உடனடிச்செய்திகள்
Showing posts with label பேச்சு. Show all posts
Showing posts with label பேச்சு. Show all posts

Tuesday, April 23, 2013

தமிழ்த் தேசியம் கலவைக் கொள்கையல்ல தனித்துவமான கருத்தியல் – தோழர் பெ.மணியரசன் பேச்சு!



”தமிழ்த் தேசியம் கலவைக் கொள்கையல்ல தனித்துவமான கருத்தியல்”
வழக்கறிஞர் பாவேந்தன் இல்லத் திருமண விழாவில்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேச்சு!


தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கத்தின் தலைவர்களில் ஒருவரான வழக்கறிஞர் பாவேந்தன் – திருவாட்டி சாந்தி ஆகியோரின் மகன் செல்வன் பாரிக்கும், ஈரோடு மாவட்டம், குன்றத்தூர், பொறியாளர் கி. நடராசன் – திருவாட்டி சாரதா ஆகியோரின் மகள் செல்வி சிந்துவர்சாவுக்கும் சொல்லாய்வறிஞர் ப. அருளியார் அவர்கள் தலைமையில், கோபிச்செட்டிப்பாளையத்தில் 21.4.2013 அன்று திருமணம் நடைபெற்றது.

அத்திருமணத்தில் வாழ்த்துரை வழங்கிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்களது பேச்சின் சுருக்கமான எழுத்து வடிவம்:

“இங்கு வாழ்த்துரை வழங்கிய வழக்கறிஞர் ப.பா. மோகன் அவர்கள் ஒரு சிறந்த கருத்துச் சொன்னார். தமிழ்த் தேசியமும் தமிழ்த் தேச விடுதலையும் தேவையென்றார். வழக்கறிஞர் ப.பா.மோகன் அவர்கள் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சியின் முன்னணித் தலைவர்களில் ஒருவர். மக்களுக்காகவும், தமிழ் இனத்துக்காகவும் போராடி சிறை செல்பவர்களுக்கு கட்டணமின்றி வழக்கு நடத்துபவர். வழக்குகளில் விடுதலை வாங்கித் தருவார். அவரை நான் போராட்டக் காவலன் என்று அழைப்பதுண்டு.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியில் உள்ள வழக்கறிஞர் தமிழ்த் தேசியம் குறித்து இவ்வளவு சிறப்பாகவும் அழுத்தமாகவும் பேசியது கால மாற்றத்தின் அறிகுறியாகும். தமிழ்ச்சமூகத்திற்குள் இன்று உருவாகி வரும் ஒரு மாற்றத்தை, பெரிய பாய்ச்சலுக்கான ஓர் உள்இயக்கத்தை அறிவிக்கும் வெளிப்பாடாக அவரது பேச்சை நான் கருதுகிறேன்.
மார்க்சியம், பெரியாரியமும், அம்பேத்கரியம் ஆகிய கருத்துக்களை உள்வாங்கிக்கொண்டு செயல்பட வேண்டு மென்றார்.

தமிழ்த் தேசியம் என்பது இன்று ஒரு தனித்துவமான சித்தாந்தமாக – கருத்தியலாக வளர்ந்து வருகிறது. ஏற்கெனவே தமிழ்மொழி சார்ந்து, தமிழ் இனம் சார்ந்து அமைப்புகள் செயல்பட்டிருக்கின்றன. போராட்டங்கங்கள் நடந்திருக்கின்றன. பெருமளவுக்கு தியாகங்கள் நடந்திருக்கின்றன. ஆனால் அப் பொழுதெல்லாம். தமிழ்த்தேசியம் என்ற ஒரு சித்தாந்தம் முன் வைக்கப்படவில்லை, வளர்க்கப்படவில்லை. இப்பொழுதுதான் தமிழ்த்தேசியம் என்ற சித்தாந்தத்தை முன் வைத்து அதனை வளர்த்து வருகிறோம்.

தமிழ்த் தேசியம் தனக்குத் தேவையானதை மார்க்சியத்திடமிருந்தும் பெரியாரியத்திலிருந்தும் அம்பேத்கரியத்திடமிருந்தும் எடுத்துக்கொள்ளும். ஆனால் தமிழ்த்தேசியம் என்பது மார்க்சியம், பெரியாரியமும், அம்பேத்கரியம் ஆகியவற்றின் கலவையல்ல. தமிழ்த் தேசியம் தனித்துவமானது. அது தமிழர் அறம் என்ற மெய்யியலின் மேல் நிற்கிறது. தமிழர்களுக்கென்று இன அரசியல், மொழி அரசியல் இருக்கிறது. தமிழர்களுக்கென்று சக மனிதர்களோடு சமத்துவமாக வாழ்வதற்கான அறக்கோட்பாடு இருக்கிறது. இவற்றை மேலும் வளப்படுத்த புதிய கருத்தியல்களை உள்வாங்கிக் கொள்ளும் ஆற்றல் எப்பொழுதும் தமிழுக்கும், தமிழினத்திற்கும் இருந்து வந்திருக்கிறது. அந்த புரிதலோடுதான் தமிழ்த் தேசியம் ஒரு தனி சித்தாந்தம் என்று நான் சொல்கிறேன்.

சங்கக் காலத்தில் கணவன் மனைவியை சமத்துவ நோக்கில் தலைவன் – தலைவி என்றே அழைத்தார்கள். பிற்காலத்தில் தமிழினத்தில் பெண்ணடிமைக் கருத்துகள் ஏற்பட்டன. பெண்ணடிமைத்தனத்தை நம் சமூகத்திலிருந்து நாம் நீக்கியாக வேண்டும். மணமக்கள் பாரி – சிந்து திருமணம்; காதல் திருமணம் என்றார்கள். சாதி மறுப்புத் திருமணம் என்றார்கள். மணமக்களுக்கும், மணமகள் பெற்றோர்க்கும் நெஞ்சு நிறைந்தப் பாராட்டுகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசியல் பதவிகளுக்கு சாதியைப் பயன்படுத்த முனைவோர் சிலர், காதல் திருமணம் கூடாதென்கிறார்கள். நாடகக் காதல் என்கிறார்கள். சாதி ஒழிந்து விடுமோ என்று கிலி பிடித்துக் கிடக்கிறார்கள். அவர்கள் காதல் திருமணத்தை எதிர்ப்பதை பார்த்தால் சொந்த சாதிக்குள் கூட காதல் திருமணம் நடக்கக் கூடாது என்று கவலைப்படுவது போல் தெரிகிறது. இந்த தடைகளையெல்லாம் உடைத்து சாதி மறுப்புக் காதல் திருமணங்கள் பெருக்கத்தான் போகின்றன.

மணமக்களுக்கு ஒரே கருத்தை மட்டும் சொல்லி விடைபெறுகிறேன். காதல் திருமணம் செய்து கொண்டாலும், பிணக்குகள் வரத்தான் செய்யும். பிணக்கு இருக்கத்தான் வேண்டும். அது உப்பைப் போல் இருக்க வேண்டும். அப்பொழுது தான் கணவன் மனைவி வாழ்க்கையில் சுவை இருக்கும் என்று நம்முடைய பெரியவர் திருவள்ளுவர் சொன்னார். உப்பு இல்லாவிட்டால் உணவு சப்பென்று இருக்கும், உப்பு அதிகமாகி விட்டால் சாப்பிடமுடியாமல் கரிக்கும். உப்பைப் போல் அளவோடு பிணக்கு இருக்கட்டும் என்றார்.

இன்னொன்றையும் பெரியவர் சொன்னார். கணவன் மனைவியிடையே பிணக்கு வந்தால் நாள்கணக்கில் இருவரும் பேசிக்கொள்ளாமல் இருந்து விடக்கூடாது. கணவனோ அல்லது மனைவியோ வலிந்து போய் பேசினால் தோற்றுப் போனதாகும் என்று கெளரவம் பார்க்கக் கூடாது. ஊடல் என்ற பிணக்கில் வலிந்து போய் முதலில் பேசி பிணக்குத் தீர்ப்பவர்தான் வெற்றிப் பெற்றவர் ஆவார். அந்த வெற்றி இருவரின் வெற்றி. பின்னர் அவர்கள் மகிழ்ந்திருக்கும் போது அதன் பெருமை தெரியும் என்றார் அவர்.

பாரிக்கும் சிந்துவுக்கும் பிணக்கு வந்தால் உங்கள் தாத்தாவான திருவள்ளுவர் சொன்ன திருக்குறளை நினைத்து செயல்படுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்.


ஊடலில் தோற்றவர் வென்றார் அதுமன்னும்

கூடலில் கணப் படும். – குறள்

Sunday, November 25, 2012

சாதி மறுப்புத் திருமணங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது - தோழர் பெ.மணியரசன் பேச்சு


சாதி மறுப்புத் திருமணங்களை 
யார் நினைத்தாலும் தடுக்க முடியாது
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர்
தோழர் பெ.மணியரசன் பேச்சு!

சாதி மறுப்புத் திருமணங்களை யார் நினைத்தாலும் தடுக்க முடியாது என தர்மபுரி சாதி வெறியாட்டத்திற்கு எதிரான ஆர்ப்பாட்டத்தில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

தர்மபுரியில் தாழ்த்தப்பட்ட மக்கள் குடியிருப்புகளுக்கு சாதி வெறியர்கள் தீ வைத்த நிகழ்வைக் கண்டித்து, மே பதினேழு இயக்கம் சார்பில், நேற்று(24.11.2012) மாலை 4.30 மணியளவில், சென்னை வள்ளுவர் கோட்டத்தில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 

ஆர்ப்பாட்டத்தை, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவரான தோழர் உமர் ஒருங்கிணைத்தார். மே பதினேழு இயக்கத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் காந்தி முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், தமிழக மக்கள் புரட்சிக் கழகப் பொதுச் செயலாளர் தோழர் அரங்க குணசேகரன், மக்கள் சனநாயக குடியரசுக் கட்சித் தலைவர் தோழர் துரைசிங்கவேல், மே பதினேழு இயக்கத் தோழர்கள் ஹரிஹரன், அருள்முருகன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

தோழர் பெ.மணியரசன் அவர்கள் பேசுகையில், தர்மபுரியில் ஒடுக்கப்பட்ட மக்கள் குடியிருப்புகளை சாதி வெறிபிடித்த ஒரு கூட்டம், தீ வைத்துக் கொளுத்தி அட்டூழியம் செய்ததும், பொருட்களைக் கொள்ளையடித்ததும், தமிழ் இனத்திற்குத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது. 12.11.2012 அன்று நானும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களும் நேரில் சென்று எரியூட்டப்பட்ட, தாழ்த்தப்பட்ட மக்களின் வீடுகளைப் பார்த்த போது நெஞ்சு பதைத்தது.

ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் புகுந்து, ஒவ்வொரு அறையாக எரித்துள்ளனர் சாதி வெறியர்கள். உழைத்துச் சேர்த்த ரூபாய் நோட்டுகள் பாதி எரிந்த நிலையில் கிடந்ததைக் கொண்டு வந்து காட்டினார்கள் அம்மக்கள். தமிழீழத்தில், சிங்கள வெறியர்களால் அழிக்கப்பட்ட தமிழர் பகுதியைப் போல, ஒரே இனத்திற்குள் உள்ள சாதி ஆதிக்கவாதிகள் நடத்திய தாக்குதலால் பாதிக்கப்பட்ட வீடுகள் காட்சியளித்தன.

கூடங்குளத்தில், யார் யார் என்றே தெரியாமல் தோராயமாக 50,000 பேர் மீது வழக்குப் பதிவு செய்த காவல்துறை, தர்மபுரியில் வன்முறையில் ஈடுபட்டவர்கள் 1000க்கும் மேற்பட்டவர்கள் என்ற உண்மைத் தெரிந்த போதும் கூட, வெறும் 100 பேர் மீது மட்டுமே வழக்குப் பதிவு செய்ததில் என்ன ஞாயம் உள்ளது? வன்முறையில் ஈடுபட்ட சாதி வெறிக்கும்பலில், பெண்கள் இருந்ததாகவும் சொல்கின்றனர். அது உண்மையாக இருப்பின், அவர்கள் மீதும் தயக்கமின்றி வன்கொடுமைச் சட்டத்தைப் பயன்படுத்த வேண்டும். சாதி வெறியர்களைத் தண்டிக்க, தமிழக அரசு முன்மாதிரி நடவடிக்கைகளை  எடுக்க வேண்டும்.

தர்மபுரி தீ வைப்பு போன்ற கொடிய சம்பவங்கள் இனியும் நடைபெறாமலிருக்க நாம் என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும். சாதியை ஒழிக்கும் வகையில், சாதி மறுப்புத் திருமணங்களை அதிகம் நடத்த வேண்டும். அவ்வாறு சாதி மறுப்புத் திருமணம் செய்வோருக்கு, அரசு தனி இட ஒதுக்கீடு வழங்கி அவர்களுக்கு சலுகைகள் அளிக்க வேண்டும். அந்த இட ஒதுக்கீட்டின் அளவை ஆண்டாண்டுக்கு அதிகரிக்க வேண்டும்


உலகமயம் கோலோச்சுகின் இந்த காலகட்டத்தில், அதன் தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியின் விளைவால், பல தீமைகள் ஏற்பட்டுள்ள போதிலும் கூட, அதன் ஊடாக இளையோரிடம் சாதி, மதம் கடந்து காதல் மலர்வதும் நடைபெற்றுக் கொண்டிப்பது வரவேற்கத்தக்கது. இப்படி இளைய சமுதாயம் சாதி, மதம் கடந்து கலப்பு மணங்கள் புரிந்த கொண்டிருக்கும் நிலையில், சாதி மறுப்புத் திருமணங்களை எந்த காடுவெட்டி குருவாலும், சாதிச் சங்கங்களாலும் தடுக்க முடியாது. இன்னும் பதினைந்து ஆண்டுகளில், அணை உடைத்த வெள்ளம் போல், இளைஞர்கள் சாதியை உடைத்துக் கொண்டு காதல் திருமணம் செய்வது பெருகத்தான் போகிறது.

அண்மையில், விடுதலை சிறுத்தைகள் தலைவர் தோழர் தொல்.திருமாவளவன் அவர்கள் அளித்த பேட்டி ஒன்றில், தமிழ்த்தேசியவாதிகள் யாரும் தர்மபுரிக்கு வரவில்லை என்றும், தர்மபுரி தீ வைப்பு குறித்து மவுனம் சாதிப்பதாகவும் கேள்வி எழுப்பியிருக்கிறார். நாங்கள் எப்போது சாதி வெறியாட்டங்களை எதிர்த்துப் பேசாமல் மவுனமானோம் என அவருக்கு நாங்கள் திருப்பிக் கேட்கிறோம்.

தர்மபுரிக்கு தோழர் திருமாவளவன் சென்ற அதே நாளில் தான் நாங்களும் அங்கு சென்றிருந்தோம். இது அங்கிருந்த விடுதலை சிறுத்தைகள் தோழர்களுக்கும் தெரியும். எங்கள் கட்சி இதழான, தமிழ்த் தேசியத் தமிழர் கண்ணாட்டம் இதழில், தர்மபுரி சாதி வெறியாட்ட நிகழ்வு தமிழினத்திற்கேத் தலைக்குனிவை ஏற்படுத்தியுள்ளது என தலையங்கம் எழுதினோம்.

கடந்த ஆண்டு, பரமக்குடியில் ஒடுக்கப்பட்ட மக்கள் 7 பேர் தமிழகக் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், மதுரை, தஞ்சை, கோவை, சென்னை ஆகிய இடங்களில் போராட்டங்கள் நடத்தினோம். நானும், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உள்ளிட்ட, த.தே.பொ.க. தோழர்கள் பரமக்குடிக்கு நேரில் சென்று பார்த்தோம். காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை கொடுக்க வேண்டும் எனவும், மக்களை ஒடுக்கிய காவல்துறையினரை பணி இடைநீக்கம் செய்ய வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்தோம்.

இப்பொதுழும், தர்மபுரியில் வெறியாட்டம் நிகழ்த்திய சாதி வெறியர்களை வன்கொடுமைச் சட்டத்தில் கைது செய்ய வேண்டும் எனவும், பாதிக்கப்பட்ட மக்களின் வீடுகளுக்கு பாரபட்சமின்றி நிவாரணம் அளித்தும், புதிய வீடுகளைக் கட்டித் தந்தும் அவர்களை மறுபடியும் கவுரமாக வாழ வைக்க தமிழக அரசு முயற்சிகள் எடுக்க வேண்டுமெனக் கோருகிறோம்.


நத்தம் கிராமத்தை, 10 நிமிடத்தில் சென்றடைய முடியும் என்ற போதும், தர்மபுரியிலிருந்து பெரிய அளவில் காவலர்கள் சாதி வெறியர்களைத் தடுக்க வராதது ஏன்? அவர்களது உள்நோக்கம் என்ன? என்று கேள்வி எழுப்பியிருக்கிறோம். இதற்குக் காரணமான, காவல்துறை அதிகாரிகளை வேறு இடத்திற்கு மாற்றுவது தண்டனை ஆகாது என்பதால், அவர்களை உடனடியாக பணி இடைநீக்கம் செய்து,  அவர்களை விசாரணைக்கு உட்படுத்த வேண்டும் என்கிறோம். பணியில் உள்ள உயர்நீதிமன்ற நீதிபதித் தலைமையில், விசாரணை ஆணையம் அமைத்து குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டும் என்கிறோம்.

இவையெல்லாம் சாதி வெறிக்கு எதிரான தமிழ்த் தேசியவாதிகளின் செயல்பாடுகள் ஆகாதா? அல்லது விடுதலை சிறுத்தைகள் எங்களை தமிழ்த் தேசிய சக்திகளாகவே பொருட்படுத்துவதில்லையா? அவ்வாறெனில், வேறு யாரைத் தான் விடுதலை சிறுத்தைகள் தமிழ்த்தேசியவாதிகள் என அழைக்கிறார்கள் என்பதையாவது அவர்கள் தெளிவுபடுத்துவார்களா? எந்த அமைப்பை, எந்தத் தலைவரை நீங்கள் தமிழ்த் தேசிய அமைப்பென்றும், தமிழ்த் தேசியவாதி என்றும் கருதுகிறீர்கள் என்பதையாவது வெளிப்படுத்துவீர்களா?


தர்மபுரி தீ வைப்பு நிகழ்வை சாக்காக பயன்படுத்தி ஒட்டு மொத்த தமிழ்த் தேசியத்தையும் எதிர்ப்பது தான் அவரது உத்தி என்பது இதிலிருந்து தெரிகிறது. ஏனெனில், ஒடுக்கப்பட்ட வகுப்புகளிலிருந்து, தமிழ் இனவுணர்வோடு, தமிழர் சமத்துவ சிந்தனைகளோடு, இளைஞர்கள் தமிழ்த்தேசியத்தை நோக்கி வந்து கொண்டிருக்கிறார்கள். அதைத் தடுத்து, தன் அமைப்புகள் அவர்களை வைத்துக் கொள்ள வேண்டும் என்ற அவரது உள்நோக்கம் தான் இதிலிருந்து வெளிப்படுகின்றது.

இன்றைக்கு நடந்து கொண்டிருக்கும் இந்த ஆர்ப்பாட்டத்தில் கூட, பல வன்னிய சமூகத்தைச் சேர்ந்த முற்போக்காளர்கள் கலந்து கொண்டிருக்கிறார்கள். தர்மபுரியில் நிகழ்த்தப்பட்டக் கொடுமையைக் கண்டிக்கும், அதே சமூகத்தைச் சேர்ந்த முற்போக்காளர்கள் உள்ளிட்ட பலரும் இங்கு எப்படி ஒன்றாகக் கூடியிருக்கிறோமோ, அதைப் போன்ற ஓர் தமிழ்த் தேசிய ஒற்றுமை தான் இன்றைக்குத் தேவை. தமிழ்த் தேசியப் புரட்சி எதிரியை வீழ்த்துவதைப் போலவே, தமிழர் மனங்களில், ஆரியர்களால் புகுத்தப்பட்ட சாதி என்ற அழுக்கையும் முழுமையாக அழிக்கும் என பேசினார்.

ஆர்ப்பாட்டத்தில், மே பதினேழு இயக்கத் தோழர்களும், தமிழ் உணர்வாளர்களும் பங்கேற்றனர். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில், பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன்,  பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம், தமிழக இளைஞர் முன்னணிப் பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி உள்ளிட்ட த.தே.பொ.க. முன்னணி நிர்வாகிகளும், தோழர்களும் திரளாகப் பங்கேற்றனர். ஆர்ப்பாட்டத்தின் முடிவில், மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவான தோழர் பரமேசுவரன் நன்றி கூறினார்.


 (செய்தி: த.தே.பொ.க. செய்திப் பிரிவு, படங்கள்: க.அருணபாரதி)

Tuesday, October 2, 2012

பின்பற்றப்பட வேண்டிய உழவர் போராளி பி. சீனிவாசராவ் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் உரை!


உழவர் போராளி பி. சீனிவாசராவ் அவர்களின் 51 ஆம் ஆண்டு நினைவுநாள் வீரவணக்கப் பொதுக்கூட்டம் 30.9.2012 மாலை, திருத்துறைப்பூண்டி வட்டம், ஆலத்தம்பாடி கடைத்தெருவில் நடைபெற்றது. தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நடத்திய இந்த எழுச்சிமிகு பொதுக் கூட்டத்திற்கு கட்சியின் ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் வழக்குரைஞர் இ. தனஞ்செயன் தலைமை தாங்கினார்.

ஒன்றியச் செயலாளர் தோழர் க. தனபால், ஒன்றியச் செயற்குழு உறுப்பினர்கள், ஆசிரியர் சிவவடிவேலு, க.அரசு, ஆகியோர் உரையாற்றினர். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை பி.எஸ்.ஆர் நினைவைப் போற்றி வீரவணக்க உரையாற்றினார்.

நிறைவில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச்செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் தலைவர் பி. சீனிவாசராவ் அவர்களின் பணிகளையும், ஈகத்தையும் எடுத்துக்காட்டி வீரவணக்க உரையாற்றினார்.

தோழர் கி.வெங்கட்ராமன் ஆற்றிய உரையின் சுருக்கம்:

“ 1906ஆம் ஆண்டு கர்நாடக மாநிலம் தெற்கு கனரா மாவட்டத்தில் பிறந்து இந்திய கம்யூனிஸ்ட்டு கட்சியின் மையக்குழு முடிவுக்கிணங்க கீழ தஞ்சை மாவட்டத்திற்கு வந்து போர்க்குணம் மிக்க உழவர் பேரியக்கத்தைக்கட்டி எழுப்பிய மகத்தான தலைவர் பி. சீனிவாசராவ்.

புழுப்பூச்சிகளைப் போல ஒடுக்கப்பட்டிருந்த அடித்தட்டு மக்களை சாதி ஆதிக்கத் திற்கும், பண்னையார் பேயாட்சிக்கும் எதிராக கிளர்ந்தெழச் செய்து தலை நிமிர்த்தப் பாடுபட்டவர் பி.எஸ்.ஆர். அடுக்கடுக்கான அற்புதமான தலைவர்களை வார்த்தெடுத்த தலைவர்களின் தலைவர் அவர். 1942இல் இந்திய கம்யூனிட்டு கட்சி “வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை எதிர்க்க முடிவு செய்த போது அது தவறான முடிவு என எடுத்துக்காட்டி கட்சிக்குள் கடும்புயலை ஏற்படுத்தியவர். ஆயினும் கட்டுப்பாடுமிக்க போராளி அவர்.

அவரும், அவரைப் போன்ற தலைவர்களும் தலைமறைவு காலத்திலேயே பல்லாயிரக் கணக்கான மக்களைத் திரட்டி வெள்ளையர் எதிர்ப்புப் போராட்டத்திலும், சாதி ஆதிக்க எதிர்ப்புப் போராட்டத்திலும், குத்தகை உழவர்களின் உரிமைப் போராட்டத்திலும் வெற்றிகள் பல ஈட்டினார்கள். இதனால் கீழ் தஞ்சை மாவட்டத்தில் வழுமிக்க இயக்கமாக கம்யூனிஸ்ட்டு இயக்கம் வளர்ந்தது. 1952 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் வெளியில் வந்து பரப்புரை செய்ய முடியாத காலத்திலும் மக்களை சந்தித்து வாக்குகள் பெற்று கீழ் தஞ்சையில் மட்டும் 9 சட்டமன்றத் தொகுதிகளில் தனித்து வெற்றிக் கண்டது கம்யூனிஸ்ட்டு கட்சி.

அதே கட்சிதான் இன்று கருணாநிதியிடமும், செயலலிதாவிடமும் பல்லிளித்து இரண்டு சீட்டுகளை பெற்றால் போதும் என்ற நிலையில் இருக்கிறது. ஈகி பி.எஸ்.ஆரும், ஜீவாவும், இருந்த கட்சியில்தான் இன்று தளி இராமச்சந்திரங்கள் கோலோச்சுகிறார்கள்.

கம்யூனிஸ்ட்டு கட்சியே இவ்வாறு சீரழிந்து விட்டதென்றால் பிற கட்சிகளைப் பற்றி கேட்கவே வேண்டாம். இன்று காவிரி சிக்கலில், தமிழ்நாட்டு கட்சிகள் நடந்து கொள்ளும் விதமே தமிழ்நாட்டு அரசியல் எந்த அளவிற்கு சீரழிந்து சிதிலமடைந்து கிடக்கிறது என்பதற்கு சான்று.
மீண்டும் மீண்டும் அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தி தமிழ்நாட்டிற்கு ஒரு சொட்டுக் காவிரி நீரும் உரிமை என்ற அடிப்படையில் திறந்து விட மாட்டோம் என்று கர்நாடகக் கயவர்கள் கொக்கரிக்கிறார்கள். 

உச்ச நீதிமன்றத் தீர்ப்பை செயல்படுத்த மாட்டோம் என வெளிப்படையாக அறிவிக்கிறார்கள். ஓசூர் எல்லையிலே வந்து நாள் தவறாமல் அடாவடியில் ஈடுபடுகிறார்கள். இதிலே கர்நாடகத்தில் ஆளும் கட்சி, எதிர்க் கட்சி, புதியக் கட்சி, பெரியக் கட்சி என்ற எந்த வேறுபாடும் இல்லை. ஆனால் உரிமை மறுக்கப்பட்ட தமிழகத்திலோ சொந்தப் பங்காளிச் சண்டைகளை அரசியல் கருத்து வேறுபாடு போல் படம் காட்டி உரிமையை மீட்க ஒன்று சேர மறுக்கிறார்கள்.

தமிழ்நாட்டில் நிலவும் பதவி அரசியல் தமிழக உரிமைகளை காட்டி கொடுக்கும் அரசியலாக நிலை தாழ்ந்து போய் நீண்ட நாளாகி விட்டது. எனவேதான் எந்த தயக்கமும் இன்றி தமிழ்நாட்டை அடிமை கொண்டு சித்திரவதை செய்து வருகிறது டெல்லி ஏகாதிபத்தியம்.
எனவே இந்த கேடுகெட்ட அரசியல் கட்சிகளிடமிருந்து தமிழ்நாட்டு அரசியலை மீட்டெடுப்பதில் திருத்துறைப்பூண்டி பகுதியில் இளைஞர்க முக்கியப் பங்காற்ற வேண்டும்.

 தமிழ்நாடு விடுதலை பெறுவதைத் தவிர நாம் சந்திக்கும் சிக்கல் களிலிருந்து நிரந்தரமாக விடுபட வேறு வழியே இல்லை. காவிரிச் சிக்கல், முல்லைப் பெரியாறு பிரச்சினை, தமிழீழத்தில் நடந்த இனப்படுகொலை. மீனவர் படுகொலை கூடங்குளம் சிக்கல் ஆகிய அனைத்திற்கும் காரணம் இந்திய ஏகாதிபத்தியத்திற்கு தமிழ்நாடு அடிமைப்பட்டிருப்பதுதான் எனவே தமிழ்நாடு விடுதலை என்ற இலட்சியம் நோக்கி இளைஞர்கள் எழுச்சிக் கொள்ள வேண்டும் உழவர்கள் ஒன்றுதிரள வேண்டும். என தமிழ்த்தேசப் பொதுவுடைமைக் கட்சி இந்த பி.எஸ்.ஆர். நாளில் அழைக்கிறது” என்று உரையாற்றினார்.

(செய்தி : த.தே.பொ.க. செய்திப் பிரிவு)

Sunday, August 5, 2012

“இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் இந்திய அரசே ஆகும்” – தோழர் பெ.மணியரசன் பேச்சு!


“இந்திய ஒருமைப்பாட்டுக்கு அச்சுறுத்தல் இந்திய அரசே ஆகும்” – தோழர் பெ.மணியரசன் பேச்சு!

சர்வதேச நாடுகள் தமிழ் ஈழத்தை அங்கீகரிக்கக் கோரியும், தமிழ் ஈழம் பற்றி பேசக்கூடாது என மிரட்டும் இந்திய அரசை கண்டித்தும், தமிழீழ விடுதலைப் புலிகள் மீதான தடையை நீக்கக் கோரியும், தமிழக மக்கள் உரிமைக் கழகம் சார்பில் சென்னையில் இன்று(04.08.2012) கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

சென்னை மெமோரியல் அரங்கம் முன்பு, மாலை 4 மணியளவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்குத் தலைமையேற்று, தமிழக மக்கள் உரிமைக் கழகம் செயலாளர் வழக்கறிஞர் பா.புகழேந்தி அவர்கள் கண்டன உரையாற்றினார். “தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை தமிழின உணர்வாளர்களை அச்சுறுத்த முயலும் நடவடிக்கையே” என அவர் விளக்கிப் பேசினார்.

ம.தி.மு.க. துணைப் பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தமிழக ஒடுக்கப்பட்டோர் விடுதலை இயக்கப் பொதுச் செயலாளர் தோழர் தமிழ் நேயன், தமிழ்த் தேசிய முன்னணி அமைப்பாளர் வழக்கறிஞர் பாவேந்தன், இந்திய தேசிய லீக் பொதுச் செயலாளர் திரு. தடா.ஜெ.அப்துல் ரகீம், மே பதினேழு இயக்க ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன், அம்பேத்கர் சிறுத்தைகள் இயக்க அமைப்பாளர் திரு. தெய்வமணி, தமிழக மக்கள் தொழிலாளர் முன்னணி தோழர் செந்தமிழ்க்குமரன், தமிழ் காப்போம் இயக்கம்(சேவ் தமிழ்ஸ்) திரு. இளங்கோவன், தமிழர் கழக அமைப்பாளர் திரு. மணிகண்டன், தமிழர் முன்னேற்றக் கழக ஒருங்கிணைப்பாளர் திரு. அதியமான், தமிழக மக்கள் உரிமைக் கழக இணைச் செயலாளர் தோழர் இளங்கோவன் ஆகியோர் கண்டன உரை நிகழ்த்தினர்.







இவ்வார்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், “தமிழீழ விடுதலைப்புலிகள் மீதான தடை வெறும் இந்திய அரசின் நடவடிக்கை மட்டும் அல்ல. தமிழக அரசின் உளவுத்துறையின் அறிக்கையையும் இணைத்தே அத்தடை தீர்மானிக்கப்படுகின்றது. புலிகள் மீதான தடை நீட்டிப்பில், செயலலிதா – கருணாநிதி அரசுகளுக்கிடையே எவ்வித வேறுபாடும் கிடையாது. தீர்ப்பாயத்தற்கு இரண்டு அரசுகளும், புலிகள் மீதான தடையை நீட்டிக்கவே செயல்பட்டுள்ளன.


தமிழீழம் இந்திய இறையாண்மைக்கு ஆபத்தானது என்று கூறி, தமிழீழ விடுதலைப்புலிகளின் மீதான தடையை இந்திய அரசு நீட்டித்துள்ளது. தெற்காசியப் பிராந்தியத்தில் இந்தியாவின் நலன்களுக்கு எதிராக செயல்படமாட்டோம் என்றும், தமிழீழம் இந்தியாவிற்கு நட்பு சக்தியாகவேத் திகழும் என்றும் இந்தியப் பெருங்கடலில் வல்லாதிக்க அரசுகளின் ஆதிக்கமில்லாமல் தடுப்போம் என்றும் தமிழீழ விடுதலைப்புலிகள் பலமுறை அறிவித்தனர்.

ஆனாலும், ஆரிய இனச்சார்பு கொண்ட இந்திய அரசு, நட்பாக இருப்போம் என்று அறிவித்த ஈழ விடுதலைப் போராட்டத்தை அழியவே துணை நின்றது. இதுவரை இந்தியச் சீனப் போரிலும், வங்காள தேச விடுதலைப் போரிலும், இந்தியாவிற்கு உதவாத சிங்களனா, இந்தியாவை நேசிக்கின்ற ஈழத்தமிழனா என்று வந்தால், இருவரில் சிங்களனையே இந்திய அரசு நம்பும். அதே போல், இந்தியாவுக்குப் போட்டியாக இலங்கையில் ஆதிக்க வலைவிரித்திருக்கும் சீன அரசின் தந்திரங்கள் இந்திய அரசுக்குத் தெரியும். இருந்தும், முதலில் எதிர்க்கப்பட வேண்டியவர்கள், தமிழர்களா, சீனாவா என்றால், தமிழர்களையே தேர்ந்தெடுக்கும் இந்திய அரசு. அந்தளவிற்கு, தமிழர்களை தனது இனப்பகை சக்தியாகவே இந்திய அரசு கருதுகிறது.

உண்மையில், இந்திய இறையாண்மையையும், ஒருமைப்பாட்டையும் தமிழீழமா அழித்து விடப்போகிறது? இல்லை. இந்திய அரசு தான் இந்திய ஒருமைப்பாட்டையும், இறையாண்மையையும் தானே அழிக்க முன் நிற்கிறது. காவிரியில் கன்னடன் பக்கம் நின்று தமிழினத்தை வஞ்சிப்பது, முல்லைப் பெரியாறு – பாலாறு சிக்கலில் தமிழினத்திற்கு எதிராக நிற்பது, கச்சத்தீவை சிங்களனுக்குத் தாரை வார்ப்பது, தமிழக மீனவர்களை சிங்களன் சுட்டுக் கொல்லத் துணை நிற்பது என தொடர்ந்து தமிழ்நாட்டை வஞ்சிக்கும் இந்திய அரசு தான், தமிழ்நாட்டுத் தமிழன் நெஞ்சிலும், தமிழச்சி நெஞ்சிலும் இந்தியாவிலிருந்து பிரிந்தால் தான் நமக்கு வாழ்வு உண்டு என்ற எண்ணத்தை உருவாக்கியிருக்கிறது. தமிழ்நாடு விடுதலையை விடுதலைப்புலிகள் தூண்டவில்லை. இந்திய அரசே தூண்டுகிறது. இந்திய ஒருமைப்பாட்டிற்கு முதல் எதிரியாக உள்ளது, இந்திய அரசேத் தவிர தமிழீழம் அல்ல. ” என பேசினார்.

(செய்தி – த.தே.பொ.க செய்திப் பிரிவு, படங்கள் – பாலா)

Sunday, May 20, 2012

“தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம்!” - மெரினாவில் மக்கள் முழக்கம்!

"தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம்!" - மெரினாவில் மக்கள் முழக்கம்!


"மறக்க மாட்டோம் மன்னிக்க மட்டோம்! தமிழீழ மக்கள் இனப்படுகொலையை மறக்க மாட்டோம் மன்னிக்க மாட்டோம்! ஐ.நா. சபையே தமிழீழத்தில் பொது வாக்கெடுப்ப நடத்து!" சென்னை மெரினா கடற்கரையில் மே 20 ஞாயிறு அன்று மாலை விண்ணதிர எதிரொலித்த முழக்கங்கள் இவை.

 

தமிழீழத்தில் நடைபெற்ற இனப்படுகொலை குறித்து, அனைத்துலக விசாரணை நடத்த வேண்டும், தமிழீழம் குறித்து பொது வாக்கெடுப்பு நடத்த வேண்டும் ஆகிய இரு கோரிக்கைகளை முதன்மைப்படுத்தி, சென்னை மெரினா கடற்கரையில் மே-20 அன்று வீரவணக்க ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு மற்றும் பெரியார் திராவிடர் கழகம் ஆகிய அமைப்புகள் அழைப்பு விடுத்தன. அதன்படி, இன்று எழுச்சியுடன் ஒன்றுகூடல் நடைபெற்றது.

 

மெரினா கடற்கரை கண்ணகி சிலை அருகில் நடைபெற்ற ஒன்றுகூடலுக்கு, மே பதினேழு இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் தோழர் திருமுருகன் தலைமை வகித்தார். முன்னதாக, ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் ஈகச்சுடர் ஏற்றி வைக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.

 

இந்நிகழ்வில், உலகத் தமிழர் பேரமைப்புத் தலைவர் திரு. பழ.நெடுமாறன், ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ, லோக் சனசக்தி கட்சித் தலைவர் திரு. இராம் விலாஸ் பாஸ்வான், பெரியார் திராவிடர் கழகத் தலைவர் கொளத்தூர் தா.செ.மணி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாநில செய்தித் தொடர்பாளர் திரு. வன்னியரசு, ம.தி.மு.க. தென் சென்னை மாவட்டப் பொறுப்பாளர் வேளச்சேரி மணிமாறன், பெ.தி.க. பொதுச் செயலாளர் தோழர் விடுதலை இராசேந்திரன், உணர்ச்சிக் கவிஞர் காசி ஆனந்தன், பாவலர் அறிவுமதி, புதிய பார்வை இதழாசிரியர் திரு. ம.நடராஜன், ஓவியர் வீரசந்தனம், இயக்குநர் புகழேந்தி தங்கராஜ், ஓவியர் ட்ராட்ஸ்கி மருது, தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், புலவர் இரத்தினவேலவர் உள்ளிட்ட பல்வேறு அமைப்புத் தலைவர்கள் மற்றும் உணர்வாளர்கள் பெருந்திரளாக கலந்து கொண்டனர்.


போர் குற்றம் - இனப்படுகொலைக்கு எதிரான இளைஞர்கள் இயக்கம் சார்பில், தமிழீழத்தில் வாக்கெடுப்பு நடத்தக் கோரி 1 கோடி கையெழுத்துகள் பெறுகின்ற கையெழுத்து இயக்கம் மெரினா வந்த மக்களிடம்  நடத்தப்பட்டது. திரு. இராம் விலாஸ் பாஸ்வான் உள்ளிட்ட பெருந்திரளானோர் இதில் கையெழுத்திட்டனர்.


"இலங்கை அரசு இனப்படுகொலை அரசு! சர்வதேச விசாரணையை உடனே நடத்து!", "இந்திய அரசின் துரோகத்தை மறக்க மாட்டோம்! மன்னிக்க மாட்டோம்" உள்ளிட்ட பல்வேறு முழக்கங்களை எழுப்பியவாறு, மெழுவர்த்தி ஏந்தியபடி சிறுவர்களும், பெண்களும் என பொதுமக்கள் பெருந்திரளாக இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். 


“தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத் தோல்வி!” - பெ.மணியரசன் பேச்சு!

"தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத் தோல்வி!"
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர் பெ.மணியரசன் பேச்சு

"தமிழீழத்தில் நமக்கு ஏற்பட்ட தோல்வி, ஒட்டுமொத்த தமிழினத்திற்கும் ஏற்பட்டத் தோல்வியே" என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

"முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம்! வீண்போகாது வீண்போகாது சிந்திய இரத்தம் வீண்போகாது". சிங்கள – இந்தியப் பகைவர்களால் முள்ளிவாய்க்காலில் கொல்லப்பட்ட ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தி தமிழகமெங்கும் நடைபெற்ற நிகழ்வுகளில் எதிரொலித்த முழக்கங்கள் இவை. முள்ளிவாய்க்கால் மூன்றாமாண்டு நினைவேந்தல் நிகழ்வையொட்டி, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் தமிழகமெங்கும் பல்வேறு நிகழ்வுகள் நடைபெற்றன.


தஞ்சை
தஞ்சை தொடர் வண்டி நிலையத்தில் 18.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நினைவேந்தலுக்கு த.தே.பொ.க. நகர துணைச் செயலாளர் தோழர் தமிழ்ச்செல்வன் தலைமையேற்றார். 


நிறைவில், சிறப்புரையாற்றிய தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் "முள்ளிவாய்க்கால் குருதி வெள்ளத்தில் மூழ்கிய தமிழ் இனச் சொந்தங்ளுக்கும், விடுதலைப்புலி வீரர்களுக்கும் வீரவணக்கம் செலுத்துகிறோம். முள்ளிவாய்க்காலில் ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டத்திற்கு நேர்ந்த பின்னடைவும், தோல்வியும் ஒட்டு மொத்த தமிழ் இனத்திற்கும் ஏற்பட்ட தோல்வியாகும். இக்கருத்தை இன உணர்ச்சி அடிப்படையில் மட்டும் நான் சொல்லவில்லை. 'ஆயுதமேந்தி முப்படைகள் கொண்டு போராடிய ஈழத்தமிழர்களையே தோற்கடித்துவிட்டோம். தமிழ்நாட்டுத் தமிழர்கள் எம்மாத்திரம்?' என்ற உணர்வு இந்திய ஏகாதிபத்திய அரசுக்கும், நமக்குப் பகைவர்களாகிப் போன அண்டை இனங்களான கன்னடர்கள், மலையாளிகள் போன்றோருக்கும் ஏற்படும்.

எடுத்துக்காட்டாக, காவிரி உரிமையை மீட்க தஞ்சை மாவட்டத்திலும், சுற்றியுள்ள மாவட்டங்களிலும் கடும் போராட்டங்கள் நடத்தினோம். அதில், இந்திய அரசின் துணையோடு கன்னடர்கள் நம்மை தோல்வியடையச் செய்தார்கள். அது மட்டுமின்றி, 1991 நவம்பர் - திசம்பர் மாதங்களில் 'காவிரிக் கலவரம்' என்ற பெயரில், கர்நாடகத் தமிழர்களைத் தாக்கி கன்னட வெறியர்கள் தமிழர்கள் பலரைக் கொன்றார்கள். வீடுகளை சூறையாடினார்கள். தமிழ்ப் பெண்களை மானபங்கப்படுத்தினார்கள். இரண்டு இலட்சம் கர்நாடகத் தமிழர்கள் அகதிகளாக தமிழ்நாட்டுக்கு ஓடி வந்தார்கள். நாம் பதிலடி கொடுக்கவில்லை. அகதி முகாம்கள் தாம் நடத்தினோம்.

இதைப் பார்த்துக் கொண்டிருந்த, தமிழர்களை விட மிகவும் குறைந்த மக்கள் தொகை கொண்ட மலையாளிகள் முல்லைப் பெரியாறு அணை உரிமையைப் பறித்தார்கள். தமிழர்களைத் தாக்கினார்கள். அய்யப்பன் கோவிலுக்கு சாமி கும்பிடப் போன தமிழர்களையும் தாக்கினார்கள். இந்த துணிச்ச்சல் மலையாளிகளுக்கு எங்கிருந்து வந்தது? காவிரி பிரச்சினையில் நம்மைவிட சிறுபான்மையாக உள்ள கன்னடர்களிடம் நாம் தோற்றதாலும், இந்திய ஏகாதிபத்தியத்தின் துணை மலையாளிகளுக்கு இருப்பதாலும் தான் இந்த துணிச்சல் அவர்களுக்கு வந்தது.

எனவே, முள்ளிவாய்க்காலில் தமிழினத்திற்கு ஏற்பட்ட வீழ்ச்சி ஈழத்தமிழர்களுக்கு மட்டும் பாதிப்பை உண்டாக்கவில்லை. தமிழ்நாட்டுத் தமிழர்களுக்கும் பாதிப்பை உண்டாக்கியுள்ளது. இதை உணர்ந்து, சாதியாக பிளவு படாமல் ஒன்றுதிரண்டு வருங்காலத்தில் மூர்க்கமாக உரிமை மீட்கப் போராட வேண்டும். தமிழ்நாட்டுத் தமிழர்களின் விடுதலைப் போராட்டமும், ஈழத்தமிழர்களின் விடுதலைப் போராட்டமும் ஒன்றை ஒன்று சார்ந்தவை என்று நாம் உணர வேண்டும். முள்ளிவாய்க்கால் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் இவ்வேளையில், இந்தப் படிப்பினையை நாம் கற்றுக் கொள்ள வேண்டும்" என்று பேசினார்.

"தமிழர் சர்வதேசியம் வேண்டும்" – திருத்துறைப்பூண்டி தோழர் கி.வெங்கட்ராமன் பேச்சு
முள்ளிவாய்க்கால் படுகொலை நாளை நினைவு கூறும்ட வகையில், திருத்துறைப்பூண்டியில் 18.05.2012 அன்று நினைவேந்தல் பொதுக் கூட்டம் நடைபெற்றது. திருத்துறைப்பூண்டி புதிய பேருந்து நிலையம் அருகில் நடைபெற்ற கூட்டத்தை அனைத்து தொழிற்சங்கக் கூட்டமைப்பு ஏற்பாடு செய்தது. நிகழ்வுக்கு, கூட்டமைப்பின் செயலாளர் தோழர் எஸ்.அரவிந்தன் தலைமையேற்றார். தோழர் எஸ்.இராமச்சந்திரன்(வங்கி ஊழியர் சங்கம்) வரவேற்புரையாற்றினார்.

நிறைவில், சிறப்புரையாற்றிய, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், "புவிசார் அரசியல் ஆதிக்கத் தேவை மற்றும் இந்திய முதலாளிகளின் சந்தைத் தேவை ஆகிய காரணங்களுக்காகத் தான் இந்தியா ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் முக்கியப் பங்கு வகித்த்தாக சொல்கிறார்கள். ஆனால், இவற்றை விட இந்திய அரசின் தமிழர்களுக்கு எதிரான ஆரிய இனவெறிப் பகை. ஆயிரமாயிரம் ஆண்டுகளாக தமிழை பகையாக்க் கருதும் ஆரிய இனத்தின் இன்றைய அரச வடிவம் தான் இந்தியா. இதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். தமிழீழ விடுதலையை முன்னெடுத்த தந்தை செல்வும், தமிழீழ தேசியத் தலைவர் மேதகு வே.பிரபாகரன் அவர்களும், இந்தியாவை எதிரியாக ஓரிடத்திலும் சொன்னதில்லை. ஆனால், இந்தியாவோ தமிழர்களைத் தான் முதன்மைப் பகையாகக் கருதுகிறது.

1947 வெள்ளையர்கள் ஆட்சி முடிவுக்குப் பிறகு தான் நாம், ஆரிய இந்தியாவில் பலவற்றையும் இழந்திருக்கிறோம். யாரெல்லாம் தமிழர்களுக்கு எதிரியோ இந்தியா அவர்களுக்கு நண்பன். அதனால் தான், தமிழ்நாட்டு மீனவர்களை சுட்டுக் கொல்லும் சிங்களத்தோடு நட்பு கொள்கிறது இந்தியா. காவிரி, முல்லைப் பெரியாறு, பாலாறு என தொடர்ந்து தமிழகம் அண்டை தேசிய இனங்களால் வஞ்சிக்கப்படும் போது, அத்தேசிய இனங்களுக்கு ஆதரவாகவும், தமிழ்நட்டிற்கு எதிராகவும் தொடர்ந்து நடந்து கொண்டுள்ளது. எனவே, இந்தியா ஆரியத்தின் வடிவம் தான்.

'பாரத்' என்று அழைக்கப்படுவதும், 'பத்மபுஷன்', 'பத்மசிறீ', 'பத்மினி', 'ஆரியபட்டா' என சமற்கிருதப் பெயர்களில் அரசு நடவடிக்கைகள் தொடர்வதும், சிங்கத்தை அரசுச் சின்னமாகக் கொண்டிருப்பதும் இந்தியா ஆரியத்தின் வடிவமாகத் தொடர்வதையே காட்டுகின்றது. ஆரியத்தின் பழமைதான், இந்தியாவின் பழமையாக குறிக்கப் படுகின்றது. அதனால் தான், இன்று ஈழத்தமிழர்களாக இருந்தாலும்,  அவர்களுக்கு உதவதும் தமிழ்நாட்டுத் தமிழர்கள் என்றாலும் அனைவரையும் இந்தியா எதிரியாக கருதுகின்றது.

பாலத்தீன தேசத்திற்கு எப்படி இஸ்ரேல் உடனடிப்பகையாக விளங்குகிறதோ, அதைப் போலவே ஈழத்தமிழர்களுக்கு சிங்களம் உடனடிப்பகை. அதேபோல், பாலத்தீன தேசத்திற்கு அமெரிக்கா எப்படி சர்வதேசப் பகையோ, அதைப்போல ஈழத்தமிழர்களுக்கு இந்தியா தான் சர்வதேசப் பகை. இந்தத் தெளிவோடு ஈழத்தமிழர்கள் தம் அரசியல் முன்னெடுப்பு நடவடிக்கைகளில் இறங்க வேண்டும்.

ஈழத்தமிழர்களின் விடுதலைப் போருக்கு, தமிழ்நாட்டுத் தமிழர்கள் துணை நிற்பது போல், தமிழ்நாட்டு உரிமைக்கான போராட்டங்களுக்கு ஈழத்தமிழர்களும் ஆதரவளிக்க வேண்டும். தமிழீழ விடுதலை – தமிழ்நாட்டு விடுதலை ஆகிய இரு வேலைத்திட்டங்களின் அடிப்படையில், தமிழ்த் தேசியம் கட்டமைக்கப்பட வேண்டும். ஈழத்தமிழர்களும், தமிழ்நாட்டுத் தமிழர்களும் இணைந்த தமிழர் சர்வதேசியத்தை உருவாக்க வேண்டும்" என்று பேசினார்.


தமிழிய ஆய்வாளர் முனைர் த.செயராமன், அனைத்திந்திய இளைஞர் பெருமன்ற மாவட்டச் செயலாளர் தோழர் கே.இராசா, தொ.ச. கூட்டமைப்புத் தலைவர் தோழர் டி.சிங்காரவேல், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் இ.தனஞ்செயன், ஏ.ஐ.டி.யு.சி. நகரப் பொறுப்பாளர் தோழர் எம்.முருகதாஸ், தோழர் டி.தெட்சிணாமூர்த்தி(என்.எப்.டி.இ.), தோழர் வி.கே.செல்வராசு (மின்சார தொழிலாளர் சம்மேளனம்), தோழர் என்.குணசேகரன்(த.அ.போ.கழகம் - ஏ.ஐ.டி.யு.சி.) ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிறைவில், தொழிற்சங்க கூட்டமைப்புப் பொருளாளர் தோழர் பி.அன்பழகன் நன்றி நவின்றார்.



சென்னை


சென்னை தியாகராயர் நகர், முத்துரங்கம் சாலை, நியாயவிலைக் கடை அருகில், 19.5.2012 அன்று மாலை 5 மணியளவில் வீரவணக்க நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமையேற்றார். தோழர் தமிழ்க்கனல் (தாம்பரம் கிளைச் செயலாளர்) முன்னிலை வகித்தார். த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க.அருணபாரதி கருத்துரை வழங்கினார். வீரவணக்க முழக்கங்கள் எழுப்பி, த.தே.பொ.க. தோழர்கள் மற்றும் தமிழின உணர்வாளர்கள் மெழுகுவர்த்தி ஏந்தியும், மலரஞ்சலி செலுத்தியும் ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தினர்.

கோவை


கோவை செட்டிவீதி அசோகன் பகுதியில் நேற்று (17.5.2012) காலை 11 மணியளவில், தமிழ்ச் தேசப் பொதுவுடமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு, தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் தோழர் பி.சுரேசு தலைமையேற்றார். த.இ.மு கிளைச் செயலாளர் கு.இராசேசுகுமார். த.தே.பொ.க தோழர்கள் இரா.கண்ணன், ம.தலவாய்சாமி, சு.மாரியப்பன் உள்ளிட்ட திரளான தோழர்கள் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

சிதம்பரம்
சிதம்பரம் நகரம் தெற்கு சன்னதியில் 17.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு, த.தே.பொ.க. நகரச் செயலாளர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் ஆ.குபேரன், தமிழக மாணவர் முன்னணி நகர அமைப்பாளர் தோழர் சுப்பிரமணிய சிவா உள்ளிட்ட திரளான தோழர்களும், உணர்வாளர்களும் மெழுகுவர்த்தி ஏந்தி நினைவஞ்சலி செலுத்தினர்.

ஓசூர்
ஓசூர் இராம் நகரில் 17.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு த.தே.பொ.க.  பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். 

கிருட்டிணகிரி
கிருட்டிணகிரி ரவுண்டானா பகுதியில், 18.5.2012 அன்று மாலை 5 மணியளவில், தமிழீழ விடுதலை ஆதரவாளர் ஒருங்கிணைப்புக் குழு சார்பில் நடைபெற்ற வீரவணக்க நிகழ்வுக்கு, தோழர் குமார்(தமிழர் தேசிய இயக்கம்) தலைமையேற்றார். தோழர் கோபால்(வி.வி.தே.மு.), தோழர் சந்திரன்(ம.தி.மு.க.), தோழர் பெ.ஈ.ஸ்வரன்(த.இ.மு.) ஆகியோர் நினைவேந்தல் உரை நிகழ்த்தினர். நிறைவில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து சிறப்புரையாற்றினார். 

 செங்கிபட்டி
தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டி - சாணுரப்பட்டி முதன்மைச்சாலையில், 18.5.2012 அன்று காலை 9 மணியளவில் த.தே.பொ.க. சார்பில் நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. நிகழ்வுக்கு த.தே.பொ.க ஒன்றியச் செயலாளர் தோழர் காமராசு தலைமையேற்றார். த.தே.பொ.க தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார். தோழர் குழ.பால்ராசு (தஞ்சை மாவட்டச் செயலாளர்), தோழர் ரெ.கருணாநிதி (மாவட்டச் செயற்குழு உறுப்பினர், த.தே.பொ.க.)  ஆகியோர் கருத்துரை வழங்கினர்.
 திருச்சி
திருச்சி தொடர்வண்டி நிலையச் சந்திப்பில் (காதிகிராப்ட் அருகில்) 18.5.2012 அன்று மாலை 6 மணியளவில், த.தே.பொ.க. சார்பில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. பாவலர் மு.வ.பரணர் தலைமையேற்றார்.  த.தே.பொ.க. திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் கவித்துவன் முன்னிலை வகித்தார். மக்கள் உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் சு.அருணாச்சலம் சிறப்புரையாற்றினார். தோழர் வே.க.இலட்சுமணன்(த.தே.பொ.க.) நன்றி நவின்றார்.

குடந்தை

குடந்தை மேலக்காவேரி அருகில் 18.5.2012 அன்று மாலை 5 மணியளவில் நடைபெற்ற வீரவணக்க தெருமுனைக் கூட்டத்தையொட்டி, த.தே.பொ.க. கொடியேற்றி வைக்கப்பட்டது. நிகழ்வுக்கு த.தே.பொ.க. நகரச்செயலாளர் தோழர் விடுதலைச்சுடர் தலைமையேற்றார். த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்  தோழர் நா.வைகறை சிறப்புரையாற்றினார்.
  
சாமிமலை
சாமிமலை கடை வீதியில் 18.5.2012 அன்று மாலை 6 மணியளவில் த.தே.பொ.க. கொடியேற்றப்பட்டு தெருமுனைக் கூட்டம் நடைபெற்றது. தோழர் ம.திருவரசன் (எ)முரளி (த.தே.பொ.க.) நிகழ்வுக்குத் தலைமையேற்றார். தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, தோழர் ச.பேகன் (குடந்தை தமிழ்க் கழகம்) ஆகியோர் சிறப்புரையாற்றினர். நிறைவில், தோழர்.க.தீந்தமிழன்(எ)தினோசு நன்றி கூறினார்.

மதுரை
மதுரையில் தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில், தலைமை அஞ்சல் அலுவலகம் (மீனாட்சி பசார்)முன், 19.05.12 அன்று மாலை  5 மணியளவில் "முள்ளிவாய்க்கால் முடிவல்ல''  நினைவேந்தல் நிகழ்வு நடைபெற்றது. வழக்கறிஞர் பகத்சிங் தலைமையேற்றார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நகரச் செயலாளர் தோழர் இராசு அறிமுகவுரையாற்றினார். மகளிர் ஆயம் ஒருங்கிணைப்பாளர் தோழர் அருணா, த.தே.வி.இ. மாவட்டச் செயலாளர் தோழர் கதிர்நிலவன், மதுரை மாவட்ட வழக்கறிஞர் சங்கச் செயலாளர் வழக்கறிஞர் நெடுஞ்செழியன், தமிழர் தேசிய இயக்க பொதுச் செயலாளர் திரு. க.பரந்தாமன் ஆகியோர் கருத்துரை வழங்கினர். நிகழ்வினை, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அ.ஆனந்தன், தோழர் சு.தளபதி ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.



தூத்துக்குடி
தூத்துக்குடி க்க்கன் பூங்கா எதிரிலுள்ள மக்கள அரங்கத்தில், 17.05.2012 அன்று மாலை 7 மணயளவில், தமிழீழ ஆதரவாளர் கூட்டமைப்பு சார்பில் வீரவணக்க நிகழ்வு நடைபெற்றது. த.ஓ.வி.இ. மாவட்டப் பொறுப்பாளர் தோழர் தமிழ்மாந்தன் தலைமையேற்றார். திரு சவுந்திரபாண்டியனார்(நாம் தமிழர் இயக்கம்) முன்னிலை வகித்தார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கிளைச் செயலாளர் தோழர் தமிழ்த்தேசியன், சி.பி.ஐ. மாவட்டச் செயலாளர் வழக்கறிஞர் மோகன்ராசு, தமிழர் தேசிய இயக்க மாவட்டப் பொறுப்பாளர் தோழர் துரை.அரிமா, தோழர் மகாதேவன்(நாம் தமிழர் கட்சி), வெனி.இளங்குமரன் (உழைக்கும் மக்கள் விடுதலை இயக்கம்) உள்ளிட்ட பல்வேறு அமைப்பு நிர்வாகிகள் கருத்துரை வழங்கினர்.
      


இடம்:சென்னை

தலைமைச் செயலகம்,
 தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி


போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT