உடனடிச்செய்திகள்

Wednesday, March 18, 2009

தியாகத்தை கொச்சைப்படுத்திய காவல்துறை ; வெகுண்டெழுந்த பொதுமக்கள்

ஈழமக்களுக்காக தன்னுயிரை தியாகம் செய்த தமிழக உறவு இராஜசேகரனின் மரணத்தினை கொச்சைப்படுத்திய காவல்துறை ; வெகுண்டெழுந்த பொதுமக்கள்

[ செவ்வாய்க்கிழமை, 17 மார்ச் 2009, 08:09.35 PM GMT +05:30 ]

கடந்த சில நாட்களுக்கு முன்பாக ஈழமக்களுக்காக தீக்குளித்து தன்னுயிர் நீத்த பள்ளபட்டி இரவியின் மரணத்தினை களங்கப்படுத்திய தமிழக காவல்துறை இப்பொழுது அரியலூர் இராஜசேகரின் தியாகத்தினையும் களங்கப்படுத்த முனைந்ததை எதிர்த்து பொதுமக்கள் சாலைமறியலில் ஈடுபட்டதால் தஞ்சையில் பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

 

இலங்கையில் போர் நிறுத்தம் செய்யக்கோரி அரியலூர் மாவட்டம் உடையார் பாளையத்தை அடுத்த தத்தனூர் கீழவெளி சிற்றூரைச் சேர்ந்த பாட்டாளி மக்கள் கட்சியின் தொண்டர் முப்பது அகவையே ஆன இராஜசேகர் ஞயிற்றுக்கிழமை(15.03.2009) அன்று தீக்குளித்தார். தஞ்சை மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஆபத்தான நிலையில் சேர்க்கப்பட்ட அவர், சிகிச்சை பலனின்றி இன்று காலை இறந்தார். ஈழமக்களை காக்கக்கோரி தீக்குளித்த அவர் வயிற்றுவலி காரணமாக தற்கொலை செய்துகொண்டதாக பொய் வழக்கினை உடையார்பாளையம் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

உடையார்பாளையம் காவல்துறை ஆய்வாளர் இராமசாமி, காவல்துறை உதவி ஆய்வாளர் அன்பழகன் ஆகியோர் மருத்துவமனைக்கு வந்து எழுதப்படாத வெள்ளைத்தாளில் இறந்து போன இராஜசேகரின் கைரேகையைப் பதிவு செய்துள்ளனர். இராஜசேகரின் மனைவி செல்வி , இராஜசேகரின் தாய் ரோகம்பாள், ஆகியோரிடமும் மிரட்டி கையெழுத்து பெற்றுள்ளனர்.

அப்போது அருகில் இருந்த விடுதலைச் சிறுத்தைகள் கட்சியைச் சேர்ந்த வழக்கறிஞர் ஒருவர், காவல்துறையினரிடம், கையெழுத்து எதற்கு வாங்கியுள்ளீர்கள் என்று கேட்டுள்ளார். அதற்கு காவல்துறையினர் விடையளிக்காமல் சென்று விட்டனர். இத்தகவலறிந்த வழக்குரைஞர்கள் நல்லதுரை(இளந்தமிழர் இயக்கம்), கருணாநிதி, சின்னசாமி, பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டச் செயலாளர் கனகராஜ், விடுதலைச் சிறுத்தைகள் கட்சி மாவட்டப் பொருளாளர் சொக்கா.ரவி , தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்கட்சியின் மாநிலச் பொதுச் செயலாளர் பெ.மணியரசன் மற்றும் அப்பகுதி பொதுமக்கள் மருத்துவமனை முன்பு திரண்டனர்.

ஈழத் தமிழரைக் காக்கக் கோரி இராஜசேகர் இறந்துள்ள உண்மை நிலையை வழக்காகப் பதிவு செய்தால்தான் அவரின் உடலை உடற்கூறு ஆய்வு செய்வதற்கு விடுவோம் எனக் கூறி தஞ்சை மருத்துவக் கல்லூரி சாலையில் பொதுமக்களும் வழக்குரைஞர்களும் மறியலில் ஈடுபட்டனர். இதனையறிந்து தஞ்சை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளம்பரிதி நிகழ்விடத்துக்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் குற்றவியல் நடைமுறை சட்டம் 161(3) கீழ் பெற்றோர் மற்றும் உறவினரின் வாக்குமூலம்படி வழக்குப் பதிவு செய்து விசாரிக்கப்படும் என்று உறுதியளித்தார்.

இதனையடுத்து, உடையார்பாளையம் காவல் ஆய்வாளர் இராமசாமி, தஞ்சை மருத்துவக் கல்லூரி காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ், தஞ்சை நகரக் காவல் துணைக் கண்காணிப்பாளர் இளம்பரிதி ஆகியோர் இராஜசேகரின் மனைவி செல்வி, தாய் ரோகம்பாள் மற்றும் உறவினர்கள் ஆகியோரிடம் விசாரித்து வாக்குமூலம் பதிவு செய்தனர்.

இதன் அடிப்படையில் இராஜசேகர் ஈழத் தமிழர்களுக்காகத் தீக்குளித்து உயிர்த்தியாகம் செய்தார் என்று வழக்குப் பதிவு செய்யப்பட்டதையடுத்து நிலைமை சீரடைந்தது. வழக்குரைஞர்கள் நல்லதுரை மற்றும் கருணாநிதி ஆகியோர் சட்டரீதியான அனைத்து நடவடிக்கைகளையும் இறுதிவரை உடனிருந்து கவனித்தார்கள்.

 

Friday, March 6, 2009

மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் பொதுக் கூட்டத்தில் பெ.மணியரசன் உரை!

மாவீரன் முத்துக்குமாருக்கு வீரவணக்கம் செலுத்தியும், காங்கிரசுக்கு வாக்களிக்கக் கூடாது என்றும் பரப்புரை செய்து எம்.ஜி.ஆர். நகதரில் நடத்தப்பட்ட, பொதுக் கூட்டத்தில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் தோழர் பெ.மணியரசன் உரை! பதிவேற்றம்: மார்ச் 5, 2009

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT