“ஏழு தமிழர்கள் சிறையிலிருக்கும்
ஒவ்வொரு நாளும் தமிழினத்திற்கு அவமானம்!”
கோவை நூல் அறிமுக விழாவில்
தோழர் கி. வெங்கட்ராமன் பேச்சு!
தமிழீழத்திற்கு இந்திய அமைதிப்படையை அனுப்பி, ஆயிரக்கணக்கானத் தமிழ் மக்கள் கொல்லப் படுவதற்குக் காரணமான முன்னாள் இந்தியப் பிரதமர் இராசீவ் காந்தி கொல்லப்பட்ட வழக்கில் தொடர்பு படுத்தப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன், நளினி உள்ளிட்ட ஏழு தமிழர்கள் கடந்த 25 ஆண்டுகளாக சிறையில் வாடுகின்றனர். இந்த ஏழு தமிழர்களின் விடுதலை குறித்து சட்ட விளக்கங்களோடு பேசுகின்ற, “ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு - தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் அறிமுக விழா கோவையில், 26.06.2016 ஞாயிறு மாலை தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் நடைபெற்றது.
கோவை தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள அண்ணாமலை அரங்கில் நடைபெற்ற இவ்விழாவிற்கு, பாண்டியர் பேரியக்கத் தலைவர் தோழர் கோப்மா. கருப்பசாமி தலைமையேற்றார். தமிழ்த் தேசியப் பேரியக்க கோவை மாநகரச் செயலாளர் தோழர் விளவை இராசேந்திரன் வரவேற்புரையாற்றினார்.
மக்கள் சிவில் உரிமைக் கழகத் தோழர் பொன். சந்திரன், எழுத்தாளர் மு. சந்திரகுமார், தமிழர் நடுவம் தலைவர் திரு. செல்வ பாண்டியர் ஆகியோர் நூலைத் திறனாய்வு செய்து உரையாற்றினர். தமிழ்த் தேசக் குடியரசு இயக்கப் பொறுப்பாளர் தோழர் திலகர். செங்குட்டுவன் நூலை வெளியிட்டார்.
தமிழர் தொழில் முனைவோர் இணையம் தலைவர் திரு. க. தங்கராசு, கோவை _ திருப்பூர் தொழில் முனைவோர் சங்கச் செயலளர் திரு. வே. துரைசாமி, தமிழர் தாயகம் கட்சி திரு. செட்டி. அசோக் பண்ணாடி, இளந்தமிழர் இலக்கிய மன்றச் செயலாளர் செல்வி க. சங்கவி, கிருஷ்ணம்மாள் - ஜெகநாதன் அறக்கட்டளை திருவாட்டி சரோஜா உள்ளிட்டோர் நூலைப் பெற்றுக் கொண்டனர்
நிறைவில், நூல் ஆசிரியரும் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளருமான தோழர் கி. வெங்கட்ராமன் ஏற்புரை வழங்கினார். அவர் பேசியதாவது :
“ஏழு தமிழர் விடுதலை - உச்ச நீதிமன்ற மறுப்பு _ தமிழ்நாடு அரசு அதிகாரம்” - நூலின் அறிமுக விழாவை, கோவையில் சிறப்புற ஏற்பாடு செய்துள்ள தோழர்களுக்கு வாழ்த்துகள். இதில் பங்கேற்றுள்ள அனைவருக்கும் நம் பாராட்டுகள்!
இராசீவ் காந்தி கொலை வழக்கில் - இதன் தீர்ப்பில் தமிழர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதியை - குளறுபடிகளை, இந்நூலைத் திறனாய்வு செய்து பேசிய தோழர்கள் இங்கே நுணுக்கமாக எடுத்துரைத்தனர். ஏழு தமிழர் விடுதலைக்காக தமிழ்நாட்டில் தற்போது எழுச்சி ஏற்பட்டுள்ள நிலையில், இந்தச் சிக்கலில் நாம் அடுத்து என்ன செய்ய வேண்டும் என சிந்திக்க வேண்டும்.
பொதுவாக மனித உரிமை என்று பேசினாலும் உண்மையில், மனிதர்கள் உதிரிகளாக வாழ்வ தில்லை. தேசிய இனமாகத்தான் வாழ்கிறார்கள். அகராதியில் மக்கள் - A People என நாம் தேடினால், ஒரு தேசிய இன மக்களைத்தான் அது பொருளாகச் சொல்கிறது. உலகம் அப்படித்தான் இருக்கிறது. மனிதர்கள் அப்படித்தான் வாழ்கிறார்கள்.
இராசீவ் கொலை வழக்கில் இருக்கும் அந்த ஏழு பேரும் வெறும் உதிரிகளாக இல்லை. அவர்களை உதிரிகளாக மாற்ற முயன்றாலும் அது வெல்லப் போவதில்லை. அந்த ஏழு பேரும், மண் சார்ந்து - மொழி சார்ந்த மக்களுடனே அடையாளப்பட்டிருக்கிறார்கள். அதனால்தான், அவர்களுக்கு அநீதி இழைக்கப்படும் போது, தமிழினம் கொந்தளிக்கிறது.
இப்பொழுது மட்டுமல்ல, இதற்கு முன்பே - இதே வழக்கில் 26 பேருக்கு மரண தண்டனை வழங்கப்பட்ட போதே, தமிழ்நாடு கொந்தளித்தது. தமிழர்கள் கொந்தளித்தனர்.
இராசீவ் காந்தி கொலைக்கு முன்புவரை, தமிழீழ விடுதலையை ஆதரித்து எல்லாத் தரப்பினரும் - எல்லாக் கட்சிகளும் பேசிவந்த நிலையில், கொலைக்குப் பிறகு ஒரு மயான அமைதி நிலவியது. கூட்டம் போட்டு பேசுவதற்குக்கூட, சட்டப்படியான உரிமைகள் மறுக்கப்பட்ட காலம் அது! தமிழர் என்று பேசவே அச்சமிருந்த காலம் அது!
அந்த நேரத்தில், பெருந்துறை அருகில், ஈழத்தமிழர் குறித்த ஒரு கருத்தரங்கத்தில் நான் பேசினேன். பயங்கரவாத இயக்கத்திற்கு ஆதரவாகப் பேசியதாக என் மீது வழக்குப் பதிவு செய்தார்கள். அந்தக் கூட்டத்தை ஏற்பாடு செய்த மாணவர்கள் - இளைஞர்கள், தங்கள் ஆசிரியர் ஒருவரை அந்தக் கூட்டத்தில், “நீராரும் கடலுடுத்த” என தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடச் சொன்னார்கள். தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடிய அவர் மீதும் சேர்த்தே இந்தியத் தண்டனைச் சட்டம் - 124A- பிரிவின்கீழ் “தேசத் துரோக” வழக்குப் போட்டார்கள். அந்தளவிற்கு கடுமையான ஒடுக்குமுறைகள் நிலவிய காலமது!
அப்படியிருந்த காலகட்டத்தில்தான், ஒரு பெரும் திருப்பமாக, 26 பேருக்கு மரண தண்டனை என்ற அநீதியானத் தீர்ப்பிற்குப் பிறகு, எங்கே நமது மவுனம் - இந்தியாவுக்கு கொலைகார அதிகாரத்தை வழங்கி விட்டதோ என்ற ஐயத்தில், தமிழினம் கொந்தளித்து எழுந்தது.
அய்யா பழ. நெடுமாறன் அவர்களைத் தலைவராகக் கொண்டும், தோழர் பெ. மணியரசன் அவர்களைச் செயலாளராகக் கொண்டும் “இருபத்தாறு தமிழர்கள் உயிர்க்காப்புக் குழு” என்ற கூட்டமைப்பு ஏற்படுத்தப்பட்டு, அநீதியானத் தீர்ப்புக்கு எதிராக தமிழ்நாடு முழுவதும் போராட்டங்கள் -_- கண்டனக் கூட்டங்கள் ஊர் ஊராக நடைபெற்றன.
பேராசிரியர் சுப. வீரபாண்டியன், பாவலர் அறிவுமதி, நான், தோழர் தியாகு உள்ளிட்டோர் இந்தத் தீர்ப்பின்வழியே நம் இனத்திற்கு அநீதி நேர்ந்துள்ளது என ஒவ்வொரு கூட்டங்களிலும் எடுத்துரைத்தோம். தலைவர்களும் விளக்கமாக எடுத்துக் கூறினார்கள். அதைக் கேட்ட தமிழ் மக்கள் அதிர்ச்சி அடைந்தார்கள் .
கூட்டத்தில் பாவலர் அறிவுமதியும் பேராசிரியர் சுப.வீ.யும் இருபத்தாறு தமிழர்களின் உயிர்காப்புப் போராட்டத்திற்கு நிதி தாருங்கள் என துண்டேந்தி வந்தார்கள். அவர்களிடம் அப்படியே தன் கையிலிருந்த வளையலைக் கழட்டிக் கொடுத்த பெண்கள் உண்டு தன் கையில் இருந்த 5 ரூபாயை - 10 ரூபாயை அப்படியே கொடுத்த மக்கள் இருந்தார்கள். அது மிகப்பெரும் எழுச்சியை உருவாக்கியது.
முதலில், “தடா” சட்டப்படி விசாரிக்கப்பட்ட இராசீவ் காந்தி கொலை வழக்கில், நீதி வழங்குவதில் மாநில அரசுக்கு அதிகாரமில்லை எனச் சொல்லப் பட்டது. அநீதியான அத்தீர்ப்புக்கு எதிராக மாநில உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய அதிகாரமில்லை என்றார்கள். எனவே, அவ்வழக்கு அப்போது உச்ச நீதிமன்றத்திற்கு நேரடியாக மேல்முறையீடாகச் சென்றது. தீர்ப்பைப் படித்த நீதிபதிகள், “நீதியின் பெயரால் நீதிக்கொலை” நடந்துவிட்டது என கருத்துக் கூறினர்.
2013ஆம் ஆண்டு அக்டோபரில், வீரப்பன் கூட்டாளிகள் என்ற பெயரில், தூக்குத் தண்டனை வழங்கப்பட்டு, கர்நாடகாவின் பெல்காம் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சைமன், பிலவேந்திரன், ஞானப்பிரகாசம், மாதையன் ஆகிய நால்வரையும் தோழர் பெ. மணியரசன், அற்புதம் அம்மாள் உள்ளிட்டோர் கொண்ட ஒரு குழுவாக நாங்கள் நேரில் சென்று சந்தித்து வந்தோம்.
அதில், ஞானப்பிரகாசம் என்பவர் வீரப்பனுடன் துளியும் தொடர்பில்லாதவர். ஞானப்பிரகாசம் என்ற பெயரில் ஒருவரைத் தேடி வந்தார்கள்.
ஈரோட்டில் ஒரு பண்ணையில் வேளாண்மை செய்து வந்த அவரை, “ஞானப்பிரகாசம்” என்ற பெயரை வைத்து, காவல்துறையினர் பிடித்து கதையைப் புனைந்தார்கள்.
அதுபோலத்தான், வேலூர் சிறையிலே அடைபட்டுக் கிடக்கும் சாந்தனுக்கும் நேர்ந்திருக்கிறது. உண்மையான குண்டு சாந்தனைக் காவல்துறையினரே கொன்று விட்டார்கள் என்ற உண்மை வெளி வந்திருக்கிறது. எனவே, கையில் கிடைத்த சாந்தன் மீது குற்றச்சாட்டுப் பதிவு செய்து, தண்டனை வாங்கிக் கொடுத்து விட்டார்கள். இருபத்தைந்து ஆண்டுகள் கழித்தும், அவரை விடுதலை செய்ய மறுக்கிறார்கள்.
இராசீவ் காந்தி கொலை என்பது, சட்டத்தின்படியே ஒரு பயங்கரவாதச் செயல் அல்ல என உச்ச நீதிமன்றம் தெரிவித்துவிட்டது. இந்திய அமைதிப்படையை தமிழீழத்திற்கு அனுப்பி, அங்கே தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதும், அதன் காரணமாக இராசீவ் காந்தியை பழிவாங்கவே இச்செயல் செய்யப்பட்டது என்பதும் தீர்ப்பிலேயே சொல்லப்படுகின்றது. அதாவது, தம் மக்கள் கொல்லப்பட்ட ஆத்திரத்தில் பதிலடியாக நடைபெற்றக் கொலைதான் இது!
எனவே, இந்த வழக்கை உச்ச நீதிமன்றத்தில் விசாரித்த நீதிபதிகள், அது பயங்கரவாதச் செயல் அல்ல எனக் கூறிவிட்டப் பிறகு, அவ்வழக்கை மாவட்ட நீதிமன்றத்திற்கு அனுப்பியிருக்க வேண்டும். குறைந்த பட்சம், மாநில உயர் நீதிமன்றத்திற்காவது அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் செய்யவில்லை. அங்கே அநீதி இழைக்கப்பட்டது. ஏன் இந்த அநீதி?
ஏனெனில், இவ்வழக்கை தனிப்பட்ட பழிக்குப் பழி கொலை வழக்கு என உச்ச நீதிமன்றம் கருதவில்லை. இதுவொரு இனம் சார்ந்த பிரச்சினை! சாதாரணக் கொலைக் குற்றம் என்றால் இப்படி செய்ய மாட்டார்கள். ஆனால், குற்றவாளிகள் தமிழர்கள்!
தன் கணவன் கொல்லப்பட்ட அநீதியான தீர்ப்புக்கு எதிராகப் பேச வந்த கண்ணகி, பாண்டிய மன்னனை “தேரா மன்னா” என்று எடுத்தவுடனேயே அழைத்தாள். இந்தக் காலத்தில் இப்படி பேசியிருந்தால், நீதிமன்ற அவமதிப்பு - Contempt of Court என்றிருப்பார்கள். ஆனால், கண்ணகி காலத்தில் அநீதிக்கு எதிராக இருந்த பேச்சுரிமை, “சனநாயக” காலத்தில் இல்லாமல் போய்விட்டது!
தேர்தல் நேரத்தில் ஏழு தமிழர் விடுதலையை தமிழ்நாடு அரசு அறிவித்தபோதுகூட, எந்தக் கட்சியும் இதனை எதிர்க்கவில்லை. தமிழ்நாட்டு பா.ச.க. தலைவர் தமிழிசை சவுந்திரராசன் கூட எதிர்க்கவில்லை. காங்கிரசுத் தலைவர் ஈ.வி.கே.எசு. இளங்கோவன் சட்டப்படி விடுதலை செய்தால் தாம் எதிர்க்கப் போவதில்லை என்றார்.
வடநாட்டுத் தலைவர்கள் அணைவரும் ஏழுத் தமிழர் விடுதலை என்ற அறிவிப்பை எதிர்த்தார்கள். கடைசி சனநாயகவாதி கெஜ்ரிவால் கூட எதிர்த்தார். கும்மிடிப்பூண்டி தாண்டினால் நம் உணர்வை மதித்து -ஏழு பேர் விடுதலையையும் ஆதரிக்கும் சில தனிப்பட்ட மனித உரிமையாளர் களைத்தாண்டி, மக்கள் எத்தனை பேர் இருக்கின்றனர்? ஏன் இல்லை? என்ன காரணம்?
இதுவொரு மனித உரிமைப் பிரச்சினைதான். ஆனாலும், அடிப்படையில் இதுவொரு தேசிய இனம் சார்ந்த சிக்கல்!
காஞ்சி மக்கள் மன்றப் போராளி - தழல் ஈகி செங்கொடியின், வீரச்சாவுக்கு முதல்நாள்வரை, சட்டப்படி எங்கள் கைகள் கட்டப்பட்டுள்ளன என்று தமிழ்நாடு முதலமைச்சர் செயலலிதா, நடுவண் அரசின் சுற்றறிக்கை ஒன்றைக் காரணமாகக் காட்டினார். நீதிபதி கலிபுல்லா தலைமையிலான, அரசமைப்பு அமர்வு மாநில அரசுக்கு இருந்த அதிகாரத்தை மறுத்தது. ஆயினும் 161 இன் படியான மன்னிப்பு அதிகாரம் கட்டற்றது என உறுதி படுத்தியது. மற்ற வகையில் அது மோசமான தீர்ப்பு.
இந்தத் தீர்ப்பை நாம் அனைவரும் படிக்க வேண்டும். எந்த சட்டநெறியும் இல்லாமல், நமக்கு எப்படி அநீதி இழைக்கப்பட்டுள்ளது எனத் தெரிந்து கொள்வதற்காகவது இதனைப் படிக்க வேண்டும். இந்த நாட்டின் சட்டப்படியே நமக்கு எப்படி அநீதி இழைக்கப்பட்டுள்ளது, எனத் தெரிந்து கொள்ள படிக்க வேண்டும்.
மற்றவர்களுக்கு செல்லுபடியாகும் சட்டம், தமிழர்களுக்கு மட்டும் ஏன் செல்லுபடியாகாது? ஏனெனில், இந்தியாவில் நாம் புறக்கணிக்கப்பட்ட இனம், வஞ்சிக்கப்படும் இனம்.
1956இல் இயற்றப்பட்ட, மாநிலங்களுக்கு இடை யிலான தண்ணீர்த் தகராறுச் சட்டம், எல்லா மாநிலங்களுக்கும் பொதுவானது. அந்தச் சட்டப்படியே, காவிரிச் சிக்கில் ஒரு தீர்ப்பாயம் அமைக்கப்பட்டு, இன்று தீர்ப்பும் வழங்கப்பட்டுவிட்டது. அந்தத் தீர்ப்பை நிறைவேற்ற வேண்டிய சட்டக்கடமை இந்திய அரசுக்குத்தான் இருக்கிறது.
இதே இந்திய அரசு, கிருஷ்ணா நதிநீர்ச் சிக்கலில் தீர்ப்பாயத்தின் தீர்ப்பை செயல்படுத்துகின்றது. நான்கு மாநிலங்களுக்கு இடையிலான நர்மதா நதிநீர்ச் சிக்கலில், தீர்ப்பாயத்தின் தீர்ப்பைச் செயல்படுத்து கின்றது. ஆனால், காவிரிச் சிக்கலில் மட்டும் தீர்ப்பைச் செயல்படுத்த மறுப்பதன் நோக்கம் என்ன?
நாம், தமிழர்கள் என்பதால்தான் இந்தப் புறக்கணிப்பு நமக்கு நடக்கிறது. நாம் தமிழ்த் தேசிய இனம் என்பதற்காக பழி வாங்கப்படுகிறோம்.
தமிழ்நாட்டு முதல்வர், எதிர்க்கட்சிகள், மக்கள் என எல்லோரும் சட்டப்படி கோருகின்ற ஏழு தமிழர் விடுதலையை இந்திய அரசு தடுக்கிறது.
இதுவொரு இன மறுப்பு - இன அழிப்பு! இன்னும் குறிப்பாகச் சொல்ல வேண்டுமெனில், இதுவொரு கட்டமைப்பு இனப்படுகொலை - இன அழிப்பு (Structural Genocide). தமிழ் இனம் என்பதால்தான் நாம் திட்டமிட்டு அனைத்து முனைகளிலும் வஞ்சிக்கப்படுகிறோம்.
2008-2009ஆம் ஆண்டு, தமிழீழத்தில் இனப் படுகொலை நடைபெற்ற போது, “போரை நிறுத்து” என்ற ஒற்றை முழக்கத்தின்கீழ்தான், ஒட்டு மொத்தத் தமிழ்நாடும் போராடியது. தமிழீழத்தை ஆதரிப்பவர்கள், எதிர்ப்பவர்கள் என்ற வேறுபாடு இல்லாமல் அந்த முழக்கம் எழுந்தது.
நாம் மிகவும் மதிக்கும் மனித உரிமைச் செயல்பாட்டாளர்கள் மேதா பட்கர், அருந்ததி ராய் போன்றவர்கள், அதற்கு என்ன எதிர்வினை ஆற்றினார்கள்?
அருந்ததிராய் டைம்ஸ் ஆப் இந்தியாவில் ஒரு கட்டுரை எழுதியதோடு நிறுத்திக் கொண்டார். பின்னர், சென்னையில் நடைப்பெற்ற ஒரிசாவில் இந்திய அரசின் “பச்சை வேட்டை நடவடிக்கை”க்கு எதிரான கூட்டத்தில் பங்கேற்க வந்தபோது, ஈழ விடுதலை தொடர்பாகவும் பேசினார். அவ்வளவுதான்!
தில்லியின் ஜந்தர் மந்தரில், நம் தமிழ்நாட்டு வழக்கறிஞர்கள் போர் நிறுத்தம் கோரி ஒரு உண்ணாப் போராட்டம் நடத்திய போது, அந்த இடத்திற்குப் பக்கத்தில் வேறொரு போராட்டத்தில் பங்கேற்க வந்த மேதா பட்கரை அழைத்துவரச் சென்றார்கள். அவர்களிடத்தில், “நான் பயங்கரவாதத்தை ஆதரிக்க மாட்டேன் (I will not support Terrorist)” என்றும் இச்சிக்கலில் நாங்கள் ஒரு நிலைப்பாட்டை எடுக்கவில்லை என்றும் சொன்னவர் மேதா பட்கர்!
இதுதான் இந்திய உளவியல்! இந்தியன் என்ற உளவியலுக்குள், தமிழர்களுக்கு என்றைக்குமே இடம் கிடையாது!
எனவே, நாம் தமிழ்த் தேசிய இனமாகத் திரள வேண்டும். அதுவே காலத்தின் கட்டாயம்!
2004ஆம் ஆண்டு, அக்டோபரில் பா.ச.க. ஆட்சிக் காலத்தில், வாஜ்பாயி தலைமை அமைச்சராக இருந்த போது, எவ்வளவு பெரிய குற்றச் செயலாக இருந்தாலும், ஒருவரை 25 ஆண்டுகளுக்கு மேல் சிறையில் வைக்க மாட்டோம் என இந்திய அரசு, உச்ச நீதிமன்றத்தில் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்தது.
அதனடிப்படையில் கேட்கிறோம், இருபத்தைந்து ஆண்டுகள் ஆகிவிட்டன. ஏழு தமிழர்களையும் விடுதலை செய்யுங்கள். குற்றவியல் நடைமுறைச் சட்ட உறுப்பு 435 இன்கீழ், நடுவண் அரசு ஒப்புதல் அளித்தே இவர்கள் விடுதலை செய்யப்பட வேண்டும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்திருந்தது. எனவே, ஒட்டுமொத்தத் தமிழ்நாட்டு மக்களின் உணர்வை மதிப்பதாக இருந்தால், இந்திய அரசே இவர்களை விடுதலை செய்ய வேண்டும்.
இல்லையெனில், அதே தீர்ப்பில் சுட்டிக்காட்டி யுள்ளதைப் போல், நீதிமன்றங்களின் குறுக்கீடுகளுக்கு அப்பால் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரம் அளிக்கும் இந்திய அரசமைப்புச் சட்ட உறுப்பு 161-இன்கீழ், தமிழ்நாடு அரசே ஏழு தமிழர்களையும் விடுதலை செய்ய வேண்டும். இதற்கு எந்தவொரு சட்டத் தடையும் இல்லை, அரசியல் தடையும் இல்லை!
“விசாரணை முடிந்து காலையில் வந்துவிடுவான்” என காவல்துறையினர் வாக்குறுதி அளித்து, பேரறிவாளனை அழைத்துச் சென்று, கடந்த சூன் 11ஆம் நாளோடு, இருபத்தைந்து ஆண்டுகள் கடந்து விட்டன. அந்நாளை நினைவு கூறும் வகையில், சென்னையில் 11.06.2016 அன்று ஏழு தமிழர் விடுதலைக்காக மிகப்பெரும் பேரணியை நடத்தினோம். அற்புதம் அம்மாள் முறைப்படி, தமிழ்நாடு அரசுக்கு மனு செய்திருக்கிறார். 161 இன் படி விடுதலை அளிக்கக் கோரியுள்ளார் இம்மனுக்களை சட்டப்படி பரிசீலித்து, உடனடியாக ஏழு பேரையும் தமிழ்நாடு அரசு விடுதலை செய்ய வேண்டும்!
இவர்கள் ஏழு பேரும் சிறையில் இருக்கும், ஒவ்வொரு நாளும் தமிழினத்திற்கு அவமானம் என்று உணர வேண்டும். இவர்கள் சிறையில் இருப்பது, நம் மீது பட்ட கறை என்று உணர வேண்டும்.
எல்லா உணர்வாளர்களும், அரசியல் இயக்கத் தினரும் இந்தக் கோரிக்கையை தொடர்ந்து வலியுறுத்தி, தமிழ்நாடு அரசுக்கு அழுத்தம் தர வேண்டும்.
இது நம் உரிமைப் பிரச்சினை - தமிழினத்தின் பிரச்சினை என்றுணர்ந்து, நாம் செயலாற்ற வேண்டும்! நன்றி!”
இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் பேசினார்.
நிறைவில், தோழர் ஸ்டீபன் (த.தே.பே.) நன்றி நவின்றார். நிகழ்வில், தமிழின உணர்வாளர்கள் திரளாகப் பங்கேற்றனர்.
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தோழர்கள் திருவள்ளுவன், இராசேசுக் குமார், வீரக்குமார் ஆகியோர் கூட்ட ஏற்பாடுகளை ஒருங்கிணைத்தனர்.