உடனடிச்செய்திகள்

Tuesday, June 29, 2021

தமிழ் இந்து? ஆரிய இந்து? - ஐயா பெ. மணியரசன் உரை!

தமிழ் இந்து? ஆரிய இந்து?


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, June 27, 2021

"மேதகு பார்த்தீர்களா" பெ. மணியரசன் உரை!

"மேதகு பார்த்தீர்களா"



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, June 25, 2021

தமிழர்களுக்குப் பீதியூட்டும் துக்ளக்கின் பொய்கள் - ஐயா பெ.மணியரசன் உரை!

தமிழர்களுக்குப் பீதியூட்டும் 

துக்ளக்கின் பொய்கள்



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ.மணியரசன் உரை!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்க! - பெ. மணியரசன் வேண்டுகோள்!



திருச்சி சிறப்பு முகாமில் இருந்தவர் சாவு
சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்களை உடனே விடுதலை செய்க!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் வேண்டுகோள்! 


திருச்சி நடுவண் சிறையில் சிறப்பு முகாம் ஒன்றை உருவாக்கி அதில் ஈழத்தமிழர்கள் 78 பேரை அடைத்து வைத்துள்ளார்கள். நீதிமன்றங்கள் வழங்கிய தண்டனைக்காக அல்ல; ஈழத்தமிழராய்ப் பிறந்த “குற்றத்திற்காக”!

ஆம்! அப்படித்தான் சொல்ல வேண்டியுள்ளது. இந்த 78 பேரும் உரிய கடவுச்சீட்டு இல்லாமல் இலங்கையிலிருநது தமிழ்நாட்டிற்கு வந்த குற்றத்திற்காகவோ அல்லது சிறு சிறு குற்றங்களுக்காகவோ தளைப்படுத்தப்பட்டு நீதிமன்றத்தால் தண்டிக்கப்பட்டு, தண்டனைக் காலத்தை முடித்தவர்கள். இவர்களில் பலர்க்குத் தமிழ்நாட்டில் குடும்பங்கள் இருக்கின்றன; உறவினர்கள் இருக்கின்றனர். அக்குடும்பங்களைச் சேர்ந்தோர் இந்திய அரசால் ஏதிலியராக (அகதிகளாக) ஏற்கப்பட்டவர்கள். 

சிறப்பு முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஈழத்தமிழர்களை அக்குடும்பங்களிடம் தமிழ்நாடு அரசு ஒப்படைக்க வேண்டும். வெளிநாடுகளுக்குப் போக வாய்ப்புள்ளோரையும் அவர்கள் பொறுப்பில் அனுப்பி வைக்கலாம். 

ஒருவர் இறந்துவிட்டார்

மேற்கண்ட வகைகளில் தங்களை விடுவிக்க வேண்டும் என்று கோரிக்கை வைத்து, திருச்சி நடுவண் சிறை சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் கடந்த 17 நாட்களாக முகாமிலேயே ஒன்றாக அமர்ந்து முழக்கமெழுப்பிக் காத்திருப்புப் போராட்டம் நடத்தி வருகிறார்கள். இவர்களில் இலங்கை அக்கரைப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த முகமது அலி என்பவர்க்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு, திருச்சி மாவட்ட அரசு மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு, சிகிச்சைப் பலனின்றி 24.06.2021 அன்று இறந்து விட்டார் என்ற துயரச் செய்தி வெளியாகியுள்ளது. 

மேலும் காத்திருப்புப் போராட்டம் நடத்தும் ஈழத்தமிழர்கள், தமிழ்நாடு அரசுத் தங்களை விடுதலை செய்ய வேண்டும், இல்லையெனில் கொன்றுவிட வேண்டும்; இந்த இரண்டில் ஒன்றைத் தமிழ்நாடு அரசு செய்யவில்லையென்றால் தற்கொலை செய்து கொள்கிறோம் என்று கூறிக் கொண்டு போராடுகிறார்கள் 

அதுபோன்ற பெருந்துயரங்கள் ஏற்படுவதற்கு முன் திருச்சி சிறப்பு முகாமில் உள்ள அனைத்து ஈழத்தமிழர்களையும் விடுதலை செய்துவிட வேண்டும் என முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



"ஜி.எஸ்.டி. வரிமுறையின் இமாலயத் தோல்வி!" தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!



"ஜி.எஸ்.டி. வரிமுறையின் இமாலயத் தோல்வி!"

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
தோழர் கி. வெங்கட்ராமன் சிறப்புக் கட்டுரை!


பெரும் ஆரவாரத்தோடு இந்திய நாடாளுமன்ற நடுமண்டபத்தில் 30.06.2017 அன்று நள்ளிரவில் அறிவிக்கப்பட்டு 2017 சூலை 1 முதல் செயலுக்கு வந்த “சரக்கு மற்றும் சேவை வரி” (ஜி.எஸ்.டி.) என்ற புதிய வரிமுறை, எல்லா முனையிலும் தோல்வி அடைந்து விட்டது.

கூட்டுறவுக் கூட்டாட்சி முறைமைக்கு (Co-operative Federalism) மகத்தான எடுத்துக்காட்டு, ஒரே நாடு - ஒரே வரி - ஒரே சந்தை என்பதால் நுகர்வோர் வாங்கும் பொருட்களின் விலை குறையும், சேவைகளின் கட்டணம் குறையும், சிறுதொழில் வளர்ச்சிக்குப் புதிய ஊக்கம் கிடைக்கும், வரி ஏய்ப்பு இருக்காது என்று ஜி.எஸ்.டி. வரி விதிப்பு குறித்து இந்தியத் தலைமையமைச்சர் நரேந்திர மோடி கோபுரம் ஏறி கொக்கரித்தார். ஆனால், ஜி.எஸ்.டி. செயலுக்கு வந்து இந்த ஐந்தாண்டுகளிலேயே அத்தனை முனைகளிலும் படுதோல்வி அடைந்திருப்பதை 15ஆவது நிதி ஆணையமும், இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கையும் கூட ஒத்துக் கொள்ள வேண்டியதாகிவிட்டது. 

கடந்த 28.05.2021 அன்று நடைபெற்ற சரக்கு சேவை வரி மன்றத்தின் (ஜி.எஸ்.டி. கவுன்சில்) 43ஆவது கூட்டம், ஜி.எஸ்.டி. வரிமுறை நொறுங்கிக் கொண்டிருக்கிறது என்பதற்கு சான்று கூறியது. 

பல்வேறு தேசிய இனங்கள், பல்வேறு வணிகமுறை மரபுகள், வணிக வரலாறுகள் கொண்டுள்ள இந்தியத் துணைக் கண்டத்தில் சரக்கு சேவை வரி என்பது, சிறுதொழில் மற்றும் சிறு வணிக நிறுவனங்களை ஊக்கப் படுத்துவதற்கோ, விலை ஏற்றத்தைத் தவிர்ப்பதற்கோ, வரி ஏய்ப்பைத் தடுப்பற்கோ பயன்படாது. மாறாக, தேசிய இன ஒடுக்குமுறைக்கான வலுவான கருவியாக மட்டுமே செயல்படும் என்று இந்த வரிவிதிப்பு அறிவிக்கப்பட்ட நாளிலிருந்தே நாம் எச்சரித்தோம். (விரிவிற்குக் காண்க : “தமிழ்நாட்டின் மீது பொருளியல் போர்”, கி. வெங்கட்ராமன், பன்மைவெளி வெளியீடு).

ஐந்தாண்டு கடைசியில் கணக்குப் பார்த்தால், ஜி.எஸ்.டி. வரி வசூல் எதிர்பார்த்ததைவிட 4 இலட்சம் கோடி ரூபாய் குறைவாக வந்திருக்கிறது. “இந்த வரி முறைமையைப் பற்றி ஆழமாக மீளாய்வு செய்ய வேண்டிய நேரம் வந்துவிட்டது” என்று பதினைந்தாவது நிதி ஆணையம் தனது இடைக்கால அறிக்கையில் எச்சரிக்கை செய்தது. 

காங்கிரசு ஆட்சிக் காலத்தில் முன்மொழியப்பட்டு, மோடி ஆட்சியில் கொஞ்சம் கொஞ்சமாக பல்வேறு மாநில அரசுகளை வளைத்து கடைசியாக தமிழ்நாடும் அந்த வலையில் வீழ்ந்ததற்குப் பிறகு சரக்கு சேவை வரி கொண்டு வரப்பட்டது. 

கூட்டுறவு கூட்டாட்சி அல்ல ஒற்றையாட்சியே
 
இதற்கு முன் இருந்திராத வகையில் 122ஆவது திருத்தம் என்ற ஒற்றைத் திருத்தத்தின் வழியாக ஒரே அடியில் அரசமைப்புச் சட்டத்தில் மிகப்பெரிய மாறுதல்கள் ஏற்படுத்தப்பட்டன. தேசிய இன மாநிலங்களுக்கு இருந்த அரைகுறை நிதி அதிகாரங்களும், முற்றிலும் பறிக்கப்பட்டு ஒற்றையாட்சி நிறுவப்படும் நிகழ்வாக அது அமைந்தது. 

கூட்டுறவு கூட்டாட்சி என்ற மயக்கும் முழக்கத்தின் கீழும், அந்தந்த மாநிலத்தில் இதுவரை வசூலான மாநில வரியைவிட ஆண்டுக்கு ஆண்டு 14% கூடுதல் வரித் தொகை இழப்பீடாக வழங்கப்படும் என்று ஆசை வார்த்தை கூறியும் மாநில அரசுகள் இணங்க வைக்கப் பட்டன. 

ஐந்தாண்டு படிப்பினைகளைப் பார்த்தால், இது முற்றிலும் மோசடியான கண்கட்டு வித்தை என்பது இப்போது அம்பலமாகி இருக்கிறது. 

கூட்டுறவு கூட்டாட்சி என்ற கோட்பாட்டுக்கு சரக்கு சேவை வரி மன்றம் (ஜி.எஸ்.டி. கவுன்சில்) அமைக்கப் பட்டிருப்பதே மிகப்பெரிய சான்று என மோடி அரசு தம்பட்டம் அடித்தது. 

அரசமைப்புச் சட்டத்தில் புதிதாக சேர்க்கப்பட்ட உறுப்பு 279A, சரக்கு சேவை வரி மன்றம் பற்றி விரிவாகக் கூறுகிறது. மேல் தோற்றத்தில் பார்த்தால், மாநிலங்களுக்கு கூடுதல் வாய்ப்பு வழங்கப்பட்டதுபோல் தெரியும். ஆனால், சரக்கு சேவை வரி மன்றத்தில் ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் உள்ள வாக்குகளின் மதிப்பளவு (Weightage) பிரிக்கப்பட்டிருப்பதிலும், இந்த மன்றத்தில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்குத் தேவை யான குறைந்தபட்ச வாக்குகளின் மதிப்பளவும் வரையறுக்கப்பட்டதிலும்தான் நுட்பமான சூழ்ச்சி இருக்கிறது. 

சரக்கு சேவை வரி மன்றத்தில் ஒன்றிய அரசின் சார்பில் வாக்குரிமை உள்ள இரண்டு பேராளர்கள் இருப்பார்கள். அவர்களில் இந்திய நிதியமைச்சர் இந்த மன்றத்தின் தலைவராக இருப்பார். 28 மாநிலங்களின் பேராளர்களும், சட்டமன்றத்துடன் கூடிய மூன்று ஒன்றிய ஆட்சிப் பகுதிகளிலிருந்து 3 பேராளர்களும் இருப்பார்கள். 

அதாவது, மொத்தமுள்ள 33 உறுப்பினர்களில் 2 பேர் மட்டும் ஒன்றிய அரசின் பேராளர்களாக இருப்பார்கள். மற்ற 31 பேர் மாநிலங்கள் மற்றும் ஒன்றிய ஆட்சிப் பகுதிகளின் பேராளர்களாக இருப்பார்கள். தோற்றத்தில் பார்த்தால், மாநிலப் பேராளர்களுக்குத்தான் கூடுதல் வாய்ப்பு இருப்பது போலத் தெரியும். ஆனால், வாக்குகளின் மதிப்பளவு பிரிக்கப்பட்டிருப்பதில்தான் சூழ்ச்சியே இருக்கிறது. 

ஒன்றிய அரசின் சார்பில் இரண்டு பேராளர்கள்தான் என்றாலும், ஒன்றிய அரசின் வாக்கு மதிப்பு 33.3 விழுக்காடு ஆகும். மீதமுள்ள 66.7 விழுக்காடு மதிப்பு  வாக்கு என்பது 28 மாநிலங்களுக்கும், மூன்று ஒன்றியப் பிரதேசங்களுக்கும் சமமாகப் பிரித்தளிக்கப்பட்டுள்ளது, ஆனால், இந்த மன்றத்தில் எந்தத் தீர்மானம் எடுப்பதாக இருந்தாலும், அதற்கு குறைந்தளவு 75 விழுக்காடு மதிப்பளவு வாக்குகள் கிடைத்தாக வேண்டும். இல்லையென்றால், அத்தீர்மானம் நிறைவேறாது!

எல்லா மாநிலங்களுக்கும் சேர்த்து 66.7 விழுக்காடு மதிப்பளவு. ஆனால், தீர்மானம் நிறைவேறுவதற்கோ 75 விழுக்காடு மதிப்பு தேவை! 

பல்வேறு கட்சிகள், கருத்தோட்டங்கள் உள்ள 31 மாநிலங்களும் ஒரே கருத்தில் உடன்படுவது அரிதிலும் அரிதானது. அப்படியே அனைத்து மாநிலங்களும் ஒரே ஒத்த கருத்தில் நிற்பதாக கற்பனையில் கருதிக் கொண்டாலும், அப்போதும் அவற்றின் ஒட்டுமொத்த வாக்கு மதிப்பு 66.7 விழுக்காடு தான்! 

பெரும்பான்மை வாக்கு மதிப்பு மாநிலங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது போல தோற்றம் காட்டி, ஒன்றிய அரசு தனது கைகளில் இரத்து அதிகாரத்தை (VETO POWER) வைத்திருக்கிறது என்பதுதான் உண்மை நிலை! 

இந்த ஜி.எஸ்.டி. கவுன்சில் அமைக்கப்பட்டிருக்கிற முறையே மாநிலங்களை செல்லாக் காசாக்குகிறது என இராஜஸ்தான், பஞ்சாப், மேற்கு வங்கம், கேரளா, தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலப் பேராளர்கள் சரக்கு சேவை வரி மன்றக் கூட்டத்தில் அபாயக்குரல் எழுப்பினார்கள். 

“நீ அரிசி கொண்டு வா.. நான் உமி கொண்டு வருகிறேன்! இரண்டு பேரும் ஊதிஊதித் தின்னலாம்” என்றழைப்பதுபோல், வரி வருமானம் அதிகம் வழங்குகிற மாநிலமும், வரி வசூலில் எந்தத் திறமையுமற்று பின்தங்கியிருக்கிற மாநிலங்களும் சம வாக்கு மதிப்பு பெற்றிருப்பது வரித் திறனுள்ள மாநிலங்களை, குறிப்பாக தமிழ்நாட்டை தண்டிப்பதாக இருக்கிறது. இந்த நிலைமையைக் குறிப்பிட்டுத்தான் தமிழ்நாடு நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராசன் இந்தக் கூட்டத்தில் தெளிவாக வாதம் செய்தார். 

சரக்கு சேவை வரி மன்றத்தின் கட்டமைப்பே இந்திய அரசின் சர்வாதிகாரத்திற்கு வாய்ப்பளிக்கிறது. அத்துடன், அதிகம் ஜி.எஸ்.டி. திரட்டித் தரும் மாநிலங்கள் தண்டிக்கப்படுவதற்கும் வழி கோலுகிறது. இதுவே கூட்டுறவு கூட்டாட்சி முறைமை என்று இதற்கு சொன்ன பளபளப்பான பரப்புரையை வீழ்த்திவிட்டது. 

இதுபோதாதென்று ஜி.எஸ்.டி. அமலாக்கக் குழு (GST Implementation Committee) என்ற பெயரால் முற்றிலும் அதிகாரிகளைக் கொண்ட குழுவை இடையிலேயே ஏற்படுத்தினார்கள். ஜி.எஸ்.டி. கவுன்சிலில் செய்யப்படும் முடிவுகளை முறையாக செயல்படுத்துவதற்கான குழுதான் இது என முதலில் கூறப்பட்டது. 

ஆனால், நடைமுறையில் ஜி.எஸ்.டி. கவுன்சிலுக்கு மேலதிகாரம் படைத்ததாக இந்தக் குழு மாற்றப்பட்டு விட்டது. ஜி.எஸ்.டி. மன்றத்தைத் தவிர்த்து விட்டு, தன்னிச்சையாக முடிவுகளை எடுக்கக் கூடியதாக இந்தக் குழு மாறியது. ஏனெனில், ஜி.எஸ்.டி. அமலாக்கக் குழுவின் பரிந்துரைகள் அனைத்தையும் இந்திய நிதியமைச்சகம் தனித்தனி அறிவிப்புகளாக வெளியிடத் தொடங்கி விட்டது. 

சரக்கு சேவை வரி மன்றத்தில் விவாதிக்கப்பட வேண்டிய செய்திகள் எல்லாம் இவ்வாறு தனித்தனியான அரசு அறிவிப்புகளாக வெளிவரத் தொடங்கியது. 

இதற்கு மேலும் இந்திய மறைமுக வரி வாரியமும், அதன் வரி ஆய்வு அமைப்பும் (Tax Research Unit) தன்னிச்சையான அறிவிப்புகளை வெளியிட்டுக் கொண்டிருக்கின்றன. இவையெல்லாம் செயலுக்கு வந்தபிறகு ஜி.எஸ்.டி. கவுன்சில் கூட்டத்தில், ஒப்புக்காக ஒப்புதலுக்கென்று வைக்கப்படுகிறது. 

இதனால்தான், “ஜி.எஸ்.டி. கவுன்சில் வெறும் ரப்பர் ஸ்டாம்ப் அமைப்பாக தாழ்த்தப்பட்டுவிட்டது” என தமிழ்நாடு நிதியமைச்சரும், பஞ்சாப் நிதியமைச்சரும் ஆவேசமாகக் குரலெழுப்பினார்கள். 

அரசமைப்புச் சட்ட உறுப்பு 279A, சரக்கு சேவை வரி மன்றத்திற்கு மாநிலப் பேராளர்களிலிருந்து ஒருவர் துணைத் தலைவராகத் தேர்வு செய்யப்படுவார் எனக் கூறுகிறது. ஆனால், ஐந்தாண்டு ஆகியும் மாநிலப் பேராளர்களிடமிருந்து இவ்வாறு ஒரு துணைத் தலைவர் தேர்வு செய்யப்படவே இல்லை! இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் நாட்டாண்மையில் ஜி.எஸ்.டி. கவுன்சில் நடப்பதற்கான நடைமுறை ஏற்பாடு இது! 

மாநில அரசுகளுக்கு ஆண்டுதோறும் 2015 - 2016ஆம் ஆண்டின் வரி வருவாயை விட 14 விழுக்காடு கூடுதலாக வரி இழப்பீட்டுத் தொகை வழங்கப்படும் என்ற வாக்குறுதியின்போதுதான் பெரும்பாலான மாநிலங்கள் ஜி.எஸ்.டி. வரி முறையை ஏற்றுக் கொண்டன. ஆனால், இந்த வரி விதிப்பு தொடங்கிய இரண்டாம் ஆண்டி லிருந்தே இழுபறி தொடங்கிவிட்டது. 

மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய இயல்பான வரிப் பங்கையும் (State GST) முழுமையாகத் தராமல் இந்த 14 விழுக்காடு இழப்பீட்டையும் தராமல் இந்திய அரசு இழுத்தடிக்கத் தொடங்கியது. தமிழ்நாடு உள்ளிட்ட தொழில் வளர்ச்சியுள்ள பிற மாநில அரசுகளும் கொள்ளையாக வரியைக் கொட்டிக் கொடுத்துவிட்டு, இழப்பீட்டுத் தொகைக்காக கெஞ்சிக் கூத்தாட வேண்டிய நிலைமைக்கு வீழ்ந்தன. 

இதற்குமேல், சட்டப்படி வாக்குறுதி அளிக்கப்பட்ட 2021 - 2022 நிதி ஆண்டிற்கு இழப்பீட்டுத் தொகையோ, பங்குத் தொகையோ தர முடியாது என்று இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கைவிரித்தார். 

“கொரோனா பெருந்தொற்று கடவுளின் செயல். இதில் வந்த வரி வசூல் வீழ்ச்சிக்கு நாங்கள் பொறுப்பேற்க முடியாது. எனவே, பங்குத் தொகையும் தர முடியாது” என்று ஆண்டவனைக் காட்டி ஆணவப் பேச்சுப் பேசினார் நிர்மலா சீத்தாராமன்! வேண்டுமானால், மாநிலங்கள் கடன எழுப்பிக் கொள்ளட்டும் என்று கைகழுவி விட்டார். 

கடந்த மே 28ஆம் நாள் (2021) நடைபெற்ற 43ஆவது மன்றக் கூட்டத்தில், பெரும்பாலான மாநில அரசுகள் வலியுறுத்தியதற்குப் பிறகு 1 இலட்சத்து 10 ஆயிரம் கோடி ரூபாய் இந்திய அரசு கடன் எழுப்பி, அதனை மாநில அரசுகளுக்கு கடன் தொகையாக வழங்கும் என்றும், பின்னால் மாநிலங்களுக்கு அளிக்க வேண்டிய பங்கில் அது சரி செய்து கொள்ளப்படும் என்றும் நிர்மலா சீத்தாராமன் அறிவித்தார். பங்குத் தொகை பறிபோனது போனதுதான். கடன் தொகைக்கு தான் ஒப்புதல் வந்திருக்கிறது. 

இந்தச் சூழலில், 2022-டோடு ஜி.எஸ்.டி. இழப்பீட்டை நிறுத்தக்கூடாது, குறைந்தது மேலும் ஐந்தாண்டுக்காவது நீட்டிக்க வேண்டும் என மாநில அரசுகள் வலியுறுத்து கின்றன. இந்திய அரசு அதற்கு செவிசாய்க்கும் வாய்ப்பு தெரியவே இல்லை! 

ஏனெனில், ஏற்கெனவே மாநிலங்களுக்குத் தர வேண்டிய ஜி.எஸ்.டி. பங்குத் தொகையையோ, இழப்பீட்டுத் தொகையையோ தரவில்லை என்பது மட்டுமின்றி, மாநிலங்களுக்குத் தர வேண்டிய பங்குத் தொகையை குறைப்பதற்காக சூதான வழிமுறைகளில் இந்திய அரசு இறங்கிவிட்டது. 

122ஆவது சட்டத் திருத்தப்படி சரக்கு மற்றும் சேவைகள் மீது விதிக்கப்படும் வரித் தொகையில்தான் மாநிலங்களுக்குப் பங்கு பிரித்தளிக்கப்படும் எனக் கூறப்பட்டு விட்டது. இதைத் தவிர்ப்பதற்காக நேரடியாக சரக்கு மற்றும் சேவை ”வரி” (Tax) என்று அழைப்பதை மாற்றி, பல்வேறு சரக்கு சேவை வரிகளுக்கு தீர்வை (Cess) என்றும், மேல் வரி (Surcharge) என்றும் பெயர் மாற்றம் செய்து, இந்திய அரசு வசூலிக்கத் தொடங்கி விட்டது. 

இந்தத் தீர்வைக்கும், மேல் வரிக்கும் “வரி” (Tax) என்ற பெயர் இல்லாததால், அதில் மாநிலங்களுக்குப் பங்கு தர வேண்டியதில்லை என்ற கொல்லைப்புற வழியை மோடி அரசு தேர்ந்தெடுத்தது, 

மோடி தலைமையமைச்சராகப் பதவி ஏற்றதற்குப் முன்னால், 2013 - 2014 நிதியாண்டில் இவ்வாறு பல சரக்குகள் மற்றும் சேவைகளுக்கு இருந்த தீர்வை மற்றும் மேல் வரி என்பது 6% ஆக இருந்தது. ஜி.எஸ்.டி. செயலுக்கு வந்ததற்குப் பிறகு, இப்போது 2020 - 2021ஆம் நிதியாண்டில் தீர்வை மற்றும் மேல் வரி 19.9 விழுக்காடாக தாறுமாறாக உயர்ந்திருக்கிறது. இந்தத் தொகை 5 இலட்சத்து 52 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும்! 

மறைமுக வரியான ஜி.எஸ்.டி.யில் மட்டுமின்றி, மாநிலங்களுக்குப் பங்கு தர வேண்டிய நேர்முக வரியிலும் இதே வகையான சூதான நடைமுறையை இந்திய அரசு தீவிரப்படுத்தியிருக்கிறது. 

கடந்த 14ஆவது நிதி ஆணையத்தின் பரிந்துரை குறித்து விளக்கமளித்த இப்போதைய 15ஆவது நிதி ஆணையம், தனது இடைக்கால அறிக்கையில் இதனை தெளிவுபடுத்தியது. 

14ஆவது நிதி ஆணையம் மாநிலங்களுக்கான நிதிப் பங்கீட்டை வரலாறு காணாத அளவில், 42 விழுக்காடாக உயர்த்தி விட்டது எனக் கூறப்பட்டது. ஆனால், மாநிலங்களுக்குப் பங்கு தர தேவையில்லாத தீர்வை மற்றும் மேல் வரியைக் கழித்து விட்டால், ஒட்டுமொத்த வரி வசூலில் மாநிலங்களின் பங்காகக் கிடைத்தது வெறும் 32.4 விழுக்காடு தான் என 15ஆவது நிதி ஆணையம் விளக்கியது. 

இவ்வாறு வரிக் கட்டமைப்பு மாற்றியமைக்கப்பட்டு விட்டதால் தமிழ்நாடு ஆண்டுதோறும் 88 ஆயிரம் கோடி ரூபாய் வரிப்பங்கை இழந்து வருகிறது என்று சட்ட மன்றத்தில் நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் கூறியிருப்பது ஒரு எச்சரிக்கை அறிவிப்பாகும். 

ஜி.எஸ்.டி. வரி வருமானமும், நேரடி வரி வருமானமும் மாநிலங்களுக்கிடையே பகிர்ந்து அளிக்கப்படும் முறையே தமிழ்நாட்டைப் புறக்கணிக்கும் வகையில் அமைந் திருக்கிறது. சிறிய மாநிலங்களை மட்டுமல்ல, இந்தி மாநிலங்களுக்கு அதிக ஒதுக்கீடு செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. 

எடுத்துக்காட்டாக, உத்திரப்பிரதேசம், மத்தியப் பிரதேசம், பீகார், இராஜஸ்தான் ஆகிய இந்தி மாநிலங்கள் அளிக்கும் வரி வருவாய் இந்தியாவின் மொத்த வரி வருவாயில் 14.6 விழுக்காடு மட்டுமே ஆகும். ஆனால், அந்த மாநிலங்கள் பெறுகிற பங்குத் தொகையோ மொத்த வரி வருவாயில் 41.86 விழுக்காடு (2020 - 2021 ஒன்றிய பட்ஜெட் புள்ளி விவரங்கள்) ஆகும். அதேநேரம், தமிழ்நாடு பெறுகிற பங்குத் தொகை 4.189 விழுக்காடு மட்டுமே ஆகும். 

மக்கள் தொகை என்ற கணக்கின்படி பார்த்தாலும், மேற்சொன்ன இந்தி மாநிலங்களின் மக்கள் தொகை இந்திய நாட்டு மக்கள் தொகையில் 36.7 விழுக்காடு தான்! தமிழ்நாட்டு மக்கள் தொகையோ ஏறத்தாழ 6 விழுக்காடாகும். வரி வசூலில் முதல் வரிசை மாநிலம் தமிழ்நாடு என்பது சொல்லத் தேவையில்லை. 

வரி வசூலில் மிகப் பின்தங்கியிருக்கிற இந்தி மாநிலங்களுக்கு அவர்கள் வசூலிப்பதைவிட கிட்டத் தட்ட மூன்று மடங்கு வரிப் பங்கு அளிக்கப்படுகிற தென்றால், தமிழ்நாடு போன்ற மாநிலங்களுக்கு வர வேண்டிய தொகையைப் பிடுங்கி இந்தி மாநிலங்களைக் கொழுக்க வைக்கிறார்கள் என்பதுதானே பொருள்! 

இது ஜி.எஸ்.டி. வந்ததற்குப் பிறகு மட்டுமல்ல, கடந்த ஐம்பதாண்டுகளுக்கு மேலாக நடந்து வரும் அநீதிதான்! ஆயினும், இவ்வளவு மிகைத் தொகை அம்மாநிலங் களுக்கு ஒதுக்கப்பட்ட பின்னும் அவற்றையெல்லாம் ஊழலிலும், ஊதாரித்தனத்திலும் செலவு செய்து விட்டார்களே தவிர முன்னேறிய மாநிலங்கள் வரிசைக்கு வந்தபாடில்லை. 

வரி வசூலிலோ, தொழில் மற்றும் வேளாண்மை வளர்ச்சியிலோ எந்தப் பங்களிப்பும் செய்யாமல், உட்கார்ந்த இடத்தில் இவ்வளவு தொகை கிடைக்கும் போது, அவர்கள் ஏன் முன்னேற முயற்சி செய்யப் போகிறார்கள்? சாதிச் சண்டையிலும், மதச் சண்டை யிலும் குழந்தைகளை வல்லுறவு கொண்டுக் கொல்வ திலும் கூடுதல் கவனம் செலுத்திக் கொண்டு பொழுதைக் கழித்துக் கொண்டிருப்பார்கள். 

அதற்குத் தமிழ்நாடு பலியிடப்படுகிறது! 

இவை அனைத்திற்கும் மேலாக உலகம் முழுவதும் ஜி.எஸ்.டி. வரிக் கட்டமைப்பானது, ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் இடையிலுள்ள நம்பிக்கையை அச்சாணியாகக் கொண்டே செயல்படுகிறது. 

எல்லா நாடுகளிலும் ஒன்றிய அரசிற்கும் மாநில அரசுகளுக்கும் இடையே வரிப் பங்கீட்டில் முரண்பாடு கள் எழுவது இயல்பு. ஆயினும், பல்வேறு நாடுகளில் அச்சிக்கல்கள் ஏதோவொரு வகையில் இணக்கமாகத் தீர்க்கப்படுகிறது. இவ்வாறு ஜி.எஸ்.டி. ஓரளவுக்கு வெற்றிகரமாக செயல்படும் நாடுகளை உற்று நோக்கினால் அவை பல தேசிய இனங்களைக் கொண்ட நாடுகள் அல்ல என்பது தெளிவாகும். 

இன்றைக்குள்ள நவீன பொருளியல் கோட்பாடுகளில் ஒரு முக்கியமான வளர்ச்சிப் போக்கு என்பது, “நடத்தைப் பொருளியல்” (The Behavioral Economics) என்ற புதிய போக்காகும். இந்த புதிய வகைப் பொருளியல் கோட்பாட்டிற்காக 2017ஆம் ஆண்டு நோபல் பரிசு பெற்ற ரிச்சர்ட் தாலெ கூறுவது கவனிக்கத்தக்கது. 

“சந்தைப் பொருளியல் உறவில் பகுத்தறிவு வழிப் பட்ட முடிவுகளைவிட ஒரு தரப்பின் மீது இன்னொரு தரப்பு வைக்கிற நம்பிக்கையின் மீதுதான் (Trust) பொருளியல் உறவு கட்டப்படுகிறது” என பல்வேறு எடுத்துக்காட்டுகளுடன் ரிச்சர்ட் தாலே விளக்கிக் கூறுகிறார். 

தனிநபர் ஊடாட்டமுள்ள சந்தையைவிட பல தேசிய இனங்களைக் கொண்ட கூட்டுச் சந்தையில் இரு தரப்பினருக்கு இடையே இந்த நம்பிக்கை மிக முக்கியமானது. 

ஆனால், அறிவிக்கும்போதே ஒற்றைச் சந்தை என்ற எக்காளத்தோடுதான் ஜி.எஸ்.டி வரி முறையே அறிவிக்கப் பட்டிருக்கிறது. மிக நெளிவு சுளிவான முதிர்ச்சியான சனநாயகப் பண்புள்ள பல தேசிய இன நாடுகளில் கூட கூட்டாட்சி முறை தோல்வி அடைந்து விட்டதைப் பார்க்கிறோம். 

மெய்நிலை இவ்வாறு இருக்க, ஒன்றிய அரசு மேலாதிக்கம் செய்யும் ஜி.எஸ்.டி. வரிமுறை பல்தேசிய இன நாடான இந்தியாவிற்குப் பொருந்தவே பொருந்தாது. இதைத்தான் ஒன்றிய அரசிற்கும், மாநில அரசுகளுக்கும் இடையே ஏற்பட்டுள்ள நம்பிக்கைக் குலைவு எடுத்துக்காட்டுகிறது. 

நடந்து முடிந்த 43ஆவது சரக்கு சேவை வரி மன்றக் கூட்டம், இந்த உண்மையை ஐயத்திற்கு இடமின்றி புலப்படுத்திவிட்டது! 

ஜி.எஸ்.டி.யின் கூட்டுறவுக் கூட்டாட்சி முறை என்ற அடிப்படையான நம்பிக்கையே தகர்ந்துவிட்ட பிறகு, ஜி.எஸ்.டி. வரிமுறை நீடிப்பது ஆபத்தானது. 

விலைவாசியும் குறையவில்லை
 
ஜி.எஸ்.டி.யை அறிமுகப்படுத்தும்போது, மோடி அரசு அளித்த இன்னொரு நம்பிக்கை “வரி மேல் வரி” என்ற பழைய முறையை நீக்கி, ஜி.எஸ்.டி. செயலுக்கு வரும்போது “விலைவாசி குறையும்” என்பதாகும். 

ஒரு பொருள் அல்லது சேவை உருவாகும் இடத்திலிருந்து பல கைகள் மாறி நுகர்வோரை அடையும்போது, இந்த சங்கிலித் தொடரில் முதலாமவர் செலுத்திய வரித்தொகை இரண்டாமவரிடம் கழித்துக் கொள்ளப்படும் என்ற முறை ஜி.எஸ்.டி.யில் உள்ளது. ஆயினும், நுகர்வோரை வந்தடையும்போது அதிகபட்ச சில்லறை விலையில் (MRP), அது பிரதிபலிக்கவில்லை. இதனை 15ஆவது நிதி ஆணையமே குற்றச்சாட்டாகக் குறிப்பிடுகிறது. “வரி மேல் வரி” இல்லை என்பதன் பலன், நுகர்வோருக்குக் கிடைக்கவில்லை. விலையேற்றம் தொடர்கிறது. 

இந்த வகையிலும் ஜி.எஸ்.டி. வரிமுறை தோல்வி அடைந்துவிட்டது! 

சிறுதொழில்களை அழித்த ஜி.எஸ்.டி.
 
ஜி.எஸ்.டி. வரி செயலுக்கு வந்தபிறகு சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் நொடித்து, மூடப்பட்டு வருவதை சென்னை, திருவள்ளூர், திருப்பூர், கோவை, மதுரை என்று திரும்பிய பக்கமெல்லாம் பார்க்கிறோம். 

பெரிய நிறுவனங்கள் பெரும் செலவு செய்து, விளம்பரங்கள் வழியே தங்களது  வணிக முத்திரையை (பிராண்ட்) மக்கள் மனங்களில் ஏற்றி விடுகின்றனர். மேலே குறிப்பிட்ட “நடத்தைப் பொருளியல்” விதிகளின்படி, விளம்பரங்களை நம்பும் நுகர்வோர் அந்தப் பொருட்களின் மீதும் - சேவைகளின் மீதும் நம்பிக்கை கொள்கின்றனர். அது அந்த நிறுவனங்களின் வணிகத்தைப் பெருமளவு உயர்த்துகிறது. 

அதே தரத்தில், அதே பொருளை உற்பத்தி செய்யக்கூடிய சிறுதொழில் முனைவோர் இவ்வாறு தங்கள் தயாரிப்புகளை விளம்பரங்களின் மூலம் நிலைநிறுத்த முடிவதில்லை. ஆனால், இரண்டு நிறுவனங்களுக்கும் ஒரே சதவிகித ஜி.எஸ்.டி. தான்! இச்சூழலில், செலவு செய்து விளம்பரங்களின் மூலமாக சந்தையில் நிலைபெறும் பெரிய நிறுவனங்களிடம் தங்கள் சந்தையையும் விட்டுவிட்டு, சிறுதொழில் முனைவோர் வெளியேறும் சூழலே நிலவுகிறது. 

போராடி சந்தையில் நிற்க முனைகிற சிறுதொழில் முனைவோர் வேறு வழியில்லாமல் ஆள்குறைப்பு செய்கிறார்கள். முடிந்தவர்கள் குடும்ப உறுப்பினர்களைக் கொண்டு தொழிலை ஓட்டுகிறார்கள். அதில் முடியாதவர்கள் தங்கள் தொழில் உற்பத்திக் கருவிகளை “காயலாங்கடைக்கு” விற்றுவிட்டு வெளியேறுகிறார்கள். 

மதுரையிலும், ஈரோட்டிலும் இன்னும் பல நகரங்களிலும் விசைத்தறி உரிமையாளர்கள் இவ்வாறு தங்களது விசைத்தறிகளை வந்தவிலைக்கு “காயலாங் கடைக்கு” விற்றுவிட்டு தொழிலிலிருந்து வெளியேறி யதைத் தமிழ்நாடு கண்டது. 

ஜி.எஸ்.டி. வரிக்கான பலவிதமான படிவங்களை இணையவழியில் நிரப்பி அனுப்புவதற்கே தொழில் நுட்பப் பணியாளர்களை கூடுதல் ஊதியம் கொடுத்து சிறுதொழில் முனைவோர் அமர்த்திக் கொள்ள வேண்டிய நிலைமை ஏற்பட்டது. அதிகாரிகளிடம் விளக்கம் சொல்வதற்கே காலம் விரையமாகிறது. மன உளைச்சலும் ஏற்படுகிறது. ஜி.எஸ்.டி. வந்தபிறகு சிறுதொழில் முனை வோர் அன்றாடம் நெருப்பில் நடந்து செல்கிறார்கள். 

வரி ஏய்ப்பு தொடர்கிறது
 
ஜி.எஸ்.டி. வந்தவுடன் எல்லோரும் வரி வலையத் திற்குள் வந்துவிடுவார்கள், எல்லாம் தொழில்நுட்ப மயமாகி இருந்தால் வரி ஏய்ப்பும் இருக்காது - அதிகாரிகளின் ஊழலும் பெருமளவு குறையும் என்றார்கள். 

ஆனால், தயாரிப்பு மையங்களிலிருந்து, மொத்த வணிகத்திலிருந்து கீழ்நிலையில் வரையிலும் கணக்கில் வராத இணைப் பொருளாதாரம் தொடர்ந்து நடந்து கொண்டுதான் இருக்கிறது. இதனை 2018 - 2019 ஆம் ஆண்டின் இந்தியத் தலைமைக் கணக்குத் தணிக்கை அதிகாரியின் அறிக்கை (CAG Report) எடுத்துக்காட்டியது. ஜி.எஸ்.டி. வந்ததனால், வரி ஏய்ப்பு ஒன்றும் குறையவே இல்லை என்று அந்த அறிக்கை உறுதிபடக் கூறியது. 

ஊழல் அதிகாரிகளின் கடைக்கண் பார்வை இல்லாமல், இவ்வாறான கணக்கில் காட்டாத இணைப் பொருளா தாரம் நடக்கவே முடியாது. ஜி.எஸ்.டி. வந்ததற்குப் பிறகு வரி ஏய்ப்பும் குறையவில்லை; ஊழலும் குறையவில்லை! 

ஜி.எஸ்.டி.யைக் கைவிடுக!
 
எல்லா வகையிலும் தோல்வி அடைந்துவிட்ட, தேசிய இனங்களை நசுக்கி ஒற்றை அதிகாரத்தை நிறுவுகிற ஜி.எஸ்.டி. வரிமுறையைக் கைவிட வேண்டிய நேரம் வந்துவிட்டது! 

2021 சூலை மாதம் நடைபெறவிருக்கிற சரக்கு சேவை வரி மன்றக் கூட்டத்தில் ஜி.எஸ்.டி. வரியைக் கைவிடுவது, ஜி.எஸ்.டி. கவுன்சிலைக் கலைப்பது என்பதுதான் அந்த மன்றம் இந்திய அரசுக்கு முன்வைக்க வேண்டிய பரிந்துரையாக இருக்க வேண்டும்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam



Tuesday, June 22, 2021

தேசம் படும்பாடு! - ஐயா பெ. மணியரசன் உரை!

தேசம் படும்பாடு!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Monday, June 21, 2021

நீட் தேர்வு சேவல் சண்டை! - ஐயா பெ. மணியரசன் உரை!

நீட் தேர்வு சேவல் சண்டை!



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Saturday, June 12, 2021

"துரைமுருகன் கைது ஏன்?" 'எமது தேசம்' ஊடகத்துக்கு.. - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"துரைமுருகன் கைது ஏன்?"


'எமது தேசம்' ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது! - பெ. மணியரசன் அறிக்கை!



பழிவாங்கும் நோக்கில் ‘சாட்டை’ துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் கைது செய்யப்பட்டது கண்டனத்திற்குரியது!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் அறிக்கை!


“சாட்டை” வலையொளி ஊடகவியலாளர் துரைமுருகன் மற்றும் நாம் தமிழர் கட்சி திருச்சி மேற்கு மாவட்டச் செயலாளர் வினோத், மாநிலத் தகவல் தொழில்நுட்பப் பாசறை பொறுப்பாளர் மகிழன், மாநிலக் கொள்கை பரப்புரையாளர் திருச்சி சரவணன் உள்ளிட்ட 4 பேர் மீது பிணையில் வர முடியாத பிரிவுகள் உட்பட ஐந்து பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்து திருச்சி காவல்துறையினர் நேற்று (11.06.2021) இரவு சிறையில் அடைத்திருப்பது முற்றிலும் சனநாயக மறுப்புச் செயலாகும்; வன்மையான கண்டனத்திற்குரியது! 

திருச்சியில் “சமர் கார் ஸ்பா” நிறுவனத்தைச் சேர்ந்த வினோத் என்பவர் தமிழீழத் தேசியத் தலைவர் – தமிழர்களின் பெருமைக்குரிய மேதகு வே. பிரபாகரன் அவர்களைக்  கொச்சைப்படுத்தி, சுட்டுரை(Twitter)யில் கருத்து வெளியிட்டார். 

பிரபாகரன் அவர்களை மேற்படி வினோத் கொச்சைப்படுத்த வேண்டிய தேவை எங்கிருந்து வந்தது? பிரபாகரன் அவர்களோ, விடுதலைப் புலிகளோ தமிழ்நாட்டு அரசியலில் தலையிட்டு கருத்துகள் கூறியதில்லை. அவர்கள் தமிழ்நாட்டு தலைவர்களை இழிவுபடுத்தியும் கருத்துகள் வெளியிட்டதில்லை.  

அண்மைக் காலமாகக் கலைஞர் கருணாநிதி அவர்களை கடுமையாக விமர்சித்து சிலர் கருத்துகள் வெளியிட்டு வருகிறார்கள். இதற்கு எதிர்வினையாகத் தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி சிலர் கருத்துகள் வெளியிடுகிறார்கள். 

கலைஞர் மீது எழுப்பப்படும் திறனாய்வுகள் அல்லது கொச்சைப்படுத்தல்கள் ஆகியவற்றிற்கு கலைஞர் அன்பர்கள் எதிர்வினையாற்றும்போது, யார் அவ்வாறு கலைஞரை பேசினார்களோ அவர்களை அல்லது அவர்களுடைய அமைப்பை விமர்சனம் செய்வது இயல்பானது. அதற்காக, ஒட்டுமொத்தத் தமிழினத்தின் உயர்மதிப்பிற்குரிய – தமிழினத்தின் பெருமைக்குரிய சின்னமாக விளங்கக்கூடிய மேதகு பிரபாகரன் அவர்களை கொச்சைப்படுத்துவது முற்றிலும் முரணானது! கண்டனத்திற்குரியது!

பிரபாகரன் அவர்களைக் கொச்சைப்படுத்தி சுட்டுரை வெளியிட்ட வினோத் என்பவரை “சாட்டை” துரைமுருகன் உள்ளிட்ட நால்வரும் காவல்துறையினரின் முன்னிலையில் சந்தித்து, நடந்த விவரங்களை எடுத்துச் சொல்லி மேற்படி வினோத் தமது தவறை உணரும்படிச் செய்துள்ளார்கள். அதன் வெளிப்பாடாகத்தான் காவல்துறையினர் முன்னிலையில் பதிவான வினோத்தின் வருத்தம் தெரிவிக்கும் கருத்து உள்ளது. 
இந்நிலையில், சட்டவிரோதமாகக் கூடியது, சட்டவிரோமதாக நுழைந்தது, கொலை மிரட்டல் விடுத்தது, தாக்கியது போன்ற பிணை மறுப்பு உள்ளிட்ட ஐந்து பிரிவுகளில் இரவோடு இரவாக மேற்படி துரைமுருகன் உள்ளிட்ட நால்வரையும் தளைப்படுத்தி சிறையில் அடைத்திருப்பது, அதிகாரத்தை முற்றிலும் தவறாகப் பயன்படுத்திய அத்துமீறலாகும்! இதில், ஆளுங்கட்சியான தி.மு.க.வைச் சேர்ந்த மாவட்டத் தலைவர்களின் அழுத்தம் இருப்பதாகவும் சொல்கிறார்கள். 

இந்தத் தவறான போக்கை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலையிட்டு திருத்த வேண்டும். பழிவாங்கும் நோக்கில் துரைமுருகன் உள்ளிட்ட நால்வர் மீதும் போட்ட வழக்கைக் கைவிட்டு அவர்கள் நால்வரையும் விடுதலை செய்ய ஆணையிட வேண்டுமென முதலமைச்சர் அவர்களைக் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Tuesday, June 8, 2021

முதல்வர் மு.க. ஸ்டாலின் மடலில் ஒன்றியமும் தேசமும் - பெ. மணியரசன்



முதல்வர் மு.க. ஸ்டாலின் 
மடலில் ஒன்றியமும் தேசமும்

பெ. மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.


தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள், பெருந்தொற்று இரண்டாவது அலையின் பாதிப்பு அதிகமாக இருப்பதால், சிறு – குறு – நடுத்தரத் தொழில் முனைவோரும், சிறு கடனாளர்களும் தங்கள் தொழில் வளர்ச்சிக்கு வாங்கிய ஐந்து கோடி ரூபாய் வரை பாக்கியுள்ள கடன் தவணைகளில் நடப்பு நிதியாண்டில் (2021 – 2022) முதல் இரு காலாண்டுகளில் செலுத்த வேண்டிய தொகைகளைச் செலுத்தாமல் தள்ளி வைக்க இந்திய அரசுக்குக் கோரிக்கை வைத்துள்ளார். 

இதே கோரிக்கையை எதிர்க்கட்சிகள் ஆளும் மாநில முதலமைச்சர்களும் இந்திய அரசுக்கு அனுப்புமாறு கேட்டு, ஆந்திரப்பிரதேசம், பீகார், சத்தீசுகட், டெல்லி, ஜார்கண்ட், கேரளம், மகாராட்டிரம், ஒடிசா, பஞ்சாப், இராசஸ்தான், தெலங்கானா, மேற்கு வங்காளம் ஆகிய 12 மாநில முதலமைச்சர்களுக்கும் தமிழ்நாடு முதல்வர் வேண்டுகோள் மடல் எழுதியுள்ளார். 

இம்மடலில் மு.க. ஸ்டாலின் இந்திய அரசு, ஒன்றிய அரசு என்ற சரியான சொற்களைப் பயன்படுத்தியுள்ளார். நடுவண் அரசு (மத்திய அரசு) என்ற சொல்லைப் பயன்படுத்தவில்லை!

ஆனால், இச்செய்தியை 09.06.2021 அன்று வெளியிட்ட ஆங்கில மற்றும் தமிழ் நாளேடுகள் மத்திய அரசு என்ற சொல்லையே பெரும்பாலும் பயன்படுத்தின. 

இந்திய அரசமைப்புச் சட்டத்தில் உள்ளபடி ஒன்றிய அரசு என்றோ, அல்லது இந்திய அரசு என்றோ பயன்படுத்துவது சட்டப்படியான வடிவமாக இருந்தாலும் அவற்றைத் தவிர்த்து, ஒற்றையாட்சிக்குரிய “மத்திய அரசு” என்ற சொல்லைப் பயன்படுத்தியது  சரியன்று.  

காட்சி ஊடகங்களும், ஏடுகளும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பயன்படுத்திய ஒன்றிய அரசு, இந்திய அரசு என்ற சொற்களைப் பயன்படுத்தாமல் தவிர்ப்பது இதழியல் அறமாகாது! 

முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கட்கு ஓரு வேண்டுகோள்

நீங்கள் 12 முதலமைச்சர்களுக்கு எழுதிய மடலில் ஒன்றிய அரசு – இந்திய அரசு என்று பயன்படுத்திய சிறப்பிற்குப் பாராட்டுகள். அதேவேளை, அதே மடலில் “அனைத்திந்திய முடக்கம்” (All India Lockdown) என்று சொல்ல வந்த இடத்தில் “தேசம் தழுவிய முடக்கம்” (Nationwide Lockdown) என்று குறிப்பிட்டுள்ளீர்கள். நீண்டகாலப் பழக்கத்தின் காரணமாக இக்குறைபாடு வந்திருக்கலாம். 

இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவைத் தேசம் (Nation) என்று குறிப்பிடவில்லை. இதுபோன்ற “தேசந்தழுவிய” (Nationwide) என்ற சொற்களைப் பயன்படுத்தாமலும் தவிர்க்க வேண்டுமாய்க் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 

அடுத்து, தங்களின் இம்மடலை வெளியிட்ட தமிழ்நாடு அரசின் செய்தித் தொடர்புத் துறையினர் ஆங்கிலத்தில் தங்கள் கடிதத்தை அப்படியே போட்டுள்ளனர். ஆனால் தமிழில், கடித விவரங்களைச் சுருக்கமாக அவர்கள் நடையில் எழுதி வெளியிட்டுள்ளனர். தமிழிலும் அசல் மடலை அப்படியே வெளியிடுவதே, தமிழை ஆட்சிமொழியாக ஏற்றுக் கொண்ட அரசின் கட்டாயக் கடமை என்பதையும் தங்கள் கவனத்திற்குக் கொண்டு வருகிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

"தமிழ்நாட்டுக்கு மூன்றாகப் பிரிக்க சதி!" - "ழகரம்" ஊடகத்துக்கு ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"தமிழ்நாட்டுக்கு மூன்றாகப் பிரிக்க  சதி!"


"ழகரம்" ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன்  நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

"ஓளரங்க சீப் - ராபர்ட் கிளைவ் தான் இந்தியாவின் தந்தைகள்" "அரண் செய்" ஊடகத்துக்கு - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"ஓளரங்க சீப் - ராபர்ட் கிளைவ் தான் இந்தியாவின் தந்தைகள்"

"அரண் செய்" ஊடகத்துக்கு

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
ஐயா பெ. மணியரசன்  நேர்காணல்!



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Sunday, June 6, 2021

+2 தேர்வு கைவிடப்பட்டிருப்பது தவறான முடிவு! - தோழர் கி. வெங்கட்ராமன் கருத்து!



+2 தேர்வு கைவிடப்பட்டிருப்பது
 தவறான முடிவு!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் 
செயலாளர் கி. வெங்கட்ராமன் கருத்து


மேல்நிலை வகுப்பு – (+2) இறுதித் தேர்வு இந்த ஆண்டுக்கு கைவிடபட்டிருப்பது தவறான முடிவாகும். 

கொரோனா தொற்று இரண்டாம் அலை கடுமையாக இருக்கும் சூழலில் +2 தேர்வு உடனடியாக நடத்தமுடியாது என்ற முடிவு சரியே. ஆனால் இரண்டு, மூன்று மாதங்கள் கழித்து வினாக்களை எளிமையாகவும் குறைவான எண்ணிக்கையிலும் அமைத்து 1.30 மணி நேரத் தேர்வாக நடத்த முடிவெடுத்திருக்க வேண்டும்.

இறுதித் தேர்வு கைவிடப்பட்ட நிலையில் எவ்வாறு மாணவர்களுக்கு மதிப்பெண் வழங்குவது என்பது குறித்து முடிவு செய்ய வல்லுநர் குழு அமைப்பதாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்திருக்கிறார்.

இணைய வழி வகுப்புகளும், இணைய வழி இடைத் தேர்வுகளும்  அரை குறையாக – குழப்பமாக நடந்துள்ள சூழலில் அதை அடிப்படையாக வைத்து மாணவர்களின் இறுதி மதிப்பெண் முடிவு செய்யப்படுமானால் அது கிராமப்புற மாணவர்களையும், பிற்படுத்தபட்ட, தாழ்த்தப்பட்ட சமூத்தைச் சார்ந்த மாணவர்களையும் கடுமையாக பாதிக்கும்.

இன்னொரு புறம் இந்திய அரசு மருத்துவம் உள்ளிட்ட உயர் நிலை கல்விக்கு நீட் தேர்வு நடத்துவதில் பிடிவாதமாக இருக்கிறது. ஏற்கெனவே நீட் தேர்வுக்கு அமர்ந்தவர்களில் கணிசமானவர்கள் இரண்டு ஆண்டுகளும் அதற்கு மேலாகவும் நீட் தேர்வு பயிற்சி மையங்களில் பயிற்சி எடுத்து கொண்ட பழைய மாணவர்களாகும்.

இந்த நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் இந்தியத் தலைமை அமைச்சர்க்கு விடுத்துள்ள வேண்டுகோளில் இந்த ஆண்டு நீட் தேர்வு நடத்த வேண்டாம் என கேட்டுகொண்டிருப்பது. எந்த அளவிற்கு பயன்விளைக்கும் என்பது கேள்விக்குறியே.

இது போதாதென்று கல்லூரி கல்விக்கும், அனைத்திந்திய நுழைவு தேர்வுகள் அச்சுறுத்தி கொண்டிருக்கிறன. இவ்வாறான நிலைமைகளையெல்லாம் கருத்தில் கொண்டால்  இரண்டு மூன்று மாதங்கள் கழித்து +2 தேர்வை எளிமையான முறையில் நடத்துவதே சரி என்ற முடிவுக்கு வர முடியும்.

எனவே தமிழ்நாடு அரசு தமது முடிவை மறு ஆய்வு செய்து மூன்று மாதங்கள் கழித்து +2 இறுதித் தேர்வை உரிய பாதுகாப்புடன் நடத்த முன்வரவேண்டும் என தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக்கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, June 5, 2021

இன்று இலட்சத் தீவு! நாளை தமிழ் நாடா? - ஐயா பெ. மணியரசன் உரை!

இன்று இலட்சத் தீவு!
நாளை தமிழ் நாடா?



தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் உரை!


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, June 4, 2021

"சு.சாமி - ஜக்கிக்கு அஞ்சி பி.டி.ஆரை அடக்குகிறாரா ஸ்டாலின்?" - "ரெட்பிக்ஸ்" ஊடகத்துக்கு.. ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!

"சு.சாமி - ஜக்கிக்கு அஞ்சி பி.டி.ஆரை அடக்குகிறாரா ஸ்டாலின்?"


"ரெட்பிக்ஸ்" ஊடகத்துக்கு..

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 ஐயா பெ. மணியரசன் நேர்காணல்! 


கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, June 3, 2021

கல்விக் கட்டண பாக்கிக்காகத் தனியார் பொறியியல் கல்லூரிகள் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதை முதலமைச்சர் தடுக்க வேண்டும்! - பெ. மணியரசன் வேண்டுகோள்!



கல்விக் கட்டண பாக்கிக்காகத் தனியார் பொறியியல் கல்லூரிகள் தேர்வு முடிவுகளை நிறுத்தி வைப்பதை முதலமைச்சர் தடுக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
 பெ. மணியரசன் வேண்டுகோள்!

தமிழ்நாட்டில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரிகள், கல்வி கட்டணம் செலுத்தாத மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவிக்காமல் நிறுத்திவைத்துள்ளன. அதே வேளை கட்டணம் செலுத்திய மாணவர்களின் தேர்வு முடிவுகளை அறிவித்துள்ளன. அத்துடன் உங்கள் பெற்றோர்களிடம் சொல்லி உடனே கட்டணம் செலுத்துங்கள் என்று அக்கல்லூரி நிர்வாகங்கள் அறிவுறுத்தல்கள் அனுப்பியுள்ளன.

தனியார் பொறியியல் கல்லூரி நிர்வாகங்கள் இவ்வாறு  கல்விக் கட்டண பாக்கிக்காக தேர்வு முடிவுகளை தெரிவிக்காமல் நிறுத்திவைத்தது, அனைத்திந்திய தொழில் நுட்பக் கல்வி குழு (AICTE)-வின் வழிகாட்டலுக்கு எதிரான செயல் ஆகும். கொரோனா பெருந்தொற்று முடக்கக் காலத்தில் பொறியியல் கல்லூரிகள் கல்விக் கட்டணம் செலுத்த மாணவர்களை கட்டாயப்படுத்த கூடாது என்றும், கட்டணம் செலுத்த வில்லை என்பதற்காக அவர்களைப் பழிவாங்கக் கூடாது என்றும் அனைதிந்திய தொழில் நுட்பக் கல்விக் குழு ஏற்கெனவே எச்சரித்துள்ளது. 

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களுக்கு, பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் இது குறித்து புகார் அனுப்பி தங்கள் பிள்ளைகளின் தேர்வு முடிவுகளை வெளியிட ஏற்படு செய்யுமாறு கோரியுள்ளனர். 

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு தேர்வு முடிவு நிறுத்திவைக்கப்பட்டுள்ள மாணவர்களுக்கு அம்முடிவுகள் கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும். கிராமப்புற மற்றும் நகர்புறங்களைச் சேர்ந்த அனைத்து மாணவர்களுக்கும் சொத்து, வருமானம் போன்ற எவ்வகை நிபந்தனையும் இல்லாமல் இந்தப் பெருந்தொற்றுக் காலத்தில் வங்கிகள் மூலம் கல்விக் கடன் கிடைக்க முதலமைச்சர் அவர்கள் ஏற்பாடு செய்தால், அதைக்கொண்டு மாணவர்கள் கல்விக் கட்டணம் செலுத்த வாய்ப்பு ஏற்படும்.  மேலும் வழக்கமான கல்விக் கட்டணத்தில் பெருமளவு குறைத்துக்கொண்டு பொறியியல் கல்லூரிகள் வசூலிக்கும் ஏற்பாட்டையும் முதலமைச்சர் அவர்கள் செய்து தர வேண்டும் என்று தமிழ்த்தேசியப் பேரியகத்தின் சார்பில் கனிவுடன் கேட்டுக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தூருவாசனைக் கொள்ளைநோய் கொண்டு சென்றுவிட்டது! - தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!



உழவர் முன்னணி பொதுச்செயலாளர் தூருவாசனைக் கொள்ளைநோய் கொண்டு சென்றுவிட்டது!

தமிழ்த்தேசியப் பேரியக்கப்  பொதுச்செயலாளர்
 தோழர் கி. வெங்கட்ராமன் இரங்கல்!


துயரம், பெருந்துயரம்! தமிழக உழவர் முன்னணியின் பொதுச்செயலாளர் – தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தூருவாசனை கொரோனா கொள்ளை நோய் கொண்டுபோய்விட்டது! 

கோவிட் – 19 பெருந்தொற்றால் பாதிக்கப்பட்ட தோழர் தூருவாசன், முதலில் கிருஷ்ணகிரியில் ஒரு தனியார் மருத்துவமனையிலும், பின்னர் தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் சிகிச்சைப் பெற்றார். கடந்த ஒரு வாரத்திற்கு மேலாக, பெருந் தொற்றோடு போராடினார். கடைசியில் இன்று (03.06.2021) காலை அந்தக் கொள்ளை நோய் அவரை மாய்த்துவிட்டது! 

தோழர் தூருவாசனுக்கு அகவை 39. அவருக்கு வள்ளியம்மாள் என்ற மனைவியும், பிரவீன் – கீதா என்ற இரண்டு பிள்ளைகளும் இருக்கிறார்கள். 

கிருஷ்ணகிரி மாவட்டம் – இராயக்கோட்டை வட்டம் பிள்ளாரி அக்ரகாரம் என்ற சிற்றூரைச் சேர்ந்த தோழர் தூருவாசன், பழகுவதற்கு இனிமையான தோழர். அதேநேரம், அநீதிக்கு எதிராக வெகுண்டெழுந்து போராடும் போர்க்குணத்தை இயல்பிலேயே பெற்றவர். அழுத்தமான அமைப்பாளர். இவரைப்போல், பன்முக ஆற்றல் பெற்ற மக்கள் செயல்பாட்டாளர் கிடைப்பது அரிது! 

தமிழக உழவர் முன்னணியை கிருஷ்ணகிரி மாவட்டத்தில் வலுவாக அமைத்து, தருமபுரி மாவட்டத்திலும் அதை விரிவாக்கியதில் முதன்மைப் பங்காற்றியவர் தோழர் தூருவாசன். அம்மாவட்டங்களில் முக்கியச் சிக்கலான கெயில் குழாய்ப் பதிப்பை எதிர்த்து, பெருந்திரள் உழவர்களைத் திரட்டி பலமுறை போராட்டங்களுக்குத் தலைமை தாங்கி நடத்தியவர். களத்திற்கு நேரடியாகச் சென்று எந்தக் கிராமத்தில் கெயில் குழாய் விளைநிலத்தில் பதிக்க முன்வந்தாலோ – முயன்றாலோ அதை அங்கேயே தடுத்து நிறுத்தி, வரும் அதிகாரிகளை முற்றுகையிட்டு உழவர்களின் நிலத்தைப் பாதுகாத்துத் தருவதில் முக்கியமான வழிகாட்டியாகத் திகழ்ந்தார். 

அவ்வாறான போராட்டக் களங்களில்கூட உயர் அதிகாரிகளிடம் வாதாடும்போது அமைதியான – ஆழமான ஞாயங்களை முன்வைத்து உழவர்களின் வாழ்வுரிமையின் அடிப்படைத் தேவையை அவர்களே உணருமாறுச் செய்தவர். 
பல நூறு ஏக்கர் நிலத்திற்குப் பாசன வசதியையும், பல கிராமங்களுக்குக் குடி தண்ணீர் தேவையையும் நிறைவு செய்யும் தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்தை வலியுறுத்தி கிராமம் கிராமமாக உழவர்களைத் திரட்டி, இடைவிடாத போராட்டங்களை தமிழக உழவர் முன்னணி நடத்தியது. அப்போராட்டங்கள் அனைத்திலும் முதன்மைத் தளபதியாக தூருவாசன் திகழ்ந்தார். அந்த உழவர் போராட்டத்தின் அழுத்தம் காரணமாக முந்தைய அண்ணா தி.மு.க. அரசு, வேறு வழியின்றி தென்பெண்ணைக் கிளைவாய்க்கால் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்து, அத்திட்டச் செயல்பாடுகள் தொடங்கிவிட்டன. 

கார்நாடக அரசின் மேக்கேத்தாட்டு அணைத் திட்டத்தை எதிர்த்து காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் 2015இல் தேன்கனிக்கோட்டையில் நடைபெற்ற பெருந்திரள் முற்றுகைப் போராட்டத்தில், களப்பணிகளை ஒருங்கிணைத்து நடத்தியதில் தூருவாசன் முகாமையானப் பணியாற்றினார். கிருஷ்ணகிரி மாவட்ட தமிழக உழவர் முன்னணி சார்பில் வந்திருந்த உழவர்கள் அனைவரையும் வரவேற்று உபசரித்ததில் ஓசூர் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தோழர்களோடு இணைந்து சிறப்பான பணியாற்றினார். 

தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்ற தமிழ்நாடு தழுவிய போராட்டங்கள் அனைத்திலும் தோழர் தூருவாசனின் பங்களிப்பு சிறப்பானது! இராயக்கோட்டை பகுதியிலிருந்து கடும் பொருளியல் நெருக்கடிகளுக்கிடையில் உழவர்களையும், மக்களையும் திரட்டி, அவர்களிடத்திலேயே நிதியையும் திரட்டி பெரும் எண்ணிக்கையில் ஊர்திகளில் அழைத்து வந்து, அப்போராட்டங்களில் தனது பங்களிப்பைச் செய்ய தூருவாசன் தவறியதில்லை! 

“பிரவீன் கீதா” என்ற தனது முகநூல் பக்கத்தின் வழியாக, உழவர் சிக்கல்கள் குறித்து கருத்துத் தெரிவிப்பதிலும், தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் கொள்கைப் பரப்புரையை முன்னெடுத்துச் செல்வதிலும் சிறப்பான பங்காற்றினார் தோழர் தூருவாசன். 

இயற்கையில் சிறுசிறு மாறுபாடுகள் கூட மலர் சாகுபடி செய்பவர்களுக்கு மிகப்பெரிய சேதத்தை உண்டாக்கிவிடும். மலர் சாகுபடி உழவரான தோழர் தூருவாசன், இந்த சிக்கலான நிலைமையில் கூட தன்னலம் துறந்து மக்கள் பணியாற்றியது பெரிய – அரிய செயலாகும்! அவரது இறப்பு – தமிழ்த்தேசியப் பேரியக்கத்திற்கும், தமிழக உழவர் இயக்கத்திற்கும் ஈடு செய்ய முடியாத பேரிழப்பாகும்! 

மறைந்த தோழர் தூருவாசனுக்கு தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பிலும், தமிழக உழவர் முன்னணி சார்பிலும் வீரவணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன்.  

அவரை இழந்து வாடும் அவரது மனைவி வள்ளியம்மாள், குழந்தைகள் பிரவீன் மற்றும் கீதா உள்ளிட்ட அவர்தம் குடும்பத்தாருக்கு ஆறுதல் சொல்ல சொற்களே இல்லை! அவர்கள் குடும்பத்தாருக்கு நமது ஆறுதலையும், இரங்கலையும் தெரிவித்துக் கொள்கிறேன். 


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT