உடனடிச்செய்திகள்

Tuesday, April 16, 2019

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்! பல்கலைப் பதிவாளரிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி கோரிக்கை!

புதுச்சேரி பல்கலைக்கழகத்தின் 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கே ஒதுக்க வேண்டும்! பல்கலைப் பதிவாளரிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி கோரிக்கை!
புதுச்சேரி பல்கலைக்கழகம் 1985 ஆம் ஆண்டு காலாப்பட்டு பகுதியில் 870 ஏக்கர் வேளாண் விளை நிலங்கள் மீது அமைக்கப்பட்ட பல்கலைக்கழகமாகும். இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதற்காக சற்றோப்ப 870 ஏக்கரில் நடைபெற்று வந்த விவசாயம் முற்றிலுமாக கைவிடப்பட்டது.

இப்பல்கலைக்கழகம் புதுச்சேரியில் அமைக்கப்படுவதற்கான நோக்கத்தை அப்போதே தெளிவுபடுத்தினார்கள். புதுச்சேரி மக்கள் தங்களுடைய கல்வி - வேலைவாய்ப்பு ஆகியவற்றை வளர்த்தெடுக்கும் நோக்கத்தில் தான் இப்பல்கலைக்கழகம் அமைக்கப்படுவதாக அன்றைய இந்திய தலைமை அமைச்சர் ராஜீவ் காந்தி வாக்குறுதி அளித்தார். அதன் பெயரிலேயே வேளாண் விளை நிலங்களின் மீது இந்த பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டது.

ஆனால் இந்த நோக்கங்கள் இன்றைக்கு சரிவர கடைபிடிக்கப்படுவதில்லை!
புதுச்சேரி பல்கலைக்கழகம் வெளி மாநில மாணவர்களால் நிரம்பி வழிந்து கொண்டிருக்கிறது. புதுச்சேரி மக்களுக்காக ஏற்படுத்தப்பட்ட இந்த பல்கலைக்கழகத்தில் பயிலும் புதுச்சேரி மண்ணின் மைந்தர்கள் மிக மிகக் குறைவு! புதுச்சேரி மாணவர்கள் புறக்கணிக்கப்படுகின்றனர்.

ஏற்கெனவே புதுதில்லியில் அம்மாநில அரசு மத்திய பல்கலைக் கழகமாக உள்ள தில்லி பல்கலைக்கழகத்தில் அந்த மண்ணின் மக்களுக்கு 85 விழுக்காடு இட ஒதுக்கீட்டை 2017ஆம் ஆண்டிலிருந்து செயல்படுத்தி வருகின்றனர். இதன் காரணமாக மத்திய பல்கலைக்கழக இருந்தாலும் கூட அந்த மண்ணின் மக்கள் டெல்லியில் இருக்கக்கூடிய பல்கலைக்கழகத்தில் படிக்கும் கூடிய சூழ்நிலை உருவாகி இருக்கிறது.

ஆந்திராவில் அனைத்துக் கல்வி நிறுவனங்களிலும் 1978ஆம் ஆண்டிலிருந்து இந்திய குடியரசுத் தலைவர் தனி ஆணையின் பேரில் 85 விழுக்காடு அந்த மண்ணின் மக்களுக்கே என உறுதி செய்யப்பட்டுள்ளது. இதன் காரணமாக நீட் தேர்வு ஆந்திராவில் மட்டும் பொருந்தாது என்ற நிலை இருக்கிறது.

எனவே இந்த நடைமுறைகளை பின்பற்றி புதுச்சேரியிலும் புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 90 விழுக்காடு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்கீடு செய்ய வேண்டும் என தமிழக மாணவர் முன்னணி சார்பில் பல்கலைக்கழக பதிவாளரிடம் மனு அளிக்கப்பட்டது.

பல்கலைக்கழகப் பதிவாளர் திருமதி. சித்ரா அவர்களிடம் புதுச்சேரி மாணவர் முன்னணி தோழர்கள் உதயச்சங்கர், கணேசமூர்த்தி, தினேஷ், பவித்திரன்,
தமிழக மாணவர் முன்னணி அமைப்பாளர் தோழர் வே. சுப்ரமணிய சிவா உள்ளிட்டோர் இம்மனுவை இன்று (16.04.2019) காலை நேரில் கையளித்தனர்.

புதுச்சேரி பல்கலைக்கழகத்தில் 25 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டுமென தாம் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதி உள்ளதாக பதிவாளர் திருமதி. சித்ரா தெரிவித்தார். அதற்கு நன்றி தெரிவித்த நம் தோழர்கள் 25 விழுக்காட்டு இடங்கள் போதாது எனவும், 90 விழுக்காட்டு இடங்களை புதுச்சேரி மாணவர்களுக்கு ஒதுக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்தனர்.

மேலும், எவ்வித முன்னறிவிப்புமின்றி புதுச்சேரி பல்கலைகழகத்தின் கல்வி கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளது ஏழை எளிய மாணவர்களை கடுமையாக பாதிக்கக்கூடிய நடவடிக்கை எனக் குறிப்பிட்டு, இக் கல்வி கட்டண உயர்வைத் திரும்பப் பெற்று பழைய கல்வி கட்டண விகிதம் தொடரும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் புதுச்சேரி பல்கலைக் கழக நிர்வாகத்தை வலியுறுத்தி வேண்டுகோள் விடப்பட்டது.

#வெளியார்

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, April 14, 2019

பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் தமிழர்களுக்குத் தடை! வடவர்க்கே வேலை! திருச்சி, பொன்மலை பணிமனையில் த.தே.பே. நடத்தும் தமிழர் மறியல் போராட்டம்!

பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் தமிழர்களுக்குத் தடை! வடவர்க்கே வேலை! திருச்சி, பொன்மலை பணிமனையில் த.தே.பே. நடத்தும் தமிழர் மறியல் போராட்டம்!
#TamilnaduJobsForTamils

தமிழ்நாடு முழுவதும் மிகப்பெரும் அளவில் வெளி மாநிலத்தவர்கள் குடியேறிக் கொண்டுள்ளனர். தமிழ்நாட்டிலுள்ள இந்திய அரசு நிறுவனங்கள் - அலுவலகங்கள் - தொழிற்சாலைகள் அனைத்திலும் இந்திக்காரர்களை இந்திய அரசு திட்டமிட்ட முறையில் பணியமர்த்தி வருகின்றது.

அண்மையில் திருச்சி பொன்மலையில் தென்னகத் தொடர்வண்டித் துறையில் பழகுநர் பணியிடங்களுக்காக எடுக்கப்பட்ட 1765 பேரில் 1,600 பேர் வடமாநிலத்தவர் ஆவர். அவர்களில் 300 பேர், திருச்சி பொன்மலை தொடர்வண்டிப் பணிமனையில் பணியில் சேர்ந்துள்ளனர்.

இவர்களை வெளியேற்ற வேண்டுமென வலியுறுத்தி, வரும் தி.பி. 2050 சித்திரை 20 - 3.5.2019 வெள்ளி காலை 11 மணிக்கு, திருச்சி, பொன்மலை பணிமனை (ஒர்க்சாப்) முன்பு, தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் க. அருணபாரதி தலைமையில், தமிழர் மறியல் போராட்டம் நடைபெறுகின்றது.

தொடர்வண்டித்துறை (இரயில்வே) நிர்வாகமே!
பொன்மலைப் பணிமனையில் புகுத்தப்பட்டுள்ள வெளியாரை வெளியேற்று! புதிதாகப் புகுந்துள்ள 300 பழகுநர் (அப்ரண்டீஸ்) அனைவரையும் வெளியேற்று! அந்த வேலைகளைத் தமிழர்களுக்குக் கொடு!

இந்திய அரசே!
தமிழ்நாட்டில் உள்ள இந்திய அரசு நிறுவனங்கள், அலுவலகங்கள் அனைத்திலும் 10 விழுக்காட்டிற்கு மேல் பணியில் உள்ள வெளிமாநிலத்தார் அனைவரையும் வெளியேற்று! 90 விழுக்காடு வேலைகளைத் தமிழர்களுக்கு வழங்கு! தமிழர் தாயகமான தமிழ்நாட்டை அயல் இனத்தார் மண்டலம் ஆக்காதே!

உனது சதித்திட்டத்தைத் தகர்ப்போம்! தமிழர் தாயகம் காப்போம்!

தமிழ்நாடு அரசே! 
தமிழர்களுக்குரிய வேலைகளை அயலார் பறிக்கத் துணைப்போவதேன்? தமிழ்நாட்டை அயலார் மண்டலமாக்கும் தில்லியின் சதியை அனுமதிப்பதேன்? மண்ணின் மக்கள் வேலை உரிமைக்கு கர்நாடகம், குசராத், மராட்டியம், சதீசுகட் மாநிலங்களில் 
உள்ளது போல் தமிழ்நாட்டில் சட்டம் இயற்ற மறுப்பதேன்?

தமிழ்நாட்டு ஆளுங்கட்சி - ஆண்டகட்சித் தலைவர்களே!
உங்கள் பணி தமிழர்களைக் காப்பதா? தில்லிக்குக் கங்காணி வேலை பார்ப்பதா?

தமிழர்களே,
உங்கள் உரிமைத் தாயகம் அயலார் மண்டலமாவதை அறிந்தீர்களா? ஒரு கோடித் தமிழ் இளையோர் வேலை இன்றி 
வீதிகளில் அலைவதை உணர்ந்தீர்களா? “அறிந்தோம்; உணர்ந்தோம்” என்பது உங்கள் விடையானால் வாய்ப்புள்ளோர் மறியலுக்கு வாருங்கள்; வாய்ப்பில்லாதோர் இச்செய்தியைப் பரப்புங்கள்!

#TamilnaduJobsForTamils

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Wednesday, April 10, 2019

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைத்தடியாக செயல்படுகிறது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைத்தடியாக செயல்படுகிறது! தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் பெ. மணியரசன் கண்டனம்!
தேர்தல் ஆணையம் அரசமைப்புச் சட்டப்படி தன்னதிகார அமைப்பு; அதாவது தன்னாட்சி அமைப்பு. ஆனால், அது ஆளும் பா.ச.க.வின் கைத்தடி அமைப்பாக மாறிப்போனது. தமிழ்நாட்டில் பா.ச.க. – அ.தி.மு.க. கூட்டணியின் குற்றேவல் புரியும் அமைப்பாக அது குறுகிப்போனது.

தேர்தல் சின்னம் ஒதுக்குவதில் நாம் தமிழர் கட்சிக்கும், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகத்திற்கும் வேண்டுமென்றே திரிபு வேலைகள் செய்தது. காலதாமதம் செய்தது. அ.ம.மு.க.விற்கு உச்ச நீதிமன்றத்தின் ஆணையால்தான் கடைசி நேரத்தில் ஒரே வகைத் தேர்தல் சின்னம் ஒதுக்கியது.

இப்பொழுது கணிப்பொறியில் செய்யப்பட்டுள்ள தேர்தல் சின்னங்களில் நாம் தமிழர் கட்சியின் கரும்பு உழவர் சின்னம் கண்ணுக்குத் தெரியாத அளவில் வேண்டுமென்றே மங்கலாக பதிவு செய்யப்பட்டுள்ளது. அச்சின்னத்தை வாக்காளர்கள் தேடிக் கண்டுபிடிப்பது மிகவும் கடினம்.

அ.ம.மு.க. வேட்பாளர்களுக்கு அடுத்த சுயேட்சை வேட்பாளர்ரின் சின்னமாக அக்கட்சியின் பழைய குக்கர் சின்னத்தை வழங்கியுள்ளார்கள். எடுத்துக்காட்டாக, திருவாரூர் சட்டப்பேரவைத் தொகுதி அ.ம.மு.க. வேட்பாளர் எஸ். காமராஜ் (மன்னார்குடி). இதற்கு அடுத்த பெயராக உள்ள பி. காமராஜ். (கர்ணக்கொல்லை நன்னிலம்) – சுயேட்சை வேட்பாளர்க்கு பிரஷர் குக்கர் சின்னம் கொடுக்கப்பட்டுள்ளது.

அ.ம.மு.க. ஆதரவு வாக்காளர்களைக் குழப்ப வேண்டும் என்பதற்காகப் பல தொகுதிகளில் பரிசுப் பெட்டிக்கு அடுத்த சின்னமாக வரும் வகையில் பிரஷர் குக்கர் ஒதுக்கப்பட்டிருக்கிறது. எடுத்துக்காட்டாக, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர், சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகள்!

நாம் தமிழர் கட்சி வடசென்னை மக்களவைத் தொகுதி வேட்பாளர் காளியம்மாள் அவர்கள், தங்கள் கட்சிச் சின்னம் மற்ற சின்னங்களைப் போல் தெளிவாகத் தெரியும் வகையில் பதிவு செய்ய ஆணையிட வேண்டும் என்று கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தார். ஆனால், கடைசி நேரம்; கால அவகாசம் இல்லை என்று உயர் நீதிமன்றம் அம்மனுவைத் தள்ளுபடி செய்தது. இது சரியல்ல!

கணிப்பொறி யுகத்தில், அதுவும் மோடியின் “டிஜிட்டல் இந்தியா”வில் மேற்கண்ட குறையைக் களைந்து, கரும்பு உழவர் சின்னத்தைத் தெளிவாகத் தெரியும்படி பதிவிட அதிகநேரம தேவைப்படாது.

தேர்தல் ஆணையம் ஆளுங்கட்சியின் கைத்தடியாக செயல்படுவது வன்மையான கண்டனத்திற்குரியது!

தலைமைச் செயலகம்,
தமிழ்த்தேசியப் பேரியக்கம்

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com
இணையம் : www.tamizhdesiyam.com
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Sunday, April 7, 2019

2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம். மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்!

2019 மே 14 அன்று கந்தர்வக்கோட்டை - கல்லாக்கோட்டை சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம்.  மகளிர் ஆயம் சிறப்புப் பேரவை தீர்மானம்!
தமிழ்த்தேசியப் பேரியக்கத்தின் மகளிர் அமைப்பான “மகளிர் ஆயம்” – தமிழ்நாடு சிறப்புப் பேரவைக் கூட்டம், இன்று (07.04.2019) தஞ்சை பெசண்ட் அரங்கில் தோழர் ம. இலட்சுமி அம்மாள் தலைமையில் எழுச்சியுடன் நடைபெற்றது. தோழர் செம்மலர் வரவேற்றார். மகளிர் ஆயம் தமிழ்நாடு ஒருங்கிணைப்பாளர் தோழர் மதுரை அருணா மகளிர் ஆயத்தின் செயல்பாட்டு அறிக்கையை முன்வைத்துப் பேசினார். முன்னதாக, மகளிர் ஆயத்தின் மறைந்த முன்னோடிகள் சென்னை சாதிக்குல் ஜன்னா - தஞ்சை சரசுவதி ஆகியோருக்கு இரங்கல் தெரிவித்து ஒரு நிமிடம் அமைதி வணக்கம் செலுத்தப்பட்டது.

மகளிர் ஆயத்தின் தலைவராக தோழர் ம. இலட்சுமி, துணைத் தலைவராக தோழர் பே. மேரி, பொதுச்செயலாளராக தோழர் அருணா, துணைப் பொதுச்செயலாளராக தோழர் க. செம்மலர், பொருளாளராக தோழர் பெண்ணாடம் கனிமொழி ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர். 15 பெண் தோழர்களைக் கொண்ட புதிய செயற்குழு தேர்வு செய்யப்பட்டது.

சிறப்புப் பேரவையையும், புதிய பொறுப்பாளர்களையும் வாழ்த்தி தமிழ்த்தேசியப் பேரியக்கத் தலைவர் தோழர் பெ. மணியரசன், பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன், தஞ்சை மாவட்டச் செயலாளர் தோழர் நா. வைகறை ஆகியோர் உரையாற்றினர். நிறைவில், தோழர் இளவரசி நன்றியுரையாற்றினார்.
கூட்டத்தில், பின்வரும் தீர்மானங்கள் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டன.

தீர்மானம் – 1

சாராயத் தொழிற்சாலை முற்றுகைப் போராட்டம்!

தமிழ்நாடு அரசே மது விற்பனை நடத்தி தெருவெங்கும் மது ஆறாக ஓடிக் கொண்டிருப்பதற்கும், அதன் காரணமாக ஒவ்வொரு குடும்பமும் சீரழிந்து வருகின்றது என்பதற்கும் புள்ளி விவரங்கள் தேவையில்லை.

டாஸ்மாக் மதுவால் ஒவ்வொரு நாளும் குடும்ப அமைதி குலைந்து கொண்டிருக்கிறது. விபத்துகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது. குற்றங்கள் அதிகரித்துக் கொண்டுள்ளது; பாலியல் வன்முறைகளுக்குப் பின்னணியில் மதுப்பழக்கம்தான் இருக்கிறது என்பதை எல்லா ஊடகங்களும், நீதிமன்றங்களும் சான்று கூறுகின்றன. மருத்துவ வல்லுனர்களும் இதைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள். மது அருந்துவோர் உருக்குலைந்து அகால மரணமடைகின்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு அரசு மது விற்பனைக் குறியீடு வைத்து சாராய வணிகம் செய்வது, தமிழ்நாட்டுக்குப் பேரழிவை உண்டாக்குகிறது. “மதுவிலக்கை படிப்படியாக நிறைவேற்றுவோம்” என்றும், “டாஸ்மாக் கடைகளை நெடுஞ்சாலைகளில் இருந்து எடுப்போம்” என்றும் சொல்லி கொண்டிருக்கிறார்களே தவிர சட்டத்தின் சந்து பொந்துகளைப் பயன்படுத்தி மது விற்பனையை அதிகரிப்பதிலேயே தமிழ்நாடு அரசு குறியாக இருக்கிறது.

மகளிர் ஆயம் தொடர்ந்து பல ஆண்டுகளாக டாஸ்மாக் கடைகளை இழுத்துப் பூட்ட வேண்டும் என்று போராட்டங்களை நடத்தி வருகிறது.

தமிழ்நாடு அரசு மதுத் தீமையை ஏற்றுக்கொண்டாலும் அரசாங்கத்தின் நிதி நிலையைப் பெருக்குவதற்கு இதைத் தவிர வேறு வழி இல்லை என்பது போல ஒவ்வொரு நிதி நிலை அறிக்கையின் போதும் சொல்லிக்கொண்டிருக்கிறது. ஆனால், உண்மை நிலை வேறானது!

எடுத்துக்காட்டாக, கடந்த நிதியாண்டில் தமிழ்நாடு அரசு டாஸ்மாக்கின் மூலமாக பெற்ற விற்பனை வருமானம் 26 ஆயிரத்து 796 கோடி ரூபாய்! தமிழ்நாடு அரசு அரிசி, மடிக்கணினி. மின்விசிறி, கிரைண்டர், வேட்டி சேலை, பசுமை வீடுகள், மருத்துவ காப்பீடு, பள்ளிச்சீருடை, பேருந்து சலுகை, தங்கத்தாலி, விலையில்லா ஆடு மாடு, மாணவர்களுக்கு மிதிவண்டி நோட்டுப் புத்தகம் போன்ற அனைத்து இலவசங்கள் - விலையில்லா அறிவிப்புகளில் செலவிட்ட தொகை இதே நிதியாண்டில் 12 ஆயிரத்து 274 கோடி ரூபாய் தான்! எனவே இலவசங்களை வழங்குவதற்காகத்தான் மதுவிற்பனையை தொடர்கிறோம் என்று சொல்வதில் பொருளில்லை.

இன்னொருபுறம் அரசாங்கத்தின் வருமானத்தை பெருக்குவதற்கான வழிகள் குறைந்திருக்கிறது. இந்திய அரசு சரக்கு மற்றும் சேவை வரி (ஜி.எஸ்.டி.) கொண்டு வந்துவிட்டது எனக் கூறுவது டாஸ்மாக் தொடர்வதற்கு பொருத்தமான காரணமில்லை! மாநில அரசின் வருவாயைப் பெருக்க மாற்று வழிகள் இருக்கின்றன.

எடுத்துக்காட்டாக, தமிழ்நாட்டிலிருந்து இந்திய அரசு வசூலித்து செல்கிற நேர்முக மறைமுக வரிகள் தொகை ஆண்டுக்கு ஒரு இலட்சத்து 32 ஆயிரத்து 483 கோடி ரூபாய் ஆகும்! இதுதவிர தமிழ்நாட்டில் இருந்து ஒரு இலட்சத்து 96 ஆயிரம் கோடி ரூபாய் ஏற்றுமதி ஆகியிருக்கிறது. இந்திய அரசுக்கான வருமானத்தில் 30 விழுக்காடு தமிழ்நாட்டிலிருந்துதான் செல்கிறது.

இவ்வளவு வருமானத்தை இந்திய அரசுக்கு ஈட்டித் தரும் தமிழ்நாடு, அதில் தனக்குரிய பங்கைக் கோரிப் பெற்றாலே நலத் திட்டங்களை செயல்படுத்துவதற்கும், அரசை நடத்துவதற்கும் போதிய நிதி கிடைக்கும். எனவே இதை உணர்ந்து தமிழ்நாடு அரசு தமிழ்நாட்டில் இருந்து இந்திய அரசு வசூலிக்கும் வரி வருவாயிலும் ஏற்றுமதி வருவாயிலும் கிடைக்கும் தொகையில் பாதியை வலியுறுத்திப் பெற வேண்டும்.

இதைச் செய்வதற்கு மாறாக டாஸ்மாக் கடைகளின் விற்பனை மூலமாகத்தான் எங்களுக்கு முதன்மையான வருமானம் வருகிறது என்று சொல்வதை சமூகத்தின் மீது அக்கறையுள்ள யாரும் ஏற்க முடியாது.

இன்னொரு காரணத்தையும் தமிழ்நாடு அரசு கூறுகிறது. அரசு மதுவிற்பனையை செய்யாவிட்டால் கள்ளச்சாராயம் பெருகிவிடும் என்று கூறுகிறது. காவல்துறையும், மதுவிலக்கு அமலாக்கத் துறையும் செயலற்றுதான் இருக்கும் என்று தமிழ்நாடு அரசே கூறும் ஒப்புதல் வாக்குமூலம் இது! மது விலக்கை உறுதியாக நிறைவேற்றுவதற்கு தன்னால் முடியாது என்பதால், டாஸ்மாக்கை நடத்துகிறோம் என்று தமிழ்நாடு அரசு கூறுமானால், தங்களது செயலற்றத்தன்மைக்கு தமிழ்நாட்டு மக்களைப் பலியிடும் பொறுப்பற்ற செயலாகும் அது! எனவே, தமிழ்நாடு அரசு டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூட வேண்டும் என மகளிர் ஆயம் தமிழ்நாடு சிறப்பு பேரவை வலியுறுத்துகிறது!

டாஸ்மாக் கடைகளை முற்றிலும் மூட வேண்டும் என வலியுறுத்தி வரும் 2019 மே 14 அன்று டாஸ்மாக் கடைகளுக்காக மது உற்பத்தி செய்யும் புதுக்கோட்டை மாவட்டம் – கந்தர்வக்கோட்டை வட்டம் – கல்லாக்கோட்டையிலுள்ள KAALS டிஸ்டிலரீஸ் ஆலை முன் முற்றுகைப் போராட்டம் நடத்துவதென்று மகளிர் ஆயம் தமிழ்நாடு சிறப்பு பேரவை தீர்மானிக்கிறது! இம்முற்றுகைப் போராட்டத்திற்கு அனைத்துத் தரப்புப் பெண்களும் திரளாக வந்து பங்கேற்க வேண்டும் என்று மகளிர் ஆயம் அன்புரிமையோடு கேட்டுக் கொள்கிறது!
தீர்மானம் – 2

மாவட்டந்தோறும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்கள் வேண்டும்!

பெண்களுக்கு எதிரான வன்கொடுமைக் குற்றங்களை விசாரித்து உடனடியாகத் தீர்ப்பு வழங்க மாவட்டந்தோறும் மகளிர் சிறப்பு நீதிமன்றங்களை ஏற்படுத்த வேண்டும். குற்றம் சாட்டப்பட்டவர்கள் எந்த அதிகார மட்டத்தில் இருந்தாலும், எவ்வளவு உயர் பதவியில் இருந்தாலும் – எந்த அரசியல் பின்னணி இருந்தாலும் அவர்களை உடனுக்குடன் விசாரித்து - வழக்குகளை ஓராண்டுக்குள் முடித்துத் தீர்ப்பு வழங்கும் நடைமுறையை இந்நீதிமன்றங்களில் கடைபிடிக்க வேண்டும்.

தீர்மானம் – 3

33% மகளிர் இட ஒதுக்கீட்டுச் சட்டத்தை நிறைவேற்ற வேண்டும்!

புதிதாக அமையும் நாடாளுமன்றத்தில் 33% மகளிர் இட ஒதுக்கீட்டுக்கான சட்டத்தை உடனடியாக நிறைவேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் ஒத்துழைப்பு நல்க வேண்டும்.

செய்தித் தொடர்பகம், 
மகளிர் ஆயம்

தொடர்புக்கு:
7373456737, 9486927540
முகநூல் : www.fb.com/MagalirAyam

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Thursday, April 4, 2019

விதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

விதிகளுக்கு முரணாக மேட்டூர் தண்ணீரை தமிழ்நாடு அரசு விரையமாக்குவது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
மேட்டூர் அணையிலிருந்து கடந்த 31.03.2019 முதல் “குடிநீருக்காக” என்று சொல்லி 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிடப்பட்டது. இதற்கு முன்னர் “குடிநீருக்காக” 8,000 கன அடி தண்ணீர் திறந்துவிட்டதில்லை. கடந்த காலத்தில் குடிநீர் பற்றாக்குறைக்காக அதிகபட்சமாக 2,000 கன அடி திறந்துவிட்டிருக்கிறார்கள்.

இந்த 8,000 கன அடி தண்ணீர் - காவிரிப் பாசன வரம்பிற்கு உட்படாத சாகுபடி நிலங்களுக்கு இந்தக் கோடை காலத்தில் திருப்பி விடப்படுகிறதோ என்ற ஐயம் ஏற்பட்டுள்ளது. மேட்டூரில் இருக்கின்ற சேமிப்புத் தண்ணீரை விதிமுறைகளுக்குப் புறம்பாக திறந்துவிட்டு காலி செய்து விட்டால், குறுவை சாகுபடிக்கு நீர் சேமிப்பு இருக்காது!

வழக்கமாக, பருவமழை காலத்தில் மேட்டூரில் தேங்கியுள்ள மிச்ச நீரை அடிப்படையாக வைத்துக் கொண்டுதான், கர்நாடகத்திலிருந்து வர வேண்டிய தண்ணீரில் ஓரளவைப் பெற்று குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணைத் திறக்கப்பட்டு வந்தது. கடந்த பருவமழை அதிகமாக இருந்ததால், மேட்டூர் அணையில் மார்ச்சு இறுதி வாக்கில் 64 அடி உயரத்திற்குத் தண்ணீர் இருந்தது.

அந்த சேமிப்பைக் காலி செய்கின்ற வகையில், 8,000 கன அடி திறந்துவிட்டதைக் கண்டித்து, கடந்த 02.04.2019 அன்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தஞ்சையில் தொலைக்காட்சி ஊடகத்தினரை சந்தித்து நானும், காவிரி உரிமை மீட்புக் குழு பொறுப்பாளர்களான ஐயனாபுரம் முருகேசன் அவர்களும், மணிமொழியன் அவர்களும் 8,000 கன அடி திறப்பதை நிறுத்த வேண்டும், 2,000 கன அடி திறந்துவிட்டாலே குடிநீருக்குப் போதும் என அறிக்கை கொடுத்தோம்.

அதன்பிறகு, 03.04.2019 முதல் மேட்டூரில் திறந்துவிடப்படும் அளவு 6,000 கன அடியாகக் குறைக்கப்பட்டாலும், இதுவும் அதிகமான வெளியேற்றம்தான். குறைக்கப்பட்ட அளவு போதாது! கிடுகிடுவென்று மேட்டூர் நீர் மட்டம் குறைந்து வருகிறது. இந்த விகிதத்தில் மேட்டூர் அணை நீர் மட்டம் குறைந்துவந்தால், குறுவை சாகுபடிக்கு தண்ணீர் இருக்குமா என்பது மட்டுமல்ல, கடும் கோடைக்காலத்தில் குடிநீருக்குக்கூட தண்ணீர் இல்லாத நிலை உருவாகும்.

கடந்த 2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீரைத் திறந்துவிடும்படி காவிரி மேலாண்மை ஆணையத்தைத் தமிழ்நாடு அரசு ஏன் வலியுறுத்தவில்லை?

இதில் கடமை தவறிய தமிழ்நாடு அரசு, குறைந்தளவு இருக்கின்ற மேட்டூர் நீரையும் விதிகளுக்கு முரணாகத் திறந்து விரையமாக்குவது வன்மையான கண்டனத்திற்குரியது. எனவே, வெளியேற்றும் நீரின் அளவை 2,000 கன அடிக்குள் வைக்குமாறும், மாத வாரியாக கர்நாடகத்திலிருந்து பெற வேண்டிய காவிரி நீரைத் திறந்துவிட மேலாண்மை ஆணையத்தைத் வலியுறுத்திப் பெறுமாறும் காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் தமிழ்நாடு அரசைக் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

Monday, April 1, 2019

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன்? தோழர் பெ. மணியரசன் கேள்வி!

அ.இ.அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் காவிரி உரிமையைக் கைவிட்டது ஏன்? காவிரி உரிமை மீட்புக் குழு ஒருங்கிணைப்பாளர் தோழர் பெ. மணியரசன் கேள்வி!
கடந்த 30.03.2019 அன்று நாகப்பட்டினம் நாடாளுமன்ற மக்களவைத் தொகுதியில் பரப்புரை செய்த தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள், “காவிரித் தண்ணீரைக் கொண்டு வருவதற்காக சட்டப் போராட்டம் நடத்திக் களைத்துப் போய் விட்டோம். எனவே, மாற்று ஏற்பாடுகளின் மூலம் பாசன நீர் கிடைக்கச் செய்ய முயன்று வருகிறோம். அந்த மாற்று ஏற்பாடுகளில் ஒன்று கோதாவரித் தண்ணீரைக் கொண்டு வருவது. இன்னொன்று, தமிழ்நாட்டில் அங்கங்கே தடுப்பணைகள் கட்டுவது” என்று கூறியிருக்கிறார்.

ஒருபக்கம், காவிரி உரிமையை மீட்டது அண்ணா தி.மு.க. ஆளுங்கட்சிதான் என்று மார்தட்டிக் கொள்ளும் முதலமைச்சர், காவிரியை நம்பிப் பயனில்லை என்று இப்படி பேசியிருக்கிறார். ஒரு முதலமைச்சர் இப்படி பேசுவது, சட்டப்படியான தமிழ்நாட்டு உரிமையைக் காவு கொடுப்பதாக உள்ளது.

அடுத்து, உச்ச நீதிமன்றத் தீர்ப்புப்படி கிடைக்க வேண்டிய காவிரி நீரைக் கொண்டு வர முடியாத முதலமைச்சர் ஆந்திரப்பிரதேசத்திலிருந்து கோதாவரித் தண்ணீரை மட்டும் எப்படிக் கொண்டு வருவார்? ஆந்திரப்பிரதேச மாநிலம், கோதாவரித் தண்ணீரைத் தமிழ்நாட்டிற்கு அளிக்க ஒப்புதல் அளித்துள்ளதா? அதற்கான ஒப்புதலை நடுவண் நீர்வளத்துறை அமைச்சர் நிதின் கட்கரி பெற்றிருக்கிறாரா? அல்லது முதலமைச்சர் எடப்பாடி பெற்றிருக்கிறாரா? ஆந்திரப்பிரதேச மாநிலம், ஒருபோதும் கோதாவரித் தண்ணீரை தமிழ்நாட்டிற்குத் தர அனுமதிக்காது!

காவிரி உரிமை மீட்பிலிருந்து தமிழர்களின் கவனத்தைத் திசைத் திருப்புவதற்காக இந்திய ஆட்சியாளர்களும், தமிழ்நாட்டிலுள்ள துரோகிகளும் திட்டமிட்டு கங்கை நீரைக் கொண்டு வரப் போகிறோம் என்று நாற்பது ஆண்டுகளாக நாடகமாடினார்கள். அந்த நாடகம் மோசடி என்று அம்பலமான பிறகு, கோதாவரி நீரைக் கொண்டு வரப்போவதாக பா.ச.க. ஆட்சியாளர்களும், அண்ணா தி.மு.க. ஆட்சியாளர்களும் கூட்டுச் சேர்ந்து புதிய நாடகத்தை தயாரித்திருக்கிறார்கள்.

அண்ணா தி.மு.க. மற்றும் தி.மு.க. தேர்தல் அறிக்கைகளில் உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி காவிரித் தண்ணீரை கர்நாடகத்திடமிருந்து பெறுவோம் என்று வாக்குறுதி கொடுக்கப்பட வில்லை. அதுமட்டுமின்றி, உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி முழுநேரப் பணி உள்ளவர்களைக் கொண்ட அமைப்பாக காவிரி மேலாண்மை ஆணையத்தை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், திட்டமிட்ட கெட்ட நோக்கத்தோடு பா.ச.க. நடுவண் அரசு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் புறம்பாக வேறு பணிகளில் முழுநேர அலுவலர்களாக உள்ளவர்களைக் கொண்டு, ஒப்புக்குக் காவிரி ஆணையம் அமைத்திருக்கிறது. அந்தக் காவிரி ஆணையம் செயல்படவே இல்லை!

2018 திசம்பரிலிருந்து மாதந்தோறும் திறந்துவிட வேண்டிய தண்ணீரை கர்நாடக அரசு திறந்துவிடவில்லை. உச்ச நீதிமன்றத் தீர்ப்பின்படி திசம்பர் மாதம் 7.3 டி.எம்.சி., சனவரி மாதம் – 3 டி.எம்.சி., பிப்ரவரி மாதம் - 2.3 டி.எம்.சி., மார்ச்சு மாதம் – 2.3 டி.எம்.சி., ஏப்ரல் மாதம் – 2.3 டி.எம்.சி. – ஆக மொத்தம் 14.9 டி.எம்.சி. தண்ணீர் வந்திருக்க வேண்டும். இந்தத் தண்ணீர் தமிழ்நாட்டிற்கு வருவதற்குக் காவிரி மேலாண்மை ஆணையம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை! செயல்படாத அந்த காவிரி ஆணையத்தை செயல்பட வைத்திட அ.இ.அ.தி.மு.க. அரசு ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை!

அ.இ.அ.தி.மு.க.வும், தி.மு.க.வும் இந்தத் தேர்தல் பரப்புரையில் காவிரி நீர் பெற்றுத் தருவதை முக்கியப் பரப்புரையாக செய்யவே இல்லை! கர்நாடகத்தின் பொல்லாப்பு வேண்டாம் என்று உள்நோக்கத்தோடு அ.இ.அ.தி.மு.க. மற்றும் தி.மு.க. தலைவர்கள் காவிரிச் சிக்கலைப் பேசாமல் ஒதுங்கிக் கொண்டதாகவே தெரிகிறது.

எனவே, தமிழர்கள் இந்தத் “தேர்தல் திருவிழா”வில் குழந்தையைப் பறிகொடுத்த தாயைப் போல் இல்லாமல், காவிரி உரிமை குறித்து இந்தக் கட்சிகள் பேசாததைக் கண்டிக்க வேண்டும்; போராட முன் வர வேண்டுமென்று காவிரி உரிமை மீட்புக் குழு சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.

செய்தித் தொடர்பகம்,
காவிரி உரிமை மீட்புக் குழு

பேச: 76670 77075, 94432 74002
Fb.com/KaveriUrimai
#SaveMotherCauvery
www.kaveriurimai.com

பேச: 7667077075, 9443918095
முகநூல் : www.fb.com/tamizhdesiyam
ஊடகம் : www.kannottam.com 
இணையம் : www.tamizhdesiyam.com 
சுட்டுரை : www.twitter.com/Tamizhdesiyam
காணொலிகள் : youtube.com/Tamizhdesiyam

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT