உடனடிச்செய்திகள்

Monday, October 31, 2011

தோழர் செங்கொடி பெண்கள் அமைப்பின் சார்பில், மூவர் விடுதலைக்காக நடைபெற்ற ஆர்பாட்டத்தில் பெ.மணியரசன் உரை!

மரண தண்டனைக்கெதிரான தோழர் செங்கொடி பெண்கள் அமைப்பின் சார்பில், மூவர் விடுதலைக்காக சென்னை நினைவரங்கத்தில் நடைபெற்ற ஆர்பாட்டத்தில் கலந்து கொண்டு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் அவர்கள் ஆற்றிய உரை! பதிவேற்றம் :அக்டோபர் 30, 2011

Tuesday, October 25, 2011

PRESS NEWS[25.10.2011]:: அணுஉலை ஆபத்திலிருந்து தமிழகத்தை இந்தியா பாதுகாக்காது - பெ.மணியரசன் பேச்சு!

''அணுஉலை ஆபத்திலிருந்து தமிழகத்தை இந்தியா பாதுகாக்காது"

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் தோழர் பெ.மணியரசன் பேச்சு!

 

"தமிழ்நாட்டு மீனவர்களை சிங்களக் கடற்படையிடமிருந்து பாதுகாக்காத இந்திய அரசு, அணுஉலை ஆபத்திலருந்தும் தமிழகத்தை பாதுகாக்காது" என கூடங்குளம் அணுஉலையை எதிர்த்து சென்னையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நேற்று மாலை நடத்திய ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு பேசிய, கட்சியின் தலைவர் தோழர் பெ.மணியரசன் தெரிவித்தார்.

 

இந்திய அரசின் கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்து, இடிந்தகரையில் அப்பகுதி மக்கள் ஒருமித்த குரலில் காலவரையற்ற உண்ணாப் போராட்டத்தை நடத்தி வருகின்றனர். போராடும் அம்மக்களுக்கு ஆதரவுத் தெரிவித்தும், கூடங்குளம் – கல்பாக்கம் அணுஉலைகளை நிரந்தரமாக இழுத்த மூட வலியுறுத்தியும் தமிழகத்தின் முக்கிய நகரங்களில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி நேற்று(24.10.2011) கண்டன ஆர்ப்பாட்டங்களை நடத்தியது.

 

சென்னை சைதை பனகல் மாளிகை முன்பு நேற்று மாலை நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் தலைமை தாங்கிப் பேசினார். அப்போது பேசிய அவர், "கூடங்குளம் அணுஉலையின் ஆபத்திலிருந்து தமிழகத்தை இந்திய அரசு பாதுகாக்காது. தமிழ்நாட்டுத் தமிழர்களின் பாதுகாப்பு குறித்த அக்கறை இந்திய அரசுக்கு எப்போதுமே இருந்ததில்லை. நேற்று 4 சுறா மீன்களைப் பிடித்து விட்டதாகக் கூறி இந்திய கடலோர காவல்படை, தமிழ்நாட்டு மீனவர்களை கைது செய்திருக்கிறது. இதுவரை 560க்கும் மேற்பட்ட தமிழக மீனவர்களை சிங்கள இனவெறிக் கடற்படை நடுக்கடலில் சுட்டு வீழ்த்திய போதும், நம் மீனவர்களை நடுக்கடலில் நிர்வாணப்படுத்தி, வலைகளை சேதப்படுத்தி கொடுமை புரிந்த போதும் அதை தடுக்க இந்தியக் கடற்படை முன்வரவில்லை. ஆனால், சுறா மீன்களைப் பாதுகாக்கிறோம் என இந்தியக் கடற்படை, நம் மீனவர்களை கைது செய்திருக்கிறது. சுறா மீன்களுக்கு இருக்கும் மதிப்பு கூட, நம் தமிழ்நாட்டு மீனவனுக்குக் கிடையாதா?

 

இப்படிப்பட்ட இந்திய அரசு தான் இலட்சக்கணக்கில் தமிழீழ மண்ணில் நம் சொந்தங்களை கொல்ல உதவியது. இதே தமிழினப் பகையுடன் தான், நமக்குக் காவிரி நீரை மறுக்கும் கர்நாடகத்திற்கும், முல்லைப் பெரியாற்று நீரை மறுக்கும் கேரளத்திற்கும், பாலாற்று நீரை மறுக்கும் ஆந்திரத்திற்கும் தமிழ்நாட்டின் நெய்வேலியிலிருந்து மின்சாரத்தை அனுப்புகிறது. வடநாட்டு முதலாளிகளுக்கும், பன்னாட்டு நிறுவனங்களுக்கும் அனுப்புகிறது.

 

இப்படி தமிழின விரோத்த்தை நெஞ்சில் சுமந்து செயல்பட்டு வரும் இந்திய அரசு, கூடங்குளம், கல்பாக்கம் அணுஉலைகளால் வரும் ஆபத்துக்களில் இருந்து தமிழ்நாட்டைப் பாதுகாக்கும் என்று நாம் எப்படி நம்புவது? நிச்சயமாக பாதுகாக்காது. நெய்வேலி மின்சாரம் முழுவதும் தமிழ் நாட்டிற்குக் கிடைக்கப் பெற்றால், இங்கு மின்வெட்டு கிடையாது. நாம் மின்சாரத்தில் உபரி மாநிலமாக இருப்போம். மேலும், காற்றாலை, கதிரவன் ஒளி, கழிவுகள் ஆகியவற்றைக் கொண்டு மாற்று வழியில் மின்சாரம் தயாரிப்பதையும் நாம் ஊக்குவிக்க வேண்டுமே தவிர, மனித உயிருக்கு உலை வைக்கும் அணுமின் நிலையங்களைக் கட்டக் கூடாது.

 

எனவே, கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை இரத்து செய்ய வேண்டும் என்றும், நெய்வேலி மின்சாரத்தை முழுவதும் தமிழகத்திற்கே வழங்கிட வேண்டுமென்றும் தமிழக அரசு இந்திய அரசை வலியுறுத்திப் பெற வேண்டும்"  என்றார். மேலும், கூடங்குளம் அணுஉலைத் திட்டத்தை எதிர்த்து, மதுரையில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் சார்பில் 'அணுசக்தி எதிர்ப்பு மாநாடு' திசம்பர் 11 அன்று நடைபெறும் என்றும் அவர் அறிவித்தார்.

 

இவ்வார்ப்பாட்டத்தில், தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவைத் தலைவர் த.வெள்ளையன் மற்றும் பொதுச் செயலாளர் , கல்பாக்கம் அணுமின் நிலையக் கதிர்வீச்சுகளால் மக்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஆராய்ந்து வெளியிட்ட மருத்துவர் வீ.புகழேந்தி, தமிழுரிமைக் கூட்டமைப்புத் தலைவர் புலவர் கி.த.பச்சையப்பனார், தமிழர் எழுச்சி இயக்கம் ஒருங்கிணைப்பாளர் வேலுமணி, தமிழர் குடியரசு முன்னணி ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

திருச்செந்தூர்

திருச்செந்தூர் பேரூராட்சி மன்றம் எதிரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் தமிழ்மணி தலைமை தாங்கினார். கூடங்குளம் போராட்டக் குழுவைச் சேர்ந்த த.தே.பொ.க. பொதுச் செயலாளர் தோழர் கி.வெங்கட்ராமன், கடலோர மக்கள் பாதுகாப்பு இயக்கத்தின் பால்ராசு, தமிழ்நாடு வணிகர் சங்க நிர்வாகி துரை அரிமா உள்ளிட்டோர் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றினர்.

 

ஓசூர்

ஓசூர் வட்டாட்சியர் அலுவலகம் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் நடவரசன் தலைமை தாங்கினார். பா.ம.க. மாவட்ட அமைப்புச் செயலாளர் விசுவநாதன், ஈரம் அமைப்பின் செயலாளர் பழ.பாலசுந்தரம், ம.தி.மு.க. மாவட்டத் துணைச் செயலாளர் இராமச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் செந்தமிழ், தமிழர் தேசிய இயக்க மாவட்டச் செயலாளர் முருகேசன், பெ.தி.க. அமைப்பாளர் பழனிச்சாமி, பசுமைத் தாயகம் அமைப்பாளர் சு.முருகன், த.தே.பொ.க. செயலாளர் ரமேஷ் ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தை நிறைவு செய்து, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் கோ.மாரிமுத்து பேசினார்.

 

தஞ்சை

நேற்று மாலை 5.30 மணிக்கு தஞ்சாவூர் தொடர் வண்டி நிலையம் முன்பு நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டத்திற்கு, தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞ்சை நகரச் செயலாளர் தோழர் இராசு.முனியாண்டி தலைமை தாங்கினார். த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர்  குழ.பால்ராசு, தமிழர் தேசிய இயக்கப் பொதுச் செயலாளர் அய்யனாவரம் சி.முருகேசன், த.தே.பொ.க. பட்டுக்கோட்டை நகரச் செயலாளர் வெ.இராசேந்திரன், த.தே.பொ.க. மாவட்டச் செயற்குழு உறுப்பினர் முருகய்யன், நகரச் செயற்குழு உறுப்பினர் தெ.காசிநாதன், நகரத் துணைச் செயலாளர் இரா.தமிழ்ச்செல்வன், நகரச் செயற்குழு உறுப்பினர்கள் லெ.ராமசாமி, க.காமராசு ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

செங்கிப்பட்டி

தஞ்சை மாவட்டம் பூதலூர் ஒன்றியம் சாணுரப்பட்டி கடை வீதியில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு,  த.தேபொ.க. ஒன்றியச் செயலாளர் தோழர் க.காமராசு தலைமை தாங்குகினார்.  ம.தி.மு.க. ஒன்றியச் செயலாளர் இரா.நந்தகுமார், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் விடுதலைவேந்தன் ஆகியோர் முன்னிலை வகிக்கின்றனர். த.செ.கு. த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் ரெ.கருணாநிதி, ஒன்றியச் செயற்குழு உறுப்பினர்கள் ஆ.சண்முகம்,ச.காமராசு,  தமிழக இளைஞர் முன்னணி ஒன்றியத் தலைவர் ஆ.தேவதாசு, ம.தி.மு.க. இலக்கிய அணிச் செயலாளர் சா. புண்ணியமூர்த்தி, த.இ.மு. ஒன்றிய செயலாளர் கெ.செந்திர்குமார், மக்கள் உரிமை இயக்க செயலாளர் பழ.இராஜ்குமார், மகளிர் ஆயம் அமைப்பாளர் மீனா, நாம் தமிழர் அமைப்பாளர் பி.அற்புதராஜ், த.இ.மு. ஒன்றியச் செயற்குழு உறுப்பினர் கோ.ரமேஷ், த.தே.பொ.க. கிளைச் செயலாளர் ந.கருப்பு சாமி ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தின் நிறைவில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் பழ.இராசேந்திரன் நிறைவுரையாற்றினார்.

 

சிதம்பரம்

சிதம்பரம் தெற்கு சன்னதி அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கு.சிவப்பிரகாசம் தலைமை தாங்கினார். மயிலாடுதுறைப் பேராசிரியர் த.செயராமன், தமிழக இளைஞர் முன்னணி சிதம்பரம் நகர அமைப்பாளர் ஆ.குபேரன் ஆகியோர் கண்டன உரையாற்றினர்.

 

கீரனூர்

கீரனூர் கடைத்தெருவில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் ஆரோக்கியசாமி தலைமை தாங்கினார். தமிழக இளைஞர் முன்னணி செயலாளர் வழக்கறிஞர் சிவராஜ் கண்டன உரையாற்றினார்.

 

திருச்சி

திருச்சி தொடர்வண்டி நிலையம் அருகிலுள்ள காதி கிராப்ட் முன்பு, 22.10.2011 அன்று மாலை  நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கு, த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் கவித்துவன் தலைமை தாங்கினார். மக்களி உரிமைப் பேரவை ஒருங்கிணைப்பாளர் வழக்கறிஞர் த.பானுமதி, ஆத்மநாதன், தமிழ்க் கலை இலக்கியப் பேரவை கிளைச் செயலாளர் கவிஞர் இராசா இரகுநாதன், ம.திமு.க. இலக்கிய அணி புலவர் முருகேசன், த.தே.பொ.க. நகரச் செயலாளர் இனியன், த.ஓ.வி.இ. அமைப்பாளர் நிலவழகன், தமிழ்நாடு வழக்கறிஞர் பேரவை இளமுருகன், தமிழக மக்கள் பண்பாட்டுக் கழகம் பாட்டாளி, லெட்சுமணன்(த.தே.பொ.க.) ஆகியோர் கண்டன உரையாற்றினர். ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட, திருச்சி த.தே.பொ.க. நிர்வாகிகள் கூடங்குளம் இடிந்தகரையில் நடைபெற்று வருகிற உண்ணாப் போராட்டத்திற்கு வாகனங்களில் நேரில் சென்று ஆதரவுத் தெரிவித்து உண்ணாப் போராட்த்திலும் பங்கெடுத்துக் கொண்டனர்.

 

இதே போன்ற ஆர்ப்பாட்டங்கள், மதுரை, கோவை, சேலம், திருத்துறைப்பூண்டி ஆகிய பிற இடங்களிலும் நடத்த தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்கள் ஏற்பாடுகள் செய்து வருகின்றனர்.

Sunday, October 23, 2011

தமிழக முதல்வர் காவிரி இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரக் கூடாது - பெ.மணியரசன் அறிக்கை!காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரும் திட்டத்தை தமிழக முதல்வர் ஜெயலலிதா கைவிட வேண்டும், இடைக்காலத்தீர்ப்பை அரசிதழில் வெளியிடச் செய்ய வேண்டும்
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தலைவர் பெ.மணியரசன் அறிக்கை

காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பினை இந்திய அரசிதழில் வெளியிட வேண்டும் என்று தமிழக முதலமைச்சர் செல்வி. ஜெயலலிதா அவர்கள், பிரதமர் மன்மோகன் சிங் அவர்களுக்கு கடிதம் எழுதியிருப்பது தமிழக உரிமைக்கு பாதகம் விளைவிக்கக்கூடியது என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் சுட்டி காட்டுகிறேன்.
காவிரித் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு தமிழகத்தின் உரிமைகளுக்கு பாதிப்புகளை உண்டாக்கியுள்ளது என்றும் அப்பாதிப்புகளை நீக்கி நீதி வழங்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு வழக்கு தொடுத்துள்ளது. அவ்வழக்கு 18.10.2011 அன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்துள்ள நிலையில் தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பிற்கு முழு அதிகாரம் வழங்கும் வகையில் நடுவண் அரசின் அரசிதழில் வெளியிடுமாறு தமிழக முதல்வர் கோருவது தனது வழக்கை தானே கைவிடுவதற்குச் சமம் ஆகும்.
இறுதித் தீர்ப்பை எதிர்த்து தமிழகம், கர்நாடகம் உள்ளிட்ட மாநிலங்கள் உச்சநீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்திருப்பதால் இறுதித் தீர்ப்பு நடைமுறையில் இல்லை. அதேவேளை உச்சநீதி மன்றம் இச்சிக்கலுக்கு தீர்வு கானும் வரை காவிரித் தீர்ப்பாயத்தின் இடைக்காலத் தீர்ப்பு தான் செயலில் இருக்கிறது. இடைக்காலத் தீர்ப்பின்படி 205 டி.எம்.சி காவிரி நீர் கர்நாடகம் தமிழகத்திற்கு தர வேண்டும். இந்த இடைக்காலத் தீர்ப்பு 1991 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் இந்திய அரசால் அரசிதழில் வெளியிடப்பட்டு அதற்குரிய அதிகாரம் வழங்கப்பட்டிருக்கிறது. இறுதித் தீர்ப்பு நடைமுறையில் இல்லாத போது இடைக்காலத் தீர்ப்புதான் செயல்படுத்தப்பட வேண்டும்.
கர்நாடக அரசு இடைக்காலத் தீர்ப்பை ஏற்க மறுக்கிறது என்பதற்காக நமக்கு பாதகமாகவும் கர்நாடகத்திற்கு மிகப்பெரிய குலுக்குச்சீட்டு பரிசாகவும் வெளியிடப்பட்டுள்ள இறுதித் தீர்ப்பை செயல்படுத்துமாறு தமிழக அரசு கோருவது தமிழக நலன்களுக்கு ஈடுசெய்ய முடியாத இழப்புகளை ஏற்படுத்தும். மிகப்பெரும் வரலாற்று பிழையாக மாறும்.
 இறுதித் தீர்ப்பு வெறும் 192 டி.எம்.சி தண்ணீர் மட்டுமே தமிழகத்திற்கு ஒதுக்கியது. குரங்கு ஆப்பம் பிரித்த கதையாக அந்த குறைந்த நீரிலும் கர்நாடக குடிநீருக்காக என்று 10 டி.எம்.சியும் கடலில் கலந்து வீணாகும் நீரை தேக்கி வைப்பது என்ற பெயரில் 4டி.எம்.சியும் ஆகமொத்தம் 14 டி.எம்.சி தண்ணீரை தமிழகத்தின் பங்கிலிருந்து கழித்து கர்நாடக அணைகளில் தேக்கிகொள்ள தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பு வழிசெய்துள்ளது.
இதை கழித்து பார்த்தால் தமிழகத்திற்கென்று இறுதித் தீர்ப்பு வழங்கிய தண்ணீர் 178 டி.எம்.சி மட்டுமே. எனவே இடைக்காலத் தீர்ப்பான 205 டி.எம்.சி தண்ணீர் இறுதி முடிவு வரும்வரை தமிழகத்திற்கு கிடைக்கும் வகையில் அந்த இடைக்காலத் தீர்ப்பை இந்திய அரசு மீண்டும் அரசிதழில் வெளியிட வேண்டும் என்றும் அது செயல்படுத்தப்படுவதை கண்காணிக்க நடுவன் அரசின் அதிகாரிகளை கொண்டு கண்காணிப்புக் குழு அமைக்க வேண்டும் என்றும் இந்திய அரசை தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். தீர்ப்பாயத்தின் இறுதித் தீர்ப்பை அரசிதழில் வெளியிடக் கோரும் அவரது நிலைபாட்டை கைவிட வேண்டும் என்றும் கேட்டு கொள்கிறேன்.
தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
இடம்; தஞ்சை,
நாள்: 18.10.2011

Friday, October 14, 2011

கூடங்குளம் அணுஉலைநை நிறுத்தக் கோரி தமிழகமெங்கும் த.தே.பொ.க. போராட்டங்கள்! - பெ.மணியரசன் அறிவிப்பு!


கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிட்டால் தமிழகத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று முதலைக் கண்ணீர் வடிக்கிறார் பிரதமர் மன்மோகன்சிங்! 

தமிழகமெங்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டன ஆர்ப்பாட்டம்!

தலைவர் தோழர் பெ.மணியரசன் கண்டன அறிக்கை!


இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங் தமிழக முதல்வர் செயலலிதாவுக்கு எழுதியுள்ள கடிதத்தில், தமிழகத் தொழில் வளர்ச்சிக்குக் கூடங்குளம் அணு மின்சாரம் மிகவும் தேவை என்று குறிப்பிட்டுள்ளார். கூடங்குளத்தில் உற்பத்தியாகவுள்ள 2000 மெகாவாட் மின்சாரத்தில் 925 மெகாவாட் மின்சாரம் தமிழ்நாட்டிற்கு வழங்கப்படும் என்றும் குறிப்பிட்டுள்ளார். இந்த அணுஉலைத் திட்டத்தைக் கைவிட்டால் தமிழகத்தின் மேம்பாடு மற்றும் தொழில் வளர்ச்சி ஆகியவற்றில் கடும் பாதிப்பு ஏற்படும் என்றும் 'வேதனை'ப்பட்டுள்ளார்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் இந்தியப் பிரதமர் மன்மோகன்சிங்கிற்குத் திடீரென்று இவ்வளவு அக்கறை ஏற்பட்டது பெரும் புதிராக உள்ளது.
தமிழ்நாட்டின் வளர்ச்சியில் மன்மோகன்சிங்கிற்கு உண்மையில் அக்கறை இருக்குமானால் இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள தமிழக நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்குத் தரவேண்டும். நெய்வேலி மின்சாரம் ஒரு நாளைக்குப் பதினோரு கோடி யூனிட் கர்நாடகத்திற்கும், ஒன்பது கோடி யூனிட் கேரளத்திற்கும், ஆறு கோடி யூனிட் ஆந்திரப் பிரதேசத்திற்கும் தரப்படுகிறது. இம்மாநிலங்கள் முறையே காவிரி நீர், முல்லைப் பெரியாறு அணை, பாலாறு ஆகியவற்றில் தமிழகத்திற்குள்ள உரிமைகளை மறுத்து, வேளாண்மை, குடிநீர் மற்றும் நீர் மின்சார உற்பத்தி ஆகியவற்றில் பெரும் பாதிப்பை உருவாக்கியுள்ளன.

ஆந்திரப் பிரதேசம் இராம குண்டத்திலிருந்து 3 கோடி யூனிட் மின்சாரம் ஒருநாளைக்குத் தமிழகத்திற்கு வருகிறது. தமிழக நெய்வேலியிலிருந்து ஆந்திரப் பிரதேசத்திற்கு ஒரு நாளைக்கு ஒன்பது கோடி யூனிட் போகிறது. 6 கோடி யூனிட் கூடுதலாகத் தமிழகம்தான் தருகிறது.

தமிழ்நாட்டிற்கு இப்பொழுது மின்சாரப் பற்றாக்குறை ஒரு நாளைக்கு 22 கோடி யூனிட் ஆகும். கர்நாடக, கேரள, ஆந்திரப் பிரதேச மாநிலங்களுக்கு ஒரு நாளைக்கு 26 கோடி யூனிட் நெய்வேலி மின்சாரம் போகிறது. நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்குக் கொடுத்தால் இப்பொழுதே, மின் உற்பத்தியில் தமிழ்நாடு உபரி மாநிலமாக இருக்கும்.

தமிழகத்தில் கிடைக்கும் பெட்ரோலியம், எரிவளி முழுவதையும் இந்திய அரசு தமிழக அரசிடம் ஒப்படைத்தால், தமிழ் மக்கள் பெட்ரோல், டீசல், எரிவளி ஆகியவற்றிற்கு அன்றாடம் உயரும் அதிக விலை கொடுக்க வேண்டிய தேவை எழாது.

காவிரி, முல்லைப் பெரியாறு அணை ஆகியவற்றில் தமிழ்நாட்டிற்குள்ள உரிமையை உச்சநீதிமன்றம், காவிரித் தீர்ப்பாயம் ஆகியவை உறுதி செய்துத் தீர்ப்பளித்த பின்னும் அத்தீர்ப்புகளைக் குப்பைக் கூடையில் வீசிவிட்டு, தமிழகத்திற்குரிய தண்ணீரை, அம்மாநிலங்களே எடுத்துக் கொள்கின்றன. உச்சநீதிமன்ற – தீர்ப்பாயத் தீர்ப்புகளைச் செயல்படுத்த நடுவணரசுக்கு அதிகாரம் இருந்தும் சுட்டு விரலைக் கூட அசைக்காத பிரதமர் மன்மோகன்சிங் இப்பொழுது, கூடங்குளம் அணுமின் திட்டத்தைக் கைவிட்டால், தமிழ்நாட்டுத் தொழில் வளர்ச்சி பாதிக்கப்படும் என்று 'வேதனை'ப்படுவது முதலைக் கண்ணீர் வடிப்பது தவிர வேறல்ல.

உண்மையில் கூடங்குளம் பெருந்திட்ட அணுமின் நிலைய உற்பத்தியானது தமிழ்நாட்டிலும் பிற மாநிலங்களிலும் வர உள்ள பன்னாட்டு ஏகபோக முதலாளிகளின் நிறுவனங்களுக்குக் குறைந்த விலையில் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காகத்தான்! தமிழக மக்களுக்கும், தமிழகச் சிறு தொழில் முனைவோருக்கும் தருவதற்காகக் கூடங்குளம் அணுமின் திட்டம் உருவாக்கப்படவில்லை.

தமிழ் மக்களின் உயிருக்கு உலை வைத்து, சாதாரண காலங்களில் கூட கதிர்வீச்சால் புற்று நோய் உள்ளிட்ட நோய்களைப் பரப்பும் கூடங்குளம் அணுமின் உலைகள் உண்டாக்கும் அத்தனை இழப்புகளையும் தமிழர்கள் தாங்கிக் கொள்ள வேண்டும்.  ஆனால் கூடங்குளம் அணுமின்சாரம் பன்னாட்டு ஏகபோக நிறுவனங்களுக்குப் பயன்படவேண்டும்.  இதுதான் இந்திய அரசின் திட்டம்.

தமிழக முதலமைச்சர் செயலலிதா அவர்கள் கூடங்குளம் அணுமின் திட்டம் தொடர்பாக ஓர் உறுதியான எதிர்நிலை முடிவுக்கு வரவேண்டும். கூடங்குளம் அணுமின் திட்டத்தை எதிர்த்துப் போராடும் மக்களுக்கும் ஆதரவு, அதே வேளை கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கும் ஆதரவு என்ற இரட்டை நிலைபாட்டை நீண்ட காலம் அவர் எடுக்க முடியாது.

தமிழக மின்சாரத் தேவைக்கு நெய்வேலி மின்சாரம் முழுவதையும் தமிழ்நாட்டிற்கு ஒதுக்குமாறு தமிழக முதல்வர் வலியுறுத்த வேண்டும்.  காற்று, கதிரவன் ஒளி, கடல் அலை, கழிவுப் பொருட்கள் போன்றவற்றின் மூலம் மாற்று மின்சார உற்பத்தி முறைகளைத் தான் நாட வேண்டும்.  சுற்றுச் சூழல் பாதுகாப்பு என்பது மிக மிக முகாமையானது.

கூடங்குளம் அணுமின் திட்டத்தை மூட வலியுறுத்திப் போராடும் மக்களுடன் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியும் இணைந்து கொள்கிறது. கூடங்குளம் அணு மின்திட்டத்தை நிரந்தரமாக மூட வலியுறுத்தித் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி 24.10.2011 அன்று சென்னை, கோவை, மதுரை, ஈரோடு, திருச்சி, தஞ்சாவூர், சிதம்பரம், ஓசூர், திருத்துறைப்பூண்டி, திருச்செந்தூர், கீரனூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

தோழமையுடன்,
பெ.மணியரசன்,
தலைவர்,
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி

இடம்: தஞ்சை
நாள்: 14.10.2011


செய்தி: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு

Thursday, October 6, 2011

பேரறிவாளன், முருகன்ஈ சாந்தன் மூவரையும் வேற்று மாநில சிறைக்கு மாற்ற சூழ்ச்சி - பெ.மணியரசன் பேச்சு!"பேரறிவாளன், முருகன், சாந்தன் மூவரையும்
வேற்று மாநில சிறைக்கு மாற்ற சூழச்சி நடக்கிறது"
சென்னையில் த.தே.பொ.க. பட்டினி்ப்போராட்டத்தில் பெ.மணியரசன் பேச்சு!


"இந்திய அரசால் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவரையும் வேற்று மாநில சிறைக்கு மாற்ற இந்திய அரசு சூழ்ச்சி செய்கிறது. அதனை நாம் முறியடிப்போம்" என்று தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

சென்னை கோயம்பேட்டில், மரண தண்டனைக்கு எதிரான கூட்டமைப்பு சார்பில் பல்வேறு அமைப்புகள் பங்குகொள்ளும் 40 நாட்கள் தொடர் பட்டினிப் போராட்டம் நடந்து வருகின்றது. அதன் 14ஆவது நாளான இன்று(05.10.2011) தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் உண்ணாப் போராட்டம் நடந்தது.

காலை 9 மணியளவில், மூவர் தூக்கை எதிர்த்துத் தீக்குளித்தத் தழல் ஈகி தோழர் செங்கொடியின் படத்திற்கு ஈகச்சுடரேற்றி போராட்டம் தொடக்கப்பட்டது. த.தே.பொ.க தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். பேராசிரியர் அறிவரசன்  உண்ணாப் போராட்டத்தைத் தொடக்கி வைத்துப் பேசினார்.

மாலையில், நடந்த நிறைவரங்கத்தில் தமிழின உணர்வாளர் திருச்சி சவுந்திரராசன் கலந்து கொண்டு பேசினார். இறுதியில், பட்டினிப் போராட்டத்தை முடித்து வைத்து த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் பேசினார்.

அவர் பேசும் போது, "1965இல் இந்தி எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபட்ட நம் தமிழ் மாணவர்கள் 300 பேரை இந்திய அரசு சுட்டுக் கொன்றது. 1987இல் இராசீவ் காந்தியின் உத்தரவின் பேரில் தமிழீழத்திற்குச் சென்ற இந்திய அமைதிப் படை 6000க்கும் மேற்பட்ட ஈழத்தமிழர்களை கொன்றொழித்து, நம் தமிழ்ப் பெண்களை சீரழித்தது. அதே இந்தியப் படை தான் நம் தமிழ்நாட்டு மீனவர்கள் 600 பேரை சிங்களக் கடற்படை சுட்டுக் கொல்வதைப் பார்த்து இரசிக்கிறது. 2009இல் இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றொழிக்க சிங்களவனுக்கு அனைத்து வகையிலும் உதவி செய்தது, இந்திய அரசு. அதன் தொடர்ச்சியாகத் தான் இந்திய அரசு இரத்தவெறி அடங்காமல் இம்மூவருக்கும் தூக்குத் தண்டனை விதித்துள்ளது. தமிழினத்திற்கு மான உணர்ச்சி இருக்கிறதா என சோதித்துப் பார்க்கிறது இந்திய அரசு.

இந்திய அரசின் கைக்கூலிகளான சில காங்கிரசாரை வைத்துக் கொண்டு, இம்மூவர் தூக்கை இரத்து செய்யக் கோரும் வழக்கை வேற்று மாநில நீதிமன்றத்திற்கு மாற்ற இந்திய அரசு சூழ்ச்சி செய்கிறது. சோனியா காந்தி மறைமுகமாக தலையி்ட்டு, இம்மூவரையும் தூக்கிலிட வேண்டும் என்று தனக்கு சாதகமாகத் தீர்ப்பளிக்கும் வேறொரு மாநில நீதிமன்றத்திற்கு இவ்வழக்கை மாற்ற முயற்சிக்கிறார். இந்த சூழ்ச்சியை நாம் புரிந்து கொண்டு வழக்கை வேற்று மாநில நீதிமன்றத்திற்கு மாற்றக் கூடாது என்று நாம் போராட வேண்டும். இந்த சூழ்ச்சியை முறியடிக்க வேண்டும்" என்று பேசினார்.

போராட்டத்தில், ஓவியர் புகழேந்தி, த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் மதுரை அ.ஆனந்தன், ஓசூர் கோ.மாரிமுத்து, நா.வைகறை, க.அருணபாரதி, தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், த.தே.பொ.க. தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு, தமிழக உழவர் முன்னணிப் பொதுச் செயலாளர் தெ.காசிநாதன், தமிழக இளைஞர் முன்னணி சிதம்பரம் நகர அமைப்பாளர் ஆ.குபேரன், கீற்று இணையதள ஆசிரியர் குழுத் தோழர் கீற்று நந்தன், தமிழ்ச்சமரன், பெருஞ்சித்திரன்(த.ஓ.வி.இ.), தஞ்சை மகளிர் ஆயம் தோழர் இலெட்சுமி, சென்னை அருணா, சோளிங்கர் பகுதியைச் சேர்ந்த உணர்வாளர்கள் அருட்தந்தை அருண் ஏபேஸ், கதிரவன், பால் டேனியல் ஆகியோர் கருத்துரை வழங்கினர். கவிஞர்கள் கவிபாஸ்கர், முழுநிலவன் ஆகியோர் மரண தண்டனைக்கு எதிரான கவிதைகள் வாசித்தனர். உண்ணாப்போராடத்திற்கு இடையே, தழல் ஈகி செங்கொடியின் இறுதி நிகழ்வும், பேரறிவாளன் அற்புதம் அம்மையாரின் செவ்வியும் அடங்கிய குறும்படங்கள் திரையிடப்பட்டன.

போராட்டத்தில் திரளான இளைஞர்களும், தமிழின உணர்வாளர்களும் கலந்து கொண்டனர்.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவு

Monday, October 3, 2011

மூன்று தமிழர் தூக்கு தண்டனையை நீக்க சென்னையில் 05.10.2011 அன்று த.தே.பொ.க. உண்ணாப்போராட்டம்!

பேரறிவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூவர் சாவுத் தண்டனையை நீக்க

தமிழக அரசே அமைச்சரவைத் தீர்மானம் நிறைவேற்றுக!

05.10.2011 அன்று சென்னை கோயம்பேட்டில்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அடையாள உண்ணாப்போராட்டம்

 

பேரறவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களின் சாவுத் தண்டனையை நிறுத்தி வைக்க தமிழக அரசு உடனடியாக அமைச்சரவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்ற வேண்டும் என்று கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 05.10.2011 அன்று சென்னை கோயம்பேட்டில் ஒருநாள் அடையாள உண்ணாப்போராட்டம் நடக்கிறது.

 

இராசீவ் கொலை வழக்கில் பொய் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டு கடந்த 20 ஆண்டுகளுக்கும் மேலாக சிறையில் வாடி வரும், பேரறவாளன், முருகன், சாந்தன் ஆகிய மூன்று தமிழர்களுக்கு இந்திய அரசு சாவுத் தண்டனையை உறுதி செய்தது.

 

முள்ளிவாய்க்காலில் இலட்சக்கணக்கில் ஈழதமிழர்களைக் கொன்றொழித்த சிங்கள அரசுக்கு அனைத்து வகை உதவிகளையும் செய்த இந்திய அரசு, அதன் இரத்த வெறி அடங்காமல் இந்த மூன்று தமிழர்களுக்கும் சாவுத் தண்டனையை உறுதி செய்ததை கண்டு தமிழக மக்கள் கொதித்தெழுந்தனர்.

 

இதன் காரணமாக தமிழக மக்களின் போர்க்குணமிக்க போராட்டங்களை கண்டு அஞ்சிய தமிழக அரசு, சட்டப்பேரவையில் மூவர் தூக்கை நிறுத்தி வைக்க ஆதரவு தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றியது. சென்னை உயர்நீதிமன்றமும் மூவர் தூக்கிற்கு 8 வார கால இடைக்காலத தடையாணை வழங்கியது.

 

இந்நிலையில், இந்திய அரசமைப்புச் சட்டத்தின் 161இன் பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தின் படி, தமிழக அரசு தனது அமைச்சரவைக் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அதனை ஆளுநருக்கு அனுப்பினாலேயே இத்தூக்குத் தண்டனையை நீக்க முடியும் என்று சட்ட வல்லுநர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

 

இக்கோரிக்கையை ஆதரித்து வரும் புதன் (05.10.2011) அன்று காலை 9 மணியிலிருந்து மாலை 5 மணி வரை சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம் அருகில் உள்ள ஆட்டோ கெரேஜில், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் ஒரு நாள் அடையாள உண்ணாப்போராட்டம் நடக்கிறது.

 

இப்போராட்டத்தை த.தே.பொ.க. தலைமைப் பொதுக்குழு உறுப்பினர் தோழர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்கி தொடக்கி வைக்கிறார். த.தே.பொ.க. தலைவர் தோழர் பெ.மணியரசன் உண்ணாப் போராட்டத்தை முடித்து வைத்துப் பேசுகிறார்.

 

இதில், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர்கள் தோழர்கள குழ.பால்ராசு, மதுரை அ.ஆனந்தன், க.அருணபாரதி, பொதுக்குழு உறுப்பினர்கள் தஞ்சை பழ.இராசேந்திரன், பெண்ணாடம் க.முருகன், கு.சிவப்பிரகாசம், தமிழக இளைஞர் முன்னணி பொதுச் செயலாளர் தோழர் நா.வைகறை, சிதம்பரம் அமைப்பாளர் ஆ.குபேரன் உள்ளிட்ட அமைப்பின் பல்வேறு நிர்வாகிளும், திரளான தோழர்களும் கலந்து கொள்கிறார்கள்.

 

தமிழின உணர்வாளர்களும், மனித நேயர்களும் இவ்வுண்ணாப் போராட்டத்தில் திரளாக பங்கேற்க வேண்டுமென தமிழ்த தேசப் பொதுவுடைமைக் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது.

 

 

செய்தி: தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, வெளியீட்டுப் பிரிவுபோராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT