ஏழுத்தமிழர் விடுதலையில் தமிழ்நாடு அரசுக்கு அதிகாரமில்லை என்ற உச்ச நீதிமன்றத் தீர்ப்பு அப்பட்டமான அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பே!
தமிழ்த் தேசியப் பேரியக்கப் பொதுச் செயலாளர் தோழர் கி. வெங்கட்ராமன் கண்டனம்!
பேரறிவாளன், முருகன், சாந்தன் உள்ளிட்ட இராசீவ் காந்தி வழக்கு சிறையாளிகளுக்கு தமிழ்நாடு அரசு, விடுதலை வழங்கியது தொடர்பான வழக்கில், இன்று (திசம்பர் 2) தீர்ப்பு வழங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம், அரசமைப்புச் சட்டத்தையும் இந்தியக் கூட்டாட்சி முறைமையையும் ஒரே அடியில் கவிழ்த்துவிட்டது.
உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி எச்.எல்.தத்து, நீதிபதிகள் இப்ராஹிம் கலிபுல்லா, பி.சி.கோஸ், ஏ.பி.சாப்ரே, யு.யு.லலித் ஆகிளோர் அடங்கிய அரசமைப்புச் சட்ட ஆயம், பெரும்பான்மை அடிப்படையில் அளித்துள்ள தீர்ப்பு, தண்டனைக்குறைப்பு அதிகாரம் மாநில அரசுக்கு இல்லை, இந்திய அரசுக்கு மட்டுமே உண்டு எனக் கூறியிருப்பது, நீதிமன்றமே செய்யும் அரசமைப்புச் சட்டக் கவிழ்ப்பு ஆகும்.
இந்திய அரசமைப்புச் சட்டம் இந்தியாவை அரசுகளின் ஒன்றியம் (Union of States) என்றுதான் கூறுகிறது. இங்கு அரசு என்று சொல்லப்பட்டிருப்பது, மாநிலத்தை அல்லது மாகாணத்தை(Province) குறிப்பது அல்ல.
இந்தியாவின் ஒட்டுமொத்த இறையாண்மை, இரண்டு தளங்களில் பகிரப்பட்டு அந்தந்த தளங்களில் அந்தந்த அரசு உறுப்புகள் செயல்படுகின்றன.
இதில், தண்டனைக்குறைப்பு அதிகாரம், மன்னிப்பு அதிகாரம் ஆகியவை அரசமைப்புச் சட்ட உறுப்பு 72-இன்படி இந்திய ஒன்றிய அரசுக்கும், உறுப்பு 161-இன்படி மாநில அரசுக்கும் உள்ளது.
மாரூராம் எதிர் இந்திய ஒன்றிய அரசு என்ற வழக்கில், நீதிபதி வீ.ஆர். கிருஷ்ணய்யர் தலைமையில் அமைக்கப்பட்ட 5 நீதிபதிகள் கொண்ட ஆயம், அரசமைப்புச் சட்ட உறுப்பு 72 மற்றும் 161 ஆகியவை சம அதிகாரம் கொண்டவை, ஒரே நேரத்தில் இணையாக செயல்படக் கூடியவை என்று தெளிவுபடுத்திவிட்டது.
அதாவது, மாநில அரசின் மன்னிப்பு அதிகாரமும் இந்திய ஒன்றிய அரசின் மன்னிப்பு அதிகாரமும் இணையானவை என்றும் சம அதிகாரம் உடையவை என்றும் ஒரே சமயத்தில் செயல்படக் கூடியவை என்றும் தெளிவாக்கப்பட்டுள்ளது.
அதற்குப் பிறகு, திரிவேணி பென் வழக்கிலும் அது உறுதி செய்யப்பட்டிருக்கிறது.
ஏனெனில், உயிர் வாழும் உரிமை குறித்த மிக அடிப்படையான மனித உரிமையில் கூட்டாட்சி முறைமை தங்கு தடையின்றி செயல்பட வேண்டும் என்பதே, அரசமைப்புச் சட்டத்தின் சாரமான நிலைப்பாடாகும்.
இந்த நிலையில், தண்டனைக் குறைப்பு மற்றும் மன்னிப்பு அதிகாரத்தில், விதி 161-இன்படி உள்ள அதிகாரத்தையும் சேர்த்து, இத்தீர்ப்பு இரத்து செய்து கூட்டாட்சி முறைமைக்கே வேட்டு வைக்கிறதோ என்ற ஐயம் எழுகிறது.
குற்றவியல் சட்ட விதி 435(1), இந்திய அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட புலனாய்வு அமைப்பு ஒரு வழக்கை விசாரித்திருந்தால், அது தொடர்பான தண்டனைக் குறைப்பு முடிவெடுப்பதற்கு முன் மாநில அரசு ஒன்றிய அரசுடன் “கலந்தாலோனை”(Consultation) செய்ய வேண்டுமெனக் கூறுகிறது.
இந்திய அரசின் அதிகாரத்திற்குட்பட்ட சட்டப்படி, தண்டனை விதிக்கப்பட்டிருந்தால் அவ்வழக்குகளில் ஒன்றிய அரசின், “ஒப்புதல்”(Consent or Concurrence) பெற வேண்டும் என்று விதி 435(2) கூறுகிறது.
குற்றவியல் சட்ட விதி 435(1)இல், “கலந்தாலோசனை” (Consultation) என்பதும் 435(2)இல் “ஒப்புதல்” (Consent or Concurrence) என்பதும் தெளிவாக வரையறுக்கப்பட்டு, வெவ்வேறு நிலைகளுக்குப் பொருந்துமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், உச்ச நீதிமன்ற அரசமைப்பு ஆயம், இராசீவ் காந்தி கொலை வழக்கில், தமிழ்நாடு அரசு “கலந்தாலோசனை” (Consultation) செய்ய வேண்மெனக் கூறப்படுவது ஒப்புதல் (Concurrence) பெறுவது தான் என விளக்கம் அளிப்பது சட்ட வளைப்பாக இருக்கிறது.
435(1)இன்படி, கலந்தாலோசனை(Consultation) என்றாலும் ஒப்புதல்தான் (Consent or Concurrence); 435(2)இன்படி, ஒப்புதல் (Consent or Concurrence) என்றாலும் ஒப்புதல்தான் என விளக்கம் அளிப்பது, வினோதமான வேதனையாக இருக்கிறது.
அதேபோல், இத்தீர்ப்பு வாழ்நாள் தண்டனை என்றால் அச்சிறையாளியின் எஞ்சியுள்ள வாழ்நாள் முழுவதும் சிறையிலிருப்பதைத்தான் குறிக்கும் எனக் கூறுவது, குற்றவியல் சட்ட விதி 433(A) -வை தூக்கியெறிவதாக இருக்கிறது.
மரண தண்டனை விதிக்கப்படடு, அது கருணை மனுவின் வழியாக வாழ்நாள் தண்டனையாக குறைக்கப்பட்டவர்களுக்கு 14 ஆண்டுகள் கழித்தபிறகு, அரசமைப்பு உறுப்பு 161-இன்படி அல்லது, குற்றவியல் சட்ட விதி 435(2)இன்படி, மேலும் தண்டனைக் குறைப்பு வழங்கி விடுதலை செய்வது அனுமதிக்கப்பட்டிருக்கிறது.
இவை எல்லாவற்றையும் ஒரே அடியாக குப்பைக் கூடையில் வீசி, இந்திய அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கட்டமைப்பையும், அரைகுறையாவாவது நிலவும் கூட்டாட்சி முறைமையையும் குலைப்பதாக உள்ளது.
அந்தவகையில், ஐந்து நீதிபதிகள் கொண்ட இந்த ஆயத்தின் தீர்ப்பு இதற்கு முன் ஒன்பது நீதிபதிகள் கொண்ட உச்ச நீதிமன்ற முழு ஆயம் கேசவானந்த பாரதி வழக்கில் அளித்தத் தீர்ப்புக்கு முரணாக, அதாவது அரசமைப்புச் சட்டத்தின் அடிப்படை கட்டமைப்பை தகர்க்கும் வகையில் அமைந்துள்ளது.
எனவே, இத்தீர்ப்பை தமிழ்நாடு அரசு ஏற்றுக் கொள்ளாமல் - உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட முழு ஆயம் வழியாக விசாரிப்பதற்கு சட்ட ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்றும் அதுவரை இராசீவ் காந்தி வழக்கில் சிறையிலுள்ள வாழ்நாள் சிறையாளிகள் 7 பேரையும் நீண்டகால விடுப்பில் (Parole) இடைக்கால விடுதலை வழங்க வேண்டும் என்றும், தமிழ்த் தேசியப் பேரியக்கம் சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
இன்னணம்,
கி. வெங்கட்ராமன்
பொதுச் செயலாளர்,
தமிழ்த் தேசியப் பேரியக்கம்.