உடனடிச்செய்திகள்
Showing posts with label ஜூ வி. Show all posts
Showing posts with label ஜூ வி. Show all posts

Thursday, May 24, 2018

“வரி கொடுப்பதில் முதலிடம்..நிவாரணத்தில் வஞ்சிகப்படும் தமிழகம்!” ஜூனியர் விகடன் வார ஏட்டில்...அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!

“வரி கொடுப்பதில் முதலிடம்..நிவாரணத்தில் வஞ்சிகப்படும் தமிழகம்!” ஜூனியர் விகடன் வார ஏட்டில்...அம்பலப்படுத்தும் தமிழ்த்தேசியப் பேரியக்கம்!


தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு சுரண்டிச் செல்லும் வரி வருமானம் குறித்து தகவல் அறியும் உரிமைச் சட்டங்களின்படி தமிழ்த்தேசியப் பேரியக்கம் திரட்டிய தகவல்கள், 27.05.2018 நாளிட்ட “ஜூனியர் விகடன்” ஏட்டில் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து, அச்செய்திக்கட்டுரையில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் அருணபாரதி கூறியுள்ளதாவது :

“ஒவ்வொரு முறையும் தமிழ்நாட்டில் பேரிடர் ஏற்படும்போது, நாம் கேட்கும் நிவாரணத் தொகையை மத்திய அரசு ஒதுக்குவதே கிடையாது. ஆனால், நம்மிடமிருந்து அதிக அளவிலான வரிப்பணத்தைப் பெற்றுக் கொள்கின்றனர். உற்பத்தி வரி, சுங்க வரி (ஏற்றுமதி), சுங்க வரி (இறக்குமதி), சேவை வரி, நிறுவன வரி, தனிநபர் வருமான வரி இவற்றின் மூலம் ஆண்டுக்கு 1.5 இலட்சம் கோடி மத்திய அரசுக்குப் போகிறது. இது மட்டுமல்லாமல் என்.எல்.சி., தென்னக இரயில்வே, சேலம் உருக்காலை, துறைமுகங்கள், விமான நிலையங்கள், தபால் நிலையச் சேவைகள் போன்றவற்றின் மூலமாகவும் வரி போகிறது.

ஆனால், இயற்கைப் பேரிடர்க் காலங்களில் நமக்கு மத்திய அரசு கைகொடுப்பதில்லை. 2013 ஆம் ஆண்டு உத்தரகாண்டில் வெள்ளம் ஏற்பட்டபோது அம்மாநிலம் கேட்பதற்கு முன்பே ரூபாய் 1,000 கோடியை உடனடி நிவாரணத் தொகையாக வழங்கியது மத்திய அரசு! உத்தரப்பிரதேசத்தில் ஏற்பட்ட வெள்ளத்தின்போது நம்மைவிட பல மடங்கு பாதிப்பு குறைவு. ஆனால் மத்திய அரசு கொடுத்த உடனடி நிவாரணத் தொகை ரூபாய் 2,875 கோடி. இதேபொல மற்ற மாநிலங்களுக்கு எல்லாம் நிவாரணத் தொகையை மத்திய அரசு வாரி வாரித் தருகிறது.

ஆனால், நாம் மொத்த பணத்தையும் மத்திய அரசுக்குக் கொடுத்துவிட்டு நமது உரிமைக்காகவும் உதவிக்காகவும் மத்திய அரசிடம் கையேந்தி நிற்கிறோம்”.

இவ்வாறு தோழர் அருணபாரதி கூறியுள்ளார்.

முழுவதுமாகப் படிக்க :
https://www.vikatan.com/…/141165-tamil-nadu-is-deceived-in-…

தலைமைச் செயலகம், 
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannottam.com 
இணையம்: www.tamizhdesiyam.com

Wednesday, November 8, 2017

“புறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள்! மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கு!” ஜூனியர் விகடன் ஏட்டில் தோழர் பெ. மணியரசன் பேட்டி!

“புறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள்! மத்திய அரசின் மாற்றாந்தாய் போக்கு!” ஜூனியர் விகடன் ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேட்டி!

“புறக்கணிக்கப்படும் தமிழ் இளைஞர்கள்!” என்ற தலைப்பில், ஜூனியர் விகடன் வார ஏட்டில் தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் அவர்களின் பேட்டியுடன், செய்திக் கட்டுரை வெளி வந்துள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது :

ரயில்வே உள்பட தமிழகத்தில் இயங்கும் மத்திய அரசின் துறைகளில் வெளி மாநிலத்தவர் அதிகளவில் பணியமர்த்தப்படுவதும், தமிழ் இளைஞர்கள் புறக்கணிக்கப்படுவதும் திட்டமிட்டு நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

இது தொடர்பாக, தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைவர் பெ.மணியரசனிடம் பேசினோம். “தமிழகத்தில் ரயில்வே, பெல், என்.எல்.சி., ராணுவத் தளவாட நிறுவனங்கள், பெட்ரோலியத் துறை, வருமானவரித் துறை, சுங்கவரித் துறை, துறைமுகங்கள் போன்ற இந்திய அரசு தொழிலகங்களில் பல லட்சம் பேர் வேலை செய்கிறார்கள். சமீபகாலமாக, இந்தத் தொழிலகங்களில் திட்டமிட்டே வெளி மாநிலத்தவர்களை அதிகளவில் வேலைக்கு எடுக்கிறார்கள். வேலைக்கான தேர்வுகளை வெளி மாநிலத்தவருக்குச் சாதகமாக நடத்துகிறார்கள். இதனால், திறமைகள் இருந்தும் தமிழர்கள் புறக்கணிக்கப் படுகிறார்கள். இங்கு, வேலைக்கான அனைத்துத் தேர்வுகளிலும் தமிழர்களுக்கு எதிராக மத்திய அரசு மோசடி செய்துவருகிறது.

2016-ல், தமிழகத்தில் அஞ்சலகப் பணிக்காகத் தேர்வு நடந்தது. அதில் அரியானா, மகாராஷ்ட்ரா போன்ற வெளி மாநிலங்களைச் சேர்ந்த 24 பேர் தமிழில் 25-க்கு 25 மதிப்பெண்கள் எடுத்துத் தேர்வாகினர். ஆனால், தமிழகத்தில் யாருமே 25 மதிப்பெண்கள் எடுக்கவில்லை. வினாத்தாள்களும், அதற்குரிய பதில்களும் வெளி மாநிலத்தவருக்கு முன்கூட்டியே கொடுக்கப்பட்டுள்ளன. இதுதான் தற்போது தமிழகத்தில் நடந்துகொண்டு வருகிறது. ‘மொழிவாரி மாநிலம்’ உருவாக்கப்பட்டதற்கு முக்கியக் காரணமே, அந்தந்த மாநில மக்கள் வேலைவாய்ப்புகளில் முன்னுரிமை பெற்று அவர்களின் வாழ்வாதாரம் வளம் பெற வேண்டும் என்பதற்காகத்தான். கர்நாடகாவில், அந்த மாநில மக்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை அளிப்பதற்காக, 1983-ம் ஆண்டு, ‘சரோஜினி மகிசி’ என்ற குழுவைக் கர்நாடக அரசு அமைத்தது. தற்போதுகூட, இமாச்சலப்பிரதேச சட்டப்பேரவைக்கான தேர்தல் அறிக்கையில் மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, தாங்கள் ஆட்சிக்கு வந்தால் இமாச்சலப் பிரதேசத்தின் மண்ணின் மக்களுக்கு மாநில அரசுத்துறைகளில் 70 சதவிகிதம் பணி ஒதுக்கீடு தருவதாக உறுதியளித்துள்ளது.

2015-ம் ஆண்டு, குஜராத்தில் இந்தியன் ஆயில் நிறுவனத்தில் 116 பேர் பணியில் அமர்த்தப்பட்டார்கள். அவர்களில், வெறும் 15 பேர் மட்டுமே குஜராத்தின் மைந்தர்கள். மற்ற 101 பேர் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். இதனை எதிர்த்து அம்மாநில இளைஞர்கள், ‘85 சதவிகிதம் பொறியாளர்கள் குஜராத் மண்ணைச் சேர்ந்தவர்களாக மட்டும்தான் இருக்க வேண்டும்’ என நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார்கள். இந்த வழக்குக்கு, குஜராத் அரசும் ஆதரவு தந்தது. ஒவ்வொரு மாநிலத்திலும், அம்மாநில மக்கள் தங்களின் உரிமைகளை விட்டுக்கொடுக்கவில்லை. ஆனால், தமிழகத்தில் மட்டும் அனைத்து விஷயங்களிலும் நம் உரிமையை விட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கிறோம்” என்றார் கவலையுடன்.

தமிழ்த் தேசியப் பேரியக்கத்தின் தலைமை செயற்குழு உறுப்பினர் அருணபாரதி, “திருச்சி பெல் நிறுவனத்தில் 2007-ம் ஆண்டு மொத்தப் பணியிடங்கள் 52-ல், 16 இடங்களில் தமிழர்களும், 36 இடங்களில் வெளி மாநிலத்தவர்களும் பணியமர்த்தப்பட்டனர். 2011-ம் ஆண்டு, மொத்தப் பணியிடங்கள் 163 பேரில், 118 பேர் வெளிமாநிலத்தவர். 45 பேர்தான் தமிழர்கள். ரயில்வே பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் பணிநியமனம் செய்யப்பட்டவர்களில் 2010-11-ம் ஆண்டில் 85 சதவிகிதமும் 2011-12-ல் 87 சதவிகிதமும் 2012-13-ல் 82 சதவிகிதமும் 2013-14-ல் 83 சதவிகிதமும் வெளி மாநிலத்தவர்கள்.

அதேபோல, வருமானவரித் துறையில், 2013-ம் ஆண்டு மொத்தப் பணியிடங்கள் 42. அதில், தமிழர்கள் இருவர் மட்டும்தான். 2014-ம் ஆண்டு மொத்தப் பணியிடங்கள் 78. அதில், மூன்று பேர் தமிழர்கள், 75 பேர் வெளி மாநிலத்தவர்கள். இப்படித்தான், தமிழகத்தில் மத்திய அரசுத் தொழிலகங்களில் தமிழர்கள் பணியில் அமர்த்தப்படுகிறார்கள். 2014-ம் ஆண்டு தென்னக ரயில்வே மற்றும் ஐ.சி.எஃப்-க்கான தேர்வை ஆர்.ஆர்.சி நடத்தியபோது, இந்தியா முழுவதிலிருந்தும் 11 லட்சத்துக்கும் அதிகமான விண்ணப்பங்கள் குவிந்தன. அதில், சுமார் 2,27,000 தமிழர்களின் விண்ணப்பங்கள் நிராகரிக்கப்பட்டன’’ என்றார் அருணபாரதி.

தமிழக அரசுத் துறைகளில் 100 சதவிகிதமும், தமிழ்நாட்டில் இயங்கும் மத்திய அரசின் தொழிலகம் மற்றும் தனியார் துறைகளில் 90 சதவிகிதமும் தமிழர்களுக்காக ஒதுக்கப்பட வேண்டும் என்பதைத்தான் கோரிக்கையாகத் தூக்கிப் பிடிக்கிறார்கள்”.

இவ்வாறு அச்செய்திக் கட்டுரையில் கூறப்பட்டுள்ளது.
இணையத்தில் படிக்க:
http://www.vikatan.com/juniorvikatan/2017-nov-12/society/136015-ignorance-of-tamil-youths-employment.html
தலைமைச் செயலகம்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

Wednesday, November 1, 2017

விவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்தை அழிக்கும் ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ? ஜூனியர் விகடன் வார ஏட்டில் - தோழர் பெ. மணியரசன் பேட்டி!

விவசாயிகளைக் காத்த இராசராசன் விழாவுக்காக விவசாயத்தை அழிக்கும் ஓ.என்.ஜி.சி.யிடம் - தமிழ்நாடு அரசு கை ஏந்தலாமா ? ஜூனியர் விகடன் வார ஏட்டில் - தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன் பேட்டி!

 
“ராஜாராஜசோழன் விழாவுக்கு விவசாயத்தை அழிக்கும் ஓ.என்.ஜி.சி. நன்கொடை!” என்ற தலைப்பில், 05.11.2017 நாளிட்ட ஜூனியர் விகடன் வார ஏட்டில் வெளியாகியுள்ள செய்திக் கட்டுரையில், தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவரும், தஞ்சை பெரிய கோவில் உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளருமான தோழர் பெ. மணியரசன் அவர்களது பேட்டி வெளியாகியுள்ளது.

அதில் அவர் கூறியுள்ளதாவது :

“தமிழ்ப் பேரரசன் இராசராசன், தன் ஆட்சிக்காலத்தில் எவ்வளவோ மானியங்களையும் நிவந்தங்களையும் அள்ளிக் கொடுத்திருக்கின்றான். தன் தேசத்தின் பிரதானத் தொழிலாக வேளாண்மையை அங்கீகரித்தவன் ராஜராஜன். அதற்கு ஏற்பட்டத் தடைகளையெல்லாம் வென்று விவசாயிகளைக் காத்தவன். அதெற்கெல்லாம் தான் எழுப்பிய பெரிய கோயிலிலேயே ஆதாரங்களைப் பதிந்துவிட்டுச் சென்றிருக்கின்றான். அவனுடைய சதய விழாவைக் கொண்டாட தமிழக அரசால் நிதி ஒதுக்க முடியவில்லை என்பது மிகப்பெரும் அவமானம்!

ஓ.என்.ஜி.சி. நிறுவனம் நிலத்தடி நீரையும், விவசாயத்தையும், வாழ்வாதாரத்தையும் அழிப்பதாக தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மக்கள் போராடி வருகிறார்கள். நெடுவாசலிலும், கதிராமங்கலத்திலும் 1000 நாள்களைக் கடந்து போராட்டம் நடக்கிறது. போராட்டக்காரர்களை மிரட்டும் வகையில் நோட்டீஸ் அனுப்புகிறது ஓ.என்.ஜி.சி.

விவசாயத்தை வளர்த்தெடுத்த தஞ்சை மண்டலத்து வேந்தனுக்காக நடத்தப்பட்ட விழாவுக்கு விவசாயத்தை அழிக்கத் துடிக்கிற ஒரு நிறுவனத்திடம் கையேந்தி நன்கொடை வாங்கியது மிகப்பெரியக் கேலிக்கூத்து! பெரிய கோவிலைச் சுற்றிலும் அந்த நிறுவனத்தின் செயலை நியாயப்படுத்துவதுபோல் விளம்பரப் பதாகைகளை வைக்கவும் அனுமதித்திருக்கிறார்கள்.

“ராஜராஜனுக்குச் சதய விழா கொண்டாட எங்களிடம் நிதியில்லை.. நிதி தாருங்கள்” எனக் கேட்டிருந்தால், எங்கள் விவசாயிகள் இலட்சக்கணக்கில் அள்ளிக் கொடுத்திருப்பார்கள். அரசு, உடனடியாக ஓ.என்.ஜி.சி. நிறுவனம் அளித்த ஏழு இலட்சம் ரூபாயைத் திருப்பி அளிக்க வேண்டும். நான்கே நாள்களில் நாங்கள் விவசாயிகளிடமிருந்து அந்தத் தொகையைத் திரட்டி அரசுக்கு அளிப்போம். இதை ஏற்காதபட்சத்தில், தமிழ்நாடு அரசு மிகப்பெரும் பழிச்சொல்லுக்கு ஆளாக நேரிடும்!”.

இவ்வாறு தோழர் பெ. மணியரசன் கூறியுள்ளார்.

“தங்கள் வாழ்வாதாரத்தைக் காக்க கதிராமங்கலத்தில் குழந்தைகளுடன் தொடர் போராட்டத்தில் மக்கள் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்களைப்போய் ஒரு எட்டுப் பார்த்துவிட்டு வர நேரமில்லை. அவர்கள் யாரை எதிர்த்துப் போராடுகிறார்களோ, அவர்களிடம் பணம் பெற்றுக் கொண்டு, போஸ் கொடுக்க மட்டும் உங்களுக்கு நேரமிருக்கிறதா?” என்ற கேள்வியுடன், அச்செய்திக் கட்டுரை முடிகின்றது.

நன்றி : ஜூனியர் விகடன், வெ. நீலகண்டன், 05.11.2017.
 
தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்
 
பேச: 7667077075, 9840848594
முகநூல்: www.fb.com/tamizhdesiyam
ஊடகம்: www.kannotam.com
இணையம்: www.tamizhthesiyam.com

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT