உடனடிச்செய்திகள்
Showing posts with label மதுவிலக்கு. Show all posts
Showing posts with label மதுவிலக்கு. Show all posts

Friday, October 9, 2020

சாராய உற்பத்தி ஆலையை மூடக்கோரிய பெண்கள் மீது போட்ட பொய் வழக்கைக் கைவிட வேண்டும்! -பெ. மணியரசன் முதலமைச்சருக்கு கோரிக்கை!


சாராய உற்பத்தி ஆலையை மூடக்கோரிய
பெண்கள் மீது போட்ட
பொய் வழக்கைக் கைவிட வேண்டும்!


தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர்
பெ. மணியரசன் முதலமைச்சருக்கு கோரிக்கை!


புதுக்கோட்டை மாவட்டம் கல்லாக்கோட்டையில் உள்ள கால்ஸ் என்ற தனியார் சாராய உற்பத்தி ஆலையை நிரந்தரமாக மூட வலியுறுத்தித் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான மகளிர் ஆயத்தில் உள்ள பெண்கள் 14.05.2019 அன்று அந்த ஆலை முன் மறியல் போராட்டம் நடத்துவதாக அறிவித்திருந்தார்கள்.

1. தமிழ்நாட்டில் முழு மது விலக்கைச் செயல்படுத்த வேண்டும்;

2. கால்ஸ் டிஸ்ட்டிலரீஸ் (KALS Distileries Pvt. Ltd.) என்ற சாராய உற்பத்தி ஆலை கல்லாக் கோட்டையில் நிறுவப்பட்ட பின் அது அன்றாடம் மிகமிக அதிகமாக நிலத்தடி நீரை உறிஞ்சி, சாராய உற்பத்திக்குப் பயன்படுத்துவதால், கல்லாக்கோட்டையிலும் அதைச்சுற்றியுள்ள 10 கிராமங்களிலும் நிலத்தடி நீர் மிக மிக ஆழத்திற்குப் போய்விட்டது. இதனால் ஆழ்குழாய் மூலம் நிலத்தடி நீரைப் பயன்படுத்தி சாகுபடி செய்து வந்த உழவர்களுக்கு நிலத்தடி நீர் வற்றி, நிலங்களைத் தரிசாகப் போட்டுள்ளார்கள்.

3. நிலத்தடி நீர் வற்றியதால் – அவ்வூரில் செயல்பட்டு வந்த தமிழ்நாடு அரசு வேளாண் பண்ணையை மூடி விட்டார்கள்.

இக்காரணங்களை முன்வைத்து கால்ஸ் சாராய ஆலையை மூட வலியுறுத்தி மகளிர் ஆயம் பெண்கள் 14.05.2019 அன்று காலை 10.30 மணி அளவில் கல்லாக்கோட்டை கடைத்தெருவிலிருந்து மகளிர் ஆயம் தலைவர் ம.இலட்சுமி அம்மாள் தலைமையில் ஊர்வலமாகச் சாலை ஓரத்தில் சென்றார்கள். மேற்படி சாராய ஆலை ஒரு கிலோ மீட்டர் தொலைவுக்கு அப்பால் உள்ள நிலையில், கந்தர்வகோட்டைக் காவல்துறையினர் வழிமறித்து அனைத்துப் பெண்களையும் கைது செய்துள்ளதாக அறிவித்து, காவல் ஊர்திகளில் ஏற்றிச் சென்று கந்தர்வகோட்டையில் தனியார் திருமண மண்டபத்தில் அடைத்து வைத்தார்கள். அன்று மாலை 6 மணிக்கு அனைவரையும் விடுதலை செய்தார்கள்.

முன்தடுப்புச் சட்டப் பிரிவு 151 Cr.P.C இன் கீழ், அனைவரையும் கைது செய்து – மாலையில் விடுவித்துவிட்டார்கள். ஆனால் இப்போது ஓர் ஆண்டு ஐந்து மாதங்களுக்குப் பின் அப்பெண்கள் மீது கந்தர்வகோட்டை உரிமையியல் மற்றும் குற்றவியல் நீதி மன்றத்தில் இந்தியத் தண்டனைச் சட்டப் பிரிவுகள் 143, 341 ஆகியவற்றின் கீழ் வழக்கு இருப்பதாகவும், அனைவரும் 14.10.2020 அன்று நீதி மன்றத்தில் நேர்நிற்க வேண்டும் என்றும் நீதிமன்ற அழைப்பாணை (Summons) 13 பெண்களுக்கும் இரு ஆண்களுக்கும் வந்துள்ளது.

முன்தடுப்பு நடவடிக்கையாகத் தடுத்து மண்டபத்தில் வைத்த பின், அப்பெண்கள் மேற்படி ஆலை வாயிலில் சட்ட விரோதமாகக் கூடினார்கள் என்றும், சட்டவிரோதமாக மறியலில் ஈடுபட்டார்கள் என்றும் காவல்துறை கூறுவது உண்மைக்கு மாறானது. நான் சொல்வது சரியானதுதானா என்று அறிய தாங்கள் தனி விசாரணை செய்து உண்மையை அறியலாம்.

தனியார் ஆலை நிர்வாகத்திற்குச் சாதகமாக நடக்க வேண்டும் என்ற உள்நோக்கத்துடன் கந்தர்வகோட்டை காவல்துறையினர், உயரிய காந்திய இலட்சியத்துடன் மதுவிலக்கு கோரிய பெண்கள் மீது இந்தியத் தண்டனைச் சட்டத்தின் கீழ் பொய்வழக்குப் பதிந்துள்ளார்கள்.

இந்தக் கொடிய கொரோனா காலத்தில் பெண்களை நீதிமன்றத்தில் நேர்நிற்க அழைப்பாணை அனுப்புவது அறமா என்று அவர்கள் சிந்திக்க வேண்டும்.

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இதில் தலையிட்டு மேற்படி வழக்கைக் கைவிடச் செய்வதுடன், கொரோனா காலத்தில் தஞ்சை மாவட்டத்திலிருந்து புதுக்கோட்டை மாவட்டத்திற்குப் பெண்களை அலைய விடாமல் காக்குமாறு கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 

Thursday, August 6, 2015

மதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உண்ணாப்போர் நான்காம் நாள்! தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆதரவு..!




மதுவிலக்கு கோரி மாற்றுத் திறனாளிகளின் காலவரையற்ற உண்ணாப்போர் நான்காம் நாள்!

தமிழ்த் தேசியப் பேரியக்கத் தோழர்கள் ஆதரவு..! 




தமிழ்நாட்டு மக்களை சீரழித்து வரும் மதுக்கடைகளை மூடக்கோரி தமிழகமெங்கும் நடைபெற்று வரும் மக்கள் போராட்டங்களின் ஒரு பகுதியாக, சென்னையில் கடந்த ஆகத்து 4 அன்று, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்பு சார்பில் உண்ணாப்போராட்டம் நடந்தது.

சென்னை மெரினா கடற்கரை உழைப்பாளர் சிலை அருகில் காலை முதல் மாலை வரை, தமிழ்நாடு மாற்றுத்திறனுடையோர் சங்கங்களின் கூட்டமைப்புத் தலைவர் திரு. தீபக் தலைமையில் தடைபெற்று வந்த அந்தப் போராட்டத்தை, காவல்துறையினர் சீர்குலைத்தனர்.

போராட்டம் நடக்குமிடத்திற்கு வந்த காவல்துறை உதவி ஆணையாளர் பீர்முகமது என்பவர் தலைமையிலான காவல்துறையினர், மாற்றுதிறனாளிகளை அடித்து உதைத்து இழுத்துச் சென்று அனைவரையும் கைது செய்தனர். இராயப்பேட்டையில் உள்ள சமூக நலக்கூடம் ஒன்றில் அடைத்து வைக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகளுக்கு, கழிப்பிட வசதி கூட செய்து தரப்படவில்லை.

இந்நிலையில் அவர்களுக்கு மாற்று மண்டபம் ஏற்படுத்தித் தருவதாக கூறி வாகனங்களில் ஏற்றி வந்த காவல்துறையினர், சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகிலுள்ள பறக்கும் தொடர்வண்டிப் பாலத்தின் கீழ் இறக்கிவிட்டுச் சென்றுவிட்டனர்.

மாற்றுத் திறனாளிகளின் போராட்டத்தை இழிவுபடுத்தும் வகையில் நடந்து கொண்ட காவல்துறையினரைக் கண்டித்தும், மதுவிலக்கு கோரியும், மாற்றுத் திறனாளிகள் அவ்விடத்திலேயே தங்கள் உண்ணாப் போராட்டத்தைத் தொடர்ந்து நடத்தி வருகின்றனர்.

போராட்டத்தின் மூன்றாம் நாளான நேற்று, 2 பெண் மாற்றுத் திறனாளிகள் மயக்கமடைந்ததைத் தொடர்ந்து, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். தொடர்ந்து, வெயில் - மழையைப் பொருட்படுத்தாது கொள்கை உறுதியுடன் களத்தில் நிற்கும் மாற்றுத் திறனாளிகளை, பல்வேறு அரசியல் கட்சியினரும் இயக்கங்களும் நேரில் சந்தித்து ஆதரவு நல்கி வருகின்றனர்.

போராட்டத்தின் நான்காம் நாளான இன்று (06.08.2015) காலை, தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் இரா. இளங்குமரன், தோழர்கள் பாலசுப்பிரமணியம், இரமேசு உள்ளிட்டோர் போராட்டம் நடத்தி வரும் மாற்றுத் திறனாளிகளை நேரில் சந்தித்து ஆதரவு நல்கினர்.

தமிழ்நாடு அரசு, மாற்றுத் திறனாளிகளைத் தாக்கியக் காவல்துறையினர் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அவர்களின் கோரிக்கையாக மட்டுமின்றி, தமிழ்நாட்டு மக்களின் கோரிக்கையாகவும் உள்ள மதுவிலக்கை உடனடியாக செயல்படுத்த வேண்டும்!

Tuesday, August 4, 2015

சென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கைது செய்தது தமிழக அரசு !

சென்னையில் மதுவிலக்கு கோரி நடைபெற்ற போராட்டத்தில் அனைத்துக் கட்சித் தலைவர்களையும் கைது செய்தது தமிழக அரசு !
மதுக்கடைகளை இழுத்து மூடக்கோரி தமிழகம் முழுவதும் இன்று 04.08.2015 முழு அடைப்புப் போராட்டம் நடைபெற்று வருகிறது.

மது ஒழிப்பு போராளி சசிபெருமாளுக்கு வீரவணக்கம் செலுத்தும் வகையிலும், முழு மதுவிலக்கை செயல்படுத்த வலியுறுத்தியும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் வணிகர்கள் தாங்களாகவே முன்வந்து தங்கள் வணிக நிறுவனங்களை அடைத்து இன்று கடையடைப்பில் ஈடுபட்டுளனர்.
இந்நிலையில் சென்னை சூளைமேட்டில் மதுக்கடைகளை மூடக் கோரி அனைத்துக் கட்சி சார்பில் போராட்டம் நடைபெற்றது.

சென்னை நெல்சன் மாணிக்கம் சாலை வழியே பேரணியாக சென்ற தோழர்களை காவல்துறையினர் தடுத்து நிறுத்தினர்.

இதனால் காவல்துறையினருக்கும் , போராட்டத் தோழர்களுக்குமிடையே கடும் வாக்குவாதமும், தள்ளுமுள்ளும் ஏற்பட்டது.
ம.தி.மு.க. துணை பொதுச் செயலாளர் திரு. மல்லை சத்தியா, தமிழ்த் தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ.மணியரசன் உள்ளிட்டவர்களை காவல்துறைனர் கைது செய்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு மதுக்கடைகளை மூடக் கோரி முழக்கங்களை எழுப்பிய தோழர்களில் இருஇளைஞர்களை காவல்துறையினர் தாக்கிக் கைது செய்தனர். அப்பகுதி மதுபானக்கடை உடனே மூடப்பட்டது.

போராட்டத்தில் தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன் அவர்கள் தலைமையில் தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தோழர் பழ.நல் ஆறுமுகம், தோழர் கோவேந்தன் உள்ளிட்டவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.

தமிழக அரசே! தமிழகத்தில் முழுமையான மதுவிலக்கை உடனடியாக செயல்படுத்து!

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT