உடனடிச்செய்திகள்
Showing posts with label கதிர்நிலவன். Show all posts
Showing posts with label கதிர்நிலவன். Show all posts

Saturday, September 28, 2019

பாவாணர் திராவிடத்தை தூக்கிப் பிடித்தாரா? ப. திருமாவேலனுக்கு மறுப்பு! தோழர் கதிர்நிலவன்.


பாவாணர் திராவிடத்தை தூக்கிப் பிடித்தாரா? ப.திருமாவேலனுக்கு மறுப்பு! தோழர் கதிர்நிலவன், பொதுக்குழு உறுப்பினர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

அமெரிக்காவின் தலைநகரான வாஷிங்டன் மேரிலாந்தில் பன்னாட்டு பெரியார் மனிதநேயர் சங்க மாநாடு 22,22.9.2019 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில் திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணிக்கு வாழ்நாள் சாதனையாளர் விருது வழங்கப்பட்டது. இரண்டாவது நாள் நடைபெற்ற இந்த மாநாட்டில் "பெரியாரும் தமிழ்த்தேசியமும்" என்ற தலைப்பில் கலைஞர் தொலைக்காட்சி ஊடகவியலாளர் ப.திருமாவேலன் கலந்து கொண்டு உரையாற்றிய போது, "தமிழ் என்பதும், திராவிடம் என்பதும் ஒருபொருள் தரக்கூடிய இருவேறு சொற்கள் தான் " என்று தேவநேயப் பாவாணர் கூறியதாகப் பேசியுள்ளார்.

திருமாவேலன் பேச்சிலிருந்து ஒரு பகுதியைத் தருகிறோம்.

"பெரியாரைப் படிக்காதவர்கள், நீங்கள் பெரியாரைக் கூட படிக்கவேண்டாம்; இன்றைக்குத் தமிழ்த் தேசியம் பேசுபவர்கள் முதலில் மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணருடைய ‘திராவிடத்தாய்' என்ற நூலையும், அவருடைய ‘ஒப்பியன் மொழி நூல்' என்ற நூலையும் படித்துவிட்டு, அதற்குப் பிறகு நீங்கள் தமிழ்த் தேசியம் பேசுங்கள்.

பாவாணர் சொல்வது என்னவென்றால், ‘‘இக்கால மொழியியலும், அரசியலும் பற்றி தமிழும், அதனின்று திரிந்த திராவிடமும் வேறு பிரிந்து நிற்பினும் பழங்காலத்தில் ‘திராவிடம்' என்றதெல்லாம் தமிழே. திராவிடம் என்று திரிந்தது தமிழ் என்னும் சொல்லே.” இதை ஒப்பியன் மொழி நூல் என்ற நூலில், 15ம் பக்கத்தில் எழுதியவர் தந்தை பெரியார் அல்ல, பாவாணர்தான் எழுதியிருக்கிறார்.

‘தமிழ் என்பதுதான் - தமிழம் என்றும் - த்ரமிள என்றும் - திரமிட என்றும்- திரவிட என்றும் - த்ராவிட என்றும் - இறுதியில் திராவிடம்’ என்றும் உச்சரிக்கப்பட்டது’ என்று எழுதியவர் பாவாணர். "

பெரியார் பயன்படுத்திய திராவிடம் , திராவிட இனம், திராவிடர் ஆகிய சொற்கள் தமிழ்மொழி, தமிழின அடையாளத்தை மறைப்பதால் இனிமேல் தமிழரை திராவிடர் என்று அழைக்கக் கூடாது என்று தமிழ்த் தேசியர்கள் கடும் எதிர்ப்பை தெரிவித்து வருகின்றனர். கீழடி தமிழர் நாகரிகத்தை திராவிடர் நாகரிகம் என்று அழைப்பதையும் தக்க சான்றுகளோடு மறுத்து வருகின்றனர்.

இந்நிலையிலே , பெரியார் போற்றிய திராவிடத்தைப் பாதுகாக்க பாவாணரை துணைக்கு அழைத்துள்ளார் திருமாவேலன்.

ப.திருமாவேலன் அவர்கள் திராவிடம் குறித்து பாவாணரின் எழுத்துகளை முழுமையாக படிக்கவில்லை போலும்.

பாவாணர் தமிழ் மொழி திரிந்து திராவிட மொழிகள் உருவானதாக கூறுகிறாரே அன்றி, திராவிடமொழி திரிந்து தமிழ் உருவானதாக எப்போதும் குறிப்பிட வில்லை. தமிழே ஆரியத்திற்கு மூலமும் , திராவிடத்திற்கு தாயும் என்பதே பாவாணரின் இறுதியான முடிவாகும்.

பாவாணர் எழுதிய ""ஒப்பியன் மொழி நூல்" 1940 ஆம் ஆண்டிலும்,, "திராவிடத்தாய்" நூல் 1944ஆம் ஆண்டிலும் வெளி வந்த நூலாகும். பிற்காலத்தில் திராவிடம் குறித்த அவரின் பார்வை என்பது வேறுதன்மை கொண்டது. திராவிடத்திலிருந்து தமிழையும், தமிழரையும் விலக்க வேண்டும் என்பதே அவரது உறுதியான நிலைப்பாடாகும்.

பாவாணர் எழுதிய "தமிழியற் கட்டுரைகள்" நூலில் அவர் கொடுத்த தலைப்பு "திராவிடம் என்பதே தீது" .
(பக்.27-28)

அந்நூலில் பாவாணர் கூறுகிறார்;

"கால்டுவெல் கண்காணியார் முதன்முறையாகத் திராவிட மொழிகளை ஆய்ந்ததினாலும், அக்காலத்தில் தமிழ்த் தூய்மையுணர்ச்சியின்மையாலும்,
தமிழைத் திரவிடத்தினின்று வேறுபடுத்திக்காட்டத் தேவையில்லா திருந்தது. இக்காலத்திலோ, ஆராய்ச்சி மிகுந்துவிட்டதனாலும், வடமொழியும் இந்தியும்பற்றிய கொள்கையில், தமிழர்க்கும் பிற இன மொழியாளர்க்கும் வேறுபாடிருப்பதனாலும், தமிழென்றும், பிறஇனமொழிகளையே திரவிடம் என்றும் வேறுபடுத்திக் காட்டுதல் இன்றியமையாததாம்."

பாவாணர் தமிழ்மொழியை ஆரியத்திடமிருந்து மட்டுமல்ல; திராவிடத்திடமிருந்தும் மீட்க வேண்டும் என்கிற முடிவுக்கு வந்து விட்டார் என்பதையே பாவாணரின் மேற்கண்ட வரிகள் நமக்கு உணர்த்துகின்றன.

மேலும், அந்நூலில் கூறியவற்றை சுருக்கமாகத் தருகிறோம்:

தமிழர்கள் திரவிடர்கள் அல்லர்.
திராவிடர்கள் தமிழர்கள் அல்லர்.

* தமிழ், தமிழன், தமிழ்நாடு என்ற சொற்களன்றி திரவிடம், திரவிடன், திரவிடநாடு என்ற சொற்கள் ஒலித்தல் கூடாது.

* பால் தயிராய்த் திரைந்தபின் மீண்டும் பாலாகாததுபோல்,
வடமொழி கலந்து ஆரியவண்ணமாய்ப்போன திரவிடம் மீண்டும் தமிழ் ஆகாது.

* தமிழ் தூய்மையான தென்மொழியென்றும் திரவிடம் ஆரியங்கலந்த தென்மொழி என்றும் வேறுபாடு அறிதல் வேண்டும்.

* தமிழையும் திரவிடத்தையும் இணைப்பது பாலையும் தயிரையுங் கலப்பது போன்றது.

* தமிழ் என்னுஞ்சொல்லிலுள்ள உணர்ச்சியும் ஆற்றலும் திரவிடம் என்னுஞ்சொல்லில் இல்லை.

* திரவிடம் முக்கால் ஆரியமாதலால், அதனொடு தமிழையும் இணைப்பின், அழுகலொடு சேர்ந்த நற்கனியும் கெடுவது போலக் கெட்டுப்போம். பின்பு தமிழுமிராது, தமிழனுமிரான்.

* வடமொழியை நட்பாகக்கொள்ளும் திரவிடத்திற்கும், பகையாகக்கொள்ளும் தமிழுக்கும் சிறிதும் நேர்த்தம் இருக்க முடியாது.

* தமிழ் தனித்தியங்கும், திரவிடம் வடமொழித் துணையின்றித் தனித்தியங்காது.

* தமிழ் வேறு திரவிடம் வேறு

* வடமொழிக் கலப்பால் திரவிடம் உயரும்; தமிழ் தாழும்.

இந்நூல் தவிர, பாவாணர் அவர்கள் கி.ஆ.பெ.விசுவநாதம் நடத்திய " தமிழர் நாடு" (1951) இதழிலும், புதுக்கோட்டை அண்ணல் சுப்பிரமணியனார் மலரிலும் (1959) " தமிழ் வேறு, திராவிடன் வேறு" என்ற தலைப்பிலும் கட்டுரைகள் எழுதியுள்ளார்.

இவற்றையெல்லாம் படிக்காமலே திருமாவேலன் "ஒப்பியன் மொழி" நூலை மட்டும் திராலிடத்தின் கைக்சரக்காக காட்டுவது முறைதானோ?

உள்ளூரில் தாங்கள் கடை விரித்த திராவிடம் விலை போகாததால், அமெரிக்காவிற்குச் சென்று கூவி விற்க கிளம்பியுள்ளீர்கள்.

பெரியாரின் சொத்துகளை அனுபவிக்க, வாரிசுக்கு கைமாற்ற ஆசிரியர் வீரமணிக்கு பெரியாரின் திராவிடப் போர் வாள் தேவைப்படுகிறது.

திருமாவேலனுக்கு அப்படியொரு நெருக்கடி இல்லை என்ற போதிலும், தான் பணிபுரியும் திராவிடம் காக்கும் நிறுவனத்திற்கு செஞ்சோற்றுக்கடன் தீர்க்க வேண்டும் அல்லவா?

திருமாவேலனுக்கு பெரியாரை உயர்த்திப் பிடிக்கும் உரிமை உண்டே தவிர, திராவிடத்தை தமிழர் மீது திணிக்கும் உரிமை ஒருபோதும் கிடையாது.

பாவாணர் பெரியாரின் ஆரிய எதிர்ப்பை பாராட்டியவர் என்பதை மறுப்பதற்கில்லை. அதற்காக பாவாணர் தூக்க மறுத்த - துருப்பிடித்த - பெரியாரின் திராவிடப் போர்வாளை தயவு செய்து தமிழ்த் தேசியர்களிடம் காட்டி பயமுறுத்த வேண்டாம் என்பதே எமது வேண்டுகோள்.

பாவாணர் எழுதிய திராவிட மறுப்பு கட்டுரைகள் படிக்க:

திராவிடம் என்பதே தீது
https://tamilthesiyan.wordpress.com/…/%E0%AE%A4%E0%AE%BF%E…/

தமிழ் வேறு! திராவிடம் வேறு
https://tamilthesiyan.wordpress.com/…/பாவாணர்-நினைவு-நாள்-1…

திராவிடம், திராவிடன், திராவிட நாடு சொற்களை அறவே ஒழிக்க வேண்டும்!
https://tamilthesiyan.wordpress.com/…/திராவிடம்-திராவிடன்-த…

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, October 13, 2016

தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி சங்கரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்கம்! - சிறப்புக் கட்டுரை!


தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போரளி ஈகி சங்கரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்கம்!

இன்று 13.10.2016 - தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரி உயிர்நீத்த போராளி .பெ.சங்கரலிங்கனார் அவர்களின் நினைவு நாள் (13.10.1956) ஆகும்!

1953ஆம் ஆண்டு 'விசாலா ஆந்திராகேட்டு உண்ணாப் போராட்டத்தில் உயிர் நீத்தவர் பொட்டி சிறிராமுலுஅது போலவே  சென்னை மாகாணத்திற்கு தமிழ்நாடு பெயர் சூட்டக்கோரியும்மொழிவழித் தமிழ் மாகாணம் கோரியும் உண்ணாப் போராட்டம் நடத்தி  வீரச்சாவடைந்தவர் ஈகி  சங்கரலிங்கனார் ஆவார்.

1955ஆம் ஆண்டில் சென்னை மாகாணத்தை மொழிவழியில் பிரிக்க  வேண்டும் எனும் கோரிக்கை வலுவாக எழுந்தது.  அதனோடு இணைந்து  சென்னை மாகாணத்திற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டும் கோரிக்கையும் அப்போதே எழுந்தது.

29.11.1955இல் தமிழரசுக் கழகக் செயற்குழு கூட்டத்தில் முதன் முதலில் .பொசிவஞானம் அவர்களால், “தமிழ் மக்கள் வாழும் பிரதேசத்தை மெட்ராஸ் ஸ்டேட் என்றழைக்கப்படுவதை எதிர்க்கின்றதுமத்திய மாநில அரசுகள் ராஜ்ஜியத்தின் பெயரைத் தமிழ்நாடு என்று பெயரிடப்பட வேண்டும்” என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுஅதற்கு முன்பே தமிழ்நாடு பெயர் மாற்றம் குறித்து 1953இல் .பொ.சி.யார் சட்டமன்ற மேலவையில் பதிவு செய்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதன்பிறகு 19.1.1956இல் ஜி.உமாபதி இல்லத்தில்  நடந்த அனைத்துக் கட்சிக்  கூட்டத்தில் தேவிகுளம் - பீர்மேடு தாலுக்காக்களை தமிழ்நாட்டுக்கே வழங்கக்  கோரியும்தட்சிணா ராஜ்ஜியத் திட்டத்தை எதிர்த்தும்சென்னை ராஜ்ஜியத்திற்கு “தமிழ்நாடு“ எனப் பெயரிடக் கோரியும் 20.2.1956இல் முழு கடையடைப்பு நடத்தப்படுவதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டதுஇக்கூட்டத்தில் .பொ.சிமட்டுமின்றி, தி.மு.க. தலைவர் திரு. சி.என். அண்ணாதுரைபாரதிதாசன்காஅப்பாத்துரையார்இந்தியப் பொதுவடைமைக் கட்சித் தலைவர் தோழர் ப. சீவானந்தம்சி.பாஆதித்தனார் ஆகியோர் பங்கேற்றனர்அதன்படி பிப்ரவரி 20ஆம் நாளன்று தமிழகமெங்கும் கடையடைப்பு வெற்றிகரமாக நடந்தேறியது.

28.3.1956இல் சென்னை மாகாண சட்டமன்றத்தில் மாநில புனரமைப்பு சட்ட முன் வரைவு கொண்டு வரப்பட்டதுஅதன் விவாதத்தில் இந்தியப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பசீவானந்தம் பங்கேற்று, “தமிழ்நாடு” பெயர் மாற்றக் கோரிக்கையின் தேவையை வலியுறுத்திப் பேசினார்அன்றைய காமராசர் தலைமையிலான காங்கிரசு அரசோ சென்னை என்றால் தான் வெளியுலகத்திற்கு தெரியும் என்று கூறி பெயர் மாற்றக் கோரிக்கையைப் புறக்கணித்தது.

இந்நிலையிலே தான்காங்கிரசுக்காரரான சங்கரலிங்கனார்  அவர்கள் 27.7.1956 அன்று விருதுநகரில்ஒரு ஓலைக்குடிசையில் பேராயக் கட்சி கொடி பறந்திட உண்ணாநிலையைத் தொடங்கினார்.

அவர் நடத்திய உண்ணாப்போரை “பச்சைத்தமிழன்” காமராசரின் ஆட்சி அலட்சியப்படுத்தியதுபிரதமர் நேருவோடு பேசி சங்கரலிங்கனாரின் உயிரைப் பாதுகாக்க வேண்டிய காமராசர் செய்தியாளர்களிடம், ”இப்படியான பெயர் மாற்றங்களால் ஒரு பயனும் இல்லைஇது மக்களின் உணர்ச்சியை தூண்டி விடுகிற சமாச்சாரம்அவர் முன்வைத்த 12 கோரிக்கைகளில் 10 கோரிக்கைகள் மத்திய அரசோடு தொடர்புடையது” என்று நழுவலாகப் பதிலளித்தார்.

அவரின் உண்ணாநிலைப் போரை நிறுத்தும்படி .பொ.சிஅண்ணாதுரைசீவானந்தம் ஆகியோர் வேண்டுகோள் விடுத்தனர்அண்ணா அவர்கள் சங்கரலிங்கனாரை நேரில் சந்தித்தார்அப்போது, ”எல்லையை வாங்க முடியாதாஇதில் என்ன கஷ்டம்இதய சுத்தியோடு ஆந்திரா சர்க்காருடன் பேசினால் காரியம் நடக்காதா?” என்று கண்ணீர் சிந்தியபடி கேட்டதாக அண்ணா தம்பிக்கு எழுதிய கடிதத்தில் தெரிவித்துள்ளார்.

சங்கரலிங்கனார் எழுதிய இறுதிக் கடிதம்
ஐயா சங்கரலிங்கனார், உண்ணாப் போர் 60 நாட்களைத் தாண்டியும் காமராசரின் கல்மனம் கரையவில்லைஅப்போது “ஜனசக்தி” துணையாசிரியர் தியாகி மாயாண்டி பாரதிக்கு கடிதம் எழுதினார்

"காங்கிரஸ் ஆட்சியின் கொடுமை கடுமையாகி விட்டது. காந்தியம் மடிந்து கொண்டு வருகிறது. துரோகிகள் ஆட்சியில் உயிரோடு வாழ மனமில்லை. காங்கிரஸ் - காந்தியத்திற்காக உழைத்தும், அவர்கள் என் உண்ணாவிரதத்தில் கூட உதவி செய்யத் தவறிவிட்டார்கள். கம்யூனிஸ்டு கட்சி உதவி செய்கிறது . வெற்றி கிடைத்தால் வாழ்கிறேன் அல்லது சாகிறேன்".



செப்.29ஆம் நாள் "கம்யூனிஸ்டு இயக்க சகோதரர்களுக்கு" எனத் தலைப்பிட்டு இறுதிக் கடிதம் பின்வருமாறு எழுதினார் :

"பட்டினியாலும் பல்வேறு பசியாலும் வாடும் ஏழை மக்கள் என் மனக்கண் தோன்றி கண்ணீர் வடிக்கின்றனர். இது வீண் போகாது. இன்று முதல் அசதி அதிகம், பேச சக்தி குறைவு, கூடிய சீக்கிரம் சாவு ஏற்படும், பூ வேண்டாம், பூ மாலை வேண்டாம், கெளபீனம் கட்டுவது போதும், பாடையில் குளிர்ந்த நேரம் எடுத்துச் செல்லுங்கள், காந்தி தங்கிய ஆத்துக்கரை மண் மெட்டில், நான் தங்கியிருந்த இடத்துக்கு முன்னால் இரண்டு வேப்ப மரத்துக்கு அடியில் குழியில் போடுங்கள். அந்த இடத்தில் என் சடலத்தை அடக்கம் செய்ய சர்க்கார் மறுத்தால் திரு.வெ.நா.பு.ராமசாமி நாடார் அவர்கள் நந்தவனத்துக்கு முன்பு குண்டும் குழியுமாக உள்ள இடத்தின் மத்தியில் மேடையில் அடக்கம் செய்யுங்கள். எல்லோரும் வணக்கம், வந்தே மாதரம்!
ஆண்டவன் ஆத்மன்,
க.பெ.சங்கரலிங்க நாடார்”

மேலும். தம் இறப்பிற்குப் பின் உடலை கம்யூனிஸ்டு கட்சியிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும் சங்கரலிங்கனார் கேட்டுக் கொண்டார்.

காமராசர் தலைமை வகித்த ஆளும் காங்கிரசுக் கட்சி இவரின் கோரிக்கையை ஏற்க மறுத்தது. அவரின் உடல் நிலை மோசமடைந்தால் மதுரை எர்ஸ்டன் (இன்றைய இராசாசி மருத்துவமனை) மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கும் உண்ணாநிலைப் போராட்டத்தை தொடர்ந்த காரணத்தால், 62 வயது நிரம்பிய சங்கரலிங்கனார் 79-வது நாளில் (10.10.1956) உயிர் துறந்தார். நான் இறந்த பிறகு அக்கட்சியினரிடமே உடலை ஒப்படைக்கும்படி சங்கரலிங்கனார் இறுதியாக வேண்டிக் கொண்டார்மதுரையில் உயிர் துறந்ததால் அவரின் இறுதி விருப்பம் நிறைவேறவில்லை. அங்குள்ள தத்தனேரி சுடுகாட்டில் ௧ம்யூனிஸ்டு கட்சியினரால் எரியூட்டப்பட்டார். சங்கரலிங்கனாரை அடக்கம் செய்த கம்யூனிஸ்டு கட்சி அப்போது ஒன்றுபட்ட கட்சியாகும். தமிழ்நாடு பெயர் மாற்றத்தை அக்கட்சி ஆதரித்தது.

1964இல் அக்கட்சி இரண்டாகப் பிளவுபட்டு மார்க்சிஸ்ட் கட்சி உருவானது. அக்கட்சி இன்று வரை மார்க்சிஸ்ட் கட்சி "தமிழ் மாநிலக் குழு" என்று அழைக்கப்படுகிறதே தவிர மார்க்சிஸ்ட் "தமிழ்நாடு குழு" என்று அழைக்கப்படுவதில்லை. இது சங்கரலிங்கனாருக்கு செய்திடும் மாபெரும் துரோகமாகும். சங்கரலிங்கனாரை "நாங்கள் தான் எரியூட்டினோம்" என்று மார்தட்டிக் கொள்வதை மார்க்சிஸ்டுகள் இனியாவது நிறுத்திக் கொள்வார்களா? (நன்றி; அ.பெரியார் எழுதிய "தமிழ்நாடு எல்லைப் போராட்டமும் பெயர் மாற்றமும்").

1952இல் பொட்டி சிறிராமுலுவின் மரணம் தெலுங்கர்களை விழிக்க வைத்து “ஆந்திரா” பெயரில் தனி மாகாணம் கண்டதுஆனால் சங்கரலிங்கனாரின் மரணமோ காங்கிரசின் துரோகத்தாலும் திராவிட கட்சிகளின் “திராவிட நாடு” குழப்பத்தாலும் தமிழர்களை தூங்க வைத்தது.

1956இல் ஐதராபாத் இதர பகுதிகள் ஆந்திராவானதுதிருவிதாங்கூர் இதர பகுதிகள் கேரளாவானதுசென்னை மாகாணமோ இதர பகுதிகளோ தமிழ்நாடாக மாறவில்லைசரியாக 11 ஆண்டுகள் கழித்து அண்ணா முதல்வரான பிறகே சென்னை மாகாணம் “தமிழ்நாடு” எனப் பெயர் மாற்றம் பெற்றது.

தமிழர்கள்  தமிழ் நிலத்திற்கு  பெயர் சூட்டும் முன்னே தெலுங்கர்கள் தம் நிலத்திற்கு பெயர் சூட்டிய கையோடு சும்மா நிற்கவில்லைஅதற்காகவே உழைத்து மடிந்த பொட்டி சிறிராமுலுவை போற்றிடவும் முன் வந்தனர்ஆந்திர அரசு  ஹைதரபாத்தில் 'பொட்டி சிறிராமுலு தெலுங்குக் கழகம்நிறுவியும்அவர் நினைவாக நெல்லூர் மாவட்டத்தை 'பொட்டி சிறிராமுலுமாவட்டம் என்றும் பெயர் மாற்றம் செய்துள்ளதுஇந்திய அரசு பொட்டி சிறிராமுலுவிற்கு அஞ்சல் தலையையே வெளியிட்டு விட்டது.

இதைவிடப் பெரிய கொடுமை என்னவெனில், "சென்னை இல்லாத ஆந்திரம் தலையில்லாத முண்டம்என்று பேசிய பொட்டி சிறிராமுலுவிற்கு சென்னையிலேயே நினைவுச் சின்னத்தை எழுப்பியும் விட்டனர்பொட்டி சிறிராமுலுவின் ஈகத்திற்கு எந்த விதத்திலும் சங்ரலிங்கனாரின் ஈகம் குறைந்ததல்லஆனால் அவரை தமிழர்களாகிய நாம் என்றாவது கொண்டாடி இருக்கிறோமாஇல்லையே?

அவர் மறைந்து 57 ஆண்டுகள் கழித்து விருதுநகரில் ஓராண்டுக்கு முன்னர்தான் (18.06.2015), அதுவும் ஒப்புக்காக காணொளி மூலம் செயலலிதா அரசு நினைவுச் சின்னம் திறந்துள்ளது.

தமிழ்நாடு பெயர் சூட்டவும்தமிழ்மண் மீட்கவும் போராடிய சங்கரலிங்கனாரை தமிழர்களாகிய நம்மைத் தவிர வேறு யாராலும் நினைக்க முடியாது என்பதே வரலாறு உணர்த்தும் பாடமாகும்!

ஈகி சங்கரலிங்கனார் அவர்களுக்கு வீரவணக்கம்!

(கட்டுரையாளர் கதிர்நிலவன், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர். மின்னஞ்சல்: nilavan69@gmail.com)

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்



பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT