உடனடிச்செய்திகள்

Tuesday, July 7, 2020

அரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும் மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும் சட்டம் பிறப்பிக்க வேண்டும்!


ரியானா அரசைப் போல தமிழ்நாடு அரசும்
மண்ணின் மக்களுக்கே வேலை வழங்கும்
சட்டம் பிறப்பிக்க வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!

அரியானா மாநில மண்ணின் மக்களுக்கே தனியார் நிறுவனங்களில் 75 விழுக்காடு வேலை வாய்ப்பு வழங்கப்படும் என வலியுறுத்தும் அவசரச் சட்டம் ஒன்றை பிறப்பிப்பது என அம்மாநில முதலமைச்சர் மோகன்லால் கட்டார் தலைமையில் 06.07.2020 அன்று கூடிய அமைச்சரவைக் கூட்டம் முடிவு செய்தது.

உள்ளூர் மக்களுக்கான இந்த இடஒதுக்கீட்டைப் பின்பற்றாத தனியார் நிறுவனங்கள் மீது குற்றவியல் நடவடிக்கை எடுப்பதற்கும் இந்த அவசரச் சட்ட வரைவில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த இடஒதுக்கீட்டின் பயன்கள் அரியானா மாநிலத்தின் எல்லா மாவட்டங்களுக்கும் பரவலாகக் கிடைக்கும் வகையில், அதற்குள் உள் ஒதுக்கீடு ஏற்பாடும் இச்சட்ட வரைவில் செய்யப்பட்டிருக்கிறது.

ஏற்கெனவே ஆந்திரா, கர்நாடகா, குசராத் உள்ளிட்ட பெரும்பாலான மாநிலங்களில் அரசுத் துறை வேலைவாய்ப்பிலும், தனியார் வேலைவாய்ப்பிலும் அந்தந்த மாநில மக்களுக்கே முன்னுரிமை ஒதுக்கீடு வழங்கும் வகையில் சட்டங்கள் இயற்றப்பட்டிருக்கின்றன.

தமிழ்நாட்டில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களிலும், தனியார் நிறுவனங்களிலும் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழ்நாடு அரசில் 100க்கு 100 வேலை வாய்ப்பும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்று வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் 2018 பிப்ரவரி 3 அன்று சென்னையில் எழுச்சிமிகு மாநாடு நடத்தியது. அம்மாநாட்டின் முடிவுக்கிணங்க அணியப்படுத்தப்பட்ட மாதிரி வரைவுச் சட்டத்தை, பேரியக்கத்தின் தலைவர் தோழர் பெ. மணியரசன் தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடம் 11.02.2018 அன்று நேரில் வழங்கினார்.

இக்கோரிக்கையை வலியுறுத்தி, தமிழ்த்தேசியப் பேரியக்கம் பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்தி வருகிறது. பேரியக்கம் முன்வைத்த இக்கோரிக்கையை தி.மு.க. உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சிகளும் ஆதரித்துத் தீர்மானங்கள் நிறைவேற்றின.

தமிழ்நாடு அரசு, இனியும் தாமதிக்காமல் தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு மற்றும் தனியார் நிறுவனங்களில் 90 விழுக்காடு வேலைவாய்ப்பும், தமிழ்நாடு அரசின் அனைத்துத் துறை வேலைவாய்ப்புகளில் 100க்கு 100-ம் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டுமென்று அரியானாவைப் போல், உடனடியாக அவசரச்சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

அதேபோல், இன்று வெளிமாநிலத் தொழிலாளர்கள் அவரவர் மாநிலத்திற்கு வந்துவிட்ட நிலையில், தமிழ்நாட்டு நிறுவனங்களின் முறைசாரா வேலைவாய்ப்புகள் அனைத்தும் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்கும் வகையில், “தமிழ்நாடு அமைப்புசாரா வேலை வழங்கு வாரியம்” அமைக்கும் அவசரச்சட்டத்தையும் உடனடியாகப் பிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

தமிழின வரலாற்றில் தடம் பதித்தவர் மன்னர்மன்னன் பாரதிதாசன்! பெ. மணியரசன் இரங்கல்!


தமிழின வரலாற்றில் தடம் பதித்தவர்
மன்னர்மன்னன் பாரதிதாசன்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் இரங்கல்!

பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் மகன் மன்னர்மன்னன், பாவேந்தரின் தொடர் அடையாளமாய் வாழ்ந்தவர். பாவேந்தர் வரலாற்று நூலும் பல்வேறு இலக்கிய நூல்களும் எழுதியவர். பாவேந்தருக்கு இருந்த பரந்த செல்வாக்கு மண்டலத்துடன், தொடர்ந்து தொடர்பு வைத்து உயிரோட்டமாக பாவேந்தரின் தொடர்ச்சியை எடுத்துச் சென்றவர்.
தமிழ் – தமிழினம் இரண்டுக்கும் முதன்மை கொடுத்து சிந்தித்தவர்; செயல்பட்டவர். தன் மகனுக்கு கோபதி என்று இருந்த பெயரை மன்னர்மன்னன் என்று தூயதமிழாக்கியவர் பாவேந்தர். அதன்பிறகு, தமிழ் கூறும் நல்லுலகில் மன்னர்மன்னன் என்று பெயர் வைப்பது இயல்பாயிற்று!
இவ்வாறு, பல்வேறு வகைகளில், தமிழின வரலாற்றில் தடம் பதித்த மன்னர்மன்னன் அவர்களின் மறைவு பெரும் துயரமளிக்கிறது. ஐயா அவர்களின் மறைவுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, July 2, 2020

உழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள் மறைவுக்கு இரங்கல்! பெ. மணியரசன்


உழவர் இயக்கத் தலைவர் புலியூர் நாகராசன் அவர்கள்
மறைவுக்கு இரங்கல்!

ஐயா பெ. மணியரசன்
ஒருங்கிணைப்பாளர் - காவிரி உரிமை மீட்புக் குழு.

உழவர் இயக்கத் தலைவர் ஐயா புலியூர் நாகராசன் அவர்கள் இன்று (2.7.2020)இயற்கை எய்திய செய்தி அறிந்து மிக மிக வேதனையுறுகிறேன்.தமிழ்மாநிலக் காங்கிரசு விவசாய அணி மாநிலத் தலைவராக இருந்து மிகவும் சுறுசுறுப்பாக உழவர்கள் உரிமைகளுக்காகவும்,காவிரி உரிமை மீட்புக்காகவும் தொடர்ந்து போராடிவந்தார்.

காவிரி உரிமை மீட்புக் குழு நடத்திய போராட்டங்களில் பங்கு எடுத்துள்ளார்.காவிரித் தீர்ப்பாயம் வழங்கிய இறுதித் தீர்ப்பை இரத்து செய்து, புதிதாக அமைக்கவுள்ள அனைத்திந்திய ஒற்றைத் தீா்ப்பாயத்தில் புதிய வழக்காக விசாரிக்க அனுப்புவது என்று இந்திய அரசு எடுத்த முடிவைக் கை விட வலியுறுத்தி 2017 மார்ச் 28 லிருந்து ஏப்ரல் 15வரை 19 நாள் இரவு,பகலாக என் தலைமையில் காவிரி உரிமை மீட்புக் குழுவின் உறுப்பு அமைப்புகள்,தஞ்சை மாவட்ட ஆட்சியர் அலுவலக வாயில் முன்பாக நடத்திய காத்திருப்புப் போராட்டத்தைத் தமது இயக்க உழவர்களுடன் வந்து ஆர்ப்பாட்டம் நடத்தி ஆதரித்தார். அதேவேளை த.மா.கா தலைவர் ஐயா ஜி.கே வாசன் அவர்களும் தமது கட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் வந்து வாழ்த்தினார்.

குறைந்த அகவையில் நாகராசன் அவர்கள் உயிரைக் கொடு நோய் பறித்தது கொடுமையிலும் கொடுமை. புலியூர் நாகராசன் அவா்கள் மறைவுக்கு ஆழந்த வருத்தத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரின் இல்லத்தார்க்கும், இயக்கத்தார்க்கும் கனத்த நெஞ்சுடன் ஆறுதல் கூறிக் கொள்கிறேன். பெ.மணியரசன் ஒருங்கிணைப்பாளர் காவிரி உரிமை மீட்புக் குழு

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, June 30, 2020

வெளியுறவுக் கொள்கை வெறும் வாண வேடிக்கையா? கி. வெங்கட்ராமன் கட்டுரை!


வெளியுறவுக் கொள்கை
வெறும் வாண வேடிக்கையா?

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்
செயலாளர் கி. வெங்கட்ராமன் கட்டுரை!


கொள்ளை நடந்த வங்கியின் காவலாளி, “அப்படி எதுவும் நடக்கவில்லை, எல்லாம் பத்திரமாக இருக்கிறது” என்று சொன்னதுபோல், “இந்திய எல்லையில் யாரும் ஊருடுவவில்லை, ஒரு அங்குல நிலம் கூட பறிபோகவில்லை” என்று இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி கடந்த 19.06.2020 அன்று நடைபெற்ற அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் கூறினார்.

அப்படியானால், கால்வான் பள்ளத்தாக்கில் 2020 மே 15 - 16 இரவில் சீனப் படையினர் தாக்குதலில் 20 இந்தியப் படைவீரர்கள் கொல்லப்பட்டார்களே, அது ஏன் நிகழ்ந்தது என்ற வினாவை ஊடகங்களும், எதிர்க்கட்சியினரும் எழுப்பினர். அதன் பிறகு, செய்மதிப் படங்களை வெளியிட்டு முதன்மை ஊடகங்கள் சீனப்படை எல்லைக் கட்டுப்பாட்டுக் கோட்டைக் கடந்து, லடாக்கிற்கு அருகில் இந்திய எல்லைக்குள் ஊடுருவி 60 சதுர கிலோ மீட்டர் பரப்பைக் கைப்பற்றி நிற்கிறது என்று தெளிவுபடுத்தின. அதன் பிறகு, வேறு வழியின்றி இந்திய எல்லைப் பகுதியை சீனா ஆக்கிரமித்து விட்டது என்ற உண்மையை மோடி ஒத்துக் கொண்டார்.

இந்திய வெளியுறவுத்துறை 26.06.2020 அன்று வெளியிட்ட விரிவான அறிக்கையை நோக்கினால், ஒரு பக்கம் மோதல் தவிர்ப்பு பேச்சுவார்த்தையை நடத்திக் கொண்டே, ஆக்கிரமித்த பகுதிகளில் நிரந்தரக் கட்டுமானங்களை சீனப்படை உருவாக்கி வருவது தெளிவாகிறது.

பதிலடியாக, இந்தியப் படையினரும் எல்லையில் குவிக்கப்பட்டு வருகிறார்கள். ஏறத்தாழ 4,000 கிலோ மீட்டர் வரை நீண்டிருக்கும் இந்திய - சீன எல்லைப் பகுதிகளில் எது யார் எல்லை எனத் தெளிவாக வரையறுக்கப்படாத பகுதிகளே அதிகம்!

எடுத்துக்காட்டாக, லடாக் அருகிலுள்ள அக்சாய் சின் பகுதியை இந்தியா உரிமை கொண்டாடுகிற தென்றால், சீனா இந்தியாவிலுள்ள அருணாச்சலப்பிரதேசம் முழுவதுமே தங்களது என உரிமை கொண்டாடுகிறது.

இவ்வளவு சிக்கலான பிரச்சினையின் ஆழத்தை நரேந்திர மோடி ஆட்சி புரிந்து கொண்டதாகவே தெரியவில்லை. இதற்கு முன் இருந்த காங்கிரசு ஆட்சியும் படை மோதல் வராமல் பார்த்துக் கொண்டார்களே தவிர, எல்லைச் சிக்கலைத் தீர்த்துக் கொள்வதில், எள்ளளவு முன்னேற்றமும் காணவில்லை!

மறுபுறம், பொருளியல் வகையில் இந்தியா பெரிதும் சீனாவை சார்ந்திருப்பதாக மாறியது. குறிப்பாக, உலக வர்த்தக அமைப்பில் இந்தியாவின் ஒப்புதலோடு சீனா இணைத்துக் கொள்ளப்பட்டதற்குப் பிறகு, இந்தியாவின் திறந்தப் பொருளியல் கொள்கையில் அதிகம் பயன்பெற்ற நாடாக சீனா மாறியது. அதிலும் குறிப்பாக, மோடி ஆட்சியில்தான் சீன நிறுவனங்கள் இந்தியாவில் கூடுதலாகக் கோலோச்சத் தொடங்கின.

இந்தியாவின் தானியங்கித் தொழிலில் உதிரி உறுப்புகள் தேவைக்கு 85 விழுக்காடு சீனாவையே இந்தியா சார்ந்திருக்கிறது. மருந்துத் தயாரிப்பில், அடிப்படையான மூலப் பொருட்களுக்கு (Active Pharma Ingredients) 73 விழுக்காடு வரை இந்திய நிறுவனங்கள் சீனாவைச் சார்ந்திருக்கின்றன. இரும்பு எஃகு, பூச்சிக் கொல்லிகள் உள்ளிட்ட மிகப்பெரும்பாலான தயாரிப்புகளில் குறைந்தது 40 விழுக்காடு வரை சீனத் தயாரிப்புகளை சார்ந்து இந்தியத் தொழில்கள் இருக்கின்றன.

100 கோடி டாலர் மதிப்பில் எழுச்சி பெறும் புதிய நிறுவனங்கள் எனப் பட்டியலிடப்பட்டுள்ள பேட்டிஎம், பிளிப்கார்ட், ஓலா, ஸ்னாப்டீல் போன்ற நூற்றுக்கணக்கான நிறுவனங்களில் 30 முதல் 70 விழுக்காடு வரை சீன மூலதனம் உள்ளது. மோடியின் “மேக் இன் இந்தியா” கூக்குரல் உள்ளிட்டு, ஆட்சியாளர்களின் தொடர் கொள்கையின் காரணமாக இந்த சீனச்சார்பு உறுதிப்பட்டுள்ளது.

இச்சூழலில், டிக்டாக், கேம் ஸ்கேன்னர், வீ சாட் போன்ற 59 கைப்பேசி செயலிகளைத் தடை செய்வதால் சீனாவுக்கு எந்த வலியும் ஏற்படப் போவதில்லை! “பாரத மாதா” கூச்சலுக்கு மட்டுமே பயன்படும்!

வாச்பாய் ஆட்சி தொடங்கி, இந்தியாவின் வெளியுறவுக் கொள்கையில் இசுரேல் சார்பு - அமெரிக்க சார்பு அதிகரித்துக் கொண்டே சென்றது. மறுபுறம், மோடி சீன உறவுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதுபோல் காட்டிக் கொண்டு, 2014-க்குப் பிறகு 5 முறை சீனாவுக்கு சென்றார். சீனத் தலைவர் ஜின் பிங்குக்கு அகமதாபாத், கோவா, மாமல்லபுரம் ஆகிய இடங்களில் அடுத்தடுத்து மாபெரும் வரவேற்பு விழாக்களை மோடி நடத்தினார். ஆனால், விளைந்த பயன் எதுவுமில்லை!

இதற்கு முன்னர், 2014-இல் அகமதாபாத்தில் ஜீஜின் பிங் மோடி அளித்த கோலகல வரவேற்பில் இருந்த போதுதான், ஜெம் ஜக், டூமெக் போன்ற இந்தியப் பகுதிகளில் சீனப்படைகள் ஊடுருவித் தாக்குதல் நடத்திவிட்டுத் திரும்பிச் சென்றன. இதிலிருந்தெல்லாம் சீனா குறித்து, மோடி ஆட்சி விழிப்படைந்ததாகத் தெரியவில்லை!

பாக்கித்தானோடு எப்போதும் பகை; நேப்பாளம் - பூட்டான் - வங்காளதேசம் - மாலத்தீவு ஆகிய எந்த அண்டை நாட்டோடும் நம்பகமான நல்லுறவில்லை; அணிசேராக் கொள்கையும் வலுப்படுத்தப் படவில்லை; எல்லாத் திசையிலும் மோடி ஆட்சியின் வெளியுறவுக் கொள்கை அடைந்துள்ள தோல்வியின் வெளிப்பாடுதான் இன்றைய நிலை!

எல்லோரையும் விட தாங்கள்தான் “இந்தியப் பற்றாளர்”கள் என்றும், “பாரத மாதா” முழக்கமிட்டுக் கொண்டும் ஆட்சி நடத்தும் பா.ச.க. இந்தியாவின் எல்லைகளைப் பாதுகாப்பதிலும், வெளியுறவுக் கொள்கையில் இந்தியாவுக்கு நட்பு ஆற்றலைப் பெருக்கிக் கொள்வதிலும் எள்ளளவும் ஈடுபட்டதாகத் தெரியவில்லை. மாறாக, ஆரியத்துவா மேலாதிக்க அரசியலை இந்தியாவில் நிலைநாட்டுவதிலேயே முதற்பெரும் கவனம் செலுத்தி வருகிறார்கள்.

இதிலிருந்து இந்திய அரசு பாடம் பெற வேண்டும். எல்லையில் படை வலிமையை உறுதிப்படுத்திக் கொண்டு, வலுவான நிலையில் மோதல் தவிர்ப்புப் பேச்சுவார்த்தையை சீனாவுடன் மேற்கொண்டு,அதே நேரத்தில் முழு அளவிலான போர் ஏற்படாதவாறு தவிர்க்க வேண்டும்.

பொருளியலில் இவ்வளவு மோசமான சீனச் சார்பிலிருந்து விரைவில் வெளி வர எல்லா முயற்சிகளும் மேற்கொள்ள வேண்டும். அண்டை நாடுகளோடு நல்லுறவு, அணிசேராக் கொள்கை வலுப்படுவது போன்ற அடித்தளம் இருக்க வேண்டும். சீனாவை எதிர்கொள்ள அமெரிக்கா தலைமையிலான நான்கு முனை குவாட் (Quad) இராணுவக் கூட்டணியில் இணைந்து கொள்வது பேயை எதிர்கொள்ள பிசாசோடு சேர்ந்ததாக முடியும்.

சீன - இந்திய உறவில் உடனடியாக நட்பு நிலை வருவதற்கு வாய்ப்பில்லை. இப்போதைக்கு போரை தவிர்க்க முனைப்புக் காட்ட வேண்டும்!

இச்சிக்கலில் அனைத்துக் கட்சியினரையும் அனைத்து மக்களையும் இணைத்துக் கொண்டு செல்லும் அணுகுமுறை மிகவும் கட்டாயம்!

இந்த மோதலைக் காரணம் காட்டி, சனநாயக உரிமைகளைப் பறிப்பது, மாநில உரிமைகளைப் பறித்து தில்லியில் குவிப்பது போன்றவை மக்களை ஒன்றிணைக்கப் பயன்படாது.

வெளியறவுக் கொள்கை, பொருளியல் கொள்கை, உள்நாட்டு அரசியல் கொள்கை போன்றவற்றில் தெளிவான மாற்றங்கள் வராமல், இந்திய - சீனச் சிக்கலை வெற்றிகரமாக எதிர்கொள்ள முடியாது என்பதை மோடி ஆட்சி, இனியாவது உணர வேண்டும்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, June 26, 2020

சாதிவெறிக் கொலைக்குத் தனிச்சட்டம் தேவை சங்கர் கொலை வழக்கு தரும் பாடம்! பெ. மணியரசன்.


சாதிவெறிக் கொலைக்குத் தனிச்சட்டம் தேவை
சங்கர் கொலை வழக்கு தரும் பாடம்!


ஐயா பெ. மணியரசன்
தலைவர் - தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


உடுமலை சங்கர் கொலை வழக்கில் சென்னை உயர் நீதிமன்றம் 22.06.2020 அன்று அளித்த தீர்ப்பு பல்வேறு வினாக்களை எழுப்புகிறது.


ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கரும், பிற்படுத்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்த கௌசல்யாவும் கல்லூரிப் படிப்பின்போது காதலித்துப் பின்னர் 2015ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டனர். சாதிவெறி காரணமாக கௌசல்யா பெற்றோர் தரப்பினர், 13.03.2016 அன்று சங்கரைப் பட்டப்பகலில் உடுமலைப்பேட்டைக் கடைத் தெருவில் படுகொலை செய்தனர். கௌசல்யா படுகாயங்களுடன் பிழைத்துக் கொண்டார்.


காவல்துறை குற்றச்சதி, கொலை, படுகாயப்படுத்தல் முதலிய பிரிவுகளில் வழக்குப் போட்டது. கௌசல்யா தந்தையார், தாயார், மாமா ஆகியோர் உட்பட 11 பேர் மீது குற்றம் சாட்டியது. திருப்பூர் மாவட்ட அமர்வு நீதிமன்றம் 12.12.2017 அன்று அளித்த தீர்ப்பில், கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை மற்றும் பிரசன்னகுமார் ஆகியோரை குற்றம் மெய்ப்பிக்கப்படவில்லை என்று விடுதலை செய்தது. கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி உட்பட ஆறு பேருக்குத் தூக்குத் தண்டனையும், ஸ்டீபன் தன்ராசுக்கு இரட்டை வாழ்நாள் தண்டனையும், மணிகண்டனுக்கு ஐந்தாண்டு சிறைத் தண்டனையும் அளித்தது.


குற்றஞ்சாட்டப்பட்டோரும், காவல்துறையும் சென்னை உயர் நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தனர். குற்றஞ்சாட்டப்பட்டோர் விடுதலை கோரினர். காவல்துறையோ, அமர்வு நீதிமன்றத்தில் விடுதலை செய்யப்பட்ட கௌசல்யாவின் தாயார் அன்னட்சுமி உட்பட மூவருக்கும் சாவுத் தண்டனை வழங்கப்பட வேண்டும் என்று கோரியது.


சென்னை உயர் நீதிமன்ற நீதிபதிகள் எம். சத்தியநாராயணன், எம். நிர்மல்குமார் ஆகியோர் அடங்கிய அமர்வு 22.06.2020 அன்று அளித்த தீர்ப்பில், கௌசல்யாவின் தாயார் அன்னலட்சுமி, மாமா பாண்டித்துரை, பிரசன்னகுமார் ஆகியோரைக் கீழமை நீதிமன்றம் விடுதலை செய்ததை உறுதி செய்து, காவல்துறையின் மேல் முறையீட்டை தள்ளுபடி செய்தது. அத்துடன் கீழமை நீதிமன்றத்தில் தூக்கு தண்டனை பெற்ற கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமியின் மீதான குற்றச்சாட்டும் மெய்ப்பிக்கப்படவில்லை என்று கூறி அவரையும் விடுதலை செய்தது.


மேலும், ஸ்டீபன் தன்ராசுக்குக் கொடுக்கப்பட்டிருந்த இரட்டை வாழ்நாள் தண்டனையும், மணிகண்டனுக்குக் கொடுக்கப்பட்டிருந்த 5 ஆண்டுத் தண்டனையையும் இரத்துச் செய்தது உயர் நீதிமன்றம். கீழமை நீதிமன்றத்தில் தூக்குத் தண்டனை பெற்றிருந்த எஞ்சிய 5 பேர் தூக்குத் தண்டனையையும் வாழ்நாள் தண்டனையாக மாற்றியது. இவர்கள் ஐவரும் குறைந்தது 25 ஆண்டுகளாவது சிறையில் இருக்க வேண்டும் என்று தீர்ப்பில் நிபந்தனை விதித்தது.


மாவட்ட அமர்வு நீதிமன்றத்தில் சாவுத் தண்டனை பெற்றவர்களின் தண்டனையை வாழ்நாள் தண்டனையாகக் குறைத்தது சரி. சாவுத்தண்டனை முற்றிலுமாக நீக்கப்பட வேண்டும் என்ற கருத்து உலகெங்கும் வலுத்து வரும் காலம் இது. தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கருத்தும் அதுவே! அதேவேளை, சாதிவேறுபாடு காரணமாக, ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கரைக் கொலை செய்ய கௌசல்யாவின் பெற்றோரும் மாமாவும் சதித்திட்டம் தீட்டவில்லை அல்லது அக்குற்றச்சாட்டு மெய்ப்பிக்கப்படவில்லை என்றுகூறி அவர்களை உயர் நீதிமன்றம் முற்றிலுமாக விடுதலை செய்ததுதான் மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. கீழமை நீதிமன்றத்தில் இரட்டை வாழ்நாள் தண்டனை பெற்ற ஸ்டீபன் தன்ராஜ் முற்றிலுமாக விடுதலை செய்யப்பட்டது மேலும் அதிர்ச்சியாக உள்ளது.


கொலைச் சதிக் குற்றச்சாட்டு ஐயமற மெய்ப்பிக்கப்படவில்லை என்று நீதிபதிகள் கூறுகிறார்கள். கௌசல்யாவின் தந்தையார், தாயார், தாய்மாமா ஆகியோர் மீது கொலைச் சதிக் குற்றச்சாட்டு கூறப்பட்டிருந்தது. இவர்கள் கொலைக்குத் திட்டமிட்டார்கள் என்பதற்கான சான்றுகளும் காவல்துறையினரால் அளிக்கப்பட்டிருந்தது.


ஒரு சான்றை இந்நீதிபதிகள் முழுமையாக ஏற்றுக் கொண்டுள்ளனர். கூலிக்குக் கொலை செய்த நபர்களோடு கௌசல்யாவின் தந்தை சின்னச்சாமி 2016 பிப்ரவரி 6-லிருந்து மார்ச்சு 6 வரை தொலைப்பேசியில் தொடர்பு கொண்டிருந்தார் என்பதே உயர் நீதிமன்றத்தில் ஏற்கப்பட்ட சாட்சியம்.


இரண்டாவதாக, மேற்படி சின்னச்சாமி – அன்னலட்சுமி இணையரின் கூட்டு வங்கிக் கணக்கில் இருந்த பணத்தில் ரூபாய் என்பதாயிரத்தை 2016 மார்ச்சு 12-லிருந்து 14 வரை சின்னச்சாமி எடுத்து, கூலிக் கொலைக் கும்பலுக்குக் கொடுத்தார் என்றும், அதில் ரூபாய் ஐம்பதாயிரத்தைக் கூலிக் கொலைக் கும்பலிடமிருந்து காவல்துறை பறிமுதல் செய்தது என்றும் காவல்துறை குற்ற அறிக்கையில் கூறியுள்ளது. மேற்படி பணம் எடுத்ததும் உண்மை, கூலிக்குக் கொலை செய்யும் கும்பலிடம் கொடுத்திருக்கலாம்; ஆனால், சின்னச்சாமி ஏ.டி.எம்.மில் பணமெடுத்த போது சி.சி.டி.வி. கேமிராவில் பதிவாகி இருக்க வேண்டும், அப்படியான சான்றை காவல்துறையினர் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கவில்லை என்று கூறி, இந்தச் சான்றை நீதிபதிகள் புறக்கணித்துவிட்டார்கள்.


மூன்றாவதாக, கூலிக்கு வந்த கொலைக் கும்பலை சின்னச்சாமி ஒரு விடுதியில் தங்க வைத்ததை, விடுதி உரிமையாளர்கள் ஒப்புக் கொண்டுள்ளார்கள். ஆனால், அவர்கள் அதற்கான வாய்மொழி சாட்சியமோ, ஆவணங்களோ தாக்கல் செய்யவில்லை என அதையும் நீதிபதிகள் புறக்கணித்திருக்கிறார்கள்.


இவ்வாறு கூறி, கொலைச் சதி குற்றச்சாட்டிலிருந்து மேற்படி நபர்களை உயர் நீதிமன்றம் நீக்கிவிட்டது. கொலைச் சதிகாரர்களை நீக்கிவிட்ட பிறகு, இந்தக் கூலிக் கொலைக் கும்பல் என்ன முன் விரோதத்தில் – என்ன பகை நோக்கத்தில் அல்லது யார் கொடுத்த கூலிக்காக சங்கரைக் கொலை செய்தார்கள் என்ற கேள்வி எழுகிறதல்லவா?


எனவே, கூலிக்குக் கொலை செய்தவர்கள் யாருக்காக செய்தார்கள், எதற்காக செய்தார்கள் என்ற விடையில்லாமல் அவர்களுக்குத் தண்டனை வழங்கப்பட்டிருக்கிறது. உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தால், இந்த ஒரு காரணத்தை வைத்து இந்த ஐந்து பேரையும் உச்ச நீதிமன்றம் விடுதலை செய்ய வாய்ப்பிருக்கிறது. சாதிவெறிக் கொலைகள் மேலும் நடைபெற ஊக்கம் பெறும் அபாயம் இதிலிருக்கிறது!


நீதிக்குக் கண்ணில்லை என்பார்கள். நீதித்துறையின் நடுநிலைப் பார்வையைக் குறிப்பதற்காக அப்படிச் சொல்வார்கள். ஆனால், இத்தீர்ப்பு நீதியானது ஓரக் கண்ணால் பார்த்தது போல் அல்லவா தோன்றுகிறது.


காவல்துறை உயர் நீதிமன்றத்தில் வழக்கை சரியாக நடத்தவில்லையா என்ற வினாவுக்கும் விடை தேட வேண்டும். அதேவேளை, இவ்வாறு தீர்ப்பு வரக் காரணமென்ன என்ற வினாவுக்கும் விடை கண்டாக வேண்டும். இத்தீர்ப்பு பல வினாக்களை எழுப்புகிறது!


உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யப் போவதாக காவல்துறைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது. கட்டாயம் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய வேண்டும். தமிழ்நாடு அரசு இவ்வழக்கில் உரிய கவனம் செலுத்த வேண்டும்.


மாவட்ட அமர்வு நீதிமன்றங்களில் கொலை வழக்குகளில் மிகைத் தண்டனை வழங்குவதையும் அல்லது உரிய தண்டனை வழங்காததையும் பெருமளவில் தவிர்ப்பதற்கு, அங்கும் இரு நீதிபதிகள் கொண்ட அமர்வு, தீர்ப்பு வழங்கும் முறையைச் செயல்படுத்தலாம்.


இக்கருத்தை உரியவர்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.


உடுமலை சங்கர் கொலை வழக்குத் தரும் மிகமிக முகாமையான படிப்பினை – சாதிவெறிக் கொலைகள் – குற்றங்கள் ஆகியவற்றை விசாரித்துத் தண்டனை வழங்குவதற்குத் தனிச் சட்டம் தேவை என்பதாகும்.


சங்கர் கொலை வழக்கில் கொலைச்சதி – ஐயமற மெய்ப்பிக்கப்பட முடியாமல் போனதற்கு, அனைத்தையும் மெய்ப்பிக்கும் பொறுப்பு அரசுத் தரப்புக்கு மட்டுமே இருந்ததாகும். சாதிவெறிக் கொலைச் சதியில் குற்றம் சாட்டப்பட்டோர், தாங்கள் குற்றவாளிகள் அல்லர் என்பதை மெய்ப்பிக்க வேண்டும் என்ற மாறுதல் வர வேண்டும். வரதட்சிணைக் கொடுமைச் சட்டத்தில் அப்படித்தான் இருக்கிறது.


சங்கரைக் கொலை செய்ய ஏற்பாடு செய்த கௌசல்யா உறவினர்கள் விடுதலையாகி விட்டார்கள். கூலிக்குக் கொலை செய்தோர் மட்டும் தண்டிக்கப்பட்டுள்ளனர். காரணம், இதில் கொலைச் சதியை ஐயமற மெய்ப்பிக்க முடியாததைக் காரணம் காட்டியுள்ளார்கள் நீதிபதிகள்!


எனவே, சாதிவெறிக் கொலை – அதாவது ஆணவக் கொலைக்குத் தனிச்சட்டம் இயற்ற வேண்டும்!


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, June 25, 2020

சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் மீது கொலை வழக்குப் பதிவு செய்க! கி. வெங்கட்ராமன் அறிக்கை!


சாத்தான்குளம் காவல் அதிகாரிகள் மீது
கொலை வழக்குப் பதிவு செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் அறிக்கை!


தூத்துக்குடி மாவட்டம் – சாத்தான்குளத்தில், கைப்பேசிக் கடை நடத்தி வந்த ஜெயராஜ் மற்றும் அவரது மகன் பென்னிக்ஸ் ஆகியோர் காவல்துறையினரால் அடித்து சித்திரவதை செய்யப்பட்டு, மரணமடைந்த செய்தி, தமிழ்நாட்டையே உலுக்கியிருக்கிறது.
அனுமதிக்கப்பட்ட நேரத்தைக் கடந்து, கடையைத் திறந்து வைத்திருந்தார்கள் என்றும், மூடச் சொன்னதற்கு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்கள் என்றும் குற்றச்சாட்டி கைது செய்வது, அடித்துக் கொல்வது என்று தொடங்கிவிட்டால் – தமிழ்நாட்டின் எந்த சிறு நகரத்திலும்கூட வணிகர்கள் கடை நடத்த முடியாது. மக்கள் இயல்பு வாழ்க்கை நடத்த முடியாது!
காவல்துறையினர் தனது தந்தை ஜெயராஜை அடிப்பதைத் தட்டிக் கேட்டதற்காக, அவரது மகன் பென்னிக்ஸ் அடிக்கப்பட்டு, இருவரும் 19.06.2020 அன்றிரவு சாத்தான்குளம் காவல் நிலையத்திற்கு இழுத்துச் செல்லப்பட்டு, அங்கு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், இரகுகணேஷ் ஆகியோர் உள்ளிட்ட காவல்துறையினரால் படுமோசமாகத் தாக்கப்பட்டுள்ளனர்; கடுமையாக அடித்துத் துன்புறுத்தப்பட்டுள்ளனர். பென்னிக்சின் ஆசனவாயில் தடியை செருகி அடித்துள்ளனர்.
அடுத்த நாள் (20.06.2020) காலை சாத்தான்குளம் நீதிமன்ற நடுவரிடம் நேர் நிறுத்தி, நீதிமன்றக் காவல் ஆணை பெற்றுள்ளனர். நேர் நிறுத்தப்பட்ட போதே, இவ்வளவு சித்தரவதைக்கு உள்ளான ஜெயராஜயையும், பென்னிக்சையும் காவல்துறையினர் அடித்தார்களா என்ற வழக்கமான கேள்வியைக் கூட கேட்காமல், எந்திர கதியில் நீதிமன்றக் காவலுக்கு சாத்தான்குளம் நீதிமன்ற நடுவர் ஆணையிட்டது வியப்பளிக்கிறது.
கோவில்பட்டி கிளைச் சிறையில் அடைக்கப்பட்ட இருவரில் பென்னிக்ஸ் 22.06.2020 அன்றிரவும், செயராஜ் 23.06.2020 அன்று காலையும் அடுத்தடுத்து மரணமடைந்திருக்கிறார்கள். வணிகர்களும், பொது மக்களும் சாத்தான்குளத்தில் மறியல் போராட்டம் நடத்தி, அப்போராட்டம் தூத்துக்குடி – நெல்லை மாவட்டங்களுக்குப் பரவத் தொடங்கிய பிறகே, உயரதிகாரிகள் தலையிட்டு உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், இரகுகணேசன் ஆகிய இருவரையும், இரண்டு காவலர்களையும் பணியிடை நீக்கம் செய்தும், காவல் நிலைய ஆய்வாளர் சிறீதரை பணியிடமாற்றம் செய்து, காத்திருப்புப் பட்டியலில் வைத்தும் ஆணையிட்டுள்ளனர்.
செயராஜின் மனைவி செல்வராணி அளித்த மனுவின் மீது உயர் நீதிமன்ற மதுரைக் கிளை மூன்று மருத்துவர்களைக் கொண்டு காணொலிப் பதிவோடு உடற்கூராய்வு செய்யும்படி ஆணையிட்டிருக்கிறது.
இன்று (24.06.2020) இச்சிக்கல் குறித்து அறிக்கை வெளியிட்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, இவ்விருவர் குடும்பங்களுக்கும் தலா 10 இலட்சம் ரூபாய் நிதி உதவியும், குடும்பத்தில் உள்ள ஒருவருக்கு தகுதிப்படி அரசு வேலை வழங்கப்படும் என்றும் அறிவித்திருக்கிறார்.
இது வரவேற்கத்தக்கது! ஆனால், இந்நிகழ்வு குறித்து முதலமைச்சரின் அறிக்கையில் கண்டுள்ள விளக்கம் காவல்துறைத் தரப்பினர் கொடுத்த விளக்கத்தின் அடிப்படையிலேயே அமைந்திருப்பது முதலமைச்சரின் பக்கச்சாய்வைக் காட்டுவதாகவும் அமைந்திருக்கிறது. பென்னிக்ஸ் கோவில்பட்டி கிளைச்சிறையிலிருந்து மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லும் போதே இறந்துதான் அழைத்து வரப்பட்டிருக்கிறார். ஆனால், முதலமைச்சர் அறிக்கையில் அவர் சிகிச்சைப் பலனின்றி இறந்ததாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது. இது அவரது பக்கச்சாய்வுக்கு எடுத்துக்காட்டு!
தமிழ்நாடு முதலமைச்சரும், அரசும், தொடர்ந்து காவல்துறையின் அடாவடிக்குத் துணை போவதால்தான் இதுபோன்ற நிகழ்வுகள் அடிக்கடி ஏற்படுகின்றன. இதே உதவி ஆய்வாளர் பாலகிருஷ்ணன், சென்ற வாரம் - தான் கைது செய்து இழுத்து வந்தவரை அடித்துத் துன்புறுத்தி சாகடித்திருக்கிறார் என்ற குற்றச்சாட்டும் அப்பகுதியில் உள்ளது.
காவல்துறையினர் காசு கொடுக்காமல் கைப்பேசி கேட்டதால்தான் செயராஜுடன் வாக்குவாதமே ஏற்பட்டது என்று அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் கூறுகிறார்கள். காவல்துறையின் சட்ட மீறல்களை தமிழ்நாடு அரசு அவ்வப்போது தட்டிக் கேட்டிருந்தால், சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க வேண்டிய காவல்துறையினரே இதுபோன்ற சட்ட மீறல்களில் ஈடுபட மாட்டார்கள். சாத்தான்குளம் நிகழ்வுக்குப் பிறகாவது தமிழ்நாடு அரசு தனது இப்போக்கை மாற்றிக் கொள்ள வேண்டும்.
சாத்தான்குளம் உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், இரகுகணேசன் உள்ளிட்டோர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, உறுதியாக வழக்கு நடத்த வேண்டும். அதைவிடுத்து, பணியிட நீக்கம் செய்வது, இடமாற்றம் செய்வது என்பதோடு நிறுத்திக் கொண்டு, வழக்கமான வழியில் செயல்பட்டால் காவல்துறையில் உள்ள சிலரின் அடாவடி இதுபோலவே தொடரும்.
எனவே, தமிழ்நாடு அரசு சாத்தான்குளம் ஜெயராஜ் – பென்னிக்ஸ் ஆகிய இருவரின் கொலையில் தொடர்புடைய உதவி ஆய்வாளர்கள் பாலகிருஷ்ணன், இரகுகணேசன் மற்றும் காவல்துறையினர் மீது கொலை வழக்குப் பதிவு செய்து, கைது செய்து - சட்ட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, June 22, 2020

தனக்குத் “தமிழர் தலைவர்” பட்டம்! தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை! வீரமணியாரின் தந்திரம் புரிகிறதா? பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!தனக்குத் “தமிழர் தலைவர்” பட்டம்!
தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை!
வீரமணியாரின் தந்திரம் புரிகிறதா?

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
ஐயா பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!


திராவிடர் கழகத்தின் நாளேடான “விடுதலை” இதழின் ஞாயிறு மலரில் (வெளியூர் 21.06.2020) சிறப்பு வினா ஒன்றும், அதற்கான சிறப்பு விடையும் வெளிவந்துள்ளன. சிறப்புக் கேள்வியைக் கேட்டவர் சி.பி.எம். கட்சியின் பேராசிரியர் அருணன் அவர்கள். சிறப்பு விடையளித்தவர் திராவிடர் கழகத் தலைவர் ஐயா வீரமணி அவர்கள்.
“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது ஏன்? அவர்களை எதிர்கொள்வது எப்படி” என்பது வினா!
இந்த வினாவிற்கு விடையளிக்க வேண்டிய காலக்கட்டாயத்தில் ஆசிரியர் வீரமணி அவர்கள் இருக்கிறார்கள். சில ஆண்டுகளுக்கு முன், “தமிழ்த்தேசியவாதிகள் அல்ல, அவர்கள் தமிழ்த்தேசிய வியாதிகள்” என்று மொட்டையாக வீரமணி அவர்கள் சாடிச் சென்றதுபோல் – இன்று ஒதுங்கிக் கொள்ள முடியாது. தமிழ்த்தேசியம் பெரும் வளர்ச்சி பெற்றுள்ளது. ஆனால், அவர் அகவைக்கும் அனுபவங்களுக்கும், தலைமைக்கும் உரிய பண்புடன் இப்போதும் விடை கூறவில்லை!
“பெரியாரைச் சில தமிழ்த்தேசியர்கள் எதிர்ப்பது அவர்களது அரசியல் வாழ்வு நீடிப்பதற்காக!”
“இதற்கு முன் பெரியாரை எதிர்த்து எவ்வளவோ பேர் காணாமற் போய் உள்ளனர். இவர்கள் புதிய வரவுகள்”.
மேற்கண்ட பாணியில் திராவிட முகாமின் புதிய வரவுகள் பேசினால் புரிந்து கொள்ளலாம். எவ்வளவோ அனுபவங்களைக் கொண்ட தலைவர் இப்படிப் பேசுவது பொருத்தமன்று. மற்றபடி எந்த பாணியில் பேசலாம் என்று தேர்ந்தெடுப்பது அவர் உரிமை!
“தந்தை பெரியார் கூறும் திராவிடம் என்பதும், திராவிடர் என்பதும் தந்தை பெரியாரின் கற்பனையல்ல. அது வரலாற்று ரீதியான உண்மை. வரலாறு நெடுக ஆரிய – திராவிடப் போராட்டம் நடந்துள்ளது” என்று ஆசிரியர் வீரமணி அவர்கள் அந்த விடையில் கூறுகிறார். ஆனால், “வரலாறு நெடுக நடந்ததாகச் சொல்லப்படும் ஆரிய – திராவிடப் போராட்டத்திற்கு ஒரு வரலாற்றுச் சான்றைக்கூட இதுவரை பெரியாரும் காட்டியதில்லை, அண்ணாவும் காட்டியதில்லை, “திராவிட” ஆய்வாளர்களும் காட்டியதில்லை!
திராவிடத் திரிபுவாதம் செய்த மொழியியல் ஆய்வாளர் கால்டுவெல் அவர்கள் “திராவிட” என்ற சொல்லை மனுதர்ம நூலிலிருந்தும், குமாரிலபட்டரின் “தந்திர வார்த்திகா” நூலிலிருந்தும் எடுத்ததாகக் கூறுகிறார். ஏனெய மேலைநாட்டு ஆய்வாளர்களும் ஆரியச் சான்றுகளிலிருந்தே “திராவிடத்தை” எடுத்துக் கொண்டார்கள்.
தமிழ்த்தேசியர்களாகிய நாங்கள் சங்ககாலத்திலிருந்து வரலாறு நெடுக நடந்து வந்த ஆரியர் எதிர் தமிழர் போராட்டத்திற்கான சான்றுகள் பலவற்றைக் கூறியுள்ளோம். ஆரியப்படை கடந்த பாண்டியன் நெடுஞ்செழியன், ஆரிய மன்னர்களான கனகன், விசயன் ஆகியோர் தலையில் இமயக்கல்லை ஏற்றி வந்து, கண்ணகிக்குச் சிலை எடுத்த தமிழ் வேந்தன் சேரன் செங்குட்டுவன், இமயம் வரை படையெடுத்து வெற்றிக் கொடி நாட்டிய தமிழ்ப் பேரரசன் கரிகால்சோழன் போன்ற வரலாறுகளை நாங்கள் காட்டி வருகிறோம். ஆன்மிகத்திலும் ஆரியத்தை எதிர்த்த திருமூலர், வள்ளலார் எனப் பல வரலாற்றுச் செய்திகளைக் கூறி வருகிறோம்.
“திராவிடர்கள்” ஆரியர்களை எதிர்த்ததற்கு ஒரு வரலாற்றுச் செய்தியைக் கூட இதுவரை – பெரியாரியர்கள் கூறியதே இல்லை. இப்போது வீரமணி ஐயா அவர்களும் கூறவில்லை!
பெரியாரும் அண்ணாவும் திராவிடர் என்பது மனுநீதியில் கூறப்பட்டுள்ளது, மகாபாரதத்தில் கூறப்பட்டுள்ளது, சனகனமண பாட்டில் கூறப்பட்டுள்ளது, உ.வே.சா. சிலைக்குக் கீழே எழுதப்பட்டுள்ளது என்றார்கள். இவை ஆரியச் சான்றுகள்! தமிழ்ச் சான்றுகள் கொடுங்கள் என்று இக்காலத் திராவிடவாதிகளிடம் நான் தொடர்ந்து கேட்டு வருகிறேன். இதுவரை யாரும் அவ்வாறான அகச்சான்று கொடுக்கவில்லை.
தமிழர்கள் – தங்களைத் திராவிடர்கள் என்று அழைத்துக் கொள்வதை இழிவாகக் கருதியதால் நமது சங்க கால – காப்பியக்கால – பக்திக்கால – சித்தர் கால இலக்கியங்கள் எதிலும் “திராவிடர்” என்ற சொல்லையே பயன்படுத்தவில்லை. விசயநகர ஆட்சியின் கீழ் தமிழ்நாட்டில் தெலுங்கு பிராமணர்களின் ஆதிக்கம் கொடிகட்டிப் பறந்தபோதுதான் தமிழ்நாட்டில் “திராவிட” என்ற சொல் புழக்கத்திற்கு வந்தது. அச்சொல்லை 20ஆம் நூற்றாண்டில் திட்டமிட்டு அரசியலில் புகுத்திப் பிரபலப்படுத்தியவர் பெரியார்.
திராவிடர் என்றால் அதில் பார்ப்பனர்கள் சேர மாட்டார்கள்; தமிழர் என்றால் எங்களுக்கும் தமிழ் தாய்மொழி என்று கூறிக் கொண்டு பார்ப்பனர்கள் உள்ளே வந்து விடுவார்கள் என்று பெரியார் சொன்னார்.
திராவிடர்கள் என்ற பெயர் அசலாக யாருக்கு வந்தது? தென்னாட்டுப் பிராமணர்களுக்கு! இதைத் “தென்னாட்டுக் குலங்களும் குடிகளும்” என்ற தலைப்பில் கள ஆய்வு நூல் எழுதிய தர்ஸ்ட்டன், “திராவிடர்” என்பது தென்னாட்டுப் பிராமணர்களை மட்டுமே அசலாகக் குறித்த சொல் என்று குறிப்பிடுகிறார். பிரித்தானியக் கலைக்களஞ்சியத்தில் “திராவிடியன்” என்ற சொல்லுக்கு விளக்கம் கூறும்போது, தர்ஸ்ட்டனின் மேற்கோளை அப்படியே அது காட்டுகிறது (Encyclopaedia Britannica, Vol. 7, Edn. 15 – 1947).
வடமேற்கே இருந்து வந்து குசராத்தி, மராத்தி, தெலுங்கு, கன்னடம், தமிழ் ஆகிய தாய்மொழிகள் பேசும் ஐந்து தாயக மண்டலங்களில் குடியேறிய பிராமணர்கள் “பஞ்ச திராவிடர்கள்” என்று அழைக்கப்பட்டனர். இதைப் பெரியாரிய ஆதரவாளரான பேராசிரியர் தொ. பரமசிவம் அவர்களும் ஒரு நூலில் எழுதியுள்ளார்.
ஆதிசங்கரர் சமற்கிருதத்தில் எழுதிய “சௌந்தர்ய லகரி”யில், “திராவிட சிசு” என்று 75ஆம் எண் பாடலில் கூறுகிறார். அதில் வரும் “திராவிட சிசு” என்பது திருஞானசம்பந்தரைக் குறிக்கிறது என்றும், இல்லை ஆதிசங்கரரையே குறிக்கிறது என்றும் விளக்கவுரையாளர்கள் கூறுகிறார்கள். இவ்விருவருமே பிராமணர்கள்!
சென்னையில் “தென் கனரா திராவிட பிராமணர் சங்கம்” (The South Kanara Dravida Brahmin Association) செயல்பட்டு வருகிறது. 1953 அக்டோபரில் இச்சங்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது. (காண்க : www.skdbassociation.com). இவ்வாறு ஆந்திராவின் நெல்லூர் அருகே உள்ள புதூரில் அவ்வட்டார பிராமணர்களுக்கு மட்டுமே உரிய “புதூரு திராவிட பிராமண சங்கம்” செயல்படுகிறது. (காண்க : www.pudurdravida.com). இவை மட்டுமல்லாமல், ஐதராபாத்திலிருந்து செயல்பட்டு வரும் தெலுங்கு பிராமணர் அமைப்பான “சிறீ கோனசீமா திராவிட சங்கம்” (காண்க : https://www.facebook.com/skds1928), தும்மங்கட்டா திராவிட பிராமணர் சங்கம் – (காண்க http://www.thummagunta.org), உடுப்பி ஸ்தனிகா திராவிட பிராமண சங்கா (Stanika Dravida Brahmana Sangha), உடுப்பி தென்கனரா காசர்கோடு திராவிட பிராமணர் சங்கம் (USKDBES) எனப் பல திராவிட பிராமண சங்கங்கள் இப்போதும் செயல்பட்டு வருகின்றன.
சென்னை மயிலாப்பூர் சமற்கிருதக் கல்லூரியில் பணியாற்றி ஓய்வு பெற்ற பிராமணப் பேராசிரியர் ஒருவரின் பெயர் மணி திராவிட் சாஸ்த்திரி! மட்டைப் பந்து வீரர் பெங்களூர் பிராமணரின் பெயர் இராகுல் திராவிட்!
ஓர் இராகுல் திராவிட், ஒரு மணி திராவிட் சாத்திரி - இவர்களை மட்டுமே எடுத்துக் காட்டுகிறோம் என்று குறைபட்டுக் கொள்ளக்கூடிய திராவிடவாதிகள், “திராவிட பிராமண மணமக்கள் சேவை” (Dravida Brahmins Matrimony) என்பதை இணையதளத்தில் தேடிப் பாருங்கள். (https://www.brahminmatrimony.com/brahmin-dravida-groomshttp://www.dravidamatrimony.com/brides). ஆயிரக்கணக்கான திராவிட பிராமண மணமகன் – மணமகள் பெயர்கள் “திராவிட” பின்னொட்டுடன் வந்து விழும்!
தென்னாட்டுப் பிராமணர்களுக்கு மட்டுமே உரிய பெயர்தான் “திராவிடர்” என்று இத்தனை சான்றுகள் தருகிறோம். திராவிடர் என்பது தூய தமிழரைக் குறிக்கும் என்பதற்கு ஒரு சான்றுகூட பெரியாரியர்கள் இதுவரை காட்டியதில்லை!
“தமிழர்” என்று தனித்தன்மையுள்ள இனப்பெயர் இருக்கக்கூடாது; அதைத் தெலுங்கர், கன்னடர், மலையாளிகள் கலந்த கலப்பினமாகச் சித்தரிக்க வேண்டும் என்பது பெரியாரின் திட்டம்!
பெரியார் தமிழினத்தில் பிறக்கவில்லை என்பதற்காக இந்த வேலையைச் செய்தார் என்று நான் கருதுகிறேன். அதேவேளை பெரியாரின் தாய்மொழி “கன்னடம்” என்பதால் அவரை அயலாராக எள்ளளவும் நானோ, எங்களின் தமிழ்த்தேசியப் பேரியக்கமோ கருதவில்லை. பெரியாரை மட்டுமல்ல, நானூறு – ஐநூறு ஆண்டுகளுக்கு முன் வரலாற்றுப் போக்கில் தமிழ்நாட்டில் குடியேறி நிலைத்துவிட்ட தெலுங்கு, கன்னடம், உருது, மராத்தி, சௌராட்டிரம் போன்ற மொழிகளைத் தாய்மொழியாகக் கொண்ட மக்களையும் அயலாராக நாங்கள் கருதவில்லை. மரபுவழித் தமிழர்களுக்குரிய உரிமைகள் அவர்களுக்கும் உண்டு என்கிறோம்.
அதேபோல் பிராமண வகுப்பில் பிறந்து, பிராமணிய ஆதிக்கக் கருத்தியலை மறுத்து, சமற்கிருத – இந்தித் திணிப்புகளை எதிர்க்கின்றவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தில் சேர்த்துக் கொள்வோம் என்கின்றோம்.
இவர்கள் அனைவரும் தமிழ்நாட்டின் ஆட்சிமொழியாகவும், கல்விமொழியாகவும் தமிழை ஏற்க வேண்டும் என்பதே நாங்கள் முன்வைக்கும் நிபந்தனை!
பார்ப்பனத் தூசு கூட உள்ளே நுழைய முடியாதபடி “திராவிடர் கழகம்” என்ற பெயர் சூட்டினார் பெரியார் என்று இந்த வினா விடையில் “வீரம்” பேசுகிறார் வீரமணி ஐயா! ஆனால், இவர்தாம் “பார்ப்பன” செயலலிதா அம்மையார்க்கு “சமூகநீதி காத்த வீராங்கனை” பட்டம் கொடுத்தார்.
திராவிடத்தின் இரட்டைக் குழல் துப்பாக்கிகளில் ஒன்றான கலைஞரின் தி.மு.க. 1999இல் ஆரிய பிராமணத்துவா கட்சியான பா.ச.க.வுடன் கூட்டணி சேர்ந்து நடுவண் ஆட்சியில் பங்கு வகித்தது. தி.மு.க.வில் தலைமையின் ஏற்புடன், சாதிவாதமும் சாதி முகாம்களும் வெளிப்படையாகச் செயல்படுகின்றன.
இவ்வாறு திராவிட முகாமில் “பார்ப்பனத் தூசு” அல்ல – பிராமணியச் சாக்கடையே ஓடிக் கொண்டுள்ளது!
“பிராமண மாசு படிந்த சொல் தமிழர்” என்கிறீர்கள். தமிழர் என்ற சொல்லைப் பயன்படுத்தித், “தமிழர்” தலைவர் என்று வீரமணியார் போட்டுக் கொள்வது ஏன்? ஏமாளித் தமிழர்களை மட்டும் திராவிடர் என்று அழைத்துக் கொள்ளச் சொல்வது ஏன்? இந்த வினாவிடை வந்துள்ள இதே “விடுதலை”யில் முதல் பக்கத்தில், தலைப்புச் செய்தி – “காணொலியில் தமிழர் தலைவர் உரை!” என்று செய்தி போடப்பட்டுள்ளது. தனக்குத் “தமிழர்” தலைவர் பட்டம்! தமிழர்களுக்கோ “திராவிடர்” முத்திரை! வீரமணியாரின் தந்திரம் புரிகிறதா?
ஆசிரியர் வீரமணி அவர்கள், தேசிய இனத்திற்குக் கொடுக்கும் விளக்கம் உலக வரலாற்றாசிரியர்கள் யாரும் கூறாத விளக்கமாகும். அதே விளக்கத்தை, இக்கேள்வி கேட்ட பேராசிரியர் அருணனும் கூறியுள்ளாராம்!
“தமிழன் – மொழிப்பெயர்; திராவிடன் – இனப்பெயர்” என்கிறார் ஆசிரியர். தமிழ் என்பதுதான் மொழிப்பெயர் என்று இதுவரை மொழியியல் அறிஞர்களும், வரலாற்று அறிஞர்களும் கூறியுள்ளார்கள். ஆசிரியர் வீரமணி அவர்களோ, தமிழன் என்பது மொழிப்பெயர் என்கிறார். தெலுங்கைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் தெலுங்கர்களாக இருக்கலாம்; கன்னடத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கன்னடர்களாக இருக்கலாம்; மலையாளத்தைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் மலையாளிகளாக இருக்கலாம். ஆனால், தமிழைத் தாய்மொழியாகக் கொண்டோர் தமிழர்களாக இருக்கக்கூடாது! தமிழினத்திற்கு ஏன் இப்படி இரண்டகம் செய்கிறீர்கள்?
தமிழர்கள் பெரியாரையும், வீரமணியாரையும் தலைவராக ஏற்றுக் கொண்டதற்குத் தண்டனையா இது?

நீங்கள் சொல்லும் திராவிடத்தில் தெலுங்கர், கன்னடர், மலையாளி ஆகியோரும் இருக்கிறார்கள். அவர்கள் பெரியாரையோ, வீரமணியாரையோ தலைவராக ஏற்றுக் கொண்டதே இல்லை!
தமிழர் திருநாள் என்று தமிழறிஞர்களாலும், பல்வேறு அரசியல் கட்சிகளாலும் வரையறுக்கப்பட்ட “பொங்கல் விழா”வை – “திராவிடர் திருநாள்” என்று சூழ்ச்சியாக மாற்றி வருகிறீர்கள்!
ஓர் இனத்தின் பெயரை அழிப்பது இனப்படுகொலைக்குச் சமம்! ஐயா வீரமணி அவர்களே, கருத்துக் களத்தில் தமிழினப் படுகொலை செய்யாதீர்கள்!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT