“தமிழகம் வரும்
சிங்களர்களை வெளியேற்றுவது
தமிழக மக்களின்
சனநாயகக் கடமையாகும்!”
தமிழ்த் தேசப் பொதுவுடைமைக்
கட்சித் தலைவர்
தோழர் பெ.மணியரசன் அறிக்கை
தமிழக அரசுக்குத் தெரிவிக்காமலும்,
உரிய அதிகாரியின் அனுமதி பெறாமலும் சென்னை நேரு உள் விளையாட்டரங்கில், சிங்களக்
கால்பந்தாட்ட அணியினர் விளையாட வாய்ப்பளித்த அதிகாரியை, தமிழக முதல்வர் செயலலிதா
அவர்கள் இடைநீக்கம் செய்து ஆணையிட வைத்தது வரவேற்கத்தக்கது;
பாராட்டிற்குரியது.
தஞ்சை மாவட்டம் பூண்டி மாதா
கோயிலுக்கு வந்த சிங்களர்கள் 184 பேரை திருப்பி அனுப்பும்படி போராடி
அப்போராட்டத்தில் வெற்றி பெற்ற தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி, நாம் தமிழர்
கட்சி, விடுதலை சிறுத்தைகள், விடுதலைத் தமிழ்ப்புலிகள் ஆகிய அமைப்புகளைச்
சேர்ந்தவர்களுக்கும், இன உணர்வாளர்களுக்கும் தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி
பாராட்டுத் தெரிவிக்கிறது.
அதே போல், திருச்சி கலைக்காவிரி
கல்வி நிறுவனத்திற்கு கலைப் பயிற்சி என்ற பெயரில் கலந்து கொண்ட, சிங்கள மாணவர்களை வெளியேற்ற
போராடிய தமிழ்த் தேசிய அமைப்புகளுக்கு நம் பாராட்டுகள்!
முன்னாள் முதல்வர் கலைஞர் மு.கருணாநிதி
அவர்கள், சிங்களப் படைவீரர்களுக்கு பயிற்சி அளிப்பதை எதிர்க்கலாம், ஆனால் சிங்கள
விளையாட்டு அணியினர் வருவதை எதிர்க்கக் கூடாது என்று கூறியுள்ளார். தினமணி
ஏடு சிங்களப் படையாட்களுக்கு தமிழ்நாட்டில் பயிற்சி அளிப்பதையே எதிர்க்கக் கூடாது
என்றும், விளையாட்டு, கல்வி மற்றும் வழிபாடு தொடர்பாக தமிழகத்திற்கு வரும்
சிங்களர்களை வெளியேற்றக் கோரக் கூடாது என்றும் ஆசிரியவுரை (04.09.2012) எழுதியுள்ளது.
தமிழீழத்தில், 2009ஆம் ஆண்டு ஒன்றரை
இலட்சம் அப்பாவித் தமிழ் மக்களை குழந்தைகள், முதியவர், பெண்கள் என்று பாராமல் சகட்டுமேனிக்கு
படுகொலை செய்தது இலங்கை அரசு. போரின் கடைசி நாட்களில் 40,000 பேர் கொல்லப்பட்டனர்
என்றும் அது மனித குலத்திற்கு எதிராக இலங்கை இராணுவம் இழைத்தக் குற்றம் என்றும்,
அதற்குப் பொறுப்பானவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஐ.நா. பொதுச்
செயலாளர் பான் கீ மூன் அமைத்த மூவர் குழு விசாரணை அறிக்கை வழங்கியது.
கடந்த மார்ச் மாதம் 22 அன்று, ஜெனீவாவில்
நடந்த மனித உரிமை மன்றக் கூட்டத்தில், இலங்கையில் நடந்த மனிதப் படுகொலைத் தொடர்பாக
விசாரணை நடத்தி குற்றவாளிகளைத் தண்டிக்க வேண்டுமென அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானம்
நிறைவேற்றப்பட்டிருக்கிறது.
இலட்சக்கணக்கான ஈழத்தமிழர்களை
இனப்படுகொலை செய்த இலங்கை அரசுக்கு எதிராக இந்திய அரசு பொருளாதாரத் தடை விதித்து,
அதே பொருளாதாரத் தடையை மற்ற நாடுகளும் விதிக்க இந்தியா முன்முயற்சி எடுக்க
வேண்டும் என்று ஒருமனதாக தமிழக அரசு, 2011ஆம் ஆண்டு சூன் மாதம், தமிழக
சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது. அப்பாவித் தமிழ் மக்களை கூட்டம் கூட்டமாகக்
கொலை செய்த இராணுவத்தினர் மீதும் மற்றவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்க அத்தீர்மானம்
வலியுறுத்தியது.
இப்பின்னணிகளுடன் தான், தமிழ்நாட்டில்
சிங்களர் வருகையைத் தடுக்கும் போராட்டமும் சிங்களப் படையாட்களுக்குப் பயிற்சித்
தருவதை எதிர்க்கும் போராட்டமும் நடைபெறுவதைப் புரிந்து கொள்ள வேண்டும்.
இன ஒதுக்கல் கொள்கையை அரசியல்
கொள்கையாகக் கடைபிடித்து, கருப்பின மக்களை நசுக்கி வெள்ளை இனவெறி ஆட்சி நடந்த தென்னாப்பிரிக்கா,
ஜிம்பாப்வே ஆகிய நாடுகளுக்கு எதிராக சோவியத் ஒன்றியம் உள்ளிட்ட சோசலிச நாடுகளும், இந்தியா
உள்ளிட்ட அணிசாரா நாடுகளும் தூதரக உறவை நீக்கி அந்நாடுகளுக்கு எதிராக பொருளாதாரத்
தடை, விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், பக்தர்கள் உள்ளிட்ட யாரும் போகத்
தடை, அதே போல் அங்கிருந்து மக்கள் தங்கள் நாடுகளுக்கு வரத்தடை என்ற தடைகளை விதித்து
செயல்படுத்தி வந்தன.
தமிழீழத்தில் எண்ணற்ற இந்துக்
கோயில்களையும், கிறித்துவ தேவாலயங்களையும் தகர்த்த இலங்கை அரசின் சிங்கள பௌத்த
வெறியை, அந்நாட்டுச் சிங்கள மக்கள் தடுத்து நிறுத்தாமல் அவ்வெறியில் தீவிரம்
காட்டிய இராசபக்சேயைத் தான் அவர்கள் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள். பூண்டி மாதாகோவிலுக்கு
வந்த சிங்கள பக்தர்களை திருப்பி அனுப்புவதைக் கண்டிக்கும் ‘தினமணி’ இதையும்
கவனத்தில் கொள்ள வேண்டும்.
இங்கு வரும் சிங்களர்களை ஈழத்தமிழர்களை
இலங்கை அரசுத் தாக்கும் என்று ‘தினமணி’ ஏடு
கூறுகிறது. இதுவரை, இலட்சக்கணக்கில் ஈழத்தமிழர்களைக் கொன்றும் இப்பொழுது
தமிழர்களின் சொந்த ஊர்களையும், வீடுகளையும் சிங்களப் படையினரும், சிங்களவர்களும்
ஆக்கிரமித்துக் கைப்பற்றி வருவதும் தமிழகம் சிங்களர்களுக்கு பதிலடி கொடுக்காத காலங்களில்
நடந்தவை என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும். இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையே
உள்ள அரசியல் உறவு ஈழத்தமிழர்களை அழிக்கத்தான் பயன்படுகிறதே தவிர, பாதுகாக்கப்
பயன்படவில்லை என்பதை இன்னுமா ‘தினமணி’ புரிந்து
கொள்ளவில்லை?
பாலஸ்தீனர்களின் தாயகத்தைப் பறித்துக்
கொண்டு, யூத மேலாதிக்கம் செலுத்திய இஸ்ரேலுக்கு எதிராகவும், இதே போன்ற தடைகள்
விதிக்கப்பட்டன. அதனுடனும் இந்தியா உள்ளிட்ட நாடுகள் தூதரக உறவு வைத்துக்
கொள்ளவில்லை. தென்னாப்பிரிக்கா, ஜிம்பாப்வே, இஸ்ரேல் ஆகிய நாடுகளில் நடந்த கொடுமைகளை
விட, பன்மடங்கு அதிகமாக இலங்கை அரசு ஈழத்தமிழர்களுக்கு எதிராக இனஒதுக்கல் கொள்கையை
கடைபிடித்து வருகின்றது. அவர்களின் தாயகத்தை ஆக்கிரமிப்பதுடன் இலட்சக்கணக்கில்
தமிழர்களை ஈழத்தில் இனப்படுகொலை செய்துள்ளது.
மனித உரிமையிலும், தேசிய இனங்களின்
தன்னுரிமையிலும் உண்மையான அக்கறை கொண்டிருந்தால் இந்தியாவும், உலக நாடுகளும் இலங்கையுடன்
உள்ள தூதரக உறவை நீக்கி, அதற்கு எதிராகப் பொருளாதாரத் தடை விதிப்பதுடன் சிங்கள இராணுவ
வீரர்களுக்குப் பயிற்சி அளிப்பது போன்ற கொடிய செயல்களையும் செய்யாமல் இருக்க
வேண்டும். மேலே சுட்டிக்காட்டிய நாடுகளிடம் கடைபிடித்த, அதே தடைகளை விதித்து
விளையாட்டு வீரர்கள், கல்வியாளர்கள், மாணவர்கள், கலைத்துறையினர் ஆகியோரின்
போக்குவரத்தையும் தடை செய்திருக்க வேண்டும்.
ஈழத்தமிழர்களை இலட்சக்கணக்கில்
இனப்படுகொலை செய்த சிங்கள இராணுவத்திற்கு இந்திய அரசு, இராணுவ உதவிகளையும், அந்நாட்டுக்கு
நிதி உதவி மற்றும் அரசியல் உதவிகளையும் செய்தது. சிங்கள இராணுவம் ஈழத்தமிழர்களைக்
கொன்றது மட்டுமின்றி, தமிழகத்தின் மீனவத் தமிழர்களையும் சற்றொப்ப 600க்கும்
மேற்பட்டோரைக் கொன்றுள்ளது. இந்த படையாட்களுக்கு, தமிழ்நாட்டிலும் இந்தியாவிலும்
மீண்டும் மீண்டும் பயிற்சி அளிப்பது, மீண்டும் ஈழத்தமிழர்களையும் தமிழக
மீனவர்களையும் படுகொலை செய்வதற்கான பயிற்சித் தவிர வேறு என்ன? இலங்கை அரசு எந்த
நாட்டோடு போர் புரிய வேண்டிய தேவை இருக்கிறது?
இந்திய அரசு, தமிழினப் பகை அரசாக
தொடர்ந்து செயல்பட்டு வரும் நிலையில், தமிழ்நாட்டுத் தமிழர்கள் தங்கள் இனத்தைப்
பாதுகாத்துக் கொள்ளப் போராட வேண்டியத் தேவை இருக்கிறது. தமிழக சட்டப்பேரவையில்
இலங்கை அரசுக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட ஒருமித்தத் தீர்மானம் தமிழக மக்களின் நிலைபாட்டை
வெளிப்படுத்தும் தீர்மானமாகும். தமிழக அரசின் அத்தீர்மானத்தை இந்திய அரசு
செயல்படுத்த முன்வந்திருக்க வேண்டும். இந்திய அரசு சிங்கள இன ஆதரவுக் கொள்கையும்,
தமிழின எதிர்ப்புக் கொள்கையும் கடைபிடிக்கும் போது, தமிழக அரசின் தீர்மானத்தையே இறையாண்மையுள்ள
ஓர் அரசின் தீர்மானம் போல் செயல்படுத்த வேண்டியப் பொறுப்பு தமிழக மக்களுக்கு இருக்கிறது.
கருப்பின மக்களுக்கு சம உரிமை வழங்காத
தென்னாப்பிரிக்காவுடன் இந்தியாவுக்கு தூதரக உறவு இல்லாத போது, தமிழக ஆன்மீகச்
சொற்பொழிவாளர் பித்துக்குளி முருகதாஸ் அவர்கள், தென்னாப்பிரிக்கத் தமிழர்கள்
அழைப்பின் பேரில் அங்கு ஆன்மீகச் சொற்பொழிவிற்குப் போனார். அவர் மீது இந்திய அரசு கடும்
கண்டனம் தெரிவித்தது. விசாரணையும் அவரிடம் நடத்தியது. அதே போல், இஸ்ரேல்
நாட்டிலிருந்து எந்த விஞ்ஞானிகளும் இந்தியாவுக்கு வரக்கூடாது என தடை விதித்தது
இந்திய அரசு. பாலஸ்தீன விடுதலை அமைப்புக்கும்(PLO), இஸ்ரேல் அரசுக்கும் இடையே அமெரிக்காவின்
முன்முயற்சியில் ஓர் சமரச உடன்படிக்கை ஏற்பட்ட பிறகு தான், இஸ்ரேலுடன் இந்தியா
தூதரக உறவு கொண்டது.
இவ்வாறான அரசியல் அணுகுமுறைகள்(இராசதந்திர
நடவடிக்கைகள்), தமிழ் இனத்திற்கு எதிராகச் செயல்படும், தமிழர்களை இனப்படுகொலை
செய்யும் சிங்களப் பேரினவாத அரசுக்கு எதிராகக் கடைபிடிக்க வேண்டியத் தேவை
இருக்கிறது. அதைத்தான் தமிழ்நாட்டுத் தமிழர்கள் செய்கிறார்கள். சட்டப்படியான
இராசதந்திரம் (De jure
diplomacy) இல்லாத போது, செயல்முறைப்படியான இராசதந்திரம்(De facto diplomacy) இருந்து
தானே ஆக வேண்டும்?
உயிரைப் பாதுகாக்க மருத்துவ
சிகிச்சைக்காக சென்னைக்கு வந்த தமிழீழ தேசியத் தலைவர் வே.பிரபாகரன் அவர்களின்
தாயான, 80 அகவை மூதாட்டி பார்வதியம்மாள் அவர்களை சென்னை விமான நிலையத்தில் கீழே
இறங்க விடாமல் வந்த விமானத்தில் திருப்பி அனுப்பிய தமிழினப் பகை அரசான இந்திய
அரசின் நடவடிக்கைகளுக்கு, துணை நின்ற அன்றைய முதல்வர் கருணாநிதி இன்று சிங்கள
விளையாட்டு வீரர்களை விளையாட தமிழ்நாட்டில் அனுமதிக்க வேண்டும் என்று கூறுவதில் காட்டிக்
கொடுக்கும் கங்காணித் தனம் தான் இருக்கிறதே ஒழிய, அரசியல் நேர்மை கிஞ்சித்தும் இல்லை.
கடந்த கால உலக அனுபவங்களை கவனத்தில்
கொண்டு, இந்தியாவின் நடவடிக்கைகளை கவனத்தில் கொண்டு, ஈழத்தமிழர்களை இனப்படுகொலை
செய்யும் பேரினவாத சிங்கள நாட்டிலிருந்து வரும் சிங்களர்களை திருப்பி அனுப்பும்
போராட்டத்தை தமிழகத் தமிழர்கள் முழு வேகத்துடனும் வருங்காலத்தில் நடத்த வேண்டுமென தமிழக
மக்களை தமிழ்த் தேசப் பொதுவுடைமைக் கட்சி சார்பில் கேட்டுக் கொள்கிறேன்.
அன்புடன்,
பெ.மணியரசன்,
தலைவர், தமிழ்த்
தேசப் பொதுவுடைமைக் கட்சி
சென்னை, 04.09.2012.