Wednesday, September 28, 2011
தமிழினத் தற்காப்பு மாநாட்டு - காணொளிகள்
Tuesday, September 27, 2011
வெளிமாநிலத்தவர்க்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை கொடுக்க கூடாது - ஓசூர் த.தே.பொ.க. மாநாட்டில் தீர்மானம்!
1. 1956க்குப் பிறகு தமிழகத்தில் குடியேறிய வெளிமாநிலத்தவர்களுக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கக்கூடாது
தமிழகம் தொழில், வணிகம், கல்வி, வேலைவாய்ப்பு ஆகிய அனைத்து முனைகளிலும் வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரின் ஆக்கிரமிப்புக்கு உள்ளாகி வருகின்றது. தமிழகத்தின் பொருளியல் வளம் முழுவதும் வெளியாரின் கைகளுக்கு மாறி வருகின்றது. தமிழக தொழில் முனைவோரும், வணிகர்களும் உழைப்பாளர்களும் தமிழகத்திலேயே இரண்டாம் தர குடிகளாக மாற்றப்பட்டு வாழ் வுரிமையை இழந்து வருகிறார்கள்.
வடமாநிலங்களிலிருந்தும், கேரளம், கர்நாடகம், ஆந்திரம், வங்காளம் உள்ளிட்ட வெளி மாநிலங்களி லிருந்தும் மிகை எண்ணிக்கையில் வெளிமாநிலத்தவர் தமிழகத்தில் குடியேறி வருகின்றனர். தமிழகத்தின் நிலங்களும் மனைகளும் கட்டிடங்களும் வெளிமாநிலத்தவர்கள் கைகளுக்கு மாறி வருகின்றன.
இந்திய அரசின் துணையோடு, நடந்து வரும் இவ்வெளியார் ஆக்கிரமிப்பால் தமிழகம் கலப்பின மாநிலமாக மாறிவருகின்றது. இதே நிலை நீடித்தால், அடுத்த பத்தாண்டுகளில் தமிழகத்தில் தமிழர்களின் எண்ணிக்கை மக்கள் தொகையில் பாதியாக குறைந்துவிடும் ஆபத்து உள்ளது. தமிழகம் தமிழர்களின் வரலாற்றுத் தாயகம் என்ற அடிப்படை உரிமை பறிக்கப்பட்டு தமிழ்நாட்டிலேயே தமிழர்கள் ஏதிலிகளாக மாறும் அவலம் சூழ்ந்துள்ளது. மொழிவழி மாநிலம் அமைக்கப்பட்டதே பொருளற்றதாக மாறி வருகின்றது.
இதனால் தான், மாநிலச் சீரமைப்புச் சட்டப்படி மொழிவழி மாநிலமாக தமிழ்நாடு உருவான 1956 நவம்பர் 1-க்குப் பிறகு தமிழ்நாட்டில் குடியேறிய வெளி மாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டினரை வெளியேற்ற வேண்டும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தொடர்ந்து போராடி வருகின்றது.
இத்திசையில், முதல் கட்டமாக கீழ் வரும் கோரிக்கைகளை இந்திய, தமிழக அரசுகள் நிறைவேற்றித் தர வேண்டும் என தமிழினத் தற்காப்பு மாநாடு வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறது.
1. 1956க்குப் பிறகு தமிழகத்தில் குடியேறிய வெளிமாநிலத்தவர்களுக்கு தமிழ்நாட்டில் வாக்காளர் அட்டை, குடும்ப அட்டை வழங்கக் கூடாது. ஏற்கெனவே வழங்கியிருந்தால் அவற்றை நீக்க வேண்டும்.
2. தமிழ்நாட்டுக் கல்வி நிலையங்களில் குறைந்தது 85 விழுக்காட்டு இடங்களை தமிழ்நாட்டு மாணவர்களுக்கே வழங்க வேண்டும்.
3. தமிழகத்தில் இயங்கும் இந்திய அரசு நிறுவனங்களில் குறைந்தது 85 விழுக்காடு பணியிடங்கள் தமிழ்நாட்டு மக்களுக்கே வழங்க வேண்டும். தமிழ்நாட்டில் நடப்பில் உள்ள இட ஒதுக்கீடு அங்கு செயலாக வேண்டும்.
4. தமிழ்நாட்டில் தொழில், வணிகம் தொடங்கும் வெளிமாநிலத்தவர் மற்றும் வெளிநாட்டவர் குறைந்தது 51 விழுக்காடு தமிழ்நாட்டுப் பங்குதாரர்களை சேர்த்துக் கொண்டால் மட்டுமே அந்நிறுவனங்களுக்கு உரிமம் வழங்கப்பட வேண்டும்.
5. தமிழ்நாட்டில் வெளிமாநிலத்தவர் மற்றம் வெளிநாட்டினர் நிலம், மனை, கட்டிடம் வாங்க தடை விதிக்க வேண்டும்.
1956க்குப் பிறகு தமிழகத்திற்கு வந்த வெளிமாநிலத்தவருக்கு குடும்ப அட்டை, வாக்காளர் அட்டை வழங்கக் கூடாது என்ற கோரிக்கையை வலியுறுத்தி பரப்புரைப் பயணங்கள் தொடங்கி பல்வேறு தொடர் போராட்டங்களை நடத்துவது என இம்மாநாடு தீர்மானிக்கிறது. இவ்வாறான இயக்கங்களிலும், போராட்டங்களிலும் எந்த வேறுபாடும் இன்றி தமிழர்கள் அனைவரும் பங்கேற்று தமிழ் இனத்தைத் தற்காத்துக் கொள்ள முன்வருமாறு அனைவரையும் இம்மாநாடு அழைக்கிறது.