உடனடிச்செய்திகள்

Wednesday, April 28, 2010

முல்லைப் பெரியாறு: தமிழக அரசுக்கு த.தே.பொ.க. கடும் கண்டனம்

முல்லைப் பெரியாறு அணை
புதிய ஆய்வுக் குழுவைத் தமிழக அரசு ஏற்றுக்கொண்டது
தமிழக அரசு உரிமையைப் பலியிட்ட செயலாகும்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் தஞ்சையிலிருந்து 22.04.2010 அன்று வெளியிட்ட அறிக்கை:

முல்லைப் பெரியாறு அணை வலுவாக உள்ளதால் அதில் முழுக் கொள்ளளவுக்குத் தண்ணீர் தேக்க ஆணையிடக் கோரித் தமிழக அரசும் உழவர்களும் தொடுத்த வழக்கில் உச்சநீதிமன்றம் 2006ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 27ஆம் நாள் தீர்ப்பளித்தது.

அணை வலுவாக உள்ளது என்று மண்ணியல் மற்றும் நீரியல் வல்லுநர் குழுக்கள் அளித்த பரிந்துரையை ஏற்று அணையில் தற்போதுள்ள 136 அடிக்குப் பதிலாக முதல் கட்டமாக 142 அடி தண்ணீர் தேக்கலாம்.
மண் அணையில் சிறு செப்பனிடும் பணிகளைச் செய்து முடித்தபின் முழுக் கொள்ளளவான 152 அடி வரை தண்ணீர் தேக்கலாம் என்று ஆணையிட்டது.

உச்சநீதி மன்றத் தீர்ப்பைத் தடுக்கும் வகையில் அரசமைப்புச் சட்டத்திற்குப் புறம்பாகக் கேரளம் இயற்றிய சட்டத்தை நீக்கக் கோரியும், தீர்ப்பை செயல்படுத்தும்படி கேரள அரசுக்கு ஆணையிடக் கோரியும் தமிழக அரசு தொடுத்த வழக்கிற்கு உரிய தீர்ப்பை வழங்காமல் உச்ச நீதி மன்றம் 18.2.2010 அன்று, அணையின் வலுத்தன்மையை ஆய்வு செய்து பரிந்துரைக்க புதிய ஆய்வுக் குழு ஒன்றை அமைத்தது. அக்குழுவில் தமிழகமும் கேரளமும் தலா ஒரு பிரதிநிதியை அமைக்கக் கோரியது.

உச்சநீதி மன்றத்தின் இம் முடிவு சட்ட நெறிமுறைகளுக்குப் புறம்பானது என்றும் மறுபடியும் புதிய ஆய்வுக்குழு ஒன்றை அமைக்கத் தேவையில்லை என்றும் கூறிய தமிழக அரசு, தன் சார்பில் பிரதிநிதியை நியமிக்கமாட்டோம் என்று அறிவித்து அது குறித்து உச்சநீதி மன்றத்திலும் வாதாடியது. இதே நிலைபாட்டுடன் தி.மு.க. தனது பொதுக்குழுவிலும் தீர்மானம் நிறைவேற்றியது. ஆனால் உச்சநீதி மன்றம் புதிய குழு அமைக்க வேண்டும் என்றும் தமிழகம் தனது பிரதிநிதியை அனுப்ப வேண்டும் என்றும் மீண்டும் கூறியது.

இப்பொழுது தி.மு.க. அரசு குட்டிக் கர்ணம் போட்டு முல்லைப் பெரியாறு வலுவைச் சோதிக்கும் புதிய குழுவிற்குத் தனது பிரதிநிதியாக ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி ஏ.ஆர்.இலட்சுமணன் அவர்களை அமர்த்தியுள்ளது.

இம்மாற்றத்திற்கான காரணங்களை 21.4.2010 அன்று சட்டப்பேரவையில் பேசிய முதலமைச்சர் கருணாநிதி, தமிழகப் பிரதிநிதியை அமைக்குமாறு வலியுறுத்தி நடுவண் அரசு 8.3.2010 அன்றும் 5.4.2010 அன்றும் இரு மடல்கள் தமிழக அரசுக்கு எழுதியிருப்பதாகக் கூறினார். அத்துடன் உச்சநீதி மன்றத் தீர்;ப்புதான் தமது அரசுக்கு முக்கியம் என்றும் அதன் அடிப்படையிலேயே பிரதிநிதியை நியமித்திருப்பதாகவும் கூறினார்.

இதே உச்சநீதிமன்றம் 27.2.2006 அன்று 142 அடி தண்ணீர் தேக்கலாம் என்று அளித்த தீர்ப்பைக் கேரள அரசு துச்சமாகத் தூக்கி எறிந்து அதை நிறைவேற்ற மறுத்துவிட்டது. அத்தீர்ப்பை உச்சநீதி மன்றமும் முக்கியமானதாகக் கருதவில்லை, நடுவண் அரசும் முக்கியமானதாகக் கருதவில்லை. அத்தீர்ப்பை நிறைவேற்ற வேண்டுமென்று ஒரு மடல் கூட கேரள அரசுக்கு நடுவண் அரசு எழுதவில்லை.

இந்தப் பின்வாங்கல், முல்லைப் பெரியாறு அணையில் உள்ள உரிமையை தமிழக அரசு தானே முன்வந்து கைவிடுவதற்குச் சமம் ஆகிவிட்டது. இது எங்கே போய் முடியும்? எப்படி முடியும் என்ற பெருங்கவலை அக்கறையுள்ள அனைவர்க்கும் ஏற்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு உரிமைக்காக உச்ச நீதி மன்றத்தில் வாதாடிய போதே (17.2.2010) தமிழக அரசு சார்பில் பேசிய வழக்கறிஞர் பராசரன், புதிய ஆய்வுக்குழு அமைப்பதை ஏற்றுக் கொண்டார்.

முல்லைப் பெரியாறு அணை வழக்கைக் கவனித்து வந்த அக்கறையுள்ளோர் புதிய ஆய்வுக்குழுவை ஏற்பதால் ஏற்படப் போகும் ஆபத்தைச் சுட்டிக் காட்டிய பின் தமிழக அரசு தனது கருத்தை மாற்றிக் கொண்டு, புதிய ஆய்வுக் குழு அமைப்பதை எதிர்த்தது. இப்போது அந்த நிலையையும் கைவிட்டு புதிய ஆய்வுக் குழுவிற்கு பிரதிநிதியை நியமித்துள்ளது.

தமிழக அரசின் இந்த உறுதியற்ற சந்தர்ப்பவாத நிலைபாடுகள் கேரள அரசிற்குச் சாதகமானது. 2006 பிப்ரவரி 27 தீர்ப்பிற்கு முன்பிருந்த நிலைக்கு முல்லைப் பெரியாறு வழக்கைப் பின்தள்ளி விட்டார் கருணாநிதி.

இதே போன்று உறுதியற்ற சந்தர்ப்பவாத முடிவுகளை அவ்வப்போது எடுத்துத்தான் காவேரி உரிமையைப் பலியிட்டார் கருணாநிதி. இப்பொழுது முல்லைப் பெரியாறு உரிமையைக் காவு கொடுக்கிறார். அது மட்டுமின்றி அமராவதிக்கு வரும் நீரைத் தடுத்துப் பாம்பாற்றில் கேரளம் அணைகட்டுவதையும் ஆதரித்து இப்பொழுது சட்டப் பேரவையில் அவர் கருத்துக் கூறியுள்ளார்.

உச்சநீதி மன்றம் தனது தீர்ப்பைத் தானே மறுதலித்து அமைத்துள்ள புதிய ஆய்வுக் குழுவைத் தமிழக அரசு ஏற்க மறுத்து அதில் உறுதியைக் கடைப்பிடித்தால் அரசமைப்புச் சட்ட நெருக்கடி ஏற்பட்டு விவரிவான விவாதங்கள் நடந்து, உச்சநீதி மன்றம் தனது முடிவை மாற்றிக் கொள்ளும் படியான நெருக்குதல் உண்டாகியிருக்கும். அதைவிடுத்து, தமிழக அரசு பின்வாங்கி, கேரள அரசுக்குச் சாதகமாக நடந்து கொண்டுள்ளது.

முல்லைப் பெரியாறு அணையை இடிக்கத் திட்டமிடும் கேரளம் இனி, அத்திசையில் உறுதியாகச் செயல்படும்.

இனி முல்லைப் பெரியாறு அணை உரிமையைக் காப்பாற்ற வேண்டுமெனில், கேரள இந்திய அரசுகளை எதிர்த்துத் தமிழக மக்கள் கடுமையாகப் போராடுவதைத் தவிர வேறு வழியில்லை.

Sunday, April 25, 2010

மலேசியா அரசு ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது சென்னை மலேசியத் தூதரகத்தில் மனு

மலேசியா அரசு ஈழத்தமிழர்களை திருப்பி அனுப்பக் கூடாது
சென்னை மலேசியத் தூதரகத்தில் மனு
சென்னை, 25.04.2010.

சிங்கள இனவெறி அரசு நடத்தியப் போரில் பாதிப்புற்று, வன்னி வதைமுகாம்களில் அடைக்கப்பட்டு பின் விடுதலையான ஈழத்தமிழர்கள் 75 பேர், வாழ வழியின்றி மலேசியாவிற்கு அகதிகளாக சென்றனர். அவர்களை மலேசிய அரசு கைது செய்து இலங்கைக்கு திரும்ப அனுப்பப் போவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்நிலையில், தஞ்சம் கோரி வந்த தமிழர்களை திரும்ப இலங்கைக்கு அனுப்பக் கூடாது என்று வலியுறுத்தி, தமிழகத் தலைநகர் சென்னையில் அமைந்துள்ள மலேசியத் தூதரகத்தில் மனு அளிக்கப்பட்டது.

இன்று(25.04.2010) காலை சென்னை நுங்கம்பாக்கம் மலேசியத் தூதரகத்திற்குச் சென்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் இம்மனுவை மலேசியத் துணைத் தூதர் அன்வர் கஸ்மான் அவர்களிடம் நேரில் வழங்கினார். பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்டத் துணைச் செயலாளர் குமரன், தமிழ்த் தேசிய விடுதலை இயக்கத்தின் அமைப்புக்குழு உறுப்பினர் சிவகாளிதாசன், இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி உள்ளிட்டோர் அப்போது உடனிருந்தனர்.

மனுவைப் பெற்ற மலேசியத் துணைத் தூதர், இம்மனுவின் விபரங்களை தில்லியில் உள்ள மலேசியத் தூதரிடம் கூறுவதாகவும், தங்கள் உணர்வுகளை புரிந்து கொள்வதாகவும் கூறினார்.

அம்மனுவில் குறிப்பிடப்பட்டிருப்பதாவது:

இலங்கையில் வன்னி முகாம்களில் வதைபட்டு பின்னர், இலங்கை அரசால் விடுவிக்கப்பட்ட தமிழர்கள் தங்கள் சொந்த வீடுகளும் கிராமங்களும் தகர்க்கப்பட்டும், சிங்களர்களால் ஆக்கிரமிக்கப்பட்டும் இருப்பதால் வாழ வழியின்றி மலேசியாவுக்கு அடைக்கலம் தேடி வந்துள்ளார்கள். அவ்வாறு படகில் வந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் உள்ளிட்ட 75 பேரை மலேசிய அரசின் கப்பல் படை, தடுத்து பினாங்குத் துறைமுகம் அருகில் நிறுத்தியுள்ளது.

அவர்களுக்கு அடைக்கலம் தரமறுப்பதுடன் இலங்கைக்கு திருப்பி அனுப்பப் போவதாக மலேசிய அரசு கூறுகிறது. “திருப்பி அனுப்பினால் இலங்கை அரசு எங்களைக் கொன்று விடும். அடைக்கலம் கொடுங்கள்; திருப்பி அனுப்பினால் குழந்தைகளுடன் நாங்கள் அனைவரும் கடலில் குதித்து இங்கேயே செத்துப்போவோம்” என்று தமிழ் மக்கள் கூறுகிறார்கள்.

மலேசிய அரசு, மனித நேய அடிப்படையிலும், ஐ.நா. மனித உரிமை அட்டவணைப்படியும் போரினால் பாதிக்கப்பட்டு அடைக்கலம் தேடி வந்துள்ள ஈழத்தமிழர்கள் மலேசியாவில் தங்க அனுமதி அளிக்குமாறு கேட்டுக் கொள்கிறோம். எக்காரணம் கொண்டும் அவர்களை இலங்கைக்குத் திருப்பி அனுப்ப வேண்டாம் என்றும் அவ்வாறு திருப்பி அனுப்பினால் 75 உயிர்களை மலேசிய அரசு ஒரு கொலைக்களத்திற்கு அனுப்பி வைத்ததாகும் என்றும் தெரிவித்துக் கொள்கிறோம்.

Sunday, April 18, 2010

இந்திய அரசைக் கண்டித்து தஞ்சையை உலுக்கிய உழவர்கள் மாநாடு!

இந்திய அரசு நடப்பு நாடாளுமன்ற கூட்டத் தொடரில் கொண்டுவர இருக்கும் வேளாண் விரோத கருப்புச் சட்டங்களைக் கண்டித்து தஞ்சையில் பல்வேறு உழவர் அமைப்புகள் இணைந்து நடத்திய மாநாடு நேற்று(18.04.2010) நடைபெற்றது. இதில் பல்வேறு உழவர் அமைப்புத் தலைவர்களும், அரசியல் கட்சித் தலைவர்களும், மனித உரிமை ஆர்வலர்களும் திரளாக கலந்து கொண்டனர்.

விதைச் சட்டம், உயிரித்தொழில் நுட்ப ஆணையச் சட்டம், வெளிநாட்டு நிறுவனங்கள் வேளாண் பண்ணைகள் அமைக்க அனுமதிக்கும் சட்டம் ஆகியவை நடப்பு நாடாளுமன்றக் கூட்டத் தொடரில் முன்வைக்கப்பட்டுள்ளன. மான்சான்டோ, சின்ஜென்டா, டுஃபான்ட் போன்ற பன்னாட்டு விதை நிறுவனங்களுக்கு ஆதரவாகவும், கருத்துரிமையைப் பறிக்கும் வகையிலும் இச்சட்டங்கள் அமைந்துள்ளன. மேலும், கிராமப்புறங்களில் வெளிநாட்டுக் கம்பெனிகளின் பண்ணைகள் அமைப்பதற்கு வழிசெய்யப்பட்டுள்ளது.

உழவர்களின் வேளாண் தொழிலையும், தமிழர்களின் தாயகத்தையும் பறிக்கிற சூதான இந்தச் சட்டங்களை எதிர்த்து உழவர் அமைப்புகளின் ஆலோசனைக் கூட்டம் தஞ்சையில் 25.03.2010 அன்று நடைபெற்றது. அக்கூட்டத்தில் இம்மாநாடு நடத்தத் திட்டமிடப்பட்டது.

அதன்படி, நேற்று தஞ்சை ஆபிரகாம் பண்டிதர் சாலையில் இம்மாநாடு நடைபெற்றது. மாநாட்டிற்கு இயற்கை வேளாண் விஞ்ஞானி திரு கோ.நம்மாழ்வார் தலைமை தாங்கினார். “மீண்டும் ஒரு சுதந்திரப் போராட்டத்தை நடத்த அறிவாளர்களும், உழவர்களும் திரள வேண்டும்என்று குறிப்பிட்டார்.

மனித நேய மக்கள் கட்சி தஞ்சை மாவட்டத் தலைவர் திரு ஜெ.கலந்தர், தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி தஞசை மாவட்டச் செயலாளர் திரு பழ.இராசேந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்கத்தின் மாவட்டச் செயலாளர் திரு பன்னீர்செல்வம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தாளாண்மை உழவர் இயக்கத்தி்ன் செயலாளர் திரு பாமயன் வரவேற்புரையாற்றினார். இதனைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் தம் கண்டன உரையை நிகழ்த்தினர்.

கிரீன் பீஸ் அமைப்பின் வெளியீடான் ஆங்கில நூல், தமிழில் “மரபீனீ சூதாட்டம் என்ற பெயரில் மொழிப் பெயர்க்கப்பட்டு மாநாட்டு அரங்கில் வெளியிடப்பட்டது. இயற்கை வேளாண் தொடர்பான நூல்களும், இந்திய அரசின் கருப்புச் சட்டங்களை விளக்கும் நூல்களும் பெருமளவில் விற்பனையாயின.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் திரு.பெ.மணியரசன் தம் கண்டன உரையின் போது, “இந்த சட்டங்கள் அமெரிக்க காலனியாக இந்தியத் துணைக் கண்டத்தை மாற்றுகிற முயற்சி என்றும் “பிரதமர் மன்மோகன் சிங் அமெரிக்காவின் இந்திய வைசிராயாக செயல்படுகிறார் என்றும் பேசினார்.

மக்கள் சிவில் உரிமைக் கழகத் தலைவர் முனைவர் வீ.சுரேஷ், “கம்பெனிகளுக்கு எதிராக பேசுவதையே தடுக்கும் வாய்ப்புட்டுச் சட்டங்களாக விதைச்சட்டமும் உயிரித் தொழில்நுட்பச் சட்டமும் இருப்பதால் இதனை கருப்புச் சட்டம் எனக் கண்டிக்கிறோம்“ என்றார்.

தொடர்ந்து, இந்தியக் கம்யுனிஸ்ட் கட்சி மாநிலத் துணைச் செயலாளர் திரு.சி.மகேந்திரன், மனித நேய மக்கள் கட்சியின் துணைப் பொதுச் செயலாளர் திரு மு.தமிமுன் அன்சாரி, தாளாண்மை உழவர் இயக்க மையக்குழு உறுப்பினர் திரு ச.ரா.சுந்தரராமன், தமிழக விவசாயிகள் சங்கத்தின் மாவட்டத் தலைவர் திரு க.சம்பந்தம், தமிழ் மாநில விவசாயிகள் சங்கத்தின் துணைத் தலைவர் திரு சோம.இராஜமாணிக்கம், பெட்காட் தலைவர் திரு. ஜெயராமன், தமிழக மக்கள் உரிமைக் கழகத்தின் பொதுச் செயலாளர் திரு அரங்க. குணசேகரன், கா.சா. கள அலுவலர் திரு கல்யாணராமன், கேரளாவின் தணல் அமைப்பைச் சேர்ந்த உஷா மற்றும் ஸ்ரீதர் ஆகியோர் கண்டன உரையாற்றினர். மாநாட்டுப் பேச்சாளர்கள் இந்திய அரசின் கருப்புச் சட்டங்கள் திரும்பப் பெறப்பட வேண்டும் என்று வலியுறுத்தினர்.

நிறைவில், தமிழக உழவர் முன்னணியின் ஆலோசகர் திரு.கி.வெங்கட்ராமன், இந்திய அரசின் கருப்புச் சட்டங்களை விளக்கிப் பேசினார்.பொதுவுடைமை இயக்கங்களும் திராவிட இயக்கமும் அடித்தட்டு மக்களின் மேன்மைக்கு பங்களிப்பை செய்திருக்கின்றனர் என்ற போதிலும் “வேளாண்மை இழிவானது - தமிழரின் மரபு அறிவுத் தொழில்நுட்பம் கீழானது - கிராமம் என்பது பிற்போக்கின் மையம் என்று கருத்துகள் பரவச் செய்தார்கள். இன்னொரு பக்கம் வேளாண்மை நெருக்கடிளில் இருக்கின்றது. இவை இரண்டின் விளைவாக நிலத்தை இழப்பதற்கு உழவர்களே முன்வரும் சூழல் உருவாக்கப்பட்டுள்ளதுஎன்று தம் பேச்சில் அவர் குறிப்பிட்டார்.

இந்திய அரசின் இந்தக் கருப்புச் சட்டங்கள் வரைவு நிலையிலேயே திரும்பப் பெறப்பட வேண்டும், உழவர்களுக்கு நேரடி வருவாய் வழங்கக்கூடிய வருவாய் ஆணையம் நியமிக்கப்பட வேண்டும், தமிழ்நாட்டில் உயிரிப் பட்டய வாரியம் ஏற்படுத்த வேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டன.

தமிழக உழவர் முன்னணியின் பொதுச் செயலாளர் திரு தெ.காசிநாதன் மாநாட்டில் கலந்து கொண்டவர்களுக்கு நன்றி கூறினார். திரு கோ.திருநாவுக்கரசு, திரு கு.பழனிவேல் ஆகியோர் மாநாட்டுப் பணிகளை ஒருங்கிணைத்திருந்தனர்.

பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியதற்கு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

சிகிச்சைக்காகச் சென்னைக்கு வந்த
பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பியதற்கு
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி கண்டனம்

தஞ்சை, 17.04.2010

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை:

தமிழீழ தேசியத் தலைவர் திரு. பிரபாகரன் அவர்களின் அன்னையார் திருமதி பார்வதி அம்மாள் அவர்கள், தமது எண்பது வயதில் கடுமையாக நோயுற்று சென்னையில் உயர் சிகிச்சை பெற மலேசியாவிலிருந்து விமானத்தில், 16.04.2010 அன்று இரவு வந்த போது அவரை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் தரையிறங்க விடாமல் இந்திய அரசும் தமிழக அரசும் சேர்ந்து தடுத்து, அவரைத் திரும்ப மலேசியாவுக்கு அனுப்பி விட்டார்கள்.

இந்திய தமிழக அரசுகளின் இந்தச் செயல் மனித நேயமற்ற செயல்மட்டுமல்ல. தமிழ்நாட்டுத் தமிழ் மக்களை இழிவுபடுத்தும் செயலும் ஆகும்.

படுத்த படுக்கையாய் உள்ள எண்பது வயது மூதாட்டி சென்னையில் தங்கி சிகிச்சை பெற்றால் இந்தியாவுக்கு என்ன ஆபத்து நேர்ந்துவிடும்!

முறையாக விசாவுக்கு விண்ணப்பித்து மலேசியாவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்திய அரசுடன் கலந்து பேசி, திருமதி பார்வதி அம்மையார் சென்னை வர விசா வழங்கியுள்ளது.

ஆனால், சென்னை விமான நிலையத்தில் பார்வதி அம்மையாரையும் அவருடன் வந்த பெண உதவியாளரையும் இந்திய அரசின் குடிவரவு அதிகாரிகளும் தமிழகக் காவல்துறையினரும் விமானத்தை விட்டு இறங்கவிடாமல் தடுத்து, அதே விமானத்தில் அவர்களை மலேசியாவுக்குத் திருப்பி அனுப்பிவிட்டனர்.

உயிருக்குப் போராடிக் கொண்டிருக்கும் எண்பது வயது மூதாட்டி எந்த நாட்டிலும் மருத்துவ உதவி பெறுவதற்கு மருத்துவத்துறை நீதியும் மனித உரிமையும் அனுமதிக்கும்.

விசா வழங்கிவிட்டு திருப்பி அனுப்புவது மனித உரிமை மீறல் குற்றம் மட்டுமல்ல. மருத்துவநீதியை மறுப்பதும் ஆகும்.

பார்வதி அம்மையார் பிரபாகரனுக்கு மட்டும் தாய் இல்லை. ஒட்டுமொத்த தமிழ் இனத்தின் தாயாக உலகம் முழுவதும் உள்ள தமிழர்களால் போற்றப்படுகிறார். அவர் மீது அனைத்துத் தமிழர்களும் பாசம் வைத்துள்ளனர். அவரை வர அனுமதித்துத் திருப்பி அனுப்பியது அவரை மட்டுமல்ல ஒட்டு மொத்த தமிழ் இனத்தையும் அவமானப்படுத்திய செயலாகும்.

சிகிச்சையாகப் படுத்த படுக்கையாய் விமானத்தில் வந்த மூதாட்டி பார்வதி அம்மையாரைத் திருப்பி அனுப்பிய இந்திய - தமிழகக் கொடுங்கோலர்களின் தமிழ் இன எதிர்ப்பு உணர்ச்சியைக் கண்டித்து, மனித நேயம் உள்ளவர்களும் தமிழ் இன உணர்வாளர்ககளும் கண்டனப் போராட்டங்களை நடத்துமாறு தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT