Tuesday, May 25, 2021
ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசு செய்ய வேண்டியது என்ன? - கி. வெங்கட்ராமன் அறிக்கை!
Monday, May 24, 2021
"ஏழு தமிழர் விடுதலை: ஸ்டாலின் இதைச் செய்வாரா?" - "எமது தேசம்" ஊடகத்துக்கு.. தோழர் கி. வெங்கட்ராமன் நேர்காணல்!
"ஏழு தமிழர் விடுதலை:
ஸ்டாலின் இதைச் செய்வாரா?"
Thursday, May 20, 2021
“ஜக்கி வாசுதேவ் மீதான அமைச்சர் பி.டி.ஆர். குற்றச்சாட்டுகள் சரியானவையே!” “பேரலை” ஊடகத்திற்கு - ஐயா பெ. மணியரசன் நேர்காணல்!
“ஜக்கி வாசுதேவ் மீதான அமைச்சர் பி.டி.ஆர். குற்றச்சாட்டுகள் சரியானவையே!”
ஆரியவாதிகளின் புரட்டுகளை அம்பலப்படுத்தவே! - ஐயா பெ. மணியரசன்!
ஆரியவாதிகளின் புரட்டுகளை அம்பலப்படுத்தவே!
ஐயா பெ. மணியரசன்,
தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்
என் மதம் குறித்து ஆரியத்துவாவாதிகள் கூறும் புரட்டை அம்பலப்படுத்தவே இக்கட்டுரையை எழுதுகிறேன்.
என் மதம் எது? எனது பிறப்பாலும், இருப்பாலும் நான் ஓர் இந்து. அரசு சார்ந்த ஆவணங்கள் அனைத்தும் அதைத்தான் கூறுகின்றன. நடைமுறை உண்மையும் அதுவே!
இந்து மதத்தில் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை இரு பிரிவுகள் இருக்கின்றன. ஒன்று தமிழ் இந்து; இன்னொன்று ஆரிய இந்து. தமிழர்கள் தமிழ் இந்துக்கள்; எச்.இராசா போன்றவர்களும் வட நாட்டினரும் ஆரிய இந்துக்கள்! தமிழ் இந்துக்களின் புனித நூல்கள் திருக்குறள், தேவாரம், திருமந்திரம் திருவாசகம், ஆழ்வார் - ஆண்டாள் பாசுரங்கள், கரூவூரார், வைகுண்டர், வள்ளலார் நூல்கள் போன்றவை! ஆரிய இந்துக்களின் புனித நூல்கள் சமற்கிருத வேதங்கள்; பகவத் கீதை போன்றவை!
அந்த வரையறுப்பின்படி நான் தமிழ் இந்து! என் தந்தை பெயர் பெரியசாமி; அன்னை பெயர் பார்வதி; தந்தை வழி தாத்தா காத்தையன்; அப்பாயி (பாட்டி) பெயர் - பெரியவீட்டாயி; தாய் வழித் தாத்தா சப்பாணி முத்து; அம்மாச்சி (அம்மாவின் அம்மா) பெயர் மங்கலம். என் பெற்றோர் எனக்கு வைத்த பெயர் மணிராசு. (அதைத்தான் மணியரசன் என்று தனித் தமிழ் ஆக்கினேன்); என் தம்பி பெயர் ரெங்கராசு; என் தங்கை பெயர் மணிமேகலை. என் சொந்த ஊர் முகவரி: ஆச்சாம்பட்டி வடக்குத் தெரு, பூதலூர் வட்டம், தஞ்சை மாவட்டம். எனது வாழ்க்கை திறந்த புத்தகம்!
இவற்றையெல்லாம் சொல்வதற்குக் காரணம், சங்கிகளிடம், “நான் இந்து” என்று சான்றிதழ் வாங்குவதற்காக அன்று! அவர்களின் பொய்யை, புரட்டை அம்பலப்படுத்தவே!
எச்.இராசா, கே.டி.இராகவன் போன்றவர்களின் முன்னோர்கள் தமிழர்களின் பழம்பெரும் தெய்வங்கள், ஊர்கள் பெயர்களையே மாற்றியவர்கள்; என்னைப் போன்றவர்களின் பெயர்களை, மதங்களை மாற்றுவது அவர்களுக்கு எளிய பொழுது போக்கு!
தமிழ்க் கடவுள் முருகனை “சுப்ரமண்ய” என்று மாற்றினார்கள். தமிழச்சி வள்ளியுடன் அவருக்குக் காதல் திருமணம் நடந்து விட்ட நிலையில், வடநாட்டு தெய்வயானையை “இரண்டாம் திருமணம்” செய்தார் என்று கதை கட்டினார்கள். ஐயாறப்பனை “பஞ்சநதீஸ்வரர்” ஆக்கினார்கள்; அறம் வளர்த்த நாயகியைத் “தர்மசம்வர்த்தினி” ஆக்கினார்கள். மயிலாடுதுறையை “மயூரம்” என்று மாற்றினார்கள்; மரைக்காட்டை “வேதாரண்யம்” என்றார்கள். பூசை மொழி தமிழாக இருந்ததை சமற்கிருதம் என்று மாற்றினார்கள்.
“யாதும் ஊரே யாவரும் கேளிர்,” “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்”, “ஒன்றே குலம்” என்ற தமிழர்களின் மனித சமத்துவ மாண்பை மாற்றி, தமிழர்களைச் சூத்திரர்கள், பஞ்சமர்கள் என்று மாற்றி இழிவுபடுத்தினார்கள். தங்களை, பிராமணர்கள் - பிரம்மாவின் தலையில் பிறந்தவர்கள் என்று கற்பித்து “புனிதப்” படுத்திக் கொண்டனர். தமிழை “நீச பாஷை” என்றார்கள்; சமற்கிருதத்தைத் “தேவ பாஷை” என்றார்கள்.
எச்.இராசாக்கள், கே.டி.இராகவன்கள், எஸ்.வி.சேகர்கள் – அவர்களின் இன்ன பிற உறவுகள், ஆரிய ஆதிக்கத்திற்காகத் தங்களின் முன்னோர்கள் செய்த அதே சதிகளை, “மாற்றங்களை” இன்றும் செய்கிறார்கள். இன்று அவர்களின் முழக்கம்” ஜெய் ஸ்ரீராம், ஜெய் ஸ்ரீஹனுமான், பாரத் மாத்தா கீ ஜே”! சமற்கிருதம் புனித மொழி, இந்தி தேசிய மொழி; தமிழர்கள் இந்த இரண்டையும் படிக்க வேண்டும்; தமிழ் பிராந்திய மொழி! விரும்பினால் தமிழைப் படிக்கலாம். இதுவே இவர்களின் மும்மொழிக் கொள்கை.
எனவே, இந்த வர்ண-சாதி பகாசுரர்கள் என் பெயரையும் என் மதத்தையும் இப்போது மாற்றிப் பேசுவது, அவர்களுக்குரிய மரபு வழிப்பட்ட (அ)தர்மமே!
ஆரியத்துவா வாதிகள் அந்தக் காலத்திலிருந்து இந்தக் காலம் வரை தமிழர்கள் மீதும் தமிழ் மொழியின் மீதும் ஆதிக்கம் செய்வதற்குப் பயன்படுத்திய “ஆயுதம்” ஆன்மிகம்! தமிழர்களைப் பொறுத்தவரை ஆன்மிகம் என்பது அப்பழுக்கற்ற மெய்யியல்! கடவுளை அடைதல்; கடவுள் துணை வேண்டல்! ஆரியர்களுக்கோ ஆன்மிகம் என்பது, அவர்களும் அவர்களது சமற்கிருதமும் மற்ற இனங்களின் மீதும் மற்ற மொழிகளின் மீதும் ஆதிக்கம் செலுத்துவதற்கான ஓர் ஆயுதம் அல்லது ஓர் ஊடகம்!
ஆரியர்கள் வடக்கே இருந்து படையெடுத்து வந்தா, தமிழர்களை வென்று ஆதிக்கம் செலுத்துகிறார்கள். அப்படிப் படை கொண்டு வந்திருந்தால் “பகைவன்” என்று அடையாளம் கண்டு புரட்டி எடுத்திருப்பர் நம் முன்னோர்; விரட்டி அடித்திருப்பர்! ஆண்டவனின் அணுக்கச் செயலாளர் போல், ஆண்டவனின் அருளை நமக்கு வாங்கித் தருவது போல் நாடகமாடி, நம் முன்னோரை ஏமாற்றி நம் தலையில் ஏறி உட்கார்ந்து கொண்டார்கள்.
அந்த ஆரியர்களின் இன்றைய வாரிசுகள் தங்களின் ஆதிக்கப் பவனிக்காக அணியம் செய்திருக்கும் ஊர்தியின் பெயர் “இந்துத்துவா!” இதில் மறைக்கப்பட்டுள்ள அசல் பெயர் “ஆரியத்துவா!” இருபதாம் நூற்றாண்டில் தமிழ்நாட்டில் திராவிட இயக்கம் ஆரியப் பிராமணியத்தின் ஆதிக்கத்தை எதிர்த்து, அதன் மாய்மாலங்களை அம்பலப்படுத்தி ஊரெங்கும் கருத்து விதைத்து வெகு மக்களைத் திரட்டியது. பெரியார் தலைமையில் போராடினார்கள். பிராமண ஆதிக்கத்தில் சரிவு ஏற்பட்டது. உரிமை மீட்பில் முன்னேற்றம் கண்டோம். ஆனால் ஆன்மிகத்தை அக்ரகாரத்தின் ஏகபோகமாக விட்டு விட்டு வெளியே நின்றார்கள். அது பிராமணர்களின் ஆதிக்கம் தொடர வசதியாகப் போய்விட்டது.
இன்றும் பிராமணியவாதிகள் நம் தமிழ் மொழியில் பூசை செய்யக்கூடாது என்கிறார்கள்; நம் தமிழர்கள் பூசகர்கள் – அர்ச்சகர்கள் ஆகக் கூடாது என்கிறார்கள். ஆனால் நாமெல்லாம் இந்துக்கள் – நமக்கான முழக்கம் “இந்துத்துவா” என்று பாசாங்கு பேசி அவர்கள் பவனிவரும் பல்லக்கைத் தூக்க நம்மை அழைக்கிறார்கள்!
ஆரியத்துவாவின் இந்த சூழ்ச்சியை முறியடிக்கும் வகையில், தமிழர் சிவநெறியை தமிழர் திருமால் நெறியை, தமிழர் குல தெய்வ வழிபாட்டை மீட்கவும் காக்கவும் தமிழினத்தில் காலந்தோறும் சான்றோர்கள் – அறவோர்கள் தோன்றி தமிழர்களுக்கான ஆன்மிக அரணை வலுப்படுத்தி உள்ளார்கள்.
அவர்களின் வழியில் நின்று தமிழ்த் தேசியப் பேரியக்கம், தமிழர் ஆன்மிகத்தில் நிலவும் ஆரிய-சமற்கிருத ஆதிக்கத்தை எதிர்த்துப் போராடி வருகிறது. மரபு வழிப்பட்ட – முற்போக்கான தமிழர் ஆன்மிகத்தை நிலைநாட்டிட அரும்பணி ஆற்றிவரும் ஆன்மிகச் சான்றோர்கள், அமைப்புகள், ஆதினங்கள், பீடங்கள் ஆகியவற்றுடன் இணைந்து தமிழ்மந்திரப் பூசை, தமிழ்வழிக் குடமுழுக்கு, மனித சமத்துவம் போன்ற கோரிக்கைகளை முன் வைத்து இயங்கி, அவற்றில் முன்னேற்றம் கண்டு வருகிறோம்.
அவர்கள் எல்லோரும் ஒருங்கிணைந்து உருவாக்கிய “தெய்வத் தமிழ்ப் பேரவை” யின் ஒருங்கிணைப்பாளராக நான் செயல்படுகிறேன்.
ஆரியத்துவா ஆன்மிக ஆதிக்கத்திற்கு எதிரான தமிழர் ஆன்மிக விழிப்புணர்ச்சியும் எதிர்ப்பாற்றலும் வளர்ந்து வருவதை சங்கிகளால் பொறுத்துக் கொள்ள முடியவில்லை. அதே வேளை நமது தமிழர் ஆன்மிக உரிமை மீட்பு முயற்சிகள் தவறானவை என்று நேரடியாகச் சொல்ல முடியவில்லை. அப்படி நேரடியாகச் சொன்னால் அவர்களின் அசல் மரபைத் தமிழர்கள் அடையாளம் கண்டு கொள்வார்கள் என்று அச்சப்படுகிறார்கள். எனவே அவதூறுகளே அவர்களின் ஆயுதங்கள் ஆயின. என் பெயர் டேவிட், என் மதம் கிறித்துவம் என்கிறார்கள்.
நான் சி.பி.எம் கட்சியில் ஒரு பொறுப்பில் முழுநேரச் செயல்பாட்டாளராகச் சற்றொப்ப 12 ஆண்டுகள் பணியாற்றினேன். 1984-இல் அந்தக் கட்சியிலிருந்து விலகி விட்டேன்.
இந்திரா காந்தி செயல்படுத்திய நெருக்கடி நிலைப் பிரகடனம் மக்களின் சனநாயக உரிமைகளைப் பறித்தது. அப்போது அந்த நெருக்கடி நிலையை எதிர்த்து, தலைமறைவாகச் செயல்பட ஒரு பிரிவை சி.பி.எம் கட்சி உண்டாக்கியது. தஞ்சை மாவட்டத்தின் தலைமறைவுச் செயல்பாட்டாளர்களில் நானும் ஒருவன். என்மீது வழக்குப் பதிவு செய்து காவல்துறை என்னைக் கடுமையாகத் தேடியது. கடைசி வரை என்னைக் கைது செய்ய முடியவில்லை. அத்தலைமறைவு வாழ்க்கையில் எனக்குத் துணை நின்ற தோழர்கள் எனக்கு வைத்த தலைமறைவுப் பெயர் டேவிட்! பெயரும் வேறொரு மதம் சார்ந்ததாக இருந்தால் தலைமறைவுக்கு உதவியாக இருக்கும் என்று அப்பெயர் சூட்டினார்கள். மற்றபடி எந்த ஆவணத்திலும் வேறு எந்த நடைமுறை வழக்கிலும் என் பெயர் டேவிட் என்று இல்லை.
1976 சனவரி 31-இல் தி.மு.க ஆட்சி கலைக்கப்பட்ட பிறகு பிப்ரவரியிலிருந்து 1977 பிப்ரவரி வரை சற்றொப்ப ஓராண்டுகாலம் தலைமறைவு வாழ்க்கை. அதன் பிறகு இந்திரா காந்தி தேர்தல் அறிவித்தார். தலைமறைவு வாழ்க்கை முடிவுக்கு வந்தது.
என் வாழ்க்கைத் துணைவியார் இலட்சுமி, ஆனந்த விகடன் இதழுக்கு அளித்த செவ்வியில் அந்தத் தலைமறைவு காலத்தில், தொழிற்சங்கத் தோழர்கள் சந்திப்பில் “டேவிட்” என்ற பெயரில் என்னை அவருக்கு அறிமுகப்படுத்தியதைக் கூறியிருந்தார். டேவிட் பெயரைக் கண்டு பிடித்த கொலம்பசுகளான கே.டி.இராகவன், எச்.இராசா வகையறாக்கள் கோயபல்சுப் பரப்புரை செய்து வருகின்றனர். அவர்களுக்குச் சற்சூத்திரர்களாகப் பணிபுரிந்து வரும் தமிழினச் சங்கிகளும் இதைப் பரப்பி வருகின்றனர்.
தமிழர் சமயநெறிகளில் நிலவும் ஆரிய ஆதிக்கத்தை நான் எதிர்த்துப் போராடி வருவதால், அதைத் தடுக்க “இந்து மதத்தில் தலையிடக் கூடாது” என்று சூழ்ச்சியாக, “டேவிட்” என்று பொய் பரப்பி வருகிறார்கள்.
என்னை இழிவு படுத்தும் நோக்கத்தோடு மேற்கண்ட நபர்களும் அவர்களைச் சேர்ந்தவர்களும் சட்டப்படியான என் பெயரை மாற்றியும் சட்டப்படியான எனது இந்து மதத்தை மாற்றியும் பொய்ப் பரப்புரை நடத்தி அவதூறு செய்யும் வேலையை இனியும் தொடர்ந்தால் அவர்கள் மீது சட்டப் படியான நடவடிக்கை எடுப்பேன் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
என்னைப் பொறுத்தவரை “டேவிட்” என்பது என் பெயர் இல்லை என்று சொல்கிறேனே தவிர, அது இழிவான பெயர் என்று கருதவில்லை. அது கிறித்துவத்தில் உயர்வான பெயர்; என் மதம் தமிழ் இந்து என்கிறேனே தவிர, கிறித்துவ, இசுலாமிய மதங்கள் இழிவானவை என்று கூறவில்லை. அவை உயர்வான மதங்களே!
தமிழினத்தில் இந்து, முசுலிம், கிறித்தவர் இருக்கிறார்கள். அவரவர் சமயம் அவரவர்க்கு! தமிழர் சிவநெறி, திருமால் நெறி, குலதெய்வ வழிபாடு ஆகியவற்றில் ஆரிய ஆதிக்கத்தை அகற்றுவோம். தமிழர் ஆன்மிகம் முழுமையாக மலரட்டும்!
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Tuesday, May 18, 2021
ஐயா துளசி ஐயா வாண்டையார் மறைவுக்கு ஆழ்ந்த இரங்கல்! - பெ. மணியரசன் அறிக்கை!
Monday, May 17, 2021
தமிழினத்தின் இரோசிமா - நாகசாகி | நந்திக்கடல் - முள்ளிவாய்கால் மே 18 | - ஐயா பெ. மணியரசன் உரை!
தமிழினத்தின் இரோசிமா - நாகசாகி | நந்திக்கடல் - முள்ளிவாய்கால் மே 18 |
Saturday, May 15, 2021
ஜக்கி போலி சாமியார்! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் தோலுரிக்கிறார்! - பெ. மணியரசன் நேர்காணல்!
ஜக்கி போலி சாமியார்! நிதியமைச்சர் பழனிவேல் தியாகராசன் தோலுரிக்கிறார்!
Friday, May 14, 2021
பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர்களைக் காலவரம்பற்ற விடுப்பில் விடுக! - பெ. மணியரசன் வேண்டுகோள்!
Thursday, May 13, 2021
இளவல் சீமான் அவர்களின் தந்தையார் மறைவுக்கு இரங்கல்! பெ.மணியரசன்
இளவல் சீமான் அவர்களின் தந்தையார் மறைவுக்கு இரங்கல்!
பெ.மணியரசன்
தலைவர், தமிழ்த்தேசியப்பேரியக்கம்
நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் இளவல் சீமான் அவர்களின் அன்புத் தந்தையார் ஐயா செந்தமிழன் அவர்கள் உடல் நலக் குறைவால் இன்று (13.5.2021) காலமானார் என்ற செய்தி துயரமளிக்கிறது. உடனடியாக இளவல் சீமான் அவர்களிடம் தொலை பேசியில் தொடர்பு கொண்டு ஆறுதல் கூறினேன்.
பெரியவர் ஐயா செந்தமிழன் அவர்களுக்கு வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஐயா அவர்களை இழந்துவாடும் இளவல் சீமான் அவர்களுக்கும் குடும்பத்தினர்க்கும் நாம் தமிழர் கட்சி தம்பிகளுக்கும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் ஆறுதல் தெரிவித்துக் கொள்கிறேன்.
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam
Wednesday, May 12, 2021
அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஜீயர் நியமனமும் ஆரியத்துவா எதிப்பும்! - ஐயா பெ. மணியரசன் உரை!
அரங்கநாத சுவாமி திருக்கோயில் ஜீயர் நியமனமும் ஆரியத்துவா எதிப்பும்!
Saturday, May 8, 2021
மராத்தா” ஒதுக்கீடு நீக்கம் வர்ணாசிரம (அ)நீதி! - பெ. மணியரசன் சிறப்புக்கட்டுரை!
Tuesday, May 4, 2021
“தமிழ்ச்செம்மல்” இளவழகனார் மறைவு பேரிழப்பு! பெ. மணியரசன் இரங்கல்!