உடனடிச்செய்திகள்

Monday, December 31, 2018

வெண்மணிப் படுகொலையும் பெரியார் எதிர்வினையும் - தோழர் பெ. மணியரசன்.


வெண்மணிப் படுகொலையும் பெரியார் எதிர்வினையும் - தோழர் பெ. மணியரசன், தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.

வெண்மணி ஈகியரின் ஐம்பதாம் ஆண்டு நிறைவு நினைவு நாள் 25.12.2018 அன்று வந்தது. ஐம்பதாம் ஆண்டு நிறைவையொட்டி, இவ்வாண்டு வெண்மணி ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்தும் நிகழ்ச்சிகள் தமிழ்நாட்டில் பரவலாக நடந்தன. நிலக்கிழமை ஆதிக்கமும், சாதி ஆதிக்கமும் இணைந்து ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்கள் 44 பேரை குடிசையில் வைத்து, கொளுத்திச் சாம்பலாக்கிய கொடிய நாள் – திசம்பர் 25, 1968!

வெண்மணி ஈகியருக்கு வீரவணக்கம் செலுத்திக் கொள்கிறோம்!

நாற்பத்து நான்கு பேரைக் கொளுத்திக் கொன்ற கொலைவெறிக் கும்பலுக்குத் தலைமை தாங்கிய நபர் கோபாலகிருஷ்ண நாயுடு.

வெண்மணிப் படுகொலை பற்றி பெரியார் தகுந்த முறையில் கண்டன அறிக்கை “வெளியிடவில்லை” என்றும், “தக்க முறையில் வெளியிட்டார்” என்றும் இப்போது விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

கோபாலகிருஷ்ண நாயுடுவுக்கு ஆதரவாக பெரியார் நடந்து கொண்டார் என்ற விமர்சனமும் வைக்கப்படுகிறது. வெண்மணியில் தீ வைத்துக் கொல்லப்பட்ட மக்கள், மார்க்சியக் கம்யூனிஸ்ட் கட்சியின் விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்தவர்கள். வெண்மணிக்குப் பிறகு வெளியிட்ட அறிக்கையிலும், செம்பனார் கோயில் பொதுக்கூட்டப் பேச்சிலும் பெரியார் கம்யூனிஸ்ட் கட்சிகளைத் தடை செய்ய வேண்டுமென்று வலியுறுத்தினார். பெரியாரின் இந்தக் கருத்து பற்றியும் விவாதங்கள் நடந்து கொண்டிருக்கின்றன.

அப்பொழுது பெரியார் வெளியிட்ட முழு அறிக்கையும், செம்பனார் கோயில் பேச்சும் கீழே வெளியிடப்படுகிறது. இதைப் படிப்பவர்கள் பெரியாரின் அணுகுமுறை பற்றி அவரவர் மனச்சான்றுக்கேற்ப முடிவு செய்து கொள்ளட்டும்!


“ஜனநாயக ஆட்சி உள்ளவரை யோக்கியர் மறைந்து போக வேண்டியதுதான்; அயோக்கியர்கள் ஆட்டம் போட வேண்டியதுதான். இந்திய மக்கள் காட்டுமிராண்டிகள்; இந்திய தர்மம் குற்றப் பரம்பரையர்கள் தர்மமேயாகும். மநுதர்மவாதிகள் உள்ளவரை நாடு ஒழுக்கம், நேர்மை, நாணயம், நீதி பெற முடியாது. வெள்ளையன் வெளியேறியவுடன் நாடு அயோக்கியர்கள் வசமாகிவிட்டது.

காந்தியார் பார்ப்பனர்களுக்கு நல்ல பிள்ளையாகி(த்தான்) ஒரு மகானாக ஆவதற்கு எண்ணி என்றைய தினம் மக்களை சட்டம் மீறும்படித் (அயோக்கியர்களாகும்படி) தூண்டி விட்டாரோ, அன்று முதல் மனித சமுதாயம் ஒழுக்கத்தில் கீழ் நிலைக்குப் போய் விட்டது! சட்டம் மீறுதல் மூலம் சத்தியாகிரகம் என்னும் சண்டித்தனம் செய்தல் மூலம் காரியத்தை சாதித்துக் கொள்ள, மக்களுக்கு காந்தி என்று வழி காட்டினாரோ அன்று முதலே மக்கள் அயோக்கியர்களாகவும், காலிகளாகவும் முந்திவிட்டார்கள்.

“புழுத்துப்போன பண்டத்தின் மீது நாய் வெளிக்குப்போன' மாதிரி மக்களை அயோக்கியர்களாக ஆக்கிவிட்டு, ஜெயிலையும் உடம்பைத் தேற்றிக்கொள்ளும் ஓய்விடமாகப் பார்ப்பனர்கள் என்று ஆக்கினார்களோ, அன்று முதலே யோக்கியர்கள் எல்லாம் அயோக்கியர்களாக ஆகவேண்டியவர்களாகி விட்டார்கள். யோக்கியர்கள் மானத்தோடு வாழ இடமில்லாமல் போய்விட்டது.

எந்த மனிதனும் ‘அயோக்கியனாக ஆனாலொழிய வாழ முடியாத' நிலை ஏற்பட்டு விட்டது. ‘சட்ட விரோதமான குற்றங்களைச் செய்தவன்தான் இராஷ்டிரபதியாகவும், பிரதமராகவும், முதல் மந்திரியாகவும் மற்றும் மந்திரிகளாகவும், பெரும் பதவியாளர்களாகவும் ஆக முடியும்' என்ற நிலைமை ஏற்பட்டவுடன் அரசியலில் யோக்கியர்களுக்கு இடம் இல்லாமலே போய்விட்டது. அயோக்கியர்களுக்கே ஆட்சி உரிமையாகிவிட்டது.

இந்த நிலையிலும் இந்தத் தன்மையிலும் நாட்டுக்கு ‘சுதந்திரம்' கிடைத்து இருபது ஆண்டுகளில் நாட்டில் செல்வாக்குப் பெறாத அயோக்கியத்தனம், அக்கிரமம், கொள்ளை கொலைகாரத்தனம், நாச வேலைகள் என்பவைகளில் ஒன்றுகூட பாக்கியில்லாமல் செல்வாக்குப் பெற்று, தினசரியில் நடைபெற்று வருகின்றன. அவை எந்த அளவுக்கு வளர்ந்தன என்றால்

1.  காந்தியார் கொல்லப்பட்டார்

2. தலைவர் காமராஜரைக் கொல்ல முயற்சிகள் செய்யப்பட்டன

3. போலிஸ் அதிகாரிகள் கட்டிப் போட்டு நெருப்பு வைத்துக் கொளுத்தப்பட்டனர்

4. நீதி ஸ்தலங்கள், ரயில் நிலையங்கள் கொளுத்தப்பட்டன. ஜெயில் கதவு உடைக்கப்பட்டது. பல வாகனங்கள் (பஸ்கள்) கொளுத்தப்பட்டன. வழிப்பறிகள் நடந்தன. மற்றும் நிலங்களில் துர் ஆக்கிரகமாகப் பயிர்கள் அறுவடை செய்து கொண்டு போகப்பட்டன. விவசாயிகளின் வீடுகள் கொளுத்தப்பட்டன

5. கடைசி நடவடிக்கையாக நேற்று முன்தினம், தற்காப்புக்கு ஆக ஓடி ஒரு வீட்டிற்குள் ஒளிந்து கொண்ட ஆண், பெண், குழந்தைகள் உட்பட 42 பேர்கள் பதுங்கிக் கொண்ட வீட்டைப் பூட்டிவிட்டுக் கொளுத்தி, 42 பேரும் கருகி சாம்பலாக்கப்பட்டிருக்கிறார்கள். இவ்வளவும் அரசியல் கட்சிக்காரர்களால் பட்டப் பகலில் வெட்ட வெளிச்சத்தில் வெளிப்படையாகவே செய்யப்பட்ட காரியங்களாகும்.

சட்ட விரோதமான, பலாத்காரமான, நாசவேலைகளான காரியங்களைச் செய்து, அதன் மூலம் பலன் பெறுவதற்கென்றே ஏற்படுத்திக் கொண்ட ஸ்தாபனங்களாலேயே, அவற்றின் பலனாகவே செய்யப்பட்ட, நடைபெற்ற காரியங்களாகும். இவைகளை அடக்கப் பயன்படும்படியான போதிய சட்டமில்லை; சட்டம் செய்வது மூலாதாரக் கொள்கைக்கு விரோதமாக இருந்து வருகிறது.

சட்டத்திற்கும், நீதிக்கும் சம்பந்தமில்லாத நீதிஸ்தலங்கள்தான் நிறைந்திருக்கின்றன. சட்டங்களின் யோக்கியதை இப்படி இருக்க பழிவாங்கும், ஜாதி உணர்ச்சி கொண்ட, சுயநலத்தையே முக்கியமாய்க் கருதுகிற நீதிபதிகளே 100க்கு 90 பேர்களாக இருக்கிறார்கள்.

அமைச்சர்களும், ஆட்சியாளர்களும் இந்த நிலையை மாற்ற, அடக்க ஆரம்பித்தால் நமது பதவிக்கு ஆபத்து வந்து விடுமே என்று பயந்தவர்களாகவே இருந்து வருகிறார்கள் என்பது மாத்திரமல்லாமல் அமைச்சர்கள் ‘நாங்கள் செய்வதையெல்லாம் மாற்றி தங்களுக்கு அவமானம் உண்டாக்கும்படியான நீதிஸ்தலங்களும், நீதிபதிகளும் ‘எங்களுக்கு மேலாக' இருப்பதால் எங்களால் மக்கள் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் ஒன்றும் செய்ய முடியவில்லை' என்கிறார்கள். மற்றும் லஞ்சம், ஒழுக்கக்கேடு, நேர்மை அற்றத்தன்மை இல்லாத அதிகாரிகள் மிக மிக அரிதாகவே இருக்கிறார்கள்.

அவற்றைக் கண்டுபிடித்தால் சிபார்சு வருகிறது. அதை அலட்சியம் செய்து நடவடிக்கை நடத்தினால், நீதிஸ்தலங்கள் பெரிதும் அவர்களை குற்றமற்றவர்களாக ஆக்கிவிடுகின்றன. ஜாதி காரணமாக, சிபாரிசு காரணமாக அரசாங்கத்தைப் பழிவாங்கும் காரணமாக எப்படிப்பட்ட ஒழுக்கக்கேடான அதிகாரியும் நீதிஸ்தலங்களில் தப்பித்துக் கொள்கிறார்கள்.

பார்ப்பனருக்கு வசதியான, பொது நலத்துக்கு கேடான, நீதிக்குக் கேடான குற்றமான காரியங்கள் நிறைந்த, தர்மங்கள் கொண்ட நூல், எப்படி மத (மநு) தர்மமாக இருக்கிறதோ, அது போல் சமுதாயக் கேடானதும் பார்ப்பனருக்குக் கேடாயிருந்தால் ஆட்சியையே பாழ் பண்ணக்கூடியதுமானத் தன்மைகள் நிறைந்ததே அரசியல் (சட்ட) தர்மமாக இன்று விளங்குகிறது.

ஒன்று பார்ப்பனர், இல்லாவிட்டால் தமிழர் அல்லாதவர், இல்லாவிட்டால் பார்ப்பன தாசர் தவிர வேறு யாரும் பதவிக்கு வரமுடியாததானத் தன்மையில் அரசியல் சட்டம், நடவடிக்கை இருப்பதால், என்றென்றும் திருத்த முடியாத தன்மையில் “ஜனநாயக ஆட்சி தர்மம்” இருந்து வருகிறது.

இவற்றிற்கு ஒரு பரிகாரம் வேண்டுமானால், “ஜனநாயகம்” ஒழிக்கப்பட்டு, “அரச நாயகம்” ஏற்பட வேண்டும். அது எளிதில் முடியாத காரியமானால், தமிழ்நாடு தனி முழு சுதந்திரமுள்ள நாடாக ஆக்கப்பட வேண்டும். அது முடியவில்லையானால், இந்தியா அன்னியனுடைய ஆட்சிக்கு வர வேண்டும்.

இந்தியாவானது இந்தியர்கள் ஆட்சி புரிகிறவரை, மேல்கண்ட மாதிரியான மநுதர்மம் தான் ஆட்சி தர்மமாக இருக்க முடியும். ஆதலால் மக்கள் மனித தர்ம ஆட்சியில் இருக்க வேண்டுமானால், இந்தியாவுக்கு அன்னிய ஆட்சிதான் தகுதி உடையதாகும்.

அதுவும் இரஷ்ய ஆட்சி – அதாவது இரஷ்யரால் ஆளப்படும் ஆட்சிதான் வரவேண்டும். அல்லது பிரிட்டன், அமெரிக்கா போன்ற வெள்ளையன் ஆட்சிதான் வேண்டும். அப்படியில்லாமல் இந்தியாவை இந்தியன் ஆள்வது என்றால், அது பார்ப்பன நலத்துக்கு ஆக ஆளப்படும் சூழ்ச்சியாட்சியாகத்தான் அதாவது, இன்று போலத்தான் இருக்கும். இருந்து தீரும். மக்களும் தாங்கள் சூத்திரர்கள் என்பதை ஒப்புக் கொண்டவர்களாகத்தான் இருக்க முடியும்.

எனவே, இன்றைய இந்த நிலை மாற வேண்டுமானால் முதலாவது, குறைந்தது –

1. காங்கிரஸ் - திராவிட முன்னேற்றக் கழகம் என்கின்ற இரண்டு கட்சிகளைத் தவிர, அரசியல் சம்பந்தமான எல்லா கட்சிகளையும் இல்லாமல் ஆக்கிவிட வேண்டும்.

2. சமுதாயக் கட்சிகள் இருக்க வேண்டுமானால் அவைகளின் கொள்கைகளில், நடப்புகளில் சட்டம் மீறுதல், பலாத்காரம் ஏற்படுதல், ஏற்படும்படியான நிலைமை உண்டாக்குதல் ஆகியத் தன்மைகள் இல்லையென்று உறுதி மொழி பெற்ற பிறகே அவைகள் அனுமதிக்கப்பட வேண்டும்.

3. எந்தக் கட்சி ஸ்தாபனம் ஏற்படுத்துவதானாலும் அரசாங்க அனுமதி பெற்றுத் தொடங்க வேண்டும். அந்த அனுமதியும் முதலில் ஓரு ஆண்டுக்கு, பிறகு இரண்டாண்டுக்குப் பிறகு மூன்றாண்டுக்கு என்று அனுமதி கொடுத்து, இந்த ஆறாண்டு காலத்தில் ஒரு தவறு, எச்சரிக்கைப் பெறுதல் இல்லையானால்தான் காலவரையின்றி அனுமதி கொடுக்க வேண்டும்.

கம்யூனிஸ்டுகள் என்கின்ற பெயரால் எந்தக் கட்சிக்கும் அனுமதி அளிக்கக் கூடாது.

இப்போது இருப்பவைகளைத் தடுத்துவிட வேண்டும். சமுதாய - பொருளாதார சம உரிமைப் பிரச்சார ஸ்தாபனம் என்பதாக மேற்கண்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டு இருக்கலாம். கட்சிகளைத் தடுக்கவோ, ஏற்படுவதை மறுக்கவோ, சமாதானம் சொல்ல வேண்டிய அவசியம் இருக்கக்கூடாது என்பவை போன்ற நிபந்தனை மேற்பார்வை இருக்க வேண்டும்.

பத்திரிகைகளைப் பெரும் அளவுக்குக் கட்டுப்படுத்த வேண்டும். முடிவாக, ஜெயில்களில் வகுப்புகள் இருக்கக் கூடாது. ஒரே வகுப்புதான் இருக்க வேண்டும். இப்போதைக்கு இந்த நிபந்தனைகள் இருக்கலாம். அரசாங்க அதிகாரிகள் மீது அரசாங்கம் எடுத்துக் கொள்ளும் நடவடிக்கைகளுக்கு கவர்னர் முடிவே முடிவானது என்றும், கோர்ட்டுகளுக்கு அதிகாரமில்லையே என்றும் திட்டம் செய்துவிட வேண்டும். எந்தக் காரியத்திற்கும் சட்டம் மீறுதல் இருக்கக் கூடாது. மீறுவதை அசல் கிரிமினல் குற்றமாகவே பாவிக்கப்பட வேண்டும்.

இப்படியான பல திருத்தங்கள் செய்தால் தான் இந்தியாவை இந்தியர் ஆளலாம். அதுவும் அன்னியர் ஆட்சி ஏற்படும் வாய்ப்பு ஏற்படும் வரைதான். இந்தியாவைப் பொருத்தவரையில் இந்த நிலையில் எப்படி இருந்தாலும் நம் நாட்டை நாம் தான் ஆள வேண்டும் என்பது அயோக்கியர்களும் காலிகளும் வாழத்தான் வசதி அளிக்கும்.

“Patriotism is the last refuge of a scoundrel” தேச பக்தி என்பது அயோக்கியனின் கடைசிப் புகலிடம் -ஜான்சன் (பெரியாரின் அறிக்கை, விடுதலை, 28.12.1968)

ஐயா வே. ஆனைமுத்து அவர்கள் தொகுத்த “பெரியார் ஈ.வெ.ரா. சிந்தனைகள்” - இரண்டாம் வரிசை, தொகுதி - 3, அரசியல் - 3, பக்கம் 2093 - 2097-லிருந்து..)

செம்பனார்கோயில் பேச்சு

வெண்மணிக் கொடுமை நடந்தபோது, அத்தீவைப்பை நடத்திய ஆதிக்கக்காரர்களைக் கண்டித்துப் பெரியார் அறிக்கை கொடுக்கவில்லை. வெண்மணி தீ வைப்பிற்குப் பின் 12.1.1969இல் செம்பனார்கோயில் (நாகை மாவட்டம்) பொதுக் கூட்டத்தில் பெரியார் பேசியது, அன்றைய அவரது மனநிலையைக் காட்டுகிறது.

“தஞ்சை மாவட்டத்தில் இடதுசாரி கம்யூனிஸ்ட்டுகள் விவசாய மக்களுக்கு நலன் செய்வது போல அவர் களுக்காகப் பாடுபடுவதுபோல ஏழை எளியவர்களின் வாழ்வை உயர்த்துவது போல மேடைகளிலே பேசுகிறார்கள். உங்கள் கூலியை உயர்த்துவது, வாழ்வை வளமாக்குவது எங்கள் கட்சியேயாகும் எனக்கூறி விவசாய மக்களை ஏமாற்றி, அவர்களைப் பலிவாங்கிக் கொண்டு வருகிறார்கள். கூலி உயர்வு என்பது ஒரு கட்சியால் ஏற்படுவதல்ல. இதனைத் தொழிலாளர்கள் உணர வேண்டும்.

நாட்டில் ஏற்படுகின்ற பொருளாதார மாற்றம், விலைவாசி உயர்வு - பற்றாக்குறை இவை களைக் கொண்டுதான் கூலிகள் உயர்கின்றதே தவிர கட்சிகளால் அல்ல. தொழிலாளர்கள் தங்களுக்குக் கிடைக்கிற பொருளாதாரத்தில் எப்படி வாழவேண்டும் என்பதை கம்யூனிஸ்ட் தோழர்கள் உங்களுக்குக் கூறாமல் நாட்டிலே கலவரத்தையும் புரட்சியையும் ஏற்படுத்தி இன்றைய தினம் வலதானாலும் சரி, இடதானாலும் சரி, அதிதீவிர கம்யூனிஸ்ட்டுகளானாலும் சரி இந்த ஆட்சியினைக் கவிழ்த்துவிட வேண்டுமென்கின்ற முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றனர். அதற்கு விவசாயத் தோழர்களும் மற்ற தொழிலாள நண்பர்களும் இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன்.

நாகை தாலுக்காவிலே கலகம் செய்யத் தூண்டியது கம்யூனிஸ்ட் கட்சி. அதன் காரணமாக 42 பேர் உயிரிழந்தனர். கம்யூனிஸ்ட் கட்சி நமக்கு ஒத்துழைத்த கட்சி என்று அரசாங்கம் சும்மா இருந்து விடவில்லை. தேவையான நடவடிக்கையினை மேற்கொண்டிருக்கின்றது.

நாட்டில் அராஜகத்தைத் தூண்டும் பணியில் கம்யூனிஸ்ட்டுக் கட்சி மிகத் தீவிரமாக ஈடுபட்டிருக்கின்றது. இதற்கு இடம்கொடுக்காமல் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும். கம்யூனிஸ்ட்டுகளின் குறி கீழத்தஞ்சைப் பகுதி பக்கம் திரும்ப இருக்கிறது. இங்குள்ள விவசாயத் தோழர்கள் இங்கு அந்த தீயசக்தி பரவ இடம் கொடுக்கக் கூடாது என்று கேட்டுக் கொள்கின்றேன். இந்த ஆட்சியைப் பலவீனப்படுத்தக் கம்யூனிஸ்ட்டுக் கட்சி ஈடுபட்டுள்ளது. அதற்கு நம் மக்கள் ஆதரவளிக்காமல் இவ்வாட்சிக்குத் தங்களின் ஆதரவினைக் கொடுப்பதன் மூலம் இந்த அரசை மேலும் பலம் பொருந்தியதாக்க வேண்டும்.”

- விடுதலை 20.1.1969.

கூலி உயர்வுப் போராட்டத்தில் பெரியார் நிலக்கிழார்களை ஆதரித்தார் தோழர் அ.கோ. கஸ்தூரிரங்கன் கூற்று

திராவிடர் கழகத்திலிருந்து தான் விலகியது ஏன் என்பதற்கு தோழர் அ.கோ. கஸ்தூரிரங்கன், அளித்த விளக்கம் :

“திராவிட விவசாய சங்க வேலைகளில் தீவிரமாக இருந்த அந்தக் காலகட்டத்தில் தேர்தலில் காமராசரை ஆதரிக்கக் கட்சி (திராவிடர் கழகம்) முடிவெடுத்தது. மிராசுதார்கள் பெரும்பாலும் காங்கிரசுக் காரர்கள். கிராமங்களில் மிராசுதார்களை - அவர்களுடைய ஆதிக்கத்தை எதிர்த்துக் கடுமையாக வேலை செய்து கொண்டிருந்த நேரம்.

“அதே வேளையில் அய்யா சொன்னபடி பச்சைத்தமிழர் காமராசரை ஆதரித்துக் கூட்டத்தில் பேச வேண்டிய நிலைமை. பல இடங்களில் மிராசுதார்கள் கூட்டங்களுக்கு வர மாட்டார்கள். ஏ.ஜி.கே. (அ.கோ.கத்தூரிரங்கன்) வந்தா நான் வரமாட்டேம்பாங்க... பல இடங்களில் நம்ம மேல (மிராசுதார்கள்) தாக்குதல் கொடுத்தாங்க. இதன் உச்ச கட்டமாக அந்தணப்பேட்டை, பாப்பாகோயில் இங்கெல்லாம் நம்ம வீடுகளையெல்லாம் கொளுத்தினாங்க. அப்போ (பெரி யார்) அய்யா நாகப்பட்டினம் வர்றார்..

“.. நாகை அவுரித்திடலில் கூட்டம். ராதா கிருஷ்ண நாயுடுன்னு ஒரு டாக்டர். அவரு மிராசுதார் சார்பா அய்யா விடம் என்னைப் பற்றிக் கடுமையா குறைபட்டிருக்கார்..

“.. அப்ப அந்தக் கூட்டத்திலே பெரியார் அறிவிக்கிறாரு.. ஏ.ஜி.கே. இருக்காரே, கஸ்தூரிரங்கன், அவருக்கும் மிராசுதார்க்கும் நடக்கிற சண்டையிலே நம்ம கழகத்துக்கு எந்த சம்பந்தமுமில்ல அப்படின்னு அறிவிச்சுடறாரு..

“என்னைக் கூப்பிட்டு எதுவுமே கேக்கல..”

“... நாங்கள் 1962 கடைசியில் கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தோம்”.

- வெண்மணிச் சூழல், தோழர் ஏ.ஜி.கே. நேர்காணல், திருவாரூர் நேயம் இலக்கிய இயக்கம் வெளியீடு, 2008, பக்கம் 4 - 6.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Saturday, December 29, 2018

“புயல் துயர் துடைப்புக்கு நிதி வழங்காத நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?” தோழர் பெ. மணியரசன் கேள்வி!

“புயல் துயர் துடைப்புக்கு நிதி வழங்காத நரேந்திர மோடிக்கு முதலமைச்சரும் எதிர்க்கட்சித் தலைவரும் ஏன் அழுத்தம் கொடுக்கவில்லை?” நாகை தொடர் முழக்க ஆர்ப்பாட்டத்தில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
“கசா” புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான துயர் துடைப்புப் பணியில் உடனடியாக ஈடுபடாத இந்திய – தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சி – தமிழ்த்தேசியக் கூட்டமைப்பு சார்பில், இன்று (29.12.2018) காலை முதல் மாலை வரை, நாகையில் தொடர் முழுக்கக் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

நாகை அவுரித் திடலில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் அவர்கள் தலைமை தாங்கினார். நாம் தமிழர் கட்சித் தலைமை ஒருங்கிணைப்பாளர் திரு. செந்தமிழன் சீமான் சிறப்புரையாற்றினார். நாம் தமிழர் கட்சி மாநில ஒருங்கிணைப்பாளர்கள் திரு. “தமிழ் முழக்கம்” சாகுல் அமீது, திரு. அன்புத் தென்னரசன் உள்ளிட்ட நா.த.க. பொறுப்பாளர்கள் முன்னிலை வகித்தனர்.

தமிழக மக்கள் சனநாயகக் கட்சித் தலைவர் திரு. கே.எம். செரீப், தமிழர் நலம் பேரியக்கத் தலைவர் இயக்குநர் மு. களஞ்சியம், ஆதித்தமிழர் விடுதலை இயக்கத் தலைவர் திரு. வினோத், தமிழர் தேசிய விடுதலைக் கழகத் தலைவர் திரு. ஆ.கி. ஜோசப் கென்னடி, காவிரி விவசாயிகள் பாதுகாப்பு சங்கத் தலைவர் திரு. காவிரி தனபாலன், வேதாரண்யம் வட்ட விவசாயிகள் சங்கத் தலைவர் திரு. டி..வி. இராசன், செயலாளர் திரு. தா. ஒளிச்சந்திரன், நடிகர் மன்சூர் அலிகான், மருது மக்கள் இயக்கத் தலைவர் தோழர் முத்துப்பாண்டியன் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும், நாம் தமிழர் கட்சிப் பொறுப்பாளர்களும் பங்கேற்று உரையாற்றினர்.

தலைமையுரை ஆற்றிய ஐயா பெ. மணியரசன் அவர்கள் பேசியதன் எழுத்து வடிவம்:

“கசா புயல் துயர் துடைப்பில் உடனடியாக ஈடுபடாத இந்திய - தமிழ்நாடு அரசுகளைக் கண்டித்து நாம் தமிழர் கட்சியின் முன்னெடுப்பில் நடைபெற்று வரும் இந்தத் தொடர் முழக்கக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பங்கெடுத்திருக்கும் அன்பிற்குரிய தமிழ்ச் சொந்தங்களே, உங்கள் அனைவருக்கும் வணக்கம்!

மிக எழுச்சியோடு - ஒரு மாநாடு போல் நடந்து கொண்டிருக்கும் இந்தப் போராட்டம், “கசா” புயல் ஏற்படுத்திய பேரழிவின் போது சரிவரி துயர் துடைப்புப் பணிகளில் ஈடுபடாத இந்திய அரசையும், தமிழ்நாடு அரசையும் கண்டித்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இனியாவது அவர்கள் துயர் துடைப்புப் பணிகளில் சரியாக செயல்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து நடக்கிறது.

புயல் வருவதற்கு முன்பாக தமிழ்நாடு அரசு, முன்கூட்டியே மின் இணைப்பைத் துண்டித்து சரியாகவே செயல்பட்டார்கள். ஆனால், அதன்பிறகு, நடந்த புயல் துயர் துடைப்புப் பணிகள் – செப்பனிடும் பணிகள் மிக மிக மோசமாக உள்ளன.

சில இடங்களில் இன்னும்கூட மரங்கள் வீழ்ந்து கிடக்கின்றன. அவற்றை அப்புறப்படுத்துவதற்கு, வீடுகளின் மீதுள்ள கூரைகளில் விழுந்து கிடக்கும் மரங்களை அகற்றுவதற்கு அரசு சார்பில் என்ன ஏற்பாடுகளைச் செய்திருக்கிறார்கள்? தனியாக சில நண்பர்கள் தன்னார்வ முயற்சியில் அதற்குரிய கருவிகளைக் கொண்டு வந்து இறக்கினார்கள். ஒரு தோப்பே வீழ்ந்து கிடக்கும்போது, அந்த நில உரிமையாளர் தனியாக அவற்றை அகற்றிட முடியுமா? இவற்றையெல்லாம் கணக்கிலெடுக்காமல் தமிழ்நாடு அரசு என்ன துயர் துடைப்புப் பணிகள் மேற்கொள்கிறது?

புயல் நடந்த போது, நான் வட அமெரிக்காவில் இருந்தேன். தொலைக்காட்சி வழியாக அதன் பாதிப்புகளைப் பார்த்தேன். நாம் தமிழர் கட்சியினர் பல்வேறு இடங்களில் துயர் துடைப்புப் பணிகளில் இறங்கியதைப் பார்த்தேன். நான் சார்ந்துள்ள தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பிலும் பல பகுதிகளில் துயர் துடைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டன. ஆனால், இந்திய – தமிழ்நாடு அரசுகள் என்ன செய்தன?

எந்த அரசியலுக்கும் அப்பாற்பட்டவர்கள் பெருமளவில் உதவிகளைச் செய்தார்கள். தமிழ்ச்சமூகம் இன்றைக்கு முன்பைவிட அதிகளவில் விழிப்புணர்ச்சி பெற்று வளர்ந்துள்ளது. எனவேதான், அரசை நம்பாமல் - அரசை சார்ந்திருக்காமல், தாங்களாகவே உதவ வேண்டும் என்ற எண்ணத்தோடு தமிழ்ச்சமூகத்தின் இளைஞர்கள் களத்தில் இறங்கி அக்கறையுடன் பணி செய்தார்கள்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, உலக நாடுகளில் வாழும் தமிழர்களெல்லாம் நம்மைக் கூர்ந்து பார்த்துக் கொண்டிருக்கிறாகள். வடஅமெரிக்காவில் நான் இருந்தபோது, அங்கிருந்த தமிழ் இளைஞர்கள், நாம் தமிழர் இயக்கத் தோழர்கள் துடிப்போடு செயல்பட்டு, துயர் துடைப்புப் பணிகளுக்காக நிதி சேகரித்து அனுப்பி வைத்தார்கள். நம் தமிழ்ச்சமூகம் சர்வதேசமயமாகி வருவதன் வெளிப்பாடு இது! நம் சமூகம் புதிய மாறுதலுக்கு உள்ளாகி இருப்பதன் அடையாளம் இது!

அயல் நாடுகளில் பணிபுரியச் சென்றுள்ள நம் தமிழ்ச் சொந்தங்கள், அந்தந்த நாடுகளில் அந்தந்த இனத்தின் பெருமைகளை – சாதனைகளைப் பேசுவதைக் கேட்கிறார்கள். அவற்றையெல்லாம் பார்க்கும் நம் சொந்தங்களுக்கு, தமிழ் இனத்தில் பெருமைகளும், சாதனைகளும், சிறப்புகளும் நெஞ்சில் தைக்கிறது! எனவே, அதிக ஆர்வத்தோடு தமிழ்நாட்டை உற்று நோக்குகிறார்கள்.

பழைய காலம் போல் இன்றைக்கு பெயர் பெற்ற தலைவர்கள் - பூதந்தாங்கி பட்டங்களைச் சுமந்த அரசியல் தலைவர்கள் சொன்னால்தான் - வழிகாட்டினால்தான் நடக்கும் என்ற நிலைமை இப்போது இல்லை! ஏதோ தேர்தலின்போது, அவர்களுக்கு வாக்குப் போடுவதோடு இருக்கிறார்கள். அந்த நிலையிலும் மாற்றம் வரும்; வர வேண்டும்!

துயர் துடைப்புப் பணிகளில் உதவியதோடு மட்டுமல்ல, தன்னெழுச்சி நம் மக்கள் போராட்டங்களிலும் ஈடுபடுகிறார்கள். நெடுவாசல், கதிராமங்கலம் போராட்டங்கள் அதைத்தான் காட்டுகிறது. இதோ, இப்போது வேளாண் விளை நிலங்கள் வழியாக மின் கோபுரங்கள் அமைக்கப்படுவதை எதிர்த்து, கொங்கு மண்டலத்தில் உழவர் பெருமக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள். எட்டுவழிச் சாலைக்கு எதிராக தமிழ் மக்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

பெயர் பெற்ற அரசியல் கட்சிகளுக்குக் காத்திராமல், தாங்களே களம் காணும் புதிய அத்தியாயத்தை தமிழ் மக்கள் திறந்துவிட்டுள்ளார்கள்!

இந்த நிலையிலும்கூட ஆடாமல் அசையாமல் சரியாகப் பணி செய்யாமல் இருக்கிறது ஆளும் அ.தி.மு.க. அரசு!

நரேந்திர மோடி அரசு, தமிழ் மக்களின் துயரத்தைப் பகிர்ந்து கொள்ள ஒரு அறிக்கைக் கூட விடவில்லை! ஏன்? தமிழர்கள் மீது – தமிழ் மக்கள் மீது அவர்களுக்குக் காழ்ப்புணர்ச்சி - பாகுபாட்டு உணர்ச்சி இருக்கிறது. அதுதான், அவ்வப்போது இவ்வாறு வெளிப்படுகிறது!

இந்த புயல் துயரத்தை நரேந்திர மோடி ஏன் வந்து நேரில் பார்க்கவில்லை? நமக்கும் சேர்த்துதான் அவர் தலைமை அமைச்சராக இருக்கிறார் என்று நாம் நம்புகிறோம். ஆனால் மோடியின் அடிமனம் தமிழர்களை அவர்களில் ஒருவராக ஏற்கவில்லை. எனவே, அலட்சியப்படுத்துகிறார்கள்!

நரேந்திர மோடியிடம் புயல் பாதிப்புகளுக்காக தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்கள் 15,000 கோடி ரூபாய் கேட்டார். ஆனால், இப்போது வரை வெறும் 353 கோடி ரூபாயைத்தான் கொடுத்திருக்கிறார்கள். நடுவண் வேளாண் அமைச்சகம் 173 கோடி ஒதுக்கியுள்ளது. “ஏன் எங்களை வஞ்சிக்கிறீர்கள்? ஏன் எங்களுக்கு நிதி வழங்க மறுக்கிறீர்கள்” என தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி அவர்களே, நீங்கள் ஏன் கேட்கவில்லை?

மோடியைக் கேட்டால், அவரது முகம் உரிந்துவிடுமோ என்று அச்சப்படுகிறார் எடப்பாடி! எட்டுக் கோடி மக்களுக்கு முதல்வராக நீடிக்க உங்களுக்குத் தகுதி இருக்கிறதா?

கேரளாவில் வெள்ளம் ஏற்பட்டபோது, அதன் முதலமைச்சர் மோடியை விடாப்பிடியாக தொடர்பு கொண்டு, நிதி பெற்றாரே.. அவரை வெள்ளச் சேதங்களைப் பார்வையிட அழைத்து வந்தாரே.. எடப்பாடி அவர்கள், இதுபோல் முயற்சி எடுத்தாரா?

இப்போது, “கசா” புயலால் ஏற்பட்டிருக்கும் பாதிப்பு சாதாரணமானது அல்ல! நாங்கள் புயல் பாதிப்புகளைப் பார்வையிடச் சென்றபோது, அங்கிருந்த பெரியவர்களிடம் கேட்டோம். 1957க்குப் பிறகு, இப்போது ஏற்பட்டுள்ள புயல்தான் மிக மிகக் கடுமையான பாதிப்புகளை ஏற்படுத்தியதாக அவர்கள் சொன்னார்கள். இதைவிடப் பெரிய அழிவு வேறென்ன வேண்டும்? இது பேரிடர் அல்ல பேரழிவு என்கிறோம்!

இந்த புயல் பாதிப்பை, ஏன் “தேசியப் பேரிடராக” இந்திய அரசு அறிவிக்கவில்லை? உங்கள் இந்தியத்தேசியத்தில் தமிழ்நாடு வராதா?

நரேந்திர மோடியை இப்படி வஞ்சிக்கிறார். இன்னொருபுறத்தில், அடுத்த தலைமையமைச்சர் என காங்கிரசுத் தலைவர் இராகுலை அழைக்கின்றார்களே! அவர் தமிழ்நாட்டிற்கு வந்து புயல் பாதிப்புகளைப் பார்வையிட்டாரா? அகில இந்திய காங்கிரசுத் தலைவர்கள் யாராவது வந்தார்களா? ஏன் வரவில்லை?

இந்த இலட்சணத்தில், தி.மு.க. செயல் தலைவர் ஸ்டாலின், அவரது தந்தை கலைஞர் கருணாநிதி இந்திரா காந்தி அம்மையாரை “இந்தியாவின் திருமகளே வருக! நல்லாட்சி தருக!” என்றாரே, அதைப்போல் இப்போது “இராகுலே வருக! நல்லாட்சித் தருக!” என அழைக்கின்றார். தமிழ்நாட்டுக்குக் காங்கிரசும், அதன் தலைவர்களும் என்ன செய்தார்கள்? இவர்கள்தான் மாற்று என்பது ஏமாற்றில்லையா?

தி.மு.க. வேண்டுமானால் கசா புயல் பாதிப்புக்காக சில உதவிகளை – நிதியை அளித்திருக்கலாம். ஆனால், தமிழ்நாடு முதலமைச்சர் 15,000 கோடி ரூபாய் கேட்டு மோடியிடம் கோரிக்கை வைத்தாரே! அந்தத் தொகையைத் தாருங்கள் என்று இந்திய அரசுக்கு – நரேந்திர மோடிக்கு தி.மு.க. செயல் தலைவரும், எதிர்கட்சித் தலைவருமான மு.க. ஸ்டாலின் என்ன அழுத்தம் கொடுத்தார்? என்ன போராட்டம் நடத்தினார்? என்ன குரல் கொடுத்தார்?

எனவே, நீங்கள் இருவரும் ஒன்றாகவே இருக்கின்றீர்கள்! செல்லா நாணயத்தின் இருபக்கங்களாக தி.மு.க.வும் – அ.தி.மு.க.வும் இருக்கின்றன! நீங்கள் ஒருவரை ஒருவர் குற்றம்சாட்டிக் கொண்டு, தில்லியை தப்பிக்க விடுகின்றீர்கள்!

காங்கிரசும் பா.ச.க.வும் ஒன்றே! காங்கிரசுக்கு இன்னொரு பெயர்தான் - பா.ச.க.! இந்தியத்தேசியத்தின் இன்னொரு பெயர்தான் இந்துத்துவம்! அதுபோல், தில்லியின் கங்காணிதான் திராவிடம்!

இம்மூவரும் நம்மை – தமிழ் மக்களைக் கைவிட்டுவிட்டார்கள். எனவேதான், நாம் களத்தில் இறங்கிச் செயல்பட வேண்டியுள்ளது. நாங்கள் தமிழ் மக்களைக் கைவிட மாட்டோம்!

எனக்கு முன்னால் பேசிய அன்புத்தோழர் சீமான், புயலால் பாதிக்கப்பட்ட இடங்களில் வீடுகள் கட்டிக் கொடுக்கும் பணியில் ஈடுபட்டபோது, சிலரது வீடுகளில் உதயசூரியன் சின்னம் வரையப்பட்டிருப்பதை அவர்களது தோழர்கள் சுட்டிக்காட்டியதைச் சென்னார். “அதனால் என்ன தம்பி? அவர்களும் நம் தமிழர்கள்தானே!” என்றார். இவ்வாறு நாம் தமிழர்களைக் கட்சி கடந்து நேசிக்கிறோம் அல்லவா? இதுதான் இங்கு தேவை!

இவ்வளவு பெரிய பேரிடர் தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் நிலையில், ஏன் இந்திய அரசு உடனடியாக மீட்புப் பணிகளுக்கு இந்திய இராணுவத்தை இறக்கவில்லை? இராணுவம் வந்திருந்தால், ஒரு வாரத்தில் மின் கம்பங்களை மீட்டு, மின் விநியோகத்தை சீரமைத்திருக்கலாம் அல்லவா? ஏன் செய்யவில்லை?

இன்னும்கூட, பல பகுதிகளில் பம்பு செட்டுகளுக்கு மின்சாரம் இல்லை! வயல் காடுகளில் பயிர்களுக்கு தண்ணீர்ப் பாய்ச்ச, ஆழ்குழாய் கிணறுகளுக்கு மின்சார இணைப்பு கொடுக்கப்படவில்லை.

ஒட்டு மொத்தத் தமிழ்நாட்டையும் இராணுவ மண்டலமாக்கி, தொழிற்சாலைகளை ஆங்காங்கு வைத்து, தமிழர்களைக் கண்காணிப்பில் வைக்கத் திட்டமிடுகின்ற இந்திய அரசு, மீட்புப் பணிகளுக்கு இந்திய இராணுவத்தை இறக்க சிந்திக்கவில்லையே ஏன்? தமிழ்நாடு முதலமைச்சர் ஏன் அவ்வாறு கோரிக்கை வைக்கவில்லை? மீட்புப் பணிகளுக்கு இராணுவத்தைக் கேட்டு கோரிக்கை வைத்தால், தன் வீட்டிற்கு ரெய்டு வரும், வழக்கு வரும், சிறைக்குச் செல்லவும் நேரிடலாம் என்று எடப்பாடியார் அச்சப்படுகிறாரா?

இவ்வளவு நடந்தபிறகும், இப்போது அறிவிக்கப்பட்டிருக்கும் துயர் துடைப்புத் தொகையும் முழுமையானதாக இல்லை. நெற்பயிர் சேதத்துக்கு ஒரு ஏக்கருக்கு 25,000 ரூபாய் வழங்க வேண்டும். எட்டுவழிச் சாலையைக் கொண்டு வரும்போது, ஒரு தென்னை மரத்திற்கு 40,000 முதல் 50,000 ரூபாய் வரை விலை பேசினீர்களே! இப்போது, வெறும் 1,100 ரூபாயைக் கொடுத்தால் என்ன ஞாயம்? தென்னையை வெட்டி எடுக்கவே 1000 ரூபாய் வரைத் தேவைப்படுகிறது. எனவே, ஒரு தென்னை மரத்திற்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது வழங்க வேண்டும்.

உழவர்களின் பயிர்க்கடன்கள் அனைத்தையும் தள்ளுபடி செய்ய வேண்டும். கடந்த ஆண்டு, கடன் தள்ளுபடியின் போது தமிழ்நாடு அரசு ஐந்து ஏக்கர் வரம்பு விதித்தது. அதை மதுரை உயர் நீதிமன்றத்தில் நீக்கியபோது, அதற்கு எதிராக உச்ச நீதிமன்றம் வரை சென்று வாதாடி, ஐந்து ஏக்கர் வரம்பை உறுதிப்படுத்தியது தமிழ்நாடு அரசு! அவ்வாறெல்லாம் இல்லாமல், இப்போது அனைவருக்கும் வரம்பின்றி கடன் தள்ளுபடி செய்ய வேண்டும். பெரிய நிலம் வைத்திருப்பவர்களுக்கு அதற்கேற்ப பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. எனவே, பாரபட்சம் காட்டாமல் அனைவருக்கும் கடன்களைத் தள்ளுபடி செய்ய வேண்டும்.

பன்னாட்டு நிறுவனங்களுக்கும், வடநாட்டு பெருமுதலாளிகளுக்கும் வாராக் கடன் என்ற பெயரில் பல இலட்சம் கோடி ரூபாய் கடன்களை தள்ளுபடி செய்கின்றீர்களே, ஏன் உழவர்களுக்கு இந்த துயரமான நேரத்தில் கடன் தள்ளுபடி செய்யக்கூடாது?

உழவர்களுக்கு அளிக்கப்படும் கடன் தள்ளுபடி என்பது சலுகையோ, பிச்சையோ அல்ல! தங்களது நெல்லுக்கும், பருத்திக்கும், சர்க்கரைக்கும் வழங்கப்பட வேண்டிய உண்மையான விலையைக் குறைத்து, அவர்களது அடிவயிற்றில் அடித்து குறைந்த விலைக்கு வாங்குகிறீர்களே! அதனுடன் கொடுக்கப்படாத விலையின் ஒருபகுதியைத்தான் (Deffered Price) அவர்கள் கடன் தள்ளுபடியாகக் கேட்கிறார்கள். எனவே, உழவர்களுக்குக் கடன் தள்ளுபடி செய்ய வேண்டும்.

உழவுத் தொழிலாளின் வீடுகள் பெரும் சேதமடைந்துள்ளன. அவர்களுக்கு இப்போது உழவு வேலையும் இல்லை. எனவே, அவர்களது குடும்பங்களுக்கு குறைந்தபட்சம் 15,000 ரூபாயாவது இழப்புத் தொகை அளிக்க வேண்டும்.

இதையெல்லாம் செய்யாமல் என்ன துயர் துடைப்புப் பணி இருக்கிறது? எனவே, தமிழ்நாடு அரசு இவற்றையெல்லாம் செய்ய வேண்டும்! இந்திய அரசிடம் அதற்குரிய நிதியைக் கேட்க வேண்டும்!”

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் பேசினார்.
தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை, தலைமைச் செயற்குழு தோழர்கள் க. விடுதலைச்சுடர், தை. செயபால், பழ. இராசேந்திரன், தஞ்சை மாநகரச் செயலாளர் தோழர் இலெ. இராமசாமி, திருச்சி மாநகரச் செயலாளர் தோழர் மூ.த. கவித்துவன், பூதலூர் ஒன்றியச் செயலாளர் தோர் பி. தென்னவன், மகளிர் ஆயம் தோழர் செம்மலர், தஞ்சை மாவட்டச் செயற்குழு” தோழர்கள் இரெ. கருணாநிதி, க. காமராசு, இரா.சு. முனியாண்டி உள்ளிட்ட திரளான பேரியக்கத் தோழர்கள் பங்கேற்றனர். திரளான தமிழின உணர்வாளர்களும், பொது மக்களும் பங்கேற்றனர்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Tuesday, December 25, 2018

புதிதாக வரவுள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 90% வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

புதிதாக வரவுள்ள தனியார் தொழில் நிறுவனங்களில் மண்ணின் மக்களுக்கு 90% வேலை வழங்கிட தமிழ்நாடு அரசு நிபந்தனை விதிக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை!
நேற்று (24.12.2018) கூடிய தமிழ்நாடு அமைச்சரவை, 16,000 கோடி ரூபாய் முதலீட்டில் 16 தனியார் தொழிலகங்கள் தமிழ்நாட்டில் நிறுவிட அனுமதி கொடுப்பது என்று முடிவு செய்துள்ளது. இதன் மூலம், 34 ஆயிரம் பேருக்கு வேலை கிடைக்கும் என்றும் அரசுத் தரப்பில் சொல்லப்பட்டுள்ளது. இப்பதினாறு தொழிலகங்களில் தென் கொரியா தொழிலகங்கள் இரண்டின் பெயர் மட்டும் சொல்லப்பட்டுள்ளது.

இத்தொழிலகங்களுக்கான அனுமதியை வழங்கும்போது, அவை தமிழ்நாட்டின் சுற்றுச்சூழலைக் கெடுக்கும் வகையிலான தொழில்நுட்பங்களைக் கொண்டு இயங்கும் நிறுவனங்களா என்பதையும், அந்நிறுவனத்தின் கடந்த கால வரலாற்றையும் பார்த்து, அதற்கேற்ப தமிழ்நாடு அரசின் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் அனுமதி வழங்க வேண்டும். ஆபத்தான தொழில் நுட்பம் எனில், அத்தொழிலகங்களுக்கு தொடக்கத்திலேயே அனுமதி மறுக்க வேண்டும்.

இப்போது வரவுள்ள புதிய தொழிலகங்கள், தமிழ்நாட்டின் மண்ணின் மக்களின் தொழில் – வளர்ச்சிக்கு வாய்ப்பளிக்கக்கூடிய வகையில் இருக்குமா என்பதும் ஐயமாக உள்ளது.

பன்னாட்டு மற்றும் வெளி மாநில நிறுவனங்களுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும் என்பது போல் தெரிகிறது. அப்படியென்றால், தொழில் துறை வளர்ச்சியில் தமிழ்த் தொழில் முனைவோர் மேலும் மேலும் பின்னுக்குத் தள்ளப்படக் கூடிய சூழல் உருவாகும்!

இதுவொருபுறம் இருக்க, 34,000 பேருக்கான வேலை வாய்ப்பில் தமிழ்நாட்டின் மண்ணின் மக்களுக்கு முன்னுரிமை தரப்படுமா என்பது பற்றி எதுவும் கூறப்படவில்லை. தமிழ்நாட்டில் உரிய தகுதி பெற்று 90 இலட்சம் பேருக்கு மேல் வேலை தேடி வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துவிட்டு காத்திருக்கிறார்கள்.

தமிழ்நாட்டு தனியார் வேலை வாய்ப்புகளில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்கு வழங்க வேண்டுமென்று தமிழ்த்தேசியப் பேரியக்கம், தொடர்ந்து போராட்டங்கள் நடத்தியும், மாநாடு மற்றும் கூட்டங்கள் நடத்தியும், தமிழ்நாடு அரசை வலியுறுத்தி வருகிறது. இதுகுறித்த ஆவணத்தை தமிழ்நாடு முதலமைச்சர் திரு. எடப்பாடி பழனிச்சாமி அவர்களிடமும் வழங்கியுள்ளோம். கர்நாடகம், குசராத், மகாராட்டிரம், மத்தியப்பிரதேசம், சட்டீஸ்கர் உள்ளிட்ட மாநிலங்களில் மண்ணின் மக்கள் வேலை முன்னுரிமைக்கு சட்ட ஏற்பாடு இருப்பதுபோல், தமிழ்நாட்டில் சட்டம் இயற்ற வேண்டுமென தமிழ்த்தேசியப் பேரியக்கம் கோரி வருகிறது.

அண்மையில், மத்தியப்பிரதேசத்தில் புதிதாக ஆட்சிப் பொறுப்பேற்ற காங்கிரசு முதலமைச்சர் கமல்நாத், மத்தியப்பிரதேச மக்களுக்கு 70 விழுக்காடு வேலை அளிக்கும் நிறுவனங்களுக்குத் தான் தொழில் துறையில் ஊக்கங்களும், சலுகைகளும் அளிக்கப்படும் என அறிவித்தார்.

இந்தியாவில் மற்ற மாநிலங்களில் இவ்வளவு முன்னெடுத்துக்காட்டுகள் இருந்தும்கூட, தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பில் முன்னுரிமை வழங்கும் சட்ட ஏற்பாடு செய்யாதிருப்பது கடும் கண்டனத்திற்குரியது.

எனவே, புதிதாக உருவாக்கப்படும் 34,000 வேலைகளில் 90% வேலைகளைத் தமிழர்களுக்கு வழங்கும் நிறுவனங்களுக்கு மட்டும்தான் அரசு அனுமதியும், சலுகைகளும் தர வேண்டும். அதற்கான சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களைத் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, December 24, 2018

மேக்கேதாட்டு அனுமதி குறித்த நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது! தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாறக்கூடாது! பெ. மணியரசன் எச்சரிக்கை!

மேக்கேதாட்டு அனுமதி குறித்த நிதின் கட்கரியின் கடிதம் தந்திரமானது! தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் ஏமாறக்கூடாது! காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் பெ. மணியரசன் எச்சரிக்கை!
காவிரியின் குறுக்கே மேக்கேதாட்டுவில் கர்நாடகம் அணை கட்டுவதற்குரிய விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க நடுவண் அரசின் சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அமைச்சகம் அண்மையில் அனுமதி வழங்கியது. இந்த அனுமதி தமிழ்நாட்டு மக்களிடையே பெரும் கவலையையும், பதட்டத்தையும் உண்டாக்கியது.

இதற்குக் கண்டனம் தெரிவித்தும், இந்த அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தியும் கடந்த 18.12.2018 அன்று தஞ்சையில் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் டெல்டா மாவட்டங்களைச் சேர்ந்த உழவர்களும், உணர்வாளர்களும் பல்லாயிரக்கணக்கில் திரண்டு மாபெரும் கண்டனப் பேரணி நடத்தினார்கள்.

நாடாளுமன்றத்தில் தமிழ்நாட்டின் மக்களவை மற்றும் மாநிலங்களவை உறுப்பினர்கள் மேக்கே தாட்டு அணை கட்டும் அனுமதியைத் திரும்பப் பெற வலியுறுத்தித் தொடர்ந்து போராடி வருகிறார்கள்; நாடாளுமன்றச் செயல்பாட்டை முடக்கி வருகிறார்கள்.

இந்நிலையில், நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களுக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். அதில், இந்தச் சிக்கலைப் பேசி சுமூகமாகத் தீர்த்துக் கொள்ளலாம் என்றும், அது தொடர்பாகப் பேசுவதற்கு வருமாறும் நாடாளுமன்றத்தில் நடக்கும் போராட்டத்தை உடனடியாகக் கைவிடுமாறும் கூறியுள்ளார்.

அந்தக் கடிதத்தில், மேலும் அவர் மேக்கேதாட்டு அணை பாசனத்திற்கான நீர்த்தேக்கம் அல்ல என்றும், குடிநீருக்காகவும் மின்சார உற்பத்திக்காகவும்தான் என்று கர்நாடகம் கூறியுள்ளது. அதனால்தான் விரிவான திட்ட அறிக்கை தயாரித்து அளிக்க அனுமதி அளித்தோம். காவிரி வழக்கில் உச்ச நீதிமன்றம் அளித்தத் தீர்ப்பின்படி 4.75 ஆ.மி.க. (டி.எம்.சி.) தண்ணீர் கூடுதலாகக் கர்நாடகத்துக்குக் கொடுக்க வேண்டியுள்ளது என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டுமென நிதின் கட்கரி கூறியுள்ளார்.

நான்கு மாநிலங்களின் கருத்தொற்றுமை அடிப்படையில்தான் இந்திய அரசு அணை கட்ட அனுமதி அளிக்கும். எனவே, தமிழ்நாட்டு நாடாளுமன்ற உறுப்பினர்கள் போராட்டத்தைக் கைவிட்டுப் பேச்சுவார்த்தைக்கு வருமாறு கேட்டுக் கொள்கிறேன் என்று கூறியுள்ளார்.

கர்நாடகம் மேக்கேதாட்டு அணைக்கான திட்ட அறிக்கை தயாரிக்க கொடுத்த அனுமதியை திரும்பப் பெறாமலேயே நிதின் கட்கரி பேச்சுவார்த்தைக்கு அழைக்கிறார். அத்துடன், கர்நாடகம் அணை கட்டுவது பாசன நீரைத் தேக்குவதற்கு அல்ல, குடிநீருக்காகவும் மின்சாரம் தயாரிப்பதற்காகவும்தான் என்று நிதின் கட்கரி கூறுகிறார். கர்நாடக அரசு சூதாகச் சொல்லும் கூற்றை நடுவண் அமைச்சர் நிதின் கட்கரியும் அப்படியே கூறுவது நமக்கு அதிர்ச்சி அளிக்கிறது!

தந்திரமாகத் தமிழ்நாட்டின் கவனத்தைத் திசைத்திருப்பி மேக்கேதாட்டு அணைக் கட்டுமான வேலைகளுக்கு தடங்கல் இல்லாமல் இந்திய அரசு பார்த்துக் கொள்கிறதோ என்ற வலுவான ஐயம் நமக்கு எழுகிறது.

எனவே, நடுவண் அரசு விரித்துள்ள வலையில் தமிழ்நாடு அரசும், அ.இ.அ.தி.மு.க. – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்களும் விழுந்துவிடாமல் எச்சரிக்கையாகச் செயல்பட வேண்டும். விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கர்நாடகத்துக்குக் கொடுத்த அனுமதியைத் திரும்பப் பெறாத வரையில், அ.தி.மு.க. – தி.மு.க. நாடாளுமன்ற உறுப்பினர்கள் தங்களின் நாடாளுமன்ற முடக்கப் போராட்டத்தைக் கைவிட வேண்டியதில்லை என்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002 
Fb.com/KaveriUrimai 
#SaveMotherCauvery

Wednesday, December 19, 2018

மத்தியப்பிரதேசத்தில் மண்ணின் மக்களுக்கே வேலை! தமிழ்நாட்டு இனத்துரோகிகள் திருந்துவார்களா? தோழர் பெ. மணியரசன்.

மத்தியப்பிரதேசத்தில் மண்ணின் மக்களுக்கே வேலை! தமிழ்நாட்டு இனத்துரோகிகள் திருந்துவார்களா? தோழர் பெ. மணியரசன் - தலைவர், தமிழ்த்தேசியப் பேரியக்கம்.
மத்தியப் பிரதேச காங்கிரசு முதலமைச்சர் கமல்நாத் பதவியேற்ற சில மணி நேரத்தில், “மத்தியப் பிரதேசத்தின் வேலை வாய்ப்புகளை உத்திரப்பிரதேசம், பீகார் போன்ற மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் பறித்துக் கொள்கிறார்கள்; மண்ணின் மக்கள் வேலை இல்லாமல் அலைகிறார்கள். இந்தச் சிக்கலைத் தீர்க்க, மண்ணின் மக்களுக்கு 70% வேலை கொடுக்கும் தொழிற்சாலைகளுக்குத்தான் ஊக்கத் தொகை உள்ளிட்ட சலுகைகள் வழங்கப்படும்” என்று அறிவித்தார்.
 
.இது ஒன்றும் புதிய அறிவிப்பு அல்ல! மத்தியப் பிரதேசத்தின் “தொழில்துறை கொள்கை”யின் 2010ஆம் ஆண்டு திருத்தங்களின்படி, குறைந்தபட்சம் 50 விழுக்காடு மண்ணின் மக்களுக்கு வேலை கொடுக்கும் நிறுவனங்களுக்குதான் ஊக்கத் தொகை வழங்கப்பட்டு வருகிறது. அதை 70 விழுக்காடாக உயர்த்தி கமல்நாத் அறிவித்துள்ளார்.
 
தமிழ்த்தேசியப் பேரியக்கம் மண்ணின் மக்களுக்கே வேலை என்று முழக்கமிட்டால், எம்மை இனவெறியர்கள் என்று முத்திரை குத்தும் இந்தியத்தேசியவாதிகளும், இடதுசாரிகளும் சிந்திக்க வேண்டும்.
 
உத்திரப்பிரதேசம், பீகார், மத்தியப்பிதேசம் மூன்றும் இந்தி மொழி மாநிலங்கள்! இந்தியத்தேசியம் பேசும் காங்கிரசு முதலமைச்சர், தன் மாநில மக்கள் வேலையின்றித் தவிக்கும்போது பிற இந்தி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள் மத்தியப் பிரதேசத்தின் தனியார் துறை வேலை வாய்ப்புகளைப் பறித்துக் கொள்ளக் கூடாது என்று கூறி, அதற்கான தீர்வையும் அறிவித்துள்ளார்.
 
பீகார், உத்திரப்பிரதேசம் மாநிலங்களைச் சேர்ந்த பா.ச.க.வினரும், சமாஜ்வாதி கட்சியினரும், கமல் நாத்தின் இந்த முடிவை கடுமையாகக் கண்டனம் செய்துள்ளார்கள். இந்தக் கண்டனங்களுக்கு பீகார் மாநில காங்கிரசுக் கட்சியின் செயல் தலைவர் கௌகாப் காத்திரி, அந்தந்த மாநில மக்களுக்கு வேலை கொடுப்பது அந்தந்த மாநில அரசின் முன்னுரிமை என்றும் கமல்நாத் அறிவிப்பில் தவறில்லை என்றும் மறுமொழி கூறியுள்ளார்.
 
அவர் அதோடு நிற்காமல், பீகார் மாநிலத்தில் மண்ணின் மக்களுக்கு வேலை வாய்ப்பை உறுதி செய்யும் திட்டங்களை பீகார் மாநில அரசு செயல்படுத்த வேண்டுமென்றும் கோரிக்கை வைத்துள்ளார்.
 
குசராத்தில், மண்ணின் மக்களுக்கே வேலை என 1995ஆம் ஆண்டிலிருந்து அரசாணை செயலில் உள்ளது. 2017ஆம் ஆண்டு மே மாதம் (08.05.2017), அந்த ஆணையைக் கடைபிடிக்காத இந்திய அரசின் இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்திற்கு எதிராக, குசராத் இளைஞர்கள் அம்மாநில உயர் நீதிமன்றத்தில் தொடுத்த வழக்கில், குசராத் மாநில அரசு தானும் சேர்ந்து கொண்டு, மண்ணின் மக்களுக்குத்தான் வேலை அளிக்க வேண்டும் என வாதிட்டு வருகிறது.
 
தமிழர்களே - இளைஞர்களே புரிந்து கொள்ளுங்கள்!
 
தமிழ்நாட்டில் நடுவண் அரசு நிறுவனங்கள் மற்றும் அலுவலகங்களில் 90 விழுக்காடு வேலை தமிழர்களுக்குத்தான் தர வேண்டுமென்றும், தமிழ்நாடு அரசுத் துறையில் 100 விழுக்காட்டு வேலைகளையும், தனியார் துறையில் 90 விழுக்காட்டு வேலைகளையும் தமிழர்களுக்குத்தான் தர வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராடி வருகிறது.
 
இங்குள்ள இடதுசாரிகளும், இந்தியத்தேசியவாதிகளும் இந்தக் கோரிக்கையை எதிர்க்கிறார்கள். அவர்கள் பேச்சைக் கேட்டால், மண்ணின் மக்களாகிய தமிழர்கள் தங்கள் வேலை வாய்ப்பு உள்ளிட்ட அனைத்து வளங்களையும் அயல் மாநிலத்தவர்க்கு வழங்கிவிட்டு, அகதிகளாக வேலை தேடி அலைய வேண்டிய அவலம்தான் மிஞ்சும்! பிறந்த இனத்திற்குத் துரோகம் செய்யும், அந்தக் குழப்ப வாதிகளின் சீர்குலைவுக் கருத்துகளுக்கு செவி கொடுக்காதீர்கள்!
 
திராவிட ஆட்சிகள் செய்தது என்ன?

இந்தியாவின் பிற மாநிலங்களில் மண்ணின் மக்களுக்கே வேலை என சட்டங்களும், ஆணைகளும் இயற்றப்பட்டுள்ள நிலையில், தமிழ்நாட்டில் தமிழர்களுக்கு அப்படி எந்தவொரு சட்டமும் இல்லை! தொடர்ந்து தமிழ்நாட்டை ஆண்ட திராவிட ஆட்சிகள் தமிழர்களை நாதியற்றவர்களாக்கி, தமிழ்நாட்டை அயல் இனத்தாரின் வேட்டைக்காடாக்கியுள்ளதை எண்ணிப் பாருங்கள்! மண்ணின் மக்களுக்கே வேலை என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கத்தை எதிரொலியுங்கள்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


Wednesday, December 12, 2018

“அத்துமீறும் கர்நாடகா - அதிர்ச்சியில் தமிழகம்!” புதிய தலைமுறை வார ஏட்டில்.. தோழர் கி. வெங்கட்ராமன் செவ்வி..!

“அத்துமீறும் கர்நாடகா - அதிர்ச்சியில் தமிழகம்!” புதிய தலைமுறை வார ஏட்டில்.. தோழர் கி. வெங்கட்ராமன் செவ்வி..!
காவிரியைத் தடுத்து கர்நாடகம் அணை கட்டுவது குறித்து, “அத்துமீறும் கர்நாடகா - அதிர்ச்சியில் தமிழகம்!” என்ற தலைப்பில், 12.12.2018 நாளிட்ட “புதிய தலைமுறை” வார ஏட்டில் செய்திக் கட்டுரை வெளியாகியுள்ளது. அதில், தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் அவர்களது கருத்து வெளி வந்துள்ளது. அதில், அவர் தெரிவித்துள்ளதாவது :

“காவிரி தீர்ப்பாயம் 192 டி.எம்.சி. தண்ணீரை தமிழகத்திற்கு கொடுக்க வேண்டும் என்ற முதலில் தீர்ப்பளித்தது. அதன் பிறகு வந்த தீர்ப்பில் உச்ச நீதிமன்றம் அதிலிருந்து 14.75 டி.எம்.சி. தண்ணீரை குறைத்து தமிழகத்திற்கு வழங்கியுள்ளது. இந்த 14.75 டி.எம்.சி. தண்ணீர் என்பதே பெங்களூருக்கான குடிநீர் தேவைக்காக என்றுதான் சொன்னார்கள்.

இப்போது மீண்டும் குடிதண்ணீருக்காக மேகதாதுவில் 67 டி.எம்.சி. கொள்ளளவில் அணை கட்டப் போவதாக சொல்வது சட்டவிரோதம்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படிதான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டது. ஆனால் தீர்ப்பின்படி அந்த குழுவின் தலைவராக முழுநேர தலைவரை நியமிக்காமல் பகுதி நேர தலைவரை நியமித்துள்ளது மத்திய அரசு. இதுவும் சட்டவிரோதம். இப்போது அந்த ஆணையத்தின் ஒப்புதலை பெறாமலேயே இந்த அணையை கட்டவும் முயற்சிக்கிறது.

மேகதாது அணை கட்டப்பட்டால் தமிழகத்துக்கு தண்ணீர் கிடைக்கவே வாய்ப்பில்லை. மேகதாது அணை 67 டி.எம்.சி. கொள்ளளவில் கட்டப்படுகிறது. இது கபினி, ஏரங்கி உள்ளிட்ட அணைகளை விடவும் பெரியது. இந்த அணை கட்டப்படும் மேகதாது என்னும் இடம் கர்நாடகாவில் இருந்துவரும் காவிரி தண்ணீர் மேட்டூர் அணையில் சேரும் இடத்திற்கு கொஞ்சம் முன்னால் உள்ளது. இங்கு அணை கட்டப்பட்டால் காவிரியில் வரும் நீர் மற்றும் இடையில் பொழியும் மழை உள்ளிட்ட அத்தனை நீரையும் மேகதாதுவில் நிரப்புவார்கள். அதன்பிறகு ஒரு சொட்டு தண்ணீர் கூட தமிழகத்துக்கு வர வாய்ப்பில்லை.

தமிழகம் வீணாக தண்ணீரை கடலில் கலக்கிறது. அதனால் நாங்கள் மேகதாதுவில் தண்ணீரை சேமிக்கப் போகிறோம் என்று சொல்லித்தான் கர்நாடகம் உச்ச நீதிமன்றத்தில் வாதிடுகிறது.

நான்கு மாநிலங்களிடையே பாயும் நதியான காவிரியில் கர்நாடகம் எந்தத் திட்டத்தைச் செயல்படுத்துவதாக இருந்தாலும் அதுகுறித்து தமிழ்நாடு, கேரளா மற்றும் புதுச்சேரி ஆகிய மாநிலங்களின் கருத்தையும் கேட்க வேண்டும் என்று காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் குறிப்பிடப்பட்டிருப்பதால், அதன்படி இந்த மாநிலங்களின் கருத்துகளைக் கேட்டு, அதையும் விரிவான திட்ட அறிக்கையுடன் இணைத்து அனுப்பியிருக்க வேண்டும். ஆனால் தன்னிச்சையாக கர்நாடகம் அனுப்பிய அறிக்கைக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

ஏற்கெனவே சிவசமுத்திரம் நீர் மின் திட்டத்துக்கான விரிவான திட்ட அறிக்கையை கர்நாடகம் அனுப்பியபோது, அதனுடன் தமிழகத்தின் அனுமதி கடிதம் இல்லாததால் அதை மத்திய அரசு திருப்பி அனுப்பிவிட்டது. அதேபோல், மேகதாது அணைக்கான திட்ட அறிக்கையை கர்நாடக அரசு எப்போது தாக்கல் செய்தாலும், தமிழக அரசின் ஒப்புதல் பெறப்படாத பட்சத்தில் அதற்கு தமது அமைச்சகம் அனுமதி அளிக்காது என்று முன்பு உமாபாரதி கூறியிருந்தார்.

உமாபாரதியின் நிலைப்பாட்டைத்தான் தற்போதைய அமைச்சர் நிதின் கட்கரியும் எடுத்திருக்க வேண்டும். மேகதாது அணைக்கான வரைவு அறிக்கையுடன் தமிழக அரசின் ஒப்புதல் கடிதம் இணைக்கப்பட்டாத நிலையில் கர்நாடக மனு நிராகரிக்கப்பட்டிருக்க வேண்டும்; மாறாக அனுமதி அளித்துள்ளது அதிர்ச்சியளிக்கிறது”.

இவ்வாறு தோழர் கி. வெங்கட்ராமன் தெரிவித்துள்ளார்.

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Friday, November 2, 2018

தழைக்கட்டும் தமிழ்த்தேசியம் நியூஜெர்சியில் கருத்தரங்கு - கலந்துரையாடல்!

ஐயா பெ. மணியரசன் அவர்களுடன்.. நியூஜெர்சியில் கருத்தரங்கு - கலந்துரையாடல்!
 “தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” என்ற தலைப்பில், வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
அதன் ஒரு பகுதியாக வட அமெரிக்கத் தமிழர்கள் (NAT) அமைப்பு நியூஜெர்சி மாகாணத்தின் ஜெர்சி மாநகரத்தில் நடத்திய கருத்தரங்கில் “தமிழ்த்தேசிய வரலாறு - தமிழ்த்தேசியத்தின் அவசியம் மற்றும் தமிழ்த்தேசியத்திற்காக புலம்பெயர்ந்த தமிழர்கள் செய்யவேண்டியவை?” என்பது குறித்து 31.10.2018 அன்றிரவு கலந்துரையாடல் நடைபெற்றது.
ஐயா பெ. மணியரசன் உரை நிகழ்த்திய பிறகு கலந்துரையாடல் நடைபெற்றது. நிகழ்வில், திரு. இராபர்ட் அருண் ஜேம்ஸ் (Robert Arun James ) அவர்கள் எழுதிய “அவதாரம்” என்ற கவிதைத் தொகுப்பை ஐயா மணியரசன் வெளியிட, நியூஜெர்சியில் குமாரசுவாமி தமிழ்ப் பள்ளி நடத்தி வரும் திரு. இராஜா இளங்கோவன் (Raja Elangovan ) பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு, அமெரிக்கா, நார்வே, சிங்கப்பூர், இங்கிலாந்து மற்றும் ஆஸ்திரேலியாவை சேர்ந்த தமிழக இளைஞர்கள் நடத்தி வரும் தமிழ்த்தேசிய அறிவுசார் அமைப்பான Tamilri.com வெளியிட்ட பல்வேறு ஆய்வு கட்டுரைகளின் தொகுப்பை ஐயா மணியரசன் பெற்றுக்கொண்டார்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, October 26, 2018

“பறிபோகும் தமிழர் தாயகம்” மிசொரியில் கருத்தரங்கம்!

“பறிபோகும் தமிழர் தாயகம்” மிசொரியில் கருத்தரங்கம்!
“தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” என்ற தலைப்பில், வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
இதன் முதல் கூட்டமாக, அக்டோபர் 26 அன்று மாலை அமெரிக்க நேரடிப்படி மாலை 7 மணியளவில், மிசோரி - செயிண்ட் லூயிஸ் பால்வின் பாயிண்ட் அரங்கில் “பறிபோகும் தமிழர் தாயகம்” என்ற தலைப்பில் கருத்தரங்கம் நடைபெறுகின்றது. “வட அமெரிக்கத் தமிழர்கள்” North American Tamils இக்கூட்டத்தை ஒருங்கிணைத்துள்ளனர். கூட்டம் குறித்த தொடர்புகளுக்கு +1.314.422.3370 என்ற எண்ணை அழைக்கவும்!
 
இந்நிகழ்வில், அமெரிக்க வாழ் தமிழின உணர்வாளர்கள் திரளாகப் பங்கேற்கும்படி அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com


Thursday, October 25, 2018

“தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” வட அமெரிக்க மண்ணில் – தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் பங்கேற்கும் தொடர் கூட்டங்கள்!

“தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” வட அமெரிக்க மண்ணில் – தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் ஐயா பெ. மணியரசன் பங்கேற்கும் தொடர் கூட்டங்கள்!
“தழைக்கட்டும் தமிழ்த்தேசியம்” என்ற தலைப்பில், வட அமெரிக்காவின் பல்வேறு இடங்களில் நடைபெறும் கூட்டங்களில் பங்கேற்பதற்காக தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்கள் வட அமெரிக்கப் பயணம் மேற்கொண்டுள்ளார்.
 
வாசிங்டன், செயின்ட் லூயிஸ், மின்னாபோலிஸ், நேவார்க், சைரக்கஸ், நியூ ஜெர்சி, வட கரோலினா, அட்லாண்டா, சியாட்டில், டல்லஸ் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் நடைபெறும் இக்கூட்டங்களை “வட அமெரிக்கத் தமிழர்கள்” North American Tamils ஒருங்கிணைத்துள்ளனர். நவம்பர் 3 அன்று நியூ ஜெர்சியில் நடைபெறும் “இலங்கைத் தமிழ்ச் சங்கத்தின்” 41ஆவது ஆண்டு விழாவில் ஐயா பெ. மணியரசன் அவர்கள் சிறப்புரையாற்றுகிறார்.
 
அக்டோபர் 22 அன்று நள்ளிரவு, சென்னை மீனம்பாக்கம் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட தோழர் பெ. மணியரசன் அவர்களை, பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், பொருளாளர் தோழர் அ. ஆனந்தன், தலைமைச் செயற்குழு தோழர்கள் ம. இலட்சுமி, க. அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர் தோழர் வெற்றித்தமிழன், சென்னை விமான நிலையப் ப்ரீபெய்டு டாக்சி ஓட்டுநர்கள் சங்கப் பொதுச் செயலாளர் தோழர் மா.வே. சுகுமார், தோழர்கள் வி. கோவேந்தன், மு. பொன்மணிகண்டன், இராகுல்பாபு உள்ளிட்டோர் வழியனுப்பி வைத்தனர்.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Wednesday, October 10, 2018

நக்கீரன் கோபால் கைது : தண்டனைச் சட்டத்திலிருந்து 124, 124A பிரிவுகளை நீக்க வேண்டும்! தோழர் பெ. மணியரசன் அறிக்கை!

நக்கீரன் கோபால் கைது : தண்டனைச் சட்டத்திலிருந்து 124, 124A பிரிவுகளை நீக்க வேண்டும்! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அறிக்கை! 
“நக்கீரன்” இதழாசிரியர் திரு. கோபால் அவர்கள் மீது தமிழ்நாடு ஆளுநர் காவல்துறையில் குற்ற மனு கொடுத்து, இந்தியத் தண்டனைச் சட்டம் 124இன் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை சென்னை மாநகர்க் காவல்துறை தளைப்படுத்திய அடாத செயல் போல் இதற்கு முன் எந்த ஆளுநரும் இந்தியாவில் செய்ததில்லை என்று பலரும் கருத்துக் கூறியுள்ளனர்.
 
தமிழ்நாடு ஆளுநரின் அடாத செயலையும், அதைத் தலைமேல் கொண்டு களத்தில் இறங்கிய தமிழ்நாடு அரசின் குற்றேவல் கொடுங்கோன்மையையும் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.
 
இதழியல் துறையின் உரிமைப் பறிப்பில் ஈடுபட்ட தமிழ்நாடு அரசின் குற்றேவல் கொடுங்கோன்மையைத் தடுத்திட உடனடியாகக் களத்தில் இறங்கி எழும்பூர் நீதிமன்றத்தில் வாதாடிய இந்து வெளியீட்டுக் குழுமத்தின் தலைவர் திரு. என். இராம் அவர்களின் சனநாயகக் காப்பு நடவடிக்கையைப் பாராட்டுகிறேன்.
 
இந்து, ஆனந்த விகடன், தினமலர், தினகரன், டெக்கான் க்ரானிக்கல், டைம்ஸ் ஆப் இந்தியா ஏடுகள் மற்றும் புதிய தலைமுறை, நியூஸ்18 தொலைக்காட்சிகள் ஆகியவற்றின் பொறுப்பாளர்கள் கண்டனக் கூட்டறிக்கை வெளியிட்டதற்குப் பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
மாணவிகளைத் தவறான திசைக்கு அழைத்தார் என்ற குற்றச்சாட்டில் சிறையில் உள்ள பேராசிரியர் நிர்மலா தேவிக்கும் தமிழ்நாடு ஆளுநர் திரு. பன்வாரிலால் புரோகித் அவர்களுக்கும் இடையே தொடர்புகள் இருந்ததாக “நக்கீரன்” இதழ், கடந்த ஏப்ரல் மாதம் படங்களுடன் கட்டுரை வெளியிட்டது என்பதுதான் அரசுத் தரப்பில் கூறியுள்ள குற்றச்சாட்டு! இதற்குத்தான் இந்தியத் தண்டனைச் சட்டம் (ஐ.பி.சி.) பிரிவு 124-இன் கீழ் வழக்குப் பதிந்து கோபாலை கைது செய்திருக்கிறார்கள்.
 
பிரித்தானியக் காலனி ஆட்சிக் காலத்தில், 1870ஆம் ஆண்டு இயற்றப்பட்டு, 1898இல் திருத்தப்பட்ட இந்தியத் தண்டனைச் சட்டத்தில் 124 மற்றும் 124A பிரிவுகள் உருவாக்கப்பட்டன. 124 என்பது பிரித்தானியப் பேரரசி (Queen) மற்றும் பிரித்தானியாவின் இந்திய கவர்னர் ஜெனரல் ஆகியோரின் அதிகாரம் செயல்பட முடியாமல் தடுப்பவர்கள் மற்றும் அவர்களைத் தாக்குவோர் மீது நடவடிக்கை எடுக்க உருவாக்கப்பட்ட தண்டனைப் பிரிவு. விடுதலை பெற்ற இந்தியாவில் 1950 ஆம் ஆண்டு இப்பிரிவில் உள்ள “பேரரசி” என்பதைக் குடியரசுத் தலைவர் என்றும், கவர்னர் ஜெனரல் என்பதை மாநில ஆளுநர் என்றும் திருத்திக் கொண்டார்கள்.
 
திருத்தப்பட்டாலும் இந்த 124இன்கீழ் யார் மீதும் இந்தியாவில் வழக்குப் போட்டதில்லை என்கிறார்கள். தமிழ்நாட்டு ஆளுநர் மாளிகை “பெரிய ஆராய்ச்சி” செய்து இந்தப் பிரிவின் கீழ் வழக்குப் போட்டிருக்கிறது. தமிழ்நாடு ஆளுநர் இந்திய அரசமைப்புச் சட்டத்தைத் துச்சமாகத் தூக்கி எறிந்து விட்டு மாநில அரசின் அன்றாட நிர்வாக வேலைகளில் தலையிட்டு மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டங்கள் நடத்தி வருவது நாடறிந்த செய்தி. இப்போது இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டம், இந்தியத் தண்டனைச் சட்டம் ஆகியவற்றிலும் குறுக்கே புகுந்து பொருந்தாத பிரிவுகளின் கீழ் நக்கீரன் கோபாலை சிறையில் அடைக்க முனைத்திருப்பது, மக்களின் சனநாயக உரிமையைப் பறிப்பதில் அவர் இறங்குவதன் முன்னோட்டமாகும்.
 
பொதுவாக ஊடகங்களின் மீது வழக்குப் பதிவு செய்யும்போது அதன் ஆசிரியர் அல்லது வெளியீட்டாளர் அல்லது செய்தியாளர்கள் மீது வழக்குப்பதியப்படும். ஆனால், நக்கீரன் மீதான வழக்கில் அவ்வேடு முழுமையாக வெளிவரக் கூடாது என்ற கெடு நோக்கத்தில், அவ்வேட்டின் ஆசிரியர் தொடங்கி, துணை ஆசிரியர், செய்தியாளர்கள், உற்பத்தி மேலாளர்கள், விநியோகிஸ்தர்கள் வரை சற்றொப்ப 35 பேரின் பெயரைக் குறிப்பிட்டு வழக்குப் பதிவு செய்துள்ளது கடும் கண்டனத்திற்குரியது! தமிழ்நாடு அரசு, இந்த வழக்கை முழுமையாகக் கைவிட வேண்டும்.
 
காலனி ஆட்சியிலிருந்து விடுதலை பெற்ற இந்தியாவில் காலனிய ஆட்சியாளர்கள் போட்ட தண்டனைச் சட்டப்பிரிவுகள் 124, 124A போன்றவற்றை நீக்க வேண்டும் என்ற கோரிக்கையை நீண்ட காலமாக நீதித்துறையினரும் சட்ட வல்லுநர்களும் எழுப்பி வந்திருக்கிறார்கள். (அரசை விமர்சித்தாலே 124A - இன் கீழ் வழக்குப் பதிவு செய்ய முடியும்).
 
எனவே, இந்தியத் தண்டனைச் சட்டத்திலிருந்து பிரிவுகள் 124, 124A இரண்டையும் நீக்குமாறு சனநாயக ஆற்றல்கள் இப்போது வலியுறுத்த வேண்டும்.
 
நக்கீரன் கோபாலுக்காக வாதாடிய வழக்கறிஞர்கள் மற்றும் இந்து என் இராம் ஆகியோரின் தர்க்கங்களைச் செவிமடுத்து, இவ்வழக்கில் 124 பிரிவு பொருந்தாது என்று கூறியதுடன் கோபால் அவர்களைச் சொந்தப் பிணையில் விடுதலை செய்த, எழும்பூர் 13ஆம் நீதிமன்ற நீதிபதி கோபிநாத் அவர்களின் நீதிசார் நடவடிக்கை பாராட்டிற்குரியது!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Thursday, October 4, 2018

சுற்றுச்சூழல் காப்பாளரா மோடி? புத்தர் வேடம் மோடிக்குப் பொருந்தவில்லை! தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!

சுற்றுச்சூழல் காப்பாளரா மோடி? புத்தர் வேடம் மோடிக்குப் பொருந்தவில்லை! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் - தோழர் பெ. மணியரசன் சிறப்புக் கட்டுரை!
சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக ஐ.நா. மன்றம் ஆண்டுதோறும் வழங்கும் “நிலவுலக வாகையர்” விருது (Champions of the Earth Award) இவ்வாண்டு இந்தியத் தலைமை அமைச்சா நரேந்திர மோடி அவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 
ஐ.நா. மன்றத்தின் பொதுச் செயலாளர் அந்தோணியோ குட்டேரஸ் நேற்று (03.10.2018) புதுதில்லியில் இவ்விருதினை நரேந்திர மோடிக்கு அளித்தார். அதே விழாவில், பிரான்சு குடியரசுத் தலைவர் இமானுவேல் மக்ரான் அவர்களுக்கும் “நிலவுலக வாகையர்” விருதை ஐ.நா. மன்றப் பொதுச் செயலாளர் வழங்கினார்.
 
விருதினைப் பெற்றுக் கொண்ட நரேந்திர மோடி, அவ்விழாவில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, இயற்கைப் பாதுகாப்பு பற்றி பேசியவை அனைத்தும் மிடாக் குடிகாரர் ஒருவர் மதுவிலக்கு பற்றி பேசினால் எப்படி இருக்குமோ அப்படி இருந்தது!
 
இயற்கையை அன்னை என்றார்; நிலம், காடு, ஆறு – அத்தனையும் தெய்வம்; அவற்றைப் பாதுகாக்க வேண்டும் என்றார். அவற்றை சேதாரமில்லாமல், அடுத்த தலைமுறைக்கு ஒப்படைக்க வேண்டும் என்றார். எந்தத் தலைப்பு கொடுத்தாலும் அந்தத் தலைப்பில் வெளுத்து வாங்கும் மைக் மதன காமராசன்தான் மோடி!
 
“இயற்கை தாங்கக்கூடிய அளவில்தான் மனித நுகர்வு இருக்க வேண்டும். இல்லையேல் இயற்கை நம்மைத் தண்டித்து விடும்” என்று காந்தியடிகள் கூறிய அறிவுரையை மேற்கோள் காட்டி மோடி பேசினார்.
 
ஓ.என்.ஜி.சி. ஓநாய்களைக் கொண்டும், “வேதாந்தா” போன்ற பெருங்குழும வேட்டையாடிகளைக் கொண்டும் காவிரிப்படுகை விளை நிலங்களை – கடற்பகுதிகளை, வேதி மண்டலமாக்கி, நிலத்தடி நீரை நஞ்சாக்கி, “வளர்ச்சி” வாதம் பேசும் மோடி, இயற்கை தாங்கக் கூடிய அளவில்தான் மனித நுகர்வு இருக்க வேண்டும் என்று யாருக்கு உபதேசம் செய்கிறார்? மோடிதான் திருந்த வேண்டும்!
 
மரங்களைத் தெய்வமாக வணங்கும் மரபு நம் மரபு என்று பேசினார். தேவைப்படாத சென்னை – சேலம் எட்டு வழிச் சாலைக்காக பல்லாயிரக்கணக்கான மரங்களை வெட்டி வீழ்த்தி, இயற்கையான காட்டை அழிக்கும் திட்டத்தைச் செயல்படுத்தும் மோடியின் பேச்சு எவ்வளவு “புனிதச் சொற்களை”ப் போர்த்திக் கொண்டுள்ளது! அந்த மரங்களையும் காட்டையும் காப்பாற்ற முன்வரும் எளிய மக்கள் மீது போர் தொடுக்குமாறு எடப்பாடி அரசை ஏவிவிட்டுள்ள மோடி போடும் புனித வேடம் “புல்லரிக்க”ச் செய்கிறது.
 
ஆறுகளும் தெய்வங்களாம்! மோடி அள்ளி வீசுகிறார் சொற்களை! கங்கையைத் தூய்மைப்படுத்துகிறதாம் மோடி அரசு! ஆனால், காவிரித்தாய் தமிழ்நாட்டிற்கு வராமல் தடுக்க என்னென்ன சூழ்ச்சிகளைச் செய்கிறது மோடி அரசு! உச்ச நீதிமன்றம் தீர்ப்புரைத்தும் கூட அதிகாரமற்ற - ஓய்வு நேரப் பணியாகக் காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்தது இதே மோடி அரசு!
 
வேளாண் நிலங்களுக்கு மண் நல அட்டைகள் (Soil Health Cards) 13 கோடி அளவிற்குக் கொடுத்திருப்பதாக “சாதனை”ப் பட்டியலை நீட்டுகிறார் மோடி!
 
தமிழ்நாட்டு விளை நிலங்களில் ஐட்ரோகார்பன் – நிலக்கரி எடுக்க வேண்டும்; தமிழ்நாட்டு விளை நிலங்களின் நெஞ்சைப் பிளந்து, கெய்ல் குழாய்களைப் புதைக்க வேண்டும்; பன்னாட்டுப் பெருங்குழும நிறுவனங்களின் ஆலைகள் அமைக்க வேண்டும் என செயல்பட்டு வருகிறது மோடி அரசு! வேளாண்மையை அழித்தும், ஆற்று நீரையும் ஊற்று நீரையும் உறிஞ்சி வறண்ட மண்ணாக்கியும், வளமான மண்ணை வாழ்நாள் நோயாளியாக்கியும் உள்ள மோடி அரசு, நில நல அட்டைகள் யாருக்கு வழங்கப் போகிறது?
 
இறுதியாக மோடி எக்காளமிடுகிறார் : “சுற்றுச்சூழல் தத்துவம் என்பது உலகத்தின் கட்டளை முழக்கமாக மாற வேண்டும். சுற்றுச்சூழல் தத்துவம், சுற்றுச்சூழல் மன உணர்ச்சியில் கால்பதித்திருக்க வேண்டுமே அன்றி அரசாங்க ஆணைகளைச் சார்ந்திருக்கக் கூடாது!”.
 
அடேயப்பா எத்தனை வீராவேசம்! எல்லாம் வேடம்! ஸ்டெர்லைட் ஆலையால் – சுற்றுச்சூழல் பல கிலோ மீட்டர் சுற்றளவிற்கு – நஞ்சாகி மனிதர்களுக்கு நோய்களும் இறப்புகளும் வந்தபின், ஸ்டெர்லைட்டை நிரந்தரமாக மூட வேண்டும் என்று தூத்துக்குடியில் மக்கள் ஆண்டுக்கணக்கில் அறப்போராட்டம் நடத்தி வருகிறார்கள். அவர்கள் மீது 22.05.2018 அன்று துப்பாக்கிச் சூடு நடத்தி, 13 உயிர்களைக் காவு கொண்டது மோடி – எடப்பாடி கூட்டணி! கொல்லப்பட்டவர்களின் குடும்பத்தினர்க்கு ஆறுதல் சொல்லக் கூட அசூசைப்பட்டவர் மோடி! அவர் திருந்தி விட்டாரா என்ன?
 
அம்பானிகளின் – அதானிகளின் சுற்றுச்சூழல் அழிப்புகளை மூடி மறைக்கவே போதி மரப் புத்தர் போல் பேசுகிறார் மோடி!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Friday, September 28, 2018

அருணாச்சலப்பிரதேச மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு! தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சட்டம் இல்லை?

அருணாச்சலப்பிரதேச மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு! தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சட்டம் இல்லை?
அருணாச்சலப்பிரதேச அரசு வேலை வாய்ப்புகளில் மண்ணின் மக்களுக்கே 80 சதவீதம் என அரசே ஒதுக்கீடு செய்து அறிவிப்பு வெளியிடுகிறது!
 
தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கே தொழில் - வணிகம் - வேலை என சட்டம் இயற்றக் கோருவோம்!
“தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே!” என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கத்தோடு இணைவோம்! செயலாற்றுவோம்!
 
#வெளியார்
#தமிழ்த்தேசியம்
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

காசுமீரில் மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு! தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சட்டம் இல்லை?

காசுமீரில் மண்ணின் மக்களுக்கு சட்டப்பாதுகாப்பு! தமிழ்நாட்டில் ஏன் அவ்வாறு சட்டம் இல்லை?
காசுமீருக்கு மண்ணின் மக்களுக்கு உரிமைகள் வழங்க இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படியும், மாநில அரசும் சட்டங்களை இயற்றி, அத்தாயகத்தை வெளியார் ஆக்கிரமிப்பிலிருந்து பாதுகாத்து வருகின்றனர். ஆனால், தமிழ்நாட்டில் நம் நிலை என்ன?
தமிழ்நாட்டில் மண்ணின் மக்களுக்கே தொழில் - வணிகம் - வேலை என சட்டம் இயற்றக் கோருவோம்!

“தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே!” என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கத்தோடு இணைவோம்! செயலாற்றுவோம்!
#வெளியார்
#தமிழ்த்தேசியம்
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே!

தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே!பாலத்தீன மக்களின் வரலாற்றுத் தாயகத்தில் சிறுக சிறுக நடைபெற்ற யூதக் குடியேற்றங்கள், பாலத்தீனத் தாயகத்தை கேள்விக்கு உள்ளாக்கி, அம்மக்களை சொந்த மண்ணிலேயே ஏதிலிகளாக்கியது.
 
மிகை எண்ணிக்கையில் வெளி மாநிலத்தவர் குடியேற்றத்திற்கு உள்ளாகியுள்ள நம் தமிழ்நாட்டுத் தாயகத்தின் எதிர்காலம் என்னாவது?
 
“தமிழ்நாட்டின் தொழில் - வணிகம் - வேலை தமிழர்களுக்கே!” என்ற தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் முழக்கத்தோடு இணைவோம்! செயலாற்றுவோம்!
 
#வெளியார்
#தமிழ்த்தேசியம்
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

Tuesday, September 25, 2018

தஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந்தை நிறுத்தியது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்..!

தஞ்சை மாவட்டம் - நண்டம்பட்டி கிராமத்திற்கு சிற்றுந்தை நிறுத்தியது ஏன்? தமிழ்த்தேசியப் பேரியக்கம் போராட்டம்..!
தஞ்சாவூர் மாவட்டத்தின் கடைகோடி கிராமம் நண்டம்பட்டி. இந்த கிராமம் புதுக்கோட்டை மற்றும் திருச்சி மாவட்டங்களின் தொடக்கப் பகுதியாகும். நண்டம்பட்டியில் 150 குடும்பங்களும் அர்சுணம்பட்டியில் 75 குடும்பங்களும் வீமம்பட்டியில் 50 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
 
இந்த மூன்று ஊர் கிராம மக்களும் இளைஞர்களும் மாணவர்களும் கூலித் தொழிலாளிகளும், கட்டுமான ஆட்களும் வேலைக்கு திருச்சி, தஞ்சை செல்லும் நிலையில் நண்டம்பட்டி வழியாக இயங்கிய சிற்றுந்து (மினிபஸ்) நிறுத்தப்பட்டு இரண்டு ஆண்டுகள் ஆகிறது.
 
தஞ்சை மாவட்ட ஆட்சியரிடமும், வருவாய் வட்டாச்சியரிடமும் கோரிகை மனு கொடுத்தோம். எந்த பயனும் இல்லை! எனவே, மக்களின் அடிப்படை கோரிக்கை நிறைவேற்றிடாத மாவட்ட நிர்வாகத்தின் அலட்சியப் போக்கை கண்டித்து தமிழ்த்தேசியப் பேரியக்கம் ஒருங்கினைக்கும் மக்கள் திரள் போராட்டம் வரும் 28.09.2018 அன்று

தஞ்சை மாவட்டம் - செங்கிப்பட்டி (சாணூரப்பட்டி) கடைவீதி - 28.09.2018 அன்று மாலை 5.30 மணிக்கு நடைபெறுகின்றது.
 
இப்போராட்டத்தில், ஊர் பொது மக்களும், தமிழின உணர்வாளர்களும் திரளாகப் பங்கேற்க வருமாறு அன்புரிமையுடன் அழைக்கின்றோம்!
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com
இணையம்: www.tamizhdesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT