம் கடல் மட்டத்திலிருந்து 2859 அடி அது அன்றே நிரம்பி 4.08.2012 மிச்ச நீர் வெளியேறிக் கொண்டிருக்கிறது. கர்நாடகத்தில் இந்த அளவு தண்ணீர் இருந்தும் காவிரி தீர்ப்பாயத்தின்  இடைக் காலத் தீர்ப்பின் படி சூன் மாதம் தர வேண்டிய 10.16 டி.எம்.சி. தண்ணீரும் தரவில்லை. சூலையில் தர வேண்டிய 42.76 டி.எம்.சி. தண்ணீரும் தரவில்லை. ஆகத்து மாதம் முதல் வாரத்தில் தர வேண்டிய 13.5 டி.எம்.சி. தண்ணீரும் தரவில்லை. 

எனவே, கர்நாடகத்தில் பருவ மழை பொய்த்துவிட்டது, அணைகள் வறண்டு கிடக்கின்றன என்ற கூற்றுதான் பொய். அணைகள் நிரம்பி உடையும் ஆபத்து ஏற்பட்டால் மட்டுமே, தனது அணையின் தற்காப்புக் கருதி கர்நாடகம் மிச்ச நீரை வெளியேற்றும் உத்தியை கடந்த பல ஆண்டுகளாக கடைபிடித்து வருகிறது. சூன் – சூலை மாதங்களில் குறைந்த அளவாக 25 டி.எம்.சி. தண்ணீர் கொடுத்திருந்தால் கூட காவிரி பாசனம் மாவட்டங்களில் குறுவை சாகுபடி செய்திருக்க முடியும்.

மத்திய அரசின் நீர்வளத்துறைக்கு மேலே குறிப்பிட்ட புள்ளி விவரங்கள் அனைத்தும் அன்றாடம் போய்க் கொண்டிருக்கின்றன. இந்த உண்மைகள் தெரிந்தும் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பை, மாநிலங்களுக்கிடையிலான தண்ணீர் தகராறு சட்டம் 1956-ன்படி செயல்படுத்தித் தர வேண்டிய பொறுப்பும் அதிகாரமும் இருந்தும் சட்டத்தை நிலைநாட்ட மறுக்கிறது. தமிழக முதலமைச்சர் கேட்டுக் கொண்டும் பிரதமர் தலைமையிலான காவிரி ஆணையத்தைக் கூட்ட மத்திய அரசு மறுக்கிறது. மத்திய அரசை நம்பியும் பயனில்லை சட்டத்தை நம்பியும் பயனில்லை என்ற அவலமே தமிழ்நாட்டிற்கு மிஞ்சியுள்ளது. 

கர்நாடகம் பல்வேறு பொருளாதார நிலைகளுக்கு தமிழ்நாட்டைச் சார்ந்துள்ளது. குறிப்பாக நெய்வேலி அனல் மின் நிலையத்திலிருந்து ஒரு நாளைக்கு 11 கோடி யூனிட் மின்சாரம் கர்நாடகத்திற்கு போகிறது. கர்நாடகத்தின் வளர்ச்சி தமிழ்நாட்டைச் சார்ந்துள்ளது என்ற உண்மையை எடுத்துக்காட்ட கர்நாடகத்திற்கு செல்லும் நெய்வேலி மின்சாரத்தை நிறுத்தும் போராட்டத்தை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 10.08.2012 அன்று நடத்துகிறது. 

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைமையில் அன்று காலை 10 மணிக்கு, கர்நாடகம் செல்லும் மின்சாரத்தை நிறுத்த வலியுறுத்தி நெய்வேலியில் அனல் மின் நிறுவனத் தலைமையகத்தை முற்றுகையிடும் போராட்டம் நடக்கிறது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலிருந்தும் த.தே.பொ.க. தோழர்களும், உழவர்களும் கலந்து கொள்கிறார்கள். தமிழ் மக்கள் அனைவரும் கட்சி வேறுபாடின்றி இதில் கலந்து கொள்ளுமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றேன்“ என பேசினார்.

சந்திப்பின் போது, த.தே.பொ.க. மூத்தத் தோழர் இரா.கோவிந்தசாமி, தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணோட்டம் ஆசிரியர் குழு உறுப்பினர் கவிஞர் கவிபாஸ்கர், த.தே.பொ.க. தலைமையக் செயலர் தோழர் கோபிநாத் உள்ளிட்டோர் உடனிருந்தனர். 



(செய்தி: த.தே.பொ.க. தலைமைச் செயலகம், படங்கள்: பாலா)

Sunday, August 5, 2012

ஆகத்து – 6 –ஹிரோசிமா நாளில் த.தே.பொ.க. சார்பில் அணுசக்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள்!


ஆகத்து 6 ஹிரோசிமா நாளில் த.தே.பொ.க. சார்பில் அணுசக்திக்கெதிரான ஆர்ப்பாட்டங்கள்!

1945ஆம் ஆண்டு ஆகஸ்ட்டு 6 அன்று ஜப்பான் நகரின் ஹிரோசிமாவிலும், ஆகஸ்ட்டு 9 நாகசாகி நகரின் மீதும் அமெரிக்க வல்லரசு அணுகுண்டு வீசி பல இலட்சக்கணக்கான மக்களை ஒரே நொடியில் கொன்றொழித்தது. பல்லாண்டுகள் ஆன பிறகும், இன்றுவரை அப்பகுதி மக்கள் அந்த அணுகுண்டு வீச்சின் கதிர்வீச்சுத் தாக்கத்தை வலியுடன் அனுபவித்து வருகின்றனர்.

வெடிக்கும் போது மட்டுமின்றி, துகள்களாகவும், கதிர்வீச்சாகவும் பல்லாண்டுகள் அழியாது தங்கி மனிதர்களைக் மெதுவாகக் கொன்றொழிக்கும் வல்லமை படைத்தவையே அணுசக்தியாகும். எனவே, ஹிரோசிமா நாளான ஆகஸ்ட்டு 6ஆம் நாளை, அணுசக்தியின் கொடூரக் கரங்களால் மறைந்த மக்களுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும், அணுசக்தி இல்லாத உலகம் அமைய உறுதியேற்கும் வகையிலும் நாம் கடைபிடிக்க வேண்டும்.

இந்நாளில், தமிழகத்திலுள்ள கல்பாக்கம் கூடங்குளம் அணுஉலைகளை நிரந்தரமாக இழுத்து மூட வலியுறுத்தியும், கூடங்குளம் அணுஉலையைத் திறக்கக் கூடாதென அறவழியில் போராடும் மக்களுக்கு ஆதரவுத் தெரிவித்து கரம் கொடுக்கும் வகையிலும், சென்னை – கோவை – ஓசூர் நகரங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் விழிப்புணர்வு நிகழ்வுகள் நடைபெறுகின்றன.

சென்னை
சென்னையில் தியாகராயர் நகர் தென் மேற்கு போக் சாலை – மதுரை வீரன் கோயில் தெரு சந்திப்பு அருகில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 06.08.2012 அன்று மாலை 6 மணியளவில் ஹிரோசிமா நாள் வீரவணக்கத் தெருமுனைக் கூட்டம் நடைபெறுகின்றது. கூட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி தலைமையேற்கிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் வரவேற்புரையாற்றுகிறார். பெரியார் திராவிடர் கழகச் செயற்குழு உறுப்பினர் தோழர் அன்பு தனசேகரன், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி, தமிழக இளைஞர் எழுச்சிப் பாசறை ஒருங்கிணைப்பாளர் தோழர் அருண்சோரி, தமிழ்த் தேச மாணவர் இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் இளையராசா, தமிழக இளைஞர் முன்னணி குன்றத்தூர் கிளை அமைப்பாளர் தோழர் சரவணன் ஆகியோர் உரை நிகழ்த்துகின்றனர். நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் சிறப்புரை வழங்குகிறார். தாம்பரம் த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்க்கனல் நன்றி நவில்கிறார்.

கோவை
கோவையில், 06.08.2012 அன்று மாலை செஞ்சிலுவை சங்கம் அருகில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஹிரோசிமா நினைவு நாளையொட்டி, அணுக்கதிர் வீச்சு ஆபத்தை விளைவிக்கும் தமிழகத்திலுள்ள கூடங்குளம்  கல்பாக்கம் அணுஉலைகளை இழுத்து மூடக் கோரி ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பா.தமிழரசன் தலைமையேற்கிறார். தமிழக இளைஞர் முன்னணி நகரச் செயலாளர் தோழர் பா.சங்கர வடிவேர், கிளைச் செயலாளர்கள் தோழர் கு.இராசேசுக்குமார், பிறை.சுரேசு, இரா.கண்ணன் உள்ளிட்டோர் உரையாற்றுகின்றனர்.

ஓசூர்
ஓசூரில், அணுசக்திக்கு எதிரானக் கூட்டியக்கம் சார்பில் 06.08.2012 அன்று மாலை 5 மணிக்கு, ஹிரோசிமா நினைவு நாளையொட்டி, அணுகுண்டுகளை உற்பத்தி செய்யப் பயன்படும் அணுஉலைகளை இழத்து மூடுக என வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறுகின்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் நடவரசன் தலைமையேற்கிறார். பெரியார் தி.க.  மாவட்டத் தலைவர் தோழர் குமார், தமிழர் தேசிய இயக்கம் மாவட்டத் தலைவர் திரு. முருகேசன், விடுதலை சிறுத்தைகள் மாவட்டச் செயலாளர் திரு. செந்தமிழ்,  ம.தி.மு.க. நகரச் செயலாளர் தோழர் பி.வெள்ளைச்சாமி, பா.ம.க. மாவட்டச் செயலாளர் திரு. தே.அருண்ராஜன், தமிழக மக்கள் விடுதலை முன்னணி அமைப்பாளர் தோழர் ஒப்புரவாளன், மனித உரிமைப் பாதுகாப்பு இயக்கம் ஒருங்கிணைப்பாளர் திரு. க.மா.இளவரசன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்துகின்றனர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து பேசுகிறார்.

மின்தேவைக்குத் தான் அணுஉலை என இந்திய அரசுக் கட்டமைக்கும் மாயத் தோற்றத்தைப் புறந்தள்ளுவோம்! காவிரி முல்லைப் பெரியாறு சிறுவாணி பாலாறு என தமிழகத்திற்கு ஆற்றுநீரைத் தடுக்க முயலும் அண்டை மாநிலங்களுக்கு, நெய்வேலி அனல் மின்நிலையத்திலிருந்து செல்லும் மின்சாரத்தைத் தடுத்து, தமிழகத்தின் மின்தேவையைப் நிறைவு செய்யப் போராடுவோம்! “ஆபத்தில்லாத புற்றுநோய் இல்லை! ஆபத்தில்லாத அணுஉலை இல்லை!என்று முழங்குவோம்!

“இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் இந்திய அரசே ஆகும்” – தோழர் பெ.மணியரசன் பேச்சு!


“இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் இந்திய அரசே ஆகும்” – தோழர் பெ.மணியரசன் பேச்சு!

சர்வதேச நாடுகள் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கக் கோரியும், தமிழ் ஈழம் பற்றி பேசக்கூடாது என மிரட்டும் இந்திய அரசை கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் சென்னையில் இன்று(04.08.2012) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு, மாலை 4 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்று, தமிழக மக்கள் உரிமைக் கழகம் செயலாளர் வழக்கறிஞர் பா.புகழேந்தி அவர்கள் கண்டன உரையாற்றினார். “தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை தமிழின உணர்வாளர்களை அச்சுறுத்த முயலும் நடவடிக்கையே” என அவர் விளக்கிப் பேசினார்.

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ் நேயன், தமிழ்த் தேசிய முன்னணி அமைப்பாளர் வழக்கறிஞர் பாவேந்தன், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் திரு. தடா.ஜெ.அப்துல் ரகீம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்க அமைப்பாளர் திரு. தெய்வமணி, தமிழக மக்கள் தொழிலாளர் முன்னணி தோழர் செந்தமிழ்க்குமரன், தமிழ் காப்போம் இயக்கம்(சேவ் தமிழ்ஸ்) திரு. இளங்கோவன், தமிழர் கழக அமைப்பாளர் திரு. மணிகண்டன், தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான், தமிழக மக்கள் உரிமைக் கழக இணைச் செயலாளர் தோழர் இளங்கோவன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.







இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை வெறும் இந்திய அரசின் நடவடிக்கை மட்டும் அல்ல. தமிழக அரசின் உளவுத்துறையின் அறிக்கையையும் இணைத்தே அத்தடை தீர்மானிக்கப்படுகின்றது. புலிகள் மீதான தடை நீட்டிப்பில், செயலலிதா – கருணாநிதி அரசுகளுக்கிடையே எவ்வித வேறுபாடும் கிடையாது. தீர்ப்பாயத்தற்கு இரண்டு அரசுகளும், புலிகள் மீதான தடையை நீட்டிக்கவே செயல்பட்டுள்ளன.


தமிழீழம் இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானது என்று கூறி, தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படமாட்டோம் என்றும், தமிழீழம் இந்தியாவிற்கு நட்பு சக்தியாகவேத் திகழும் என்றும் இந்தியப் பெருங்கடலில் வல்லாதிக்க அரசுகளின் ஆதிக்கமில்லாமல் தடுப்போம் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் பலமுறை அறிவித்தனர்.

ஆனாலும், ஆரிய இனச்சார்பு கொண்ட இந்திய அரசு, நட்பாக இருப்போம் என்று அறிவித்த ஈழ விடுதலைப் போராட்டத்தை அழியவே துணை நின்றது. இதுவரை இந்தியச் சீனப் போரிலும், வங்காள தேச விடுதலைப் போரிலும், இந்தியாவிற்கு உதவாத சிங்களனா, இந்தியாவை நேசிக்கின்ற ஈழத்தமிழனா என்று வந்தால், இருவரில் சிங்களனையே இந்திய அரசு நம்பும். அதே போல், இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையில் ஆதிக்க வலைவிரித்திருக்கும் சீன அரசின் தந்திரங்கள் இந்திய அரசுக்குத் தெரியும். இருந்தும், முதலில் எதிர்க்கப்பட வேண்டியவர்கள், தமிழர்களா, சீனாவா என்றால், தமிழர்களையே தேர்ந்தெடுக்கும் இந்திய அரசு. அந்தளவிற்கு, தமிழர்களை தனது இனப்பகை சக்தியாகவே இந்திய அரசு கருதுகிறது.

உண்மையில், இந்திய இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் தமிழீழமா அழித்து விடப்போகிறது? இல்லை. இந்திய அரசு தான் இந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் தானே அழிக்க முன் நிற்கிறது. காவிரியில் கன்னடன் பக்கம் நின்று தமிழினத்தை வஞ்சிப்பது, முல்லைப் பெரியாறு – பாலாறு சிக்கலில் தமிழினத்திற்கு எதிராக நிற்பது, கச்சத்தீவை சிங்களனுக்குத் தாரை வார்ப்பது, தமிழக மீனவர்களை சிங்களன் சுட்டுக் கொல்லத் துணை நிற்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்திய அரசு தான், தமிழ்நாட்டுத் தமிழன் நெஞ்சிலும், தமிழச்சி நெஞ்சிலும் இந்தியாவிலிருந்து பிரிந்தால் தான் நமக்கு வாழ்வு உண்டு என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாடு விடுதலையை விடுதலைப்புலிகள் தூண்டவில்லை. இந்திய அரசே தூண்டுகிறது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு முதல் எதிரியாக உள்ளது, இந்திய அரசேத் தவிர தமிழீழம் அல்ல. ” என பேசினார்.

(செய்தி – த.தே.பொ.க செய்திப் பிரிவு, படங்கள் – பாலா)

Friday, August 3, 2012

புதுக்கோட்டை கீரனூரில் த.தே.பொ.க. தோழர் ஆரோக்கியசாமி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க.வினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!


புதுக்கோட்டை கீரனூரில் த.தே.பொ.க. தோழர் ஆரோக்கியசாமி மீது கொலைவெறித் தாக்குதல் நடத்திய தி.மு.க.வினரைக் கண்டித்து ஆர்ப்பாட்டம்!

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டம் குன்றாண்டார் கோயில் ஒன்றியச் செயலாளரும், கட்சியின் தலைமைப் பொதுக்குழு உறுப்பினருமான தோழர் சி.ஆரோக்கியசாமி மீது அப்பகுதி தி.மு.க. பிரமுகரான  செல்ப்பாண்டியன் என்பவர் தனது அடியாட்களைக் கொண்டு கொலைவெறித் தாக்குதல் நடத்தியுள்ளார். தி.மு.க.வினரின் கொடுஞ்செயலைக் கண்டித்து, 31.07.2012 அன்று கீரனூரில் த.தே.பொ.க. சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கீரனூர் பகுதி தி.மு.க பிரமுகரான செல்லப்பாண்டியன், பினாமி பெயர்களில் ஒப்பந்தம் எடுத்து தார்ச்சாலை போட்டு வந்ததில், சரிவர சரளைக் கற்களை (கறுங்கல் ஜல்லி) போடாமல் தரமற்ற தார்ச் சாலைகள் போட்டு வந்தார். இத்தரமற்ற சாலைகள் தொடர் வாகனப் போக்குவரத்திற்கோ, ஒரு மழைக்கோ கூட தாங்கக்கூடியதாக இல்லை. மக்களின் வரிப்பணம் இவ்வாறு வீணாவதை சுட்டிக்காட்டி தி.மு.க பிரமுகர் செல்லப்பாண்டியனின் மேற்கண்ட ஊழல் நடவடிக்கையை அவ்வட்ட வருவாய்த் துறை, பொதுப்பணித்துறை அதிகாரிகள், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் கவனத்திற்கு கொண்டுசெல்லும் வகையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுக்குழு உறுப்பினர் தோழர்  சி.ஆரோக்கியசாமி புகார் மனுக்களை அளித்தார்.

அதேபோல் மேற்படி செல்லப்பாண்டியன் அரசின் அனுமதியின்றி பாசன ஏரியிலிருந்து செம்மண் சரளைகளை (Gravel) லாரி லாரியாக அள்ளிச்சென்றிருக்கிறார். இதுகுறித்தும் புதுக்கோட்டை மாவட்ட அரசு அதிகாரிகளுக்கு தோழர் சி.ஆரோக்கியசாமி புகார் மனு அளித்திருக்கிறார்.

இதனால் ஆத்திரமுற்ற தி.மு.க பிரமுகரான க.செல்லப்பாண்டியன் கடந்த 23.07.2012 திங்களன்று காலை கீரனூரில் அவரது வீட்டிலிருந்த தோழர் சி.ஆரோக்கியசாமியை ஏதோ பேச அழைப்பது போல் வெளியில் அழைத்து வந்து, அடியாட்களை கொண்டு கொலைவெறித்தனத்தொடு தாக்கினார். இந்நிகழ்வைத் தொடர்ந்து, 23.07.2012 அன்று மாலையே கீரனூர் காவல் நிலையத்தில் தோழர் ஆரோக்கியசாமி தான் தாக்கப்பட்டது குறித்த புகார் மனு அளித்தார்.

இப்புகார் மனு குறித்து விசாரிப்பதற்காக காவல்நிலைய துணை ஆய்வாளர்,  செல்லப்பாண்டியனை காவல்நிலையத்திற்கு வருமாறு அழைத்த போது,  வரும் போதே 30க்கும் மேற்பட்ட ஆட்களுடன் கூச்சல்களோடு காவல்நிலையத்திற்குள் நுழைந்து அங்கிருந்த காவல் துணை ஆய்வாளரையே மிரட்டும் வகையில்,  “எப்.ஐ.ஆர். போட்டால் போட்டுக் கொள்ளுங்கள். நான் மேலே பார்த்து கொள்கிறேன்”  என அதிகாரத்தமிருடன் பேசினார்.  


இதற்கு பிறகு பின் யோசனையாக செல்லப்பாண்டியன் தனது ஆள் ஒருவர் மூலம் இட்டுக்கட்டிய பொய் புகார் ஒன்றை தோழர் சி.ஆரோக்கியசாமியின் மீதே  காவல்நிலையத்தில் அளித்தார்.

இந்நிலையில் 25.07.2012 அன்று, தோழர் சி.ஆரோக்கியசாமி தலைமையில்  த.தே.பொ.க. தோழர்கள் காவல்துறை துணை கண்காணிப்பாளரைச் சந்தித்து மேல்முறையீடு செய்துவிட்டு வந்தபிறகு, கீரனூர் கடைத் தெருவில் நடந்து சென்று கொண்டிருந்த தோழர் ஆரோக்கியசாமி அவர்களை ஒரு மகிழுந்தில் வந்த கும்பல் வலுவந்தமாக இழுத்துக் காரில் கடத்த முயன்றனர். காரில் வந்த தி.மு.க. செல்லப்பாண்டியனின் ஆட்கள் முருகேசன், ரமேஷ் ஆகிய இருவரும் ஆரோக்கியசாமியை பிடித்து இழுத்து காருக்குள் தள்ள முயன்றனர். அவர்களிடமிருந்து தப்பித்த ஆரோக்கியசாமி பக்கத்தில் இருந்த ஒரு மெடிக்கல் கடையில் தஞ்சமடைந்தார். அங்கிருந்தபடியே, காவல் நிலையத்திற்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்தார். கொலை வெறியோடு கடைத் தெருவிலேயே காத்திருந்த மேற்படி கும்பல் காவல்துறையினர் வந்ததைப் பார்த்து காரில் விரைந்து வெளியேறினர்.

கொலை மிரட்டல் தொடர்பாக புகார் அளித்த பிறகும் அதுவும் காவல் நிலையத்திற்குள் துணை ஆய்வாளர் முன்னிலையிலேயே மிரட்டல் விடுத்து அராஜகம் செய்த பின்னும் இரண்டு நாட்களாக தி.மு.க பிரமுகர் செல்லப்பாண்டியன்  மற்றும் அவர்கள் ஆட்கள் மீது காவல்துறை எந்த நடவடிக்கையையும் மேற்கொள்ளாததால் தான் மேற்படி செல்லப்பாண்டியன் ஆட்கள் துணிச்சல்பெற்று பட்டப்பகலிலேயே கீரனூர் கடைத்தெருவில் தோழர் ஆரோக்கியசாமியை காரில் கடத்தி கொலை செய்ய முயன்றுள்ளனர்.

தி.மு.க.வினரின் வன்முறைச் செயல்களைக் கண்டித்து 31.07.2012 அன்று கீரனூர் தேரடி திடலில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. குன்றாண்டார் ஒன்றிய அமைப்பாளர் தோழர் பெ.லெட்சுமணன் தலைமையேற்றார். மக்கள் உரிமை பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர்  த.பானுமதித.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் குழ.பால்ராசு, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன், த.தே.பொ.க. தஞ்சை மாவட்ட செயற்குழு உறுப்பினர் தோழர் ரெ.கருணாநீதி, பூதலூர் ஒன்றிய தமிழக இளைஞர் முன்னணித் தலைவர் தோழர் அ.தேவதாசு உள்ளிட்டோர் கண்டன உரையாற்றினர். தோழர் லெ.திருப்பதி நன்றி நவின்றார்.




இக் கண்டன ஆர்ப்பட்டத்தில், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, த.தே.பொ.க. தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இராசு.முணியாண்டி, துணைச் செயலாளர் தமிழ்ச்செல்வன்திருச்சி த.தே.பொ.க. செயலாளர் கவித்துவன், வழக்கறிஞர் கரிகாலன், த.இ.மு. முன்னணித் தோழர்கள் செந்தில்குமார், ந.கருப்புசாமிச.காமராசுரமேசுதச்சனாமூர்த்திசெபஸ்டின்உள்ளிட்ட 200க்கும் மேற்பட்ட தோழர்கள் கலந்து கொண்டனர்.

(செய்தி – த.தே.பொ.க செய்திப் பிரிவு, படங்கள் – ஸ்டாலின்)

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT