உடனடிச்செய்திகள்

Friday, February 26, 2021

தோழர் தா. பாண்டியன் மறைவு பாசிச எதிர்ப்புப் போரில் பேரிழப்பு! ஐயா பெ. மணியரசன் இரங்கல்!



தோழர் தா. பாண்டியன் மறைவு
பாசிச எதிர்ப்புப் போரில் பேரிழப்பு!

தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் 
பெ. மணியரசன் இரங்கல்!


இந்தியக் கம்யூனிஸ்ட்டுக் கட்சியின் தமிழ்நாட்டுத் தலைவர்களில் ஒருவரான தோழர் தா. பாண்டியன் அவர்கள் (அகவை 88) இன்று 26.02.2021 முற்பகல் சென்னை அரசு தலைமை மருத்துவமனையில் காலமானார் என்ற துயரச் செய்தி வேதனை அளிக்கிறது.

சிறுநீரகப் பாதிப்பில் டயாலிசிஸ் என்ற சிகிச்சையில் இருந்த நிலையிலும் தா.பா. அவர்கள் மனவலிமையுடன் தமது அரசியல் பணிகளில் சுறுசுறுப்பாக ஈடுபட்டு கருத்துகள் கூறிவந்தார்.

முதுகலை மற்றும் வழக்கறிஞர் பட்டம் பெற்று, கல்லூரிப் பேராசிரியர், உயர் நீதிமன்ற வழக்கறிஞர் என்ற வாய்ப்புகள் இருந்தும், அவற்றில் நாட்டமின்றி மார்க்சிய – லெனினிய வழியில் புரட்சிப்பணியில் ஈடுபட வேண்டும் என்று அதற்கான முழுநேரப் பணியைத் தேர்வு செய்தார் தா.பா! தோழர் ஜீவாவுக்குப் பிறகு தமிழ் இலக்கியத்தையும் மார்க்சியத்தையும் இணைத்து மேடைகளில் வழங்கியவர் தா.பா. பல நூல்கள் எழுதியுள்ளார்.

இந்தியாவில் பொதுவுடைமை இயக்கத்தினர் பெரும் ஈகங்கள் செய்து போராடிய போதும் அனைத்திந்திய அளவில் வளர்ச்சி அடையாததேன் என்ற வினாவுக்கு விடையளிக்கும் வகையில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் “பொதுவுடைமையரின் எதிர்காலம்” என்ற நூல் எழுதினார்.

இந்தியாவில் பல தேசிய இனங்கள், பல தேசங்கள் இருக்கின்றன. இவற்றின் தனித்தன்மைகளை ஏற்க வேண்டும். இந்தியாவிற்கான ஒற்றைத் தலைமை கொண்ட அனைத்திந்திய தேசியக்குழு, நடுவண்குழு என்பவற்றைக் கலைத்துவிட்டு, ஒரு கூட்டிணக்கக் குழு (Coordination Committee) தலைமையில் பொதுவுடைமை இயக்கம் செயல்பட வேண்டும் என்பது உட்பட பல மறுக்கட்டமைப்புப் பரிந்துரைகளை அந்நூலில் கூறியிருந்தார்.

இரண்டு ஆண்டுகளுக்கு முன் உடல் நலம் பாதிக்கப்பட்டு சென்னையில் வீட்டிலிருந்த போது அவர் நலம் கேட்க நானும், புலவர் இரத்தினவேலவன் அவர்களும் நம் தோழர்களும் சென்றிருந்தோம். அப்போது இந்த நூல் குறித்து என்னிடம் பேசி அவசியம் படிக்க வேண்டும் என்று கூறியதுடன், தஞ்சை என்.சி.பி.எச். பொறுப்பாளர் மூலம் அந்நூல் எனக்கு கிடைக்கச் செய்தார். கடந்த ஆண்டு சென்னை மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோதும் நானும், தோழர் கி.வெ.அவர்களும் சென்று நலம் விசாரித்தோம்.

மாறுபட்ட கருத்துகள் கொண்டோருடனும் அன்பாகப் பழகக் கூடிய பண்பாளர் தோழர் தா.பா அவர்கள்.

பா.ச.க., பாசிசத்தைக் கடுமையாக எதிர்த்து வந்தார். ஆரியத்துவா பாசிச எதிர்ப்பைக் கூர்மைப் படுத்த வேண்டிய காலத்தில் தோழர் தா.பா. அவர்களின் மறைவு பேரிழப்பாகும்.

தோழர் தா.பா அவர்களின் மறைவிற்குத் தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

 


Friday, February 12, 2021

“கேந்திரிய வித்தியாலயாவை தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்று! ” - ஐயா பெ.மணியரசன் நேர்காணல்!.


கேந்திரிய வித்தியாலயாவை

 தமிழ்நாட்டிலிருந்து வெளியேற்று!  ”


ஐயா பெ.மணியரசன் நேர்காணல்!. 



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Thursday, February 11, 2021

“நெய்வேலி வேலை சேர்ப்பில் தமிழர்கள் முற்றிலும் புறக்கணிப்பு ” - ஐயா பெ.மணியரசன் ஆவேசம்!.


நெய்வேலி வேலை சேர்ப்பில்

 தமிழர்கள் முற்றிலும் புறக்கணிப்பு  ”


ஐயா பெ.மணியரசன் ஆவேசம்!. 



கண்ணோட்டம் வலையொளியில்..!!!

Friday, February 5, 2021

பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு முதலமைச்சர் உண்மையை உரைக்க வேண்டும்! ஐயா கி. வெங்கட்ராமன்


பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலையில் தமிழ்நாடு முதலமைச்சர் உண்மையை உரைக்க வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர் 
ஐயா கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!


தனது சட்டக் கடமையை முற்றிலும் மீறி ஏழு தமிழர் விடுதலை குறித்து தான் முடிவெடுக்க முடியாது என்றும், குடியரசுத் தலைவர்தான் முடிவெடுக்க முடியும் என்றும் தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிக்கிறது.

உச்ச நீதிமன்றத்தில் தனது முன்விடுதலை கோரி பேரறிவாளன் தொடுத்த வழக்கில், நீதிபதி நாகேசுவரராவ் தலைமையிலான அமர்வு, பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் முன்விடுதலை தொடர்பாக தமிழ்நாடு அமைச்சரவை அளித்த பரிந்துரையின் மீது இரண்டு ஆண்டுகளைக் கடந்தும் ஆளுநர் முடிவெடுக்காமல் இருப்பது அதிருப்தி அளிப்பதாக தனது கண்டனத்தை வெளிப்படையாகப் பதிவு செய்தது.

இதைத் தொடர்ந்து உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்குரைஞர், ஆளுநர் மூன்று நாட்களில் இதுகுறித்து முடிவெடுப்பார் என்று முதலிலும், அடுத்த நாள் ஒருவாரத்தில் முடிவெடுப்பார் என்றும் பதிலுரை தாக்கல் செய்தது.

இந்நிலையில், 2021 சனவரி 25ஆம் நாளிட்ட தனது கடிதத்தின் வழியாக ஆளுநர் “இதுகுறித்து, தான் முடிவெடுக்க முடியாது. தொடர்புடைய அதிகாரமுள்ளவர் குடியரசுத் தலைவர்தான்” என்று தெரிவித்துவிட்டதாக நேற்று (04.02.2021) உச்ச நீதிமன்றத்தில் இந்திய அரசு வழக்குரைஞர் பதிலுரை அளித்திருக்கிறார்.

அரசமைப்புச் சட்ட உறுப்பு 163-இன்படி, ஆளுநர் மாநில அமைச்சரவையின் முடிவுக்குக் கட்டுப்பட்டவர் ஆவார். அவருக்கு எந்தத் தனிப்பட்ட விருப்பு அதிகாரமும் கிடையாது. இந்த நிலையில், ஆளுநர் புரோக்கித்தின் இந்த முடிவு முற்றிலும் சட்டத்திற்குப் புறம்பான செயலாகும்! தமிழ்நாடு ஆளுநர் பன்வாரிலால் புரோகித் ஆளுநர் பதவியில் இருப்பதற்கே உள்ள தகுதியை இழந்துவிட்டார்.

ஏழு தமிழர் விடுதலை குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியபோது, சட்டமன்றத்தில் பதிலுரைத்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, தான் கடந்த 2021 சனவரி 29 அன்று ஆளுநரை சந்தித்து ஏழு தமிழர் விடுதலை குறித்து வலியுறுத்தியதாகவும், இதுகுறித்து ஆளுநர் விரைவில் நல்ல முடிவை அறிவிப்பார் என்றும் தேவையில்லாமல் எதிர்க்கட்சியினர் பிரச்சினை செய்கிறார்கள் என்றும் கூறினார்.

முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, ஆளுநரை சந்தித்தது சனவரி 29ஆம் நாள். ஆனால், ஆளுநரோ சனவரி 25ஆம் நாளே ஏழு தமிழர் விடுதலையை மறுத்து, தனது பதிலுரையை அளித்திருக்கிறார். நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட ஆவணமும் அதை உறுதி செய்கிறது.

அப்படியானால், சனவரி 29 அன்று தன்னை சந்தித்த முதலமைச்சரிடம் ஆளுநர் இந்த உண்மையை மறைத்திருக்கிறாரா? அல்லது ஆளுநர் இந்த உண்மையைச் சொன்ன பிறகும் சட்டமன்றத்தில் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பொய் சொல்லியிருக்கிறாரா என்பது நாட்டு மக்களுக்குத் தெரிய வேண்டும்!

இச்சிக்கலில், முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி இரட்டை வேடம் போடுகிறார் என்பதை தொடர்ந்து கூறிவருகிறோம். பேரறிவாளன் தொடர்பான பரோல் வழக்கிலேகூட, அவரை சிறை விடுப்பில் விடக்கூடாது என்று தமிழ்நாடு அரசு உயர் நீதிமன்றத்தில் கடுமையாக வாதிட்டது. அதனைப் புறக்கணித்து, உயர் நீதிமன்றம் பேரறிவாளனுக்கு சிறைவிடுப்பு வழங்கியது. எடப்பாடி பழனிச்சாமி அரசின் அணுகுமுறைக்கு இது சான்று கூறுகிறது!

எனவே, தமிழ்நாடு முதலமைச்சர் இதுகுறித்து இப்போதாவது உண்மை நிலையை தெளிவுபடுத்த வேண்டும்.

ஆளுநரின் அப்பட்டமான இந்த சட்டமீறல் அவரது தமிழினப் பகைப் போக்கை வெளிப்படுத்துகிறது.

இந்நிலையில், ஏற்கெனவே அன்றைய தலைமை நீதிபதி தத்து தலைமையிலான உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம் 2015ஆம் ஆண்டு திசம்பரில் உறுப்பு 161இன்படி, மாநில அமைச்சரவை பரிந்துரை பெற்று ஆளுநர் இராசீவ்காந்தி வழக்கில் சிறையிலுள்ள ஏழு தமிழர்களை விடுதலை செய்ய எந்தத் தடையும் இல்லை என உறுதிப்படுத்தியுள்ள சூழலில், உச்ச நீதிமன்றம் அரசமைப்பு உறுப்பு 142-ஐ பயன்படுத்தி பேரறிவாளனை விடுதலை செய்ய வேண்டும், மற்ற ஆறு பேரையும் விடுதலை செய்ய வழி ஏற்படுத்த வேண்டும்.

இந்திய அரசு தனது தமிழினப் பகை நோக்கை செயல்படுத்துவதற்காக எந்தளவுக்கு சட்ட மீறலில் ஈடுபடும் என்பதையும், தமிழ்நாடு அரசு பா.ச.க. அரசோடு தனக்குள்ள கீழ்நிலை உறவுக்காக தமிழர் உரிமையை மட்டுமின்றி, தனது அமைச்சரவைக்கு உள்ள சட்ட உரிமையை பலியிடும் என்பதையும் தமிழ்நாட்டு மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்.

இச்சிக்கலில் நடந்த உண்மை என்ன என்பது பற்றி முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி விளக்க வேண்டுமென்றும், பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு தமிழர் விடுதலைக்கு உண்மையாக செயல்பட வேண்டுமென்றும் தமிழ்த்தேசியப் பேரியக்கம் சார்பில் வலியுறுத்துகிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


Wednesday, February 3, 2021

என்.எல்.சி. நிறுவனம் - தமிழர்களைப் புறக்கணிக்கும் பட்டதாரிப் பொறியாளர் நேர்முகத் தேர்வை இரத்து செய்ய வேண்டும்! ஐயா கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்!



என்.எல்.சி. நிறுவனம் - தமிழர்களைப் புறக்கணிக்கும் பட்டதாரிப் பொறியாளர் நேர்முகத் தேர்வை இரத்து செய்ய வேண்டும்!

தமிழ்த்தேசியப் பேரியக்கப் பொதுச்செயலாளர்
ஐயா கி. வெங்கட்ராமன் வலியுறுத்தல்! 


தமிழ்நாட்டில் இயங்கும் நெய்வேலி நிலக்கரிப் பழுப்பு நிறுவனம் பட்டதாரிப் பொறியாளர்கள் மற்றும் பல்வேறு பட்டயக் கணக்காளர்கள், மனித வளப் பட்டதாரிகள் உள்ளிட்டோருக்கு மின்துறை, சுரங்கத்துறை, கணினி, நிதி, மனித வளம் போன்ற துறைகளுக்கான 259 நிரந்தரப் பணிகளுக்கு கடந்த 13.03.2020 அன்று (விளம்பர எண் : 2 / 2021), விண்ணப்பங்களை வரவேற்று அறிவிப்பு கொடுத்திருந்தது. 

கொரோனா தொற்று காரணமாக இதற்கான நேர்முகத் தேர்வு மூன்றுமுறை நாள் குறிப்பிடப்பட்டு தள்ளி வைக்கப்பட்டு, இறுதியில் கடந்த 2021 நவம்பரில் நடத்தப்பட்டது. 

இத்தேர்வுகளை உத்திரப்பிரதேசத்தின் நொய்டா நகரைத் தலைமையிடமாகக் கொண்டு செயல்படும் “எஜூகேசன் கன்சல்டேசன் இந்தியா லிமிடெட்“ (Ed.C.I.L.) என்ற வடநாட்டு அரசுத்துறை நிறுவனம் நடத்தியது. 2 இலட்சத்திற்கும் அதிகமானோர் பங்கேற்ற இத்தேர்வின் முடிவில் நேர்முகத் தேர்வுக்கான முன்னுரிமைப் பட்டியலை இந்நிறுவனம் அளித்து, அதனை 30.01.2021 அன்று என்.எல்.சி. தனது இணையதளத்தில் வெளியிட்டது.  

259 காலியிடங்களுக்கான 1582 பேர் அடங்கிய இந்தப் பெயர் பட்டியலில், தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் வெறும் 8 பேர் தான்! நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டவர்களிலேயே 8 பேர்தான் தமிழர்கள் என்றால், ஒருவரைக்கூட நேர்முகத் தேர்வில் பணிக்குத் தேர்வு செய்வார்களா என்பது ஐயம்!

தமிழ்நாட்டில் தமிழ் மக்கள் வழங்கிய நிலத்தில் இயங்கும் என்.எல்.சி. நிறுவனம் நிலம் கொடுத்தவர்களையோ, அந்நிறுவனப் பணியிலிருந்து இறந்தோரின் வாரிசுகளையோ, பழகுநர் பயிற்சி முடித்தவர்களையோ முற்றிலும் புறக்கணித்துவிட்டு, இந்திக்காரர்களையும் வடநாட்டுக்காரர்களையும் தொடக்க ஊதியமே 60,000 ரூபாயுள்ள இந்த நிரந்தரப் பணிகளில் சேர்ப்பது தற்செயலானது அல்ல – திட்டமிட்ட தமிழின ஒதுக்கல் கொள்கை ஆகும்! இது கடும் கண்டனத்திற்குரியது! 

எனவே, என்.எல்.சி. நிறுவனம் இந்த நேர்முகத் தேர்வை இரத்து செய்துவிட்டு, புதிதாக விளம்பரம் வெளியிட்டு இப்பணிகளுக்கு 90 விழுக்காடு தமிழ்நாட்டு மக்களையே சேர்க்கும் வகையில் ஒதுக்கீடு வழங்கி, பணியமர்த்தும் நடவடிக்கையை மீண்டும் தொடங்குமாறு தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் சார்பில் வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.


தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam


 


 

Tuesday, February 2, 2021

இலங்கை இனப்படுகொலையாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்து! ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கை! ஐயா கி. வெங்கட்ராமன்




இலங்கை இனப்படுகொலையாளிகளை பன்னாட்டு நீதிமன்றத்தில் நிறுத்து! ஐ.நா. மனித உரிமை ஆணையர் அறிக்கை!

ஐயா கி. வெங்கட்ராமன், பொதுச்செயலாளர்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்.



ஐ.நா. மனித உரிமை மன்றத் தீர்மானத்திலிருந்து இலங்கை அரசு விலகிக் கொள்வதாக கோத்தபய இராசபக்சே அரசு அறிவித்துள்ளது.  ஐ.நா. மனித உரிமை மன்றத் தலைமை ஆணையரோ, இனப்படுகொலை குற்றவாளிகளைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறுத்த வேண்டும் என்கிறார்.  

இலங்கை அரசும் சேர்ந்து கொண்டு ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் 2015இல் நிறைவேற்றிய தீர்மானம், வெளிநாட்டு சட்ட வல்லுநர்களின் உதவியோடு உள்நாட்டு விசாரணை நடத்தி 2008 - 2009 தமிழீழ அழிப்புப் போரில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், பொறுப்பேற்பு - நல்லிணக்கம் ஆகியவை குறித்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்றும் உறுதி கூறியது.

ஆயினும், கோத்தபய இராசபக்சே - மகிந்த இராசபக்சே ஆட்சிப் பொறுப்பேற்றவுடன் இதிலிருந்து விலகுவதாக அறிவித்தனர். ஐ.நா. மனித உரிமை மன்றத்தோடு இணைந்து இச்சிக்கலில் செயல்படப்போவதில்லை எனவும் கூறினர்.

அண்மையில், இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கர் இலங்கையில் மூன்று நாள் அரசுமுறைப் பயணம் மேற்கொண்டபோது, ஈழத்தமிழர்களுக்கு எதிரான போரில் நிகழ்ந்த “போர்க்குற்றம், மனித உரிமை மீறல்” ஆகியவை இலங்கையின் உள்நாட்டுச் சிக்கல் என்று கூறி, கோத்தபய ஆட்சியின் நிலைப்பாட்டிற்கு ஆதரவு தெரிவித்தார்.

இந்தப் பின்னணியில், ஐ.நா. மனித உரிமை மன்றத்திற்குத் தலைமை ஆணையர் கடந்த 2021 சனவரி 12 அன்று முன்வைத்துள்ள அறிக்கை “கசிந்து” வந்துள்ளது. இதற்கு முன்பாகவும் இலங்கை இனச்சிக்கல் தொடர்பான தீர்மானங்கள் பலநேரம் இதுபோல் “கசிந்தது” உண்டு! பெரும்பாலும், அவையே உண்மையான அறிக்கையாகவும் அமைந்ததும் உண்டு!

கசிந்துள்ள தலைமை ஆணையர் முன்மொழிவு, சில புதிய நிலைமைகளையும் முடிவுகளையும் கூறுகிறது.

(-) கொரோனா தடுப்பு, தகவல் தொடர்பு, பேரிடர் மேலாண்மை, ஊடக மையம் உள்ளிட்ட ஏறத்தாழ 31 குடிமை நிர்வாக அமைப்புகளும் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் வைக்கப்பட்டிருக்கின்றன.

(-) குடியரசுத் தலைவரின் முற்றதிகாரத்திற்கு வழி ஏற்படுத்தும் 20ஆவது அரசமைப்புச் சட்டத்திருத்தம் மேற்கொள்ளப்பட்டிருக்கிறது.

(-) மனித உரிமை மீறல் குற்றங்கள் தொடர்பாக நடைபெற்ற உள்நாட்டு விசாரணைகளில் அரசியல் குறுக்கீடு அதிகரித்து, அவை முன்னேறாமல் தடுக்கப்படுகின்றன.

(-) சிங்களர்களின் வாக்குகளைப் பெற்றே தாங்கள் அரசு அமைத்திருப்பதாகவும், அதனால் சிங்களர்களின் விருப்பங்களுக்கு முன்னுரிமை தருவது தேவையானது என்றும் குடியரசுத் தலைவரே பேசுவதும், கொரோனா தடுப்பு நடவடிக்கையில் கூட இனப்பாகுபாடு காட்டப்படுவதும் அவநம்பிக்கையை ஏற்படுத்துகிறது.

(-) ஊடகத்துறையினர் கடுமையாகக் கண்காணிக்கப்படுகிறார்கள். சனநாயக நடவடிக்கைகள் பெருமளவில் குறுக்கப்பட்டுவிட்டன. மனித உரிமை மீறல் நடவடிக்கைகள் அன்றாடம் அதிகரித்திருக்கின்றன.

இவ்வாறு அடுக்கடுக்கான நிலைமைகளை எடுத்துக்கூறும் தலைமை ஆணையர், ஐ.நா. மனித உரிமை மன்றத்தின் 2015ஆம் ஆண்டு தீர்மானத்தை இலங்கை அரசு செயல்படுத்தாது என்ற முடிவுக்கு வருகிறார்.  பொறுப்புக் கூறல் மற்றும் நல்லிணக்கத்திற்கான நிலைமைகள் மோசமடைந்து வருவதால் போர்க்குற்றம் குறித்த விசாரணையைப் பன்னாட்டுக் குற்றவியல் நீதிமன்றத்திற்கு எடுத்துச் செல்ல ஐ.நா. மனித உரிமை மன்றம் செயல்பாடுகளைத் தொடங்கிவிட வேண்டும் என்கிறார்

அதேநேரம், உறுப்பு நாடுகள் போர்க்குற்றம் தொடர்பாக தங்கள் நாடுகளில் நீதிமன்ற நடவடிக்கைகளை மேற்கொள்ளலாம் என்றும், கொடும் குற்றச்சாட்டுக்கு ஆளான உயர் அதிகாரிகள் தங்கள் நாடுகளுக்கு வரக்கூடாது என பயணத் தடை விதிக்கலாம் என்றும் பரிந்துரைத்திருக்கிறார்.

நம்மைப் பொறுத்தளவில் நடைபெற்றது வெறும் போர்க்குற்றமல்ல - அப்பட்டமான இன அழிப்பு (Genocide) என்பதே உண்மை! இனப்படுகொலை தொடர்பான குற்ற விசாரணையே பன்னாட்டு அரங்கில் முன்னெடுக்கப்பட வேண்டும் என்பதும், ஐ.நா. மேற்பார்வையில் தனி ஈழம் தொடர்பான கருத்து வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும் என்பதுமே நமது கோரிக்கை!

தலைமை ஆணையரின் இந்தப் பரிந்துரை முக்கியமான முன்னேற்றமாகும். தமிழ்நாடு முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், மனித உரிமை ஆணையரின் இந்த அறிக்கையை அவருடைய கூட்டணித் தலைவர் மோடி ஆதரிக்க வேண்டுமென கோரிக்கை வைக்க வேண்டும்!

ஐ.நா. மனித உரிமை மன்றத்தில் இந்த அறிக்கையின்படி தீர்மானம் நிறைவேற்ற இந்திய அரசு அழுத்தம் கொடுக்க வேண்டுமென்று தமிழ்நாடு முதலமைச்சர் வலியுறுத்த வேண்டும். மற்ற எதிர்க்கட்சிகளும் இக்கோரிக்கையை எழுப்ப வேண்டும்.

அவ்வாறு வரைவுத் தீர்மானம் முன்வைக்கப்பட்டால், அதனையாவது இந்திய அரசு ஆதரித்து, பன்னாட்டு அரங்க விசாரணைக்கு இனப்படுகொலையாளர்களை கொண்டு நிறுத்த நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்!

(தமிழ்த்தேசியத் தமிழர் கண்ணோட்டம் 2021 பிப்ரவரி இதழின் ஆசிரியவுரை)
.



தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 9443918095, புலனம் : 9841949462
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT