உடனடிச்செய்திகள்

Saturday, September 28, 2013

நிதி ஒதுக்கீட்டைப் பாதியாக வெட்டி தமிழ் நாட்டை வஞ்சிக்கும் இரகுராம் ராஜன் குழு பரிந்துரை - தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்.


நிதி ஒதுக்கீட்டைப் பாதியாக வெட்டி தமிழ் நாட்டை வஞ்சிக்கும் இரகுராம் ராஜன் குழு பரிந்துரை த.தே.பொ.க பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் கண்டனம்.

நாம் மதிப்பிட்டதைப் போலவே இந்திய அரசு தனக்கு ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை  மாநிலங்களின் மீது சுமத்துவதற்கு உறுதியான திட்டம் தீட்டிவிட்டது. அதிலும் தமிழ் நாட்டை வஞ்சிப்பதில் குறியாக உள்ளது.  இந்திய அரசு தான் வசூலிக்கும் வரி வருமானத்தில்  மாநிலங்களுக்கு பிரித்துக் கொடுக்கும் தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது  என்பது குறித்து ஆய்வு செய்ய  இந்திய நிதியமைச்சர் நியமித்த இரகுராம்ராஜன் குழு  அளித்துள்ள அறிக்கை 26.09.2013 அன்று வெளியாகி உள்ளது.

இரகுராம் ராஜன் குழு தனது பரிந்துரையை கடந்த செப்டம்பர் 2 ஆம் நாளே நிதியமைச்சரிடம் அளித்துவிட்ட போதிலும் அவ்வறிக்கை  நிதியமைச்சகத்தின் ஆய்வுக்குப் பிறகு இப்போது வெளியிடப்பட்டுள்ளது.

மறைமுக வரியிலும், நேரடி வரியிலும் இந்திய அரசு திரட்டும் வருவாயில் ஒரு குறிப்பிட்ட பகுதி மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கப்படுகிறது. பகிர்ந்தளிக்கப்படும் வரியினங்களின் பங்கீட்டு விகித்ததை தீர்மானிக்கவும், மாநிலங்களுக்கு என ஒதுக்கப்படும் பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பிரித்துக் கொடுப்பது என்பது குறித்து முடிவு செய்யவும் ஐந்து ஆண்டுக்கு ஒருமுறை நிதி ஆணையம் அமைக்கப்படுகிறது. இப்போது 13 ஆவது  நிதி ஆணையம் செயலில் உள்ளது.

நிதி ஆணையம் என்பது அரசமைப்புச் சட்டப்படி நிறுவப்படும் அமைப்பாகும். அது இருக்கும் போதே அரசமைப்புச் சட்டத்திற்கு தொடர்பில்லாமல் தனது அதிகாரத்தை பயன்படுத்தி அதே செய்தி குறித்து முடிவு செய்ய  இன்னொருக் குழுவை  நியமைச்சர் ப.சிதம்பரம் நியமித்ததே கடும் அத்துமீறலாகும்.

நிதியாணையம் அனைத்து மாநில அரசுகளிடமும் கருத்துக் கேட்டப் பின்பே தனது பரிந்துரையை அளிக்கிறது.  ஆனால், நிதியமைச்சர் நியமித்த  நிதிப்பங்கீட்டு குழுவுக்கு அப்படி ஒரு சட்டக் கடப்பாடே இல்லை. எனவே, தானடித்த மூப்பாக இப்பரிந்துரையை அளித்துள்ளது.

இந்தியாவில் உள்ள 28 மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளுக்கு பகிர்ந்தளிக்கப்படும் ஒட்டுமொத்த வரிப்பங்குத்தொகையை பல்வேறு மாநிலங்களுக்கிடையே எவ்வாறு பகிர்ந்தளிப்பது என்பதற்கு  இரகுராம் ராஜன் குழு அளித்துள்ளப் பரிந்துரையை உற்று நோக்கினால், செயல்திறன் உள்ள மாநிலங்களை தண்டிக்கும் நோக்கில் அது அமைந்துள்ளதைப் புரிந்துகொள்ளலாம்.  குறிப்பாக இப்பரிந்துரை  தமிழகத்தின் மீதுமிகக் கொடுமையான நிதித்தாக்குதலைத் தொடுக்கிறது.

மாநிலங்களுக்கு பகிர்ந்தளிக்கத் தகுதியான ஒட்டுமொத்த வரி நிதியில் அனைத்து மாநிலங்களுக்கும்  தலா 8.4 விழுக்காட்டுத் தொகை  வழங்கப்படும் என்றும் மீதம் உள்ள 91.6 விழுக்காட்டு நிதியை தேவை அதிகமுள்ள மாநிலங்களுக்கு  முக்கால் பங்கும் செயல்திறன் உள்ள மாநிலங்களுக்கு கால்பங்கும் என்ற அளவில் பிரித்துக்கொடுக்கலாம் என்றும் இரகுராம் ராஜன் குழு அறிக்கை வரையறுக்கிறது. 

தேவையுள்ள மாநிலங்கள் (needed states) என்பதைத் தீர்மானிக்க வளர்ச்சியின்மையை (underdevelopment ) அளவுகோலாக இரகுராம்ராஜன் குழு வைத்துக்கொள்கிறது. வளர்ச்சி குறித்த 10 முக்கிய அளவுகோல்களைக் கொண்டு வளர்ச்சியின்மைக் குறியீட்டை (underdevelopment  index)      இக்குழு வரையறுத்தது.

1)       மாநிலத்தின் தனி நபர் மாத நுகர்வுச் செலவு 2) கல்வி நிலை 3) உடல் நலம் 4) குடும்பத்தில் உள்ள வசதிகள் 5) வறுமை விகிதம் 6)பெண் கல்வி 7) மாநில மக்கள் தொகையில்  தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்கள் தொகை விகிதம் 8) நகரமயமாக்கல் விகிதம் 9) மக்களிடையே நிதி ஆதாரப்பகிர்வு 10) சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள்  ஆகிய  பத்து கூறுகளில்  ஒரு  மாநிலம் எந்த அளவுக்கு பின் தங்கியிருக்கிறதோ அந்த அளவுக்கு அதற்கான வளர்சியின்மைக் குறியீடு வழங்கப்படும்.

இந்த வளர்ச்சியின்மைக் குறியீட்டின் அடிப்படையில் இந்தியாவில் உள்ள மாநிலங்களை  மூன்று தொகுதிகளாக இரகுராம் ராஜன் குழு வகைப்படுத்துகிறது.

முற்றிலும் எந்த வளர்ச்சியும் இன்மை என்பதை  1 ஆகக் கொண்டு இந்த குறியீட்டு அளவு  தீர்மானிக்கப்பட்டது.   இதன்படி 0.6 க்கு மேல் வளர்ச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள்  “மிகவும் வளர்ச்சிக்குறைவான   மாநிலங்கள்    (least developed) என்றும், 0.4 க்கும் 0.6 க்கும் இடைப்பட்ட வளர்ச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள்  “வளர்ச்சிக் குறைவான   (less developed)  மாநிலங்கள் என்றும் 0.4 க்குக் கீழ் வளச்சியின்மைக் குறியீடு உள்ள மாநிலங்கள் ஒப்பீட்டளவில் வளர்ந்த  (relatively developed)  மாநிலங்கள்  என்றும் வகைப்படுத்தப்படுகின்றன.  

பீகார் , மத்தியப் பிரதேசம்,  இராசஸ்தான், உத்திரப்பிரதேசம் உள்ளிட்ட பெரும்பாலான வட மாநிலங்கள்  மிகவும் வளர்ச்சிக் குறைவான மாநிலங்கள் என்றப் பட்டியலில் வருகின்றன. இவற்றிக்கு நிதித்தேவை அதிகம் என மதிப்பிடப்பட்டு கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும் என்பதே இரகுராம்ராஜன் குழுவின் பரிந்துரை.

இவ் வகைப்பாட்டின்படி குசராத் , ஆந்திரா, பஞ்சாப்  போன்ற மாநிலங்கள் கூட வளர்ச்சிக்குறைவான மாநிலங்கள்  எனப் பட்டியலிடப்பட்டு அவற்றிக்கு தமிழ்நாட்டைவிட கூடுதல் நிதி ஒதுக்கீடு கிடைக்க வழி செய்யப்பட்டுள்ளது.

ஆனால், தமிழ்நாட்டு வளர்ச்சியின்மைக் குறியீட்டில்  0.34 பெற்று ஒப்பீட்டளவில் வளர்ந்த மாநிலம் எனற கிரீடம் சூட்டப்பட்டு  நிதி ஒதுக்கிட்டில் கீழ் நிலையில் வைக்கப்படுகிறது.

கல்வி, சாலை வசதி உள்ளிட்டவற்றில் பிற மாநிலங்களைவிட  சொந்த முயற்சியில்  முன்னேற்றம் கண்டதால் தமிழ் நாட்டிற்கு இரகுராம் ராஜன் குழு அளிக்கிற பரிசு இது.

வரி வசூலில் தமிழ்நாடு இந்தியாவின் பெரும்பாலான பிற மாநிலங்களை விட திறன் பெற்ற மாநிலமாகும்.  இங்கேயும் வரி ஏய்ப்பவர்கள் உண்டு என்றாலும் ஒப்பீட்டளவில் குறைவு.

 தொழில் வளர்ச்சியில் முதன்மை மாநிலமாகக் கூறப்படும் குசராத், மகாராட்டிராவை விட தமிழ்நாட்டில்  வரி வசூல் விகிதம் அதிகமாகும்.  2012-2013 ஆம் நிதியாண்டில் தமிழ் நாட்டிலிருந்து இந்திய அரசு அள்ளிச்சென்ற வரி வருவாய் ஏறத்தாழ 85 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.  இது இந்திய அரசின் ஒட்டுமொத்த வரி வசூலில் 14.12 விழுக்காடு ஆகும்.

ஆனால் இந்திய அரசு கடந்த  நிதி ஆண்டு  தமிழகத்திற்கு ஒதுக்கிய வரிப் பங்கீடு மற்றும் மானியங்களின்  மொத்த அளவு ஏறத்தாழ 25 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்.

மாநிலங்களுக்கென்று இந்திய அரசு ஒதுக்கீடு செய்யும் மொத்த நிதித்தொகையில் தமிழகத்திற்கு வழங்குவது 4.18 விழுக்காடே ஆகும். அதாவது 14.12 விழுக்காடு எடுத்துக்கொண்டு வரிப் பங்காக 4.18 மட்டுமே வழங்குகிறது.

13 ஆவது நிதி ஆணையம் இந்திய அரசு  மாநிலங்களுக்கு ஒதுக்கிடு செய்யும் மொத்த நிதித் தொகையில் தமிழ்நாட்டுக்கு 5.01 விழுக்காடு அளிக்க வேண்டும் என்று பரிந்துரைத்தது.  திட்டக்குழு  4.46  விழுக்காடு பகிர்ந்த்தளிக்க வேண்டும் எனப் பரிந்துரைத்தது. ஆனால் இந்திய அரசு தமிழத்திற்கு அளித்ததோ 4.18 விழுக்காடு  தொகை.

 இதையும் ஏறத்தாழ பாதியாகக் குறைத்து 2.51   விழுக்காடு தொகையை தமிழ் நாட்டிற்குக் கொடுத்தால் போதும் என இரகுராம் ராஜன் குழு பரிந்துரை செய்துள்ளது.

ஒப்பீட்டளவில் வளர்ச்சியடைந்த மாநிலங்கள் என்றப் பட்டியலில்  தமிழ்நாட்டை விட  முன்னே உள்ள கேரளாவுக்கு செய்த நிதி ஒதுக்கீட்டையும் விட இது குறைவானது.  இதற்கு முன்னர் மாநிலங்களுக்கு இடையில் நிதிப்பகிர்வு வழங்குவதற்காக உருவாக்கபட்ட  காட்கில் வழிமுறை (பார்முலா), காட்கில்- முகர்ஜி வழிமுறை  ஆகிய  அனைத்தையும் விட இரகுராம் ராஜன் குழு வழிமுறை தமிழகத்தைப் பெரிதும் வஞ்சிக்கக்கூடியது.

இந்திய அரசு தமிழ் நாட்டிலிருந்து அள்ளிச்செல்லும் வரி வருமானத்தில் பாதியையாவது தமிழகத்திற்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்ற தமிழக மக்களின் கோரிக்கையை ஆய்வு செய்வதற்குப் பதிலாக, இருக்கும் குறைவான ஒதுக்கீட்டையும் இன்னும் பாதியாகக் குறைப்பது  இந்திய அரசின் தமிழினப் பகைப் போக்கில் இன்னும் ஒரு கொடிய நடவடிக்கையாகும்.

இந்திய அரசின் இந்த நிதித் தாக்குதலை எதிர்கொள்ள தமிழக முதலமைச்சர் செயலலிதா தமிழ்நாட்டின் அனைத்து தரப்பினரையும் ஒருங்கிணைத்துக்கொண்டு இந்திய அரசுக்கு அழுத்தம் தர வேண்டும். இரகுராம் ராஜன் குழு பரிந்துரையை  இந்திய அரசு ஏற்கக் கூடாது என வலியுறுத்த வேண்டும்.


இந்திய அரசு தனது நயவஞ்சகத்தை தொடருமேயானால் தமிழகத்திலிருந்து இந்திய அரசு வரி வசூல் செய்வதை தடுப்போம் என தமிழக அரசும் மக்களும் களம் இறங்கவேண்டிய  நேரமிது. 
    
                                                                                  கி.வெங்கட்ராமன் 
 பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம் :  சிதம்பரம்

Friday, September 27, 2013

இசுலாமியரை இனப்படுகொலை செய்த நரேந்திரமோடியே தமிழகத்திற்குள் நுழையாதே! சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தோழர் பெ.மணியரசன் உள்ளிட்ட தோழர்கள் கைது!

இசுலாமியர்களை இனப்படுகொலை செய்யத் துணை நின்ற குசராத் முதல்வரும், பாரதிய சனதாக் கட்சி இந்தியப் பிரதமர் வேட்பாளருமான நரேந்திர மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்புத் தெரிவித்து, 26.09.2013 வியாழன் அன்று சென்னையில் கருப்புக் கொடி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்கள் கைது செய்யப்பட்டனர்.

மே பதினேழு இயக்கம் சார்பில், பல்லாவரம் பேருந்து நிலையம் அருகில் காலை 11 மணியளவில் நடைபெற்ற இப்போராட்டத்திற்கு, மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி தலைமையேற்றார். மோடிக்கு எதிராக முழக்கங்கள் எழுப்பிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், திராவிடர் விடுதலைக் கழக காஞ்சிபுரம் மாவட்டச் செயலாளர் தோழர் டேவிட் பெரியார் உள்ளிட்ட 50க்கும் மேற்பட்ட தோழர்களைக் காவல்துறை கைது செய்தது
.
த.தே.பொ.க. சார்பில் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி, சென்னை த.தே.பொ.க. செயலாளர் தோழர் தமிழ்ச்சமரன், த.இ.மு. சென்னை செயலாளர் தோழர் கோவேந்தன், பல்லாவரம் செயலாளர் தோழர் கோ.நல்லன் உள்ளிட்ட திரளான த.தே.பொ.க. தோழர்கள் இதில் கலந்து கொண்டு கைதாயினர்.

பல்லாவரம் ஆதித்தனார் திருமண நிலையத்தில் தங்க வைக்கப்பட்ட தோழர்கள் அனைவரும் மாலை விடுதலை செய்யப்பட்டனர்.
P1120274
P1120281
P1120288
P1120299
P1120304
(செய்தி : த.தே.பொ.க.செய்திப் பிரிவு, படங்கள் : பாலா)

Monday, September 23, 2013

தமிழர்களின் தேர்தல் வெற்றியும் சிங்கள இனவாத பூதமும் - தோழர் பெ.மணியரசன் அறிக்கை


தமிழர்களின் தேர்தல் வெற்றியும் சிங்கள இனவாத பூதமும்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்
தோழர் பெ.மணியரசன் அறிக்கை

ஈழத் தமிழர்களின் தாயக மாநிலங்களில் ஒன்றான வடக்கு மாநில ஆட்சி மன்றத்திற்கு 21.9.2013 அன்று நடந்த 38 இடங்களுக்கான தேர்தலில் முப்பது இடங்களில் பெரும் வாக்கு வேறுபாட்டில் தமிழ்த் தேசியக் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. ஏழு இடங்களில் இராசபட்சேயின் கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. இலங்கை முஸ்லிம் காங்கிரசு ஓர் இடத்தில்  வெற்றி பெற்றுள்ளது.

மொத்தம் செல்லுபடியான 4,43,394 வாக்குகளில் தமிழ்த் தேசியக் கூட்டணி 3,53,595 (80%) வாக்குகளும், இராசபட்சே கூட்டணி 82,838 (18.38%) வாக்குகளும் முஸ்லிம் காங்கிரசு 6,761 வாக்குகளும் பெற்றுள்ளன.

      இந்த மிகப்பெரும் வெற்றி, தமிழ்த் தேசியக் கூட்டணிக்கு நேர் வகையாகக் கிடைத்தது அல்ல. “1½ இலட்சம் மக்களை இனப்படுகொலை செய்து, அதன் பின் தமிழர் தாயகத்தை இராணுவ வளையத்துக்குள் வைத்து, அவர்களின் குடிமை உரிமைகளைப் பறித்துள்ள இராசபட்சே ஆட்சியை நாங்கள் ஏற்கவில்லை” என்பதை அழுத்தந் திருத்தமாக உலகுக்குத் தெரிவிக்கும் ஒரு வாய்ப்பாக இத் தேர்தலைத் தமிழீழ மக்கள் பயன்படுத்தியுள்ளனர்.

      சாலை வசதி, மின்விளக்கு வசதி போன்ற உள் கட்டுமான நிறை வேற்றங்களைக் காட்டி வாக்குக் கேட்டது இராசபட்சே அரசு. தாயக விடுதலைக்காக இலட்சக்கணக்கான உறவுகளை இழந்து, 90 ஆயிரம் தமிழ்ப்பெண்கள் விதவைகளாக்கப்பட்டு, பல்லாயிரம் குழந்தைகள் அனாதைகள் ஆக்கப்பட்டு– பல்லாயிரக்கணக்கானோர் ஊனமுற்றோர் ஆக்கப்பட்டு- இரணுவத்தால் சூழப்பட்ட பணயக் கைதிகளாக வாழ்ந்து கொண்டிருக்கும் தமிழ்மக்கள் இக்கொடுமைகளை இழைத்த இராசபட்சே கும்பலுக்குப் பதிலடி கொடுக்கும் வகையிலும், தாயக உரிமைக்குத்தான் முன்னுரிமை தருவோமே தவிர, சில உள்கட்டுமான வேலைப்பாடுகளுக்கு அல்ல என்பதை உணர்த்தும் வகையிலும் தீர்ப்பு வழங்கியிருக்கிறார்கள்.

            ஈழத் தமிழர்களை யாரும் ஏமாற்ற முடியாது. சம்பந்தர்-விக்னேசுவரன் அரசியல் தலைமை உண்மையான தாயக உரிமை மீட்பிற்குத் தன்னை ஒப்படைத்துக் கொண்ட தலைமை அன்று என்பது ஈழத்தமிழர்களுக்குத் தெரியும்.

      கட்டுப்படுத்தப்பட்ட வாய்ப்பாக இருந்த போதிலும் இதைப் பயன்படுத்திப் பன்னாட்டு சமூகத்திற்குத் தங்களின் மன உணர்வையும் – தேவையையும் சனநாயக வழியில் தெளிவாக வெளிப்படுத்தி விட்டார்கள் தமிழ் ஈழ மக்கள்.அவர்களுக்கு நம் வாழ்த்துகள்.

      ஈழத்தமிழர்களின் இந்தத் தீர்ப்பை இந்தியா மதிக்குமா? கொலைகார இராசபட்சே அரசுடன் கூடிக் குலாவுவதை நிறுத்திக் கொண்டு, 1987 – இல் இலங்கையுடன் போட்டுக் கொண்ட ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள குறைந்த அளவிலான மாநில உரிமைகளையாவது தமிழ்த் தேசியக் கூட்டணி அரசுக்குப் பெற்றுத் தருமா? வடக்கு – கிழக்கு மாநிலங்களிலிருந்து முற்றாக இராணுவத்தை வெளியேற்ற இந்தியா அழுத்தம் கொடுக்குமா? ஈழத்தமிழர்களுக்குக் குடிமை உரிமைகள் கிடைக்க முயலுமா என்பவை நம்முன் உள்ள வினாக்கள்.

      விடுதலைப் புலிகள், தமிழ் ஈழ மக்களை அச்சுறுத்திப் பணிய வைத்திருந்த பயங்கரவாத அமைப்பு என்ற மாயையிலிருந்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகள் வெளிவருமா? மக்களின் உண்மையான தலைமைதான் தமிழீழ விடுதலைப் புலிகள் என்ற மெய்மையை இப்போதாவது உணருமா? இராசபட்சே இராணுவக்கும்பல் நடத்திய இன அழிப்புக்குற்றங்களை விசாரிக்கப் பன்னாட்டுப் புலனாய்வு மன்றம் அமைக்குமா? இவையெல்லாம் விடையிறுக்கப்பட வேண்டிய வினாக்கள்.

      1987 – இல் போடப்பட்ட இராஜீவ் காந்தி- செயவர்த்தனா ஒப்பந்தம் தமிழர்களுக்கு உரிமைகளை வாரி வழங்கும் அமுதசுரபி     என்று வர்ணிக்கப்பட்டு – விடுதலைப் புலிகள் மீது திணிக்கப்பட்டது. அப்போது 4.8.1987 அன்று தமிழீழத் தேசியத் தலைவர் பிராபகரன் அவர்கள் சுதுமலைக் கூட்டத்தில் கூறிய சொற்கள் நினைவுக்கு வருகின்றன:

“இந்திய – இலங்கை ஒப்பந்தத்தில் கூறப்பட்டுள்ள கொஞ்சநஞ்ச உரிமைகளையும் சிங்கள இனவாத பூதம் விழுங்கிவிடும்.”


அதே சிங்கள இனவாத பூதம் தான் இப்போதும் இலங்கை அரசில் உள்ளது.

Friday, September 20, 2013

சென்னை திரைப்பட விழாவில் தமிழ்த் திரைப்பட விழா உண்டா? இல்லையா? தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும் - தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்


சென்னை திரைப்பட விழாவில்
தமிழ்த் திரைப்பட விழா உண்டா? இல்லையா?
தமிழக அரசு தெளிவு படுத்த வேண்டும்.
தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் வேண்டுகோள்.

இந்திய திரைப்பட நூற்றாண்டு விழாவை சென்னையில் 21.09.2013 முதல் 24.09.2013 வரை நேரு உள்விளையாட்டரங்கில் தமிழ்நாடு அரசும், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையும் சேர்ந்து நடத்துவது பாராட்டிற்குரியது. 21.09.2013 மாலை விழாவைத் தொடக்கிவைத்து தமிழக முதலமைச்சர் அவர்கள் பேருரை ஆற்ற உள்ளதும் வரவேற்கத்தக்கது. அவ்விழாவில் கன்னடத் திரைப்பட விழா, (22.09.2013 - முற்பகல்), தெலுங்குத் திரைப்பட விழா (22.09.2013 - பிற்பகல்), மலையாளத் திரைப்பட விழா (23.09.2013 – முற்பகல்) ஆகியவை நடக்க உள்ளதாகவும், அந்தந்த விழாவிலும் அந்தந்த மாநில அமைச்சர்கள் கலந்து கொள்வதாகவும் தமிழக அரசு விளம்பரத்தில் (தினத்தந்தி : 20.09.2013) குறிப்பிடப்பட்டுள்ளது. நிறைவு விழாவில் (24.09.2013) குடியரசுத் தலைவர், தமிழக ஆளுநர் மற்றும் தென் மாநிலங்கள் நான்கின் முதலமைச்சர்கள் உரையாற்றுவார்கள் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிகழ்ச்சி நிரலில்தமிழ்த் திரைப்பட விழாபற்றி குறிப்பேதும் இல்லை. கன்னட, தெலுங்கு, மலையாளத் திரைப்பட விழா போல் அவ்விழாவில் தமிழ்த்திரைப்பட விழா நடைபெறுகிறதா இல்லையா? ஏன் தமிழ்த் திரைப்பட விழா விடுபட்டுள்ளது? மற்ற மாநிலங்களின் அமைச்சர்கள் அவரவர் மொழித் திரைப்படவிழாவில் கலந்து கொள்ளும் போது, தொடர்புடைய தமிழக அமைச்சர்கள் கலந்து கொள்வதாக தமிழகஅரசு விளம்பரத்தில் அறிவிக்கப் படவில்லையே ஏன்?
நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெறும் விழாவில் தமிழ்த் திரைப்பட விழாவும் இடம்பெற வேண்டும். அதில் மற்ற மாநில அமைச்சர்களைப் போல தமிழக அமைச்சர்களும் கலந்து கொள்ள வேண்டும்.

இதற்குரிய நடவடிக்கைகளைத் தமிழக அரசு உடனடியாக எடுக்க வேண்டும் என்று தமிழ்த் தேசப் பொதுவுடமைக் கட்சி சார்பாகக் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம் : சென்னை

போராடும் பார்வையற்ற மாணவர்களுடன் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்


போராடும் பார்வையற்ற மாணவர்களுடன்
தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்த வேண்டும்.
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி வலியுறுத்தல்

மனித மாண்புள்ள சமுதாயத்துக்கான அடையாளங்களில் ஒன்று மாற்றுத் திறனாளிகளை அச்சமூகம் எவ்வாறு மதிக்கிறது என்பதாகும். மனித நேய ஆட்சிக்கு அடையாளமாகவும் அது அமைகிறது.

ஆனால் பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளைத் தமிழக அரசு அணுகும் முறை இங்கு மனித நேய ஆட்சி நடக்கிறதா என்ற கேள்வியை எழுப்புகிறது.

கடந்த மூன்று நாட்களாக பார்வையற்ற மாணவர்களும், பட்டதாரி இளையோரும் சென்னையில் சாலை மறியல் போராட்டம் நடத்தி வருகிறார்கள். பார்வையற்ற இளையோருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை வழங்க வேண்டும், உதவித் தொகையை உயர்த்த வேண்டும் என்பன உள்ளிட்ட சில கோரிக்கைகளை வைத்து இப்போராட்டத்தை அவர்கள் நடத்துகிறார்கள்.

அவர்களை அழைத்து பேசி, அவர்களது கோரிக்கைகளை பரிவுடன் கவனிக்க வேண்டிய தமிழக அரசு பாராமுகமாக இருக்கிறது. இந்நிலையில் 19.09.2013 அன்று சாலை மறியல் செய்த பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளை கைது செய்து மண்டபத்தில் அடைத்து வைத்தத் தமிழகக் காவல்துறையினர் அவர்களில் 19 பேரை கிழக்குக் கடற்கரைச் சாலையில் ஆள்நடமாட்டம் குறைவான இடத்தில் இறக்கி விட்டு விட்டதாக செய்திகள் வந்துள்ளன. காவல்துறையின் இச்செயல் கொடுமையானது. இதனைத் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.

போராடும் பார்வையற்ற திறனாளிகளிடம் தமிழக அரசு பேச்சு வார்த்தை நடத்தி அவர்களது கோரிக்கைகளை பரிவுடன் பரிசீலிக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

தோழமையுடன்
இடம் : சென்னை                                                                                                                                                          கி.வெங்கட்ராமன்,
பொதுச் செயலாளர், தமிழ்த் தேசப் பொதுவுடைக் கட்சி

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT