உடனடிச்செய்திகள்

Saturday, June 26, 2010

செம்மொழி மாநாட்டை சாக்காக வைத்து உளவுத்துறையின் அத்துமீறலும் பழிவாங்கும் முயற்சியும்

செம்மொழி மாநாட்டை சாக்காக வைத்துக் கொண்டு அச்சுறுத்துகிறார்கள் என்று தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன்.

அவர் மேலும் இது தொடர்பாக வெளியிட்டுள்ள அறிக்கையில்,

’’உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாட்டையும், விழுப்புரம் தண்டவாள குண்டு வெடிப்பையும் சாக்காக வைத்துக் கொண்டு ஓசூரில் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சித் தோழர்களை அச்சுறுத்திட அத்துமீறிய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள காவல்துறையையும் உளவுத்துறையையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிச் சார்பில் வன்மையாகக் கண்டிக்கிறேன்.


தமிழின உரிமைக்காகவும் தமிழ் மொழி உரிமைக்காகவும் சுறுசுறுப்பாக சனநாயக வழிப்பட்ட போராட்டங்களில் ஈடுபடும் ஓசூர் த.தே.பொ.க. தோழர்களை அச்சுறுத்தி பழிவாங்கவே காவல்துறை இவ்வாறு அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறது.

த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் தோழர் ஓசூர் கோ. மாரிமுத்துவை 23.06.2010 அன்று குற்றவியல் நடைமுறைச் சட்டப் பிரிவு 160ன் கீழ் ஓசூர் நகரக் காவல்துறையினர் அழைப்பாணை கொடுத்து காவல் நிலையத்திற்கு வரச் சொல்லி செம்மொழி மாநாட்டிற்கு எதிராக எந்த நடவடிக்கையிலும் ஈடுபடமாட்டோம் என்று எழுதிக் கொடுக்குமாறு வலியுறுத்தினர். அதற்கு தோழர் மாரிமுத்து அவ்வாறு எழுதித் தர மறுத்துவிட்டார்.

25.6.2010 அன்று த.தே.பொ.க ஓசூர் கிளைச் செயலாளர் தோழர் முத்தாலுவிடம் க்யூ பிரிவைச் சேர்ந்த சக்திவேல் என்பவர் தொலைபேசியில் “இம்மாதம் 9,10 தேதிகளில் எங்கிருந்தீர்கள்” என்று விசாரித்துள்ளார். அதற்கு தோழர் முத்தாலு “நான் ஓசூரில்தான் இருந்தேன்”, என்றும் “தொழிற்சாலைப் பணிக்கு இரு நாள்களும் போயிருந்தேன்”, என்றும் கூறியுள்ளார்.

அதன் பிறகு மேற்படி சக்திவேல் “நீங்கள் சொல்வது உண்மையா என்று விசாரிக்க உங்கள் பக்கத்து வீடுகளின் தொலைபேசி எண்களைக் கொடுங்கள்” என்றும் “அப்படிக் கொடுக்காவிட்டால் நாங்கள் காவல்துறையிலிருந்து வந்து உங்கள் குடும்பத்தையும் தெருவில் உள்ளவர்களையும் விசாரிப்போம்” என்றும் மிரட்டும் தொணியில் கூறியுள்ளார்.

விழுப்புரம் குண்டுவெடிப்பிற்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சிக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உலகத் தமிழ்ச் செம்மொழி மாநாடு குறித்து மாற்றுக் கருத்துகள் எங்கள் கட்சிக்கு உண்டு. எங்களின் மாற்றுக் கருத்துகளை சனநாயக வழிகளில் வெளிப்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்ற போதிலும் நாங்கள் அவ்வாறான எதிர்ப்பு நடவடிக்கைகள் எதிலும் ஈடுபடவில்லை. எங்கள் கட்சி அமைப்பை வலுப்படுத்துவதற்குரிய இதர பணிகளைப் பார்த்துக் கொண்டுள்ளோம்.

மேற்கண்ட காவல் துறை மற்றும் உளவுத் துறைகளின் சட்டத்திற்குப் புறம்பான அத்துமீறல்கள் குறித்து கிருட்டிணகிரி மாவட்டக் காவல்துறைக் கண்காணிப்பாளரிடம் 25.6.2010 அன்று தொலைபேசி வழி முறையீடு செய்துள்ளேன்.

இதன்பிறகும் த.தே.பொ.க.விற்கு எதிரான காவல்துறை மற்றும் உளவுத்துறையின் அத்துமீறலும் பழிவாங்கும் முயற்சியும் ஓசூரில் தொடர்ந்தால் உடனடியாகத் தமிழகமெங்கும் கண்டன இயக்கம் நடத்துவோம் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்’’என்று தெரிவித்துள்ளார்.

Thursday, June 17, 2010

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள்!


ஈழத்தமிழ் இனத்தை உருக்குலைக்கும் இந்திய இலங்கை ஒப்பந்தங்களை நீக்கக் கோரி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் நாளை (18.06.2010) வெள்ளிக்கிழமை தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்படுகின்றன. இவ்வார்ப்பாட்டங்கள் நடைபெறும் இடங்களை இக்கட்சியின் தலைமைச் செயலகம் அறிவித்துள்ளது.

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சியின் பொதுச் செயலாளர் பெ.மணியரசன், தஞ்சை மாவட்டம் செங்கிப்பட்டியில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார். அவ்வார்ப்பாட்டத்திற்கு ரெ.கருணாநிதி தலைமை தாங்குகிறார். தஞ்சை மாவட்டத் துணைச் செயலாளர் குழ.பால்ராசு முன்னிலை வகிக்கிறார். செங்கிப்பட்டியில் 18.06.2010 அன்று மாலை 4 மணியளவில் இவ்வார்ப்பாட்டம் நடைபெறுகிறது.

தஞ்சை நகரம், ரயிலடியி்ல் 18.06.2010 அன்று மாலை நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. நகரச் செயலாளர் முனியாண்டி தலைமை தாங்குகிறார். தமிழக இளைஞர் முன்னணியின் பொதுச் செயலாளர் நா.வைகறை கண்டன உரையாற்றுகிறார்.

கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்குடியில் காலை 10 மணிளவில் பேருந்து நிலையம் அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. கிளைச் செயலாளர் சிவ.அருளமுதன் தலைமை தாங்குகிறார். பெண்ணாடத்தில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்தற்கு பெரியார் செல்வம் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் முருகன் முன்னிலை வகிக்கிறார். இவ்விரு இடங்களிலும், த.தே.பொ.க. தலைமைச் செயற்குழு உறுப்பினர் கி.வெங்கட்ராமன் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகிறார்.

சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகில் மாலை 4 மணியளவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் பழ.நல்.ஆறுமுகம் தலைமை தாங்குகிறார். இளந்தமிழர் இயக்கத்தின் ஒருங்கிணைப்பாளர் க.அருணபாரதி, வழக்கறிஞர் இளவரசன் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.

திருத்துறைப்புண்டி கடைத்தெருவில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. ஒன்றியச் செயலாளர் வழக்கறிஞர் இ.தனஞ்செயன் தலைமை தாங்குகிறார். த.தே.பொ.க. தஞ்சை மாவட்டச் செயலாளர் பழ.இராசேந்திரன், மூத்த தோழர் இரா. கோவிந்தசாமி ஆகியோர் இதில் கலந்து கொண்டு கண்டன உரையாற்றுகின்றனர்.

மதுரை ஜான்சி ராணி புங்கா அருகில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. மாநகரச் செயலாளர் ரெ.இராசு தலைமை தாங்குகிறார். திருச்செந்தூர் குறும்புரில் நடைபெறும் ஆர்ப்பாட்டத்திற்கு த.தே.பொ.க. பொதுக்குழு உறுப்பினர் தமிழ்மணி தலைமை தாங்குகிறார்.

இதே போல், தமிழகமெங்கும் நடைபெறுகின்ற இவ்வார்ப்பாட்டங்களில் திரளான தமிழ் இன உணர்வாளர்கள் கலந்து கொண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்திற்கு எதிராகத் தம் உணர்வுகளைப் பதிவு செய்திட வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறோம்.

Monday, June 14, 2010

இந்திய இலங்கை ஒப்பந்தத்தை எதிர்த்து தமிழகமெங்கும் த.தே.பொ.க. ஆர்ப்பாட்டம்!

ஈழத்தமிழர்கள் மீது மீண்டுமொரு போரை தொடுக்கும், இந்திய இலங்கை அரசுகள் புதிதாக போட்டுள்ள ஒப்பந்தங்களை கண்டித்து தமிழகமெங்கும் வரும் 18.06.2010 அன்று கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும் என தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அக்கட்சியின் தலைமைச் செயலகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டுள்ளதாவது:

ஈழத்தமிழர்களுக்கெதிரான ஐந்தாம் கட்டப்போரை இலங்கையும், இந்தியாவும் புதிய முறையில் தொடங்கியுள்ளன என்பதற்கான அடையாளம் தான் மன்மோகன் சிங் இராசபட்சே உடன்பாடுகள்!

கடந்த 08.06.2010 அன்று புதுதில்லியில் சிவப்புக் கம்பளம் விரித்து இராசபட்சேயை வரவேற்ற இந்தியா 09.06.2010 அன்று இலங்கையுடன் செய்து கொண்ட ஒப்பந்தங்கள் ஈழத்தமிழர் தாயகத்தைப் பறிப்பதையும், ஈழத்தமிழ் இனத்தைச் சிதைத்துச் சின்னா பின்னமாக்கி விரட்டுவதையும் நோக்கமாகக் கொண்டுள்ளன.

இந்தியாவும், இலங்கையும் போர்படைகளைப் பரிமாற்றிக் கொள்ளவும் சிங்களப் படையினர்க்கு இந்தியா உயர்தரப் பயிற்சி அளிக்கவும் ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.

சிங்களக் காவல்துறையில் புதிதாக சேர்க்கப்படும் ஆட்களுக்கு இந்தியாவில் உயர்தரப் பயிற்சி அளிக்கப்படும்.

இந்தியா தனது செயற்கைக் கோள் தகவல் மையத்தை இலங்கையில் நிறுவும்.

பலாலி விமானப் படைத்தளத்தை மேலும் வலுப்படுத்தித் தர இந்தியா ஒப்புக் கொண்டள்ளது.

இத்தனை போர்த் தயாரிப்புகளும் எந்தப் பகை நாட்டிற்கு எதிராக? இலங்கையில் இந்தியாவும் சிங்கள அரசம் ஈழத்தமிழர்களைத்தாம் ஒரே பகை சக்தியாகக் கருதுகின்றன.

வடக்கு, கிழக்கு மாநிலங்கள் முழுவதையும் பல்லாயிரக்கணக்கான படைமுகாம்கள் சூழ்ந்துள்ளன. சிங்களப் படையாளுக்குத் தெரியாமல் ஒரு தமிழர் சிறுநீர் கிழிக்கக் கூட வெளியே போக முடியாது.

தமிழர்களின் வீடுகளையும் விளைநிலங்களையும் சிங்களர்கள் ஆக்கிரமித்துக் கொண்டனர். இதன்பிறகும் ஏன் புதிய போர்த்தயாரிப்புகள்? ஈழத்தமிழர்களை முற்றிலும் சிதைத்து உதிரிகளாக மாற்றுவதற்காகவே இந்தத் தயாரிப்பு!

இந்தியா தனது துணைத் தூதரகங்களை யாழ்ப்பாணத்திலும் அம்பன் தோட்டாவிலும் திறக்க உடன்பாடு போட்டுள்ளது. அந்தச் சுண்டைக்காய் நாட்டிற்குக் கொழும்பில் உள்ள இந்தியத் தூதரகம் போதாதா? தமிழர் தாயகப் பகுதிகளில் தூதரகப் பெயரில் படைசார் உளவுப் பிரிவுகளை நிறுத்துவது தான் இந்தியாவின் நோக்கம்.

வடக்கில் வசந்தம் என்ற பெயரில் தமிழர் நிலங்களை ஆக்கிரமித்து சிங்களர் வேளாண் பண்ணைகள் அமைக்கும் திட்டத்தை இந்தியா, ஏற்கெனவே இலங்கைக்கு வழங்கியுள்ளது. அதற்கான ஒப்பந்தம் இப்போது போடப்பட்டுள்ளது.

போர் விதவைகளின் மறுவாழ்வுக்கு உதவுவதற்கு இந்தியா ஒப்பந்தம் போட்டுள்ளது. இத்திட்டம் சிங்களப் படையாட்களின் மனைவி மார்களுக்கு உதவிடத்தானே தவிர, போரால் விதவையான தமிழ்ப் பெண்களுக்கு உதவிட அல்ல.

தமிழகத்திலிருந்து கடல் வழியாக இலங்கைக்கு மின்சாரம் தர இந்தியா ஒப்புக் கொண்டுள்ளது. இதனால் நெய்வேலி மின்சாரத்தை இலங்கைக்கு அனுப்பக்கூடிய ஆபத்து உள்ளது.

பண்பாட்டுப் பரிமாற்றம் என்ற பெயரில் சிங்களப் பண்பாட்டையும் புத்தமதத்தையும் ஈழத்தில் திணிப்பதும் சிங்களக் குடியேற்றங்களை அங்கு அதிகப்படுத்துவதும் தான் நடக்கும்.

எனவே இந்திய அரசம் இலங்கை அரசம் போட்டுள்ள ஒப்பந்தங்கள் ஒவ்வொரு தமிழரையும் இராணுவக் கண்காணிப்பின் கீழ்வைத்து, உரிமைக்குக் குரல் கொடுப்போரை நசுக்கவே பயன்படும்.

இந்த ஒப்பந்தங்களை நீக்க வலியுறுத்தி தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் 18.06.2010 வௌ;ளிக்கிழமை தமிழகமெங்கும் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெறும். ஆர்ப்பாட்டம் நடைபெறும் இடங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

Monday, June 7, 2010

PRESS RELEASE : தடையை மீறி இராசபட்சேவுக்குக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் - பெ.மணியரசன் அறிக்கை

தடையை மீறி இராசபட்சேவுக்குக் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம்

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி பொதுச் செயலாளர் பெ.மணியரசன் அறிக்கை

 07.06.2010.
 

இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்று குவித்த கொலைகாரக் கொடூரன் இராசபட்சேவுக்குத் தில்லியில் இந்திய அரசு சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுப்பதைக் கண்டித்தும், இராசபட்சேயைத் திரும்பிப் போக வலியுறுத்தியும் 08.06.2010 அன்று சென்னை இலங்கைத் தூதரகம் முன்பும் மாவட்டத் தலைநகர்களிலும் கருப்புக் கொடிக் கண்டன ஆர்ப்பாட்டம் செய்யத் தமிழ் இன உணர்வு அமைப்புகள் முடிவு செய்துள்ளன.

சனநாயக வழிமுறைப்படி நடைபெறவுள்ள இந்த ஆர்ப்பாட்டத்திற்குத் தமிழகம் முழுவதும் தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக அரசு விதித்துள்ள இந்தத் தடை சிங்கள இனவெறி அரசுக்கு ஊக்கமளிப்பதாக உள்ளது.

அமெரிக்க ஐரோப்பிய நாடுகளில் உள்ள மனித உரிமை அமைப்புகள் இராசபட்சேயைப் போர்க் குற்றவாளியாக அறிவித்துள்ளன. மனித உரிமைக்கான நிரந்தரத் தீர்ப்பாயம் அயர்லாந்து தலைநகர் டப்ளின் நகரில் கூடி திறந்தவெளி விசாரணை நடத்தி இராசபட்சே கும்பலைப் போர்க் குற்றவாளிகள் என்று தீர்ப்பு வழங்கியுள்ளது. அமெரிக்காவில் செயல்படும் மனித உரிமை கண்காணிப்பகம், இராசபட்சேயைப் போர்க்குற்றவாளியாக விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளது. ஐ.நா. மனித உரிமைப் பிரிவும் இராபட்சே கும்பல் மீது விசாரணை நடத்த வேண்டும் என்று கோரியுள்ளது. இலங்கை அரசு தமிழர்களுக்கு எதிராகப் போர்க் குற்றங்கள் இழைத்துள்ளது என்று கூறி ஐரோப்பிய ஒன்றிய நாடுகள் இலங்கையுடன் நடக்கும் வணிகத்திற்கு அளித்து வந்த வரிச்சலுகையை நீக்கிவிட்டன. பிரித்தானிய நாடாளுமன்றம் விசாரணைக்குழு அமைத்துள்ளது.

இவ்வாறு அப்பாவி ஈழத்தமிழ்ப் பொது மக்களை இனப்படுகொலை செய்து போர்க்குற்றங்கள் இழைத்துள்ள இலங்கைக் குடியரசுத் தலைவர் இராசபட்சேவுக்கு எதிராக உலகமே கண்டனம் முழங்கும் போது இந்திய அரசு 08.06.2010 அன்று தில்லியில் சிவப்புக் கம்பள வரவேற்புக் கொடுப்பது வன்மையாகக் கண்டிக்கத்தக்கது.

போர்க்குற்றவாளி இராசபட்சேவுக்கும் அவரை வரவேற்கும் இந்திய அரசுக்கும் கண்டனம் தெரிவிக்கும் வகையில் நடைபெறவுள்ள கண்டன ஆர்ப்பாட்டத்தைத் தடைசெய்வதன் மூலம் தமிழக அரசு இனத்துரோகம் செய்து, தமிழர்களை இலட்சணக்கணக்கில் கொன்ற இராசபட்சேவுக்குத் துணை போகிறது.

அரசமைப்புச் சட்டம் வழங்கும் அடிப்படை உரிமையான ஆர்ப்பாட்டம் நடத்தும் உரிமையைப் பறிக்கும் தமிழக அரசின் ஏதேச்சாதிகாரத்தையும் இனத்துரோகத்தையும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் வன்மையாகக் கண்க்கிறேன்.

அதே வேளை தடையை மீறி கருப்புக் கொடி ஆர்ப்பாட்டம் நடைபெறம் என்பதையும் உறதிபடத் தெரிவித்துக் கொள்கிறேன்.
 
தோழமையுடன்,

பெ.மணியரசன்,

பொதுச் செயலாளர்,

தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி.

 

போராட்டங்கள்

செய்திகள்

 
Copyright © 2013 தமிழ்த்தேசியப் பேரியக்கம்
Design by FBTemplates | BTT